இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர்காலம்.  (பகுதி 3)

இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர்காலம். (பகுதி 3)

(பரந்த உரையாடலுக்கான முன்னோட்டம்)

   — வி.சிவலிங்கம் —

தமிழ் அரசியலில் ஜனநாயகம் எங்கே?

இன்றைய உலக மற்றும் உள்நாட்டு அரசியலில் ஏற்பட்டு வரும் வரும் மாற்றங்களை சரியாக அவதானித்து அதற்கு ஏற்றவாறான மாற்றங்களை தமிழ் அரசியல் மேற்கொள்வது அவசியமானது. குறிப்பாக, இரண்டாவது உலகப் போரின் பின்னர் சுதந்திரமடைந்த பல ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் இன்னமும் குடியேற்ற ஆதிக்கத்திற்குள் இருப்பதாக உணர்கின்றனர். பூரண சுதந்திரம் கோரிப் போராடுகின்றனர். தமது பொருளாதாரங்கள் நவகாலனித்துவ கோட்பாடுகள் காரணமாக இன்னமும் சுரண்டப்படுவதாக முறையிடுகின்றனர். அவை குறித்து நாம் இனிப் பார்க்கலாம்.

இங்கு தமிழ் அரசியல் தனது அரசியல் மூலோபாயங்களை புதிய உலக நிலமைகளைக் கவனத்தில் கொண்டு புதிய வகையில் வரையறுப்பது தேவையாகிறது. அவ்வாறாயின் முதலில் தமிழ் அரசியலில் காணப்படும் அரசியல் மொழியில் (Political language) மாற்றங்கள் ஏற்பட வேண்டும். 

அதாவது கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் என்பது சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, சுயாட்சி என்ற வரையறைக்குள் சுற்றிக் கொண்டிருந்தது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல அவற்றின் உட் கட்டுமானம் குறித்த விளக்கங்கள் எதுவும் பேசப்பட்டதில்லை. இக் கோரிக்கைகளை முன் வைக்கும் கட்சிகள், குழுக்களின் உட் கட்டுமானங்களுக்குள் இவ் விவாதங்கள் எழுந்ததில்லை. அவற்றிற்குள் ஜனநாயக அம்சங்கள் எதுவும் செயற்பட்டதில்லை.  

பதிலாக இக் கோரிக்கைகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சத்தையே தோற்றுவித்திருந்தன. குறிப்பாக இனவாத சக்திகள் இவற்றை நாட்டுப் பிரிவினையை நோக்கிய கோரிக்கைகளாக அடையாளப்படுத்தின. இக் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட தெளிவற்ற நிலமைகளும், சிங்கள பௌத்த இனவாத சக்திகள் இவற்றை நாட்டுப் பிரிவினை, வெளிநாட்டு சக்திகளுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்தல் என பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஊக்குவித்த நிலையில் கூடவே விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைகள் போன்றன நாட்டில் சிவில் யுத்தம் ஒன்றினைத் தோற்றுவிக்க காரணமாக அமைந்தன. 

இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படாத வரை தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பது மிகவும் கடினமாக அமையும். அவ்வாறாயின் புதிய வரையறை எவ்வாறு அமைதல் வேண்டும்?

பிரிவினை அரசியல் நிராகரிகரிக்கப்படுதல் அவசியம்

புதிய வரையறை என்பது மிகவும் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டதாக அமைதல் வேண்டும். குறிப்பாக அரசியல் அமைப்பில் அடையாளத்தை வற்புறுத்தும் அம்சங்களுக்குப் பதிலாக, புதிய இலக்கு பின்வருமாறு அமைதல் வேண்டும். 

‘ஜனநாயக பரவலாக்கத்தினூடாக இறைமையைப் பகிர்தல்’ என்பதாக வரையறுக்கலாம். 

மேற்குறித்த புதிய கோட்பாடு என்பது பிரிவினையை முற்றாக நிராகரிக்கிறது. இனவாரியான சமஷ்டியையும் நிராகரிக்கிறது. இதற்குப் பிரதான காரணம் எமது தாயகத்தில் அதிகாரங்கள் பகிரப்பட்ட நவீன இலங்கை அரசுக் கட்டுமானம்  தோற்றம் பெற்றுள்ளதை ஏற்றுக் கொள்வதாகும். 

அவ்வாறாயின் அதிகாரங்கள் பகிரப்பட்ட ஜனநாயக அரசு என்பது பொருளாதார வலுப்படுத்தல், பிராந்திய அபிவிருத்தி, ஜனநாயக பங்களிப்பு, நலன்புரி அரசு, சமத்துவமான வாய்ப்பு என்பவற்றைச் சுற்றியதாக அமையும். அதாவது ‘அதிகாரம் மக்களுக்கு அண்மித்ததாகவும், ஒவ்வொரு பிராந்தியங்களின் வளர்ச்சியையும் உறுதி செய்வதாகும்.’

மேற்குறித்த அம்சங்களை ஆழமாக நோக்கினால் நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சிக் கட்டுமானத்திலும் இன அடிப்படையிலல்லாத சீர்திருத்தங்களைக் கோருவதாக காணலாம். 

இக் கட்டுரையில் ஏற்கெனவே குறிப்பிட்டது போல 2024ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் ஒரு வரலாற்று மாற்றத்தை நோக்கியே அமைந்ததால் ‘இலங்கைக்கான இரண்டாவது சுதந்திரத்திற்கான வரலாறு’ என இதனை வரையறுக்கலாம். ஏனெனில் இலங்கையின் முதலாம், இரண்டாம்  குடியரசு யாப்புகள் அதிகாரங்களை மத்தியில் குவிப்பதாக அமைந்தன. எனவே புதிய குடியரசு என்பது அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துவதாக நாம் வரையறுக்கலாம். நாடு முழுவதற்குமான புதிய மாற்றம் நிகழும் நிலையில் தமிழ் அரசியலும் அதன் ஒரு பகுதியே என்பதால் அங்கும் மாற்றங்கள் நிகழ்தல் அவசியம். 

வாசகர்களே!

மேற்குறித்த மாற்றங்கள் குறித்த கருத்துக்கள் இன்று எழுந்துள்ள மாற்றங்களின் பின்புலத்திலிருந்தே எழுந்துள்ளது. இவை கற்பனை எனில் அதற்கான விவாதங்கள் அவசியம். இன்றைய அரசினதும், பிரதான எதிர்க்கட்சியின் அணுகுமுறையும் சமூக ஜனநாயக கோட்பாடுகளின் பின்புலத்திலிருந்தே தோற்றம் பெறுகின்றன. குறிப்பாக அரசு என்பது மக்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டதாவும், பிராந்தியங்களின் அபிவிருத்தியிலும், சம வாய்ப்புகளை வழங்கும் அடிப்படையிலும் செயற்பட வேண்டுமெனக் கருதுகின்றனர்.

இந்த மாற்றங்கள் என்பது வெறுமனே அரசு தரப்பால் மட்டும் ஏற்படுத்த முடியாது. பதிலாக மக்கள் மத்தியிலிருந்து காத்திரமான அழுத்தங்கள் தோற்றம் பெற வேண்டும். மக்கள் மத்தியிலிருந்து காத்திரமான அழுத்தங்கள் தோற்றம் பெற வேண்டுமாயின் கிராமிய மட்டத்தில் மக்கள் வலுவூட்டப்பட வேண்டும். இதனையே ‘பிரஜா சக்தி’ அமைப்புகளின் மூலம் ஏற்படுத்த வேண்டும். அதாவது பிராந்தியங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அவற்றின் பிரதான பொறுப்புகளாக பொருளாதாரத் திட்டமிடுதல், உட் கட்டுமான திட்டமிடுதல், கல்வியை நிர்வகித்தல், சுகாதாரத்துறையை நிர்வகித்தல், நிலங்களை பயன்படுத்துவதற்கான திட்டமிடுதல் என்பன அமைதல் வேண்டும். மாகாணசபை நிர்வாகம் என்பது நாடு முழுவதும் உள்ளது என்பதனையும், அவை வெறும் தமிழ் பகுதிகளில் மட்டும் இல்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.   

புதிய விவாதங்களின் அடிப்படைகளின் தாற்பரியம் எவ்வாறு அமைதல் வேண்டும்?

1. ஓற்றை ஆட்சியா? சமஷ்டியா? என்பதற்குப் பதிலாக எமது விவாதங்கள் ஆட்சி முறையில் அதிகாரக் குவிப்பா? அதிகார பரவலாக்கமா? என்பதாகவும்

2. இனங்களின் சுயாட்சிக் கோரிக்கைக்குப் பதிலாக பிராந்திய சுய பொருளாதார வலுப்படுத்தலைக் கோருதல். 

3. சிறுபான்மையினரின் உரிமைகளுக்குப் பதிலாக பிரஜைகளுக்கான சம உரிமையும், கீழ் மட்டத்திலான ஜனநாயக மாற்றங்களையும் கோருதல்.

இப் புதிய விவாதங்கள் என்பது கடந்தகால ஆட்சிப் பொறிமுறையின் விளைவாக நாட்டில் ஏற்பட்டுள்ள தோல்விகளை குறிப்பாக, பிரித்தானிய பிரித்தாளும் தந்திரங்களே தொடர்ந்து காணப்படுவதால் அவை மாற்றப்படுதலின் அவசியம் குறித்த விவாதங்களாக அமைதல் வேண்டும். 

உதாரணமாக, இன்று செயற்படுத்தப்படும் அபிவிருத்தி மாதிரித் திட்டங்கள் யாவும் பொருளாதார அடிப்படையில் பாரிய ஏற்றத்தாழ்வையே தந்துள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்த உள்நாட்டு யுத்தம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இத் தொடர்ச்சியான போர் நாட்டின் இதர பிரதேசங்களின் வளர்ச்சியையும் பாதித்துள்ளது. இதற்கான காரணம் மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ள ஆட்சிக் கட்டுமானமே. இதன் விளைவாக முதலீட்டுக்கான வாய்ப்புகள் இல்லாது போயின. இளைஞர் மத்தியிலான வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. வெளிநாடுகளில் வேலை தேடுவோர் தொகை அதிகரித்தது. 

அரசியல் யாப்பு அடிப்படையிலான மாற்றங்கள் குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்களுக்கான பாதுகாப்பு என்பது மாற்ற முடியாத வகையில் மொழி உரிமைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், சுயாதீனமான நீதித்துறை, விகிதாசார அடிப்படையில் பொதுத்துறையில் வேலை வாய்ப்புகள் போன்றன வற்புறுத்தப்பட வேண்டும். 

தமிழ் அரசியல் என்பது மிக அதிகளவில் கோட்பாட்டு அம்சங்களுக்குள் சிக்கியுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல எவ்விதமான தெளிவான விளக்கங்கள் அற்று உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான அரசியல் ஒரு புறத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளை பலப்படுத்திய அதேவேளை தமிழ் மக்களை மேலும் மேலும் ஒடுக்குமுறைக்குள் தள்ளியது. இதனால்தான் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுகிறது. 

இந்த அணுகுமுறை முற்றாக மாற்றப்படுதல் அவசியம். இப் பிரச்சனைக்கான நியாயமான தீர்வுகள் எட்டப்பட வேண்டுமாயின் அரசியலின் யதார்த்த நிலமைகளுக்கு ஏற்ப அணுகுமுறைகள் மாற்றம் பெற வேண்டும். அதாவது

– ஜனநாயக ஆட்சியில் பெரும்பான்மையின் அனுசரணை மிக அவசியமானது. 

– அரசியல் யாப்பு மாற்றம் என்பது நாட்டின் சகல பாகங்களிலும் வாழும் மக்களின் ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும். 

– அரசியலிலிருந்து தொடர்ச்சியாக தனிமைப்பட்டுச் செல்வது என்பது பேரம் பேசும் வாய்ப்பைப் படிப்படியாக இழக்கச் செய்கிறது.

தமிழ் அரசியலில் மாற்றங்கள் என்பது இன அடையாள அரசியலிலிருந்து விடுபட்டு மக்கள் என்ற வகையில் பிரச்சனைகளை அணுகுவதாகும். 

உதாரணமாக,

தமிழ் மக்களுக்கான சுயாட்சி என்ற கோரிக்கைகளுக்குப் பதிலாக அவை பிராந்தியங்களின் சுயாதீன ஜனநாயக செயற்பாட்டைக் கோருவதாகவும், அங்கு பிரஜைகளுக்கான சம உரிமையை வலியுறுத்துவதாகவும், வளம் நியாயமான விதத்தில் பங்கீடு செய்யப்படுவதை உறுதி செய்வதாகவும் கோர வேண்டும். 

இக் கட்டுரையைப் படிக்கும் ஒருவரின் மனதில் எழக்கூடிய சில கேள்விகள் குறித்து இனிப் பார்க்கலாம்.

13வது திருத்தமும், அதன் எதிர்காலமும்

1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக இந்த 13வது திருத்தம் தோற்றம் பெற்றது. அன்றிருந்த பூகோள அரசியலின் அடிப்படையில் அமெரிக்க- இந்திய உறவுகள் பிரச்சனைக்குரியதாக இருந்தன. இந்தியாவுக்கு அண்மையிலுள்ள இலங்கைத் தீவு அமெரிக்காவுக்கு நெருக்கமாகச் செயற்பட்டது. இது இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த பின்னணியில்தான் தமிழர் பிரச்சனையைக் காரணமாக வைத்து இந்தியா தலையிட்டது. இப்போது அந்த நிலமைகள் மாற்றமடைந்துள்ளன அவற்றைக் கவனத்தில் கொண்டு மேலும் பார்க்கலாம். 

இப் 13வது திருத்தம் தோற்றம் பெற்று சுமார் 40 ஆண்டுகளாகின்றன. தமிழ் அரசியலின் மைய இடத்தை இத் திருத்தமே கொண்டிருக்கிறது. இருப்பினும் தமிழ் அரசியல் தலைமைகள்  இத் திருத்தத்தினை குறைந்தபட்ச தீர்வாக, அல்லது ஆரம்ப ஏற்பாடாகவே இன்னமும் கூறி வருகின்றனர். அத்துடன் இதுவே தீர்வுக்கான அடிப்படை எனக் கூறி அதனைப் பாதுகாக்க வேண்டுமெனவும் கூறுகின்றனர்.

இங்கு 

– இப் 13வது திருத்தம் தமிழ் மக்களின் எதிர்காலச் சந்ததியினரின் பாதுகாப்பு, கௌரவம், பிரதேச வளர்ச்சி போன்றவற்றை உறுதி செய்யப் போதுமானதா?

என்ற கேள்வியை எழுப்பினால் போதாது என்ற பதிலே கிடைக்கும். ஆகவே 13 வது திருத்தம் என்பது தேவையற்றதல்ல என்பதற்குப் பதிலாக இது ஆரம்பமே தவிர தீர்வு அல்ல என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். 

இத் திருத்தம் தொடர்பாக மேலும் சில கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. அதாவது இதுவே முதலாவது அரசியல் யாப்பு அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொண்ட தீர்வு எனவும், இத் தீர்வின் பின்னணியில் இந்தியத் தலையீடு இருப்பதால் அவர்களால் அழுத்தங்களைப் பிரயோகிக்க வாய்ப்பு உண்டெனவும், மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட நிலையிலும் இந்த ஏற்பாடு அதன் செயற்பாட்டை மட்டுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கருத்துக்கள் உள்ளன.

இருப்பினும் நாம் சில உண்மை நிலமைகளை எங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

– 13 திருத்தம் என்பது அதற்கே உரித்தான சில மட்டுப்படுத்த அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

– முக்கியமான அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்டுள்ளன.

– அரசு விரும்பினால் மட்டுமே அதிகாரங்களை வழங்கும் நிலை காணப்படுகிறது. அதாவது காணி, பொலீஸ் அதிகாரங்கள் மத்தியில் உள்ளது. அவ்வாறாயின் மாகாணசபைக்கான அதிகாரங்கள் அர்த்தமுள்ள வகையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. அவ்வாறாயின் மாகாணசபைகள் போதுமான அதிகாரங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதே அர்த்தமாகும். அதாவது அவை வெறும் காகிதத்தில் உள்ளதே தவிர செயல்முறையில் அல்ல. 

– இலங்கை அரசுக் கட்டுமானம் மிக அதிகளவில் மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட அதிகார கட்டுமானம் ஆகும். 

– அதாவது 13வது திருத்த மூலம் அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும், முழு அதிகாரமும் மத்திக்கே உண்டு.

மாகாணசபைகளுக்கான அதிகாரப் பகிர்வு என்பது மத்தியிலுள்ள ஆட்சியின் தீர்மானங்களுக்கு அமைவாகவே செயற்படுவதாக இருக்கும் நிலையில், மாகாணசபைகள் மத்தியிலுள்ள ஆட்சியோடு நல்லுறவில் இல்லையெனில் செயற்படுவது மிகவும் கடினம். அது மட்டுமல்ல, 13வது திருத்தமூலம் வழங்கப்பட்ட அதிகாரங்கள் தற்காலிகமானவை, அவை எவ் வேளையிலும் பறிக்கப்படலாம் எனவும் நாம் கூற முடியும். 

இவற்றை நாம் ஏற்றுக் கொண்டால் எவ்வித பாதுகாப்பும் அற்ற 13வது திருத்தம் அதன் அதிகார பரவலாக்க அதிகாரத்தை பறிக்கப்படாமல் சில அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வர முடியும். அதாவது அரசியல் யாப்பில் அதிகாரங்கள் பறிக்கப்படாதவாறு திருத்தங்கள் வேண்டும். அதே போலவே சுயாதீன ஆணைக்குழுக்கள் அதாவது மத்திக்கும், மாகாணசபைகளுக்குமிடையே ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான சுயாதீன ஆணைக்குழுக்களும் அவசியமாகின்றன.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல, தற்போது பூகோள அரசியல் சூழல்கள் மாற்றமடைந்துள்ள நிலையில் 13வது திருத்த ஏற்பாடுகள் போதுமானவை அல்ல என்ற கோரிக்கையை நோக்கி நாம் ஏன் செல்ல முடியாது? இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்  தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக, பொருளாதார இணைப்பு குறிப்பாக பிராந்திய சுயாதீன வர்த்தக ஒப்பந்தம், பிராந்திய அமைதி என்பன குறித்து அதிகளவு பேசப்படுகிறது. 

இந்த நிலையில் தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பது வெளியாரை நம்பி அமைவது எவ்வளவு சாத்தியமானது? 

இப் பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வெறுமனே 13வது திருத்தத்தை மட்டும் நம்பிச் செயற்படுவது விவேகமான அணுகுமுறையா? 

இத் திருத்தத்தைச் சுற்றியே தமிழ் அரசியல் செல்வது, மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப அரசியல் வியூகங்களை மாற்றுவதற்குத் தடையாக இருக்கிறது. மாற்று அரசியல் தீர்வை நோக்கிய கற்பனைகளை உறைய வைக்கிறது. மாற்று வகையில்  தீர்வுகளைக் காணும் வாய்ப்பை மட்டுப்படுத்துகிறது. 13வது திருத்தம் மக்களின் உண்மையான தேவைகள் குறித்து எதையும் தரவில்லை. அதாவது, பொருளாதாரத் தேவைகள், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வித் தேவைகள், பிராந்திய அபிவிருத்தி, உள்ளுராட்சி தேவைகள் போன்றன கைவிடப்பட்டுள்ளன. 

( தொடரும் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *