(அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமொன்றுதான் ஈழத்தமிழர்களின் கையிலுள்ள கவசமாகும்.
ஈழத்தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் இருக்கின்ற தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை போதாதென்று அண்மையில் ‘தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை’, ‘தமிழ்த்தேசியப் பேரவை’ என்று அரசியல் சார்ந்த அமைப்புகள் நேற்றுப்பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான்களாகத் தோற்றம் பெற்றுள்ளன.
இன்னொரு கேலிக்கூத்து என்னவென்றால், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்னும் பெயர்ப்பலகையை மாட்டிக்கொண்டு ‘ஒருநாடு இரண்டு தேசம்’ அரசியல் செய்யும் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் (சைக்கிள் சின்னம்) வேறு சில ‘வால்’களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு ‘தமிழ்த்தேசிய பேரவை’ எனும் புதிய பெயர்ப்பலகையுடன் தமிழ்நாடு சென்று முதலமைச்சர் விஜய் உட்பட அங்குள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் சார்ந்த அமைப்பின் தலைமைப் பீடங்களைச் சந்தித்து இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியுடன்கூடிய ‘சமஸ்டி’க் கோரிக்கை அடங்கிய மகஜர்களைக் கையளித்தும் அவற்றை ஊடகங்களில் விளம்பரப்படுத்தியும் வருகிறது. இது உண்மையிலேயே அரசியல் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு ஆகும்.
இந்தியாவின் மத்திய அரசு (டில்லி) அசையாமல் தமிழ்நாட்டு மாநில அரசினால் ஒரு துரும்பையும்கூட அசைக்கமுடியாது. இதுதான் அரசியல் கள யதார்த்தம். இதனைத் தெரிந்து கொண்டு தனது எதிர்காலத் தேர்தல் தேவைகளுக்காக அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காட்டும் அரசியல் ‘சித்து’ விளையாட்டுக்களில் இதுவுமொன்று. ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி! கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி’ என்று பாரதி அறச்சீற்றம் கொண்டு பாடியது இவர்களைப் போன்றவர்களை நோக்கித்தான்.
ஒருகாலகட்டத்தில் இந்தியப் பிரதமராக விளங்கிய வாஜ்பாய் அவர்கள் பகிரங்கமாக அறிக்கையிடாவிட்டாலும்கூட தமிழீழ ஆதரவு மனோநிலையைக் கொண்டிருந்தவர். புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோ அவர்கள் பிரதமர் வாஜ்பாய்யுடன் மிகவும் நெருக்கமான உறவும் – ஊடாட்டமும் – செல்வாக்கும் படைத்தவராகத் திகழ்ந்தவர். சமகாலத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் பகிரங்கமாகவே தமிழீழத்தை ஆதரிப்பவராகத் தன்னை வெளிப்படுத்தியுமிருந்தார். அவருடைய அனுசரணையில் டில்லியில் தமிழீழ ஆதரவு மாநாடொன்றுகூட பாரிய ஆர்ப்பாட்டங்களுடன் நடைபெற்றது. அம்மாநாட்டில் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராசசிங்கமும் கலந்து கொண்டிருந்தார்.
இவ்வளவு சாதகமான நிலைகள் நிலவிய காலத்தில்கூட, அதிகுறைந்தபட்சம் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான முயற்சியைத்தானும் இந்திய மத்திய அரசைக்கொண்டு – டில்லியைக் கொண்டு முடுக்கி விடமுடியவில்லை.
இந்தியாவில் மத்தியில் எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும் சரி – தமிழ்நாடு மாநிலத்தில் எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும் சரி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் – அரசியல் பாரம்பரியமும் மாற்றமடையப்போவதில்லை.
1987 இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அரசியல் தீர்க்க தரிசனத்துடன் அறிவுபூர்வமாகப் பயன்படுத்தாமல் விட்டது ஈழத்தமிழர் அரசியல் தரப்பு (தமிழீழவிடுதலைபுலிகள் இயக்கம்) இழைத்த மாபெரும் அரசியல் தவறு (முட்டாள்தனம்) ஆகும்.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப்போன முன்னாள் தமிழர் விடுதலைக்கூட்டணிச் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தைக் கொழும்பில் வைத்தும் – இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் பங்களித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட பதின்மூன்று தோழர்களைத் தமிழ்நாட்டில் வைத்தும் – இந்திய – இலங்கை சமதான ஒப்பந்தத்தின் பிதாமகரான இந்திய முன்னாள் பிரதமர் ராஜீங்காந்தி அவர்களை இந்தியாவின் தமிழ்நாடு மாநில மண்ணில் வைத்தும் புலிகள் படுகொலை செய்ததொரு பின் புலத்தில் இப்போது புலிகளின் ‘பதிலி’யாகத் தன்னைப் படம் காட்டிக்கொண்டு திரியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கோரிக்கைகளை தமிழ்நாடு மாநில அரசாங்கமோ அல்லது இந்திய மத்திய அரசாங்கமோ கண்டுகொள்ளப்போதில்லை.
எது எப்படியிருப்பினும் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தினூடாக உருவான மாகாண சபைகள் முறைமை மட்டுமே ஈழத்தமிழர்களின் கையிலிருக்கும் ஒரேயொரு கவசமாகும்.
இது முழுமையாக அமுல் நடத்தப்பெறவேண்டுமானால் அது இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசுக்கும் கொடுக்கக்கூடிய அரசியல் அழுத்தத்தினால் மட்டுமே சாத்தியம். பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தினால் வழங்கப்பெற்றுள்ள அதிகாரப் பகிர்வுக்கு மேலதிகமாக ஓர் அங்குலமேனும் இலங்கை அரசாங்கமோ அல்லது இந்திய அரசாங்கமோ வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதுமில்லை. இத்தகைய அரசியல் யதார்த்தங்களைப் புறந்தள்ளிவிட்டு ஈழத்தமிழர் சார்பில் எடுக்கப்படும் எந்த அரசியல் முன்னெடுப்புகளும் ஈற்றில் எந்தவித பலனையும் அளிக்காத ‘ஏட்டுச்சுரைக்காய்’ ஆகத்தான் முடியும்.
