— கருணாகரன் —
ஈழத் தமிழரின் அரசியலில் உள்ள தலைமைத்துவ வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது, அல்லது புதிய தலைமைத்துவத்தை எவ்வாறு உருவாகுவது என்று பலரும் சிந்திக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். இருக்கின்ற அரசியல், சமூகத் தலைமைகளில் உள்ள நிறைவின்மை, நம்பிக்கையின்மையே இதற்குக் காரணமாகும். ஆகவேதான் அவர்கள் புதிய தலைமை ஒன்றை அல்லது மாற்றுத் தலைமையை விரும்புகிறார்கள்.
இதற்கு இரண்டு வழிகளில் தீர்வைக் காண முடியும்.
முதலில் இருக்கின்ற தலைமைகளில் மக்களுக்கு ஏன் நம்பிக்கையில்லை? என்றால்,
1. இந்தத் தலைமைகள் மக்களுக்குரிய – மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய – அளவுக்குக்கூட வினைத்திறனுள்ளவையாக இல்லை. தாம் இதுவரையில் முன்மொழிந்த, பிரகடனப்படுத்திய எந்தவொரு வேலையையும் சரி, அறிவிப்புகளையும் சரி முன்னோக்கிய செயற்பாடாக உருவாக்கியதும் இல்லை. அவற்றில் சிறிய நல்விளைவுகளை உருவாக்கியதும் இல்லை.
2. 75 ஆண்டுகாலமாக நீடிக்கும் இன ஒடுக்குமுறைக்கும் அரசியற் பிரச்சினைக்கும் உரிய – யதார்த்தமான தீர்வைக் காணக் கூடிய அறிவையும் உணர்வையும் இவை கொண்டிருக்கவில்லை.
3. தம்முடைய நிலைமை, தமது பலம், பலவீனம் போன்றவற்றை மதிப்பிடவும் தமக்கு முன்னுள்ள சாவல்களையும் மதிப்பிடும் உள நிலையும் ஆற்றலும் இல்லாதவையாக உள்ளன.
4. ஈழ விடுதலை அரசியலும் அதற்கான போராட்டமும் அது உண்டாக்கிய போரும் தோற்றுப்போன நிலையில், அதற்கு அடுத்தகட்டாமாக எத்தகைய அரசியல் முன்னெடுப்பைச் செய்ய வேண்டும்? எவை யதார்த்தமானவை என்பதையெல்லாம் அறிவுபூர்வமாக அணுகக் கூடிய திராணியை இவை கொண்டிருக்கவில்லை. என்பதால்தான் கடந்த கால தோற்றுப்போன அரசியலையும் அதற்கான சொற்களையும் மந்திரம்போல உச்சாடனம் செய்கின்றன.
5. ஈழத் தமிழரின் அரசியலில் செல்வாக்குச் செலுத்திய விடுதலைப்புலிகளின் யுகம் முடிந்து விட்டது. அதற்கான பெறுமதிகள் அன்றைய வரலாற்றுக்குரியவையே தவிர, இப்போதுள்ள யதார்த்தத்துக்கும் எதிர்கால வழிமுறைகளுக்கும் அவை பொருந்தக் கூடியன அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொண்டு செயற்படும் நிலை – துணிச்சல் இவற்றிடம் இல்லை.
6. அரசியல் தீர்வும் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றமும் பாதுகாப்பும் தனியே தமிழர்களுடன் சம்பந்தப்பட்டதல்ல. அது பிற சமூகங்களான முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், சிங்களச் சமூகத்தினரோடும் இணைந்தே உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு செயற்படும் தன்மையும் புரிந்துணர்வும் இல்லை. இதனால் ஏனைய சமூகங்களுடனான ஊடாட்டங்களை இவை செய்யாமல் உள்ளன. அப்படிப் பிற சமூகங்களோடு உறவு கொள்வோரை துரோகிகளாகச் சித்தரிக்கும் மூட அரசியலில் புதையுண்டிருப்பது.
7. யதார்த்தம், உண்மை நிலை போன்றவற்றைப் புரிந்து கொண்டாலும் அதை ஏற்றுப் பொதுவெளியில் கருத்துரைக்கும் திராணியற்ற நிலையில், உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் மாறான அரசியல் பிரகடனங்களில் சிக்குண்டிருப்பது. இது தொடர் தோல்விகளைத் தந்தாலும் மக்களுக்கு யதார்த்த நிலை என்னவென்று தெரிந்தாலும் அதை வெளிக்காட்டவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாமல் தத்தளிப்பது.
8. பிராந்திய, சர்வதேச சக்திகளின் அரசியல் நிலைப்பாடுகளையும் அணுகுமுறைகளையும் புரிந்து கொள்ளத் தவறியுள்ளமை. இதனால் எத்தனை சந்திப்புகள், உரையாடல்களைச் செய்த பின்னும் குறித்த விடயங்களில் எத்தகைய முன்னேற்றங்களும் ஏற்படாதிருக்கும் தோல்விகள்.
9. தமது கட்சிக்குள்ளும் வெளியிலும் தலைமைத்துவம் குறித்த உரையாடல்களையும் புதிய அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய சூழலையும் பேசுவதற்கோ, நிகழ்த்துவதற்கோ தயக்கம் காட்டுகின்றமை.
10. இவ்வாறான விடயங்களைப் பலரும் பல தடவை சுட்டிக்காட்டிப் பேசினாலும் அதைப் புரிந்து கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ தயாரற்றிருக்கும் நிலை.
இவைபோன்ற காரணங்களால் மக்கள் இன்றிருக்கும் தமிழ் அரசியல் தலைமைகளில் நம்பிக்கையீனம் கொண்டுள்ளனர். இதை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு குறித்த தலைமைகளுக்குண்டு. அல்லது அவை புதிய தலைமைகளைக் குறித்து தமது கட்சிகளுக்குள் சிந்திக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் அப்பால், கட்சிகள் தமது தலைமைகளுக்கு எதிராகவே அவமதிப்புகளைச் செய்கின்றன. ரெலோவுக்குள்ளும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொதிநிலையும் மோதல்களும் அணிப் பிளவுகளும் அவற்றின் அடியான வசைபாடல்களும் இதற்கு உதாரணம். ஏறக்குறைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் பிளவுண்ட மணிவண்ணன் அணியும் கூட இப்படித்தான் உள்ளது. ஏனைய கட்சிகளும் ஏறக்குறைய இதே நிலையில்தான் உள்ளன.
ஆகவே இதையெல்லாம் சரிப்படுத்தி, ஒரு புதிய தலைமையை பெருந்திரள் மக்களுடைய மதிப்புக்கும் அங்கீகாரத்துக்கும் உரியவாறு கொண்டு வருதல் என்பது எளிதானதல்ல. ஆனால், அதைச் செய்தே தீர வேண்டும். வேறு வழியில்லை. இதற்கு கட்சிக்குள்ளும் வெளியிலும் ஜனநாயகத் தன்மையைப் பேணுவது அவசியம். அதுவே ஒரு சிறந்த தலைமைத்துவத்துக்கு அழகு, சிறப்பு. பொருத்தம்.
தேசியத் தலைமைத்துவம் என்பது கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதல்ல அவற்றை ஜனநாயக ரீதியில் கையாள்வதாகும். விமர்சனங்களைக் கேட்கும் மனப்பக்குவம், மாற்றுக் கருத்துக்களை மதிக்கும் பண்பு, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் மனநிலை, பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மைக் குழுக்கள் ஆகியோருக்கான சமமான அரசியல் வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் அணுகுமுறை ஆகியவை ஒரு முதிர்ந்த தலைமைத்துவத்தின் அடையாளங்களாகும். இதனை இன்றைய எந்தத் தமிழ்த்தலைமை கொண்டுள்ளது?
அச்சத்தால் உருவாகும் ஒற்றுமை தற்காலிகமானது; நம்பிக்கையால் உருவாகும் ஒற்றுமையே நிலையானது. இதனை நாம் நமது கடந்த கால போராட்ட வரலாற்றிலும் இயக்க அரசியல் வரலாற்றிலும் தெளிவாகக் கண்டிருக்கிறோம். ஆனாலும் இன்னும் மயக்க நிலை மாறவில்லை. இப்போதும் ஏனையோரைக் கட்டுப்படுத்தித் தமது தலைமைத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கே ஒவ்வொரு தலைமையும் முயற்சிக்கின்றன. இது ஒரு ஆழமான குற்றச்சாட்டுத்தான். ஆனால், இதை ஒளிக்காமல் சொல்லியே ஆக வேண்டியுள்ளது. இந்த நிலை தொடர்வதால்தான் இந்தத் தலைமைகள் மக்களின் தலைமைகளாக முடியாமல், கட்சிகளின், அணிகளின் தலைமையாக இருக்கின்றன. இதற்குக்காரணம், பொது நலனைக்குறித்த அக்கறையை விட, தங்களின் தனிநலன், தனி அடையாளம், தன்னிருப்புப்பற்றிய உளவியற் சிக்கல்களேயாகும்.
ஒரு உண்மையான தலைவர் தனது வாழ்நாளில் எத்தனை பதவிகளை வகித்தார் என்பதனால் மதிப்பிடப்படுவதில்லை. அவர் தன்னைத் தொடர்ந்து இயங்கக்கூடிய எத்தனை நிறுவனங்களை உருவாக்கினார் என்பதாலேயே மதிப்பிடப்படுகிறார். மக்களுடன் எவ்வாறான உறவுகளைக் கொண்டிருக்கிறார், தன்னுடைய தலைமைத்துவத்தினால் எத்தகைய நல்விளைவுகளை அடையாளமாகக் காட்டக்கூடியதாக இருக்கிறார் என்பதால்தான் விளங்கப்படுவார். தவறுகளை இழைக்காத அமைப்போ, இயக்கமோ, கட்சியோ, தலைமையோ இல்லை. ஆனால், அந்தத்தவறுகளையும் விட முற்போக்கான, சிறப்பான, பயனுள்ள நல்விளைவுகளை உருவாக்கினால், மக்கள் அவற்றையே நினைவில் கொள்வர். அதை நோக்கிச் சிந்திக்கவும் செயற்படவும் கூடிய எண்ணமும் செயற்திறனும் இன்றுள்ள கட்சிகளிடம் உண்டா?
மட்டுமல்ல, நிரந்தரமான கொள்கை ஆய்வு மையங்கள், தலைமைத்துவப் பயிற்சி நிறுவனங்கள், அரசியல் கல்வி மையங்கள், இளைஞர் வளர்ச்சி அமைப்புகள், பொருளாதார ஆய்வு மன்றங்கள், சர்வதேச உறவுகளுக்கான நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கும் திறன் ஒரு தலைமைத்துவத்திற்கு அவசியமானது.
தனிநபர்களை மையமாகக் கொண்ட அரசியல் மறைந்து போகலாம்; ஆனால் நிறுவனங்கள் தலைமுறைகளைக் கடந்து சமூகத்தை வழிநடத்தும். இதையும் நாம் நம்முடைய சமகால வரலாற்றில் கண்டறிந்துள்ளோம்.
மேலும் சொல்வதென்றால், ஒரு தலைவரின் மிகப்பெரிய வெற்றி, தன்னைப் போன்ற இன்னும் பல தலைவர்களை உருவாக்குவதில்தான் இருக்கிறது. தலைமைத்துவத்தைத் தனது தனிப்பட்ட சொத்தாகக் கருதாமல், புதிய தலைமுறைக்கு அறிவையும் அனுபவத்தையும் பொறுப்புகளையும் பகிர்ந்தளிக்கும் பண்பாடாக உருவாக வேண்டும். அதிகாரத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தலைமைத்துவத்தைப் புதுப்பிக்கும் அரசியல் கலாசாரமே ஒரு சமூகத்தை நீண்டகாலம் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
எனவே தலைமைத்துவம் என்பது ஒருவரின் புகழையோ அதிகாரத்தையோ உயர்த்தும் கருவியல்ல. அது ஒரு சமூகத்தின் கூட்டு நம்பிக்கைகளையும் இலட்சியங்களையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பாகும்.
அறிவு இல்லாத துணிச்சல் சமூகத்தை ஆபத்துக்குள் தள்ளும். ஒழுக்கமில்லாத அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும். ஜனநாயகப் பண்பாடில்லாத தலைமை சர்வாதிகாரமாக மாறும். பொருளாதாரப் பார்வையற்ற அரசியல் மக்களை வறுமைக்குள் தள்ளும். நிறுவனங்களை உருவாக்காத தலைமை தன்னோடு சேர்ந்து அரசியல் மரபையும் முடிவுக்குக் கொண்டுசெல்லும். இதையும் நாம் நம்முடைய சமகால வராற்றில் கண்டுள்ளோம். ஈழத்தமிழரின் அரசியல் தலைவர்கள் எல்லோரும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் மேலும் ஆழமாக்கி, விரிவுபடுத்தினரே தவிர, அவற்றை இலகுவாக்கித் தீர்வை நோக்கி நகர்த்தவில்லை.
இதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தொடக்கம் பிரபாகரன், சம்பந்தன் வரை அடக்கம். என்பதால்தான் தமிழ்ச்சமூகமும் அதனுடைய அரசியலும் சிதறுண்டு, பலவீனப்பட்ட நிலையில் இருக்க வேண்டியதாகிற்று.
எனவே, எதிர்கால ஈழத் தமிழர் அரசியலின் மையக் கேள்வி “யார் தலைவராக வருவார்?” என்பதாக இருக்கக் கூடாது. மாறாக, “எப்படிப்பட்ட தலைமைத்துவத் தரத்தை நாம் உருவாக்க வேண்டும்?” என்பதாக இருக்க வேண்டும். அந்தத் தரம் அறிவு, ஒழுக்கம், ஜனநாயகம், இராஜதந்திர முதிர்ச்சி, பொருளாதாரத் தொலைநோக்கு, வரலாற்றுப் புரிதல் மற்றும் நிறுவனமயமான அரசியல் கலாசாரம் ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்படும்போதுதான், ஒரு தேசிய இனத்தின் அரசியல் பயணம் நிலையானதாகவும் நம்பகமானதாகவும் அமையும்.
இதுவரையில் நாம் விவாதித்த தலைமைத்துவம், அரசியல், சர்வதேச இராஜதந்திரம், நிறுவனமயமாக்கல் போன்ற கருத்துக்களைச் சுருக்கி, எதிர்காலத்திற்கான ஒரு அரசியல் நெறிமுறைகள் பிரகடனமாக (Leadership Charter) வடிவமைக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட அரசியல் தரப்புக்கான செயல்திட்டமாக அல்லாமல், பொதுவான தலைமைத்துவக் கோட்பாடுகளின் தொகுப்பாக அமைகிறது.
இந்த நிலையில் இந்த நூற்றாண்டின் ஈழத் தமிழர் தலைமைத்துவத்திற்கான வழிகாட்டும் கோட்பாடுகளாகச் சிலவற்றைப் பரிந்துரைக்கலாம்.
21ஆம் நூற்றாண்டின் உலகம், கடந்த நூற்றாண்டின் உலகத்தைவிட முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. அதிகாரத்தின் வடிவங்களும், அரசியல் போராட்டங்களும், இராஜதந்திர அணுகுமுறைகளும், தகவல் தொடர்பு முறைகளும், உலகப் பொருளாதாரமும் புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ளாத எந்த தேசிய அரசியலும் காலத்தின் பின்னால் தள்ளப்படும். எனவே, எதிர்கால ஈழத் தமிழத் தலைமைத்துவம் பின்வரும் அடிப்படைக் கோட்பாடுகளின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும்.
1. ஒரு இயக்கத்தின் நிலைத்தன்மை ஒரே தலைவரைச் சார்ந்திருக்கக் கூடாது. தலைவர்கள் மாறினாலும் கொள்கைகளும் நிறுவனங்களும் தொடர வேண்டும். தலைமை என்பது ஒரு நபரின் அதிகாரமல்ல; ஒரு சமூகத்தின் நிறுவனமயமான பொறுப்பாக இருக்க வேண்டும்.
2. மக்களின் நம்பிக்கையே தலைமைத்துவத்தின் மிகப்பெரிய மூலதனமாகும். ஆகவே முடிவுகள் வெளிப்படைத்தன்மையுடன் எடுக்கப்பட வேண்டும். கீழ்மட்ட உறுப்பினர்கள் முதல் எந்தத் தரப்பினராலும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதிகாரம் கண்காணிக்கப்பட வேண்டும். மக்களிடம் அரசியல், நிர்வாக, நெறிமுறை ரீதியாக தலைமையானது அனைவருக்கும் பொறுப்புக்கூற வேண்டும்.
3. அறிவை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அணுகுமுறை அவசியம். அதையே வழிமுறையாகவும் கொள்ள வேண்டும். உணர்ச்சிகள் அரசியலுக்குத் தேவையானவைதான். ஆனால் அவை மட்டும் போதுமானவை அல்ல. ஆய்வுகள், தரவுகள், சட்ட அறிவு, பொருளாதார மதிப்பீடுகள், சர்வதேச அரசியல் புரிதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அரசியல் என்பது அறிவியல் சார்ந்த சமூகத் தீர்மானமாகவும் அமைய வேண்டும்.
4. கருத்து வேறுபாடு என்பது பலவீனத்தின் அடையாளமல்ல; ஜனநாயகத்தின் அடையாளம். ஆனால் அந்த வேறுபாடுகள் தேசிய இலக்குகளைச் சிதைக்கும் அளவுக்கு வளரக்கூடாது. அடிப்படை அரசியல் இலக்குகளில் ஒற்றுமையும், நடைமுறை அணுகுமுறைகளில் ஜனநாயகப் பன்மையும் இணைந்து இயங்கும் பண்பாடு உருவாக்கப்பட வேண்டும்.
5. பல்துறை இராஜதந்திர அணுகுமுறை அவசியமானது. இது முக்கியமானது. இன்றைய தமிழர் அரசியலில் சார்பு நிலை அரசியலே பின்பற்றப்படுகிறது. ஆனால், சிங்களத்தரப்பு அவ்வாறானதல்ல. அது அமெரிக்காவையும் ஈரானையும் இந்தியாவையும் சீனாவையும் சீராகக் கையாள்கிறது. தமிழர்கள் ஒரு தரப்புக்குக் காவடி தூக்கினால், மறுதரப்புக்கு செருப்புமாலை அணிவிக்க முயற்சிக்கிறார்கள். இது விடுதலைக்கும் தலைமைத்துவ வளர்ச்சிக்கும் ஒருபோதும் பயனளிக்காது.
இன்னும் இதை வெளிப்படையாகச் சொன்னால், ஒரே ஒரு நாட்டையோ அல்லது ஒரே ஒரு சர்வதேச சக்தியையோ சார்ந்திருக்கும் அரசியல் நீண்டகாலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். பிராந்திய நாடுகள், உலக வல்லரசுகள், சர்வதேச அமைப்புகள், மனித உரிமை நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆய்வு மையங்கள், உலகளாவிய குடிமைச் சமூகங்கள் ஆகிய அனைத்துடனும் சமநிலையான உறவுகளை உருவாக்கும் திறன் வளர்க்கப்பட வேண்டும்.
6. உரிமைப் போராட்டமும் சமூக முன்னேற்றமும் சமாந்தரத் தன்மையோடு இணைந்து செல்ல வேண்டும். ஒரு சமூகத்தின் அல்லது ஒரு இனத்தின் அரசியல் உரிமைகளும் அதன் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், தொழில்நுட்ப முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாசார வளர்ச்சி ஆகியவற்றும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. அரசியல் விடுதலைக்கான பயணமும் சமூக மறுகட்டமைப்பும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரு சமூகம் பலமான நிலையில் இருக்க வேண்டும் என்றால், அதனுடைய கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், தொழில்நுட்ப முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாசார வளர்ச்சி போன்றவை சொந்த நிலத்தில் பலமானதாக இருக்க வேண்டும். இதனை விடுதலைப்புலிகள் உட்பட ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்ற இயக்கங்களும் புரிந்து கொண்டிருந்தன. ஆனால், இன்றைய அரசியற் கட்சிகள்?
7. தலைமுறை மாற்றத்தை உறுதிப்படுத்துதல் அவசியமானது. தலைமைத்துவம் ஒரு தலைமுறையோடு முடிவடையக் கூடாது. புதிய தலைமுறையினருக்கு அரசியல் கல்வி, தலைமைப் பயிற்சி, பொது நிர்வாக அறிவு, இராஜதந்திர அனுபவம் ஆகியவற்றை வழங்கும் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் அரசியல் முதிர்ச்சியிலேயே அமைகிறது. இதனைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதால் மேலும் விரித்துக் கொள்ளவில்லை.
8. உலகத் தமிழர் பங்களிப்பை ஒருங்கிணைத்தல் என்பது முக்கியமானது. இன்றைய அரசியல், பொருளாதார, தொடர்பாடல் பலமாக புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர். இதொரு முக்கியமான வளமாகும். இதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். இதில் புலம்பெயர் தமிழர்களுக்கும் பொறுப்புண்டு. முக்கியமாக அவர்கள் பல இடங்களில் நிதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. அதற்கான பயில்வுகள் அவசியம்.
புலம்பெயர் தமிழர்கள் அல்லது புலம்பெயர் சமூகத்தினர் என்பது வெறும் நிதி ஆதாரமாக மட்டுமல்லாமல், அறிவு, தொழில்நுட்பம், கல்வி, பொருளாதாரம், சர்வதேசத் தொடர்புகள் மற்றும் ஆய்வுத் திறன்களைக் கொண்ட உலகளாவிய வளமாகக் கருதப்பட வேண்டும். உள்நாட்டு மற்றும் புலம்பெயர் சமூகங்களுக்கு இடையே நிரந்தரமான ஒத்துழைப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
9. அரசியல் ஒழுக்கமும் பொதுநல முன்னுரிமையும் ஆழ்மனதில் தலைமைத்துவத்துக்கும் கட்சிக்கும் இருப்பது அவசியமாகும். இது இல்லையென்றால், எத்தகைய மருந்தையோ, எத்தகைய ஆரோக்கியமான வளத்தையோ கொடுத்தாலும் ஒரு தலைமைத்துவமோ, கட்சியோ தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியாது. அது தொடர்ந்தும் நோயாளி நிலையிலேயே இருக்கும். என்பதால்தான் அரசியல் என்பது தனிநபர் பதவிகளுக்கான இடமாகவும் போட்டியாகவும் இருக்கக் கூடாது என்கிறோம். அப்படி மாறும்போது, தேசிய நலன்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. ஆகவே தலைமைத்துவத்தின் ஒவ்வொரு முடிவும், “இது யாருக்குப் பயன்?” என்ற கேள்வியைவிட, “இது சமூகத்தின் நீண்டகால நலனுக்கு எவ்வாறு உதவுகிறது?” என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்.
10. எதிர்காலத்தை நோக்கிய அரசியல் குறித்தது. ஒரு இனத்தின் அல்லது ஒரு சமூகத்தின் தேசிய அரசியல் என்பது கடந்த காலத்தை நினைவுகூர்வதற்காக மட்டும் அல்ல; எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவும் இருக்க வேண்டும். வரலாற்றை மறக்காமல், அதிலிருந்து கற்றுக்கொண்டு, புதிய தலைமுறைகளுக்கு நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையே ஒரு தேசியத் தலைமைத்துவத்தின் உயர்ந்த பணியாகும்.
நிறைவாக, ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் மக்கள் தொகையிலோ, பொருளாதார வளங்களிலோ, ஆயுத வலிமையிலோ மட்டும் இல்லை. தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறனிலும், தன்னுடைய அரசியல் நிறுவனங்களை உருவாக்கும் முதிர்ச்சியிலும், தலைமுறைகளை இணைக்கும் தலைமைத்துவப் பண்பாட்டிலும்தான் உள்ளது. எதிர்கால ஈழத் தமிழர் அரசியல், தனிநபர்களின் எழுச்சி, வீழ்ச்சிகளை மையமாகக் கொண்ட அரசியலிலிருந்து, அறிவு, ஜனநாயகம், ஒழுக்கம், பொருத்தமான நிறுவனங்கள், மற்றும் நீண்டகாலத் தேசியத் திட்டமிடலை மையமாகக் கொண்ட அரசியலுக்கு நகர வேண்டிய காலகட்டத்தில் உள்ளது.
எனவே, தலைமைத்துவத்தின் உண்மையான நோக்கம் ஒரு தலைவரை உருவாக்குவது அல்ல; தலைவர்கள் தொடர்ந்து உருவாகக்கூடிய அரசியல் மரபையும் நிறுவனங்களையும் உருவாக்குவதாகும். அதுவே ஒரு சமூகத்தின் அரசியல் நிலைத்தன்மைக்கும், அதன் உரிமைகளை நீண்டகால அடிப்படையில் முன்னெடுத்துச் செல்லும் ஆற்றலுக்கும் அடித்தளமாக அமையும்.
இந்தப் பிரகடனம் ஒரு குறிப்பிட்ட அரசியல் முடிவையோ பாதையையோ பரிந்துரைப்பதற்குப் பதிலாக, ஒரு இனத்தின் தலைமைத்துவத்தின் தரம், நிறுவனங்களின் அவசியம், ஜனநாயகப் பண்பாடு, அறிவு, மற்றும் நீண்டகாலத் திட்டமிடல் போன்ற பொதுவான அரசறிவியல் கோட்பாடுகளைச் சுருக்கமாக முன்வைக்கிறது. காலத்தேவை கருதி இவற்றைப் பொது உரையாடலாக்குவது ஏனையோரின் பொறுப்பும் கடமையுமாகும்.
