விஜய்யின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் கொண்டுவந்த மாற்றம் என்ன?

விஜய்யின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் கொண்டுவந்த மாற்றம் என்ன?

— வீரகத்தி தனபாலசிங்கம் —

தமிழ்நாட்டு அரசியலில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கத்தின் இரு பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகமும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் கொண்டிருந்த ஆதிக்கத்துக்கு இடையூறு செய்து, ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு குறுகிய இரு வருடங்களுக்குள் மேலெழ வைத்திருப்பதே நடிகர் சந்திரசேகர்  ஜோசப் விஜய் செய்திருக்கும் மிகப் பெரிய சாதனை. 

நடிகர்கள் பலர் ஏற்கெனவே  அரசியல் கட்சிகளை தொடங்கிய போதிலும், அவர்களில் எவரினாலுமே திராவிட இயக்க கட்சிகளின் ஆதிக்கத்துக்கு சவாலை ஏற்படுத்த முடியவில்லை.  நாளடைவில் அவர்கள் அதே திராவிட  கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து மாத்திரமே பாராளுமன்றத்தில் அல்லது மாநில சட்டசபையில் ஆசனங்களைப் பெறவேண்டியிருந்தது. 

இதுவரை காங்கிரஸ் கட்சியும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு  ஏதாவது ஒரு திராவிட இயக்கக்  கட்சியுடன்  தேர்தல் கூட்டணிகளை ஏற்படுத்திக்கொள்ளவதற்கான தெரிவு மாத்திரமே  இருந்தது.  தற்போது மூன்றாவது பெரிய சக்தியாக மாத்திரமல்ல, ஆளும் கட்சியாகவும் தமிழக வெற்றிக் கழகம் வந்திருப்பதையடுத்து மாநிலத்தின் கூட்டணி அரசியல் சமநிலையும் மாறப்போகிறது.  காங்கிரஸ் உட்பட தி.மு.க. வுடன் நீண்டகாலமாக கூட்டுச் சேர்ந்திருந்த கட்சிகள் விஜய் அரசாங்கத்தை அமைப்பதற்கு வழங்கும் ஆதரவு இதையே தெளிவாகக் காட்டுகிறது. 

சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் (118) பெறமுடியாமல் போனதைத் தவிர, மற்றும்படி தமிழ்நாட்டில் முதலமைச்சராக வந்த முதல் சினிமா நடிகர் என்ற  பெருமைக்குரியவராக விளங்கிய  எம்.ஜி. இராமச்சந்திரன் தேர்தல் அரசியலில் செய்திராத சில  சாதனைகளை  விஜய் செய்து காட்டியிருக்கிறார். அந்த  மாநிலத்தில் நடிகர்கள் அரசியலில் பிரவேசித்த வேளைகளில்  எம்.ஜி.ஆராகிவிட முடியாது என்று கூறப்படுவது ஒரு  வழமையாக இருந்தது. தற்போது எம்.ஜி.ஆரையும் விஞ்சிய ஒரு அளவுகோலாக  விஜய் வந்துவிட்டார் எனலாம். 

தி.மு.க. வில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அண்ணா தி.மு.க.வை ஆரம்பித்த எம். ஜி. ஆர். ஐந்து வருடங்களுக்கு பின்னர் முதன்முதலாக  1977 சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு  33.5 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால், விஜய் தனது சொந்தக் கட்சியை தொடங்கி இரு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னதாக வே எந்த  கட்சியுடனும்  கூட்டுச் சேராமல் தனியாகப் போட்டியிட்டு 35 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

2026 சட்டசபை தேர்தல் சி.என். அண்ணாத்துரை தலைமையில் தி.மு.க. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த 1967 தேர்தலையும் கலைஞர்  கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வை எம்.ஜி.ஆரின் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றிய 1977 தேர்தலையும் போன்று மாநில அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று விஜய் கூறியபோது பலரும் அதை பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. 

அண்ணாவின் தலைமையில் தி.மு.க. 1967 தேர்தலில் ஐந்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 40.6 சதவீத வாக்குகளைப் பெற்று 144 ஆசனங்களைக் கைப்பற்றியது. 1977 தேர்தலில் அண்ணா தி.மு.க. 137 ஆசனங்களை வென்றெடுத்தது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது சினிமா உலகில் இருந்து முதலமைச்சர் கதிரைக்கான விஜய்யின் எழுச்சி முன்னென்றும் இல்லாத வகையிலானதாகும். 

ஆட்சியைக் கைப்பற்றிய வேகத்தைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆருடன் அல்ல, முன்னாள் ஆந்திர பிரதேச முதலமைச்சரான நடிகர் என்.ரி. ராமராவுடன் விஜய்யை ஒப்பிடுவதே பெருமளவுக்கு  பொருத்தமானது. 1982 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய எட்டு மாதங்களில் ராமராவ் ஆட்சிக்கு வந்தார். 

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து. தோன்றிய தமிழ் உணர்ச்சிமயப்பட்ட அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் 1967 தேர்தலில் தி.மு.க.வின் பின்னால் மாணவர்கள் அணி திரண்டார்கள். ஆனால், அத்தகைய எந்தவிதமான போராட்டப் பின்புல உணர்வுமே இல்லாமல் விஜய்யின் பின்னால் அணிதிரண்ட இளைய தலைமுறையினரும் பெண்களும் 60 வருடங்களாக மாறிமாறி ஆட்சிசெய்துவந்த திராவிட இயக்கக் கட்சிகளைத் தோற்கடிப்பதற்கு  விஜய்க்கு உதவியிருக்கிறார்கள்.

தி.மு க.வுக்கும் அண்ணாத்துரைக்கும்  அன்று உதயசூரியன் சின்னம் உதவியதைப் போன்று விஜய்க்கு தற்போது விசில் சின்னம் கைகொடுத்திருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களைக் கூட சரியாகத் தெரியாமலே மக்கள் விசில் சின்னத்துக்கு பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். தேர்தல் பிரசாரங்களுக்காக  விஜய்யினால் மாநிலத்தின் பல பாகங்களுக்கு செல்ல முடியவில்லை. சகல 234 

தொகுதிகளிலும் தானே வேட்பாளர் என்று நினைத்து விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். 

ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் குறிப்பாக, தி.மு.க.வினதும் அண்ணா தி.மு.க.வினதும் வாக்கு வங்கியை விஜய் தகர்த்திருக்கிறார். சென்னை பிராந்தியத்தில் அவரது கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. எம். ஜி. ஆரினால் கூட முதல் தேர்தலில் சென்னையில் தி.மு.க.வின் ஆதிக்கத்தை தகர்க்க முடியவில்லை. தி.மு.க.வின் கோட்டைக்குள் இருபது வருடங்களுக்கு பின்னர் மாத்திரமே ஜெயலலிதாவின் தலைமையில் அண்ணா தி.மு. க.வினால்  ஊடுருவக் கூடியதாக இருந்தது. 

 2006 தேர்தலில் சென்னையில் 14 சட்டசபை ஆசனங்களில் 7 ஆசனங்களையும்  2011 தேர்தலில் 16 ஆசனங்களில் 14 ஆசனங்களையும் அண்ணா தி.மு.க. கைப்பற்றியது.  இந்த தடவை விஜய்யின் கட்சி சென்னையில் 14 ஆசனைங்களைக் கைப்பற்றியிருக்கிறது. தி.மு.க.வின் தலைவரும் பதவிவிலகும் முதலமைச்சருமான  மு.க. ஸ்டாலின் கூட சென்னையில்  தனது தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின்  வேட்பாளரிடம் தோல்வி கண்டார்.

விஜய் மக்கள் இயக்கம் 

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வும் சினிமா வாழ்வும் சமாந்தரமானவை என்றும் ஆரம்பத்தில் இருந்தே தன்னைச் சுற்றி  ஒரு “மக்கள் நாயகன்” பிம்பத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவர் இரண்டு துறைகளையும் பயன்படுத்திவந்தார் என்றும் சுட்டிக் காட்டியவர்கள்  விஜய்யை திடீர் அரசியல் ஆசையில் கட்சியைத் தொடங்கியவராக காண்பித்தார்கள். 

2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் முடிவோடு இரு வருடங்களுக்கு முன்னர் விஜய் கட்சியை தொடங்கியபோது, பல தசாப்தகால அடிமட்டக் கட்டமைப்புக்களைக் கொண்ட இரு பிரதான திராவிட இயக்கக் கட்சிகளையும் தோற்கடிப்பது இயலாத காரியம் என்ற அபிப்பிராயமே பரவலாக மேலோங்கியிருந்தது. ஆனால், அவர் தனக்கு ஒரு மக்கள் ஆதரவுத் தளத்தை கட்டியெழுப்பும் பணிகளை பல வருடங்களாக தனது இரசிகர் மன்றங்களின் ஊடாகச் செய்து வந்திருக்கிறார். 

அரசியலில் பிரவேசிக்கும் நோக்கம் விஜய்க்கு திடீரென்று ஏற்பட்டது என்று கூறிவிட முடியாது. 2009 ஆம் ஆண்டிலேயே தனது இரசிகர் மன்ற வலைப்பின்னலை ‘விஜய் மக்கள் இயக்கமாக’ மாற்றி அதன் மூலமாக படிப்பு மையங்கள், நூலகங்கள் மற்றும் கணினி மையங்களை அமைத்து சமூக சேவைகளைத் தொடங்கியிருந்தார். அந்த இயக்கம் வெள்ள நிவாரணப் பணிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் இரத்ததான முகாம்களையும் நடத்தியது.

 அதேவேளை, ஒரு முன்னணி நடிகராக தடம்பதித்த பிறகு அவர் ஒவ்வொரு நேர்காணலிலும் ‘சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன்’ என்று கவனமாக கூறிவந்தார். சமூகத்தில் அடிமட்டப் பணிகளுக்கு அப்பால் 2009 ஆம் ஆண்டில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நடத்திய சந்திப்பும்  அண்ணா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு தெரிவித்த ஆதரவும் அவரது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தின.

அதனால் அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க. அதிருப்திக்கு உள்ளாகியதாகவும் விஜய்யின் படங்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கியதாகவும் கூறப்பட்டது. 2011 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு க. வை ஆதரிக்கத் தீர்மானித்ததன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் அதன் தேர்தல் நிலைப்பாட்டை முதன் முதலாக வெளிப்படுத்தியது.

ஆனால், 2013 ஆம் ஆண்டில் வெளியான ‘தலைவா’ என்ற திரைப்படத்தில் வந்த ‘தமைமையேற்க இதுவே நேரம்’ என்ற வசனம் ஜெயலலிதா அரசாங்கத்துடன் விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியது. அதற்கு பின்னரான வருடங்களில் முக்கியமான சமூகப் பிரச்சினைகளில் அவர் கவனத்தைச் செலுத்தினார். மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்காக விஜய் மக்கள் இயக்கம் 2021 உள்ளாட்சி தேர்தல்களில் 169 இடங்களில் போட்டியிட்டு  100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது மாநில அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை  ஏற்படுத்தியது.

பிரசாரத் தந்திரோபாயம்

ஆழமான அடிமட்டக் கட்சி அமைப்புக்கள் அல்லது பாரம்பரிய ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ச்சியான செயற்பாடுகள், மாபெரும் மகாநாடுகள் மற்றும் பிரமாண்டமான தேர்தல் செலவுகள் இல்லாமலேயே, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தேர்தல் வெற்றியைப் பெறமுடியும் என்பதை விஜய் கையாண்ட பிரசாரத் தந்திரோபாயம் நிரூபித்திருக்கிறது. அவரது அணுகுமுறை குறிப்பாக, இளைஞர்களுடனும் டிஜிட்டல் தளங்களில் இயங்கும் வாக்காளர்களுடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் மாற்று வழிமுறைகளின் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தை வெளிக்காட்டியிருக்கிறது.

சினிமா மூலமாக தான் கவர்ந்திழுத்த சிறுவர்களிடம் தனது கட்சிக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று பெற்றோர்களை வற்புறுத்துமாறு விஜய் விடுத்த வேண்டுகோளும் கணிசமானளவுக்கு பயன் தந்திருப்பதாக கூறப்படுகிறது. “விருப்பமான விளையாட்டுப் பொருட்களை வாங்கித்தருமாறு உங்கள் பெற்றோரிடம்  அடம்பிடிப்பதைப் போன்று விஜய் மாமாவின் கட்சியின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அவர்களிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக விஜய் தமிழ்நாட்டுச் சிறுவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

திராவிட இயக்க கட்சிகளும் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலமாக ஓரளவுக்கு பிரசாரங்களை முன்னெடுத்த போதிலும், பெருமளவுக்கு அவை அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட பேச்சுத் திறமையை அடிப்படையாகக் கொண்ட பழைய அரசியல் பாணியிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கின்றன. உணர்ச்சிவசமான வேண்டுகோள்களை மையமாகக் கொண்ட இந்த அணுகுமுறை சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற இன்றைய சூழலில் பெரியளவில் எடுபடுவதற்கு வாய்ப்பில்லை. 

திராவிட கட்சிகளின் ஆதிக்க அஸ்தமனம்? 

விஜய்யின் வெற்றி தமிழ்நாட்டின் இரு முனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது எனலாம். மும்முனைப் போட்டியை நோக்கிய மாற்றம் சிறிய கட்சிகள் அவற்றின் வாக்கு வங்கிக்கு விகிதப் பொருத்தமில்லாத வகையில் செல்வாக்கைச் செலுத்துவதற்கான களத்தை உருவாக்குகிறது என்பதுடன்  ஒட்டுமொத்த அரசியல் சமன்பாடுகளையும் மாறியமைக்கக்கூடும். இரு ஆசனங்களை பெற்ற கட்சிகள் கூட விஜய் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்குவதற்கு நிபந்தனைகளை விதித்து காலத்தை தாமதிக்கின்ற இன்றையை சூழ்நிலை இதை தெளிவாக உணர்த்துகிறது. 

தோல்வி கண்டிருக்கும் பிரதான திராவிட  கட்சிகள் ஊழல்மயப்பட்டவையாகவும் மக்கள் ஆதரவை கணிசமானளவுக்கு இழந்து வருகின்றவையாகவும் இருக்கின்ற போதிலும்,  இந்த தேர்தல் முடிவுகள்   தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கும் திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு பாரிய பின்னடைவை அண்மைய எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்று கூறிவிடமுடியாது. 

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான சமூகநீதி மற்றும் மாநில சுயாட்சியை விஜய்யும் தேர்தல் பிரசாரங்களில் முன்னிலைப்படுத்தினார். அவரிடம் தெளிவான கொள்கை  கிடையாது.  திராவிட இயக்க கட்சிளுக்கு ஏற்பட்ட தோல்வி தற்காலிக இடையூறா அல்லது நிரந்தர அஸ்தமனத்தை நோக்கிய பயணத்தின் தொடக்கமா என்பதை பல கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்கும் விஜய் ஆட்சிமுறையின் சிக்கல்களை எவ்வாறு கையாளுவார் என்பதிலேயே பெருமளவுக்கு தங்கியிருக்கிறது. 

இறதியாக, விஜய்யின் வெற்றி  பெரும்பாலான அரசியல் அவதானிகளினாலும்  ஊடகங்களினாலும்  புவியியல் ரீதியாக, நிலநடுக்கத்தின்போது பூமியின் அடுக்குகளில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றத்துடன் (Seismic Shift) ஒப்பிடப்பட்டது. இனிமேல் எதுவும் இருக்காது என்கிற அளவுக்கு அடிப்படை மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கூறுவதற்கே அவர்கள் முற்படுகிறார்கள். 

ஆனால், எம். ஜி.ஆரின் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து சுமார் அரை நூற்றாண்டுக்கு பின்னரும் கூட ஆட்சி மாற்றத்துக்கு சினிமா மாயையின் மூலமாக உருவாக்கப்பட்ட பிம்பமே தேவைப்படும்போது இதில்  அரசியல் நிலநடுக்கம் நிகழ்ந்திருப்பதாக எவ்வாறு கூறமுடியும்? 

விஜய்யின் இன்றைய எழுச்சி திரையில் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட அடையாளங்கள் வலிமையான அரசியல்  மூலதனமாக மாறும் நீண்டகாலப் போக்கின் பிந்திய ஒரு அத்தியாயமே தவிர, வேறு ஒன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *