(பரந்த உரையாடலுக்கான முன்னோட்டம்)
— வி.சிவலிங்கம் —
13வது திருத்தமும், புதிய ஜனநாயக கோரிக்கைகளும்
ஏற்கெனவே தரப்பட்ட அம்சங்களை கவனத்தில் கொண்டால், நாம் அதிகாரத்தை எட்டுவதற்கு மாற்று வழிகளையும் கண்டறிய வேண்டியுள்ளது. இங்கு 13வது திருத்தம் கைவிடப்பட வேண்டும் என்பதை விட அதன் பயன்பாடு குறித்து மேலும் பல விவாதங்கள் அவசியமாகின்றன.
உதாரணமாக, 13வது திருத்தத்தினை ஆரம்பமாகக் கொள்ளலாம் என கடந்த 40 ஆண்டுகளாக நாம் விவாதித்தும் ஒரு முடிவுக்கு வராத நிலையில் இந்த ஆரம்பத்தை வைத்து இன்னும் எத்தனை ஆண்டுகள் மக்கள் தம் தேவைகளை நிறைவேற்ற முடியும்? அது மட்டுமல்ல, 13வது திருத்தத்திற்கு எதிராக தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்துள்ளனர். எனவே இப் பிரச்சனை குறித்து நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
எனவே நாம் எமது அரசியலை இன அடிப்படையில் மட்டும் நோக்காமல், அதிகாரங்கள் நாட்டில் எவ்வாறு பகிரப்பட வேண்டும்? மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? இலங்கை ஒரு பல்தேசிய இனங்கள் வாழும் நாடு எனில் இறைமை அதிகாரம் நாடு முழுவதும் பகிரப்பட வேண்டும். அதாவது கீழ் மட்டங்களை நோக்கி அதிகாரம் விஸ்தரிக்கப்பட வேண்டும். இவை இன அடிப்படையில் அல்ல, மக்கள் என்ற அடிப்படையிலாகும்.
இன்றைய அரசு புதிய ஜனநாயக மாற்றம் குறித்துப் பேசுகையில் அதில் எமது பங்களிப்பு என்ன? பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்ட ஜனநாயக கட்டமைப்புக் குறித்து நாம் ஏன் பேசக் கூடாது? மாகாணசபை பற்றிப் பேசும் நாம் அதிகாரங்களைப் பகிரும்படி தெளிவாக ஏன் பேச மறுக்கிறோம்? இங்கு இனங்கள் என்பதை விட ஒவ்வொரு பிராந்தியங்களினதும் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் அப் பிராந்தியங்கள் அபிவிருத்தி அடைய வேண்டும். அபிவிருத்தி அடைய வேண்டுமெனில் அதிகாரங்கள் அம் மக்களை நோக்கிச் செல்ல வேண்டும்.
தமிழ் அரசியலில் இன்று எழுந்துள்ள முரண்பாடுகள் என்பன கோட்பாடுகள் சார்ந்ததாக இல்லை. அதாவது கட்சிகளுக்கிடையேயான முரண்பாடுகள் தனிநபர் சார்ந்ததாகவே அதிகம் உள்ளன. அவை தமிழ் அரசியலின் கடந்தகால நிகழ்வுகளின் பெறுபேறாக மக்கள் ஒருவகை கூட்டு உளவியல் தாக்கத்திற்குள் உள்ளார்கள். அதாவது அரசியல் அடையாளம், பல ஆண்டுகளாக மக்களின் அரசியல் பண்பாட்டுத் தளங்களில் மொழி குறித்து ஏற்படுத்தப்பட்ட உணர்வுகள் போன்றன மிக ஆழமான தாக்கத்தைச் செலுத்தியுள்ளன. இவற்றை நிராகரித்துச் செல்லுங்கள் என நாம் கோரினால் அவை துரோகமாகவே மக்களால் கொள்ளப்படும்.
தமிழ் அரசியலின் உளவியல் போக்குகள்
உதாரணமாக, சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற சிவில் யுத்தம் என்பது சுயநிர்ணய உரிமை என்பதைச் சுற்றியே நிகழ்ந்தது. இதற்காக மக்கள் மிக அதிகளவு தியாகங்களைச் செலுத்தியுள்ளார்கள். இதன் காரணமாக, அரசியல் இலக்கு என்பது மிகவும் புனிதமான ஒன்றாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இக் கொள்கைகளைக் கைவிடுவது என்பது இறந்தவர்களை ஏமாற்றுவதாக, அவர்களின் தியாகங்களுக்குத் துரோகம் இழைப்பதாக அமையும் என்ற அளவிற்கு நம்பிக்கை வளர்ந்துள்ளது. இவ்வாறான உளவியல் தாக்கத்தை தமிழ் அரசியல் இன்னமும் கொண்டிருக்கிறது. குறிப்பாக ‘தனித் தமிழீழம்’ என்ற எண்ணக்கரு தமிழ் அரசியலில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகிறது. போரின் தோல்விகள், தேர்தல் தோல்விகள், சர்வதேச ஆதரவுச் சரிவு என பல யதார்த்தமாக தெரிந்த போதிலும் மிகவும் கணிசமான தமிழ் மக்கள் பிரிவினை இன்னமும் சாத்தியம் என்ற எண்ணக்கருவோடு வாழ்கின்றனர். இந்த உளவியல் தடையிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
இந்த உளவியல் தடையிலிருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டுமாயின் அம் மக்களின் கௌரவம் அல்லது அந்தஸ்து பாதுகாக்கப்பட வேண்டும். அதாவது நாட்டில் தாம் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல என்ற மன உணர்வு தோற்றம் பெற வேண்டும். அம் மக்கள் வாழும் பிரதேசங்கள் பாரபட்சமற்ற வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மாற்றம் ஒன்று நிகழ்வதை மக்கள் தாமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான மன உணர்வு தோற்றம் பெறுவதை பெரும்பான்மைச் சிங்கள மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். இம் மாற்றங்கள் தேசிய ஐக்கியத்தின் அவசியத்தை அம் மக்கள் மத்தியில் தோற்றுவிக்க வேண்டும். அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் வினைத் திறன் மிக்கதாகவும், ஊழல் அற்றதாகவும், அபிவிருத்தியில் அதிக நாட்டம் கொண்டதாக இருப்பதையும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றங்கள் நிகழ வேண்டும்.
இவ்வாறான மாற்றங்கள் தேசிய அளவில் ஏற்படுவதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும். உள் நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படுவதற்கான அடிப்படைகள், ஜனநாயக சீர்திருத்தங்கள், பிராந்தியங்களில் பாரபட்சமற்ற வகையிலான அபிவிருத்தி ஏற்படுவதை அந்த நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதுவரை இக் கருத்துக்களைப் படித்த ஒருவர் பிரச்சனைகள் இனவாத அடிப்படையில் அணுகாமல் மக்கள் அல்லது காத்திரமான சிவில் சமூகத்தினை கட்டி எழுப்புதல் என்ற புதிய மாற்றத்திற்குள் செல்வதை அவதானிக்க முடியும். தமிழ் மக்களுக்கான சுயாட்சி என்பதற்குப் பதிலாக நாட்டில் ஜனநாயக அடிப்படையிலான செயற்பாடுகளைக் கொண்டிருக்கும் பிராந்தியங்கள் என்ற விவாதங்களாக மாற்றமடைய வேண்டும். இவ்வாறான மாற்றங்கள் சமத்துவமான உரிமை பெற்ற மக்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். தேசிய செல்வ வளர்ச்சி சகல மக்களுக்கும் நியாயமான விதத்தில் பங்கீடு செய்யப்பட வேண்டும்.
அடையாள அரசியல்
இக் கட்டுரையில் ஏற்கெனவே குறிப்பிட்டது போல எமது அணுகுமுறைகள் நாட்டின் யாதார்த்தத்திற்கு ஏற்ற வகையிலும், மாறி வரும் சர்வதேச, மற்றும் உள்நாட்டு நிலமைகளை கருத்தில் கொண்டுள்ள வகையிலும் எமது அடிப்படைக் கருத்துக்கள் ‘ அதிகாரப் பரவலாக்கம் என்பது இலங்கையின் ஜனநாயக எதிர்காலத்தைப் பலப்படுத்தும்’ என்பதாகவும், அதிகார பரவலாக்கம் என்பது தமிழ் மக்களின் எதிர் காலத்தை வலுப்படுத்தும்’ என்பதாகவும் மக்களின் நம்பிக்கைகள் மாற்றம் பெற வேண்டும். அதன் மூலமே பிரிவினைக் கோரிக்கை தொடர்பான உளவியல் போக்கை மாற்ற முடியும்.
தமிழ் அரசியல் மிக அதிக காலமாக அடையாள அரசியலுக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே போலவே சிங்கள அரசியலும் சிங்கள பௌத்த பேராதிக்க அடையாள அரசியலுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே இலங்கையில் நிலையான அரசியல் நிர்வாகமோ, பொருளாதார கட்டுமானமோ ஸ்தாபிதம் அடையவில்லை. இன்று அவ்வாறான அடையாள அரசியலிலிருந்து மாற்றம் பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. இவற்றை அவதானித்து தமிழ் அரசியலும் தனது அரசியல் உபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
மிக நெடுங் காலமாக தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான இனம் என்ற கருத்து ஆழமாக வேருன்றியுள்ளது. இதன் காரணமாக, பன்மைத்துவ ஜனநாயக இலங்கையில் தாம் ஒரு சிறுபான்மையினர் என்பதை ஏற்க முடிவதில்லை. இதற்குப் பிரதான காரணம் தொடர்ச்சியான இனக் கலவரங்கள், சமூகங்களுக்கிடையேயான நல்லுணர்வு சீரழிந்த போக்கேயாகும்.
இதன் விளைவாக சமஷ்டி அல்லது சுயநிர்ணய உரிமை கோரிக்கைகள் தமது அந்தஸ்தை, கௌரவத்தைக் காப்பாற்றும் என நம்புகிறார்கள். இக் கோரிக்கைகளைக் கைவிட்டால் தமது அடையாளம் பறிபோவிடும் என்ற அச்சம் நிறையவே காணப்படுகிறது. இருப்பினும் இக் கோரிக்கைகள் பல தசாப்தங்களாகவே சாத்தியமாகாத நிலையிலும் அந்த நிலைப்பாட்டைக் கைவிட முடியாத உளவியல் தாக்கத்தில் உள்ளனர்.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல எமது அரசியல் மொழிப் பிரயோகத்தில் நாம் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அதாவது இனத்துவம் (Nationhood) என்பதிலிருந்து பிரஜைகளின் அதிகாரம் (Citizenship power) என மாற்றம் பெற வேண்டும். இதனை ஏன் வற்புறுத்துகிறேனெனில் ஒரு ஜனநாயக அரசில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதால் அடையாளங்களை இழக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, சுவிற்ஸலாந்து ( Switzerland) மற்றும் பின்லாந்து (Finland) போன்ற நாடுகளில் அதிகார பரவலாக்க அடிப்படையிலான நிர்வாகங்கள் உள்ளன. அடையாள அரசியலும், அதிகார பரவலாக்கமும் சகவாழ்வு நடத்துகின்றன.
இலங்கையிலுள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களிடையே பரஸ்பர அவநம்பிக்கை மிக அதிகளவில் உண்டு. இதற்கான வரலாற்றுக் காரணிகளும் உண்டு. இவை காரணமாக இலங்கையில் நிலவும் ஆட்சிப் பொறிமுறை, சிங்கள பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஆட்சிப் பொறிமுறை, பண்டா-செல்வா ஒப்பந்தம், மற்றும் டட்லி- செல்வா ஒப்பந்த ஏமாற்றங்கள் நியாயமான தீர்வுகளைக்கூட எட்ட முடியாது என்ற நிலைக்குத் தள்ளியதுடன், மிகவும் இறுக்கமான விட்டுக்கொடுக்காத நிலையை எடுத்தால் மாத்திரமே மாற்றம் சாத்தியம் என்ற நிலையை நோக்கி தமிழ் அரசியலைத் தள்ளியுள்ளது.
இவைகள் கடந்தகால அனுபவங்களாக இருப்பினும், உலக அளவிலும், உள்நாட்டு அரசியல் போக்கிலும் மாற்றங்கள் ஏற்படும் நிலையில் ஒரே நிலைப்பாட்டில் தொடர்ந்து இறுக்கமாக இருக்க முடியாது என்பதனையும், அவ்வாறான முடிவுகள் மக்களின் அன்றாட வாழ்வைத் தொடர்ந்து பாதிப்பதோடு, அவ்வாறான நிலைப்பாடு தொடர்ச்சியான தோல்விகளைத் தழுவும் போது மக்கள் அந்த அரசியல் மீதும் அவநம்பிக்கை கொள்கிறார்கள். இதுவே 2009 ம் ஆண்டின் பின்னர் தமிழர் தேசிய கூட்டமைப்பினர் பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரபரவலாக்க சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நோக்கிச் செல்வதான ஒரு முடிவுக்கு வந்து அதன் பின்னரான தேர்தல்களிலும் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றார்கள். இருந்த போதிலும் இம் முடிவுகளை எடுத்த தமிழர் தேசியக் கூட்டமைப்பிலிருந்த இதர உதிரிக் கட்சிகளால் அக் கூட்டமைப்பில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. பிரிந்தது மட்டுமல்ல, கூட்டமைப்பிலிருந்தபோது எடுத்த முடிவுகளை மறுதலித்து மீண்டும் தமிழ் இறைமை என்ற போர்வையில் பிரிவினை அரசியலுக்குள் சென்றார்கள். இம் முடிவுகள் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவியதா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
இங்கு அரச அதிகாரத்தில் உள்ளவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, நிறுவன ரீதியான உறுதிகளும் அவசியமாகின்றன. உதாரணமாக, அரசியல் யாப்பு நீதிமன்றம் மூலமான உறுதிகள், மீளப் பெற முடியாத வகையிலான அரசியல் யாப்பு ஏற்பாடுகள், சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலான சட்ட உத்தரவாதங்கள் பற்றிய கோரிக்கைகள் அவசியம். அதாவது நாட்டின் நிர்வாகங்கள் மூலமான பாதுகாப்பே தவிர வெறும் வாக்குறுதிகள் அல்ல என்பதாகும். இவை பெரும்பான்மைச் சமூகத்தினரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே நிரந்தர தீர்வாக அமையும். ஆனால் நம்மவர்களில் சிலர் அது எங்கள் வேலையல்ல, அது அவர்களின் வேலை என கையை விரிக்கின்றனர். இங்கு நோய்க்கு அவசியமா? அல்லது மருந்துக்கு அவசியமா? என்பதை நாம் புரிதல் வேண்டும்.
இதுவரை தெரிவித்த கருத்துக்களை நாம் சுருக்கமாகப் பார்ப்பின் ‘அதிகார பரவலாக்கம் என்பது இலங்கையின் எதிர்காலத்தை பலப்படுத்தும்’ என்பதாகவும், அதிகாரப் பரவலாக்கம் என்பது தமிழ் மக்களை வலுப்படுத்தும்’ என்பதாகவும் நாம் கருத முடியும்.
தமிழ் அரசியல் தலைவர்களும் பாரம்பரிய கோரிக்கைகளுக்கு அப்பால் செல்ல முடியாதுள்ளனர். ஏனெனில் அவர்களின் அரசியல் நியாயத்தன்மை என்பது இவற்றில்தான் தங்கியுள்ளது. இவற்றில் மாற்றம் ஏற்படுமாயின் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் அல்லது துரோகம் இழைத்ததாகக் கருதப்படுவார்கள் என்ற அச்சம் உள்ளது.
புலம்பெயர் அரசியல்
இங்கு இன்னொரு அம்சம் எமது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதாவது புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் தமிழ் அரசியலில் மிகவும் காத்திரமாக உள்ளது. இவர்கள் புலம்பெயர்ந்தமைக்கான காரணம் அங்கு காணப்பட்ட இனவாத அரசியலும், அதன் தாக்கங்களுமாகும். எனவே இம் மக்கள் அத் துன்பங்களை இன்னமும் சுமந்து வருகிறார்கள். அவர்களின் உணர்வுகள் என்பது 30 வருடகால போரின் அனுபவங்களோடு பின்னிப் பிணைந்துள்ளது. அவர்களது அரசியல் கருத்துக்கள் அப் போரின் வடுக்களோடு இணைந்தே எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் அவர்களது அரசியல் கோரிக்கைகள் அதிகபட்ச தீர்வுகளை நோக்கியதாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இவர்களுக்கு அக் கோரிக்கைகளை அடைவதற்கான தடைகள் குறித்து கவலைகள் இல்லை. ஏனெனில் அக் கோரிக்கைளை அடைவதற்காக எடுக்கும் முயற்சிகளின்போது எழும் தாக்கங்களை இவர்கள் அனுபவிக்கப் போவதில்லை.
அவ்வாறான நிலையில் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை என்பது தமிழ் பகுதிகளின் முதலீடாக மாற்றம் பெற வேண்டும். மூலதன முதலீடு, தொழில்நுட்ப முதலீடு, பல்கலைக்கழக மட்டத்திலான இணைப்பு போன்ற துறைகளாக மாற்றமடைதல் வேண்டும். தமிழ் மக்கள் பொருளாதாரம், தொழில் நுட்பம் மற்றும் பல துறைகளில் வளர்ச்சியடையும்போது அவை பிராந்திய வளர்ச்சி பற்றியதாக அதாவது கோட்பாட்டுப் போராட்டங்களாக அல்லாமல் அவை மீள் கட்டுமான கோரிக்கைகளாக மாற்றம் பெறும்.
பொதுவாகவே மிக நீண்டகால போராட்டங்கள் மக்களின் மனங்களில் மாறாத வடுக்களாக அமைகின்றன. அதாவது தமிழ் அரசியல் என்பது வெறும் அரசியல் கோரிக்கைகளாக அல்ல, அவை தமது துன்பத்திற்கான பிரதான காரணியாகவும் புரியப்படுகின்றன. இந்த உளவியல் தாக்கத்திலிருந்து விடுபடுவதாயின் மாற்று வழிகளை நோக்கிச் செல்வது தாம் கடந்த கால வரலாற்றை நிராகரித்துச் செல்லும் ஒன்றாக மாறும் ஆபத்து உள்ளதாகக் கருதுகின்றனர்.
இவை குறித்து நாம் விவாதம் நடத்துவதற்குப் பதிலாக, இத் தாக்கத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது? என்பதே பிரதானமானது. இன்று தமிழ் அரசியலில் கடந்த கால துன்பங்கள் குறித்த அம்சங்கள் தமிழ் அரசியலை ஒரு எல்லைக்கு அப்பால் மாற்றத்திற்குள் செல்ல முடியாதவாறு ஒருவகை உளவியல் தாக்கத்திற்குள் தொடர்ந்து தள்ளி வருகிறது. தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டம் என்பது கௌரவம், பாதுகாப்பு, சமமான வாய்ப்புகள் என்பதாகவே நாம் கொள்ள முடியும். தாம் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல என்பதை உணரும் விதத்தில் மாற்றங்கள் இடம்பெற வேண்டும். இவற்றிற்கான பரிகாரம் என்பது குறுகிய காலத்தில் சாத்தியப்படப் போவதில்லை. புறச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவகை நம்பிக்கையைத் தோற்றுவிக்க வேண்டும். இவற்றை அடைய மாற்று வழிகள் உண்டு. அவை எமது அடிப்படைக் கோரிக்கைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுப்பதாக அமையாது. பதிலாக, அவை எமது கோரிக்கைகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
உதாரணமாக, தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிடுவது என்பது தமக்கான பேரம் பேசும் ஆற்றலைக் கைவிடுவதற்கு ஒப்பானது என வாதிக்கின்றனர். இத்தகைய வாதங்கள் மாற்று ஏற்பாடுகளை நிராகரிப்பதோடு மாற்றங்களுக்கு எதிரான ஒரு தடுப்புச் சுவரையும் எழுப்புகிறது. ஆனால் அதிகார பரவலாக்கம் என்பது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மேலும் பலப்படுத்த உதவுகிறது. பிராந்திய நிர்வாகங்களை சுதந்திரமாகச் செயற்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. அதாவது தமிழ் மக்களின் பங்களிப்பு தேசிய அளவில் அங்கீகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல அரசியல் மொழியில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இன்றுள்ள அரசியல் தலைவர்கள் மிக நீண்ட காலமாக ஒரே அரசியல் மொழியில் அதாவது அரசியல் யாப்பு சட்ட மொழியில் பேசி வருகின்றனர். அதாவது ஒற்றை ஆட்சி, சமஷ்டி என்பதற்கு அப்பால் செல்வதில்லை. இவை மிக நீண்ட காலமாகவே வெறும் கோஷங்களாக மட்டுமே மக்களால் உணரப்படுகிறது. மக்கள் இக் கோரிக்கைகளால் தம் வாழ்வில் யதார்த்த மாற்றங்கள் ஏற்படுமா? எனச் சந்தேகம் கொள்கின்றனர். அது மட்டுமல்ல, மக்களுக்கும், இக் கோரிக்கைகளுக்குமிடையே பாரிய இடைவெளியுள்ளது.
அரசியல் கோரிக்கைகள் தமது அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருவதாக மாறும்போதுதான் அவற்றில் மக்கள் நம்பிக்கை கொள்வார்கள். உதாரணமாக, சமஷ்டி என்பது தாம் வாழும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளின் வளர்ச்சியில் அவர்களுக்கான பங்கினை வழங்குமாயின் அல்லது வைத்தியசாலைகளின் தரம் பற்றிய பிரச்சனைகளில் பங்கினை வழங்குமாயின் அல்லது தாம் வாழும் பிரதேசங்களில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் தீர்மானங்களில் தமது பங்கினை வழங்க வாய்ப்புகள் கிட்டுமாயின் தமது முடிவுகளின் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படுவதை தாமே காண்பார்கள்.
மிக நீண்ட கால அரசியல் கூட்டு உளவியல் தாக்கத்தில் சிக்கியுள்ள சமூகங்கள் விரைவாக வெளியில் மீண்டு வர முடியாது. அவ்வாறான பிரச்சனைகளிலிருந்து வெளிவர வேண்டுமாயின் சமூகம் தம்மை மாற்றத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராக வேண்டும்.
முதலாவது நாட்டிலுள்ள சமூகங்கள் அனைத்தும் நாட்டின் வரலாற்று மாற்றங்களுக்காக எண்ணற்ற பல தியாகங்களை மேற்கொண்டுள்ளதை சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் இடம்பெற்ற சிவில் யுத்தம் நாட்டின் அரசியல் வரைபடத்தை இன்று முற்றாக மாற்றியுள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நாட்டின் அரசியல் கட்டுமானம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு, தேசிய இனங்களின் ஜனநாயகப் பங்களிப்புக்கான வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார அடிப்படைகள் முற்றாக மாற்றப்பட்டு அதிகார பரவலாக்க அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
இன்று இலங்கையின் தேசிய அரசியலில் தேசிய ஐக்கியத்தின் அவசியம் உணரப்பட்டுள்ளது. தேசிய பொருளாதார நிர்மாணத்தில் சகல பிரிவினரின் பங்களிப்பு அவசியம் என்பது உணரப்படுகிறது. வினைத்திறன் மிக்க அரசுப் பொறிமுறையின் அவசியம் புரியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நிர்வாக யந்திரத்தில் காணப்படும் ஊழல், விரயம் போன்றவற்றிற்கெதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதே போலவே நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் அபிவிருத்தி குறித்த கவனம் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுகிறது.
எனவே சுயாட்சி என்பது பிரிவினையை குறிப்பிடுவதை விட ஜனநாயக பிரதேசங்களாக விவாதங்கள் மாற வேண்டும். அங்கு பிரஜைகளுக்கான சமத்துவம், வளங்களை நீதியான விதத்தில் பகிருதல் என்பதாக அரசியல் மொழி மாற வேண்டும்.
அடையாள அரசியலின் உள்ளடக்க மாற்றம்
தமிழ் அரசியலில் தாம் ஒரு தனித்துவமான இனம் என்ற உணர்வு மிகவும் ஆழமாக உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்கான வரலாற்றுக் காரணிகள் பலவுண்டு. ஆனாலும் யதார்த்தத்தில் இலங்கை என்ற பன்மைத்துவ அரசுக் கட்டுமானத்திற்குள் வாழும் சிறுபான்மையினர் என்பதை மறுக்க முடியாது. கடந்தகால வரலாற்றுக் காரணிகள் சமஷ்டி அல்லது சுயநிர்ணய உரிமை என்ற என்ற கோட்பாட்டிற்குள் அந்த மக்களை இழுத்துச் சென்றுள்ளது. இவற்றிற்கு கறுப்பு யூலை போன்ற இனக் கலவரங்கள் சமூகங்களிடையேயுள்ள நம்பிக்கையைக் குலைத்துள்ளன. இவை குறித்து கேள்விகளை எழுப்புவது சமூகத் துரோகம் என்ற அளவிற்கு அதாவது தமது அடையாளங்களை விட்டுக் கொடுப்பதாக உணரும் அளவிற்கு நிலமைகள் உள்ளன.
நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட சுவிற்ஸலாந்து, பின்லாந்து போன்ற நாடுகளில் இவ்வாறான இனங்களுக்கிடையேயான சந்தேகங்கள் இருந்த காரணத்தால்தான் அதனைத் தடுக்க அதிகார பரவலாக்க அடிப்படையிலான அரசுப் பொறிமுறை அறிமுகமானது. அந்த நாடுகளின் அரசியல் பொருளாதாரம் மிக உயர்ந்த நிலையிலுள்ளது. இந்த நாடுகளில் மிகவும் ஆழமான மொழி, அடையாளம், அரசியல் அதிகாரம் குறித்த பல சந்தேகங்கள் காணப்பட்டன. அதற்கான தீர்வாக அதிகார பரவலாக்க யோசனைகள் அமைந்தன. இங்கு எமது கவனத்திற்குரிய அம்சங்கள் எதுவெனில் உதாரணமாக, பின்லாந்தில் மொழிச் சமத்துவம் வழங்கப்பட்டது. அதாவது பினிஷ், சுவிடிஷ் மொழிகள் அந் நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனால் மொழி ஆதிக்கம் தடுக்கப்பட்டது. எமது நாட்டில் சிங்களம் மட்டும் சட்டம் அமுலாகிய காரணத்தால் இதர சமூகங்கள் இரண்டாம்தர நிலைக்குத் தள்ளப்பட்டன. மொழிகள் என்பது தேசிய சொத்துக்கள். அவை இனங்களை அடையாளப்படுத்துவதை விட சகல சமூகங்களின் வளர்ச்சியின் அதாவது தேசிய சொத்துகள் என்பதாகக் கொள்ள வேண்டும்.
சர்வதேச அனுபவம்
பின்லாந்து ஒரு ஒற்றை ஆட்சி நாடாகும். ஆனால் அந்த நாடு மிகவும் பலமான சுயாட்சிக் கட்டுமானங்களைக் கொண்டுள்ளது. அதாவது மத்தியிலும், மாநிலங்களிலும் பன்மைத்துவ ஜனநாயக நிர்வாக அலகுகளைக் கொண்டுள்ளது. எனவே சுயாட்சிக் கட்டுமானங்களைக் கட்டுவதற்கு சமஷ்டி அவசியம் அல்ல, பதிலாக அதிகார பரவலாக்க உட் கட்டுமான நிர்வாக அலகுகள்தான் பிரதானமானவை.
இதே போன்றே சுவிற்ஸலாந்திலும் கத்தோலிக்கர்களுக்கும், புரட்டஸ்தாந்து மதத்தினருக்குமிடையே மிக அதிகளவில் உள் முரண்பாடுகள் காணப்பட்டன. அந்த நாட்டில் ஜேர்மன், பிரெஞ்ச், இத்தாலியன், றோமானியர் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். இன மோதல்களின் காரணமாக அந்த நாட்டில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பு 1848 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் அந் நாடு கன்ருன் ( Cantoons) என்ற எங்கள் நாட்டில் மாகாணங்கள் என்பது போல பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இப் பிரதேசங்கள் ஒவ்வொன்றிற்கும் அப் பிரதேசங்களின் கல்வி, வரி விதிப்பு, பொலீஸ் அதிகாரம், சுகாதார சேவைகளைப் பராமரித்தல் குறித்து அதிக அதிகாரங்கள் உள்ளன. இதனால் ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் அச்சம் அதிகளவாகக் குறைந்தது. மத்தியில் உள்ள அரசு பிரதேசங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இதனால் அங்கும் தனி இனம் இதர இனங்கள் மீது மேலாதிக்கம் செலுத்த முடியாது.
மேற்குறித்த நாடுகளின் சில அம்சங்களை நீங்கள் அவதானிப்பின் பல முடிவுகளை நோக்கி உங்கள் கவனத்தைச் செலுத்த முடியும். எமது இலங்கைத் தீவில் அரசியல் என்பது உள்நாட்டுப் போராக விரிவடைந்து சென்றமைக்கான காரணம் நாட்டின் பிரதான நிர்வாக அலகுகள் பன்மைத்துவ சமூதாயத் தேவைகளைப் புறக்கணித்து சிங்கள பௌத்த பேராதிக்க அரசாக செயற்பட்டமையேயாகும். குறிப்பாக, மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட நிர்வாகக் கட்டுமானம், மொழி அடிப்படையிலான பாரபட்ச நிர்வாகம், சிறுபான்மையினருக்கான பாதுகாப்பற்ற நிலமைகள், அரசியலில் காத்திரமான போட்டி நிலவுவதற்கான அடிப்படைகள் அற்ற நிலமைகள் போன்றனவாகும்.
தமிழ் அரசியலில் பாரிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பெரும்பான்மை, சிறுபான்மை என்பதை விட சகலரும் இலங்கையர் எனச் சிந்திப்பதற்கான தருணம் தற்போது படிப்படியாக முகிழ்ந்து வருகிறது. இம் மாற்றத்தைச் சரியாகக் கணித்து ஏற்ற வகையில் செயற்படாவிடில் இம் மொட்டு கருகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழ் அரசியலின் பிரதான அம்சம் அரசியல் யாப்பு மாற்றம் என்பதை விட அதிகாரத்தை நெருங்குவதற்கான தடைகளை உடைக்கும் புதிய உளவியல் உந்துவிசை தேவையாகிறது. எமது எதிர்காலச் சந்ததியினர் தொடர்ந்தும் இதே சகதிக்குள் புதைந்து துன்பப்பட முடியாது. ஏதோ ஒரு வகையில் புதிய மாற்றத்திற்கான புதிய விசைகள் முளைக்க வேண்டும்.
சாராம்சம்
இக் கட்டுரை இன்று உலக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானித்து குறிப்பாக, உலக தென் பிராந்திய ( Global South ) பூகோள அரசியல் பொருளாதார மாற்றங்களை கவனத்தில் கொண்டே வரையப்பட்டுள்ளது. இலங்கையில் 2022ம் ஆண்டு இடம்பெற்ற ‘அறகலய’ எழுச்சி, அதன் பின்னர் 2024ம் ஆண்டு இடம்பெற்ற மூன்றாவது அரசியல் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரவேசம், அதன் பின்னரான உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, இலங்கையின் பொருளாதாரம் மேற்கு நாடுகளின் ஆதிக்கத்திற்குள் தொடர்ச்சியாக இருப்பதன் காரணமாக தேசிய பொருளாதாரத்தை தாம் நினைத்தவாறு நிர்மாணிக்க முடியாதவாறு சர்வதேச நாணயசபை, உலக வங்கி போன்ற அமைப்புகள் கடன்களை வழங்கி கட்டுப்படுத்தி வருகின்றன. இவ்வாறான ஒரு கட்டுப்பாட்டிற்குள் தேசிய மக்கள் சக்தி அரசும் சிக்கியுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறான மேற்குலக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக செயற்பட்ட ஜே வி பி இணைந்த இன்றைய அரசு இன்று தவிர்க்க முடியாதவாறு இக் கட்டுப்பாடுகளுக்கு அமையச் செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிக் காலம் 2027ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. அதன் பின்னர் இலங்கை தொடர்ந்தும் அக் கடன் உதவிகளைப் பெறுவதா? இல்லையா? என்பது குறித்துத் தீர்மானிக்க வேண்டும். தற்போது சர்வதேச கடன் உதவியை தொடர்ந்தும் பெறுவதா? அல்லது தேசிய பொருளாதாரத்தை நிர்மாணிக்க மாற்று ஏற்பாடுகளை நோக்கிச் செல்வதா? என்ற விவாதம் இன்று அவசியமாகியுள்ளது.
இவ் விவாதம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணி என்பதால் தமிழ் அரசியல் இவை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தேசிய பொருளாதார நிர்மாணத்தில் தமிழ் மக்களினது அல்லது இதர தேசிய சிறுபான்மை இனங்களது பங்களிப்பு அவசியமானது. அவ்வாறாயின் தேசிய புனர் நிர்மாணத்தில் தேசிய சிறுபான்மை இனங்கள் காத்திரமான பங்களிப்பைச் செலுத்தும் விதத்தில் புதிய கோணத்தில் அரசியல் விவாதங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
குறிப்பாக, இக் கட்டுரையில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்படும் அம்சமாக, தமிழ் அரசியல் என்பது ஒற்றை ஆட்சியா? சமஷ்டியா? என்ற விவாதத்திற்குப் பதிலாக, அதிகாரக் குவிப்பா? அதிகார பரவலாக்கமா? என்ற விவாதத்திற்குள் செல்ல வேண்டும். இனவாரியான சுயாட்சிக் கோரிக்கைக்குப் பதிலாக பிரதேசவாரியான அதிகார பரவலாக்கத்தைக் கோர வேண்டும். சுமஷ்டி என்பது இன அடிப்படையிலான தீர்வு என்பதை விட அது பிரதேச வளர்ச்சியை உறுதி செய்வதாக கொள்ள வேண்டும். இவ்வாறான காத்திரமான கருத்துப் பரிமாற்றம் புதிய விவாதங்களைத் திறக்கும் என எதிர்பார்க்கிறேன்.
மொத்தத்தில் இன்று தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு, தமிழ் அரசியலும் தனது அரசியல் பார்வையை திருப்ப வேண்டும். இவ் விவாதங்கள் இன்று மிகவும் அவசியம் என்பதால் மிக நீளமான கட்டுரையாக அமைந்துள்ளதை புரிந்து; கொள்கிறேன். இருப்பினும் காலத்தின் தேவை கருதியும், வாசகர்கள் பிரச்சனைகளின் ஆழத்தைப் புரிந்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம் என்பதனாலும் அவ்வாறான வகையில் எனது கருத்துக்களை முன் வைத்துள்ளேன். இவை வாசகர்களின் மேலான கருத்துக்களைத் தூண்டும் என எதிர்பார்க்கிறேன்.
(முற்றும். )
இலங்கை அரசியலின் எதிர் காலம்.(பகுதி 4)
