— எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் —
தமிழில் வல்லபம் மிக்க பேச்சாளரான அமிர்தலிங்கம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியராக விபுலானந்தர் கடமையாற்றிய போது அங்கு பயின்றவர். அன்றிலிருந்து மட்டக்களப்பு தமிழகத்துக்கும் அவருக்குமான தொடர்புகள் ஆரம்பித்தன எனலாம். அதன் பின்னர் பட்டதாரியாக வெளியேறிய அமிர்தலிங்கம் பல அரசியல் கட்டுரைகளை எழுதத்தொடங்கினார். மண்டூரில் இருந்து 1948-1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த “பாரதி” என்னும் இலக்கிய சஞ்சிகையில்கூட அவரது அரசியல் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
1949 ல் சா.ஜே.வி.செல்வநாயகம் ஆரம்பித்த தமிழரசு கட்சியூடாக அவரது நேரடி அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. அவரது நீண்ட அரசியல் பயணமானது பதவிகளால் மட்டும் அலங்கரிக்கப்பட்ட -தாயிருக்கவில்லை. சாத்வீக போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், சத்தியாகிரகங்கள், ஊர்வலங்கள்,
கறுப்பு கொடியேந்தல்கள், கைதுகள், சிறைவாழ்வுகள், அஞ்ஞாதவாசங்கள், துன்பங்கள், துயரங்கள் என்பவற்றால் நிரம்பியது.
1952ஆம் ஆண்டு முதன் முதலாக போட்டியிட்ட பாராளுமன்ற தேர்தலிலே அவர் தோல்வி காண நேர்ந்தது. அதன் பின்னர் 1956ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்த அவருக்கு தனது அரசியல் இருப்பை தொடர்ச்சியாக பேணுவதென்பது அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை. அதனை தொடர்ந்து வந்த 1960,1965 தேர்தல்களில் வெற்றிபெற்ற போதும் 1970ஆம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வியடைய நேர்ந்தது. அந்த தேர்தலிலே அவர் சார்ந்த கட்சியும் பலத்த சரிவை சந்திக்க நேர்ந்தது.
1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்கள மொழி சட்டத்தை எதிர்த்து தமிழரசு கட்சியினர் நடாத்திய சத்தியாகிரக போராட்டம் முக்கியமானது. காலிமுகத்திடலில் அந்த சத்தியாகிரகிகள் மீது சிங்கள காடையர்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் பலர் படுகாயமடைந்தனர். அந்த தாக்குதலில் இரத்தம் தோய்ந்த ஆடையுடன் பாராளுமன்றம் சென்றார் அமிர்தலிங்கம்.
1953ஆம் ஆண்டு இந்தியாவில் ஹிந்தி எதிர்ப்பு வலுப்பெற்றபோது டால்மியாபுரம் என்கின்ற பெயரை கல்லக்குடி என மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கே ரயிலை மறித்து தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்தார் கருணாநிதி. அந்த தீரச்செயல் எப்படி அவருக்கு “கல்லக்குடி காத்த வீரர்”என்கின்ற மங்காப்புகழை பெற்றுத்தந்ததோ அதேபோன்றே அமிர்தலிங்கம்
காலிமுகத்திடலில் பட நேர்ந்த இரத்தகாயங்கள் அவருக்கு வலிமையான ஒரு அரசியல் அடையாளத்தை பெற்றுத்தந்தது.
1977 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள நேர்ந்த போது செல்வநாயகம் மரணமடைந்தார். அவ்வேளையில் தனது சொந்த தொகுதியைவிடுத்து செல்வநாயகத்தினுடைய காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்டதனுடாக தனது தேர்தல் வெற்றியை காரியசித்தியாக்கினார்.. அத்தோடு கூடவே தானே கட்சியின் இரண்டாம் தலைமை என்பதையும் உறுதி செய்தார். இத்தகைய செயல் திறன்மிக்க திட்டமிட்ட நகர்வுகளே அவருக்கு என்றும் உறுதுணையாயின.
1970ஆம் ஆண்டுகாலமானது தமிழரசு கட்சிக்கு மட்டுமன்றி தமிழ் தேசிய சக்திகளுக்கு பெரும் சவால் மிகுந்ததொன்றாகவிருந்தது. செல்வநாயகத்தின் அந்திம காலங்களில் தமிழ் காங்கிரஸ் என்றும் தமிழரசு கட்சி என்றும் இரு பெரும் துருவ அரசியல் வடக்கு- கிழக்கில் கால்கொண்டிருந்தது. மறுபுறம் இடதுசாரிகளின் செல்வாக்கு யாழ்குடாநாட்டில் அதிகரித்து வந்தது. அதனை எதிர்கொள்ள தமிழ் தேசிய சக்திகளை ஒருங்கிணைத்து செயல்படவேண்டியதன் அவசியத்தை அவர் உணர்ந்தார். அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பிளவுபட்ட தமிழரின் அரசியல் பாதையை ஒருமித்து கூட்டியெடுத்து தமிழர் விடுதலை கூட்டணியாக மாற்றியமைத்தமையானது அமிர்தலிங்கத்தின் தலைமைத்துவ ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாகும். அதனுடாகவே வரலாறு காணாத வகையில் 17 உறுப்பினர்களை ஒருமித்து வென்று அவர் எதிர்க்கட்சி தலைவராகி வரலாற்று சாதனையையும் புரிய முடிந்தது.
அதேவேளை “வட்டுக்கோட்டை தீர்மானத்தின்” ஊடாக தமிழர்களின் அரசியல் பாரம்பரியத்தை தீவிரவாத சிந்தனை நோக்கி திருப்பியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. இந்த விடயத்தில் தமிழ் தேசியவாதிகள் இவரை ஒரு சாதனையாளராக பார்க்கின்றனர். அதேவேளை இளைஞர்களை ஆயுதமேந்தி வைத்து விட்டு அவர்களுக்கு ஓர் சரியான தலைமையை கொடுக்க முடியாது, இளைஞர்களை கட்டுமீறி செயல்பட அனுமதித்தார். அல்லது விட்டு விலகி ஓடி தமிழ் நாட்டில் அஞ்ஞாதவாசமிருந்தார், இதனுடாக வன்முறையும் அராஜகமும் கொண்ட ஒரு பாரம்பரியத்தை போராட்டம் என்கின்ற பெயரில் வடக்கு கிழக்கில் செயற்பட வாய்ப்பளித்தார், என்கின்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது இன்று பலராலும் முன் வைக்கப்படுகின்றன.
ஆனபோதும் இலங்கை தமிழர் பிரச்னையை இந்தியாவின் டில்லி முதற்கொண்டு சர்வதேச அரங்குகளை எடுத்துச் சென்றதில் அமிர்தலிங்கத்துக்கு நிகர் இன்றுவரை யாருமிலர் எனலாம். ஒரு தேர்ந்த இராஜதந்திரியாக அவர் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்ற இந்திய தலைவர்களை ஆட்கொண்டிருந்தார். செல்வநாயகம் காலத்திலிருந்தே தமிழ்நாட்டின் பெருந்தலைவர்களான பெரியார், காமராஜர், போன்றவர்களோடு அறிமுகமானார். பின்னாளில் முதல்வர்களாயிருந்த எம்ஜிஆர், கருணாநிதி போன்றவர்களோடும் நெருக்கமான உறவுகளையும் பேணினார்.
ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஐந்துடனும் இலங்கையரசு நேரிடையாக பேச வேண்டியதன் அவசியத்தை இந்தியாவுக்கு புரிய வைப்பதில் இந்திய இராஜதந்திரிகளை இலாவகமாக கையாண்டார். அதனுடாக ‘திம்பு பேச்சுவார்த்தை’ என்கின்ற உரையாடல் மேசையொன்றை நோக்கி முதன் முறையாக இலங்கையரசை நகர்த்துவதற்கு தேவையான நெருக்கடியை அவர் கொடுத்தார். பின்னர் அந்த அத்திவாரத்திலிருந்தே இலங்கை இந்திய ஒப்பந்தம் கூட சாத்தியமானது எனலாம்.
எத்தனைதூரம் தேசிய அளவிலும் சர்வதேச ரீதியாகவும் இலங்கை தமிழர்களின் மதிக்கப்படுகின்ற தலைவராக அமிர்தலிங்கம் இருந்த போதும் பரந்துபட்ட தமிழ் மக்களின் பெருந்தலைவராக அவரால் மிளிரமுடியவில்லை. தமிழ் மக்களில் ஒருபகுதியினர் அவர் மீது கொண்டிருந்த கசப்புணர்வுகளை அவரால் வெற்றி கொள்ள முடியவில்லை. குறிப்பாக 1965-1970களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களில் அமிர்தலிங்கமும் சரி அவர் சார்ந்த தமிழரசு கட்சியும் சரி ஒரு வலதுசாரி மேட்டுக்குடி நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர்.
பாராளுமன்றில் “சங்கானை சாதியெதிர்ப்பு” போராட்டத்தை “அது ஒரு ஷங்காய் சங்கானையல்ல” என்று கேலிசெய்தார். வடகுடாநாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் இடதுசாரிகளையும் ஏன் சிங்கள தலைமைகளை கொண்ட தேசிய அளவிலான கட்சிகளையும் வரவேற்ற அளவுக்கு கூட அமிர்தலிங்கத்தை வரவேற்க முன்வராமைக்கு அவரது மேற்படியான அரசியல் தவறுகள் காரணமாயின.
அதேபோல செல்வநாயகத்துக்கு பின்னரான கட்சி தலைமையை கைப்பற்றுகின்ற போட்டியில் கிழக்கின் முடிசூடா மன்னன் இராஜதுரையை ஓரங்கட்டி, ஒதுக்கிவிடுவதில் அவர் கையாண்ட வழிமுறைகள் ஒரு சிறந்த தலைமைக்குரிய குணவியல்புகளை கொண்டிருக்கவில்லை. அந்த மனத்தாங்கல்கள் இன்றுவரை கிழக்கு மக்களிடையே வடுக்களாக தொடருகின்றன.
1989ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவர் மட்டக்களப்பில் போட்டியிட்டமையும் மட்டக்களப்பு மக்களால் பெரிதாக வரவேற்கப்படவில்லை. ஒரு யாழ்-மேலாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாக மக்கள் பார்த்தனர். 1977ஆம் ஆண்டு மட்டக்களப்பில் விதைத்ததை 1989ஆம் ஆண்டு அவர் அறுவடை செய்தார். ஆம் அவர் படுதோல்வியடைய நேரிட்டது. எனினும் அவர் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்.
இறுதியாக எந்த தீவிரவாதத்தை அவர் ஆதரித்தாரோ, எந்த வன்முறைகளுக்கு தூபமிட்டு வளர்த்தெடுத்தாரோ அந்த வன்முறையே அவரைப் பலிகொண்டது. அதிலும் எந்த ஆயுதபோராட்ட தலைமையை அவர் அதிகம் முன்னிறுத்தினாரோ அந்தப் பிரபாகரனே அவருக்கு காலனாயினான். 1989 சூலை 13 ஆம் திகதி கொழும்பில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து புலிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1949ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய அமிர்தலிங்கத்தினுடைய அரசியல் வாழ்வு 1989ஆம் ஆண்டு அவர் கொல்லப்படும் வரையான சுமார் நாற்பது வருட காலம் நீடித்தது.
மூத்த அரசியல் தலைவரான அமிர்தலிங்கம் அவர்களது 99 வது பிறந்த தினம் ஆகஸ்ட் 26ல் வருகின்றது. அவர் கொல்லப்பட்ட போது அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க இப்படிச்சொன்னார்
“ஒரு சிங்கள மகனின் கரங்களால் இவர் கொலை செய்யப்படவில்லை என்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கின்றேன்”.
