தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 3

தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 3

 — கருணாகரன் —

ஒரு சமூகத்தின் அரசியல் வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கும் அரசியல் தன்மையைப் புரிந்து கொள்வதற்கும் முதலில் தலைமைத்துவத்தின் தன்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாத் தலைமைத்துவங்களும் ஒரே நோக்கத்திற்காக இயங்குவதில்லை. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அரசியல் விருப்புகள், பொறுப்புகள், அதிகார வரம்புகள், செயற்பாட்டு முறைகள், இலக்குகள் (நோக்குகள்) உள்ளன. இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளாதபோது, ஒரு வகைத் தலைமைத்துவத்திடம் இன்னொரு வகையின் பொறுப்புகளை எதிர்பார்க்கும் தவறு நிகழ்கிறது. இது முரண்பாடுகளை மட்டுமல்ல, குழப்பங்களையும் உருவாக்குகிறது. 

அப்படியென்றால் ஒரு சமூகத்தின் அரசியல் தலைமை எப்படி இருக்க வேண்டும்? 

அரசியல் தலைமை (Political Leadership)

அரசியல் தலைமை என்பது அரசியல் கட்சி மற்றும் பொதுக் கொள்கைகளின் ஊடாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். அத்துடன் தேர்தல்கள், சட்டமன்றங்கள் போன்றவற்றையும் அது கையாளும் வல்லமையைக் கொண்டிருக்கும். இந்த தலைமைத்துவம், மக்களின் அன்றாட அரசியல் தேவைகள், பொருளாதாரக் கொள்கைகள், நிர்வாகம், சட்டமியற்றல் தொடக்கம் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கிய செயற்பாடுகள்,  பேச்சுவார்த்தைகள் போன்றவற்றையெல்லாம் முன்னெடுக்கும்.

இத்தகைய தலைமைத்துவம் பொதுவாக தேர்தல்களின் மூலம் உருவாகிறது. அதனுடைய அதிகாரம் மக்களின் வாக்குகளிலிருந்து பெறப்படுகிறது. ஆகவே இது மக்களிடம் நேரடியாகப் பொறுப்புக்கூறும் கட்டமைப்புக்குள் இயங்குகிறது. சில சந்தர்ப்பத்தில் இது ஆயுதமேந்திய விடுதலை இயக்கத்தின் வழியாகவும் உருவாகிறது. அப்படி உருவாகும் தலைமைத்துவத்தின் பண்பும் செயற்பாட்டு முறைமையும் வேறாக இருக்கும். ஆனால், இரண்டும் ஒரே நோக்கை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவம் என்பதால், சில பொதுப் பண்புகளும் பொது அடிப்படைகளும் இணைத்தன்மையைக் கொண்டிருப்பதுண்டு. 

தேர்தல் அரசியலுக்குள் இயங்கும் தலைமைத்துவம் பல சமயங்களில் குறுகிய கால அரசியல் கணக்கீடுகளாலும் தேர்தல் வெற்றியின் அவசியங்களாலும் கட்டுப்படுத்தப்பட நேரும். இதனால் நீண்டகால தேசிய இலக்குகள் சில நேரங்களில் பின்தள்ளப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

தேசியத் தலைமை (National Leadership)

தேசியத் தலைமை என்பது தேர்தல் அரசியலைத் தாண்டிய ஒரு பரந்த தளத்திலானது. அது ஒரு தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகள், பண்பாட்டு அடையாளம், எதிர்காலக் கண்ணோட்டம் வரலாற்று நினைவு  போன்றவற்றை ஒருங்கிணைத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்கிறது.

தேசியத் தலைமை என்பது ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு தேர்தல் காலத்திற்கோ மட்டுப்பட்டதல்ல. மாறாக, பல்வேறு குறித்த சமூகத்தில் உள்ள அரசியல் அணிகளையும், சமூக அமைப்புகளையும், மதங்களையும், தலைமுறைகளையும் இணைக்கும் பொதுவான அரசியல் தளத்தை உருவாக்குவதே அதன் நோக்கமாகும். அதற்கான ஜனநாயக அடித்தளத்தையும் நெகிழ்ச்சியையும் குறித்த இலக்கை எட்டுவதற்கான தந்திரோபாயத்தையும் உறுதிப்பாட்டையும் கொண்டிருக்கும். 

உண்மையான தேசியத் தலைமையானது தனது ஆதரவாளர்களுக்காக மட்டுமல்ல; தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் உள்ளடக்கிய முழுச் சமூகத்திற்குமாகாகச் சிந்திக்கும் ஆற்றலையுடையது. அது பிரிவினைகளை ஆழப்படுத்துவதற்குப் பதிலாக, குறைந்தபட்சமாக அரசியல் ஒருமித்த கருத்தை உருவாக்க முயலும். அதன் மூலம் தன்னைப் பலமுடையதாக ஆக்கிக் கொள்ளும். துரதிருஸ்டவசமாக இந்தப் பண்பை தமிழ்த் (தேசிய) தலைமைத்துவம் இதுவரையில் கொள்ளவில்லை. 

அரசாங்கத் தலைமை (Governmental Leadership)

அரசாங்கத் தலைமை என்பது ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள அரசின் நிர்வாகத்தை வழிநடத்தும் தலைமைத்துவமாகும். இது அரசின் நிறுவனங்களை இயக்குதல், சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், பொருளாதார நிர்வாகம், பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய பொறுப்புகளை வகிக்கிறது.

இந்த வகைத் தலைமைத்துவம் ஒரு அரசைக் கொண்ட நாடுகளுக்குரிய அதிகார அமைப்பாகும். அதனுடைய முதன்மைப் பொறுப்பு அரசியல் இலட்சியங்களை உருவாக்குவது அல்ல; ஏற்கனவே உள்ள அரசியல் அமைப்பை நிர்வகிப்பதாகும்.

இதனால், அரசாங்கத் தலைமைக்கும் தேசியத் தலைமைக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. ஒரு அரசாங்கத்தை திறமையாக நிர்வகிக்கக்கூடிய ஒருவர், அவசியம் ஒரு தேசிய இயக்கத்தின் தலைவராக இருப்பார் என்று கூற முடியாது. அதேபோல், ஒரு தேசிய இயக்கத்தின் தலைவர், அரசாங்க நிர்வாகத்திலும் அதே திறமையைக் காட்டுவார் என்பதற்கும் உத்தரவாதமில்லை. இதேவேளை தேசியத் தலைமைத்துவத்தில் அரசாங்கத் தலைமைத்துவத்தின் சில பண்புகள் இருக்கும். இருக்க வேண்டும். ஒரு சமூகத்தில் அல்லது இனமொன்றில் அரசியல் தலைமைத்துவம் குறித்த சமூகத்தின் அல்லது இனத்தில் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கத் தலைமைத்துவத்துக்கு நிகரான தகுதியையும் ஆற்றலையும் கொண்டிருக்க  வேண்டும். அப்படியில்லை என்றால், அந்தச் சமூகம் அரசியல், பொருளாதாரம், வரலாறு, பண்பாடு, அபிவிருத்தி போன்ற அத்தியாவசியமான விடயங்களில் பின்தங்கியதாகி நலிந்து விடும். ஈழத்தமிழ்ச் சமூகத்தின் நலிவு அரசாங்கத் தலைமைத்துவத்துக்கு நிகரான பண்பை அது தனக்குள் கொள்ளாததேயாகும். 

இயக்கத் தலைமை (Movement Leadership)

இயக்கத் தலைமை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அநீதிகளை வெளிக்கொணர்கிறது. சமூகத்தை அணிதிரட்டுகிறது. அரசியல் மாற்றத்திற்கான அழுத்தத்தை உருவாக்குகிறது. முக்கியமாகக் களப்பணியை அர்ப்பணிப்போடு செய்கிறது. அதற்காக உயிரையும் இழப்பதற்குச் சித்தமாக இருக்கிறது. 

மட்டுமல்ல, இயக்கத் தலைமை என்பது அரசியல் மாற்றத்தை நோக்கி, விடுதலையை நோக்கி மக்களை மிகத் தீவிரமாக ஒழுங்குபடுத்தும் தலைமைத்துவமாகும். இது சமூக இயக்கங்கள், உரிமைப் போராட்டங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள், தேசிய விடுதலை இயக்கங்கள் போன்றவற்றின் வழியாக உருவாகிறது.

ஆனால், ஒரு இயக்கத்தை வெற்றிகரமாக வழிநடத்திய தலைமை, பின்னர் நிலையான அரசியல் நிர்வாகத்தை உருவாக்குவதில் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும். காரணம், போராட்டத்தின் அரசியல் மற்றும் நிர்வாகத்தின் அரசியல் ஆகிய இரண்டும் வேறுபட்ட திறன்களை வேண்டுகின்றன. அப்படி நிர்வாகத்திறனைப் பெற்றிருந்தாலும் அதற்கு வெளி அழுத்தங்களும் நெருக்கடிகளும் அதிகமாக இருக்கும். அது எப்போதும் சவால்களோடும் நெருக்கடிகளோடும்தான் செயற்பட வேண்டியுள்ளது. 

ஈழத் தமிழர்களுக்கு தற்போது எத்தகைய தலைமைத்துவம் தேவை?

இன்றைய சூழலில் ஈழத் தமிழர்களுக்கு இந்த நான்கு வகைத் தலைமைத்துவங்களிலும் உள்ள நல்ல அம்சங்களை ஒருங்கிணைக்கும் ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது.

தேர்தல் அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைமை அவசியம். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு அது பதிலளிக்க வேண்டும். அதை அதன் மூலமாக அது ஓரளவுக்கேனும் செய்யலாம். ஆனால், தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளில் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றும் எண்ணமும் கரிசனையும் இல்லை. இருந்தாலும் அதைச் செயற்படுத்தும் நுட்பமும் தந்திரோபாயமும் இல்லை. அவ்வாறான செயற்பாட்டை ஒரு தீட்டுப்போல தமிழ்த்தேசியவாத அரசியல் கருதுகிறது. இது மக்களுக்கு சுமையையும் நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. இதனால் தமிழ்த்தேசியத் தலைமைகளின் மீது சலிப்படைகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. கடந்த தேர்தலில் NPP வெற்றியடைவதற்கான காரணங்களில் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளின் இந்தப் பலவீனமும் ஒன்றாகும்.  

உலக அரங்கில் தமிழ் மக்களின் வரலாற்று அரசியல் கோரிக்கைகளை பொருத்தமான முறையில் தொடர்ந்து முன்வைக்கும் தேசியத் தலைமை அவசியம். அது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நம்பகமான அரசியல் குரலாக இருக்க வேண்டும். மட்டுமல்ல அறிவார்ந்த தளத்தில் சிந்திக்கும் பண்பாற்றலையும் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக உலக அரசியல் போக்கு என்ன? பிராந்திய நிலவரம் என்ன என்பதைக் கணித்து, அதற்கேற்ப காய்களை நகர்த்தக் கூடிய வல்லமையைக் கொண்ட தலைமை தேவை. 

இதேவேளை சமூகத்தை ஒருங்கிணைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கத் தலைமை அவசியம். அது மக்களின் அரசியல் பங்கேற்பை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் அரசியல் தீர்வு அல்லது அதிகாரப் பகிர்வு போன்ற புதிய சூழல்கள் உருவானால், அவற்றை திறமையாக நிர்வகிக்கும் தலைமைக்கும் தேவையிருக்கும்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மிகப் பெரிய குறைபாடு தேசியத் தலைமைத்துவத்திலேயே காணப்படுகிறது. தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் தலைவர்கள் உள்ளனர். பல்வேறு சமூக இயக்கங்களும் உள்ளன. ஆனால், கட்சி வேறுபாடுகளைக் கடந்தும், உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களை இணைத்தும், சர்வதேச அரங்கில் தொடர்ச்சியான அரசியல் குரலை வழங்கக்கூடிய, நிறுவனமயமான தேசியத் தலைமை இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இது தமிழ்த்தரப்பில் காணப்படுகின்ற பெருங்குறைபாடாகும். 

எனவே, ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியல் பயணம் ஒரே நபரைச் சார்ந்திருக்கக் கூடாது. அதேவேளை, தேர்தல் அரசியலால் மட்டும் ஒரு தலைமைத்துவம் வரையறுக்கப்படவும் கூடாது. அரசியல் தலைமை, தேசியத் தலைமை, இயக்கத் தலைமை மற்றும் எதிர்கால அரசாங்கத் தலைமை ஆகிய அனைத்தும் தத்தமது பொறுப்புகளைத் தெளிவாகப் பகிர்ந்து செயல்படும் ஒரு நிறுவனமயமான கட்டமைப்பே நீடித்த அரசியல் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாக அமையும். தமிழ்ச் சமூகம் இன்று எதிர்நோக்கியிருப்பதும் இதையே. 

அவ்வாறானதொரு கட்டமைப்பில், தேர்தல் அரசியல் நாளைய பிரச்சினைகளைச் சமாளிக்கும்; தேசியத் தலைமை தலைமுறைகளின் இலக்குகளை வழிநடத்தக் கூடியதாக இருக்கும். இயக்கத் தலைமை மக்களின் அரசியல் உயிர்ப்பைத் தக்கவைக்கும்; அரசாங்கத் தலைமை உருவாகும் சந்தர்ப்பங்களில் பொது நிர்வாகத்தைச் செயல்திறனுடன் மேற்கொள்ளும். இந்த நான்கின் சமநிலையே ஒரு சமூகத்தின் அரசியல் முதிர்ச்சிக்கான முக்கிய அடையாளமாகும்.

“தேசியத் தலைமைத்துவத்திற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் என்ன?” 

அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு, வரலாறு, புதிய சர்வதேச ஒழுங்கு போன்றவற்றில் அறிவுசார் பார்வையும் அவற்றைக் கையாளும், புரிந்து கொள்ளும் திறனும் அவசியமாகும். கூடவே, வரலாற்றுப் புரிதல், இராஜதந்திர முதிர்ச்சி, பொருளாதாரப் பார்வை, கட்டமைப்புக்கான ஒழுக்கம், ஜனநாயகப் பண்பாடு, நிறுவனங்களை உருவாக்கும் திறன் போன்றவையும் தேவை. 

ஒரு தேசிய இனத்தின் எதிர்காலத்தை வழிநடத்தும் தலைமைத்துவம் என்பது வெறும் தேர்தலில் வெற்றிபெறும் திறனோ, மக்களைக் கவரும் பேச்சாற்றலோ அல்ல. ஒரு தேசியத் தலைவர் என்பவர், தன் காலத்தை மட்டுமல்ல, அடுத்த தலைமுறைகளின் எதிர்காலத்தையும் சிந்தித்து முடிவெடுக்கக்கூடியவராக இருக்க வேண்டும். அதனால், தேசியத் தலைமைத்துவம் என்பது ஒரு பதவியல்ல; அது ஒரு வரலாற்றுப் பொறுப்பு எனக் கொள்வது அவசியமாகும்.

இன்றைய உலகில், குறிப்பாக நீண்டகால அரசியல் முரண்பாடுகளையும் தேசிய இனச் சிக்கல்களையும் எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு, தலைமைத்துவத்தின் தரம்தான் அந்தச் சமூகத்தின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. ஆகவே, ஒரு தேசியத் தலைமைத்துவத்திற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து தெளிவான புரிதல் அவசியமாகின்றது.

1. அறிவுசார் திறனும் அரசியல் சிந்தனையும்

முதலில், தேசியத் தலைமைத்துவத்திற்கு ஆழமான அறிவுசார் திறன் தேவை. அரசியல் என்பது வெறும் கோஷங்களாலும் உணர்ச்சிகளாலும் முன்னெடுக்கப்படுவதில்லை. அது வரலாறு, அரசறிவியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சட்டம், சமூக உளவியல், தகவல் தொடர்பு ஆகிய பல துறைகளின் ஒருங்கிணைந்த அறிவைத் தேவைப்படுத்துகிறது.

ஒரு தலைவர் சமகால நிகழ்வுகளுக்குப் பதிலளிப்பவராக மட்டுமல்லாமல், நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ற மூலோபாயங்களை வகுப்பவராக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளுக்குப் பதிலாக, தரவுகள், ஆய்வுகள் மற்றும் நீண்டகால விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சிந்தனையே ஒரு தேசிய இயக்கத்தை நிலைத்திருக்கச் செய்யும். அதன்மூலமே நீடித்த பிரச்சினைகளோடிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு தீர்க்கமான விடுதலை அரசியல் வழிமுறையை ஒருவாக்கக் கூடியதாக இருக்கும். 

2. வரலாற்றுப் புரிதல்

ஒரு தேசிய இனத்தின் அரசியல் நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ள அதன் வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம் என்பார்கள். கடந்த கால வெற்றிகளையும் தோல்விகளையும், உடன்பாடுகளையும் முரண்பாடுகளையும், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் மாற்றங்களையும் விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யும் திறன் தலைவருக்கு (தலைமைத்துவத்துக்கு) இருக்க வேண்டும்.

வரலாற்றை வெறும் பெருமையாகவோ வேதனையாகவோ மட்டும் அணுகாமல், அதிலிருந்து அரசியல் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் முதிர்ச்சி முக்கியமானது. இதனை மக்களும் ஊடகங்களும் சமூகச் செயற்பாட்டியக்கங்களும் புரிந்து செயற்படுவது அவசிமானதாகும். வரலாற்றை மீண்டும் மீண்டும் நினைவில் வாழ்வதற்காக மட்டுமாக அல்லாமல் எதிர்காலத்தைப் புத்திசாலித்தனமாக உருவாக்குவதற்காகப் பயன்படுத்த வேண்டும். இதற்கான வழிகாட்டலைச் செய்வது தலைமைத்துவத்தின் பொறுப்பாகும். 

3. இராஜதந்திர முதிர்ச்சி

இன்றைய உலகில் எந்த ஒரு தேசிய இயக்கமும் தனிமையில் வெற்றி பெற முடியாது. அதற்கான வாய்ப்புகள் அரிதினும் அரிது. சர்வதேச அரசியல், பிராந்திய சக்திகளின் போட்டிகளும் தலையீடுகளும், மனித உரிமைச் சட்டங்கள், பொருளாதார ஒத்துழைப்புகள், ஒத்துழைப்பின்மைகள், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் ஆகியவற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.

எனவே, ஒரு தேசியத் தலைவர் அல்லது தலைமைத்துவம் என்பது உலக அரசியலின் மாற்றங்களைக் கவனமாக – ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் உரையாடும் திறன், பேச்சுவார்த்தை நடத்தும் பொறுமை, கருத்து வேறுபாடுகளுக்கிடையில் பொதுவான நலன்களைக் கண்டறியும் திறன் ஆகியவை அவசியம்.

இராஜதந்திரம் என்பது எதிரிகளை உருவாக்கும் கலையல்ல; சாத்தியமான நண்பர்களை அதிகரிக்கும் கலையாகும். இதைத் தமிழ்த்தலைமைகள் மிக அவசியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது அசியமாகும். 

4. பொருளாதாரப் பார்வை

அரசியல் உரிமைகளும் பொருளாதார முன்னேற்றமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. மாறாக, அவை ஒன்றை ஒன்று வலுப்படுத்துபவையாகும். ஆனால், இதைப்பற்றிய பார்வையும் புரிதலும் தமிழ்ச்சமூகத்திடம் இல்லை. குறிப்பாகத் தமிழ்த்தேசியவாத அரசியல் கட்சிகளிடத்திலும் அவற்றின் அரசியலாளர்களிடத்திலும் இது அறவே இல்லை. இது பெருங்குறைபாடு மட்டுமல்ல, பெருந்தவறுமாகும். தமிழ்ச்சமூகத்தின் பின்னடைவுக்கும் அது தாயக நிலத்திலிருந்து வெளியேறிப் புலம்பெயர்வதற்கும் இது பெருங்காரணமாகும். இருந்தும் இப்போது கூட இதைப்பற்றிய புரிதல் ஏற்படவில்லை. அது ஏற்படுவதற்கான வாய்ப்பும் இப்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது. ஏனென்றால் தமிழ்ச் சமூகத்தின் எத்தகைய உரையாடலும் தமிழ் மக்களுக்கான பொருளாதாரம், அதற்கான கட்டமைப்புப் பற்றிய உரையாடல்களோ, சிந்தனை முன்வைப்புகளோ காணப்படவில்லை. 

ஒரு சமூகம் அரசியல் ரீதியாக வலிமையாக இருக்க வேண்டுமெனில், அதன் பொருளாதார அடித்தளமும் வலுவாக இருக்க வேண்டும். முதலீடுகள், தொழில்முனைவு, கல்வி, தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பொருளாதாரக் கண்ணோட்டம் தலைமைத்துவத்திற்கு அவசியம்.. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாத அரசியல், நீண்டகாலத்தில் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். இதுவே இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இதைப்பற்றிப் பேசுவதற்கு ஊடகங்கள் தொடக்கம் யாரும் தயாரில்லை. 

(விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 3