இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர்காலம் (பகுதி1)

இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர்காலம் (பகுதி1)

(பரந்த உரையாடலுக்கான முன்னோட்டம்)

— வி. சிவலிங்கம் —

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் தொடர்பாக மிகவும் விரிவாக விவாதிக்கும் காலம் நெருங்கியுள்ளதாக பலரும் உணர்கின்றனர். குறிப்பாக, இலங்கை நிதி அடிப்படையில் வங்குறோத்து நிலையை அடைந்துள்ளதாக அறிவித்த நிலையில் நாட்டின் ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் நாட்டின் அரசியல் நிர்வாகத்தை அடைத்து நின்ற ராஜபக்ஸ குடும்பத்தினர் அனைவரும் பதவிகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவ்வாறு மக்களின் அழுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்ட ராஜபக்ஸ குடும்பத்தினர் அரசியல் யாப்பின் சில பிரிவின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தம்மைப் பாதுகாக்கும் வகையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐ.தே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தமது பாராளுமன்றப் பலத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியாக நியமித்தனர். 

பொதுஜன பெரமுன என்ற பெயரில் செயற்பட்ட மகிந்த தலைமையிலான கட்சியினால் ஜனாதிபதி பதவியைப் பெற்ற கோதபய ராஜபக்ஸ மக்களால் துரத்தப்பட்ட நிலையில் மக்களுக்கும் அக் கட்சிக்குமிடையே இருந்த உறவு அறுந்த நிலையிலும் அதாவது மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் அவர்களால் மீளவும் தாம் விரும்பிய ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வாய்ப்பு என்பது மக்களின் இறைமை அதிகாரத்தை மீறிய ஒரு செயலாகும். 

2022ம் ஆண்டு இடம்பெற்ற ‘அறகலய’ போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்கள் 2024ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் முடிவுகள் இலங்கையின் வரலாற்றினைப் புரட்டிப் போட்ட மாற்றங்களாகும். அரசியல் பண்டிதர்கள், அரசியல் தலமைகள், அரசியல் கட்சிகள் எவையும் எதிர்பாராத வகையில் இலங்கை அரசியலில் மூன்றாவது கட்சியின் அரசியல் பிரவேசம் என்பது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த புதிய அரசியல் விழிப்புணர்வை அடையாளம் காட்டியது. 

இந்த வரலாற்று நீரோட்டத்தின் மாற்றத்தின் பின்னணியில் நாம் அரசியல் நிலமைகளை ஆராய வேண்டிய நிலையில் உள்ளோம். குறிப்பாக, தற்போது பூகோள அரசியல் போக்கிலும் மிகவும் காத்திரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் நாம் அரசியல் போக்கினை புதிய நிலமைகளின் பின்னணியில் நோக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.         

தற்போது உலக அரசியலில் பாரிய மாற்றங்;கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கடந்த பல தசாப்தங்களாக தாராளவாத ஜனநாயகத்தை (Liberal democracy) வலிறுத்தின. இதன் பின்னணியில் பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி காரணமாக அமைந்தன. 

அதனடிப்படையில் இறைமை என்பது மக்களுக்கு உரித்தானது எனவும், அது மக்களிடமே தொடர்ந்து இருக்கும் எனவும், அந்த இறைமை அதிகாரத்தின் மூலம் மக்கள் தமக்கான அரசாங்கத்தை சுதந்திரமான, நீதியான தேர்தல் மூலம் தெரிவு செய்வார்கள் எனவும் கூறுகிறது. 

சட்டத்தின் பிரகாரம் ஆட்சி என்பதையும், அது தலைவர்கள் உட்பட அனைவருக்குமானது எனவும், சுயாதீனமான நீதித்துறை என்பது நியாயமான விதத்தில் அரசியல் யாப்பின் அடிப்படையில் செயற்பாடுகள் அமைவதை உறுதி செய்வதாகவும் அமையும்.

இந்த தாராளவாத ஜனநாயக ஆட்சிக் கட்டுமானத்தில் தனி நபரின் உரிமைகளும், சுதந்திரமும் என்பது பேச்சு சுதந்திரம், மத வழிபாட்டுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறுப்பிற்கான காரணம் அரசின் அதிகாரத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கமாகும். 

இந்த ஆட்சிக் கட்டுமானத்தில் அதிகாரங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரம், சட்ட ஆக்க அதிகாரம், சுயாதீனமான நீதித்துறை எனப் பிரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்திருத்தலைத் தவிர்ப்பதற்காகவேயாகும். 

இங்கு பன்மைத்துவம் குறித்தும், சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்துப் பார்க்கையில் பல்வேறு வகைப்பட்ட அரசியல் கட்சிகள், கொள்கைகள், கோட்பாடுகளை அனுமதிக்கிறது. இதற்குப் பிரதான காரணம், சிறுபான்மையினரது அதாவது இனக் குழும அடிப்படையிலான அல்லது மத அடிப்படையிலான அல்லது கலாச்சார அடிப்படையிலான சிறுபான்மையினரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகும். 

இந்த அடிப்படைகளை உங்கள் முன் மீளவும் முன்வைப்பதற்கான  காரணம் இவை எவ்வாறு மாற்றமடைந்து செல்கின்றன என்பதை நீங்கள் பின்னர் அவதானிக்க உதவும். 

18ம் நூற்றாண்டில் படிப்படியாக வளர்ச்சியடைந்து சென்ற முதலாளித்துவம் தனது அரசியல் வழிகாட்டு நெறியாக மேற்குறித்த அம்சங்களையே உலக அளவில் வற்புறுத்திச் சென்றது. ஆனால் இந்த தாராளவாத ஜனநாயகக் கோட்பாடுகள் முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக குறிப்பாக, 20 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவில் டொனால்ட் றீகன், பிரித்தானியாவில் மாக்ரட் தச்சர் தலைவர்களாக இருந்த வேளையில் இக் கோட்பாடுகளுக்கு புதிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. அவை நவ தாராளவாத கோட்பாடுகள் என அழைக்கப்பட்டன. 

அதன் அடிப்படைகளாக சுதந்திரமான சந்தை என்ற அடிப்படையில் சந்தை நடவடிக்கைகளே மூலவளங்களை வினைத் திறனுனுடன் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டவை எனவும், சந்தையின் சுயாதீன செயற்பாடுகளில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்பதாகவும் மாற்றம் பெற்றது..

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வர்த்தக துறைகள் தனியார் துறைக்கு மாற்றப்பட வேண்டும். ஏனெனில் அரசு என்பது நிர்வகிப்பதை கடமையாகக் கொண்டிருக்கிறது. அரசை விட தனியார் துறை மூலவளங்களை வினைத் திறனுடன் பயன்படுத்துவார்கள். இம்மாதிரியான விவாதங்கள் சமீபத்தில் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள்  தனியாரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விவாதங்களில் வெளியிடப்பட்டதை நீங்கள் அவதானிக்கலாம்.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல சந்தை நடவடிக்கைகளை சுயாதீனமாக செயற்படும் வகையில் சட்ட ஏற்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது. உதாரணமாக, தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள், தொழிலிடங்களில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றன வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிக செலவினத்தை ஏற்படுத்துவதாகவும் கூறி அரசு சட்டங்களை தளர்த்துவது பற்றியும் கூறுகிறது. 

தற்போது வர்த்தகம் உலக அளவில் வளர்ந்து வருவதால் மூலதனம், பொருட்கள், சேவைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சுயாதீனமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும், அரசு செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பொதுச் செலவினங்களைக் குறைக்க வேண்டும் எனவும், தமது எதிர்காலம் தொடர்பாக தனியார் ஒவ்வொருவரும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உரித்துடையவர்கள் எனவும், அவர்களின் கடுமையான உழைப்பினால் பெறப்படும் செல்வம் காரணமாக கிடைக்கப்படும் சொத்துக்களுக்கு பூரண பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும் எனவும் இன்றைய நவதாராளவாத ஜனநாயகம் (Neoliberal democracy) கூறுகிறது. 

இதுவரை தாராளவாத ஜனநாயகம், நவதாராளவாத ஜனநாயகம் என்பவற்றின் அடிப்படைக் கோட்பாட்டு அம்சங்களை நீங்கள் அவதானித்த நிலையில் இந்த இரு கோட்பாடுகளுக்குமடையே ஒரு நெருக்கடி அதாவது ஜனநாயகத்திற்கும், சந்தைச் செயற்பாடுகளுக்குமிடையே ஒரு நெருக்கடி இருப்பதை அவதானிக்கலாம். 

இந்த நெருக்கடியை நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் இன்றுள்ள உலக பொருளாதாரப் பிரச்சனையை விளங்க முடியும். 

இந்த நெருக்கடி என்பது எவ்வாறு அமைகிறது? என்பதைப் பார்க்கலாம். ஜனநாயகம் என்பது சமத்துவத்தை வலியுறுத்துகிறது. அதாவது சுயாதீனமான அரசியல் குரலையும், சமூக நீதியையும் வலியுறுத்துகிறது. ஆனால் நவதாராளவாத ஜனநாயகம் சமத்துவம் அற்ற நிலமைகளை சந்தை நடவடிக்கைகளுக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் உருவாக்குகிறது. 

வாசகர்களே!

இந்த அடிப்படைக் கருத்துக்களைச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலமே நாம் மாற்று ஏற்பாடுகளுக்கான கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியும். ஏற்கெனவே குறிப்பிட்ட நெருக்கடி நிலமைகள் 1980 களில் மிகவும் உக்கிரமடையத் தொடங்கின. நீங்கள் இலங்கையின் அரசியல் மாற்றங்கள் 1977ம் ஆண்டு தேர்தல், 1978ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை, அதன் பின்னால் நாட்டில் ஏற்பட்ட ராணுவ கோட்பாடுகளை உள்வாங்கிய ஆட்சிக் கட்டுமான மாற்றம் போன்றவற்றை இந்தப் பின்னணியில் பார்க்க வேண்டும். 

திறந்த பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக, உலகம் முழுவதிலும் பாரிய கட்டுமான நெருக்கடிகள் தோற்றம் பெற்றன. உதாரணமாக, செல்வ வளம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கைகளில் அதிக அளவில் குவிந்தது. பல கோடீஸ்வரர்கள்  தோற்றம் பெற்றார்கள். இந்தியாவிலும் உலக கோடீஸ்வரர்கள்  உருவானார்கள். இதன் காரணமாக, மத்தியதர வர்க்கம், தொழிலாளிகள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். 

மிகவும் சக்திவாய்ந்த பிரிவினராகிய மத்தியதர வர்க்கமும், தொழிலாளிவர்க்கமும் ஒதுக்கப்பட்டமை காரணமாக மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது மிகவும் வெறுப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வலதுசாரி, இடதுசாரி போராட்டங்கள் (Rise of populism) தோற்றம் பெற்றன. 

மக்களின் வாக்குப் பலத்தால் ஆட்சிக்கு வந்த பல கட்சிகள் சர்வதேச பல்தேசிய நிறுவனங்களின் பண பலத்தின் முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப் பல்தேசிய நிறுவனங்களின் திட்டங்களை இந்த அரசுகள் ஏற்றுச் செயற்பட்டன. மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டார்கள். தேர்தல்கள் நடந்தன. மக்கள் சுயாதீனமாக வாக்களித்தார்கள். ஆனால் உண்மையான அதிகாரம் அவர்களிடம் இருக்கவில்லை. ஜனநாயகம் என்பது பெயரளவில் உள்ளதே தவிர அதிகாரம் தெரிவு செய்யப்படாதவர்களிடம் சென்றடைந்தது. 

இப் பின்னணியிலிருந்தே மேற்குலகில் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகளை நாம் நோக்க வேண்டும்.

திறந்த பொருளாதார நடவடிக்கைகள் உலகம் முழுவதிலும் பரவி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. மேற்குலக நாடுகள் எதிர்பார்த்தவாறு மாற்றங்கள் நிகழவில்லை. பதிலாக மேற்குலக நாடுகளிலிருந்த தொழிற்துறைகள் மூடப்பட்டுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தொழில் வாய்ப்புகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. செல்வம் ஒரு சிறு குழுவினரின் கைகளில் குவிந்துள்ளது. மத்தியதர, தொழிலாள வர்க்கத்தினர் தம்மை ஒதுக்கி பின்தள்ளியுள்ளதாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். 

இவ்வாறான சிந்தனைப் போக்குகள் வளர, வளர இப் பிரச்சனைக்கான காரணிகளாக இனம், மதம், வெளிநாட்டவர் என்பவை இப் பிரச்சனைக்களுக்கான அடிப்படைகளாக  மாற்றப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் பெரும் பணம் படைத்தவர்களின் பிடியிலுள்ள ஊடகங்களும், தேசியவாத பிற்போக்கு சக்திகளும் செயற்படுகின்றன. இப் பிற்போக்கு தேசியவாதம் பரந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்த பலத்த தடையாக மாறியுள்ளன.  இதுவே இன்று அமெரிக்காவில் அமெரிக்காவிற்கு முதலிடம் எனவும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதற்கான காரணிகளாகவும் உள்ளன. 

ஆரம்பத்தில் தாராளவாத ஜனநாயக கோட்பாடுகளோடு மேற்குலக நாடுகள் செயற்பட்ட வேளையில் சந்தைச் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கென கொடுப்பனவுகள், கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கான அதிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. இப்போ அரச மானியங்கள் இல்லை. சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள் படிப்படியாக கைவிடப்படுகின்றன. தொழில் என்பது நிரந்தரமற்ற ஒன்று என்ற நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இவை வறுமை நாடுகளில் மட்டுமல்ல, வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இதே நிலமைதான். 

இதன் விளைவாக நீண்ட காலமாக அரசியலை நடத்தி வந்த கட்சிகள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இன்று இல்லை. அரசியல் அதிகாரம் என்பது மக்களுக்கு எட்டாத தூரத்திற்குச் சென்றுள்ளது. இதனால் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்வதிலிருந்து விலகிச் செல்கிறார்கள். சில சமயங்களில் எதிர்பாராத கட்சிகளுக்கு வாக்களித்து தமது வெறுப்பை அடையாளப்படுத்துகிறார்கள். 

இன்று தோற்றம் பெற்றுள்ள சமூக ஊடகங்கள் இப் பிளவுகளை வெளிப்படுத்துகின்றன. உண்மை என்பது அறிய முடியாத அளவுக்கு ஆதிக்க சக்திகளால் மிகவும் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. இதனால் அரச நிர்வாகங்கள் மீது மக்கள் படிப்படியாக நம்பிக்கை இழந்து செல்கின்றனர்.

இன்னும் சொல்வதானால், பழைமையானவை மறைகின்றன. ஆனால் புதிதாக எதுவும் தோன்றவில்லை எனலாம். 

வாசகர்களே!

இதுவரை இக் கட்டுரை மூலம் உங்கள் கவனத்திற்குத் தர முனைந்தவற்றைச் சுருக்கிச் சொல்வதானால் இன்று இலங்கையில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில் கூறுவதானால்

– தாராளவாத ஜனநாயகம் (Liberal democracy) என்பது சமூக நீதியைக் கொண்டிருக்காவிடில் அங்கு நிலையான ஆட்சியை, நிலையான சமாதானத்தை எட்ட முடியாது.

– சந்தைச் சீரமைப்பு சகல மக்களின் நலன்களை உள்ளடக்கியதாக அமையாவிடில் இலங்கையில் 2022ம் ஆண்டு ஏற்பட்ட அறகலய போன்ற எழுச்சிகள் தவிர்க்க முடியாதவை. 

– மேற்குறித்த அம்சங்களில் போதிய கவனம் செலுத்தாவிடில் அடையாள அரசியல் அந்த வெற்றிடத்தை நிரப்ப நேரிடும்.

– இதுவே இன்று ஜனநாயகம் வளர்ச்சியடைந்த நாடுகளிலும், இலங்கை போன்ற பற்றாக்குறை ஜனநாயகம் நிலவும் நாடுகளிலும் பிரச்சனைகளின் மூலங்களாகும். 

இதுவரை உலகிலும், இலங்கையிலும் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளைப் பார்த்தோம். இக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல, இதுவரை தெரிவித்த கருத்துக்கள் இலங்கை நிலமைகளை மாற்றுவதாயின் அணுகுமுறை எவ்வாறு அமைதல் வேண்டும்? என்பதற்கான பதிலைத் தேடுவதாகும். 

உலகிலும், குறிப்பாக இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணம் நமது நாட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையிலிருக்கும் நவ தாராளவாத பொருளாதாரக் கட்டமைப்புத் தோற்றுவித்துள்ள சமத்துவமற்ற ( Inequality) நிலமைகளாகும்.       

அதே போலவே ஜனநாயக நிறுவனங்கள் சிங்கள பௌத்த பேராதிக்க நலன்களின் கருவியாகவும், நவ தாராளவாத  பொருளாதார கொள்கைகளை ஒரு குழு ஆதிக்கத்திற்காக (Crony capitalist) ஜனநாயக நிறுவனங்களைச் செயலிழக்கச் செய்தமையால் அரசியல் நெருக்கடி ஏற்படக் காரணமாக அமைந்தது.

மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் படிப்படியாக உக்கிரமடைய சமூகம் இன, மத, அடையாள பிரச்சனைகள் எனக் கூறுகளாகி ஒரு சமூக நெருக்கடிக்குக் காரணமாக அமைந்தது. இதன் கூட்டு விளைவாகவே 2022ம் ஆண்டு நாடு தழுவிய அடிப்படையில் ‘அறகலய’ எழுச்சி தோற்றம் பெற்றது.

இக் கட்டுரை வாசகர் மத்தியில் மிக ஆழமான சிந்தனையைத் தூண்டும் வகையில் வரலாற்றுடன் இணைத்தே எழுத எண்ணியுள்ளேன். உதாரணமாக, இலங்கையில் நிலவும் ஆட்சிப் பொறிமுறை குறித்து அரசியல்வாதிகள் வெவ்வேறு விதமாக வர்ணித்த போதிலும், நாம் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று நோக்குவது அவசியமானது. ஏனெனில் கட்சிகள் இன்று தோன்றி நாளை மறையலாம். ஆனால் நாட்டின் நிர்வாகக் கட்டுமானங்கள் தொடர்ச்சியாக செயற்படுவன.

உதாரணமாக, இலங்கையில் நிலவும் ஜனநாயக ஆட்சி குறித்து நாம் சற்று மாற்று விதத்தில் அணுகலாம். அதாவது இலங்கையில் ஜனநாயகம் என்பது காலத்திற்குக் காலம் ஜனநாயக வழிமுறையை நோக்கியும், ஜனநாயக விரோத வழிகளிலும் சென்றுள்ளது. நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல இலங்கை அரசியல் பொறிமுறை தாராளவாத ஜனநாயக அடிப்படைகளைத் தளுவியே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வப்போது ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தாராளவாத ஜனநாயக பொறிமுறையின் பிரதான அம்சங்களை படிப்படியாக அரித்துச் சென்றிருக்கிறது. 

உதாரணமாக, நாட்டில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. இத் தேர்தல்கள் மிகவும் விறுவிறுப்பாக மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றுள்ளன. அரசியல் கட்சிகள் மிகவும் போட்டி போட்டு தேர்தல்களில் ஈடுபட்டன. இத் தேர்தல்கள் காரணமாக, அரசாங்கங்கள் மாறியுள்ளன. இப் போட்டிகள் காரணமாகவே ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றன. எதிர்க்கட்சி என்பதும் பலமான விதத்தில் செயற்பட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு மிக ஆரம்பத்திலேயே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்றம் என்பது கட்சிகளின் போட்டி அடிப்படையில் இயங்குகிறது. எனவே நாட்டில் ஜனநாயகம் உயிர்ப்புடன் செயற்படுவதாக விவாதிக்க முடியும்.

இங்கு லிபரல் ஜனநாயகத்தின் மறுபக்கம் எவ்வாறு உள்ளது? என நாம் வினவினால் அங்குதான் பிரச்சனை எழுகிறது. அதாவது, சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு படிப்படியாக பலவீனப்பட்டுச் செல்கிறது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரம் படிப்படியாக விஸ்தரித்துச் செல்கிறது. சட்டம், ஒழுங்கு என்பது பாகுபாடு உள்ளதாக மாறி வருகிறது. அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பாதுகாக்கும் கருவியாக மாற்றம் பெற்றுள்ளது. உதாரணமாக,  சுதந்திரம் பெற்ற சில வருடங்களுக்குள்ளாகவே இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் சிவில் உரிமை பறிக்கப்பட்டது. சிங்களம் மட்டும் மொழிச் சட்டம் பெரும்பான்மை ஆதிக்கத்தை உறுதி செய்வதாக அமைந்தது. இவைகளே ஜனநாயக விரோத அம்சங்களின் பக்கங்களாக அதாவது பெரும்பான்மை ஆதிக்கம் ஜனநாயகத்தின் நியாயத் தன்மையை மீறிச் செயற்பட்டுள்ளமையை நாம் காண்கிறோம். 

1972ம் ஆண்டிலும், 1978ம் ஆண்டிலும் மேற்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பு மாற்றங்கள் இலங்கை அரசியலில் மேலும் பல தாக்கத்தைச் செலுத்தின. உதாரணமாக, 1972ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதலாவது குடியரசு அரசியல் யாப்பு மாற்றம் என்பது பாராளுமன்றத்தின் இறைமை அதிகாரத்தை மேலும் வலுப்படுத்த குடியரசாக மாறியதன் மூலம் மாற்றம் ஏற்பட்டது. சிறுபான்மையினருக்கான நீதித்துறைப் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. பௌத்த மதம் அரசியல் யாப்பின் அங்கமாக உயர்த்தப்பட்டது. தேசிய அரசியலில் சிறுபான்மையினரின் நம்பிக்கை குறைந்து சென்றது.

1983ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரையான காலப் பகுதி குறிப்பாக கறுப்பு யூலைக்குப் பின்னரான காலப் பகுதி அவசரகாலச் சட்டத்தின் கீழான ஆட்சியாகவும், அரச நிர்வாகம் ராணுவ மயமாக்கப்பட்டதாகவும், மக்களின் மீதான கண்காணிப்பு மிகவும் அதிகரித்த காலமாகவும் உணரப்பட்டது. இக் காலப் பகுதி என்பது தாராளவாத ஜனநாயக கோட்பாடுகளைக் (Liberal democratic principles ) கைவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது.  

2005ம் ஆண்டின் பின்னரான காலப் பகுதி என்பது மையத்தில் அதிகாரங்கள்  குவிக்கப்பட்டதாகவும், அரச நிர்வாக யந்திரங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டனவாகவும், அரசியலமைப்பு ஆணைக்குழுக்கள் பலவீனமுற்றதாகவும், ராணுவ ஆதிக்கம் அரச யந்திரத்திற்குள் இணைக்கப்பட்டதாகவும், படிப்படியாக சில குடும்பங்களின் ஆதிக்கம் மையத்தில் நிறைந்ததாக மாறிச் சென்றது. இவை யாவுமே நாட்டில் ஜனநாயக விரோத நிலமைகளுக்கு இட்டுச் செல்லும் பாதைகளாக அமைந்தன. 

1994ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டு வரையான காலப் பகுதியை நோக்கினால் நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் முயற்சி எடுக்கப்பட்டதாக நாம் கொள்ள முடியும். சமாதானத்திற்கான பேச்சு வார்த்தைகள், அரசியல் யாப்புச் சீர் திருத்தங்கள், அதிகார பரவலாக்க யோசனைகள், ஏகபோக குடும்ப ஆட்சிப் போக்கைத் தடுக்க எடுக்கப்பட்ட காலமாக கொள்ள முடியும். 

2015ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டு வரையான காலப் பகுதி என்பதும் மீண்டும் தாராளவாத ஜனநாயக கட்டுமானங்களை மீள உயிர்ப்பிக்கும் காலமாக அமைந்தது. அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 19வது திருத்தம், அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல், ஆணைக்குழுக்களின் பலத்தை அதிகரித்தல், ஜனாதிபதியின் பதவிக்கால எல்லையை மட்டுப்படுத்தல் போன்ற சில மாற்றங்கள் நிகழ்ந்தன. 

இந்த வரலாற்று மாற்றங்களை மீள உங்கள் கவனத்திற்குத் தருவதற்கான காரணம் எதுவெனில் நாட்டில் பலமான ஜனநாயக மாற்றங்கள் நிகழ்வதாயின் மத்தியில் சாதகமான ஒரு அரசு மாற்றத்தின் அவசியம் புரிந்து கொள்ளப்படுதல் அவசியம் என்பதாகும். 

(தொடரும்  )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *