(அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்)
— செங்கதிரோன் —
எழுத்தாளர் தோழர் கு.சின்னப்பாரதியின் துணைவியாருக்குச் சிரம் தாழ்த்திய செவ்வணக்கம்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களுள் ஒருவரும் எழுத்தாளரும் 13.06.2022 அன்று மறைந்தவருமான தோழர் கு.சின்னப்பபாரதியின் துணைவியார் திருமதி.செல்லம்மாள் சின்னப்பபாரதி 19.08.2026 அன்றிரவு இயற்கையெய்தினார் என்ற செய்தியை முகநூல் பதிவொன்றில் படித்தபோது நெஞ்சில் நெருஞ்சிமுள்ளொன்று குத்திற்று.
உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் ஐந்தாவது மாநிலமாநாடு 21, பெப்ரவரி 2010 இல் தமிழ்நாடு குற்றாலத்தில் நடைபெற்றது. அப்போது இச்சங்கத்தின் ஆலோசகராக எழுத்தாளர் பிரபஞ்சனும் தலைவராக கவிஞர் வதிலை பிரபாவும் பொதுச்செயலாளராக எழுத்தாளர் சொர்ணபாரதியும் பொருளாளராக நந்தவனம் சந்திரசேகரனும் இம் மாநாட்டின் அமைப்பாளர்களாக ‘நல்லூர்முரசு’ பொறுப்பாசிரியர் சொக்கம்பட்டி றஹீம் மற்றும் அதன் நிர்வாக ஆசிரியர் எம்.எஸ்.ஜாஹீர்உசேன் ஆகியோரும் விளங்கினர்.
பேராசிரியர் சபா. ஜெயராசா, புரவலர் ஹாசிம்உமர் மற்றும் ‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக்ஜீவா ஆகியோரைக் காப்பாளர்களாகக் கொண்டு கொழும்பில் இயங்கிய உலகத்தமிழ்ச் சிற்றிதழ் சங்கத்தின் இலங்கைக்கிளையின் தலைவராக எழுத்தாளர் பத்மா சோமகாந்தனும், செயலாளராக எழுத்தாளர் அந்தனிஜீவாவும், பொருளாளராக நானும் பொறுப்பேற்றிருந்தோம்.
குற்றாலம் திருவிதாங்கூர் அரண்மனையில் சங்கத்தலைவர் வதிலைபிரபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் இலங்கைக்கிளையின் சார்பில் அந்தனிஜீவாவும் நானும் கலந்து கொண்டிருந்தோம்.

இம்மாநாட்டின்போது தமிழ்நாட்டு எழுத்தாளர் தி.க.சி மற்றும் ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் உட்படப் பல கவிஞர்கள் – எழுத்தாளர்கள் – சிற்றிதழ் ஆசிரியர்கள் எனப் பல இலக்கிய – எழுத்து ஆளுமைகளைச் சந்திக்கவும் அவர்களுடன் உரையாடவும் வாய்ப்பு ஏற்பட்டது.
இம்மாநாட்டில்வைத்து அப்போது இலங்கையின் மட்டக்களப்பிலிருந்து 2005 ஜனவரியிலிருந்து ஆரம்பித்து என்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த கலை இலக்கிய பண்பாட்டு பல்சுவைத் திங்கள் இதழான ‘செங்கதிர்’ சஞ்சிகைக்கு ‘அய்யன் திருவள்ளுவர் இலக்கியப் பேரவை விருது’ம் வழங்கப்பெற்றது.
மாநாடு நிறைவுற்று மறுநாள் அந்தனிஜீவாவும் நானும் திருச்சிக்கு வந்து அங்கிருந்து கு.சின்னப்பபாரதியைச் சந்திப்பதற்காக நாமக்கல் சென்றோம். எம்மை நாமக்கல்லுக்கு அழைத்துச் செல்வதற்காகச் சின்னப்பபாரதி அவர்கள் தனது உதவியாளர் சி.க.கருப்பண்ணன் என்பவரை ஏற்பாடு செய்திருந்தார்.
திருச்சியில் தமிழ் இதழ்கள் சேகரிப்பாளர் அரிமா. எந்திரி க.பட்டாபிராமன் அவர்களையும் சந்தித்தோம்.
நாமக்கல் சென்ற அந்தனிஜீவாவும் நானும் சின்னப்பபாரதியின் விருந்தாளிகளாக ஒருநாள் தங்கியே திரும்பினோம். அப்போது சின்னப்பாரதியின் துணைவியாரின் அன்பான உபசரிப்பிலும் – விருந்தோம்பலிலும் அந்தனிஜீவாவும் நானும் சுகித்திருந்த தருணங்கள் நினைவலைகளாக எழுந்து அன்னாரின் மறைவுச் செய்தி மனதைக் கனக்கவைக்கிறது.
இன்று பத்மாசோமகாந்தன் – அந்தனிஜீவா – சின்னப்பபாரதி – டொமினிக்ஜீவா ஆகியோர் அமரத்துவம் அடைந்தவர்களாகிவிட்டனர். சின்னப்பபாரதியின் துணைவியாரும் இயற்கையெய்திவிட்ட இத்தருணத்தில் அவருடன் இணைந்ததாக சின்னப்பபாரதியின் நினைவுகள் குளத்தில் கல்லெறிந்ததுபோல நீர்வளையங்களாக எழுகின்றன.
‘எழுத்து என்பது பணம் சேர்க்கும் புகழ் ஈட்டும் சாதனமல்ல. சமூகத்தில் நிகழும் எதிரும் புதிருமான வாழ்வில் சாதாரண மக்களைப் பாதிக்கும் வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை ஆகியவற்றுக்கெதிராகவும், கௌரவமான ஒரு வாழ்வை உருவாக்கவும் போராடும் மக்கள் திரளுக்கு உதவக்கூடியதாக இருக்கும் வகையில் பயன்பட வேண்டுமெனக் கருதுகிறேன். சுருக்கமாகக் கூறினால் சகல ஏற்றத்தாழ்வுகளையும் அகற்றும் போராட்டத்தில் எனது எழுத்தும் ஒரு தலையீடாக இருக்க விரும்புகிறேன்.’ என்று தனது படைப்பு நோக்கத்தைப் பிரகடனம் செய்தவர் சின்னப்பாரதி.
‘நிலவுடைமை எப்போது’ (1958) – ‘தாகம்’ (1975) – ‘சங்கம்’ (1985) – ‘சர்க்கரை’ (1991) – ‘சுரங்கம்’ (2006) – ‘பவளாயி’ ஆகியன கு. சின்னப்பாரதி எழுதி வெளியிட்ட பிரதான நாவல்களாகும்.
இவற்றில் ‘பவளாயி’ நாவல் பெண்மைக்கு ஏற்றம் தருவதாகும். கரும்புச் சாகுபடியின் நுணுக்கங்களையும் விவசாயிகளின் பிரச்சனைகளையும் ஆழமாக எடுத்துக்கூறுவது ‘சர்க்கரை’ நாவல். வங்காளதேசத்துச் சுரங்கமொன்றில் நடக்கும் தொழிலாளர்களை மையமாகக் கொண்டது ‘சுரங்கம்’ நாவல். ‘தாகம்’ நாவல் தொழில்மயமாகாத கிராமப்புறத்துக் கதையாகும். கொங்கு நாட்டுக் கிராம வாழ்க்கையை இது வட்டாரப் பண்பாட்டு உணர்வுடன் வெளிக்கொணர்கிறது. மலைவாழ் பழங்குடி மக்களின் குடும்ப வாழ்வு – வாழ்க்கை நெறிகள் – பந்தபாசங்கள் – பரம்பரை ஊர்த்தலைமை ஆதிக்கம் – அரச அதிகாரிகளின் அக்கிரமங்கள், இக்கொடுமைகளை எதிர்க்கமுடியாத ஏக்கம் என்பவற்றை எடுத்துக்கூறுவதாகச் ‘சங்கம்’ படைக்கப்பட்டது. இந்நாவலைத் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் போராட்ட இதிகாசம் என்று வர்ணித்துள்ளார்.
தோட்டிச் சிறுவன் ஒருவனைக் காவியத்தலைவனாகக் கொண்டு ‘தெய்வமாகி நின்றான்’ என்றொரு காவியத்தையும் சின்னப்பபாரதி படைத்துள்ளார்.
அத்தகைய எழுத்தாளுமை ஒருவரின் காரியம்யாவிலும் கைகொடுத்து நின்றவர்தான் அவரது துணைவியார் திருமதி. செல்லம்மாள் சின்னப்பபாரதி.
கு. சின்னப்பபாரதி தனது ‘என் பணியும் – போராட்டமும்’ என்ற நூலில் ‘நான் இன்று பொருளாதாரச் சிக்கலின்றி இருக்கிறேன் என்றால் அதற்கு மூல காரணம் நூற்றுக்கு நூறு அவரே’ என்று தனது மனைவி செல்லம்மாள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
தனது தத்துவ ஆசானான இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்களின் வழியில் ‘கம்யூனிஸ்ட்’ வாழ்க்கையை வாழ்ந்த கு. சின்னப்பபாரதியுடன் தாம்பத்திய வாழ்வில் இணைந்த மனைவி செல்லம்மாள் பற்றி மகாகவி பாரதியாருக்கு மனைவியாக ஒரு செல்லம்மாள் வாய்த்தது போலவே சின்னப்பபாரதிக்கும் ஒரு செல்லம்மாள் வாய்த்திருப்பதாகவே சின்னப்பபாரதியின் குடும்ப வாழ்க்கையை அறிந்த அவரது நண்பர்கள் கூறுவர்.
இடதுசாரிப் பத்திரிகைளான ‘தீக்கதிர்’ பத்திரிகையில் பல ஆக்கங்களைத் தீட்டிய சின்னப்பபாரதி அவர்கள் ‘செம்மலர்’ பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியராகவும் திகழ்ந்துள்ளார். சின்னப்பபாரதியின் ‘தாகம்’ நாவல் செம்மலரில் தொடராக வெளிவந்து பின்னர் நூலுருப்பெற்றதாகும். சின்னப்பபாரதியின் நாவல்கள் ஆங்கிலம் – இந்தி – மலையாளம் – தெலுங்கு – வங்காளி ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன.
உலகத்தமிழ்ச் சங்கத்தின் 5 ஆவது மாநாடு 2010 இல் தமிழ்நாடு குற்றாலத்தில் நடைபெற்றபோது அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அதன் 6 ஆவது மாநாடு 05.01.2011 இவ் கொழும்பில் இராமகிருஸ்ணமிஷன் கருத்தரங்க மண்டபம், வெள்ளவத்தையில் நடைபெற்றது.
தொடர்ந்து 2011 ஜனவரி 6, 7, 8, 9 ஆம் திகதிகளில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பில், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து வந்த பேராளர்களுள் கு. சின்னப்பபாரதியும் அடங்கியிருந்தார். அச்சந்தர்ப்பத்திலும் அவருடன் ஊடாட வாய்ப்புக்கிடைத்தது. பழகுவதற்கு இனிமையான எளிமையான எழுத்தாளுமை.
இந்தியாவின் முற்போக்கு இலக்கியப் பாரம்பரியத்தை முன்னெடுத்து மகத்தான பணியாற்றிய இடதுசாரித்துவ எழுத்தாளுமையான கு.சின்னப்பபாரதி அவர்களின் வாழ்க்கைத் துணையாக வாழ்ந்து பெருமை படைத்து இன்று இவ்வுலக வாழ்வை நீத்துள்ள அமரர். செல்லம்மாள் சின்னப்பபாரதிக்குச் சிரம் தாழ்த்தி செவ்வணக்கம் செலுத்துவோமாக.
