(ஓவியர் மருதுவுக்கு கனடா இலக்கியத்தோட்டத்தின் இந்த ஆண்டுக்கான (2026) இயல் விருது வழங்கப்படுகிறது. தமிழ்ப் பண்பாட்டின் வேரையும் முகத்தையும் இணைத்து தன்னுடைய ஓவியங்களை உருவாக்கியவர் மருது. ஓவியத்தில் மட்டுமல்லாமல் சினிமா, இலக்கியம் போன்ற பிற துறைகளிலும் மருதுவின் பங்களிப்புகள் உண்டு. இந்தக் கட்டுரை மருதுவுடனான கருணாகரனின் அறிமுகத்தையும் அவதானத்தையும் வெளிப்படுத்துகிறது. இயல் விருது பெறும் மருதுவுக்கு வாழ்த்துகள்.)
— கருணாகரன் —
1980 இன் முற்பகுதியிலேயே எனக்கு நவீன இலக்கியத்துடனான அறிமுகம் கிடைத்தது. நவீன இலக்கியம் மீதான அறிமுகம் என நான் சொல்வது, சிற்றிலக்கிய இதழ்களுடனான அறிமுகம். அதுவே வாசிப்பைப் பற்றியும் ஓவியம், சிற்பம், சினிமா, சிற்பம், இசை போன்ற ஏனைய கலைகளைப் பற்றியுமான புதிய பார்வையைத் தந்தது. அதற்கு முன்பு பாரதி, ஜெயகாந்தன், எஸ்.பொ, கே.டானியல், டொமினிக் ஜீவா, செ. கணேசலிங்கன், வ.அ.இராசரத்தினம், செங்கை ஆழியான், மஹாகவி, நீலாவணன், முருகையன், தா. இராமலிங்கம், மு. தளையசிங்கம், பவானி, க.சட்டநாதன், நந்தி, எம்.ஏ. நுஃமான் போன்றோரை வாசித்திருந்தாலும் கலையின், இலக்கியத்தின் நுண்ணிய அடிப்படைகளைப் பற்றிய அவதானிப்பு 80 களின் முற்பகுதியிலிருந்தே ஏற்பட்டது. அதிலிருந்து ஓவியங்களைப் பார்ப்பதற்கும் புதிய அவதானங்களைப் பெறுவதற்கும் ஆர்வம் உண்டாகியது. அந்த ஆர்வத்தின் வழியாக தமிழிலும் தமிழுக்கு வெளியிலும் உள்ள ஓவியர்களை அவதானிக்கத் தொடங்கினேன். அந்த அவதானத்தில் தமிழில் கவர்ந்தவர் மருது. மனம் பழகி வைத்திருந்த மரபான ஓவியங்களுக்கு அப்பால், ஒரு புதிய அதிர்வை மருது, ஆதிமூலம், சந்ரு, ஆர். பாஸ்கரன் போன்றோரின் ஓவியங்கள் ஏற்படுத்தின. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வேறுபாடுகளும் தனித்தன்மைகளும் அடையாளங்களும் இருந்தாலும் மருது இவர்களில் தனித்துத் தெரிந்தார். அடர்த்தியும் இலகுவும் இணைந்த வெளிப்பாடாக மருது ஈர்த்தார். அநாசாயமான வண்ணங்கள். அதற்கிணையான கோடுகள். இதையெல்லாம் மனம்போன போக்கில் தீட்டப்பட்டதைப்போல அல்லது வரையைப்பட்டதைப் போல தோன்றியது. இதையெல்லாம் விளையாட்டாகத்தான் செய்கிறாரா மருது என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனால், அவரோ எல்லாவற்றையும் மிக ஆழமான பிரக்ஞையோடு தன்னுடைய வெளிப்பாடுகளை நிகழ்த்தினார். அவருடைய மனிதர்களுக்கிடையில் ஒரு சமாந்தரத் தன்மை இழையோடியது. முகங்களிலும் உடலிலும் மிளிர்கின்ற – மிளிரத் துடிக்கின்ற விளைவுகள் நீரும் தீயும் இணைந்து ஆடும் நடனத்தைப்போன்றவை. அப்படியான ஒரு அபூர்வமான வெளிப்பாட்டுத்தன்மை மருதுவின் ஓவியங்களில் தெரிந்தது. மனம் அதைத் தேடத் தொடங்கியது. ஆனாலும் மருதுவின் ஓவியங்களை – ஓவியக் காட்சிகளை முழுமையாகப் பார்க்கக் கூடிய வாய்ப்பு இருக்கவில்லை. அவர் இருப்பது இந்தியாவில் – சென்னையில். நான் இலங்கையில். என்றபோதும் ஏதாவது இதழ்களில் மருதுவின் ஓவியங்களைக் கண்டால், அந்தப் பக்கத்திலுள்ள கதையையோ, கவிதையையோ படிப்பதற்கு முன்பாக, ஓவியத்தைப் பார்ப்பேன். அதைப்போல சில இதழ்களுக்கு முகப்பு ஓவியமாக மருதுவின் ஓவியங்களை வைத்திருப்பார்கள். சில நூல்கள் மருதுவின் ஓவியங்களோடு வந்தன. தொடர்ந்து மருதுவின் ஓவியங்களோடு பரிச்சயமும் நெருக்கமும் உண்டாக, மருதுவைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அப்பொழுது சென்னையில் எழுத்தாளர் செ. யோகநாதன் இருந்தார். அது கடிதங்களின் வழியாக நாம் உரையாடிக் கொண்டிருந்த காலம். யோகநாதனிடம் மருதுவைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார், “மருதுவின் அப்பா ஒரு இடதுசாரி. அதனால்தான் ட்ராஸ்கி என்ற பெயரை மருதுவுக்கு வைத்தார். அந்தப் பெயரோடு தந்தையின் பெயரையும் இணைத்தே ட்ராஸ்கி மருது என்று மருது வைத்துக் கொண்டார்.
ஓவியங்களில் மருது என்று தந்தையின் பெயரைக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் இடதுசாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது மருதுவின் அப்பா (மருதப்பன்) அங்கிருந்து தப்பி, இலங்கையில் சில காலம் தங்கியிருந்தார்..”என்று. இந்தத் தகவல் மேலும் மருதுவை நெருக்கமாக்கியது.
1990 களில் மருது, ஈழப்போராட்டத்துக்கென ஓவியங்களின் வழியாகப் பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அதொரு பெரிய பணி. தொடர் செயற்பாடு. மனதும் உடலும் கூடியிழைத்த வெளிப்பாடுகள். கூடவே தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடும் பயணத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். போர்ச் சூழலிலும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டேயிருந்தேன். ஈர்ப்பிருந்தால், இயல்பாக அதில் நம்முடைய கவனம் இருக்குமல்லவா. அதுதான் இதற்கான அடிப்படை. மருதுவின் ஓவியங்களில் கூத்துக் கலைஞர்களும் தமிழ் நிலத்தின் மனிதர்களும் எழுந்து வந்தனர். சனங்களின் கிராமியத் தெய்வங்களும் வழிபாடும், கலையும் சந்நதமும் ஆடுகளும் மாடுகளும் தெருக்களும் சூழலும் அப்படியே அசலாக எங்கள் நிலத்தின் வாழ்க்கையை, அதன் சாரத்தை, அங்கே வாழ்கின்ற மக்களின் அடையாளத்தை உயிராக்கித் தருவதாகத் தோன்றியது. மருது நம்முடைய இரத்தத்தோடு ஊறியவராகத் தென்பட்டார்.
மருதுவின் ஓவியங்களைப் பற்றி நண்பர்கள் கூடிப் பல பொழுதுகள் பறைந்தோம். கிடைக்கும் சில ஓவியங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். அவற்றில் கூத்துக் கலைஞர், தமிழ்ப்பெண் என இரண்டு ஓவியங்களைச் சட்டமிட்டு (Freme) சுவரில் மாட்டியிருந்தேன். யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, சுவரே இல்லாத குடிசைகளுக்குப் பெயர்ந்து கொண்டிருந்தபோது, வேறிடமின்றி, முற்றத்தில் தென்னைமரத்தோடு அந்த ஓவியங்களை நிறுத்தி வைத்திருந்ததும் உண்டு. மழைக்காலத்தில் குடிசைக்குள் எடுத்து வைப்பதும் அது தீர்ந்த பிறகு வெளியே கொண்டு வந்து வைப்பதுமாக அந்த நாட்கள் கழிந்தன. அந்தச் சேகரிப்புகளெல்லாம் பின்னர் யுத்தத்தின்போது அழிந்த புத்தகங்கள், கடிதங்களோடு சேர்ந்து அவையும் அழிந்து விட்டன. அது பெரிய துயரம். ஆனாலும் மனதில் அவற்றின் வண்ணமும் சித்திரமும் அழியாதுள்ளது.
1990 இன் இறுதிப் பகுதியில் என்னுடைய கவிதை நூலை வெளியிடத் தீர்மானித்தபோது மருதுவின் ஓவியத்தோடு அந்த நூல் வரவேணும் என்ற விருப்பமிருந்தது. நானும் கவிஞர் புதுவை இரத்தினதுரையுமாக பொருத்தமான ஓவியங்கள் மூன்றைத் தெரிவு செய்து எடுத்திருந்தோம். மருதுவின் அனுமதியைப் பெற முடியாது விட்டாலும், அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு சேர்த்துக் கொள்ளலாம் என்பது எங்களுடைய எண்ணம். ஆனாலும் அந்த ஓவியங்களை அச்சில் கொண்டு வருவதற்குரிய அச்சிடல் வசதிகள் வன்னியில் அப்போதிருக்கவில்லை. அது யுத்தம் தீவிரமடைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ காலகட்டம். வேறு வழியின்றி சந்ருவின் கோட்டோவியத்தைப் பயன்படுத்தினோம். சந்ருவிடமும் அனுமதியைப் பெறவில்லை. அவருக்கு நன்றி மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது.
2002 இல் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த அமைதிக்காலம். அப்பொழுது கலைபண்பாட்டுக்கழகமும் ‘வெளிச்சம்’ இதழும் இணைந்து ‘மானுடத்தின் தமிழ்க் கூடல்’ நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. மாநாடு, யாழ்ப்பாணத்தில் நடந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து சிங்களக் கலைஞர்களும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களும் வந்திருந்தனர். கிழக்கிலிருந்து தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களும் கலைஞர்களும் வந்தனர். தமிழ்நாட்டிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளன், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், ஓவியர் மருது, கவிஞர் இன்குலாப், திரைக்கலைஞர் புகழேந்தி ஆகியோர் வந்திருந்தனர். இதற்கான தொடர்பைக் கொண்டு ஏற்பாடுகளைச் செய்தவர் பொ. ஐங்கரநேசன். 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வுக்குப் பிறகு, சென்னைக்குச் சென்று சில ஆண்டுகள் அங்கே தங்கியிருந்தபோது கிடைத்த அறிமுகத்தினால் இதைச் செய்யக் கூடியதாக இருந்தது ஐங்கரநேசனுக்கு. அப்போதுதான் மருதுவை முதன்முதலில் சந்தித்தேன். ஆனாலும் அவருடன் தனியாக எதையும் விரிவாகப் பேச முடியவில்லை. அந்தச் சூழல் அப்படியாக இருந்தது. சில விடயங்களைப் பற்றிப் பொதுவாகப் பேசினோம். இரண்டு நாட்கள் நடந்த மாநாட்டிற்குப் பிறகு வன்னிக்கு வந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துச் சென்றது தமிழ்நாட்டு அணி. ஒரு தடவை விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறைப் பிரவுக்கு மருது வந்திருந்தார். அப்போதும் சந்திக்க வாய்ப்பிருந்தது. இந்தச் சந்திப்பு கிளிநொச்சியில் நடந்தது. அமைதி, எளிமை, அறிவு, திறன் நான்கும் மருதுவின் அழகு. அதுவே அவர் ஊட்டுகின்ற வியப்பும்.
தமிழ் அடையாளத்தைத் துலக்கமாக்கியவர்களில் ஆதிமூலமும் மருதுவும் முக்கியமானவர்கள். பின்னாளில் இதை அடையாளப்படுத்தும் விதமாக அவருடைய ‘வாளோர் ஆடும் அமலை’ என்ற ஓவியத்தொகுப்பு அமைந்தது. தமிழ் மன்னர்கள், தமிழ்ப் புரட்சியாளர், தமிழர் வீரம் என்ற வகையிலான தொகுப்பு. அது மருதுவின் குறிப்பிடத்தக்க படைப்புகளின் சேகரம். அதை விட அவர் மீதான இன்னொரு பிடிப்பும் இருந்தது. அது வரைகலைகளில் அவர் நிகழ்த்துகின்ற கலைச்சாதனை. அதைப்பற்றிப் பலரும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர். அதில் அவர் உருவாக்கிய பெறுமானங்களைப் பற்றியும் அவர் முன்னோடியாக இருந்ததைப் பற்றியும். அந்த ஓவியங்கள் வேறொரு பரிமாணத்தில் அமைந்தன. அது மருதுவை சினிமாவிலும் கொண்டுபோய்ச் சேர்த்தது. நாசர் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தேவதை படம், நாசரும் மருதுவும் இணைந்த கலவை அல்லது விளைவு. பின்னர் சாசனம் படத்தில் மகேந்திரன்.
என்னுடைய அவதானிப்பில் மருதுவிடம் பிடித்த ஓரம்சம், அவருடைய நெகிழ்ச்சியாகும். பிடிவாதங்களின் கூரை அவரிடமே அவருடைய ஓவியங்களிலோ உணர முடியவில்லை. இது பெரும்பாலான கலைஞர்களிடம் காணக் கிடைக்காத அபூர்வ குணமாகும். இந்த நெகிழ்ச்சியே அவருடைய பலமாகும் என எண்ணுகிறேன். என்பதால்தான் அவரால் தேங்காமல் தொடர்ந்தும் பயணிக்க முடிகிறது. தன்னுடைய அடையாளங்களைப் புதுப்பித்துக் கொண்டே செல்வதற்கு இந்த நெகிழ்ச்சி அவருக்கு உதவுகிறது. இதை அவர் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் சற்று வேறுவிதமாகச் சொல்கிறார், “நான் ஒரு சமகால ஓவியன். எனது வெளி ஏற்கனவே கற்பிக்கப்பட்ட வெளி கிடையாது. எனது செயல்பாட்டு எல்லை விரிவானது. பல ஊடகங்களின் கூறுகளைக் கொண்டது எனது படைப்புவெளி. சமகாலத்து படைப்புலக சாத்தியங்களை அறிந்து, அதில் நீந்தி மகிழ்பவன் நான்..” என. இதற்கு முக்கியமான காரணம், மருது எப்போதும் கற்றுக்கொள்ளக் கூடியவராக இருப்பதாகும். என்பதால்தான் அவர் சமகாலத்தைப் பிரதிபலிக்கிறார். சமகாலத்துக்குரியவராக இருக்கிறார். இந்தக் கற்கும் இயல்பே அவரை புதிய வெளிப்பாட்டுடனும் வெளிப்பாட்டுச் சாதனங்களோடும் இணைத்திருக்கிறது. என்பதாலேயே அவர் பல்லூடகத் தளத்தில் தன்னை வெற்றிகரமாக நிறுத்த முடிந்தது. சமநேரத்தில் மருது பலரை இந்தத் துறையில் ஆளுமைகளாக உருவாக்கியுள்ளார். இது முக்கியமான ஒன்று. தான் கற்றுக் கொண்டிருப்பதோடு, அடுத்த தலைமுறையைப் பயிற்றுவிப்பது மிகச் சிறப்பான பணியும் குணமுமாகும். பலரும் கற்றுக் கொள்வதை விடப் பெற்றுக் கொள்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பெற்றுக் கொள்ளல் என்பதற்குப் பல பொருளுண்டு என்பதை இங்கே கவனத்திற் கொள்ள வேண்டும். அதிகாரத் தரப்புக்களிடமிருந்து அங்கீகாரத்திலிருந்து வசதி வாய்ப்புகள் வரையில். அந்தப் பெற்றுக் கொள்ளல்களுக்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்ளும் கலைஞர்கள் எப்போதும் தனித்தன்மைகளாலும் சுயாதீனத்தினாலும் ஒளிர்வர். அந்த ஒளியை மருதுவிடம் காண்கிறேன்.
கலைத்திறன், கலையாற்றல் பலரிடத்திலும் இருக்கலாம். அல்லது அது பலரிடமும் உண்டு. பலிரிடத்திலும் இல்லாதவை மக்களோடும் அவர்களுடைய பிரச்சினைகளோடும் அதற்கான போராட்டங்களோடும் இணைந்திருப்பதாகும். எவரும் இலகுவாக நெருங்கக் கூடியவிதமாகத் தன்னை வைத்திருப்பது. தன்னைச் சுற்றி உருவாக் கூடிய ஒளி வட்டங்களை மறுதலிப்பது. இதெல்லாம் மருதுவிடம் உள்ள நல்லம்சங்கள். இத்தகைய குணங்கள் அவருக்குள் தலைமுறையைக் கடந்தும் ஓடிக் கொண்டிருக்கும் விடுதலை அரசியல் உணர்வினாலும் போராட்டக் குணாம்சத்தினாலும் உருவாகியது.என்றபடியால்தான் மருதுவினால், முள்ளிவாய்க்கால் அவலத்தைப் பிரதிபலிப்பதோடு போர் எதிர்ப்பைப் பிரதிபலிக்கும் விதமாக 27 ஒற்றை வண்ண ஓவியங்களையும், 64 பன்னிற ஓவியங்களையும் உருவாக்கியளிக்க முடிந்தது. இந்த ஓவியங்கள் வெறுமனே காலச்சாட்சிய வெளிப்பாடுகள் மட்டுமல்ல, சிறந்த கலை வெளிப்பாடுகளுமாகும். பிக்காஸோவின் குவார்ணிகா கால – இட எல்லைகளைக் கடந்து எப்படிப் போர் எதிர்ப்பு ஓவியமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறதோ அதைப்போன்ற இன்னொரு வெளிப்பாடே மருதுவின் இந்த ஓவியங்கள்.
மருதுவை நான் அறிந்த காலத்திலிருந்தும் நேரிலே பார்த்துப் பேசிய காலத்திலிருந்தும் கவனித்து வருகிறேன். ஓவியங்களிலும் பிற கலை வெளிப்பாடுகளிலும் மாற்றங்களோடும் வளர்ச்சியோடும் பயணித்துக் கொண்டிருக்கிறார். பழகும் விதத்திலும் பண்பிலும் மானுட நேயத்திலும் சமூகம் மீதான பற்றுணர்விலும் மாறாத அன்புகொண்ட மனிதராகவே இருக்கிறார். இந்தச் சமனிலை மேலும் மருதுவோடு நெருங்க வைக்கிறது. அவருடைய ஓவியங்களின் வண்ணங்களோடும் கோடுகளோடும் இந்த நாள். நாளைய நாளும்.
