ஒரு நாய் சாமியாக…..!(மூன்றாவது கண்: XXIV)

ஒரு நாய் சாமியாக…..!(மூன்றாவது கண்: XXIV)

— அழகு குணசீலன் —

ஒரு சமூகத்தில் பகுத்தறிவு சிந்தனைகளின் அவசியத்தை கார்ள்மார்க்சும், பெரியாரும் நிறையவே பேசியிருக்கிறார்கள். இந்து சமூகத்தின் விஞ்ஞான பூர்வமற்ற குரங்குகள், பசுக்கள், எலிகளை, பாம்புகளை….. கடவுளாக வணங்கும் வழிபாட்டு முறையை விமர்சனம் செய்திருக்கிறார்கள், விழிப்பூட்டியிருக்கிறார்கள். எனினும் இந்த விடயங்களில் பூசாரிகளிடமும், பக்தர்களிடமும் மாற்றம் என்பது ஏற்பட்டதாக இல்லை. 

ஒரு புறத்தில் ஐந்தறிவு மிருகங்களை தெய்வங்களாக்கி, ஆறறிவு மனிதன் வணங்குவதும் இன்னொருபுறம் அவனே  மிருகங்களை வேட்டையாடுவதும்  வதைசெய்து பலியிடுவதும் முரண்நகையாக இருந்துவருகிறது.  மற்றைய மதங்களைப்போன்றே இந்து மதத்திலும் எல்லா உயிர்களிலும் கருணை காட்டப்படவேண்டும் என்பது பொது நியதி.  மற்றைய மதங்கள் மிருகங்களை வணங்காவிட்டாலும், மிருகங்கள் மீதான கருணையை பேசுகின்றன. இருந்தாலும் மிருகவதை இன்னும் இருக்கிறது. எல்லோரும் செய்கிறார்கள்.

இந்த பாரம்பரியத்தில் கதிர்காம பாதயாத்திரையில் இணைந்து கொண்ட/ இணைத்துக்கொள்ளப்பட்ட  நாய் ஒன்றுக்கு கதிர்காம கந்தனின் பெயர்களுள் ஒன்று “சுப்பிரமணி” என சூட்டப்பட்டுள்ளது. பாலுமகேந்திராவின் மூன்றாம்பிறை “சுப்புரமணி” வேறு கதை. கடவுளர்களின் பெயர்களை சூட்டுவது ஒரு வழக்கமாக இருந்து வருகின்ற போதும் மனிதர்களும் சரி, மிருகங்களும் சரி கடவுளாவதில்லை. அப்படி இருக்க இந்த சுப்பிரமணிக்கு ஏன் கடவுள் அந்தஸ்து (?). 

35 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிஸில் நான் முதன்முதலாக வேலைசெய்த நிறுவனத்தில்  என்னோடு வேலை செய்த இரு நண்பிகள் இவர்கள்.

ஒருவர் லுற்சியா. மற்றவர் தெரேசா.

முதலாமவர் சுவிஸ். இரண்டாமவர் இந்தியா – கேரளம்.

லுற்சியா கதைக்கும் போது “விஷ்ணு”  என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துவதை நான் அவதானித்தேன்.

ஜேர்மன்மொழி – டொச் மட்டுமட்டான அந்த நாட்களில் இந்த வார்த்தை எனது காதுகளில் விழுவது போன்று உண்மையில் “விஷ்ணு” தானா? என்பது எனக்கு சந்தேகம்.

ஒருநாள் இடைவேளையின் போது தெரேசாவிடம் லுற்சியா விஷ்ணு…விஷ்ணு… என்று கதைக்கிறார் , அதன் அர்த்தம் என்ன என்று கேட்டேன்.

வலது கையால் வாயை அரைகுறையாக பொத்திக்கொண்டு சிரிப்பையும் அடக்கமுடியாமல்…..

அதுவா கிருஷ்ணன்… கிருஷ்ணன்…கோவிந்தா, கோவிந்தா… என்றார்.

வாயைமூடிய கையைவிலக்கி லுற்சியா ஒரு நாய் வளர்க்கிறார் அதன் பெயர் “விஷ்ணு”!.  என்று தெளிவுப்படுத்தினார்.

ஒருநாள் லுற்சியாவிடம் ,உனது நாயின் பெயர் எதைக் குறிக்கிறது என்று தெரியுமா?   இது எனது கேள்வி.

ஓம் …தெரியுமே “இந்து கடவுள் விஷ்ணு”. நீலவண்ணமேனி, பின்னணியில் வெள்ளைப்பசு ஒன்று நிற்க, புல்லாங்குழல் இசைப்பார் அவர்தான் விஷ்ணு.  இது லுற்சியாவின் பதில்.

அந்த காட்சியின் அழகோ…அழகு!  அது என்னை கவர்ந்த காட்சி என்று முடித்தார் லுற்சியா.

இவர்கள் இருவரையும் சுருக்கமாக அறிமுகப்படுத்துவதென்றால் :

 லுற்சியா கத்தோலிக்க திருச்சபையின் அனாதைச்சிறார்கள் மீதான கட்டாய வேலைவாங்கல் , அவர்கள் மீதான வன்முறை, பாலியல் துஷ்பிரயோகங்கள்….. போன்ற விடயங்களில் முரண்பட்டு,  திருச்சபைக்கு தேவாலய வரி செலுத்த மறுத்து, திருச்சபையில் இருந்து வெளியேறியவர்.

தெரேசியா கேரளாவில் அன்னை தெரேசாயாவின் இல்லமொன்றில் வளர்ந்து ,  அதற்கூடாக வேலைவாய்ப்பை பெற்று ஆஸ்த்லிரியாவுக்கு வந்து அங்கிருந்து சுவிஸ் வந்தவர். கிறிஸ்த்தவத்திலும், அன்னை தெரேசியாவிலும் கொண்ட பற்றினால் அவர்களின் பெற்றோரால் சூட்டப்பட்ட பெயர் அது.

கதையைத் தொடர்ந்த தெரேசா “இந்தியாவில் என்றால்  நாய்க்கு இந்து கடவுளின் பெயரை வைத்ததற்காக  லுற்சியாவை புதைத்த இடத்தில் இன்னேரம் புல் முளைத்திருக்கும்” என்றார்.

“மாட்டைக்கொன்றதற்கே மரணதண்டனை கொடுப்பவர்கள் லுற்சியாவை சும்மாவா….? விட்டிருப்பார்கள்?” என்று என்னைப்பார்த்தார்.

தற்போது கதிர்காம பாதயாத்திரையில் பயணிக்கும் “சுப்பிரமணி” என்ற நாய்ச்சாமியின் கதை ,லுற்சியாவின் “விஷ்ணு”வின் கதையையும், இன்னொருவருடைய   பெட்டை நாய் “மரியாவின்” கதையையும் எனக்கு நினைவூட்டியிருக்கிறது. 

“மரியா” : நான் காலையில் தொங்கோட்டத்திற்கு போகும் பாதையில் உள்ள ஒரு வீட்டில் வளர்கிறது. ஓடும்  காலணிச் சத்தம் கேட்டால் வாயைச்சும்மா வைத்துக்கொண்டு “சிவசிவா” என்றிருக்க அதற்கு தெரியாது.  வௌவ்….வௌவ்….வௌவ்!

எப்போதும் குரைக்கும். உண்மையோ, பொய்யோ” குரைக்கின்ற நாய் கடிக்காது….” என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.  நம்பிக்கெட்டதால் வந்த வினை.

நாயைக்கண்டால் கல்லையும் காணோம்…! என்ன செய்ய…?

ஒருநாள் நான் தொங்கோட்டத்தில் போகவும், மரியா எசமானுடன் வீட்டுக்கு வெளியே வரவும் “கல்லும் தேங்காயும்” சந்தித்த மாதிரி.

நான் ஓட்டத்தை குறைத்து பதுங்க…..,

என்னை நோக்கி பாய்ந்தது மரியா…..!  

பயத்தில் எனக்கும் கால் இருக்கிறது என்பது மறந்து போயிற்று போலும்!

எசமான் …” மரியா.. மரியா..” என்று கடும்தொனியில் கூப்பிட வாலைச் சுருட்டிக்கொண்டு அவரது காலடியில் குந்தியது. 

மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார் அவர். 

பரவாயில்லை என்றேன் நான்.

ஆகா….  ஒரு  இரகசியம் கசிந்தது. 

“மரியா” என்ற பெயரை மனனம் செய்து கொண்டேன். இனி என்ன ஓட்டப்பாதையில் மரியா… மரியா.. காலைத்தோத்திரம். 

இப்போது லுற்சியா, தெரேசா மட்டும் அல்ல மரியாவும் எனது நண்பிகள். 

ஆக, கடவுளர்களின், மாதாவின் பெயர்களை நாய்க்கு சூட்டுவது ஒன்றும் சுப்பிரமணிக்கு மட்டும் உரியதல்ல. 

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை போகும் போது எனது அனுபவத்தின் படி ஒருவரை தனியாகப் பெயர் சொல்லி அழைக்கும் மரபு இருக்கவில்லை. 

பெரியசாமி, சின்னச்சாமி, அம்மாச்சாமி, அப்பாச்சாமி …. இப்படி அழைப்பது தான் வழக்கம். பெயரைச்சொன்னாலும்  பெயரோடு சேர்த்து சாமியில் முடியும்.

அதுதான் நாய்ச்சாமி அல்லது சுப்பிரமணியே கடவுளின் பெயர் என்பதால் அது மனிதர்களைப் போன்று சாமியில் முடியத் தேவையில்லை. ஒரு நாய்க்கு ஏன் இரண்டு தரம் சாமி….?

சுப்பிரமணிக்கு சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட விளம்பரம், பிரச்சாரம். கல்முனையில் காலால் உதைத்து “கறாம்” செய்ததும், சவுதியில்  அதை அறுக்க ஒருவர்  “கர்மா” பதிவிட்டதும்  நாய்ச்சாமி சுப்பிரமணிக்கு கிராக்கி ஆகிவிட்டது. 

இப்போது சமூக ஊடகங்களில் உதவிக்கோரிக்கைகளை கேட்கக்கூடியதாக உள்ளது. யாராயிருந்தாலும் சுப்பிரமணியை விற்றுப்பிழைக்காமல் இருந்தால் சரி. இலங்கையில் மதங்களை விற்றுப்பிழைப்பது   தொழிலாக இல்லை என்று யாரும் சத்தியம் செய்ய முடியாது.

காலால் உதைத்தவருக்கு “கர்மா” நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்திருக்கிறது என்ற திருப்தியில் ஒரு கூட்டம். 

சவூதியில்  கத்தி தீட்டிய சூரனின் தலையை கொய்ய சூரன் போர் நடக்குமா..? நடக்காதா…? என்ற விவாதத்தில் இன்னொரு கூட்டம். நாயை வைத்து  சகோதர இனங்களுக்குள் நடக்கிறது “மாம்பழச்சண்டை”. 

கிடைக்கின்ற தகவல்களின் படி சுப்பிரமணிக்கு இரண்டாவது முறையாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  முதல் தடவை திருகோணமலையில், இரண்டாம் தடவை உகந்தை பகுதியில். தற்போது சுப்பிரமணியின் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதாக அறியக் கிடைக்கிறது.

வள்ளியும், தெய்வானையும் எப்போதும் உடம்பில் கவனம்.

டயட், அளவுச்சாப்பாடு….

 அண்ணன் கணபதியருக்கு  அக்கறை காட்ட   இரண்டு இல்லாவிட்டாலும் ஒன்றுதானும் இல்லையே.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமாம்.  ச்சே ! அவருக்கு அவரே வரம்கொடுக்க முடியாமல் போய்ச்சே.

 மோதகமும்,கொழுக்கட்டையும் உள்ளடக்கம் ஒன்று என்றாலும் இரண்டும் வெவ்வேறு என்று போட்டுப்பிடித்து வண்டியும், தொந்தியும் அது வேறு. 

ஆனால் அவருக்கு ஒன்றும் இல்லை.

தம்பி சுப்பிரமணிக்கு சீனிவருத்தம். 

தெரியும் தானே இனி இதயம், ஈரல், சிறுநீரகம், நிறை என்று எல்லாம் தொல்லையாகப்போகிறது.

எந்த ஒரு விலங்கினதும் வாழ்வும் விலங்கியல் நியதிகளைக்கொண்டது. அந்த நியதிகளில் இருந்து பிறழும் போது பாதிப்புகள் தவிர்க்க முடியாதவை. நாயொன்று பிஸ்கட்டும்,ஜோக்கட்டும், வாழைப்பழமும்….. சாப்பிட்டு வளர்ந்ததல்ல. அப்படி தின்றாலும்  முப்பது நாட்களுக்கும் மேலாக ஒரே வகையான உணவை தின்பது இயற்கைக்கும், இசைவாக்கம் அடையப்பட்ட உணவுப்பழக்கத்திற்கும் முரணானது.  மாமிச உண்ணி ஒன்றை அதன் விருப்பத்திற்கு மாறாக  யாத்திரிகர்கள் உண்ணும் உணவை உண்ண கட்டாயப்படுத்துவதும் ஒரு வகையில் மிருக வதைதான்.

ஒரு வளர்ப்பு நாய், ஒரு நாளைக்கு எத்தனை கிலோமீட்டர் நடப்பது வழமை?  

ஒரு நாய் எப்போது யூஸ் குடித்தது…..?

பொறுப்பானவர்களின் பத்திரிகை செய்திகள், சமூக ஊடகப்பதிவுகள், அதற்குப்பின்னால் உள்ள பிரச்சார அணுகுமுறைகள் அனைத்தும் சுப்பிரமணி என்ற நாய்க்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் பொறுப்புக் கூறவேண்டியவர்களாகிறார்கள்.  வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினர் தேவையான அறிவுரைகளையும், எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துக்களையும் தெளிவுபடுத்திவிட்டார்கள். 

சுப்பிரமணி விவகாரம் சமூக ஊடகங்கள் பேசுகின்றது போல் மிகவும் இலகுவான, பொறுப்பற்ற, சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று அல்ல. இந்த யாத்திரை சுப்பிரமணியின் வழமையான – இயற்கையோடிணைந்த – இசைவாக்கம் அடையப்பட்ட வாழ்க்கைக்கு மாறானது.  அதை சமாளிப்பது அந்த நாய்க்கு அவ்வளவு இலகுவானது அல்ல. இதை அது யாரிடம் சொல்லி அழமுடியும்….?

அதனால்தான் சில சமூக ஊடகங்கள் “வாயில்லா” பிராணி என்கிறார்களோ? 

உங்கட சாப்பாட்டை திணித்து சீனியை ஏற்றுவதற்கு மட்டும் அதற்கு வாய் இருக்கா? 

இன்னோரு கொடுமை. ஒரு ஊடகம் நாயை உயர்திணையில் பேசுகிறது.

சுப்பிரமணிய பொறுத்தமட்டில் நடப்பது நன்றாகவே நடக்கும் என்று நம்புவோம். 

இந்த நம்பிக்கை இழக்கப்பட்டால்……..,

 சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் எதிர்பார்ப்போம்.

அமெரிக்க பௌத்த துறவிகள் உலக சமாதானத்தை வேண்டி பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டனர். இலங்கைக்கும் வந்திருந்த துறவிகளுக்கும், அவர்களோடு பயணித்த “அலோகா” நாய்க்கும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் மானிட நேயத்தை  மறுதலிக்கும் மனிதர்களின் அணுவாயுத அதிகாரத்திற்கான போர்க் குணாம்சம், இன, மத, மொழி  காழ்ப்புணர்ச்சி சமூகங்களுக்கு  இடையிலான சமாதான சகவாழ்வை வேண்டி நிற்கின்றது. 

இனம், மதம், மொழி, வர்க்க  அடிப்படையில் அதிகாரத்திற்காக மனிதர்கள் மிருகங்களிலும் மோசமாக ‘மனித வேட்டை’ ஆடப்படுவதை…,

 ஒரு நாயாலும்….  இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதன்  அர்த்தமா இந்த  சுப்பிரமணியின்   கதிர்காம யாத்திரை…..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *