ஜனநாயக ஆட்சி அதிகாரத்தில் சமநிலை…!(மூன்றாவது கண்: XXIII)

ஜனநாயக ஆட்சி அதிகாரத்தில் சமநிலை…!(மூன்றாவது கண்: XXIII)

— அழகு குணசீலன் —

பொதுவாக பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி அமைப்பில் ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரு அரசியல் சமநிலை பேணப்பட வேண்டியது ஒரு நல்லாட்சியின் முன் நிபந்தனையாகும். இந்த சமநிலையானது ஆளும், எதிர்கட்சி அங்கத்தவர்களின் எண்ணிக்கை சார்ந்த புள்ளிவிபர கணக்கல்ல. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள ஆளும்தரப்பும், சிறுபான்மையாக உள்ள எதிர்த்தரப்பும் ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள பற்றுதியை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான அதிகார சமநிலை.

இந்த சமநிலை பேணப்படுகின்றதா….? என்பது இன்று, நேற்று தோன்றிய கேள்வி அல்ல. சுதந்திர இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்தோடு கூடப்பிறந்த ஒரு கேள்வி. ஆட்சியில்-அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் ஜனநாயகத்தின் பெயரில் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கும் முடிவுகள்  எவ்வாறு ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கிறதோ அதற்கு எந்த வகையிலும் குறையாமல் சிறுபான்மை எதிர்கட்சி தரப்பின் கோரிக்கைகளையும், கருத்துக்களையும் கவனத்தில் கொள்வது ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கிறது. ஆளும் தரப்புக்கு இருக்கும் முக்கியத்துவம் பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிக்கும் சமநிலையிலானது. இதனால்தான் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்றத்தில் சமமான அந்தஸ்தைப் பெறுகிறார்கள்.

கடந்த 76 வருட பாராளுமன்ற ஆட்சியை நாம் இங்கு திரும்பிப்பார்க்க வேண்டியதில்லை. பெரும்பான்மையை பயன்படுத்தி பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை புறந்தள்ளுவதில் கடந்த 76 ஆண்டுகால பெரும்பான்மை ஆட்சிகளுக்கும் இன்றைய ஜே.வி.பி/என்.பி.பி. ஆட்சிக்கும் இடையே பாரிய வேறுபாடுகளை அவதானிக்க முடியவில்லை.  குறிப்பாக  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில்  இது தொடர்கிறது. ஜே.வி.பி. எதிர்கட்சியில் இருந்தபோது இந்த ஜனநாயக சமத்துவத்தை வேண்டி கர்ச்சித்தது. இன்று எதிர்க்கட்சிகள் அதே சமவாய்ப்பை கோரி பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.யுடன்  போராட வேண்டிய நிலையில் உள்ளன.

ஜே.வி.பி.யின் கடந்த ஒன்றே முக்கால் ஆண்டு ஆட்சிக்காலத்தில் பல உதாரணங்களை இதற்கு பட்டியலிடமுடியும். எனினும் அண்மையில் இடம்பெற்ற ஒரு விடயத்தை உதாரணமாக கொள்ளலாம். உயர்நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை தற்காலிகமாக சில வருடங்களுக்கு நீடிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு சார்ந்தது அது. சட்டம்,நீதி, நிர்வாகத்திற்கு இடையிலான அதிகாரப்பிரிவினையை பாராளுமன்ற ஜனநாயகம் வலியுறுத்துகிறது. இதனை  சட்டத்துறை சார்ந்த பல்வேறு சிவில் அமைப்புக்களும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் இவை எவற்றையும்  இந்த அரசாங்கமும்  கடந்த கால அரசாங்கங்கள் போன்று  கண்டுகொள்ளவில்லை.

எதிர்கட்சிகள்  நீதிபதிகளின் வயது எல்லை நீடிப்பு விடயமாக விவாதிக்க அனுமதி கேட்டபோது அது மறுக்கப்பட்டதால் “பாராளுமன்றத்தில் அமளிதுமளி” என்ற செய்திகளை கேட்கவும், பார்க்கவும், படிக்கவும் முடிந்தது. இந்த முடிவுக்கு எதிராக எதிர்கட்சியினர் பாராமன்றத்தில் சபா மண்டபத்தில் சபாநாயகருக்கு முன் தோன்றி ஆர்ப்பரித்ததால், இறுதியாக அது “செங்கோலை” திருட முற்பட்ட கதையாக மாறியது. ஒரு ஜனநாயகத்தில் குறிப்பிட்ட இரு தரப்பும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்கவேண்டும் என்பதல்ல.  ஆனால் இரு வேறுபட்ட நிலைப்பாடுகளையும், அதற்கான காரணங்களையும் அறிய வேண்டிய வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது.  ஒருபக்க கருத்துக்களுக்கான கதவை திறந்தும், மறுபக்க கருத்துக்களுக்கான கதவை மூடியும் விடுவதும், ஜனநாயகமாகாது.

எதிர்க்கட்சிகளின்  இந்த  கோரிக்கை ஜே.வி.பி. அரசாங்கம் பேசுகின்ற ஜனநாயக மீட்சிக்கும், அதிகார துஷ்பிரயோகமற்ற ஆட்சிக்கும், முறைமை மாற்றம், புதிய அரசியல் கலாச்சாரம், புதிய ஜனநாயகம் என்பனவற்றிற்கு மாறுபட்டதல்லவே. அல்லது புதிய அரசியல் கலாச்சாரம், புதிய ஜனநாயகம் என்பனவற்றை ஜே.வி.பி. வேறு வகையில் விளங்கிக்கொண்டிருக்கிறதா..?  குறிப்பிட்ட விவாதத்திற்கு இடமளித்து வாக்கெடுப்பு நடாத்தப்பட்டாலும் கூட  156/ 2/3  பெரும்பான்மையை அரசாங்கம் தானே கொண்டுள்ளது. அப்படியானால் இந்த ஜனநாயக, கருத்து சுதந்திர மறுப்பை, மக்கள் இருபக்க வாதங்களையும் சீர்தூக்கி பார்க்க வேண்டிய வாய்ப்பை அரசாங்கம் ஏன் மறுக்கிறது?  வாக்கெடுப்பில் தோல்வியடைவோம் என்று தெரிந்தும் எதிர்க்கட்சியினர் ஏன் விவாதத்தை/வாக்கெடுப்பை கோருகின்றனர்?. ஏனெனில் அது பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கடமையும், பொறுப்புமாகும்.

பாராளுமன்றத்திற்கு வெளியே அரசாங்கத்திற்கு எதிரான பிரதிபலிப்புகள் எதிரொலிக்கும்  போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தோன்றுவது தற்போது அடிக்கடி நிகழ்கிறது. அரசாங்கம் தனது இலஞ்சம்,ஊழல், போதைப்பொருள், ஈஸ்டர் படுகொலை….. விசாரணைகளுக்குள் மறைந்து கொண்டு, மக்களின் கவனம் வேறுபக்கம் திருப்பப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனக்கு சாதகமான, கட்சி அரசியல் தலையீட்டை செய்வது வழக்கமாகி வருகிறது. அரசியல் அமைப்பு சபைக்கு  உறுப்பினர்களை, அல்லது கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் ஜே.வி.பி/ என்.பி.பி. அரசாங்கம் எவ்வாறெல்லாம் நடந்து கொண்டது என்பதும்,  பொருத்தமான ஒருவரை நியமிப்பதில் எத்தனை தடவைகள் பாராளுமன்றத்தினதும், அரசியல் அமைப்பு சபையினதும் கோரிக்கைகளை புறக்கணித்தது என்பதும்  ஒன்றும் இரகசியமல்ல.

அதே பாணியிலேயே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அரசியல் அமைப்பில் தற்காலிக திருத்தம் ஒன்றை செய்து நீடிப்பதற்கு அரசாங்கம் ஒற்றைக்காலில் நிற்கிறது. அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டினார். அவரின் கருத்துப்படி இது ஒரு அவசியமற்ற காலதாமதப்படுத்தல். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் எதிர்க்கட்சிகள் மட்டும் இதை எதிர்க்கவில்லை, நீதித்துறை சார்ந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்(BASL) ,  ஆசிய மற்றும் பசுபிக் சட்டசங்கம் ( LAWASIA), மற்றும் சட்டத்துறையில் ஆர்வம் உள்ள சிவில்சமூக அமைப்புக்களும் இதை விரும்பவில்லை. நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு அல்ல பிரச்சினை தகுதியானதும், திறமையானதும், சேவை மூப்பும் உள்ள நீதிபதிகள் பதவி உயர்வுக்கு தட்டுப்பாடில்லாமல் இருக்கும் போது  இருப்பவர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டியதன் அரசியல் பின்னணி குறித்து சந்தேகங்கள் உண்டு.

“இந்த நேரத்தில் இந்த நீதிமன்றங்களின் பதவியில் இருக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது, நீதித்துறையில் தலையிடுவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாக பொதுமக்களால் பார்க்கப்பட வாய்ப்புள்ளது என்ற, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வாதத்தை “லோஏசியா ” அங்கீகரிக்கிறது. நீதிபதிகளின் ஓய்வு வயது அரசியலமைப்பின் 107 (5) வது பிரிவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அவசியமற்ற மேலும் தற்காலிக அரசியல் அமைப்பு திருத்தம் குறித்ததாக  துறைசார்ந்த நிபுணத்துவ அமைப்புக்களின் கேள்வி அமைகிறது. இதில் இன்னொரு விடயம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக கூறும் அரசாங்கம்,ஏன்? ஒரு தற்காலிக திருத்தத்திற்கு அவசரப்படுகிறது.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் அரசியல் அமைப்பு அடிப்படையானது. சட்டவாட்சியின் முதுகெலும்பு. இந்த நிலையில் அதனை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாற்றுவதும், அதுவும் தற்காலிகமாக மாற்றுவது என்பது ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாகும்.   இவ்வாறான மாற்றங்களை ராஜபக்சாக்கள்  செய்த போது   அதை ஜனநாயக படுகொலை என ஜே.வி.பி.யின் தலைமையான இன்றைய ஜனாதிபதி  கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.  தற்போது ராஜபக்சாக்களின்  தவறான வழியை இது விடயத்தில் அரசாங்கம் பின்பற்றுகிறது.

அரசாங்கம் தனது தேவைகளுக்காக தெரிவு செய்து பல விடயங்களை செய்துவருகிறது  என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்த அடிப்படையிலேயே ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயத்திற்கு பின்னணியாக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது, பயங்கரவால தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற அறிவிப்புகள் உள்ளன.  இது வரை அரசாங்கம் கூறிவந்த தேசிய பாதுகாப்பு, புலிகளின் மீளுருவாக்கம், ஈஸ்டர் படுகொலை விசாரணைகளுக்கு உதவுதல்/ சூத்திரதாரிகள் தப்பிவிடுவார்கள் என்ற காரணங்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு பொருளாதார காரணங்களுக்காக, ஐரோப்பிய ஒன்றியத்தை திருப்திப்படுத்த  இந்த மணிச்சத்தங்கள் கேட்கின்றன. பின்னால் வருகிறது ஜீ.பி.எஸ். +. வரிச்சலுகை தேடும் ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம்.

அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடுப்புச்சட்டங்கள் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு காலம் கடந்த ஒன்று என்றாலும் வரவேற்கத்தக்கது. ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட மக்களும், எதிர்க்கட்சிகளும், அமைப்புக்களும் எண்ணற்ற போராட்டங்களை செய்தும் அசையாத அரசாங்கத்தை ஜீ.பி.எஸ். பிளஸ் அசைத்து இருக்கிறது.  

இதைத்தான் தனக்கு… தனக்கு என்றால் படக்கு …படக்கு என்னும் என்பதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *