— வீரகத்தி தனபாலசிங்கம் —
சுதந்திர இலங்கை மூன்று அரசியலமைப்புக்களை கண்டிருக்கிறது. சோல்பரி அரசியலமைப்பு (1948 — 1972), முதலாவது குடியரசு அரசியலமைப்பு ( 1972 — 1978) மற்றும் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு (1978 …..) ஆகியவையே அவையாகும்.
அவற்றில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கொண்டு வந்த இரண்டாவது குடியரசு அரசியலமைப்பே மிகவும் நீண்டகாலமாக (48 வருடங்கள்) நடைமுறையில் இருந்து வருகிறது. அது அரை நூற்றாண்டைக் கடந்து விடுவதற்கு முன்னதாக (இன்னமும் இரு வருடங்களுக்குள்) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரக்கூடியதாக இருக்குமா?
தேசிய மக்கள் சக்தி இரு வருடங்களுக்கு முன்னர் தேசிய தேர்தல்களில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன — பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் (2015 — 2019) அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுப்பதாக அநுர குமார திசநாயக்க ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தார்.
ஆனால், அவர் பதவிக்கு வந்து இரு வருடங்கள் நிறைவடைவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் இருக்கின்ற நிலையில், அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பாராளுமன்றப் பலம் இருக்கின்ற போதிலும், புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை முன்னெடுக்கப்படுவதற்கான அறிகுறிகளைக் காணக்கூடியதாக இல்லை.
பிரமாண்டமான பாராளுமன்றப் பெரும்பான்மையை தந்த மக்கள் தங்களிடம் பாரிய எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்கள் அறிவார்கள். ஆனால், தேர்தல்களின்போது வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள்.
புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை மூன்று வருடங்களுக்கு பின்னர் தொடங்கும் என்று பதவிக்கு வந்த ஆரம்பக் கட்டத்தில் அரசாங்கம் அறிவித்தது. அரசாங்கங்கள் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான செயன்முறையை அவற்றின் பதவிக் காலத்தின் முற்பகுதியில் முன்னெடுப்பதே வழமை என்பதால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அந்த அறிவிப்பு இயல்பாகவே சந்தேகங்களைக் கிளப்பியது.
அரசாங்கத் தலைவர்களில் பெரும்பாலும் பிரதமர் ஹரிணி அமரசூரியவே புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்கள் குறித்து அவ்வப்போது பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கருத்துக்களைக் கூறி வந்திருக்கிறார். கடந்த வாரமும் கூட அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமையைக் கொடுக்கவில்லை என்பதை ஒத்துக் கொண்டதுடன் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
“அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைக்கு தற்போதைய காலப்பகுதியில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதை மறைக்காமல் ஒத்துக்கொள்கிறோம். இந்த விவகாரம் தொடர்பில் ஆரம்பக் கட்டக் கலந்தாலோசனைகளும் பூர்வாங்க நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. நாடு தற்போது முகங்கொடுக்கும் சவால்மிகு சூழ்நிலையில் பொருளாதாரம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கே அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.
தங்களது அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இன்னமும் எஞ்சியிருக்கும் மூன்று வருடங்கள் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு போதுமானது என்று கூறிய பிரதமர் தாங்கள் முன்னெடுக்கும் மக்கள் நலச்சேவைகள் காரணமாக, தற்போதைய ஆட்சிக் காலத்துக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்திக்கு பலம்பொருந்திய ஆணையை மக்கள். மீண்டும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு இன்னொரு பதவிக் காலத்துக்கு ஆணையைத் தருமாறு அவர்கள் கேட்காமல் இருப்பார்கள் என்று நம்புவோமாக.
பிரதமர் நேர்காணலில் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் பிரகாரம் நோக்கும்போது பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணத்தினால்தான் அரசியலமைப்பை மாற்றும் விடயத்தில் அரசாங்கத்தினால் கவனத்தைச் செலுத்த முடியாமல் இருக்கிறது என்றால், அதற்கான செயன்முறைகளில் கவனத்தைக் குவிக்கக்கூடியதாக உகந்த சூழ்நிலை எப்போது உருவாகும் என்ற கேள்வி எழுகிறது. முழுமையான பொருளாதார மறுசீரமைப்பும் வறுமை ஒழிப்பும் குறிப்பிட்ட ஒரு நேர அட்டவணைக்குள் சாதிக்கக்கூடிய செயற்பாடுகள் அல்லவே.
எது எவ்வாறிருந்தாலும், புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையைப் பொறுத்தவரை, மற்றைய சகல விவகாரங்களுக்கும் அப்பால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பும் தேசிய இனப்பிரச்சினைக்கு பொருத்தமான அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டின் அடிப்படையில் காணப்பட வேண்டிய அரசியல் தீர்வுமே முதன்மைக்குரிய விவகாரங்களாகும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. அதை ஒழிக்கப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கிக்கொண்டு அதிகாரத்துக்கு வந்த எந்த ஜனாதிபதியுமோ அல்லது அரசாங்கமுமோ அதைக் காப்பாற்றவில்லை. தற்போதைய ஜனாதிபதி திசநாயக்கவும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத ஜனாதிபதிகளின் பட்டியலில் இணைந்து கொள்வாரா இல்லையா என்பதை அறிய நீண்டகாலம் அல்ல, ஓரிரு வருடங்கள்தான் காத்திருக்க வேண்டும்.
அதிகாரப்பகிர்வு விடயத்தைப் பொறுத்தவரை, புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை தற்போதைய மாகாணசபைகள் முறைமை விட்டு வைக்கப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கிறது. ஜனாதிபதி திசநாயக்க மற்றும் அமைச்சர்களை விடவும் இதை உறுதியாக அடிக்கடி தெரிவித்து வந்திருப்பவர் அரசியல் ரீதியில் பலம் பொருந்தியவர் என்று கருதப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவின்(ஜே.வி.பி.) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவே.
புதிய அரசியலமைப்பு வரும்வரை மாகாணசபைகள் தொடர்ந்து இருக்கும் என்றால், அதற்குப் பிறகு எத்தகைய அதிகாரப் பகிர்வு ஏற்பாடு கொண்டுவரப்படும் என்றோ அல்லது குறைந்த பட்சம் தற்போது மாகாண சபைகளிடம் விட்டு வைக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களாவது புதிய ஏற்பாட்டில் உள்வாங்கப்படும் என்றோ எதையும் அவர்கள் கூறவில்லை. புதிய அதிகாரப் பகிர்வுக்கான அலகு எத்தகையதாக இருக்கும் என்றும் தெரியவில்லை.
2025 உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வாக்கு வீழ்ச்சி மாத்திரம்தான் அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை தற்போதைக்கு நடத்த விரும்பாமல் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாயங்களைக் கையாளுவதற்கு காரணம் என்று கூறமுடியாது. கோட்பாட்டு அடிப்படையில் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்களாக இருந்துவரும் ஜே.வி.பி.யின் தலைவர்கள் மாகாணசபைகளை சாத்தியமானளவுக்கு சீர்குலைத்து சிங்கள தேசியவாத அரசியல் உணர்வுகளைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கவும் கூடும்.
அதனால், மாகாண சபைகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில், தமிழ் அரசியல் சமுதாயம் கடைப்பிடிக்கக்கூடிய அரசியல் தந்திரோபாயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அரசியல் தீர்வு யோசனைகளை தமிழ்க் கட்சிகள் ஒருமித்து முன்வைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக எப்போதும் இருந்து வருகின்ற போதிலும், துரதிர்ஷ்டவசமாக அதற்கான வாய்ப்புக்கள் என்றைக்காவது தோன்றும் என்று நம்பிக்கை வைக்க முடியவில்லை.
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் பரப்பில் தற்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியலமைப்பு யோசனைகளை வரைவதற்கான இரு தனித்தனியான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒன்று, சகல தமிழ்க் கட்சிகளையும் ஒருங்கிணைத்து வரைவைத் தயாரிப்பதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கடந்த பெப்ரவரியில் இருந்து முன்னெடுத்துவரும் முயற்சி; மற்றையது ஈழத்தமிழர் அரசியல் நிர்ணய சபையின் முயற்சி.
தமிழ் கட்சிகளுடன் இதுவரையில் மூன்று கூட்டங்களை நடத்திய தமிழ் சட்டத்தரணிகள் பேரவை இறுதிக் கூட்டத்தில் அரசியலமைப்பு யோசனைகளை வரைவதற்கென்று ஒரு குழுவையும் நியமித்தது. இதற்குப் புறம்பாக, எந்தவொரு தமிழ்க் கட்சியும் தனியாக அல்லது கூட்டாக வேறு எந்த வரைவுச் செயன்முறையிலும் ஈடுபடுவதில்லை என்று முதற்கூட்டத்தின் இறுதியில் வெளியிப்பட்ட கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட சில கட்சிகளும் குழுக்களும் தற்போது ஈழத்தமிழர் அரசியல் நிர்ணயசபையின் செயற்பாடுகளுடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணம் நல்லூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய அரசியல் நிர்ணயசபையின் பொதுக்குழு அரசியலமைப்பு வரைவைத் தயாரிப்பதற்கென்று 33 பேரைக்கொண்ட ‘வழிநடத்தல் குழுவொன்றை’ நியமித்தது.
ஈழத்தமிழர் அரசியல் நிர்ணய சபையின் செயற்பாடுகளில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை எழுதுவது என்றும் நல்லூர்க் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அரசியலமைப்பு வரைவுகளை உருவாக்குவது தொடர்பில் நிலவும் இந்த முரண்பாடு சமகால நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு இசைவான முறையில் ஒன்றுபட்டுச் செயற்படுவதில் தமிழ்க் கட்சிகளுக்கு இருக்கும் இயலாமையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. இந்த முரண்பாட்டின் பின்னணியில் உள்ள அரசியல் சக்திகளை அடையாளம் காண்பதற்கு கதிரியக்கப்படம் எதையும் எடுக்க வேண்டிய தேவையில்லை.
ஒரு புறத்தில், இலங்கை தமிழரசு கட்சி / ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அணிக்கும் மறுபுறத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி / தமிழ் மக்கள் பேரவை அணிக்கும் இடையில் உள்ள அரசியல் போட்டித்தன்மையே அரசியலமைப்பு யோசனைகளை வரைவதற்கான இரு வெவ்வேறு முயற்சிகளின் பின்னணியில் உள்ள இயக்கவியலாகும். இந்த இரு அணிகளுமே இனப்பிரச்சினைக்கான நிலைபேறான இறுதித் தீர்வு மீளப்பெறமுடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய கூட்டாட்சி (சமஷ்டி) கட்டமைப்பே என்ற நிலைப்பாட்டைக் கொண்டவையாகும்.
மாகாணசபைகள் முறையையும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தையும் எவ்வாறு கையாளுவது என்பதில் இரு அணிக்கும் இடையில் கடுமையான முரண்பாடு இருக்கிறது. ஒரு அணி இறுதித் தீர்வை நோக்கிய பயணத்தில் மாகாண சபைகள் முறையை ஒரு படியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வைக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்ற அதேவேளை, மற்றைய அணி மாகாண சபைகளை ஒரு ஆரம்பப் புள்ளியாகவேனும் கருத முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
ஒரு அணி திம்பு பிரகடனத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றில் ஊன்றிய கட்டமைப்பை முன்வைக்கின்ற நிலையில், மற்றைய அணி இந்த கட்டமைப்பை கோட்பாட்டு ரீதியாக ஆதரிக்கின்ற அதேவேளை நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையாக, பெரும்பான்மை இனத்தவர்களின் அச்சத்தைத் தூண்டாத வகையில் சொற்பதங்களில் விட்டுக்கொடுப்பைச் செய்து சுயாட்சிப் பண்புகளைக் கொண்ட ஏற்பாடொன்றை அடைவதில் அக்கறை கொண்டிருக்கிறது.
ஒற்றையாட்சியை இரு அணிகளுமே நிராகரிக்கின்ற அதேவேளை, இலங்கையில் எந்தவொரு அரசாங்கமும் ஒற்றையாட்சியை இல்லாமல் செய்யப் போவதில்லை என்ற யதார்த்தத்துக்கு முகங்கொடுக்க வேண்டியவையாகவும் இருக்கின்றன.
இரு அணிகளும் முன்னெடுக்கின்ற முயற்சிகள் போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலப்பகுதியில் சிதைவடைந்திருக்கும் தமிழ் அரசியல் சமுதாயத்தின் இடர்மிகு நிலையைப் பிரதிபலிக்கின்றன. உள்ளக மற்றும் வெளிப்புற சுயநிர்ணய உரிமை அல்லது ஒற்றையாட்சி மற்றும் கூட்டாட்சி போன்ற சொற்பதங்களின் நுணுக்கமான சட்ட வேறுபாடுகள் குறித்து தமிழ் அரசியல் சமுதாயம் விவாதித்து தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பெரும்பான்மை இனத்தவரின் பொதுவான எண்ணம் 13 வது திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்த எதிர்ப்புக் காட்டுவதாகவே இருந்து வருகிறது.
இரு தமிழ் அரசியல் அணிகளுக்கும் இடையே ஒரு குறைந்தபட்ச கூட்டு இணக்கப்பாடு இல்லாதபட்சத்தில் தனித்தனியான அரசியலமைப்பு யோசனை வரைவுகளை அரசாங்கம் தமிழர்கள் மத்தியில் மேலும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருங்கிணைப்பற்றதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமான கோரிக்கையைாகக் காட்டுவதற்கும் வழிவகுத்துவிடும்.
இன்னமும் காலம். கடந்துவிடவில்லை. இரு அணிகளுமே ஒன்றிணைந்த வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்கு முயற்சிக்க முடியும். இல்லாவிட்டால், தங்களது திருப்திக்கு அவர்கள் தனித்தனியான வரைவுகளைத் தயாரித்து தங்களுடனேயே வைத்திருக்க வேண்டியிருக்கும்.
