— அழகு குணசீலன் —
காலிமுகத்திடலில் ஜே.வி.பி.யின் முதுகுக்குப்பின் ஒழிந்து நின்று அமெரிக்கா அரகலய போராட்டத்தை வழிநடாத்தி இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. இதற்கு பின்னர் நேபாளம், வங்கதேசம் என அயல்நாடுகளில் போராட்டங்கள் இடம்பெற்றன. ஆட்சி அதிகாரங்கள் மாறின. ஆனால் அமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டனவா? என்றால் அரகலயவின் அதே கதிதான். இந்த போராட்டங்களின் போது இது அரகலயவின் முன்மாதிரி என்றும் பலர் பேசினர். ஒருவகையில் விளைவுகளில் அது உண்மைதான்.
இப்போது இந்திய மத்திய அரசை கரப்பான்கள் அரித்து இருக்கிறார்கள். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியை இராஜினாமாச்செய்ததன் மூலம் கரப்பான்களுக்கு முதற் பதவிப் பலியாகி இருக்கிறார். இன்னும் மத்திய நிதியமைச்சர் சீத்தா ராமன் மீதும் கரப்பான்கள் குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. கல்வியை அடுத்து பொருளாதார நெருக்கடியின் பக்கம் கரப்பான்களின் கவனம் திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட வேறு போராட்டங்களும் தொடர்கின்றன.
கரப்பான்களின் வெற்றியை “இது முதல் விக்கட். நாம் ஓயப்போவதில்லை. இது வெறும் தொடக்கம் மட்டுமே” என்று கரப்பான்களின் முக்கியஸ்தர் அபிஜீத் திப்ரே ஊடகங்களுக்கு கூறியிருக்கிறார்.
டெல்லியின் இந்த களநிலை குறித்து வெளியில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல், கொழும்பு ஜனாதிபதி மாளிகையிலும், பெலவத்தையிலும் புலனாய்வு தகவல்களுடன் கூடிய ஒரு “அலசல்” இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது. ஏனெனில் இதுவரை இந்திய பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்திற்கு இந்தியாவிலும், பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் இருந்த போலி முகமூடியை கரப்பான்கள் கழற்றி இருக்கிறார்கள்.
இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார களநிலையுடன் ஒத்துப்போகக்கூடிய பல சூழ்நிலைகள் இலங்கையிலும் நிலவுகின்றன. வெறுமனே பெரும்பாகப் பொருளியல் புள்ளிவிபரங்களை மட்டும் திரும்பத்திரும்ப காட்சிப்படுத்துவது அந்த நாட்டு மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வெளிப்படைத்தன்மை யை பிரதிபலிப்பதில்லை. இது இலங்கை, இந்தியாவுக்கும் நன்கு பொருந்தும்.
ஜே.வி.பி./ என்.பி.பி. அரசாங்கத்தின் சுமார் இரண்டு வருட ஆட்சிக்காலத்தில் மூன்று அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முயற்சிகள் செய்யப்பட்டன. இரண்டு விவாதிக்கப்படவில்லை. ஒன்று பிரதமர் ஹருணி அமரசூரியாவின் கல்விச் சீர்திருத்தம். மற்றையது எரிசக்தி அமைச்சர் குமாரஜெயக்கொடி தொடர்பானது. இது பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
. அரசாங்கம் நீதி,நிர்வாகத்துறையில் தன்னை தக்கவைக்க தொடர்ச்சியான முயற்சிகளை கல்விச் சீர்திருத்தம், கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம், நிலக்கரி இறக்குமதி ஊழல், சிவப்பு லேபல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை, குமாரஜெயக்கொடி விவகாரம், சிறைச்சாலை படுகொலைகள் மற்றும் சிறைக்குள் கைதிகள் மூவர் காணாமல் போயிருப்பது, பாதாள உலகக்கோஷ்டிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி தெவிநுவர விஷ்ணு ஆலய காவடியாட்டம் முதலில் ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் பொலிஸ்மா அதிபரால் இரத்துச் செய்யப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டமை, பௌத்த பிக்குகளின் மாநாடு, சட்டத்துறை நிபுணர்களின், நிபுணத்துவ அமைப்புக்களின் கோரிக்கைகளை நிராகரித்து நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரித்தல்…… போன்ற பல விடயங்கள் தென்னிலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.வி.பி.க்கு இருந்த சுமுகமான நிலையை இல்லாமல் செய்திருக்கின்றன.
புள்ளிவிவரங்கள் பேசுகின்ற பொருளாதார வளர்ச்சி மக்களின் உண்மையான வாழ்க்கை நிலையை பிரதிபலிப்பதில்லை. வளர்ச்சியின் மூலமான நன்மை மக்களை அடைவதில்லை. ஆனால் தீமையை மக்கள் அனுபவிக்கிறார்கள். 2026 மே மாதத்தில் 5.4 வீதமாக இருந்த பணவீக்கம் 6.5 வீதமாக அதிகரித்திருக்கிறது.இதில் உணவுப் பணவீக்கத்தின் உயர்வு 1.5 வீதத்தில் இருந்து 3.3 ஆக உள்ளது. வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளன. ரூபாயின் நாணயப்பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக குறைந்தது 10 வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது நுகர்வோரின் கொள்வனவுச்சக்தியில் வீழ்ச்சி, நாட்டின் கடன் தொகையில் அதிகரிப்பு, திருப்பிச்செலுத்தும் தொகையில் அதிகரிப்பு, இறக்குமதி செலவில் அதிகாரிப்பை ஏற்படுத்துகிறது. எமது ஏற்றுமதிகள் வெளிநாடுகளில் மலிவாக இருந்தாலும் சர்வதேச சந்தை நிலைமை இலங்கைக்கு சாதகமாக இல்லை.
அரசாங்கங்கள் நீண்டகாலமாக உல்லாச பிரயாண வருமானத்தையும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமானத்தையும் அனைத்து விலைகளையும் கொடுத்து பெற்று வருகிறது. இதில் ஒரு முக்கிய விளைவாக போதைப்பொருள் கடத்தலும், இலஞ்சம், ஊழலும் இடம்பெறுகின்றன. இதனால்தான் இந்த அரசாங்கத்தின் முயற்சிகள் இரண்டு வருடங்களாகியும் வெற்றி அளிக்கவில்லை. இன்றும் நாள்தோறும் வான்,கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுகிறது. உல்லாசப்பயணிகள், வெளிநாடுகளில் வசிக்கும்/ வேலைசெய்யும் இலங்கையர்கள் இதில் ஈடுபடுகின்றனர். கணிசமான அளவு அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஆதரவும் இதற்கு கிடைக்கிறது.
அரசியல் -அதிகாரப்பக்கமாக, மாகாணசபைத்தேர்தல்களை நடாத்த அரசாங்கத்தை தோல்வி அச்சம் தடுக்கிறது. இந்த வாரம் தெற்கில் நடந்த ஒரு கூட்டுறவு சங்க தேர்தலில் எஸ்.ஜே.பி.. வெற்றி பெற்றுள்ளது. அதிகாரப்பகிர்வு தொடர்பாக சிறுபான்மை தேசிய இனங்கள் திருப்தியாக இல்லை. இது ஆறு கட்சிகளின் கூட்டுக்கு அரசாங்கமே அக்கட்சிகளை தள்ளிவிட்டதாகிறது. தென்னிலங்கையின் மற்றைய கட்சிகள் இன்னொரு கூட்டு இயக்கத்தில் செயற்படுகின்றன. இந்த நிலையில் ஜே.வி.பி./ என்.பி.பி. ஒரு தற்காப்பு முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இது இந்தியாவின் கரப்பான் தாக்கம் துரிதப்படுத்தி இருக்க வாய்ப்புண்டு.
மாகாணசபை தேர்தல் குறித்து அமைச்சரவை அமைச்சர்கள் ஆளுக்கொரு காலக்கெடுவை சொல்வது மட்டும் அன்றி ஆளுக்கொரு காரணங்களையும் அவிழ்த்து விடுகிறார்கள். இருபக்க அரசியல் கட்சிகளின் கூட்டு செயற்பாடு அரசாங்கத்தை உஷார்படுத்தியுள்ளது என்றே கொள்ள வேண்டும். இதனால்தான் சிறைச்சாலை படுகொலைகள் விவாதம் பாராளுமன்றத்தில் கறுப்பு யூலை விவாதமாக மாறியிருந்தது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பொறுப்பு மிக்க பதில்களை காணமுடியவில்லை. அரசாங்க ஆதரவாளர்களும், தொண்டர்களும் பேசுவது போன்று “உங்கள் காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்…” என்ற மாற்று நொடியையே முன்வரிசை அமைச்சர்களும் கேட்கிறார்கள். குட்டிமணி உள்ளிட்டவர்களின் சிறைச்சாலை படுகொலைகள், யாழ். நூலக எரிப்பு தொடர்பாக அமைச்சர்களின் நீலிக்கண்ணீர் பாராளுமன்றத்தில் ஓடியது.
ஜே.வி.பி./என்.பி.பி. அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சோர்வுக்கு 90 நாட்களுக்கு பெலவத்தை டாக்டர் மருந்து எழுதிக்கொடுத்துள்ளதாக தகவல். அதாவது மூன்று மாதங்களுக்கு சூறாவளிப் பிரசாரங்களை செய்து உற்சாக மூட்ட பெலவத்தை விரும்புகிறது. இல்லையேல் மாகாணசபை தேர்தலில் அம்போதான் என்ற புனாய்வு தகவல்களை அது உறுதியாக நம்புகிறது. இதனால் தேர்தலுக்கான சூழலை உருவாக்க விரைவில் நாடுமுழுவதும் ஜனாதிபதியும், அமைச்சர்களும் இந்த பிரச்சார அரசியலில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் இல்லாத தேர்தல் பிரச்சாரமாம். ஒரு வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டுப் பிரச்சாரங்களை மூறியடிப்பதும், தங்களின் இதுவரையான சாதனைகளை பட்டியலிடுவதும், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் மக்களுக்கும் கட்சிகாரர்களுக்குமான சோர்வை போக்குகின்ற ‘விற்றமின்’ மாத்திரைகளாக இருக்கும்.
மக்கள் மட்டும் அல்ல என்.பி.பி.பாராளுமன்ற உறுப்பினர்களும் சோர்வடைந்து விட்டார்கள். வடக்கு, கிழக்கு,, மலையகம் என்.பி.பி. எம்பிக்களின் குரல்களை பாராளுமன்றத்தில் முன்னர் போன்று அதிகம் கேட்க முடியவில்லை. நீண்ட கால தேசிய இனப்பிரச்சினை, அதிகாரபரவலாக்கம், புதிய அரசியல் அமைப்பு, அமைப்பு மாற்றங்கள் தொடர்பாக மக்களின் கேள்விகளுக்கு காலக்கெடுக்களையும், காரணங்களையும் கூறி அவர்கள் களைப்படைந்து விட்டார்கள். பாராளுமன்றத்தில் இராமநாதன் அர்ச்சுனா மட்டுமே இவர்களுக்கு உற்சாகம் ஊட்டமுடியும் என்ற நிலை உள்ளது.
கரப்பான்கள் அனைத்து உண்ணிகள். விற்றமீன் மாத்திரைகள் அவர்களுக்கும் உற்சாக மூட்டும். பெலவத்தை திட்டம் எதிர்த்தரப்பையும் உஷார்படுத்துவதாக அமையும். தேர்தல் இல்லாத ஒரு அரசியல் களம் சூடு பிடிக்கப்போகிறது. முப்பது வருடங்கள் ஆள நினைப்பவர்களுக்கு இரண்டு வருடத்தில் இந்த நிலை.
