தமிழ்பேசும் சமூகங்களின் அரசியல் கட்சிகள் பொது மேடையூடாக வெளிப்படுத்த முயற்சிக்கும் கவலைகள் 

தமிழ்பேசும் சமூகங்களின் அரசியல் கட்சிகள் பொது மேடையூடாக வெளிப்படுத்த முயற்சிக்கும் கவலைகள் 

 — மீரா ஸ்ரீனிவாசன் —

கடந்த வாரம், இலங்கையின் தமிழ் பேசும் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கட்சிகளும் குழுக்களும் இணைந்து ஒரு பொதுவான தளத்தைத் தொடங்கியபோது, அந்த நடவடிக்கை பலரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக, தலைவர்கள் “மேடை” என்று அழைக்கும் இத்தளம், ஒரு வழக்கமான அரசியல் கூட்டணியோ அல்லது தேர்தல் கூட்டணியோ அல்ல என்பதால் இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில்  அடுத்தடுத்து அமர்ந்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கைத் தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள், தத்தமது மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான கவலைகளை உரக்கப் பேச இந்த பொதுவான தளம் தங்களுக்கு உதவும் என்று தெரிவித்தனர். 

வடக்கிலும் கிழக்கிலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், மத்திய மற்றும் தெற்கு மலையகப் பகுதிகளில் வசிக்கும் வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட —  தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்,  வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இதில் அடங்கும்.

தற்போதைய பாராளுமன்றத்தில் இந்த அனைத்துக் கட்சிகளும் குழுக்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளன. இந்த பாராளுமன்றத்தில், நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மையினரின் ஆதரவையும் உள்ளடக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆணையைப் பெற்று ஜனாதிபதி அநூர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. சில கட்சிகள் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் (சமகி ஜன  பலவேகய) நேரடியாக இணைந்து செயல்படும் அதேவேளை, ஏனையவை அதிலிருந்து சற்றுத் தூரத்தைப் பேணி வருகின்றன.

இவர்களில் பலர் ஒரே வாக்கு வங்கிக்காகப் போட்டியிடுவதால், தேர்தல்களில் ஒருவரோடு மன்றவர்  மோதிக்கொள்கின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும் அல்லது அதிலிருந்து பிரிந்து சென்ற அமைப்புகளுக்கும், இலங்கையின் கொந்தளிப்பான வரலாற்றில் தனித்தனி பின்னணிகள் உள்ளன. அவர்களின் கடந்தகால அரசியல் செயல்பாடுகள், பல்வேறு அரசியல் கூட்டணிகளையும் விலகல்களையும் காட்டுகின்றன; இது அவர்களின் சொந்தப் பாதையையும் இலங்கைத் தீவி்ன் தேசிய அரசியலையும் வடிவமைத்துள்ளது. சிலர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது அவருடன் கூட்டணியில் இருந்தனர், மற்றவர்கள் ராஜபக்சகளை கடுமையாக எதிர்த்தனர்.

இந்த அமைப்புகள் இலங்கையின் தமிழ் பேசும் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அவர்களுக்குள் கடுமையான கருத்து வேறுபாடுகளும் தீவிர மோதல்களும் நிலவுகின்றன. உதாரணமாக, வடக்கு,  கிழக்கில் நில உரிமைகளுக்கான போட்டிக் கோரிக்கைகள், அல்லது அந்த இரு மாகாணங்களிலும்  தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இயற்கை வளங்கள் மீதான மோதல்களைக் குறிப்பிடலாம். 

இத்தகைய அறியப்பட்ட பதற்றங்கள் மற்றும் வெளிப்படையான முரண்பாடுகளுக்கு மத்தியிலும், இந்தத் தளத்தின் பின்னணியில் உள்ள தலைவர்கள் தற்போது மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தும் ஒரு குறிப்பிட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட திட்டத்தை தெளிவாக முன்வைத்துள்ளனர் ; 

 ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் மற்றும் மக்களின் நிலங்கள் தொடர்பான மோதல்களுக்கு தீர்வு காணுதல். அத்துடன், மற்றைய சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்த உரையாடல்களுக்கான வாய்ப்புகளை இந்த தளம் படிப்படியாக உருவாக்கும் என்றும் அவர்கள் சேர்த்துக் கூறினர்.

ஜனாதிபதியின் வாக்குறுதிகள்:

இந்த மூன்று விடயங்களிலும் ஜனாதிபதி திசநாயக்க தெளிவான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் 2024 ஓகஸ்ட் தேர்தல் அறிக்கை (இது பின்னர் அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது), 2015. ஆம் ஆண்டில் தொடங்கிய அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாகவும், ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதாகவும் வெளிப்படையாக உறுதியளித்திருந்தது.

நாட்டின் உயரிய பதவிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, வடக்கின் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற பெருந்திரளான மக்கள் பங்கேற்ற  பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திசநாயக்க, பல்வேறு அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் நிலங்கள் அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று கூறினார். 

அவரது அரசாங்கம் சில பகுதிகளில் மக்களுக்கு நிலங்களை திருப்பி அளிக்கும் பணிகளைத் தொடங்கியிருந்தாலும், பெருமளவிலான நிலப்பரப்புகள் இன்னும் இராணுவம், தொல்லியல் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகியும், மாகாண சபை தேர்தல்கள் இன்னும் நடத்தப்படவில்லை, புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

நில உரிமைகளுக்காக மலையகத் தமிழர்கள் உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் மலையகப் பகுதியில், தங்கள் முன்னோர்கள் பாடுபட்ட நிலத்தில் முறையான உரிமையைப் பெறுவதற்காக மக்கள் இன்னும் போராடி வருகின்றனர். அக்டோபர் 2023 அக்டோபரில், “மலையகத் தமிழர்களின் நில உரிமைகளை” உணர்ந்து கொள்வதற்கு “நியாயமான தீர்வு” வழங்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி கூறியிருந்தது. 

இந்த மூன்று முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காண்பதன் மூலம், பொதுத் தளத்தின் உறுப்பினர்கள், திசநாயக்க அரசாங்கம் மக்களுக்கு அளித்த சொந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் அதனைப் பொறுப்புக்கூற வைக்க முயன்றுள்ளனர். இந்த முயற்சி அரசாங்கத்திற்கு எதிரானதோ அல்லது எதிர்க்கட்சிக்கு ஆதரவானதோ அல்ல என்பதை அவர்கள் அழுத்தமாகக் கூறுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

(தி இந்து )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *