(இலங்கையின் வடக்கில் பாதுகாப்பு வலயமாகவும் படைத்தளமாகவும் மாற்றப்பட்டிருக்கும் பலாலி விமான நிலையத்துக்கு நடந்து செல்லக் கூடிய (03 KM) தொலைவில் உள்ள ஊரான இடைக்காட்டில் பிறந்து வளர்ந்தவர் எஸ். கிருஸ்ணமூர்த்தி. ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்று அனுபவத்தைக் கொண்ட கிருஸ்ணமூர்த்தி, 1986 இல் நடந்த இயக்க வன்முறைகளின் காரணமாக ஈழத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தச் சூழலைச் சந்தித்த ஆயிரக்கணக்கானோரில் ஒருவராகினார். பல ஈழத்தமிழ் புலம்பெயரிகளைப்போலவே தாய்லாந்து, சுவிற்சர்லாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டவர். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வசிக்கிறார். இளமையிலிருந்தே வாசிப்பு, நடுப்பிராயத்திலிருந்து எழுத்து, இலக்கியச் செயற்பாடுகள் என்று பல தளங்களில் இயங்கி வரும் கிருஸ்ணமூர்த்தி, சிறுகதை, அரசியல் பத்தி, சினிமா விமர்சனம் என எழுதிவருகிறார். இதுவரையில் ‘மறுபக்கம்’, ‘நோபோல்’, ‘திரைக்கண்’ ஆகிய மூன்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ‘தைலம்’ என ஆஸ்திரேலியாவிருந்து தமிழில் எழுதுவோரின் தேர்ந்த கதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
இந்த நேர்காணலுக்கான எண்ணம், 2006 ஜூனில் கிருஸ்ணமூர்த்தியும் நானும் யாழ்ப்பாண நகரில் ‘அசோகா ஹோட்டலு’க்கு முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தபோது உருவானது. அந்தக் ஹோட்டலைக் கடக்கும்போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இயக்கத்தைப் பற்றிய பேச்சு இயல்பாக இருவருக்கும் இடையில் எழுந்தது. அதன் விளைவாக உருவாகி, கலை, இலக்கியம் என விரிந்ததே இந்த உரையாடல்.
திசைமாற்றப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட வரலாற்றின் கதைகளை இதன் வழியே பேசியிருக்கிறார் எஸ். கிருஸ்ணமூர்த்தி.)
— கருணாகரன் —
1. ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கானோரில் நீங்களும் ஒருவர். நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சூழல், ஈடுபடுவதற்கான காரணங்கள்?
எங்களுடைய ஊர் இடைக்காடு. யாழ்ப்பாணத்தில் வலிகாமம் கிழக்கில், பலாலி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஊர். முன்பு விமான நிலையத்துக்கு நடந்தே போய் விடலாம். ஒன்றரை மைல் தொலைவு. இப்பொழுது படையினரின் பிடியில் விமான நிலையம் இருப்பதால், அங்கே போய்ச்சேர்வதற்கு 10, 12 கிலோ மீற்றர் போக வேண்டும். தலையைச் சுற்றி மூக்கைத் தொட வைத்திருக்கிறார்கள்.
ஊரில் உள்ள வாசிகசாலைகளில் அப்போது நிறைய அரசியல், இலக்கியப் புத்தகங்கள் இருந்தன. பத்திரிகை, சஞ்சிகைகளும் அங்கே வரும். இலங்கைப் பத்திரிகைகள் மட்டுமல்லாமல், இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளும் அங்கே கிடைக்கும். ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’ மட்டுமல்லாமல், ‘தீபம்’, ‘கணையாழி’, இதயம் பேசுகிறது’, ‘சாவி’, ‘தாமரை’ ‘மல்லிகை‘ போன்றவையும் கிடைக்கும். அது ஆண்களும் பெண்களும் வாசிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம். ‘வீரகேசரி’ போன்ற தினசரிப் பத்திரிகைகளே இலக்கிய நூல்களை வெளியிட்டு வந்த காலம். தொலைக்காட்சி, கைபேசி போன்ற காட்சி ஊடகங்களின் செல்வாக்கு அன்றில்லை. இதனால் சிறுவயதிலிருந்தே வாசிப்புப் பழக்கமும் அரசியல் உணர்வும் வந்து விட்டது. ‘சுதந்திரன்’ பத்திரிகையின் தாக்கத்தினால், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. இதனால், எங்கள் பகுதியில் நடக்கும் அரசியற் கூட்டங்களுக்கு நண்பர்களுடன் செல்வேன். இதேவேளை புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்ததால், இடதுசாரிய அரசியற் சிந்தனையிலும் ஈடுபாடிருந்தது.
அப்போது தமிழர்களுக்கு எதிராக நாட்டில் நடந்து கொண்டிருந்த இனவாத நடவடிக்கைகளைப் பத்திரிகைகள் உணர்ச்சிகரமாக எழுதின. அதைப் படிக்கும்போது எமக்கும் ஒரு ஆக்ரோஷமான உணர்வு ஏற்பட்டது. அந்தச் சூழலில் ‘ஈழமாணவர் பொதுமன்றம்’ (GUES) என்ற அமைப்பின் சார்பாக ராஜன் என்பவர் தொடர்பு கொண்டு சில அரசியற் கருத்துகளைப் பகிர்ந்தார். (இந்த ராஜன் பின்னர் தமிழ்நாட்டில் நடந்த ஒரு வெடிவிபத்தில் சாவடைந்து விட்டார்). பிறகு தோழர் சுகு ஸ்ரீதரன், டேவிற்சன், ரமேஸ் (அற்புதன்) போன்றோர் அரசியல் வகுப்புகளை எடுத்தனர். அப்படியே ஈழமாணவர் பொதுமன்றத்தின் செயற்பாடுகளில் இணைந்து செயற்படத் தொடங்கினேன். சமவேளையில் ஏனைய இயக்கங்களின் கூட்டங்களுக்குச் சென்று வருவதும் உண்டு. அன்றைய சூழல் அப்படித்தானிருந்தது. ஆனாலும் ஈழமாணவர் பொதுமன்றத்தோடுதான் நெருக்கமான உறவு வளர்ந்தது. இது ஏற்கனவே எனக்கு புத்தக வாசிப்புகளுக்கூடாக ஏற்பட்டிருந்த இடதுசாரிய – சமூக மாற்றத்துக்கான – அரசியல் ஆர்வத்தின் காரணமாக இருக்கலாம்.
தொடக்கத்தில் எமக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன்தான் நாம் வேலைசெய்கிறோம் என்று தெரியாது. ஒரு கட்டத்தில்தான் ஈழமாணவர் பொதுமன்றமும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் ஓரியக்கத்தின் இணைந்த செயற்பாட்டுப் பிரிவுகள் என்று தெரியவந்தது.
என்னோடு எங்கள் ஊரில் வசந்தன், ஆனந்தன், அரவிந்தன், செல்றீன் போன்றவர்களும் ஒன்றாக இணைந்தியங்கினோம். அதேவேளை எங்களுக்குத் தெரியாமலே எங்கள் ஊரைச் சேர்ந்த வேறு சிலர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வில் முக்கியமான பொறுப்பில் இருந்தனர். அதை நாங்கள் பின்னரே தெரிந்து கொள்ள முடிந்தது.
1. தொடர்ந்தும் நீங்கள் ஈழமாணவர் பொதுமன்றத்துடன் செயற்பட்டீர்களா? அல்லது ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் ஏனைய செயற்பாட்டுத் தளங்களில் (அரசியல் – இராணுவம் போன்றவற்றில்) செயற்பட்டீர்களா?
ஈழமக்கள் விடுதலை முன்னணி (EPLF) உடன் இணைந்து செயற்பட்டோம். ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு அன்று ஈழமக்கள் விடுதலை முன்னணி (EPLF), மக்கள் விடுதலை இராணுவம் (PLA), ஈழமாணவர் பொதுமன்றம் (GUES), ஈழப் பெண்கள் முன்னணி (EWLF), ஈழ இளைஞர் முன்னணி (EYF) ஈழம் தொழிலாளர் முன்னணி (EWF) போன்ற பல பிரிவுகளைக் கொண்டிருந்தது. நாங்கள் செயற்பட்ட ஈழமக்கள் விடுதலை முன்னணி (EPLF) மக்களின் மத்தியில் அரசியல் வேலைகளை முன்னெடுத்தது. நான் அதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல பகுதிகளிலும் வேலை செய்தேன். அப்போது யாழ் மாவட்டத்தின் அரசியல் பொறுப்பில் இருந்த தோழர்கள் செழியன் (கவிஞர்), தாஸ், டேவிற்சன், அற்புதன் போன்றோருடன் நெருக்கமாகப் பழகக் கூடிய சூழல் உருவாகியது.
2. ஈ.பி.ஆர்.எல்.எவ்வில் அப்போது பல ஆளுமைமிக்க போராளித் தலைவர்கள் (தோழர்கள்) இருந்தனர். மக்களிடத்திலும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு வலுவான ஆதரவுத் தளமிருந்தது. ஆயிரக்கணக்கான போராளிகளும் இருந்தனர். ஆனாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எவ் மீது தாக்குதலை மேற்கொண்டு, ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளைக் கைது செய்யும் நிலை ஏன் வந்தது? அதை ஈ.பி.ஆர்.எல்.எவ்வினாலும் மக்களாலும் தடுத்து நிறுத்த முடியாமல் போனது ஏன்?
ஈ.பி.ஆர்.எல்.எவ்வில் அப்போது (1986 இல்) நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்காத வகையில் இரண்டு அணிகளாக முரண்பாடுகள் வலுத்திருந்தன. ‘நாபா அணி’, ‘தேவா அணி’ என்று உள்ளேயே பிளவு நிலை தோன்றி விட்டது. இதனால் மத்திய குழு, பிராந்தியக் குழுக்கள் பலவீனப்பட்ட நிலைக்குள்ளாகியிருந்தன. முரண்பாடுகளைப் பேசித்தீர்ப்பதற்காகத் தமிழ்நாட்டில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் செயலாளர் நாயகம் பத்மநாபாவையும் ஏனைய தலைவர்களையும் சந்திக்கச் சென்றிருந்தார், இராணுவப் பிரிவு (PLA) க்குப் பொறுப்பாக இருந்த தேவாத் தோழர் (டக்ளஸ் தேவானந்தா).
இதேவேளை யாழ் மாவட்ட அரசியல் பணிகளுக்குப் பொறுப்பாக இருந்த தோழர் செழியன், அமைப்பின் வேலைகளிலிருந்து ஒதுங்கிய நிலையில் இருந்தார். மக்கள் விடுதலைப்படையிலும் மக்கள் விடுதலை முன்னணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. செழியனுடைய பணிப் பொறுப்புகள் மத்தியகுழுவிலிருந்த தோழர் சேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல யாழ்ப்பாணத்துக்கான இராணுவப் பொறுப்பு தோழர் கபூரிடம் இருந்தது. ஏற்கனவே, தோழர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழகத்திலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் நின்றார். வெளி மாவட்டங்களில் நாபா தோழரின் செல்வாக்கு அதிகமாக இருந்தது உண்மைதான் என்றாலும் அதை ஒருங்கிணைப்பதில் குழப்பங்கள் நீடித்தன. இந்த இடத்தில் ஒரு விடயத்தைச் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். அப்போது “செந்தணல்” என்ற சஞ்சிகையின் பிரதிகள் தமிழ் நாட்டிலிருந்து ஈழத்துக்கு எடுத்து வரப்பட்டிருந்தன. அந்தப் பிரதிகளை இங்கே வெளியிடுவது பொருத்தமில்லை என்று யாழ்ப்பாணக் கமிட்டி முடிவெடுத்தது. ஆனால், இந்தத் தீர்மானத்தை யாழ்ப்பாணத்கு வெளியே இருந்த உறுப்பினர்கள் எதிர்த்துக் கேள்வி எழுப்பினார்கள். உங்களுடைய மாவட்டத்திற்கு ஒரு விடயம் பொருத்தமில்லை என நீங்கள் எடுக்கும் தீர்மானத்தை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும்? எங்களுடைய ஆலோசனையோ கருத்தோ கேட்காமல் நீங்கள் எப்படி இந்தத் தீர்மானத்தை எடுக்கலாம்? அந்தச் சஞ்சிகை எங்கள் மாவட்டத்துக்குப் பொருத்தமாக இருக்கலாம் அல்லவா?” என்று.
இது யாழ்ப்பாணமே எதையும் தீர்மானிக்கும் ஒரு நிலையை எடுக்க முனைந்தது என்பதற்கும் அதை மறுக்கும் நிலைக்கும் ஒரு உதாரணமாகும்.
இதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. தோழர் ரமேஸ் (அற்புதன்), டேவிற்சன் (ஈழமணி), கமல் ஆகிய மூவருடைய நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக இவர்கள் தமிழ்நாட்டுக்குத் தலைமையினால் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அதற்கு இவர்கள் மறுத்து விட்டனர். இந்த நிலையில் ரமேஸ் தோழர் கபூரினால் கைது செய்யப்பட்டு, வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தக் கைதுக்கு எதிராக அமைப்புக்குள் எதிர்ப்புக் கிளம்பியதால், சில நாட்களின் பின் ரமேஸ் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட ரமேஸ் சில நாட்கள் நான் இருந்த முகாமில்தான் தங்கியிருந்தார். அவருடன் வேறு சில தோழர்களும் வந்து பேசிவிட்டுச் செல்வார்கள்.
இப்படியான பல குழப்பங்களும் சோர்வு நிலையும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்குள் இருந்தது புலிகளுக்கு வாய்ப்பாகி விட்டது. நான் நினைக்கிறேன், இதையெல்லாம் புலிகள் உன்னிப்பாக அவதானித்தோ, புலனாய்வு செய்தோ இருக்கலாம். அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் மீது தாக்குதல் நடத்தும்போது அதை எதிர்த்துப் போரிடுவதற்கு எம்மிடம் போதிய ஆயுதங்கள் கூட இருக்கவில்லை. இதைப் பின்னாளில் ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்களே கவலையோடும் “இதுதான் எங்களுடைய நிலைமை” என்று பகடியாகவும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் அது ஒரு துன்பியல் நிகழ்வாகவே முடிந்தது.
அமைப்புக்குள் என்னதான் குழப்பங்கள், பிரச்சினைகள் இருந்தாலும் அதனை அந்த அமைப்புத்தான் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதை எந்தக் காரணம் கொண்டும் வேறு யாரும் கட்டுப்படுத்தவோ, தீர்த்துக் கட்டவோ முடியாது. புலிகளுக்குள்ளும் முரண்பாடுகளும் பிளவுகளும் இருந்ததுண்டு. அவர்கள் அதை ஆயுதரீதியாகக் கையாண்டனர். அங்கே கதை, பேச்சுக்கு இடமில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் வழிமுறை அப்படியானதல்ல. அது வேறுவிமானது. அது ஜனநாயக அடிப்படையில் முரண்பாடுகளைப் பேசித் தீர்ப்பதையே பெரிதும் விரும்பும் அமைப்பு. அதனால் அந்த வழியில் முயற்சித்தது. ஆனாலும் அதனால் இதுவரையிலும் முரண்பாடுகளைப் பேசித் தீர்க்க முடியவில்லை என்பது வரலாற்றுச் சோகமே. முரண்பாடுகள் பிளவுகளாகவே முற்றி வளர்ந்தன; வளர்ந்து விட்டன.
3. ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு ஏனைய அமைப்புகளை விட அடித்தட்டு மக்களின் ஆதரவு இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. அப்படியிருந்தும் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எவ் மீது தாக்குதல் நடத்தியபோது ஏன் மக்கள் அதைத் தடுக்கவோ, எதிர்க்கவோ இல்லை?
ஆயுதமேந்திய இயக்கங்களின் எழுச்சி மக்களின் சுயாதீனமான செயற்பாடுகளை மட்டுப்படுத்தியிருந்த காலம் அது.
ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான், புலிகள் ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்தி, அந்த இயக்கத்தை அழித்தனர். ரெலோவின் ஆயுதங்களையும் வாகனங்கள் போன்ற பிற வளங்களையும் கைப்பற்றியிருந்தனர். அது புலிகள் இயக்கத்தின் ஆயுத வளத்தை உடனடியாகப் பெருக்கியது. அந்தத் தாக்குதல் சம்பவம் மக்களைக் கிலியடையச் செய்திருந்தது. ஆனாலும் ஒன்றை நான் கவனித்தேன், ரெலோ இயக்கத்தை புலிகள் தாக்கி அழிக்க முற்பட்டவேளை, புலிகளுக்குச் சோடா உடைத்துக் கொடுத்த மக்களும் உண்டு. ஈ.பி.ஆர்.எல்.எவ் மீதான தாக்குதலின்போது அவ்வாறான சம்பவங்கள் நடக்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், கைது செய்து வைத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்களை புலிகளில் பலர் மரியாதையாக நடத்தியதும் நடந்திருக்கிறது. இது அவர்களுக்கு அப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் மீதான தனிப்பட்ட ரீதியான மதிப்பாகவும் இருந்திருக்கலாம்.
அதேவேளை பின்னாளில் இன்னொரு சம்பவத்தில் (புலிகளின் யாழ் மாவட்டத்தளபதி கிட்டுவின் மீதான தாக்குதலின் பின்) கந்தன் கருணையில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் தோழர்கள் 60 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் நாம் மறந்து விட முடியாது.
4. ஈ.பி.ஆர்.எல்.எவ்வில் செயற்பட்ட காலத்தில் மக்களுக்கும் உங்களுக்கும் இடையில் இருந்த உறவு எப்படியானது? அப்பொழுது அமைப்பின் செயற்பாடுகள் எப்படி இருந்தன? மக்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ எப்படிப் பார்த்தனர்? ஏனைய இயக்கங்களை எப்படி நோக்கினர்?
ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் வெகுசன அமைப்புகள் பல தளங்களில் வேலைசெய்தன. பல வெகுசனப்போராட்டங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புகளினால் அந்தக் காலத்தில் நடத்தப்பட்டமை இதற்கு ஆதாரம். சில சந்தர்ப்பங்களில் மக்களின் பிரச்சினைகளை மக்கள் விடுதலைப் படையினர் தீர்த்து வைத்ததும் உண்டு. இதில் தேவாத் தோழரின் பங்களிப்புகள் கூடுதலாக இருந்தன. அடிமட்டச் சமூகத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் ஒவ்வொரு அமைப்புகளும் இறங்கி வேலை செய்தன. ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ள பெண்கள் அமைப்பு, இளையோர் அமைப்பு, தொழிலாளர் அமைப்பு, கூலித்தொழிலாளர் அமைப்பு, மாணவர் அமைப்பு, விவசாயிகள் அமைப்பு போன்றவையெல்லாம் அந்தந்தச் சமூக நிலையில் அர்ப்பணிப்போடு செயற்பட்டதால், குறித்த மக்களிடத்தில் எமக்கு (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆதரவு ஏற்பட்டது. எமக்கும் இது நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உற்சாகத்தை அளித்தது. அந்த இளைமைப் பருவத்தில், இப்படி ஒரு மக்கள் பணியைச் செய்வது வீட்டை விட்டு வந்து பொது வாழ்வில் ஈடுபடுவதற்குப் பெறுமதிதான் என்பதை உணர்ந்தோம். இப்போதும் அந்த நிறைவுண்டு.
ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நெருக்கமாக உணர்ந்தனர். மக்களில் பல்வேறு தரப்பினர் உள்ளனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் சமத்துவத்தையும் சமூக நீதியையும் பேணியதால், அடிநிலை மக்களாகிய ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் நெருக்கமாக உணர்ந்தனர். சாதிய, சமூக, பால் நிலை ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறையையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மறுதலித்து, எதிர்த்துச் செயற்பட்டதால், அவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈ.பி.ஆர்.எல். எவ் விருப்பத்துக்குரிய அமைப்பாக இருந்தது. ஆனால், இது மேற்தட்டினருக்கும் மதவாதிகளுக்கும் சற்று வேறுபட்ட உணர்வைக் கொடுத்திருந்ததையும் உணர்ந்தோம். இதற்கெல்லாம் காரணம், ‘ஈ.பி.ஆர்.எல்.எவ், ஒரு இடதுசாரிய அரசியலை – கொம்யூனிஸ ஆட்சியைக் கொண்டு வரப்போகிறது’ என்ற தவறான எண்ணம் அவர்களிடம் இருந்ததே. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ மறைமுகமாக ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினரோடு இணைத்து (EP) எனச் சற்று இழக்காரமாகப் பேசியது உங்களுக்கு நினைவுக்கு வரலாம். குறிப்பாக யாழ் மையவாதத்துக்கு எதிரான – உடன்பாடற்ற ஒரு இயக்கமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டது. இதனால் ஏனைய இயக்கங்களிலிருந்து எம்மைச் சிலர் வேறுபடுத்திப் பார்த்தனர் என்பது முற்றிலும் உண்மை.
ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற அமைப்புகளை விட புலிகளுக்கு யாழ்ப்பாணப் பத்திரிகைகள் கொடுத்த முக்கியத்துவத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்போதும் இந்த மனநிலையே தமிழ் ஊடகப் பரப்பில் உண்டு. இது இடதுசாரிகளையும் முற்போக்காளர்களையும் ஓரங்கட்டிவிட்டு, இனவாதிகளையும் வலதுசாரிகளையும் தூக்கிப் பிடிக்கும் குணத்தின் வெளிப்பாடு. இந்தப்போக்கினால்தான் நாம் இனவிடுதலையையும் பெற முடியவில்லை. சமூக விடுதலையையும் காணவில்லை.
5. யாழ் மையவாதச் சிந்தனைக்கு மாறான ஓர் இயக்கமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இருந்தது எனச் சொல்கிறீர்கள். ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் யாழ்ப்பாண உயர்சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்களாகத்தானே இருந்தனர். அதைப்போல இயக்கத்தின் கட்டமைப்புச் சார்ந்த நடவடிக்கைகளிலும் யாழ்ப்பாண மேலாதிக்கப் பண்பே மேலோங்கியிருந்ததை உணர்ந்தாகச் சில ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். புலிகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பின்னின்றதிலும் இந்த பட்டும் படாமல் இயக்க வேலை, போராட்ட வேலை செய்கின்ற தன்மை பலரிடம் காணப்பட்டது எனவும் அவர்கள் கவலையோடு நினைவுகூர்ந்தனர். இதெல்லாம் அன்றிருந்த பல ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். இவற்றைக் குறித்து உங்களுடைய கருத்தென்ன?
யாழ் மையவாதச் சிந்தனைக்கு மாறாக ஈ.பி.ஆர்.எல்.எவ் செயற்பட்டது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அப்படித்தான் மக்களிற் பலரும் உணர்ந்தனர். கொள்கை ரீதியாக சமத்துவம், சமூக நீதியை வலியுறுத்தி, இடதுசாரியப் பண்புடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயற்பட்டது உண்மை. அமைப்பிலிருந்த ஒரு சிலருடைய மேட்டிமையான செயற்பாடுகளை வைத்துக் கொண்டு ஒரு அமைப்பைப் பற்றிய விமர்சனத்துக்கோ தீர்மானத்துக்கோ வருவது பொருத்தமானதல்ல.
இதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மத்தியகுழுவைச் சேர்ந்தவர்களிற் பெரும்பாலானோர் நீங்கள் குறிப்பிட்டதைப்போல எப்படியோ உயர்சாதியப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர் என்பது உண்மையே. அதற்காக இயக்கத்தின் கட்டமைப்புச் சார்ந்த நடவடிக்கைகளில் முற்றுமுழுதாக உயர்சாதிய மனோபாவம் இருந்தது என்பதை ஏற்க முடியாது. அமைப்பின் கொள்கைக்கு அமைய எல்லோரும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, சமூக நீதியோடு வேலை செய்தனர். அதில் வேறுபாடுகள் இருக்கவில்லை. ஆனால், புலிகளுடன் போரிடாமல் தவிர்த்த காரணங்களில் இந்தப் பட்டும்படாமல் இருக்கும் ‘மேற்தட்டு உளநிலை’யும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ‘ஏன் சண்டை பிடித்துச் சாக வேண்டும்?’ என்ற உணர்வு இருந்திருக்கலாம். நீங்கள் கேட்டதைப்போல அப்படியான ஒரு மனநிலை பலரிடத்திலும் இருந்ததாகச் சில தோழர்கள் பின்னாளில் தனிப்பட்ட உரையாடல்களில் சொன்னதுண்டு. ஆகவே ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் கோட்பாட்டின் அடிப்படையில் அது அடிநிலை மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் நெருங்கிய தோழமை இயக்கமாகவே செயற்பட்டது. இப்போதும் கூட அந்த மக்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ அப்படித்தான் பார்க்கிறார்கள் என்பதை அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். இதனால், அன்றைய ஈ.பி.ஆர்.எல்.எவ் எங்களுடைய மனதில் அழியாது உள்ளது.
6. இப்படி நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ் குறித்து பலரிடத்தில் எதிர்மறையான – மக்களுக்கு எதிரான – வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட இயக்கம், இந்தியப் படைகளோடும் இலங்கை இராணுவத்தோடும் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற உணர்வுதானே பின்னாளில் மேலோங்கியுள்ளது?
1986 க்கு முந்திய ஈ.பி.ஆர்.எல்.எவ் வேறு. அதற்குப் பின்பான ஈ.பி.ஆர்.எல்.எவ் வேறு என்பதே என்னுடைய உணர்வாகும். என் போன்றவர்களின் மனதில் 1986 க்கு முந்திய ஈ.பி.ஆர்.எல்.எவ்வே உள்ளது. அந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்வை மக்கள் பார்த்த விதம் வேறு. பிந்திய ஈ.பி.ஆர்.எல்.எவ்வை மக்கள் பார்க்கின்ற விதம் வேறு. இன்று மக்களிடம் உள்ள மனப்பதிவு என்பது, இந்திய அமைதிப்படைக் காலத்தின் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமே ஆகும். இதற்குப் பல காரணங்களிருக்கலாம். 1986 க்குப் பின் – புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ தாக்கியபிறகு வெகுசனத் தளத்தில் வேலை செய்த ஆளுமைகளான பலர் வெளியேறிச் சென்று விட்டனர். அதனால் மக்களுடனான உறவும் ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு இல்லாது போய் விட்டது. 1987 க்குப் பிறகு, மாகாணசபையை ஈ.பி.ஆர்.எல்.எவ் ஏற்றது. மாகாணசபையைப் புலிகள் நிராகரித்தனர். புலிகளால் நிராகரிக்கப்பட்ட மாகாணசபையை ஈ.பி.ஆர்.எல்.எவ் இந்திய அமைதிப்படையின் ஆதரவோடுதான் நிர்வகித்தது. மாகாணசபையை எதிர்த்தது மட்டுமல்ல, இந்திய அமைதிப்படையோடும் புலிகள் போரை ஆரம்பித்திருந்தனர்.
இதனால் அப்பொழுது இரண்டு அதிகாரத் தரப்புகள் எதிர் எதிர் நிலையில் நின்று மோதுகின்ற ஒரு சூழல் உருவாகியது. புலிகள் தலைமறைவு இயக்கமாக மக்களின் மத்தியில் செயற்பட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளிப்படையாக – தவிர்க்க முடியாமல் இந்திய அமைதிப்படையோடு நின்றது. அல்லது நிற்க வேண்டிய நிலைக்குள்ளாகியது. தலைமறைவாகி இயங்கிய புலிகள் கெட்டித்தனமாக இந்திய அமைதிப்படையை (IPKF) இந்திய இராணுவமாக்கி (Indian Army) விட்டனர். மக்களுடனும் மோத வைத்தனர். அண்மையில் சோமீதரனால் இயக்கப்பட்டிருந்த ‘நீளிரா’ என்ற சினிமா ஒன்று வந்திருக்கிறது. அது இந்திய அமைதிப்படையின் (இந்திய இராணுவத்தின்) நடவடிக்கைக் காலத்தைச் சித்திரிக்கும் படம். அதில் இந்திய அமைதிப்படை, இந்திய இராணுவமாகவே செயற்பட்டதாக, சித்திரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இந்த நிலையில் இந்திய அமைதிப்படையோடு அல்லது அதனுடைய ஆதரவோடு இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ்வை மக்கள் எதிர்நிலையில் வைத்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டது. அதாவது ஈ.பி.ஆர்.எல். எவ் வை ஆட்சி அதிகாரத் தரப்பாகப் பார்த்தனர். அந்த அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளாகப் புலிகளைப் புரிந்து கொண்டனர். அப்படியே மக்களுடைய மனதில் பதிந்து விட்டது.
எப்போதும் மக்கள் அதிகாரத்தரப்புக்கு எதிரான மனநிலையில்தான் இருப்பார்கள். இது புலிகளுக்கு வாய்ப்பாகிப்போனது. இதற்கு ஆதரவாக யாழ் மையவாத ஊடகங்களும் கருத்தைப் பரப்பின. அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினைகளையோ இவ்வாறான நிலைமைகளையோ இவையெல்லாம் உருவாகிய வரலாற்றுக் காரணங்களையோ பகுத்து, ஆராய்ந்து எழுதுகின்ற – பேசுகின்ற சூழல் இருக்கவில்லை. இது அப்போதும் இருக்கவில்லை. இப்போதும் இல்லை.
இதேவேளை தனிநாட்டுக் கோரிக்கையோடு நின்ற புலிகளை விடுத்து, மாகாணசபையைப் பொறுப்பேற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் அரசியல் அன்றும் இன்றும் கவனத்திற்குரியது என்ற பார்வையும் உண்டு. காலமாற்றத்துக்குப் பின், புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்பு உருவாகிய அரசியற் சூழலில், ஈ.பி.ஆர்.எல்.எவ் வலியுறுத்திய மாகாண சபையைப் பற்றியே இப்போது பலரும் பேசுகிறார்கள். ஆனாலும் ஈ.பி.ஆர்.எல். எவ் மீதான பொதுப் பார்வையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று நான் கருதவில்லை.
அரசியல் வரலாறு இப்படித்தான், பல வரலாற்றுத் திருப்பங்களோடும் குழப்பங்கள், முரண்கள், சிதைவுகள், சிக்கல்களோடும் சென்று கொண்டிருக்கிறது.
7. மாகாணசபையைப் பொறுப்பேற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ், இந்திய அமைதிப்படைக் காலத்தில் மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக மக்களிடம் ஒரு வலுவான எண்ணமுண்டு. புலிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் – மோதல்களில் தேவையற்ற விதமாக பொதுமக்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கைவைத்தது என்ற குற்றச்சாட்டுண்டு. இதைக்குறித்து..?
1986 டிசம்பர் 13, 14 க்குப் பிறகு ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புடன் எனக்கு எந்தத்தொடர்பும் உறவும் இல்லை. அதற்குப் பின்னர், நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். அந்தச் சூழலில் நடந்தவை பற்றி அறியக் கூடிய அளவுக்கு என்னுடைய நிலைமையும் தொடர்பு வசதிகளும் இருக்கவில்லை. பின்னர் அறிந்து கொண்டேன், எமது ஊரான இடைக்காட்டில் மிக மோசமான மூன்று கொலைச் சம்பவங்களைப் பற்றி. சாமி என்பவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் வுடன் தொடர்பில் இருந்தார் என்று விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். அதற்குப் பதிலடியாக இரண்டுபேரை ஈ.பி.ஆர்.எல்.எவ் மிக மோசமாகப் பழிதீர்த்தது. இதையெல்லாம் கேள்விப்பட்டபோது மனம் பதைத்தது மட்டுமல்ல, இப்படியான சம்பவங்கள் வெறுப்பையும் ஏற்படுத்தின. இப்போது கூட அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை எங்காவது சந்தித்தால் ஏதோ ஒரு வலி மனதில் தோன்றுவதை உணர்கிறேன். இதேபோலப் பல சம்பவங்கள் பல இடங்களிலும் நடந்திருக்கின்றன. ஒரு கசப்பான – கறைபட்ட – வரலாறு இப்படியே நடந்து முடிந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எவ்வினால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கு முன்னோட்டமாக மாகாணசபை முறைமை கிடைத்தது என்று சொல்லப்படுவதை விட, அப்பொழுது நடந்த இவ்வாறான சம்பவங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ்வையும் அதனுடைய வரலாற்றையும் மக்களிடத்திலே எதிர்மறையான மனப்பதிவுக்குள்ளாக்கி விட்டன. இப்பொழுது நாம் பெரும்பாலான மக்களிடம் கேள்விப்படுகின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பது 1987 க்குப் பிந்திய ஈ.பி.ஆர்.எல்.எவ் பற்றிய அவர்களுடைய மனப்பதிவுகளையே. ஆனால், எங்களுடைய மனதில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பது அதற்கு முந்திய – 1986 க்கு முந்திய – ஈ.பி.ஆர்.எல்.எவ் வே.
காலம்தான் எப்படியான விசித்திரமான உண்மைகளையும் விடயங்களையும் விதைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
8. இப்பொழுது நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள்? அதாவது ஒரு ஈ.பி.ஆர்.எல்.எவ் காரராக இன்னும் நீங்கள் இந்தச் சமூகத்தையும் கடந்த கால – நிகழ்கால விடயங்களை நோக்குகிறீர்களா?
மிக நீண்ட விடுதலைப் போராட்ட வரலாற்றில், என்னைப்போன்றவர்கள் செயற்பட்டது மிகச் சொற்ப காலமே. அதாவது. மூன்று நான்கு (1982 – 1986) ஆண்டுகளேயாகும். ஆனாலும் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் பெற்ற அரசியல், சமூக அறிவும் உணர்வும் இன்றும் மனதில் ஆழமாக உள்ளது. இருந்தாலும் 1986 க்குப் பிறகு நாம் அமைப்பின் செயற்பாடுகள் எதனோடும் உறவற்றுப் போனாலும் பழைய ஈ.பி.ஆர்.எல்.எவ் சிந்தனை, அது உண்டாக்கிய சமூக, சமத்துவ மன அமைப்புடனேயே இருக்கிறோம். ஆனால், அப்போதிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்வாக இன்றிருக்கும் அமைப்பையோ கட்சியையோ என்னால் உணர முடியவில்லை.
இன்றைய சமூகத்தை எடுத்துப் பார்த்தால், ஈ.பி.ஆர்.எல்.எவ்வை மட்டுமல்ல, அனைத்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் அரசியல் அநாதைகளாகவே பார்க்கிறது என்றே தெரிகிறது. விடுதலைப் புலிகளின் போராளிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஆனால், போராளிகளின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் இந்தச்சமூகம் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்றே சொல்வேன். அப்படி அவர்களுடைய அர்ப்பணிப்பையும் உழைப்பையும் பயன்படுத்திக் கொள்ளும் சமூகமும் சரி, சில அரசியல் கட்சிகளும் சரி, போராளிகளையும் அவர்களுடைய பங்களிப்புகளையும் மதித்து ஏற்றுக் கொள்வதற்குத் தயாரில்லை. என்பதால்தான் சொல்கிறேன், போராளிகள் அநாதரவாக்கப்பட்டுள்ளனர் என்று. இதில் விடுதலைப் புலிகள்தான் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். புலிகள் இயக்கத்திலிருந்து எவரும் அந்த இயக்கத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் அளவில் இன்றைய அரசியலில் இல்லை. இவ்வளவுக்கும் விடுதலைப்புலிகளே நீண்டகாலம் ஆதிக்கத்தில் நின்றவர்கள். இப்போது புலிகள் இயக்கத்தைப் பிரதிபலிப்பவர்களாகக் காட்டிக் கொள்வோர் யார் என்றால், சிறிதரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள்தான். இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்மந்தம்? சரி பிழைகளுக்கு அப்பால், ஏனைய இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றவற்றிலிருந்து அவற்றைச் சேர்ந்தவர்களே தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுமிருக்கிறார்கள். இந்த இயக்கங்கள் கட்சிகளாக இயங்கிக் கொண்டும் உள்ளன. ஆனால், விடுதலைப் புலிகளுக்கும் ஈரோஸ் இயக்கத்துக்கும் அந்த அடையாளமோ அரசியல் பிரதிநிதித்துவமோ இல்லாமல் போய்விட்டது. ஆனால் புலிகளின் பெயரை வைத்துப் பலரும் தாராளமாக அரசியல் செய்கிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சொன்னதைப்போல, “இந்தச்சமூகத்தை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமோ!” என்று கூட யோசிப்பேன். இதற்காக நான் ஏதோ மத நம்பிக்கையாளனாக இதைச் சொல்கிறேன் என்று அர்த்தமல்ல. அந்த அளவுக்கு தமிழ்ச் சமூகம் இருண்டுபோன சூழலுக்குள் இருக்கிறது.
9. உங்களைப்போல பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான போராளிகள், ஈ.பி.ஆர்.எல்.எவ்விலிருந்து மட்டுமல்ல, புளொட், ஈரோஸ், ரெலோ உட்பட ஏனைய பல இயக்கங்களில் இருந்தும் வெளியேறியோ தொடர்பின்றியோ ஒதுங்கியோ உள்ளனர். அவர்களுடன் உரையாடக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில், தாம் விடுதலைக் கனவோடு போராடச் சென்றதற்கும், அதன் பின் அமைப்புகளில் (இயக்கங்களில்) செயற்படும்போது பெற்றுக் கொண்ட அனுபவங்களுக்கும் இடையில் எதிர்பாராத மாற்றங்களும் நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன என்று சொல்வார்கள். இதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
உண்மைதான். அதொரு கனாக்காலம்தான். தோழர்களைச் சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில் அதையெல்லாம் அசை போட்டுக் கொள்வதுண்டு. சிலருக்கு பின்வந்த கால நிலைமைகள் எல்லாம் கவலையை அளித்ததும் உண்டு. சமூகத்திலிருந்த போட்டி மனப்பாங்கும் குழுவாதங்களும் பேதங்களும் விடுதலை அமைப்புகளுக்குள்ளும் இருப்பதை உணர நேர்ந்தபோது ஏமாற்றமும் கவலையும் ஏற்பட்டதுண்டு. அமைப்புக்குள் எம்மை உள்வாங்கும்போது, எமக்குப் பயற்றுவித்தோரும் அரசியல் அறிவை ஊட்டியோரும் ஏற்கனவே தம்மைச் சமூக மாற்றத்துக்காகவும் விடுதலைக்காகவும் சித்தாந்த ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டவர்களாக, அதில் பயின்று தேறியவர்களாகவே இருந்தனர். அல்லது அப்படி அவர்களை நாம் புரிந்து கொண்டிருந்தோம். ஆனால், அவர்களும் சில சந்தர்ப்பங்களில் சமூகத்தின் குறைபாட்டுக் குணங்களையே கொண்டிருந்திருக்கிறார்கள். அதை மறைத்துப் போலியாக சித்தாந்த முலாம் பூசிக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். இயக்கங்களின் சீரழிவுக்கு இவையெல்லாம் காரணமாக இருந்திருக்கின்றன.
என்னதான் தத்துவம், சித்தாந்தம் என்று பேசினாலும் எங்களிடத்திலும் பல சமூகக் குறைபாடுகள் நீங்காமல் இன்னும் இருக்கின்றனதானே! ஆனால், அமைப்பு என்று இயங்கும்போது நமக்குப் பொறுப்புகள் அதிகம் என்பது கவனத்திற்குரியது.
10. ஈ.பி.ஆர்.எல்.எவ்வில் நீங்கள் என்ன மாதிரியான பொறுப்பில் அல்லது பணியில் இருந்தீர்கள்?
ஈழ மக்கள் விடுதலை முன்னணி (EPLF) யின் செயற்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 தொகுதிவாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஐந்து தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளராகச் சில காலம் பணியாற்றினேன். பின்னாட்களில் சில காலம் யாழ் மாவட்டப் பணிமனையின் நிர்வாகப் பொறுப்பில் செயற்பட்டேன். எல்லாம் சாதாரண மக்கள் பணிகள்தான் என்பதே என்னுடைய மனப்பதிவு. நான் ஒரு சாதாரண போராளியாகத்தான் எப்போதும் இருந்தேன்.
11. ஒரு காலம் இப்படி பிறந்த மண்ணில் விடுதலை உணர்வோடு செயற்பட்ட ஒருவர் பின்னாளில் முற்றிலும் வேறான ஒரு சூழலில் புலம்பெயர்ந்து வாழ நேர்வது எப்படியான உணர்வைத் தருகிறது?
1986 இல் ஏற்கட்ட நிகழ்வுகள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாத ஒரு குழப்ப நிலையை உருவாக்கியது. நாட்டின் நிலைமையும் பாதகமாகச் சென்றுகொண்டிருந்தது. அதனால் நாட்டை விட்டு வெளியேறலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அது முதலில் ஒரு தற்காலிக ஏற்பாடு என்றே எண்ணினேன். ஆனால், அதுவே பலரைப்போல எனக்கும் நிரந்தரமான புலம்பெயர்வாக மாறி விட்டது. ஆனால், இந்தப் புலம்பெயர்வு கூட எளிதானதாக இருக்கவில்லை. பல நாடுகள், பல பயணங்கள் என்று தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தது.
புலம்பெயர் வாழ்க்கை தொடக்கத்தில் பல வேதனையான அனுபவங்களையும் உணர்வையும் தந்தாலும் இப்பொழுது ‘ஆஸ்திரேலியா என்னுடைய நாடு’ என்ற உணர்வைத் தருகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. நான் பிறந்த இலங்கையை விட, அதிககாலம் வாழ்வது ஆஸ்திரேலியாவில்தான். அதுவும் அங்குள்ள அரசியல், சமூக, பண்பாட்டுச் சூழலும் ஆஸ்திரேலியா என்னுடைய நாடு என்ற உணர்வைத் தருகிறது. அதற்காக இந்த மண்ணை நான் மறந்து விடவில்லை.
12. புலம்பெயர் சூழலில் இலக்கியச் செயற்பாட்டிலும் எழுத்திலும் இயங்கும் அனுபவத்தில் அங்குள்ள புதிய தலைமுறையினரின் இலக்கிய ஈடுபாடும், எழுத்து முயற்சிகளும் எப்படி உள்ளன?
ஆஸ்திரேலியா ஒரு குடியேற்ற நாடு. அந்த வகையில் புதிது புதிதாக ஆட்கள் அவ்வப்போது வருகிறார்கள். இப்பொழுது புதிய குடியேறிகளுக்குச் சட்ட இறுக்கம் சற்று அதிகமாக உண்டு. ஆனாலும் அவர்கள் அங்கே வரும்போது ஒரு புதிய தலைமுறையாகவே இருக்கிறார்கள். அதாவது, ஏற்கனவே குடியேறியிருப்போர் முதல் தலைமுறையினராகவும் பிந்தி வருவோர் பிந்திய தலைமுறையினராகவும்.
ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையென்பது பெரும்பாலும் தமிழில் எழுதுவது குறைவு. மற்றும்படி ஆஸ்திரேலியாவுக்கு வருகின்ற எல்லா மொழியினருடைய இலக்கிய, பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் உதவுகிறது. ஆனால் அதற்கான பதிவுகளை முறையாக மேற்கொண்டிருக்க வேண்டும். பன்மைக் கலாச்சாரத்தைப் பேணும் வகையில் இப்படியான ஒரு ஏற்பாடு அங்கே உண்டு. பண்பாட்டு, இலக்கிய நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, மத விசயங்களுக்கும் கூட ஆஸ்திரேலிய அரசாங்கம் உதவுகிறது. இப்படியான சூழலில் அங்கே வருகின்ற புதிய குடியேற்றவாசிகளை ‘புதிய தலைமுறை’ என்றே வாசிக்க வேண்டும். அப்படி வருகின்றவர்கள் புதியதொரு உற்சாகத்தோடும் புதிய அனுபவங்களோடும் இயங்குகிறார்கள். ஆனால், அவர்களிலும் பலர் பிறகு பிறகு வெவ்வேறு ஈடுபாடுகள், வாழ்க்கைத் தேர்வுகள் என்று வரும்போது விலகிச் சென்று விடுகிறார்கள். அல்லது சோர்ந்து போகிறார்கள். இதற்குள்ளும் சில பூக்கள் அழகாகப் பூத்து விடுகின்றன என்பதுவும் உண்மை.
13. உங்களுடைய இலக்கிய வாசிப்பும் ஈடுபாடும் எழுதத் தொடங்கியதும் எந்தச் சூழலில் ஏற்பட்டது?
ஊர் வாசிகசாலையில் 1970 களின் இறுதிப்பகுதியில் தொடங்கிய வாசிப்பு, இன்றுவரையில் தொடர்கிறது. அப்போது மிகத் தீவிரமாக வாசித்தேன். வீரகேசரி பிரசுரங்களில் அநேகமாக எல்லாலவற்றையும் வாசித்திருக்கிறேன். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், டானியல் என்று பலரையும் படித்திருக்கிறேன். 1980 களில் துணுக்குகளாக அவ்வப்போது எழுதியிருக்கிறேன். சுடர், கீற்று போன்ற இதழ்களில் அவை பிரசுரமாகியிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்புதான் சற்று நிதானமாக எழுத வாய்த்தது. முருகபூபதி தொகுத்திருந்த ‘உயிர்ப்பு’ என்ற தொகுப்புக்கு ‘பசி’ என முதற்கதையை எழுதினேன். தொடர்ந்து நடேசனின் ‘உதயம்‘ பத்திரிகையில் கட்டுரைகள், அரசியற் பத்திகள், சினிமா விமர்சனம் என்றெல்லாம் எழுதும் களம் கிடைத்தது. பின்னாளில் அதிலே சினிமாப் பகுதிய நான் தொகுத்தளித்தேன்.
ஆஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழாக்கள் நடைபெற்று வந்தன. ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) ஆரம்பிக்கப்பட்டது. அது ஆரம்பிக்கப்படும்போது முருகபூபதி, நல்லைக்குமரன், சுதாகர், அருண் விஜயராணி, ஆவூரான் சந்திரன் போன்றோருடன் நானும் ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறேன்.
14. நீண்டகால இலக்கியப் பரிச்சயமிருந்தாலும் நீங்கள் எழுதியது குறைவாகவே உள்ளது! புனைவு எழுத்துக்கு அப்பால், சினிமா விமர்சனம், அரசியல், இலக்கிய விமர்சனம் என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். ஏன் புனைவெழுத்தைத் தொடராமல் விட்டீர்கள்?
இதில் முக்கிய காரணம் என்னுடைய சோம்பேறித்தனம்தான். ஆனால் வாசிப்பில் எப்போதும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. 2009 க்கு முன்பு ஆஸ்திரேலியாவிலுள்ள ஈழத்தமிழ் அரசியல், பண்பாட்டுச் சூழலில் ஒரு மாற்றுக் குரலாக ஒலிக்கும் தரப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அன்றிருந்த பொதுச் சூழல் பெரும்பாலும் சமூகத்தை விரிந்து சிந்திப்பதற்கு மாறானது. இப்போதும் கூட பொதுச் சூழல் அப்படித்தான் உள்ளது. ஆனால், அன்று இன்னும் மோசமான நிலை. அந்தச் சூழலில் ‘உதயம்’ பத்திரிகை ஒரு மாற்று ஊடகமாக வந்தது. அதில் எழுத விரும்பினேன். ஏறக்குறைய அது ஒரு உற்சாகமான காலம்தான். அப்போதுதான் நான் அதிகமாக எழுதினேன். அப்போது தமிழகத்திலிருந்து ஜெயமோகன், பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன், காலச்சுவடு கண்ணன் போன்றவர்கள் வந்து சென்றனர். ஜெயமோனுடன் நெருங்கிப் பழகவும் விரிவாகப் பேசவும் கூடியதாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் ஜெயமோகனும் நானும் பயணித்த அனுபவம் மறக்க முடியாதது. அவருடைய ‘புல்வெளி தேசம்’ என்ற நூலில் இதைப் பற்றி ஜெயமோகன் எழுதியுமிருக்கிறார்.
இதைத் தவிர, ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதுள்ள சமூக ஊடகங்களின் போக்கும் ஆதிக்கமும் இலக்கிய எழுத்தில் ஈடுபடும் ஆர்வத்தைக் குறைத்திருக்கிறது. புத்தக வாசிப்புக் குறைந்தாலும் எழுத வேண்டும் என்ற எண்ணமும் இடையிடையே வந்து போகிறது. நான் ஒரு சினிமா ரசிகனும் என்றபடியால் வருகின்ற பெரும்பாலான படங்களைப் பார்ப்பேன். பிற மொழிப்படங்களையும் பார்ப்பதுண்டு.
14. ஆஸ்திரேலியச் சூழலில் தமிழிலும் தமிழல்லாத மொழிகளிலும் நிகழ்கின்ற இலக்கிய முயற்சிகளும் குறிப்பிடக்கூடிய போக்குகளும்?
நான் ஏற்கனவே சொன்னதைப்போல, ஆஸ்திரேலியா ஒரு பன்மைத்துவ நாடு. அங்கே குடியேறியுள்ள அனைத்துச் சமூகங்களுடைய பண்பாட்டு வெளிப்பாடுகளுக்கும் அங்கே உரிய மதிப்பும் இடமும் உண்டு. அந்தந்த இனத்தினர் அல்லது சமூகத்தினர் தங்களுடைய கலை வெளிப்பாடுகளையும் இலக்கிய ஆக்கங்களையும் வெளியிடுகின்றனர். இது ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நிறைவான வளத்தை – வளமான பண்பாட்டை அளிக்கிறது. ஆஸ்திரேலியாவில் தமிழில் உள்ளதைப்போல பிற மொழிகளிலும் நல் வரவுகள் உள்ளன. ஆனால், எனக்கு அவற்றுடன் பரிச்சியம் குறைவு என்பதால் அவற்றைப்பற்றி தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
தமிழில் பல விடயங்கள் நடக்கின்றன. இலக்கிய விழாக்கள், நூல் வெளியீடுகள், விமர்சனக் கூட்டங்கள், நாடக நிகழ்வுகள் எனப் பல. முருகபூபதி, நடேசன், ரஞ்சகுமார், ஆழியாள், ஆஸி. கந்தராஜா, கன்பரா யோகன், தேவகி கருணாகரன், கே.எஸ். சுதாகர், ஜே.கே, ப. தெய்வீகன், ஆவூரான், மாத்தளை சோமு, மாவை நித்தியானந்தன், தாமரைச்செல்வி, சந்திரகாசன், அருண் விஜயராணி, பாடும்மீன் ஸ்ரீஸ்கந்தராஜா, ஜெயராமசர்மா, கலா பாலசுந்தம், வாசுகி சித்திரசேனா, சியாமளா யோகேஸ்வரன், சகுந்தலா கணநாதன், ஆவூரான் சந்திரன் , கணநாதன், கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியம், கறுப்பையா ராஜா, சாந்தி சிவகுமார் போன்ற பலர் கலை, இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடுவோராக உள்ளனர்.
மெல்பேர்ண் வாசகர் வட்டம் செயற்படுகிறது. அதை தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த அ. முத்துகிருஷ்ணன் ஆரம்பித்து வைத்தார். அது தொடர்ந்தும் இயங்கி வருகிறது.
மாவை நித்தியானந்தனின் நாடக முயற்சிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அண்மையில் அவரால் நெறியாள்கை செய்யப்பட்ட மாபெரும் நாடகமான சிலப்பதிகாரம் முக்கியமான ஒரு வெளிப்பாடு. இப்படிப் பல உண்டு.
15. ஆஸ்திரேலியப் பூர்வமக்களின் இலக்கிய வெளிப்பாடுகள்? அவர்களுடைய சினிமா முயற்சிகள்?
ஆஸ்திரேலிய பூர்வமக்கள் அபோஜிக்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய மேடை நாடகங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். அந்த நாடகங்களில் வெளிப்படுத்தப்படும் அசைவுகள், ஆட்டங்கள், ஒப்பனைகள், சடங்கு மற்றும் பண்பாட்டுப் பிரதிபலிப்புகள், இசை போன்றதெல்லாம் எங்களுடைய தமிழ்ப் பண்பாட்டுக்கு நெருக்கமாக இருப்பதாக ஓருணர்வு ஏற்பட்டதுண்டு. இதைத் தவிர, நாங்கள் இருக்கும் விக்டோரியா மாநிலத்தில் பூர்வமக்களின் பண்பாட்டையும் உணர்வுகளையும் மதிக்கும் விதமாக சில வார்த்தைகள் சொல்லப்பட்ட பின்பே, எந்த நிகழ்ச்சியும் நடப்பதுண்டு. இதை நடைமுறையாகவும் சட்டமாகவும் ஆக்கியுள்ளது அரசு. இதைத் தவிர, அபரோஜிக்களின் கவிதைகளை ஆழியாள் மொழி பெயர்த்ததைப்போல, வேறு சிலர் அபரோஜிக்களின் கதைகளையும் மொழிபெயர்த்திருக்கக் கூடும். நான் படிக்கவில்லை.
இதேவேளை மெல்பேர்ணில் (Melbourne) நடைபெறும் அரச அலுவலகக் கூட்டங்களின் தொடக்கத்தில், ஆதிவாசிகளுக்கு (First Nations People) மரியாதை செலுத்தும் விதமாக “பாரம்பரிய நில உரிமையாளர்கள் குறித்த ஏற்புரை” (Acknowledgement of Country) வாசிக்கப்படும். இந்த மரபு, பூர்வகுடி மக்களின் கலாச்சாரத்தையும், நிலத்துடனான அவர்களின் நீண்ட காலத் தொடர்பையும் அங்கீகரிக்கிறது.
மெல்பேர்ண் பகுதி உருண்டெரி (Wurundjeri) மற்றும் புனூராங் (Bunurong) மக்களின் பாரம்பரிய நிலமாகும். ஆகையால் அரச கூட்டங்களில் முதலில் இவர்களது பெயர் குறிப்பிடப்பட்டு மரியாதை செய்யப்படும். வழக்கமான வாசகம் (உதாரணம்) :”நாங்கள் கூடும் இந்த பாரம்பரிய நிலத்தின் உண்மையான உரிமையாளர்களான உருண்டெரி (அல்லது புனூராங்) மக்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் மூதாதையர்கள், தற்காலத் தலைவர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு எங்கள் மரியாதையைச் செலுத்துகிறோம்” என்பதாக இருக்கும்.
16. ஆஸ்திரேலியக் கதைகளில் சிலவற்றைத் தொகுத்து நீங்கள் வெளியிட்ட ‘தைலம்‘ என்ற சிறுகதைத் தொகுப்பிற்குப் பின்னர், அடுத்த தொகுதிகள் குறித்த முயற்சிகள் உண்டா?
தைலத்தை தொகுத்த போதே இன்னொரு தொகுப்பையும் கொண்டு வரலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், அதற்கான சூழல் அமையவில்லை. இவ்வாறான தொகுப்புகளுக்குக் கிடைக்கின்ற ஆதரவும் ஊக்கமும்தான் அடுத்த தொகுப்புகளைக் கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்கும். தமிழில் இப்படித் திட்டமிட்டு கைவிடப்பட்டவைகள் ஏராளமுண்டு. இப்போது இன்னொரு தொகுப்பைப் பற்றிச் சிந்திக்கிறேன். அது ஆஸ்திரேலியக் கதைகளுக்குப் பதிலாக, போருக்கு எதிரான எழுத்துகளைப் பற்றிச் சிந்திக்கலாம் என்று தோன்றுகிறது. அந்தத் தொகுப்பு வருமாக இருந்தால், அது தனியே தமிழ்க் கதைகளாக மட்டுமல்லாமல், உலக மொழிகள் பலவற்றிலும் இருந்து எழுதப்பட்ட போருக்கு எதிரான எழுத்துகளாக இருக்கும். அப்படி இருப்பதே நல்லது என எண்ணுகிறேன்.
17. ஈழப்போராட்ட அனுபவத்தைக் கொண்ட சிலர் அதைச் சாரப்படுத்தியதாக புனைவெழுத்தையும் புனைவற்ற எழுத்துகளையும் தந்திருக்கிறார்கள். உங்களுடைய அனுபவத்தைக் கொண்டு அப்படி ஏதும் எழுதும் முயற்சிகள்?
நிச்சயமாக எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். அதற்கான ஒரு திட்ட வரைபும் உண்டு. ஏறக்குறைய அதைப்பற்றிய ஒரு முழுச்சித்திரம் மனதிலும் உண்டு. சாத்தியமேற்பட்டால், அது உங்களுக்கும் கிடைக்கலாம்.
18. இப்போதுள்ள தமிழில் உள்ள இலக்கியச் சூழல் பற்றிய உங்களுடைய அவதானிப்பு?
ஆஸ்திரேலியாவில் உள்ளவர்கள் பிற மொழிகளில் வாசிக்கும் அனுபவத்தோடு புதிய முறையில், புதிய தொனி, புதிய வடிவ முயற்சிகளில் எழுதுகிறார்கள். இதைத் தவிர, ஏராளமான எழுத்துகள் தினமும் வந்து கொண்டேயிருக்கின்றன. எழுத்தாளர்கள்தான் அதிகமான வாசகர்களாகவும் இருக்கிறார்கள். வாசகர்கள் குறைந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. அல்லது அவர்கள் சமூக வலைத்தளங்களால் உறிஞ்சப்பட்டுவிட்டார்கள். இதேவேளை சமூக ஊடகங்களிலும் நன்மையான சில பக்கங்களும் உண்டு.
