அமிர்தலிங்கத்தின் மரபும் அனைவருக்கும் பொதுவான எதிர்காலத்துக்கான ஜனநாயகத் தெரிவுகளும் 

அமிர்தலிங்கத்தின் மரபும் அனைவருக்கும் பொதுவான எதிர்காலத்துக்கான ஜனநாயகத் தெரிவுகளும் 

 — வீரகத்தி தனபாலசிங்கம் — 

கடந்த நூற்றாண்டில் இலங்கைத் தமிழ் அரசியலின் திசைமார்க்கத்தை தீர்மானித்த அத்தியாயங்களை எழுதிய தலைவர்களில்  ஒருவரான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின்  செயலாளர் நாயகம்  காலஞ்சென்ற அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 99 வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் கடந்த  சனிக்கிழமை மாலை நினைவுப் பேருரை நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

அமிர்தலிங்கம் நினைவு அறக் கட்டளையின் ஏற்பாட்டில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் முன்னாள் பாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா ‘அமிர்தலிங்கத்தின் மரபும் அனைவருக்கும் பொதுவான எதிர்காலத்துக்கான இலங்கையின் ஜனநாயகத் தெரிவுகளும்’ (Amirthalingam’s Legacy and Sri Lanka’s Democratic Choices for A Shared Future) எனும் தொனிப்பொருளில் உரை நிகழ்த்தினார்.

ஜெகான் பெரேராவின் ஆங்கில உரை, வெறுமனே  ஒரு அரசியல் தலைவருக்கான அஞ்சலியாகவோ  அல்லது கடந்தகால நினைவுகளின் மீள்வாசிப்பாகவோ மாத்திரம் அமையாமல்,  சுதந்திரத்திற்குப் பின்னரான  இலங்கையின் இனப் பிரச்சினை, ஜனநாயக நிறுவனங்களின் வீழ்ச்சி மற்றும் சமகாலத்தில் நாடு எதிர்கொள்ளும் அரசியலமைப்புச் சவால்களுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு இருக்கக்கூடிய தெரிவுகள் பற்றிய அவரது நோக்கிலான விளக்கமாகவும் ஒருவிதத்தில்  எச்சரிக்கையாகவும் அமைந்திருந்தது. அமிர்தலிங்கத்தைப்

பற்றிப் பேசுவது என்பது தனிநபரைப் பற்றியது அல்ல, மாறாக இலங்கையின் மிகவும் இடர்மிகுந்த வரலாற்று அத்தியாயம் ஒன்றைப்  பற்றி  பேசுவதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜெகான் பெரேரா சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் உரிமைகள் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துவரும் முக்கியமான சிவில் சமூகப் பிரதிநிதியாவார். இனப்பிரச்சினை என்பது வெறுமனே பொருளாதார அல்லது சமூக அபிவிருத்தி சார்ந்த பிரச்சினையல்ல, மாறாக அது அதிகாரப்பகிர்வும் அரசியல் உரிமைகள் மற்றும் அடையாளமும் சார்ந்த பிரச்சினை என்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர்.

தென்னிலங்கை பெரும்பான்மைவாதச் சிந்தனைகளைத் தாண்டி, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் தனித்துவமான அரசியல் அபிலாசைகளை அங்கீகரிக்கும் பன்மைத்துவ ஆட்சிமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குப் புறம்பாக, மலையகத் தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகளின் தீர்வுகளுக்காகவும் அபிலாசைகளுக்காகவும் ஜெகான் பெரேரா தீவிரமாகக் குரல் கொடுத்து வருகிறார்.

அவரின் அணுகுமுறை தென்னிலங்கைச் சமூகத்துக்கும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகச் சமூகங்களுக்கும் இடையில் ஒருபாலம் போன்ற உரையாடலை உருவாக்கும் நோக்கில் அமைந்திருக்கிறது. தென்னிலங்கையின் தீவிர தேசியவாத எதிர்ம்புகளுக்கு மத்தியிலும், சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை அங்கீகரிப்பதே இலங்கையின் நீண்டகால அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் ஒரே வழி என்பதில் அவர் உறுதியாக நிற்கிறார். 

தென்னிலங்கையில் குறிப்பிடத்தக்க தாராள ஜனநாயகச் சிந்தை கொண்ட (Liberal democrats) அறிவுஜீவிகளில் ஒருவரான ஜெகான் பெரேரா தனது கருத்துக்களை முன்வைக்கும் பாணியிலும் எழுத்துநடையிலும் கடுமையான தொனியைக் காணமுடியாது; பிரச்சினைகளை ஆராயும்போது அகவுணர்ச்சிகளுக்கு  ஆட்படாமல் நிதானமாகக் கருத்துரைப்பது அவரது பண்புகளில் ஒன்று. ஆனால், தனது நிலைப்பாடுகளை தெளிவாகக் கூறிவிடுவார். பிரச்சினைகளில் பங்கும் ஈடுபாடும் கொண்ட தரப்புகளைப் விரோதித்துக் கொள்ளாமல் உண்மைகளைக் கூறுவதில் பெருமளவுக்கு  அக்கறை செலுத்தும் அவரது இயல்பு இந்த நினைவுப் பேருரையில் வியாபித்திருந்தது. 

அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு 

“வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமன்றி, தெற்கிலும் மலையகத்திலும் இழப்புகளையும் வடுக்களையும் சுமந்து நிற்கும் குடும்பங்களின் நினைவாற்றல் (Memory) தகுந்த ஞானமாக (Wisdom) மாற வேண்டும். அந்த நினைவாற்றல் வெறும் மனக்குறையாக மட்டுமே எஞ்சுமாயின் அது மோதலைத் தொடரச் செய்யும்.  மாறாக ஞானமாக மாறும்போது அது எதிர்கால சந்ததிக்கான பொறுப்பை உருவாக்குகிறது. (அனுபவத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்கு ஒத்த முடிவுகளையும் மதிப்பீடுகளையும் செய்யும் விவேகத்தையும் ஆற்றலையுமே அவர் ஞானம் என்கிறார்) சகவாழ்வு  என்பது அரசியலமைப்புச் சட்டங்களில் மட்டும் எழுதப்படும் விதியல்ல. அது நித்திய விழிப்புணர்வுடன் (Eternal Vigilance) பேணப்பட வேண்டிய அன்றாடப் பயிற்சியாகும்.

” எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி  (சமஷ்டிக் கட்சியை)த் தொடங்கியபோது தலைவர்களின்  நோக்கம் நாட்டுப் பிரிவினை  அல்ல; ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வைப் பெறுவதே நோக்கமாக இருந்தது. ஆனால், பண்டா-செல்வா ஒப்பந்தம் முதல் டட்லி-செல்வா ஒப்பந்தம் வரை அடுத்தடுத்து வந்த சாத்வீகப் போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் தேர்தல் அழுத்தங்களால் முறிவடைந்தபோது, தமிழ் அரசியலின் நம்பிக்கை சீர்குலைந்தது.

“1976 வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்பது ஒரு திடீர் உணர்ச்சி வசப்பட்ட முடிவோ அல்லது வெற்றிடத்திலிருந்து உருவானதோ அல்ல. அது பல  தசாப்த கால அரசியலமைப்பு ஏமாற்றங்களின் திரண்ட வெளிப்பாடாகும். 1977 பொதுத் தேர்தலில் அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் ஐக்கிய விடுதலை  கூட்டணி பெற்ற அமோக மக்கள் ஆணை, தமிழ் மக்கள்  மத்தியில்  நிலவிய விரக்தியின் ஜனநாயக வடிவமாகும். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்பட்டவாறே, ஒரு நாட்டைப் பிரிப்பதற்கான மக்கள் ஆணையையும் சுமந்திருந்த அமிர்தலிங்கத்தின் நிலைமை, இலங்கை அரசியலின் மிகவும் முரண்பாடான, அதேநேரம் கடினமான ஒரு ஜனநாயகத் தருணமாகும்.

“இலங்கையின் மோதல் வரலாற்றுக்கு இருவேறு ஒருதலைப்பட்ச வாதங்களே (Unilateralisms) காரணம். சிங்களப்  பெரும்பான்மைவாதம் பெரும்பான்மைப்  பலம் மட்டுமே அரசின் தன்மையை நிர்ணயிக்கலாம் என நம்பியது. தமிழ்ப் பிரிவினைவாதம் தொடர் ஏமாற்றங்களால் தனி அரசு மட்டுமே தீர்வு என நம்பியது.

 “ஜனநாயகத்திற்கு பெரும்பான்மை ஆட்சி இன்றியமையாதது. ஆனால் அரசு மீதான பெரும்பான்மை உரிமை என்பது முற்றிலும் வேறுபட்டது. தேர்தல்கள் அரசாங்கத்தைத் தீர்மானிக்கலாமே தவிர, யார் இந்த நாட்டிற்கு அதிகமாகச் சொந்தக்காரர் என்பதைத் தீர்மானிக்கக் கூடாது. அத்துடன்  ‘யார் அரசைக் கட்டுப்படுத்துவது?’ என்று கேட்பதை விடுத்து, ‘ஒவ்வொரு சமூகமும் எவ்வாறு இந்த அரசில் ஒரு பங்குதாரராக (Shareholder) மாற முடியும்?’ என்ற வினாவை எழுப்புவதே பன்மைத்துவ ஜனநாயகத்தை உருவாக்கும்.” 

” 13வது திருத்தம் 1987 ஆம்  ஆண்டில்  இந்தியத் தலையீடு மற்றும் ஆயுத மோதல் சூழலில் பிறந்தது என்பதும் இன்று விடுதலை புலிகள் இயக்கமோ அல்லது அன்றைய புவிசார் அரசியல் அழுத்தங்களோ அதே வடிவில் இல்லை என்பதும்  நிதர்சனமாகும். எனினும், தற்போதைய அரசியலமைப்பு முறைமைக்குள் அதிகாரப் பகிர்வுக்குச் சட்டபூர்வத் தன்மையைக் கொண்டுள்ள ஒரே ஏற்பாடு  13வது திருத்தம் மட்டுமே. எனவே அதை நிராகரிப்பது புத்திசாலித்தனமல்ல. அதன் பலவீனங்களைச் சீரமைத்து முழுமையாக நடைமுறைப்படுத்துவதே பொறுப்புணர்வுடைய  செயலாக இருக்கும் 

” கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் முடக்கப்பட்டிருக்கிறது. பொலிஸ், காணி அதிகாரங்களை  பகிர்ந்தளிப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுமே தவிர பலவீனமடையாது. அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினைகளும் தீரும் வரை நல்லிணக்கத்தைக் காத்திருக்க வைக்க முடியாது 

” 1989 ஜூலையில் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தமிழ்ச் சமூகத்தின் மாற்று ஜனநாயகக் குரல்களையும் இனங்களுக்கு இடையே பாலத்தை  அமைப்பவர்களையும் திட்டமிட்டு ஒழித்த கொடூரமான நடவடிக்கையின் ஒரு அங்கமாகும். இத்தகைய தலைவர்களை இழந்ததன் விலையை இலங்கை மீண்டும் மீண்டும் செலுத்தியுள்ளது.

 “ஜனநாயக அரசியல் என்பது ஒரேயடியாக  இறுதி இலக்கை அடைந்துவிடக்கூடிய மார்க்கம் அல்ல.  அது சிறுமைப்படுத்தல் இல்லாத சுயமரியாதைக்கும், பழிவாங்கல் இல்லாத நீதிக்கும், ஆதிக்கம் இல்லாத சமத்துவத்திற்குமான தொடர்ச்சியான தேடலாகும். அரசியல் அரிதாகவே பரிபூரண தெரிவுகளை வழங்கும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து, அரை குறை வாய்ப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் தைரியமே அமிர்தலிங்கத்தின் தலைமைத்துவப் பண்பாக இருந்தது. அந்தப் பாதையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழலற்ற நிர்வாகத்துடன் இணைந்து, அனைத்துச் சமூகங்களையும் சமமான பங்குதாரர்களாகக் கொள்ளும் புதிய அரசியலமைப்பு எதிர்காலத்தை நோக்கி நாடு நகர வேண்டும்.”

 ஜெகான் பெரேராவின் இந்த உரை கடந்தகாலக் கசப்புணர்வுகளில் இருந்து விடுபட்டு, நடைமுறைச் சாத்தியமான அரசியலமைப்புத் தீர்வுகளின் மூலம் அனைத்துச் சமூகங்களையும் அரவணைக்கும் ‘ பன்மைத்துவ ஜனநாயகத்தை’ இலங்கையில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலப் பகுதியில் உச்சபட்சக் கோரிக்கைகளுக்காக காத்திருந்து இருக்கின்ற வாய்ப்புகளையும் இழப்பதை விட 13 வது திருத்தம் போன்ற நடைமுறையில் உள்ள சட்டக் கட்டமைப்புக்களை பயன்படுத்திப் படிப்படியாக அதிகாரங்களபை் பெற முயற்சிப்பதே சாணக்கியமான அணுகுமுறை என்பதையும் அதன் பிரதான செய்தியாகக் கொண்டிருக்கிறது.

போரினாலும் அரசியல் அடக்குமுறைகளினாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களின் இழப்புகளையும் நினைவுகளையும் வெறுமனே மனக்குறையாகத் தேக்கிவைக்காமல், அனுபவங்களைப் பயன்படுத்தி நிலைவரங்கள் வேண்டிநிற்பதன் பிரகாரம்  நடைமுறைக்குப் பொருத்தமான தீர்மானங்களையும் மதிப்பீடுகளையும் செய்யும் மெய்யறிவாக மாற்ற வேண்டும் என்பதும் ஜெகான் பெரேராவின் முக்கிய வலியுறுத்தலாக இருக்கிறது.

அமிர்தலிங்கம் போன்று பேச்சு வார்த்தைகளுக்கு தயாராக இருந்த மிதவாதத் தலைவர்களின் இழப்பு அன்றைய காலகட்டத்தில் தமிழச் சமூகத்துக்கு ஏற்படுத்திய அரசியல் வெற்றிடத்தை இந்த நினைவுப் பேருரை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. அந்த வெற்றிடம் இன்று வரை நிரப்பப்படாமலேயே இருக்கிறது.

ஜெகான் பெரேராவின் உரை இலங்கையின்  தற்போதைய அரசியல் சூழ்நிலையில், பல்வேறு தரப்பினராலும் வெவ்வேறான கோணங்களில் அணுகப்பட்டு வியாக்கியானம் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.

மிதவாதச் சிந்தனை கொண்ட தமிழ் அரசியல் சக்திகள் 13 வது திருத்தத்தை நிராகரிக்காமல் அதைப் பயன்படுத்தி அதிகாரப்பகிர்வை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தை வரவேற்கும் என்கிற அதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற தீவிர தமிழ்த் தேசியவாதப் போக்குடைய சக்திகள் ஜெகான் பெரேராவின் இந்த உரைமீது  கடுமையான விமர்சனப் பார்வையைக் கொண்டிருக்கும்.

13 வது திருத்தம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு  போதுமானதல்ல என்றும் ஜெகானின் வலியுறுத்தல்கள் மாகாணசபைகள் முறைமையில் உள்ள பாரதூரமான போதாமைகளை மூடிமறைக்கும் முயற்சியாக அமைந்திருக்கின்றன என்றும்  அவர்கள் கூறுவார்கள். ஒற்றையாட்சிக்குள் இணக்கப்பாடு என்ற அணுகுமுறை ஏற்கெனவே தோல்வி கண்டுவிட்டது என்றும் அவர்கள் வாதிடுவார்கள்.

ஆனால், பொதுவில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தென்னிலங்கையில் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உட்பட தங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஓரளவுக்கேனும் நிறைவு செய்யக்கூடிய பயனுறுதியுடைய அதிகாரப்பகிர்வை வழங்கப் போவதில்லை என்ற சந்தேகம் அவர்கள் மத்தியால் மிகவும் ஆழமாகவே உள்ளது. 

பதவிக்கு வந்ததும் ஒரு வருடத்திற்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக நாட்டு மக்களுக்கு  வாக்குறுதி வழங்கிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது மாகாணசபை தேர்தல்களை மேலும் தாமதிப்பதற்கான உத்திகளைக் கடைப்பிடித்து வருவதும் காணிகள் விடுவிப்பு மற்றும் இராணுவமயக் குறைப்பு போனற போரின் விளைவான மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு (மோதல்கள் முடிவுக்கு வந்து 17 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்ட நிலையிலும் கூட )  தீர்வுகளைக் காண்பதில் அக்கறையின்றி இருப்பதும்  தமிழ் மக்களின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

இத்தகைய ஒரு பின்புலத்தில், தென்னிலங்கைச் சமூகத்தின் ” மனமாற்றத்துக்கு ” அழைப்பு விடுப்பது கோட்பாட்டு ரீதியாக வரவேற்கக்கூடியது என்றாலும், நடைமுறையில் அது எந்தளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி தொடர்ந்தும் நிலையானதாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *