— எம்.ஆர். ஸ்ராலின் ஞானம் —
இலக்கிய சந்திப்பு என்பது ஆரம்ப காலங்களில் புகலிட சஞ்சிகையாளர்களின் ஒன்றுகூடலாகவே உருவானது. அறிமுகங்கள் விமர்சனங்கள் பற்றிய நிகழ்ச்சியாக உருவானது. 1988ஆம் ஆண்டு ஜெர்மனியில் இது ஆரம்பமானது. காலப்போக்கில் தொடர் நிகழ்வுகளாக ஐரோப்பாவின் பல நாடுகளில் இது நடத்தப்பட்டு வந்தது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையை நோக்கி இந்நிகழ்வின் தொடர்கள் விரிவடைந்தன. அந்த வகையில் 53 வது சந்திப்பு இம்முறை இலங்கை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.
இலக்கியச் சந்திப்பானது புகலிடத்தின் கருத்துச் சுதந்திரத்தின் ஓயாத குரலாக பரிணமித்தது. நாடுகள் கடந்து, விடயதானத்தின் எல்லைகள் கடந்து, ஒரு சுதந்திர உரையாடல்களமாக வியாபித்தது.
நிகழ்வுகளில் தெரிவிற்கும் கருத்துரைகளுக்கு ஒருபோதும் எல்லை விதிக்கப்படுவதில்லை. இன்னார்தான் பேசமுடியும் என்று வரையறைகள், முன்னுரிமைகள் வழங்கப்படுவதில்லை. அதனால் சூடான விவாதங்களுக்கும் காட்டமான விமர்சனங்களுக்கும் இச்சந்திப்புக்களில் ஒருபோதும் குறைவிருப்பதில்லை. நேர் எதிர் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதும் காரசாரமான விமர்சனங்கள், கண்டனங்கள், கருத்தியல் மோதல்கள் என்று அனைத்துக்கும் இச்சந்திப்பு வாய்ப்பளித்து வருகின்றது.
அதனால்தான் கலை, இலக்கிய, அரசியல் உரைகளையும் விவாதங்களையும் தாண்டி மாக்சிசம், தேசியம், தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், LGBTQ+ சமுகத்தின் பிரச்சனைகள் என்றெல்லாம் இலக்கிய சந்திப்பு வாதப்பிரதிவாதங்களை கடந்து வந்திருக்கின்றது. மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக பாரபட்சமற்ற கண்டனங்களை இச்சந்திப்பு முன்வைத்து வந்திருக்கின்றது. பத்திரிகையாளர்களின், எழுத்தாளர்களின், இலக்கியவாதிகளின், சமுக அரசியல் செயல்பட்டார்களின் மீதெல்லாம் அச்சுறுத்தல்களும், கொலைவெறிகளும் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஈழத்து போர்சூழலில் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் கருத்துரிமைக்காகவும் இலக்கிய சந்திப்பு உரத்து குரல்கொடுத்து வந்திருக்கின்றது. சாமானிய மக்கள் மீது சாவுகளை திணிக்கும் யுத்தம் எப்போதும் வெறுக்கப்பட வேண்டியது, நிறுத்தப்பட வேண்டியது என்பதே இலக்கிய சந்திப்பின் ஓயாத குரலாக ஒலித்து வந்திருக்கிறது. இலங்கையில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான இனசுத்திகரிப்புக்கு எதிராக தமிழ் சமூகத்தின் குரல்களெல்லாம் மவுனமாக்கப்பட்ட வேளைகளில் தமிழ் மக்களின் மனச்சாட்சியாக இலக்கிய சந்திப்பு தனது கடுமையான எதிர்ப்பு குரலை பதிவு செய்திருக்கின்றது.
புகலிட சிந்தனைப்பரப்பின் இலக்கிய சந்திப்பில்தான் தலித்தியம் என்கின்ற கோட்பாடு அறிமுகமானது. ஆழ்வார்கள் பற்றி, அண்ட சராசரமான வானவியல் பற்றியெல்லாம் கருத்துரைகளும் விவாதங்களும் இந்த சந்திப்பில் நிகழ்த்தப்பட்டுள்ளன. கண்டன பிரசுர சர்ச்சைகள், வெளிநடப்புகள், ஏன் மவுனவிரதங்களும் கூட இச்சந்திப்பின் பன்முக வெளியை அழகு செய்திருக்கின்றன.
மாற்று இலக்கிய சஞ்சிகையாளர்களின் சந்திப்பு மையமாக உருவான இலக்கிய சந்திப்பில் இதுவரை இடம்பெற்ற சஞ்சிகை, நூல் அறிமுகங்கள், நூற்றுக்கும் மேலானவை எனலாம். அதிலும் இலக்கியசந்திப்பில் தமது முதலாவது இதழ்களை, இலக்கிய தொகுதிகளை வெளியிடுவது என்பது புகலிட எழுத்தாளர்களுக்கு சந்தோசமான நிகழ்வுகளாய் அமைந்து வந்திருக்கின்றன.
ஆசியா பதிப்பகத்தின் மூலம் புகலிட இலக்கியத்துக்கு உரமூட்டிய சபாலிங்கம் மீதான கொலைக்கு பின்னர் பல புகலிட சஞ்சிகைகள் நின்று போயிருந்தன. தமிழ் மக்களின் மீதான கருத்து சுதந்திர மறுப்பு ஐரோப்பாவிலும் அமுல்படுத்தப்பட்டது. எனினும் இருந்தாலும் பிரான்சில் இடம்பெற்ற அந்த 23 ஆவது இலக்கிய சந்திப்ப்பு குழு அந்த சூனியத்திலிருந்து மீண்டெள தீர்க்கம் கொண்டது. “இனியும் சூல்கொள்” என்னும் பெயரில் ஒரு மாற்று இலக்கிய தொகுதியை வெளியிடுவதென்று தீர்மானித்தோம். அக்குழுவில் எங்களோடு முன்னின்று உழைத்த தோழர்கள் புஸ்பராஜா, கலைச்செல்வன் போன்றோரின் அர்ப்பணிப்புகளும் மனவுறுதியும் ஒப்புமையற்றவையாகும்.
இதற்கு முன்னரும் பின்னரும் இலக்கிய சந்திப்புகள் சார்பாக பல இலக்கிய தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்ற வெளியீடுகள் தந்த உத்வேகமே மீண்டும் புகலிட சஞ்சிகைகள் தொடங்கப்படுவதற்கும், புகலிட இலக்கியத்தில் சாத்தியமான பல வெளியீடுகளுக்கும் முன்னுதாரணமானது.
இலக்கிய சந்திப்பு என்பது எந்தவித சட்டாம்பித்தனங்களுக்கும் இடம்கொடுக்காமல், அனைத்து வித அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் கருத்தாடுவதற்கான கருத்துச் சுதந்திரத்துக்கான களமாக இயங்கி வருகிறது. அது ஒன்றே இதுவரை நீண்ட காலமாக நின்றுபிடித்து வரும் ஒரே ஜனநாயகக் களமாகவும் நாம் கருத முடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் சில தனிநபர்களின் மீதோ அல்லது குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் மீதோ இருந்த முரண்பாடுகள் காரணமாக சிலர் தவிர்த்து வந்திருக்கிறார்கள். அல்லது எதிர்த்து தள்ளி நின்றிருக்கிறார்கள். அல்லது எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான எதுவும் இலக்கிய சந்திப்பின் இருப்பைப் பாதித்ததில்லை.
அதற்கான அடிப்படை காரணம் இந்த இலக்கிய சந்திப்பு எந்த ஒரு தனி நபரிடமோ அல்லது எந்வொரு குழுவிடமோ நிரந்தரமாக சிக்கவில்லை. இது ஒரு அமைப்பு இல்லை. இதற்கென்று ஒரு நிர்வாகம் இல்லை, இதற்கு என்று ஒரு கட்டுப்படுத்தும் யாப்பு இல்லை. உரிமை கோர எவருமில்லை. இவை தான் இலக்கிய சந்திப்பின் இருப்புக்கான வெற்றியின் இரகசியம். இவற்றில் ஏதாவது ஒரு விடயம் இருந்திருந்தாலும் அது உடைந்து சுக்கு நூறாக அழிந்து போயிருக்கும்.
ஒற்றைச் சிந்தனை, சகிப்பின்மை, தனிப்பட்ட குரோதம் போன்றவற்றின் பாத்திரம் இலக்கிய சந்திப்பின் மீதான வெறுப்புணர்ச்சியில் கணிசமான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இலக்கிய சந்திப்பு என்றும் எவர் கைகளுக்கும் நிரந்தரமாக போகமுடியாதபடி அதன் பொறிமுறை பேணப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும் .
இவ் இலக்கிய சந்திப்பின் இன்னுமொரு படியாக இம்முறை திருகோணமலையில் நடைபெற இருக்கும் சந்திப்பை குறிப்பிடலாம்.
எதிர்வரும் சனி ஞாயிறு இரு தினங்களிலும் முழு நாள் அமர்வாக இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பின் விசேட தொனிப்பொருளாக ‘பழங்குடி வேடர்களின்’ வாழ்வும் வளமும் பற்றிய பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு நூல் அறிமுகங்கள், சூபிகள், LGBTQ , ஆபிரிக்க வம்சாவளியினர், அருந்ததியர் போன்ற இலங்கையில் வாழும் விளிம்புநிலை மக்கள் பற்றிய பல்வேறு உரைகளும் அவற்றைத்தொடர்ந்த விவாதங்களும் இடம்பெறவுள்ளன.
ஆகவே பல புதியவிடையங்களை அறிந்துகொள்ள ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.
