– கருணாகரன்
அரசியலில் நம்பிக்கை என்பது மிகப் பெரிய அரசியல் மூலதனமாகும். அந்த நம்பிக்கை ஒருமுறை சிதைந்துவிட்டால், அதை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம். விடுதலைப் புலிகளின் மீது பலருக்குக் கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். ஏன், புலிகளை யாரும் எதிர்த்து, மறுக்கலாம். உலகமே புலிகளுடைய அரசியல், இராணுவ நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கூட உண்மையானதுதான். ஆனால், புலிகளின் மீதான மதிப்பும் அவர்களுடைய அரசியல் – இராணுவச் செயற்பாடுகளின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இன்னும் பெரிதாக மாறவில்லை. புலிகள் தோற்கடிக்கப்பட்ட சக்தியாகி விட்டனர். புலிகள் இல்லாது 17 ஆண்டுகள் கடந்து விட்டன. அதற்குப் பிறகு ஒரு புதிய தலைமுறை உருவாகி விட்டது. ஆனாலும் இன்னும் புலிகளின் மீதான மதிப்பும் கவர்ச்சியும் சமூகத்தில் குறையவில்லை. என்பதால்தான் தமிழ்த்தேசியவாத அரசியல் இன்னமும் புலிகளின் நினைவூட்டல்களைச் சுற்றிக் கொண்டே நிகழ்கிறது. இன்னும் பிரபாரகரன்தான் தமிழ்த் தேசியவாத அரசியலின் தலைவரும் முதலீடுமாகும். ஈழத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் (தமிழகத்திலும்) இதுதான் விதி.
புலிகளை மீறி அல்லது அவர்களைக் கடந்து ஒரு புதிய அரசியலும் தலைமையும் ஏன் இன்னமும் உருவாகவில்லை? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இராஜவரோதயம் சம்பந்தன், “ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை ஏற்றுக்கொள்ளத் தயார்” என்ற அறிவிப்போடு, இலங்கை அரசுடன் ‘அடிப்படையில் விட்டுக் கொடுப்பற்ற, புரிந்துணர்வு அடிப்படையிலான பேச்சுவார்த்தை அரசியலை’ மேற்கொள்வதற்கு முயற்சித்தார். இதற்குத் தமிழர்களிடத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. சிங்களவர்கள் இதைக் கண்டும் காணாதிருந்தனர். இதனால், சம்பந்தனும் தலைவராகப் பரிமளிக்கக் கூடிய இடத்தைப் பெற முடியாமல் போனது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராகக் கருதப்பட்டாரே தவிர, தமிழ் மக்களின் தலைவராக மாற்றமடைய முடியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், தனிநாடு, தமிழீழம், சமஸ்டி எதுவும் இலங்கை அரசியலில் இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று தெரிந்து கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்வே சம்பந்தனை எதிர்த்தது. சம்பந்தனை அதற்காக மட்டும் எதிர்க்கவில்லை, தமிழ்த்தேசிக் கூட்டமைப்பை அவர் ஜனநாயக அடிப்படையில் வழிநடத்துவதற்குப் பின்னின்றார். அதனால் ஏற்பட்ட நெருக்கடிகளினால்தான் தம்மால் சம்பந்தனை ஆதரிக்கவும் அவருடைய நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கவும் முடியவில்லை என்று இப்பொழுது ஈ.பி.ஆர்.எல்.எவ் விளக்கமளிக்கலாம். ஆனால், அரசியல் ரீதியாக அது ஏற்புடையதல்ல. சம்மந்தன் முன்னெடுத்த அரசியலை அவரைத் தவிர, அந்தளவு Smart ஆக முன்னெடுப்பதற்கும் அதற்குரிய அடையாளத்தை உருவாக்குவதற்கும் வேறு யாருமில்லை. ஆகவே அந்தச் சந்தர்ப்பத்தை இழந்தது பேரிழிப்பே. ஈ.பி.ஆர்.எல்.எவ்வைப்போல ரெலோவும் புளொட்டும் சம்பந்தனை விட்டு விலகாது கடைசிவரையில் தாக்குப்பிடித்து நின்றாலும் அவை இரண்டும் அவரைப் பலப்படுத்தவே இல்லை. சம்மந்தனும் அவருடைய நிழலான சுமந்திரனும் குறிவைத்துத் தீவிரத்தமிழ்த் தேசியத்தரப்பினரால் தாக்க முற்பட்டபோது, ரெலோவும் புளொட்டும் வேடிக்கை பார்த்தன. அல்லது அமைதி காத்தன. விளைவு சம்பந்தன் முன்னெடுக்க முயற்சித்த அரசியலும் செலிழந்து விட்டது. சம்பந்தனுக்குப் பின்னராக தலைமைத்துவமும் இல்லாமற் போனது.
ஒரு தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும்போது, அந்தத் தலைமைத்துவம் முன்வைக்கும் அரசியல் கோட்பாடும் நிலைப்பாட்டும் குறித்த சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது பிற சமூகத்தினரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. அல்லது ஒரு கோட்பாட்டில் அல்லது நிலைப்பாட்டில் மக்கள் திரளும்போது, அந்தக் கோட்பாட்டுக்கும் நிலைப்பாட்டுக்கும் நேர்மையான முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல் தரப்பை வழிநடத்தும் தலைமைத்துவம், குறித்த சமூகத்தின் தலைமையாகக் கொள்ளப்படுகிறது அல்லது அதனுடைய தலைமையாக மாறி விடுகிறது. அது பிற சமூகத்தினரையும் கவனிக்க வைக்கிறது.
இன்றைய நிலையில் ஈழத்தமிழ்ச்சமூகத்தில் இந்த இரண்டு நிலைகளிலும் வறுமை அல்லது உறுதியற்ற நிலையே காணப்படுகிறது.
இப்பொழுதுள்ள தமிழ்த் தலைவர்கள் ஊசலாடுகின்றனர். மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தக் கோருகின்ற தரப்புகள் அனைத்தும் சமஸ்டி, தமிழீழம் என்ற சொல்லைத் தவறாமல் மேடைகளில் உச்சரிக்கின்றன. அந்தச் சொற்களைக் கைவிட்டால், தமிழ் மக்கள் தங்களைக் கைவிட்டுவிடுவார்கள் என்று இவர்கள் அச்சமடைகின்றனர். ஆனால், யதார்த்த நிலை என்னவென்று அனைவருக்குமே நன்றாகத் தெரியும். இந்த உண்மையை மக்களும் அறிவர். அதாவது குறித்த தலைமைகள் தங்களால் முடியாததையெல்லாம் சும்மா பேச்சுக்காகச் சொல்கிறார்கள். மற்றும்படி சமஸ்டியை நோக்கியோ, தனிநாட்டை நோக்கியோ (ஒரு நாடு இரு தேசம்) இவர்களால் ஒரு அடி கூட வைக்க முடியாது என்று. என்பதால்தான் இந்தத் தலைவர்களையும் இவர்களுடைய அரசியல் முன்னெடுப்புகளையும் மக்கள் பெரிதாகக் கொள்ளாத நிலை உருவாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தக் கட்சிகளும் இவற்றின் தலைமைத்துவங்களும் கீழிறக்கம் கண்டுள்ளனவே தவிர, உயர்வைப் பெறவில்லை. இந்தச் சூழலில்தான் தேசிய மக்கள் சக்தி இலகுவாக வடக்குக் கிழக்கில் தன்னை மிக இலகுவாக நிறுத்தவும் வெற்றியீட்டவும் முடிந்தது.
இதைக்குறித்துப் பரிசீலிப்பதற்கு எந்தக் கட்சியும் தயாரில்லை. எந்தத் தலைமையும் தயாரில்லை. இந்த உண்மைகளை உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாமல் எல்லாத் தலைமையும் தத்தளிக்கிறது. ஆனால், நிச்சயமாக ஒரு மாற்றத்தை – முன்னேற்றத்தை – உருவாக்க முடியும். அரசியலில் எதுவும் சாத்தியம். அதற்கு நாம் தயாராக வேண்டும். அந்தத் தயார்ப்பாடு சாத்தியமில்லை என்றால், தேவையான பலதும் சாத்தியமற்றுப்போகும்.
இன்றைய தமிழ்த் தலைமைத்துவ வெற்றிடம் என்பது பல தயாரின்மைகளின் கூட்டு விளைவாகும்.
ஒரு இனத்தில் அல்லது ஒரு சமூகத்தின் தலைமைத்துவம் என்பது, எளியதல்ல. அதுவும் நீண்டகால ஒடுக்குமுறைக்குள்ளாகிய சமூகத்திற்கான தலைமைத்துவம் என்பது மிகுந்த ஆற்றலைக் கொண்டதாகும் உச்சமான அர்ப்பணிப்பைச் செய்யும் திறனுள்ளதாகவும் இருக்க வேண்டும். ஈழத் தமிழ்ச் சமூகம் என்பது தனியே நீடித்த ஒடுக்குமுறைக்குள்ளானது மட்டுமல்ல, நீண்ட போரினால் பாதிக்கப்பட்டதுமாகும். அத்துடன் போரிலே தோற்கடிக்கப்பட்டதுமாகும். இந்த நிலையில் அதற்குத் தலைமையேற்கும் சக்தி மிகுந்த ஆற்றலோடும் அர்ப்பணிப்போடும் செயற்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
இது எளிதானதல்ல. மிகமிகக் கடினமானதாகும். ஏனென்றால், கடந்த காலப் போராட்டங்கள் பெரும்பாலும் உணர்வுகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டவை. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றின் அரசியற் சொல்லாடல்களும் தலைவர்களின் பிரகடனங்களும் வரலாற்றின் சிரிப்புக்குரியன. அறிவுபூர்வமாகாத எதுவும் நகைப்புக்குரியதாகவே இருக்கும். நடைமுறைச் சாத்தியமற்ற எவையும் கோமாளித்தனமானவையாகி விடும். பின்வந்த விடுதலைப்புலிகள் நடைமுறைகளைத் தமது செயற்பாட்டுத் தத்துவமாகக் கொண்டிருந்தாலும் அந்தப் போராட்டம் உணர்ச்சிமயமானது. அந்த உணர்ச்சிமயத்திலிருந்தே பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. இது கடுமையான விமர்சனம்தான். ஆனால். இதுதான் உண்மை. இதனால்தான் அறிவார்ந்த தளத்தில் அதனால் வெற்றியடைய முடியாமல் போனது. சுருக்கமாகச் சொன்னால், சர்வதேச உலக ஒழுங்கின், பிராந்திய மாறுதல்களின் போக்கினை மதிப்பிடவும் கையாளவும் தவறியது அறிவார்ந்த அணுகுமுறைக்குப் பதிலாக உணர்ச்சிகரமான முடிவுகளால் தீர்மானிக்கப்பட்டதன் விளைவாகும்.
இது ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு அருமையானதொரு படிப்பினையாகும். தற்போதைய தலைமைக்கு உணர்ச்சியை விட அறிவுப்பூர்வமான, சாணக்கியமான அணுகுமுறை அவசியம். தற்போதைய உலக அரசியல் மற்றும் பிராந்திய அரசியல் (குறிப்பாக இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் நகர்வுகள்) போக்குகளைத் துல்லியமாகக் கணித்து, தமிழர்களின் உரிமைகளை சர்வதேச அரங்கில் விட்டுக் கொடுக்காமல் பேசுவதற்கான ராஜதந்திரம் மிக முக்கியம். போரினால் ஏற்பட்ட உளவியல் ரீதியான வடுக்கள், இழப்புகள், மற்றும் ஏமாற்றங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் ‘ஆற்றுப்படுத்தும்’ பண்பு தலைமைக்கு இருக்க வேண்டும். வெறும் அரசியல் உரிமைகளைப் பேசுவதோடு நின்றுவிடாமல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வாதாரம், கல்வி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும்.கடந்த காலத்தில் ஒரு தனிநபரைச் சுற்றி நகர்ந்த அரசியல் நிலையை மாற்றி, பல்துறை வல்லுநர்கள், அறிவுஜீவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளடங்கிய ஒரு கூட்டுத் தலைமைத்துவக் கட்டமைப்பை (Collective Leadership Structure) உருவாக்க வேண்டும். மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளித்து, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்வாங்கிச் செல்லும் சகிப்புத்தன்மை அவசியம். தற்காலிக அரசியல் இலாபங்களுக்காகவோ அல்லது தேர்தல் வெற்றிகளுக்காகவோ அன்றி, அடுத்த தலைமுறைக்கான நீண்டகால சமூக, பொருளாதார, கலாசாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பலத்தையும், தாயக மக்களின் தேவையையும் இணைக்கும் ஒரு பலமான பாலமாக இத்தலைமை செயல்பட வேண்டும். இது உச்சமான அர்ப்பணிப்பைக் கோரும் களம்.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுடைய தனிப்பட்ட, பொருளாதார அல்லது அதிகார இலாபங்களைத் துறந்து, சமூகத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்தும் உயர் நாணயமும் நேர்மையும் (Integrity) கொண்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாகத் தேசியத் தலைவர் அல்லது தேசியத் தலைமைத்தும் அதிகாரத்தை தனிப்பட்ட நலனுக்காகப் பயன்படுத்தாதவராக இருக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை, நிதி ஒழுக்கம், பொது வாழ்க்கையில் எளிமை, வாக்குறுதிகளுக்கும் செயற்பாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமை ஆகியவை தலைமைத்துவத்தின் அடிப்படை நெறிமுறைகளாக இருக்க வேண்டும்.
மக்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் தலைவர், முதலில் தனது அரசியல் நடத்தையிலேயே அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
(தொடரும்)
