உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதிலேயே தேசிய மக்கள் சக்தி அரசின் எதிர்காலம் தங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதிலேயே தேசிய மக்கள் சக்தி அரசின் எதிர்காலம் தங்கியுள்ளது.

— சின்னத்தம்பி குருபரன் —

      தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதற்கு முன்பாக 2022, 2023, 2024 ஆண்டுகளில் நாடாளுமன்றத்திலும் பொது வெளிகளிலும் “ஊழல், அதிகார துஸ்பிரயோகம் செய்தவர்களின் பல நூற்றுக் கணக்கான கோவைகள் தம்மிடம் இருப்பதாகவும், தாம் ஆட்சிக்கு வந்தால் அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்திக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுப்போம், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் அனைத்தையும் நாட்டுக்குள் கொண்டு வருவோம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகள், ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்குக் காரணமானவர்களை இனங்கண்டு அவர்களுக்கும் தண்டனை பெற்றுக் கொடுப்போம்” எனக்  காட்டமாக முழங்கினர். இதையே சனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், உள்ளூராட்சி மன்றங்களுக்களுக்கான தேர்தல் பரப்புரைகளிலும் முன்வைத்து வந்தனர். ஆட்சி அமைத்துப் 18 மாதங்களைக் கடந்தி இருக்கின்றனர். அவர்கள் கூறியவற்றில் ஒரு சிலரைத் தவிர வேறு எவருக்கும்  சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுக்கப்படவில்லை என நாட்டு மக்களில் பலர் பேச ஆரம்பித்துவிட்டனர். இதில் பல மீன் குஞ்சுகள் அகப்பட பெரு முதலைகள் சவால் விட்டுக் கொண்டு சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர். 

      உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் (லசந்த விக்கிரமதுங்க, பிரதீப் எக்னெலிக்கொட, தராக்கி சிவராம்), கிழக்குப் பல்கலைக்கழக மேனாள் உபவேந்தர் ரவிந்திரநாத், ரகர் வீரர் வஸீம் தாசுதீன் ஆகியோரின் விசாரணைகள் அனுமாரின் வாலைப்போல் நீண்டு கொண்டு செல்கின்றன. எதிர்க் கட்சிகளும் பொம்மலாட்டம் ஆடிச் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் அரசியல் கோமாளிகளான மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஆகியோர் தொடர்புடைய சூத்திரதாரிகளைப் பாதுகாக்கவும் விசாரணைகளைத் திசை திருப்பவும் முன்னரங்கத்தில் நின்று ஆட ஆரம்பித்து விட்டனர்.  

உயிர்த்த ஞாயிறு (Easter Sunday- 2019 ஏப்ரல் 21) தாக்குதல் நடந்து ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. இலங்கையில் நடந்த தொடர் தற்கொலைத் தாக்குதல்களைக் கொண்ட, மிகக் கொடூரமான, நாட்டையே உலுக்கிவிட்ட, அதிர்ச்சியளித்த தாக்குதலாக இது கொள்ளப்படுகிறது.

கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகை ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த காலை வேளையில், புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை (கொழும்பு) புனித செபஸ்தியான் தேவாலயம், கட்டான (நீர்கொழும்பு) சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு ஆகிய மூன்று  முக்கிய தேவாலயங்களிலும் கொழும்பிலுள்ள சாங்கிரி-லா (Shangri-La), சினமன் கிராண்ட் (Cinnamon Grand), கிங்ஸ்பரி (The Kingsbury) ஆகிய மூன்று சொகுசு ஹோட்டல்கள், தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு அருகிலுள்ள   ட்ரொப்பிகல் இன்* (Tropical Inn) விடுதி அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் வேளையில் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகம் (பொலிஸார் சோதனையிடச் சென்றபோது) போன்ற இடங்களில் தற்கொலைத் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்தும் மாலை வேளையில் இரு இடங்களில் குண்டுகள் வெடித்தன. சில தினங்களின் பின்னர் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் பொலிசாரின் சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற மோதலிலும் தற்கொலைக் குன்டு வெடிப்பிலும் 12 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 

உயிர்த்த ஞாயிறு அன்றைய தினம் நடந்த தற்கொலைக் குண்டுத் தொடர் தாக்குதலில் 269பேர் உயிரிழந்தனர். இதில் 45க்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், 40 க்கும் மேற்பட்ட குழந்தைகளும், 3 காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். நீர்கொழும்பு தேவாலயத்திலேயே மிக அதிகமான இழப்புகள் ஏற்பட்டன. சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கடுமையான மற்றும் சாதாரண காயங்களுக்கு உள்ளாகினர். 50 க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு நிரந்தர மாற்றுத் திறனாளிகளாக (Permanently Disabled) மாறினர். அத்தோடு நாட்டுக்குப் பல பில்லியன் ரூபா பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டன.

      தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடந்து 2024 இறுதிவரை நடாத்தப்பட்ட காவல் துறையினர் மற்றும் புலனாய்வுத் துறையினரின் விசாரணைகள், சனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள், விசேட ஆணைக்குழு விசாரணைகள் யாவும் காட்டாப்புக் காட்டலுக்காகச் செய்யப்பட்டு அறிக்கைகள் வெளிவராமல் பல முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டும் உண்டு. இப்போது நடைபெறும் பெரும்பாலான விசாரணைகள் புதிதாகவே நடந்து கொண்டிருக்கின்றன. அதனால், தடயங்கள், ஆதாரங்களைக் கண்டு பிடிப்பதில் புலனாய்வுப் பிரிவினருக்குப் பலத்த சவாலாக அமைந்திருக்கின்றன. இவை அப்பட்டமாக சட்டத்துறை, நீதித்துறையின் பலவீனத்தை எடுத்துக் காட்டுவதாக ஆர்வமுடைய நாட்டு மக்கள் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். 

      முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) அவரின் முன்னாள் பிரத்தியேகச் செயலாளர் அஷாத் மௌலானாவுடனான சனல் 4 (Channel 4, 2023) தொலைக்காட்சி நேர்காணலில் “நல்லாட்சி அரசினை (2015-2019) வீழ்த்துவதற்கான சதித் திட்டமே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்” என கூறியிருந்தார். ‘பிள்ளையான் மட்டக்களப்புச் சிறைச்சாலையில் கைதியாக இருந்தபோது அப்போதைய பாதுகாப்புப் பிரதானி ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கீழிருந்து செயற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் இரு தடவை சந்தித்ததாகவும், தானும் பிள்ளையானின் சகாக்கள் இருவரும் ஹபரணைக்குச் சென்று புலனாய்வு அலுவலகமொன்றில் சுரேஷ் சலேயைச் சந்தித்ததாகவும்’ கூறியிருந்தார். இதன் உண்மைத் தன்மையைப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் சான்றுகளுடன் வெளிப்படுத்தினாலே அத்தாக்குதலுக்குக் காரணமான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு விடுவார்கள். இங்குதான் இடியப்பச் சிக்கல்கள் நிறைந்திருக்கின்றன. சாண் ஏற முழம் சறுக்குவது போலான நிகழ்வுகளும் சவால்களும் எதிர்க் கட்சி அரசியல் கோமாளிகள், பௌத்த கடும்போக்குவாத பிக்குகள் சிலரின் அரங்கேற்றங்களும் விசாரணையைத் திசை திருப்ப எத்தனித்துக் கொண்டிருக்கின்றன. 

      கடந்த  பெப்ரவரியில் (2026)கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் சுரேஷ் சலேக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்னால் கூடாரம் அமைத்து அரசியல் கோமளிகள் தங்கள் அரசியல் இருப்பைத் தகவைத்துக் கொள்வதற்காகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு, பொது மக்களின் எதிர்ப்பினால் இடைநடுவில் விட்டுச் சென்றனர். 

சுரேஷ் சலே குற்றமற்றவர் என்றால் உண்மையைக்கூறி விடுதலை பெற்றிருக்கலாம். அதைவிடுத்து மடிக்கணினி (Laptop), திறன்பேசி (Smart Phone) கடவுச் சொற்களை (Pass Word) ஏன் புலனாய்வுப் பிரிவினருக்குக் கொடுக்க மறுக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்ப அமைச்சர் ‘சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை’ எனக் கூறுகின்றார். உயர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சின்னா பின்னமாகித் துண்டு துண்டாகப் பொறுக்கி எடுத்த (உயிர் நீத்த) சடலங்கள் யாவும் இந்நாட்டு மக்களுடையதல்லவா? அதேபோல் உல்லாசப் பயணிகள் மூலமான வருமானம் பாதிக்கப்பட்டமை, நீண்டநாள் ஊரங்குச் சட்டம், நீண்டதூரப் பயணங்களின்போது சோதனைச் சாவடிகளில் மக்கள் பட்ட அவலங்கள், இஸ்லாமிய சகோதரர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், பொது முடக்கத்தினால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டமை, பொருளாதாரத்தில் ஏற்பட்ட பல பில்லியன் கணக்கான இழப்புக்கள், காயப்பட்டவர்கள், அங்கவீனமானவர்கள், தாய், தந்தையர், பிள்ளைகள், உறவினர்களை இழந்தவர்களுக்கு இந்த அரசியல் கோமாளிகளும், பொதுசனப் பேரமுனவைச் சேர்ந்தவர்களும் என்ன பொறுப்புக் கூறப் போகின்றனர். இங்கு பொறுப்பக் கூறல் என்பது அத்தாக்குதலுக்குக் காரணமான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுப்பதிலேயே தங்கயுள்ளது. இது தேசிய மக்கள் சக்தி அரசின் தார்மீகக் கடமையுமாகும். 

      பத்தோடு பாதினொன்றாக இதுவும் ஒன்று எனக் கடந்து போகாமல் சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளுக்கு ‘வயிற்றில் புளியைக் கரைப்பது போல்’ அவர்கள் விசாரணைகளில் விலத்திச் செல்லாதவாறு அவர்களுக்குப் பயத்தைக் காட்ட வேண்டும். ஏனெனில் நடந்திருக்கும் தாக்குதலானது மனித குலத்துக்கு எதிரான கர்ண கொடூரமானது. சட்டம் எவருக்கும் சமமானது, பொதுவானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் குற்றவாளிகள் எத்தரத்தில் இருந்தாலும் சட்டத்தின்முன நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். இதில் அரசுக்கு எதிராக எத்தகைய சவால்கள், எதிர்ப்புக்கள், அச்சுறுத்தல்கள் நேர்ந்தாலும் அதற்கு இடம் கொடுக்காது, ‘பனங்காட்டு நரி சலசலப்பு அஞ்சாது’ என்ற உறுதியோடு, அஞ்சாமல் செயற்பட வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கட்டி எழுப்புவதற்கான வழியாக அமையும்.

      பட்டலந்த சித்திரவதை முகாம், யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்பு, இறுதி யுத்த மீறல்கள், படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம். அரசியல் கைதிகள் விவகாரம், மனிதப் புதை குழிகள் விலகாரம், ஊடகவியலாளர்களின் படு கொலைகள், யுத்தகாலத்தல் அரச படைகளால் கையகப்படுத்தப்பட்ட தனியாரின் காணி விவகாரம் என்பன தொடர்பான விசாரணையும் பொறுப்புக் கூறலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தலும் நிவாரணம் வழங்கலும் ஆகிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது. அதனைப் பக்கச் சார்பின்றிச் நிறைவேற்றிக் காட்ட வேண்டும். 

      அரசியல் கோமாளிகளும் எதிர்க் கட்சியினர் சிலரும் ராஜபக்சாக்களும் கூறுவது போல் சுரேஷ் சலே இறுதி யுத்தத்தின் போது களமுனையில் பிரதானமாகப் பணியாற்றியவர் அல்லர், என்பதை அப்போதைய முப்படைகளில் பிரதானி சரத் பொன்சேகா இருமுறை ஊடகக் சந்திப்புக்களில் கூறியிருக்கின்றார். அவ்வாறெனில் இவர்கள் ஏன்? எதற்காக? சுரேஷ் சலேயைப் பாதுகாக்க முனைகின்றனர். இதற்குப் பின்னால் இருந்து இவர்களை வழி நடத்துபவர்கள் யார்? ராஜபக்சாக்களா என்பது நாட்டு மக்கள் பலருக்குத் தெரியும். இருந்தும் மௌனம் சாதிக்கின்றனர். ‘முழுப் பூசணிக் காயை சோற்றுள்’ எத்தனை நாளைக்கு மறைத்து வைக்க முடியும். என்றோ ஒருநாள் வெளி வந்தே தீரும். 

      தேசிய மக்கள் சக்தி அரசு தமக்கிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை ஓரளவு தீர்த்துக் கொள்வதற்கு ராஜபக்சாக்களின் ஆட்சிக் காலத்தில் ‘ஊரை அடித்து உலையில் போட்டது போல்’ மக்கள் பணத்தை மாசடி செய்து திருடிச் சூறையாடி, ஏப்பம் விட்டுப் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை வெளிக் கொணர்ந்தாலே போதும். அத்தோடு ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் செய்து ‘கண்ணாமூச்சி விளையாடிக்’ கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைக் கைது செய்து, குற்றத்தை நிருபித்து உரிய தண்டனை வாங்கிக் கொடுப்பதும் அரசினதும் நீதித் துறையினதும் கடமையாகும். இதற்காக மாவட்டங்கள் அல்லது மாகாணங்கள் தோறும் சிறப்பு நீதிமன்றங்களைத் தாபித்துக் குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனையை வாங்கிக் கொடுக்கலாம். இதன் மூலம் பக்கச் சாரபற்ற சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது என்பதை நிருபிப்பதொடு மக்கள் மனங்களில் நல்லபிராயத்தையும் ஏற்படுத்தலாம்.

      ஏது எப்படி இருந்த போதிலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதென்பது அரசுக்கு மிகப் பெரிய சவாலான காரியமாகும். ஏனெனில் இதில் உயர் அரசியல்வாதிகள், இன்னும் சில அரசியல்வாதிகள், முப்படையினர், காவல் துறையினர், உயர் அதிகாரிகள் பலரும் சம்பத்பட்டிருப்பதனை ஊகிக்க முடிகிறது. இதுவே புத்திசீவிகளின் அபிப்பிராயமுமாகும். அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கும்போது சிலவேளை சர்வதேச ரீதியாக நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்தலாம். அவ்வாறு அவப்பெயர் ஏற்பட்டால் அதனை ராஸபக்சாக்களும், அரசியல் கோமாளிகளும், எதிர்க் கட்சியினரும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசுக்கு ஆட்சியாளர்கள்மீது அவப்பெயரை ஏற்படுத்தி அரசை வீழ்த்த முயற்சிக்கலாம். 

அதேபோல், தாக்குதல் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கத் தவறினால், சுற்றவாளிகளைத் திட்டமிட்டுக் குற்றவாளிகளாக்கிப் பழிதீர்க்க முயற்சித்ததாகக் கூறி, அதனை மிகப் பெரிய பிரச்சாரமாகப் பயன்படுத்தி அரசுக்கு எதிரான கலவரங்களையும் போராட்டங்களையும் ஊர்வலங்கள், சத்தியாக் கிரகங்கள், எதிர்ப்புக்ளையும் தூண்டி விடலாம். அத்தனை கொடூரமான தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்களுக்கு இது பெரிய விடயமாக அமையாது. இது கூத்தாடிக்குக் கொண்டாட்டமாகவும் அமைந்துவிடும். ஆகையினால் அரசு அவசரப்பட்டு ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்றில்லாமல் மிகத் துல்லியமாக சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்துச் சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுப்பதே சிறந்த சாதுரியமாகும். 

பல நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கும் அரசின்மீது பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவரும் சந்தர்ப்பத்தில் இதுவும் எதிரான விளைவுகளை ஏற்படுத்திவிட்டால் அரசுக்குப் பாரிய சவாலாக அமைந்துவிடும். ஆகையினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயத்தில் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டுத் தண்டனை வாங்கிக் கொடுப்பது சிறந்ததாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *