— கருணாகரன் —
‘சமஸ்டி முறையும் அரசியலமைப்பு சீர்த்திருத்தப் பாதையும்’ என்ற பொருளில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் “எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவுப்பேருரை”யை நிகழ்த்தும்போது, விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மேசைக்குப் பின்னாலான சில கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். பேச்சுவார்த்தை மேசையிலும் அப்போதைய ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் பின்னர் அரசியற் பொதுவெளியிலும் பகிரப்படாத விடயங்கள் அவை.
குறிப்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த அன்ரன் பாலசிங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசைக்கு வெளியே தனிப்பட்ட ரீதியில் பீரிஸ் நடத்திய உரையாடல்கள்.
இதைப் பற்றித் தமிழ் ஊடக வெளியோ அல்லது அரசியல் தரப்புகளோ அதிமாகப் பேசவில்லை. அல்லது அவை பேச விரும்பவில்லை. காரணம், புலிகளைப் பற்றிய இந்த மாதிரியான விடயங்களைப் பற்றிப் பேசினால், அது எதிர்மறையாகத் தமக்குப் பாதிப்பை உண்டாக்கலாம் என்ற அச்சம் பலருக்கும் உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு மாற்றான அரசியல் பார்வையையும் செயற்பாட்டு முறையையும் கொண்டிருந்த தரப்புகளும் கூட இப்பொழுது இதைத் தவிர்க்கவே முயற்சிக்கின்றன. என்பதால் பலதையும் பலரும் கடந்து செல்கிறார்கள். சிலர் மட்டும் (தீவிரத் தமிழ்த் தேசியவாத அடையாளத்தைப் பேண முற்படும் சிறிதரன், கஜேந்திரன்கள் மற்றும் இவர்களுடைய அரசியலை ஆதரிக்கும் ஊடகங்களும் அரசியற் பத்தியாளர்களும் ஆதரவாளர்களும்) புலிகளின் விடயங்களில் தமக்குச் சாதகமானவற்றைத் தெரிவு செய்து எடுத்துக் கொள்கிறார்கள். மாவீரர்நாள், திலீபன் நினைவுநாட்கள், புலிகளுடைய தியாகம் போன்றவற்றை. மற்றும்படி புலிகளின் செயற்பாடுகள் எதையும் அல்ல.
இதற்கப்பால் 30 ஆண்டுக்கு மேலாக ஈழத் தமிழ் அரசியல் வெளியில் பேராதிக்கம் செலுத்திய ஓரமைப்பைப் பற்றி, அதனுடைய எழுச்சி, வீழ்ச்சி, அதற்கான காரணங்கள், அதன் வரலாற்றுப் பங்களிப்பு, அந்த அமைப்பைப்பற்றிய விமர்சனங்கள், அதற்கான காரணங்கள், அவற்றிலிருந்து படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் என எதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆனால், அந்த அமைப்பு இன்று இல்லாத போதும் அதனுடைய செல்வாக்குச் சமூக வெளியிலும் அரசியல் வெளியிலும் வலிமையாக இருக்கிறது. என்பதால்தான் அதைப்பற்றிப் பேசுவதற்கே அச்சமடைகின்றனர். இந்த அச்சம் மிக மோசமானது, தன்னையே அழிக்கக் கூடியது. அதை இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம். இப்பொழுது பீரிஸ் சொன்ன விடயத்துக்கு வருவோம்.
1. இருவருக்கும் இடையிலான உரையாடல்களின் மூலம் பீரிஸ் புரிந்து கொண்டவை.
2. அன்ரன் பாலசிங்கத்தின் கவலைகள்.
3. அன்ரன் பாலசிங்கத்தைப்பற்றிய பற்றிய பீரிஸின் மதிப்பீடு
இந்த மூன்று விடயங்களும் முக்கியமானவை. அவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அ) அன்ரன் பாலசிங்கத்துக்கும் பீரிஸூக்கும் இடையிலான இந்த உரையாடல்கள், பேச்சுவார்த்தைக் குழுவின் இரண்டு தரப்பின் தலைவர்களுக்கிடையிலானது என்பதை விட, இரண்டு தரப்பிலும் இருந்த அறிவுஜீவிகளுக்கிடையலான உரையாடல் எனலாம். இவ்வாறான அதிகாரமற்ற முறையிலான உரையாடல்கள் (Talking to each other privately outside the negotiating table) நடப்பது வழமை. அப்படியென்றால், குறித்த தலைமைகளின் நிகழ்ச்சி நிரலுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் முறைமைகளுக்கும் இது உடன்பாடானதா? அனுமதி உடையதா? அல்லது அதற்கு மாறானதா? என்று யாரும் கேட்கலாம்.
இதற்குரிய புரிந்துணர்வு இரண்டு தரப்பின் தலைமைகளிடத்திலும் இருக்கும். ஏனென்றால், என்னதான் இவர்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டாலும் இவர்களால் எத்தகைய தீர்மானங்களையும் எடுக்க முடியாது. அதை மேற்கொள்ளக்கூடிய அதிகாரமும் வல்லமையும் தலைமைகளுக்கே உண்டு. ஆகவே அவர்கள் இதையிட்டு அலட்டிக் கொள்வதில்லை. அதைப் பீரிஸ் இங்கே தன்னுடைய உரையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஆகவே பேச்சுவார்த்தை மேசைக்கு வெளியே தனிப்பட்ட முறையில் off the record ஆக இருவரும் பரஸ்பரம் பேசியிருக்கிறார்கள்.
பீரிஸூடன் மட்டும்தான் இப்படி அன்ரன் பாலசிங்கம் இந்த மாதிரியான விடயங்களைப் பேசியிருக்கிறார் என்றில்லை. பலரிடம் தன்னைத் திறந்திருக்கிறார். இதற்கு இன்னும் பலர் உலகெங்கும் சாட்சியமாக உள்ளனர். யாழ்ப்பாணத்தில் தற்போதிருக்கும் முதன்மையான ஊடகவியலாளர் ஒருவர் தொடக்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலருடனான உரையாடல்களில் தன்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயங்களையும் மாற்று யோசனைகளையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இவர்கள் எல்லாம் அன்ரன் பாலசிங்கத்தோடு நெருக்கமான உறவில் இருந்தவர்கள். எனவே பீரிஸ் சொன்னவை ஏற்றுக் கொள்ளக் கூடியவையே. இந்த அடிப்படையில் பாலசிங்கத்திடம் நிறையக் கவலைகள் இருந்துள்ளன என்பதைப் பீரிஸ் உணர்ந்திருக்கிறார் – அதைப் பீரிஸ் கண்டுபிடித்திருக்கிறார்.
தன்னை ஒரு அறிவுஜீவியாக, நியாயவாதியாக, வரலாற்றுக்குச் சரியானவராக காட்டிக் கொள்ளவும் வேண்டும். அதை முன்வைத்து வெற்றி கொள்ள முடியாத நிலையில் அவஸ்தைப்படவும் வேண்டும் என்ற பாலசிங்கத்தின் இருமைத் தவிப்பு இது. இதையொத்த தவிப்போடிருந்தவர் வே. பாலகுமாரன்.
பீரிஸ் யாழ்ப்பாணத்தில் சொன்னார் ”இராணுவ ரீதியாகத் தங்களை எவராலும் வெல்ல முடியாது என்ற அசைக்க முடியாத எண்ணமே புலிகளது சிந்தனையில் மேலோங்கியிருந்தது. இதன் காரணமாக பிரபாகரன் எந்தவொரு விட்டுகொடுப்புகளையும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனக்கருதினார். தமிழீழம் என்பது எட்டக் கூடிய தூரத்திலேயே இருப்பதாகத் தீவிரமாக நம்பினார். பிரபாகரனின் பிரதிநிதியாக உலகம் முழுவதும் ஆறு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட அன்ரன் பாலசிங்கம் மட்டுமே விடுதலைப் புலிகள் தரப்பில் பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்து கொண்ட ஒரே உறுப்பினராக இருந்தார். அவருடனான எனது உறவு சுமுகமானதை அடுத்து பேச்சுவார்த்தைக் களத்துக்கு வெளியே அவரிடம் ஒரு வெளிப்படையான கேள்வியைக் கேட்கத் தீர்மானித்தேன்.
விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போது நிகழ்வுகள் கிரோக்கத் துன்பியல் நாடகத்தைப்போல இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்வதை நான் காண்பதாக அவரிடம் கூறினேன். இருப்பினும் ஒரு குறுகிய கால வாய்ப்பு (Window of opportunity) இன்னும் மிச்சமிருப்பதாகவும் அதை ஏன் விடுதலைப் புலிகள் பயன்படுத்த மறுக்கிறார்கள்? என்றும் கேட்டேன்.
அதற்குப் பதிலளித்த அவர் (அன்ரன் பாலசிங்கம்) அளித்த பதில் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. தான் எதற்கும் வருந்தத் தேவையில்லை என்றும் தனது தலைவருக்கு யதார்த்த நிலையை விளக்குத் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்ததாகவும் அவர் (அன்ரன் பாலசிங்கம்) கூறினார். ஆனால், தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்த தலைவர் பிரபாகரன் அறிவுபூர்வமான வாதங்களை ஏற்க மறுத்ததோடு, அதற்கு மேல் அவரை வற்புறுத்துவது தனக்கு ஆபத்தாக முடியும் என்று பாலசிங்கம் நம்பினார். அன்ரன் பாலசிங்கம் லண்டனில் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருடன் உரையாடிய எரிக் சொல்ஹெய்ம், பாலசிங்கம் மிகுந்த ஏமாற்றத்துடனும் மனவேதனையோடும் உயிரிழந்தார் என என்னிடம் கூறினார்”.
இங்கே நாம் சில விடயங்களை நோக்கலாம். ஒன்று, யதார்த்தத்தை அன்ரன் பாலசிங்கம் புரிந்திருந்தார். அறிவுபூர்மாக அவர் சிந்திப்பதாலும் அணுக முற்படுவதாலும் Reality யை அவரால் புரிந்து கொள்ள – விளங்கிக் கொள்ள முடிந்தது என்பது. இது தனியே அன்ரன் பாலசிங்கத்திடம் மட்டுமன்றி, வேறு சில விடுதலைப்புலிகள் உறுப்பினர்களிடத்திலும் காணப்பட்டதே.
க.வே. பாலகுமாரன், அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த சு. ப. தமிழ்ச்செல்வன் மற்றும் தளபதிகள் பானு தொடக்கம் இன்னும் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பலரிடத்திலும் உள்ள அபிப்பிராயமாகும். ஆனால், எவராலும் புலிகளின் தலைமையை – பிரபாகரனை – மீறி எந்தச் சொல்லையும் எந்தச் சிந்தனையையும் செயலாக்க முடியாது என்பதால், அந்தச் சிந்தனைகளும் அபிப்பிராயங்களும் கவலைகளாகவே முடிந்தன.
இரண்டாவது, பரஸ்பரம் பீரிஸூம் பாலசிங்கமும் பேசியதன் மறுபக்கமொன்று பாலசிங்கத்திடம் இருந்திருக்கும். அதாவது பீரிஸின் பக்கக் கவலைகள். பீரிஸூக்கும் Reality புரிந்திருக்கும். அத்துடன் சிங்களத் தரப்பின் நிலைப்பாட்டில் உள்ள குறைபாடுகளையும் நீதியின்மைகளையும். இந்த உரையில் பீரிஸ் அதை மனந்திறந்து சொல்லியிருக்க வேண்டும். பேச்சுவார்த்தை பற்றி எழுதப்பட்ட அவருடைய ‘The Sri Lanka Peace Process: An Inside View’ (இலங்கை சமாதான செயல்முறை: ஒரு உள் பார்வை) என்ற நூலில் இதைப்பற்றியெல்லாம் அவர் விவரிக்கவில்லை. அதாவது தன் தரப்பிலான தன்னுடைய கவலைகளை. மூன்றாவது, பீரிஸூக்கும் அன்ரன் பாலசிங்கத்துக்கும் இடையிலான இந்தத் தனிப்பட்ட அறிவுசார் உரையாடல்கள் (Personal intellectual conversations) தான் மெய்யாகவே சமாதானத்தின் – தீர்வின் – கதவுகளைத் திறக்கக் கூடியன. ஆனால், துரதிருஸ்டவசமாக அறிவுசார் சிந்தனைக்கும் நிலவும் அரசியல் ஆதிக்கத்திற்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரியது. இது ஒரு மாபெரும் அரசியல் துயரம். (The gap between intellectual thought and the prevailing political dominance is wide. This is a great political tragedy).
தமிழ்ச் சமூகம் இந்த உண்மைகளை புரிந்து கொள்வதற்கு இன்னும் தயாரில்லை. அது இன்னும் பல பத்தாண்டுகள் பிந்திய நிலையிலேயே உள்ளது. பீரிஸ் தானறிந்த உண்மைகளையும் அனுபவங்களையும் பகிர்கிறார். அதுவும் தமிழ்ச்சமூகத்தின் முன்னிலையில், யாழ்ப்பாணத்தில். அதை உரையாடலுக்குட்படுத்தாது தமிழ்த் தரப்பு விலகிச் செல்வது எதற்காக? பதிலாக பீரிஸை எதிர்ப்புள்ளியிலேயே வைத்து அணுகுவதும் எதற்காக? தவறான சிந்தனையின் வெளிப்பாட்டினால்தானே!
ஆ) ‘அன்ரன் பாலசிங்கத்தின் கவலைகள்‘ ஏராளம். அவை தனியாகவே எழுதப்படவும் பேசப்படவும் வேண்டியவை. அதை அவருக்கு மிக நெருக்கமானவர்கள் தயங்காமல், துணிந்து சொல்வது ஈழவிடுதலைக்கும் ஈழத்தமிழர் அரசியல் ஈடேற்றத்துக்கும் முக்கியமானது, அவசியமானது. பீரிஸ், எரிக் சொல்ஹெய்ம் போன்ற வெளியாட்கள் கொஞ்சம் சொல்லியிருக்கிறார்கள். கூட இருந்தோர் (உடனிருந்தோர் – உட்தரப்பினர்) சொல்வது இதையும் விட பெறுமதியானது.
இ) அன்ரன் பாலசிங்கத்தைப் பற்றிய பற்றிய பீரிஸின் மதிப்பீடும் பேச்சுவார்த்தையின் அனுசரணைப் பணியை வகித்த எரிக் சொல்ஹெய்மின் மதிப்பீடும் ஏறக்குறைய ஒன்றே. பாலசிங்கம் போன்றவர்கள் எந்த இயக்கத்திலும் அமைப்பிலும் இருப்பதுண்டு. அது தவிர்க்கவே முடியாதது. ரஸ்யப் புரட்சியின்போது லெனின் vs ட்ரொட்ஸ்கி, சீனப்புரட்சியின்போது மாவோ சே துங்குடன் vs டெங் சியாவுபிங் (Deng Xiaoping) போன்றவர்கள் மாற்று அபிப்பிராயம் கொண்டிருந்தவர்கள். ஆனால், அது இடதுசாரிய அரசியலுக்குரிய அடிப்படையில் வெளிப்படையாகவும் ஓரளவு சுய அடையாளத்தைப் பெறக்கூடியதாகவும் இருந்தது. இது அவ்வாறானதல்ல. விடுதலைப்புலிகளின் கட்டமைப்பும் தலைமையும் வேறான பண்பைக் கொண்டதால் அதற்குள்ளிருந்தோரின் சிந்தனைகளும் அபிப்பிராயங்களும் நிழலாகவே இருந்து புதையுண்டன. வரலாற்றில் அவற்றுக்கான பெறுமானம் அப்போது கிட்டவில்லை. அவற்றை மீளப் பேசுவதன் மூலம் இனிவரும் காலத்தில் பெறுமானமாக்கலாம். ஆகவே பீரிஸ் போன்றவர்கள் சொல்லும் உண்மைகளை – தகவல்களை – கதைகளை – ஒரு தொடக்கமாகக் கொண்டு உண்மையைத் தேடும் பயணத்தைத் தொடங்க வேண்டும். அதுவே தோல்வியை நினைவு கொண்டும் தோல்வியையே கொண்டாடியும் தோல்வியையே சினமாக்கியும் தோல்வியையே அரசியலாக்கியும் கொண்டுள்ள தமிழ்ச் சமூகம், தோல்விகளிலிருந்து பாடங்களைப் படிக்கும் வரலாற்றுக்கு முன்னகர வேண்டும். அதைக் குறித்துச் சிந்திப்போம்; உரையாடுவோம். ஏனெனில் இயக்கம், கட்சி, அமைப்புகள் என்பதும் மக்கள் (சமூகம்) என்பதும் பன்மையும் பலகுரல் தன்மையும் கொண்டது.
பீரிஸூக்கு நன்றி. அவருடைய அரசியல் நிலைப்பாடுகளுக்கு அல்ல.
