“பாராளுமன்ற அரசியல் பாதை மூலமாக தனிநாட்டை அடைய முடியாது என்பது கூட்டணியின் படித்த அரசியல் தலைவர்களுக்கு தெரியாததல்ல. அவர்கள் எந்தவொரு அரசியல் போராட்டத் திட்டமும் தந்திரோபாயமும் இல்லாமல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து மக்களை குறிப்பாக, தமிழ் இளைஞர்களை உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய தவறுக்காக நாளடைவில் பெரிய விலையைச் செலுத்த வேண்டியேற்பட்டது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் தலைமைத்துவம் ஆயுதமேந்திய தமிழ்ப் போராளிக் குழுக்களின் கைகளுக்குச் சென்ற பின்னர் மூண்ட சுமார் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரில் இலங்கை ஆயுதப் படைகளுக்கு எதிராக அவர்களால் தொடர்ச்சியாக கணிசமான காலத்துக்கு வியக்கத்தக்க வெற்றிகளை பெறக்கூடியதாக இருந்த போதிலும், தனிநாட்டுக்கான போராட்டத்தின் பிரதான தளப்பிரதேசமாக விளங்கிய வன்னி 2009 மே மாதம் இலங்கைப் படைகளிடம் வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து மாற்றம் கண்ட அரசியல் – இராணுவ நிலக்காட்சி வட்டுக்கோட்டை தீர்மானத்தை கிரகணம் செய்தது.”
