— கலாநிதி ஜெகான பெரேரா —
இலங்கை இன்று உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றாகும். உலக அமைதிக் குறியீட்டில் 173 நாடுகளில் 57வது இடத்தில் இருக்கும் இலங்கை, கடந்த ஆண்டில் 30 இடங்களுக்கும் மேலாக முன்னேறியுள்ளது. பல தசாப்த கால அரசியல் வன்முறை மற்றும் ஆயுத மோதல்களுக்குப் பிறகு பாராட்டுக்குரிய ஒரு சாதனையாக இது திகழ்கிறது. இருப்பினும், இலங்கை பயங்கரமான வன்முறை காலங்களையும் சந்தித்திருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இக்காலகட்டங்களை மறந்துவிடுவதோ அல்லது மறைப்பதோ அவை மீண்டும் நடப்பதற்கான ஆபத்தை உருவாக்கும். 1971ஆம், 1988 — 89ஆம் ஆண்டுகளின் இரு ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கிளர்ச்சிகளும் 1983 முதல் 2009 வரை தொடர்ச்சியாக நடந்த ஈழப் போரின் கட்டங்களும் இதில் அடங்கும்.
ஆனால் இந்த அனைத்து வன்முறைக் காலங்களிலும், 1983 ஜூலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை தனித்து நிற்கிறது. ஜூலை 23 முதல் ஒரு வாரம் முழுமையாக நாடு தீப்பற்றி எரிந்ததுடன், தமிழ் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர். அரசாங்கத்தின் ஒரு பகுதி இந்த வன்முறையைத் திட்டமிட்ட வேளையில், மறுபகுதி முடங்கிப்போய் அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாக்கத் தவறியது. கொழும்பில் உள்ள பிரதான சிறையில் தமிழ் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். கொழும்பில் இருந்த முழுத் தமிழ் மக்களும் கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
1983 ஜூலை என்பது ஒரு சாதாரண இனக்கலவரத்திற்கும் மேலானது. அனைத்துக் குடிமக்களையும் சமமாகப் பாதுகாக்கும் அரசின் திறன் மற்றும் விருப்பத்தின் மீது ஒரு முழு சமூகத்திற்கு இருந்த நம்பிக்கையை அது முற்றிலுமாக உடைத்தது. தாம் இலங்கை அரசியல் அமைப்பிற்குச் சொந்தமானவர்கள் அல்லர் என்பதையும், தீவிரவாத சக்திகளின் கை ஓங்கும்போதெல்லாம் தாம் பாதுகாப்பற்றவர்களாகவே இருப்போம் என்பதையும் இது பல தமிழர்களுக்கு உறுதிப்படுத்தியது. இதன் விளைவுகள் உடனடி உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகளுக்கு அப்பாலும் நீடித்தன.
இது உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்தி, இலட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்தது, மேலும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் மனோபாவங்களை வடிவமைக்கும் ஒரு ஆழமான பாதுகாப்பற்ற உணர்வை விதைத்தது. காலம் செல்லச் செல்ல, பெரும்பான்மை சமூகத்துடன் சேர்ந்து பெரும்பாலான அரசாங்கங்கள், அந்த பயங்கரமான காலகட்டத்தை ஒரு சாதாரண அசாதாரண நிகழ்வாகக் காட்டி அதன் தீவிரத்தைக் குறைக்க முயன்றுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை அயலவர்கள் துணிச்சலுடன் பாதுகாத்தது, சில சமயங்களில் பெரும் தனிப்பட்ட ஆபத்திற்கு மத்தியிலும் அவர்களுக்கு உதவியது பற்றிய நினைவுகள் மீட்கப்படுகின்றன. இந்த தைரியமான செயல்கள் நினைவுகூரப்படவும் கௌரவிக்கப்படவும் தகுதியானவை. அவை இலங்கை சமூகத்தின் சிறந்த பக்கத்தைக் காட்டின. ஆயினும்கூட, அரசு அன்று தோற்றது, இன்றும் தோற்றுக் கொண்டிருக்கிறது என்ற பெரிய உண்மையை அவை மறைத்துவிட முடியாது. அக்காலகட்டத்தில் இழந்த உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கான இழப்பீடு வழங்கும் விவகாரம், அப்பாவிப் பலிகடாக்களின் மனங்களில் இன்னும் ஆறாத வடுவாகவே நீடிக்கிறது.
நிறுவனங்களின் தோல்விக்கான பொறுப்பைத் தவிர்க்கும் அதே வேளை, தனிநபர்களின் கருணைச் செயல்களைக் கொண்டாடுவதன் மூலம் ஒரு அரசாங்கம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது. குணப்படுத்துதலுக்கு இவ்விரண்டையும் ஒப்புக்கொள்வது அவசியமாகும். வரலாற்று அநீதிகளை அரசுகள் எவ்வாறு எதிர்கொண்டன என்பதற்கு பிற நாடுகள் பயனுள்ள உதாரணங்களை வழங்குகின்றன.
ஜெர்மனி ஒருபோதும் யூத பெரும் களப்பலியை (Holocaust) குறைத்து மதிப்பிடவோ அல்லது அதை ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வாக மட்டும் காட்டவோ முயன்றதில்லை. நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கல்வி ஆகியவை ஒவ்வொரு தலைமுறையும் நடந்த நிகழ்வின் கொடூரத்தையும், அது மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான அரசின் பொறுப்பையும் புரிந்து கொள்வதை உறுதி செய்கின்றன. அந்தப் பயங்கரமான ஆண்டுகளின் வரலாற்றுத் தொகுப்புச் செய்திகளை பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருவதை கவனிக்கத்தக்கது. இதன் நோக்கம் நிரந்தரக் குற்ற உணர்வை உருவாக்குவது அல்ல, மாறாக நிரந்தர விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
சமத்துவம் மட்டுமே போதுமானதல்ல
சிறுபான்மையினர் கட்டமைக்கப்பட்ட அநீதியை எதிர்கொண்டுள்ள நிலையில், இனிவரும் காலத்தில் சமமாக நடத்துதல் மட்டுமே போதுமானதாக இருக்காது. நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தான் நீடித்த முயற்சியை மேற்கொள்ளத் தயாராக இருப்பதை அரசு தனது வார்த்தைகள், கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்க வேண்டும். இது தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிக்குப் பிந்தைய காலத்தில் காணப்பட்டது. அந்நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) சட்டத்தின் முன் சமம் என்று வெறுமனே பிரகடனப்படுத்த மட்டும் செய்யவில்லை. அது பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது, அவர்களின் சாட்சியங்களைக் கேட்டறிந்தது மற்றும் தேசிய அங்கீகாரத்தின் மூலம் அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுக்க முயன்றது.
அப்படியிருந்தும், தென்னாப்பிரிக்காவில் நல்லிணக்கம் என்பது இன்னமும் முழுமை பெறாத தொடர் முயற்சியாகவே உள்ளது.
கனடா தன் நாட்டின் பூர்வகுடி மக்களை நடத்திய விதத்திற்காக முறைப்படி மன்னிப்பு கோரியதுடன், குடியிருப்புப் பள்ளிகளில் (residential schools) பூர்வகுடிக் குழந்தைகள் சந்தித்த கொடுமைகளை ஆவணப்படுத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றையும் நிறுவியது. நியூசிலாந்து ஒருபடி மேலே சென்று, மாவோரி (Māori) சமூகங்களுடன் ஒப்பந்தங்களைப் பேசித் தீர்மானித்ததுடன், முடிந்த இடங்களில் நிலங்களை மீளளித்தது. மேலும், பாகுபாட்டைத் தடைசெய்வதற்கும் அப்பால் சென்று அவர்களின் கலாசார மற்றும் மொழி உரிமைகளைப் அங்கீகரித்துள்ளது. இந்த விடயத்தில் இலங்கை இன்னும் செய்ய வேண்டியவை நிறையவே உள்ளன; இருப்பினும் இங்கு பேரழிவுகள் மிகச் சமீபத்திய வரலாற்றுக் காலத்திலேயே நிகழ்ந்தன.
சிறுபான்மையினருக்கு எதிராக நிகழும் வன்முறைச் செயல்களும் ஏனைய சோகங்களும் மிகவும் வேதனையளிப்பவை, ஏனெனில் சிறுபான்மையினரால் பெரும்பாலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடிவதில்லை. அவர்கள் பாதிக்கப்படும்போது, அரசு அவர்களுக்குச் விசேட கவனத்தை அளிக்க வேண்டும். அவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவார்கள் என்பது அரசின் கொள்கையாக அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இது சாதாரண அர்த்தத்திலான சலுகைக் கவனிப்பு (preferential treatment) அல்ல; இது மறுசீரமைப்பு சிகிச்சை (restorative treatment) ஆகும்.
சட்டங்கள் சமத்துவத்தை வாக்குறுதி அளிப்பதால் மட்டும் பயம் நீங்கிவிடாது. தம்மைப் பாதுகாப்பதில் சந்தேகம் கொண்ட தரப்பினரின் பாதுகாப்பிற்காக அரசு தீர்க்கமாகச் செயல்படும் என்பதை அனுபவம் தொடர்ச்சியாக நிரூபிக்கும் போது மட்டுமே பயம் நீங்கும். சிறுபான்மையினரின் அந்நியப்பட்ட உணர்வு மற்றும் புறக்கணிப்பு காரணமாக, அவர்களுக்கு ‘மிகை ஈடுசெய்தல்’ (overcompensate) செய்ய வேண்டிய தேவை உள்ளது. இது கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் ஆகிய இரண்டு தொடர்பிலான கையாளுதல்களுக்கும் பொருந்தும்.
“மிகை ஈடுசெய்தல்” என்ற சொல் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், பிளவுபட்ட சமூகங்களிலிருந்து உருவெடுக்கும் அரசாங்கங்கள், சிறுபான்மையினர் உண்மையிலேயே இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்த பெரும்பாலும் தீவிரமாக இறங்கிச் செயல்பட வேண்டியுள்ளது. இது சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினரை விட அதிக உரிமைகள் தகுதியானவை என்பதற்காக அல்ல. மாறாக, அவர்கள் பாதுகாப்பின்மையின் பெரும் சுமையைச் சுமப்பதே இதற்குக் காரணம். பெரும்பான்மையின மக்கள் பொதுவாக அரசின் நிறுவனங்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்றே கருதுகின்றனர்.
ஆனால், சிறுபான்மையினரால் அந்த அனுமானத்தை அவ்வளவு எளிதாகச் செய்ய முடிவதில்லை. தாங்கள் ஏதோ தயவின் பேரில் சகித்துக் கொள்ளப்படாமல், சமமான பங்குதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறோம் என்பதற்கான அறிகுறிகளை அவர்கள் தொடர்ந்து தேடுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் ஆட்சி மொழிகள் எனக் கூறப்பட்டிருந்தபோதிலும், வடக்கிலும் குறிப்பாகக் கிழக்கிலும் நிர்வாகக் காரியங்கள் பலவும் இன்னமும் சிங்கள மொழியிலேயே நடைபெறுகின்றன; இதனால் தமிழ் பேசுபவர்களிடையே மனக்குறைகள் அதிகரித்து வருகின்றன.
பதிலளிக்கப்படாத அழைப்புகள்
அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவறவிடுவது சிறுபான்மையினருக்கு மட்டும் மட்டுப்பட்டதொன்றல்ல. ஒட்டுமொத்த மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுகிறது. அந்த வகையில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் என்பவை பெரும்பான்மைச் சமூகத்தினரும் சிறுபான்மைச் சமூகத்தினரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான குறையாகவே உள்ளது. ஆனால், இதில் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. பெரும்பான்மையினருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி மீறப்படும்போது, அது ஏமாற்றத்தை மட்டுமே உருவாக்குகிறது. ஆனால், ஒரு சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி மீறப்படும்போது, அது வரலாற்று ரீதியான பயங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதோடு, நம்பிக்கையின்மையும் வெறுப்பும் கட்டியெழுப்பப்பட வழிவகுக்கிறது.
எனவே, இதன் உணர்வுபூர்வமானதும் அரசியல் ரீதியானதுமான விளைவுகள் மிக அதிகமானவை. அரசாங்கத் தலைவர்கள் தங்களை அணுக முடியாதவாறு நடப்பதாகவும், தங்கள் தொலைபேசி அழைப்புகளுக்குக்கூட பதிலளிப்பதில்லை என்றும் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தலைவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இது திட்டமிடப்பட்ட பாகுபாட்டைப் பிரதிபலிக்காமல் இருக்கலாம்; அரசாங்கத் தலைவர்கள் அனைவருக்குமே அணுக முடியாதவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால், ஆழமாகப் பிளவுபட்டுள்ள சமூகங்களில் மக்களின் “எண்ணங்கள் மற்றும் பார்வைகளே” (perception) முக்கிய பங்கு வகிக்கின்றன.
நல்லிணக்கம் என்பது ஒரு தேசிய இலக்காக இருக்க வேண்டும் என்றால், சிறுபான்மையினரைப் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது அலட்சியப்படுத்தப்பட்டதாகவோ உணரவைக்கும் வகையில் அரசாங்கங்கள் நடந்துகொள்ளக் கூடாது. பதிலளிக்கப்படாத ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும், ஒத்திவைக்கப்படும் ஒவ்வொரு சந்திப்பும், நிறைவேற்றப்படாத ஒவ்வொரு வாக்குறுதியும், சிறுபான்மையினரின் பிரச்சினைகள் மீண்டும் ஒருமுறை தேசிய நிகழ்ச்சி நிரலின் அடிமட்டத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டன என்ற நம்பிக்கையையே வலுப்படுத்துகின்றன. இதே கொள்கை பாதுகாப்புத் துறையின் செயல்பாட்டிற்கும் பொருந்தும்.
பெரும்பான்மையினரால் நியாயமானதாகவும் அவசியமானதாகவும் கருதப்படும்்கண்காணிப்பு போனற நடவடிக்கைகள், பல தசாப்தகால கண்காணிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறைகளை அனுபவித்த சமூகங்களால் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் பார்க்கப்படலாம். இதன்பொருள் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வது என்பதல்ல; மாறாக, பாதுகாப்பும் நல்லிணக்கமும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதை உணர்வதாகும். ஒரு தொழில்முறை பாதுகாப்புத் துறை, சிறுபான்மை சமூகங்களுடனான தனது தொடர்புகளில் உணர்திறனையும் கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தும்போது அது தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துகிறது.
1983 ஜூலையின் கசப்பான பாடம் என்னவென்றால், சிறுபான்மையினர் அரசு மீதான நம்பிக்கையை இழக்கும்போது, அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு நீடிக்கும் என்பதாகும். நல்லிணக்கம் என்பது சம உரிமைகள் மற்றும் பாகுபாடற்ற தன்மையைக் கடந்தது. அவை எந்தவொரு ஜனநாயகத்திலும் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச தரநிலைகள் மட்டுமே. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தங்களை நம்பத் தயங்கும் மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப, முறையான சமத்துவம் மற்றும் பாகுபாடற்ற தன்மைக்கான தனது உறுதிப்பாட்டையும் தாண்டிச் செயல்பட வேண்டும்.
காணாமல் போனோரைக் கண்டறிதல், காணிகளை மீள ஒப்படைத்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களை நடத்துதல் போன்ற தனது தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை விரைந்து நடைமுறைப்படுத்துவதோடு, சிறுபான்மை சமூகங்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் வழக்கமான பேச்சுவார்த்தையைப் பேணுவது மிகவும் முக்கியமானது. பரந்த ஜனநாயக தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு அரசாங்கம், இந்த கூடுதல் முயற்சியை மேற்கொள்வது சிறுபான்மையினருக்குச் செய்யப்படும் ஒரு சலுகை அல்ல, மாறாக தேசிய ஒற்றுமைக்கான ஒரு அத்தியாவசிய முதலீடு என்பதைப் புரிந்துகொள்ளும்.
