— அழகு குணசீலன் —
இலங்கையில் வன்முறையை வன்முறையால் கையாளுவது என்பது எழுதப்படாத சட்டம் அல்ல. மாறாக எழுதப்பட்டே இருக்கிறது. இதனால் மக்களுக்கு எதிராக செயற்படும் அரச படையினர், பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு பக்க சார்பாக பாதுகாக்கப்பட்டுவருவது வரலாறாகிறது. இதில் நீர்கொழும்பு மட்டும் விதிவிலக்கல்ல. ஒரு பிரிவினரான சிறைக் கைதிகளால் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் அண்மைய நீர்கொழும்பு சிறை வன்முறைகளால் இடம்பெற்ற படுகொலைகளும், இழப்புக்களும் தொடரும் வரலாற்றில் ஒரு பாதி.
கடந்த பல தசாப்தங்களாக இலங்கை மக்கள் படையினரின் -பாதுகாப்பு தரப்பினரின் தன்னிச்சையான, அதிகாரத்தை கையில் எடுத்த அத்துமீறல்களால் நிறையவே பாதிக்கபட்டு இருக்கிறார்கள். இது இன, மதங்களை கடந்த பொதுவான நிலைமை என்றாலும் தமிழ்மக்களுக்கு இந்த மாதிரியான படையினரின் படுகொலை கலாச்சாரத்தை அனுபவித்த நீண்டதும், கனதியானதுமான அனுபவம் உண்டு. யுத்தம் முடிவடைந்த பின்னரும் இன்னும் வன்முறையில் ஈடுபட்ட படையினர் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். ஆட்சியாளர்களோடு ஒத்துழைக்காத போதே அவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படுகின்றனர்.
நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து வாதப்பிரதிவாதங்கள் சற்று ஓய்ந்து இருந்தாலும், அது இலங்கை அரசியலில் பேசப்படவேண்டிய முக்கியமான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. 1983, 2012, 2019, 2020, 2026 என்று தொடர்ந்தும் சிறைச்சாலைக்குள் நிகழும் இந்த படுகொலைகள் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் கொள்கை வகுப்பின் தோல்வியே அன்றி வேறு ஒன்றும் அல்ல. தொடரும் ஜனநாயக மறுப்பையும், மனித உரிமைகள் மீறலையும் வெளிப்படுத்துகின்றன.
சிறைச்சாலை படுகொலைகளுக்கான காரணங்களை தேடாமல், கைதிகளையும், சிறைச்சாலை அதிகாரிகளையும் பாதுகாக்கும் அல்லது குற்றம்சாட்டும் ஒரு பக்க சார்பான தகவல்களையே ஊடகங்கள் பேசுகின்றன. இதனால்தான் வெளிச்சமும், இருட்டும் பற்றி பேசவேண்டி இருக்கிறது. ஒரு பக்கத்திற்கு வெளிச்சம் போடும் ஊடகங்கள், மறு பக்கத்திற்கு இருட்டடிப்புச் செய்கின்றன. இந்த பிரச்சார ஊடகதர்மத்திற்கு வன்முறைகள் அரசியலாக்கப்படுவது வாய்ப்பாக அமைகிறது.
10 அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து அரசாங்கமும், சமூக ஊடகங்களும் பேசிய அளவுக்கு 21 கைதிகளுக்கு ஏற்பட்ட, நிகழ்ந்த அநியாயம் பற்றி பேசப்பட்டது குறைவு. கொல்லப்பட்ட சிறைக் காவலர்களின் வீடு வாசல்கள் பற்றி பேசிய சமூக ஊடகங்கள் கைதிகள் எவரினதும் வாழ்வாதாரம் பற்றியோ, வாழ்க்கை கஷ்டங்கள், அவர்களின் குடும்ப நிலைமைகள் பற்றியோ பேசவில்லை. ஒட்டுமொத்தமாக கைதிகள் குற்றவாளிகள், வன்முறையாளர்கள் என்ற வகையில் முத்திரை குத்தப்பட்டனர். பொறுப்பை ஏற்பதாக கூறிய அரசதரப்பும் இந்த பிரச்சார யுக்தியையே பயன்படுத்தியது.
வழமைபோல் சம்பவம் நடந்த கணத்திலேயே நீதிமன்றங்களாக தீர்ப்பு வழங்குகின்ற நமது சமூக ஊடகங்கள் இந்த படுகொலைகளிலும் அதனையே செய்தன. கைதிகளை குற்றம்சாட்டவும், சிறையதிகாரிகளை பிணையெடுக்கவும் முண்டியடித்தன. “கைதிகளிடம் ஒரு சொட்டு தண்ணீரும் நாங்கள் வாங்கி அருந்துவதில்லை சேர்…” என்பது இலஞ்சம், ஊழல் அற்ற கடமைக்கும் அப்பால் “கைதிகள் – காவலர்கள்” இடையிலான ஒரு மானிட நேய உறவை அன்றி மனிதர்களுக்கு இடையிலான மானிட இடைவெளியை வெளிப்படுத்துகிறது. இந்த இடைவெளி ஒன்றுக்கொன்று முரணான இரு சக்திகள் சிறைக்குள் வளர வழிசமைக்கிறது. ஒரு புறம் அதிகாரம், மறு புறம் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, அனைத்து உரிமைகளுக்கும் லாயக்கற்றவர்களாக அடைத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை சமூகத்தின் ஒரு பிரிவினர்.
“அவனை சுட்டுக்கொல்லுங்கள் சேர்”
” கதவின் ஊடாக துப்பாக்கி சூடு நடாத்திய படைவீரை காப்பாற்றுங்கள். அவர் தேசிய வீரர் சேர்”
“மூன்று தடவைகள் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்தையும், ஒரு கொலையையும் செய்தவர் நீர்கொழும்பு கைதிகளில் ஒருவர் என்ற சிறையதிகாரியின் கருத்து சுதந்திரம்(?).
“ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட போது சரியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தால் இந்த பேரழிவை தடுத்திருக்க முடியும்….” ஒரு அதிகாரியின் அக்கறையுடனான ஆதங்கம்.
இந்த கருத்துக்கள் நீர்கொழும்பு சிறைச்சாலை கொலைகளின் கொடுமை பகுதியாக எவ்வாறு சமூகத்திற்குள் திரிவுபடுத்தி விதைக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது.
நீதி அமைச்சர் ஹரிஷ நாணயக்கார கொலை செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு கண்ணீர் மல்க தனது ஆறுதல்களை தெரிவித்தார். ஆனால் சம்பவத்தில் கொலைசெய்யப்பட்ட கைதிகளின் குடும்பங்களைச் சந்தித்ததாக தகவல்கள் இல்லை. நாணயக்கார இந்த அரசாங்கத்தின் நீதி, மற்றும் நல்லிணக்க அமைச்சர். இங்கு அவர் சம்பந்தப்பட்ட தரப்புக்களை சமமாக பார்த்தாரா…?
சம்பவத்திற்கு நீதி அமைச்சர் என்ற வகையில் பொறுப்பேற்ற அவர் அதிகாரிகளின் மரணத்திற்கு மட்டும் பொறுப்புக்கூறுகிறாரா? அமைச்சரின் இந்த செயல் கைதிகளை கொலையாளிகளாக பிரகடனம் செய்வதாக உள்ளது. நீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் முரணானது. மரணத்தின் பின்னர் மனித உடல்களை எவராக இருந்தாலும் சமத்துவமாக மதிக்கும் மாண்பிற்கு மாறானது. மேலே குறிப்பிட்டுள்ள சில சமூக ஊடகப்பதிவுகளோடு அமைச்சர் உடன்படுகிறாரா? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
சிறை அதிகாரி ஒருவர் பாலியல் குற்றச்செயலில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஈடுபட்ட ஒரு கைதியை உதாரணம் காட்டுவதன் மூலம் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் மிகவும் மோசமானவர்கள் என்று காட்சிப்படுத்த முயற்சிக்கிறார். பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை ஒரு குறிப்பிட்ட காலம் அடிப்படை வசதிகள் அற்ற சிறைச்சாலைக்குள் அடைத்து வைத்து பின்னர் விடுதலை செய்வதன்மூலம் பாலியல் குற்றச்செயல்களை அவர் மீளவும் செய்யமாட்டார் என்ற அதிகாரியின் எடுகோள் சிறுபிள்ளைத்தனமானது என்பது மட்டும் அன்றி அவரின் சிறைச்சாலை சீர்திருத்த -புனர்வாழ்வு உளவியல் தொழில்சார் தகுதியையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் மீண்டும் மீண்டும் ஏன் குற்றச் செயலில் ஈடுபடுகிறார்..? மீண்டும் மீண்டும் ஏன் சிறைக்குள் வருகிறார்? பொறுப்பு ஏற்றல் என்பது இந்த கேள்விகளுக்கும் பதில் தேடுவதாக
அமையவேண்டும்.
பொதுவாக ஒரு தடவை பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் அதையே மீண்டும் மீண்டும் செய்வார்கள் என்பது சர்வதேச உளவியல் ஆய்வுகள் தருகின்ற செய்தி. அதை அவர்கள் செய்யாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதும் அந்த ஆய்வுகளில் முன்மொழியப்பட்டுள்ளது. அதைச் செய்யாமல் பாலியல் குற்றக்கைதிகளை சிறை என்ற பெயரில் இயங்கும் சித்திரவதை முகாம்களில் அடைப்பதன் மூலம் ஒருவர் திருந்துவதில்லை.
பாலியல் வன்முறையில், போதைப்பொருள் கடத்தல்/ பாவனையில் ஈடுபடுபவர்களை சிறையில் அடைத்து உளவியல் சித்திரவதை செய்வதன்மூலம் திருந்துவதில்லை. சரியானதும், போதுமானதுமான உடல், உள புனர்வாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும். இவர்கள் சிறைக்கு உரியவர்கள் அல்ல. புனர்வாழ்வு, மற்றும் உளவியல் சிகிச்சை நிலையங்களுக்கு உரியவர்கள். இவர்களை சட்டவாதத்தினால் மாத்திரம் விடுதலை செய்யமுடியாது.
அவர்களின் உளவியல் ரீதியான செயற்பாடுகள் பரீட்சித்துப் பார்க்கப் படவேண்டும். இறுதியில் கைதியின் உளவியல் சிகிச்சையாளரின் அவதானிப்பு அறிக்கை மட்டும் விடுதலைக்கு போதுமானதல்ல. கைதிக்கு அறிமுகமில்லாத நடுநிலையான வேறு ஒரு உளவியல் நிபுணரின் பரிந்துரை அவரை விடுதலை செய்ய அவசியமானது. குறிப்பிட்ட கைதி சமூகத்திற்கு ஆபத்தானவர் அல்ல என்பதை அந்த உளவியல் நிபுணத்துவ அறிக்கை வலியுறுத்தினால் மட்டுமே அவர் விடுதலை செய்யப்படமுடியும். இந்த நடைமுறைகள் இல்லாமல் ஆடு, மாடுகளை போன்று அடைப்பதும், திறந்து விடுவதும் மட்டுமே சிகிச்சை என்றால் அந்த சிறையதிகாரி சொன்னது போல் மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவு தவிர்க்கமுடியாதது, அவர் மீண்டும் மீண்டும் சிறைக்குள் வருவதும் போவதும் மட்டுமே சாத்தியமானது. இந்த உளவியல் சிகிச்சைகளுக்கு அனைத்து கைதிகளும் சட்டரீதியாக உரித்துடையவர்கள். அதை அரசாங்கம் மறுத்தால் அது அரசதரப்பின் சட்டமீறல்.
இந்த மரபு ரீதியான மன்னர்கால நடைமுறை கைதிகளை உற்பத்தி செய்வதற்கே உதவும். இலங்கை சிறைகள் ஏன் நிரம்பி வழிகின்றன? 11,000 பேருக்கான இடவசதியில் 40,000 பேர் அடைக்கப்படுவதற்க்கு அரசாங்கங்களின் கொள்கை தோல்வியே காரணம். நீர்கொழும்பில் 650 கைதிகளுக்கான இடவசதியில் 2400 பேர் அடைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கிறார்கள். ஏனெனில் குற்றவாளிகள், சந்தேகநபர்கள் மனிதர்களே அல்ல என்ற எமது சமூகப்பார்வையும், அவர்களுக்கு உரிமைகளே இல்லை என்ற சமூகத்தின் தவறான கணிப்பும், சமூகப்பெறுமதி அற்றவர்களாக கைதிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்கி விடுகிறது. இதனால் தங்களை அங்கீகரிக்கும் ஒரு குற்றக்குழுவிற்குள் அவர்கள் விழுந்து விடுகிறார்கள்.
கடந்த காலங்களில் இலங்கை சிறைகளில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் சிபார்சுகள் ஆட்சியில் இருப்பவர்களை திருப்திப்படுத்துவதாக இருந்துள்ளன. இதை இன்றைய ஆட்சியாளர்கள் அன்று நிறையவே விமர்சனம் செய்திருக்கிறார்கள், கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். மேலும் வெளியில் உள்ள ஒருவரின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அரசாங்கம் ஒன்றினால் வழங்கமுடியாமல் இருக்கலாம் ஆனால் சிறையில் இருப்பவரின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கமுடியும் என்றும், சிறையில் ஒரு உயிரும் இழக்கப்படக் கூடாது என்றும் சூளுரைத்திருக்கிறார்கள். ஆனால் நீர்கொழும்பில் நடந்திருப்பது என்ன? நடந்து முடிந்த பின்னர் நடப்பது என்ன?
இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் குறித்து இன்னும் சில குடும்பங்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை. இதை வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு சமமான குற்றச்செயல் என்று மனித உரிமை அமைப்புகள் பேசுகின்றன. கைதிகள் மீதான சித்திரவதைகள், துஷ்பிரயோகங்கள் பற்றியும் மனித உரிமை ஆர்வலர்கள் நீதியான விசாரணையை கோருகின்றனர்.
அவசரகால சட்டம் நீடிக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற அரசியல் அறிவித்தல்கள் சட்டவாட்சி ஒன்றை நிறுவி விடமுடியாது. முதலில் சட்டரீதியான சமத்துவமான அணுகுமுறையில் உள்ள வெளிச்சமும், இருட்டும் வேறுபாடு நீக்கப்பட வேண்டும்.
ஒரு வகையில் நீர்கொழும்பு அவலம் காலாகாலமாக உல்லாசப்பிரயாணத்துறை டொலர் வருமானத்தை – போதைப்பொருள், ஓரினச்சேர்க்கை, பாலியல்தொழில் ….. போன்ற எதிர்மறையான சமூகவிரோத இழப்புக்களுக்கு கறுப்பும், டோலருக்கு வெள்ளையும் அடித்ததன் நீண்ட கால ஐந்தொகை.
