போர்க்கால அலங்கோலங்கள்..!             ஒரு அரசாங்க அதிபரின் டயறி பேசுகிறது…..! (மூன்றாவது கண்:XXVI)

போர்க்கால அலங்கோலங்கள்..! ஒரு அரசாங்க அதிபரின் டயறி பேசுகிறது…..! (மூன்றாவது கண்:XXVI)

— அழகு குணசீலன் —


“ஆண்டவா! எனது மனைவியை விதவையாக விட்டுவிடாதேயும், என் பிள்ளைகளை அனாதைகளாக போகவிடாதேயும், நீர் மாத்திரமே தஞ்சம்…..! 


விடுதலைப்புலிகள் என்னைக் கொலை செய்யும் படியாக ‘கங்காரு நீதிமன்றத்தை ‘ கூட்டினார்கள். ஆண்டவர் என்னைக் காப்பாற்றினார்…..”.


போர்க்கால இழப்புகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது. அதற்கு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நிவாரணம் – தீர்வு-நீதி கோரி தமிழ்த்தேசியம் அரசியல் செய்கிறது. ஆனால் மக்களின் அந்த இழப்புக்களுக்கும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் தமிழ்த்தேசிய ஆயுத, அதிகார மோகமும் பங்காளியாக இருந்தது என்பதை அது குருட்டுத்தனமாக மறைத்துவருகிறது. 


இந்த அநீதியான  அடக்குமுறை அரசியல் கலாச்சாரத்தில் போர்க்காலத்தில்  மக்கள் சேவையில், நடுநிலை நிர்வாகத்தில் அனைத்து தரப்பு ஆயுத வன்முறையாளர்களாலும் அரசாங்க அதிகாரிகள் எவ்வாறு மத்தளமாக அடிவாங்கினார்கள் என்பதை  குறைந்த பட்சம் ஒரு அரசாங்க அதிபரின் போர்க்கால டயறி பேசுகிறது என்றால்  அது தற்துணிவையும், சமூக அக்கறையும், நீதியையும் பேசுகிறது. யுத்தம் என்றாலே சாவும், அழிவும், நாசமும் தான். நடந்தவற்றை பற்றி கூறித்தான் ஆகவேண்டும்” என்கிறார்  இந்த நூலின் ஆசிரியர்.


எஸ்.எம்.குரூஸ்  என்று  அறியப்பட்ட  சவரியான் மரியதாசன் குரூஸ் அவர்கள் இலங்கை நிர்வாகசேவையில் நாடறிந்த ஒரு மூத்த நிர்வாகஸ்த்தர். அவர் போர்க்காலத்தில் மன்னார் மாவட்டத்தில் உதவி அரசாங்க அதிபராக, அரசாங்க அதிபராக கடமையாற்றிய காலத்திலும், போருக்கு பின்னரான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புனரமைப்பு -அபிவிருத்தி பணிகளில் தனக்கு இருந்த நெருக்கடிகளையும், மற்றும் ஆயுத அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள்….. போன்ற ஜனநாயக மறுப்புக்களையும் பற்றி இந்த  நூலில் பேசுகிறார். 


போரில் பங்காளிகளான இருதரப்பினரும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி இந்நூல் எடுத்துரைக்கிறது. எனினும் மூன்றாவது கண் இங்கு  இந்திய, இலங்கை படையினரின் இராணுவ நடவடிக்கைகளை தவிர்த்து, ஒரு அரசாங்க நிர்வாகி எவ்வாறு நெருக்குதல்களை எதிர்கொண்டார் என்பதற்கு முதன்மை அளிக்கிறது. ஏனெனில் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்த தகவல்கள் புதைகுழியிலேயே போடப்பட்டிருந்தன. அந்த புதை குழியை ஆசிரியர் குரூஸ் தோண்டுகிறார். பயங்கரவாதம் என்று அரசு மேற்கொண்ட தாக்குதல்கள் அளவுக்கும் அதிகமாக ஏற்கனவே ஒரு தரப்பினரால் பிரச்சாரப்படுத்தப்பட்டிருப்பதால் அப்பகுதியை மூன்றாவது கண் தவிர்க்கிறது. போரில் பேசப்படாத பக்கத்தை விடுதலையின் பேரிலான தறுதலை செயற்பாடுகளை பேசுகிறது 


 “அரசாங்க அதிபரின் யுத்தகால டயறியில் இருந்து” என்பது அந்த நூலின் பெயர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் “GOVERNMENT AGENT’S  WARTIME  DIARY” ஏக காலத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அந்த நூல் குறித்த ஒரு அறிமுகம் இப்பதிவு.


1983 முதல் 2009 வரையான போர்க் கால சம்பவங்களை பொதுவாகவும், சிறப்பாக மன்னார் மாவட்டத்திலும்  இடம்பெற்ற தாக்குதல்கள், மக்களின் இடம்பெயர்வுகள், முஸ்லிம் மக்களின் வெளியேற்றம், அரச படைகள், ஆயதப்போராட்ட அமைப்புக்களின் செயற்பாடுகள், முருங்கன் பொலிஸ் நிலைய கைப்பற்றல், இந்திய அமைதிப் படை, சக அதிகாரிகளின் தப்பித்தலுக்கான காட்டிக்கொடுப்புகள்,  அரசாங்க அதிபர்களின் கொலைகள், ஜனாதிபதி பிரேமதாசாவின் மன்னார் விஜயம், மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள், விடுதலைப்புலிகளின் உளவுத்துறையின் கெடுபிடிகள், இருதரப்பு சந்தேகங்கள், புளட்  படைத்துறை தளபதியுடனான சந்திப்பு, புளட்டின் மாலைதீவு படையெடுப்பு, நூலாசிரியர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டமை …… என்று நூலின் பேசுபொருள் பட்டியலாக நீள்கிறது. 


இப்படி ஒரு நூலை படைப்பதற்கான துணிச்சல் போருக்கு பின்னரும் 16 ஆண்டுகள் கடந்தே ஏற்பட்டிருப்பது, போர்க்கால கருத்துச் சுதந்திர, ஜனநாயக மறுப்புக்களும், ஆயுத கலாச்சார அச்சுறுத்தல்களும் இன்னும் ஓயந்த பாடிலில்லை என்பதன் வெளிப்பாடே என்று கொள்ளவேண்டும். தென்னிலங்கை அரசியல் மாற்றம் ஆசிரியருக்கு ஒரு இடைவெளியை வழங்கியிருக்கிறது. அந்த வகையில் நூலாசிரியர் எஸ்.எம்.குரூஸ் அவர்களின் இந்த துணிச்சல் மிக்க எதிர்நீச்சல் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. போர்க்காலத்தின் இன்னொரு பக்கத்தை எதிர்காலச்சந்ததிக்கு  ஒரு அரசாங்க அதிபராக  தான் அனுபவித்தவற்றை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர் குரூஸ்.


சிங்கள, ஆங்கில மொழிகளில் இவ்வாறான துறைசார்ந்த, தொழில் அனுபவங்களை கொண்ட பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  படைத்துறை  அதிகாரிகள், பொதுநிர்வாக அதிகாரிகள் , மற்றும் துறைசார்ந்த வல்லுனர்கள் இவ்வாறான நூல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் தமிழில் இவ்வாறு, அதுவும் ஆயுத -அதிகார கலாச்சாரத்தின் ‘விடுதலை’ முகமூடியை கிழித்து, மக்கள் சேவகன் ஒருவருக்கு ஏற்பட்ட  நெருக்குதல்களை இந்நூல் பேசுவது முதல் தடவை. இது வரலாற்று பதிவு மட்டும் அன்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமும் என்ற அந்தஸ்த்தை பெறுகிறது. 


ஆயுதத்திற்கு பின்னால் ஓடியவர்கள், அனைத்தையும் இன்னும், இன்றும் நியாயப்படுத்தி அரசியல் செய்பவர்கள் ஆகியோர் மட்டும் அல்ல வன்னியில் ஊடகவியலாளர்களாகவும், படைப்பாளிகளாகவும், விமர்சகர்களாகவும், ஆய்வாளர்களாகவும் தமக்கு தாமே வெளிச்சம் போடுபவர்கள் இது போன்ற சம்பவங்கள் குறித்து பேசாததற்கு வெட்கப்பட வேண்டும். இது ஆசிரியரின் அனுபவமாக இருந்தாலும், இந்த சம்பவங்களை இவர்கள் அறியாமல் இருந்திருக்க முடியாது. இந்நூலுக்கு  பல்வேறு உரைகளை எழுதி இருப்பவர்களும்  பட்டும் படாமலும் தப்பித்தல் அரசியல் செய்து வழக்கம்போல் அடக்கியே வாசித்திருக்கிறார்கள்.   


இந்த நூல் இரண்டு பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளது. பகுதி ஒன்று, மூன்று அத்தியாயங்கள் அல்லது மாற்று தலைப்பாக  ஈழப்போர் 1,2,3 எனவும் இலக்கமிடப்டுள்ளது. இந்த நூல் போர்க்காலம் பற்றிப் பேசுவதால் போர் இடம்பெற்ற பல்வேறு காலங்களை குறிப்பிடுவது வாசகர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அதுவே பொருத்தமானதுமாகும். அதனால் மரபு ரீதியான அத்தியாயம் என்பது தவிர்க்கப்பட்டிருக்க முடியும். அது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.


பகுதி இரண்டு, நான்காம், ஐந்தாம் அத்தியாயங்களை கொண்டது. போருக்கு பின்னர் ஆசிரியர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் கடமையாற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளை பட்டியல் இடுகிறது அத்தியாயம் நான்கு. ஐந்தாவது அத்தியாயம் முடிவுரையாக அமைகிறது.


இந்த போர்க்காலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில தெரிவுசெய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து மூன்றாவது கண் நோக்குகிறது. இந்த சம்பவங்கள் இந்த நூல் மீதான ஆர்வத்தை அதிகரிப்பனவாகவும், அன்றைய போர்க்கால  காட்சிகளை வாசகர்களின் கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்துவதாகவும் அமையும். ஆசிரியரின் கதை சொல்லும் பாணியானது வாசகர்களுக்கு இலகு நடையாக உதவுகிறது. 


இந்தியப்படையுடனான உறவு:


நூலாசிரியருக்கு இந்திய படையதிகாரி கூறிய ஆதங்கம்  இது. அதை ஆசிரியர் இவ்வாறு விவரிக்கிறார்:


இந்திய படையினருடன் நிருவாகரீதியில் எங்களுக்கு நல்ல உறவு இருந்தது. மேஜர் சக்குபூர்த்தி என்பவர்தான் எங்களுடன் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அவர் ஒருதடவை என்னிடம் ……


” நாங்கள் இங்கு வரும்போது தமிழ்மக்களை பாதுகாப்பதற்காகத்தான் இங்கு கொண்டு வரப்படுகிறோம் என எங்களுக்கு கூறப்பட்டது. ஆனால் இப்போது நாங்கள் அவர்களையே தாக்க வேண்டியதாக இருக்கிறது. நாங்கள் இப்போது மிகவும் குழப்பத்தில் இருக்கிறோம்…”.


இந்தியாவில் நிர்வாக அதிகாரிகளுக்கான பயிற்சி ஒன்றுக்கு சென்று திரும்பிய பின்னர் இந்தியா – மாத்தையா உளவு உறவோடு தொடர்பான சந்தேகத்தில் இந்த நூலாசிரியர் குரூஸ் புலிகளால் விசாரிக்கப்பட்டார். ஜனாதிபதி பிரேமதாச மன்னார் வந்த விவகாரத்தில் மூன்று நாட்கள் புலிகளின் புலனாய்வுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார்.


முருங்கன் பொலிஸ் நிலையம் கைப்பற்றப்பட்ட  கதை:


“முருங்கன் பொலிஸ் நிலைய ஏ.எஸ்.பி.டியூக்  என்னுடன் தொடர்பு கொண்டு விடுதலைப்புலிகள் எங்களுக்கு இடைஞ்சல் தருகிறார்கள், அவர்களோடு பேசுவதற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று என்னை கேட்டுக்கொண்டார்.13.06.1990.


மறுநாள் இது விடயமாக மன்னார் பொறுப்பாளர் சுபனுடன் பேசினேன். அவர் அதற்கு உடன்பட்டு அன்று பிற்பகல் சந்திக்க ஏற்பாடு செய்ய சொன்னார். ஏ.எஸ்.பி.டியூக்கும், மன்னார் தலைமைப்பொறுப்பதிகாரி மோகனதாசனும் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு வந்தார்கள். சிறிது காலதாமதத்தில் சுபனும், உதவிப்பொறுப்பாளர் ஜானும் வந்தார்கள். எனது மனைவி அவர்களுக்கு தேனீர் பரிமாறினார்.


 பேசிக்கொண்டிருக்கும்போது சுபன் திடீரென பாய்ந்து ஏ.எஸ்.பி.யின் துப்பாக்கியை பறித்து விட்டார். உங்களை கைது செய்துள்ளோம் என்று கடுமையான குரலில் கூறினார். அவர்களை தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, பொலிஸ் வாகனத்தையும் எடுத்துக்கொண்டு  போய்விட்டார்கள். 14.06.1990. 


முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு போய் இவர்கள் இருவரையும் காட்டி ஆயுதத்துடன் சரணடைந்து விட்டார்கள் என்றும், மற்றைய பொலிசாரையும் சரணடையுமாறும் புலிகள் கோரினர்.முருங்கன் பொலிஸ் நிலையத்தில் இருந்ந 110 பொலிஸார் சரணடைந்தனர். நான் நேரில் சென்று சுபனுடன் பேசினேன். அவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது. சுபன் மேலிடங்களுடன் பேசிவிட்டு விடுவிக்க உடன் பட்டார். அவர்களை  பல சிரமங்களுக்கு மத்தியில் இ.போ.ச . பஸ்ஸில் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்தோம்.


ஒரு தடவை நான் தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி வரும் வழியில் பொதுவான பரிசோதனைக்காக எனது வாகனத்தை நிறுத்தினார்கள். அங்கு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் என்னால் காப்பாற்றப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் இருந்தார். நான் வாகனத்தில் இருந்து இறங்கியதை கண்ட அவர்  “அபே மாத்தையா செக் கரண்ட எப்பா! என்று ஓடிவந்து என்னை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து முருங்கன் பொலிஸ் நிலைய கதையையும் சொன்னார்”. என்று பதிவிடுகிறார் நூலாசிரியர்.


விதைத்தது எதுவோ அதைத்தான் அறுவடையாகப் பெறமுடியும் என்றவகையில் ஆசிரியரின் அசையாத இறை பக்திக்கு இதுவும் ஒரு சான்று.


யாழ்.அரசாங்க அதிபர் பஞ்சலிங்கம் சுட்டுக்கொலை.


“நானும் அரசாங்க அதிபர் எஸ். தர்மபாலனும் பின்னேரங்களில் சந்தித்து பேசுவது வழக்கம்.  நான் அன்று விடுதிக்கு சென்ற போது அவர் மிக சோகமாக இருப்பதை நான் அவதானித்தேன். நான் விசாரித்த போது தாமதமாகவே அவரிடம் இருந்து பதில் வந்தது.”


“சற்று முன்னதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பஞ்சலிங்கத்திற்கு தொலைபேசி அழைப்பு எடுத்தேன். அவரது மனைவிதான் பதிலளித்தார். அது ஒரு சாதாரண பதில் அல்ல. கடுமையான பதிலாக இருந்தது.” என்றார்.


“நீர்தான் இங்கு வருவதற்கு பல நாட்களாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர். இனி வரலாம் தானே. அதற்காகவா இப்போது இந்த அழைப்பை எடுத்தீர்? என்று கேட்டார். இந்த பதிலால் நான் கலங்கிப்போய் இருக்கிறேன்” என்றார்.


அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான பதவிப்போட்டிகள் ஒன்றும் புதிதல்ல. ஒருவரை ஒருவர் காய்வெட்டுவதும், காட்டிக்கொடுப்பதும் போராட்ட காலத்தில் என்ன விலக்கா?  பிரேமதாசாவை வரவேற்காது மன்னாரில் புலிகளின் கூட்டத்திற்கு வருமாறு புலிகள் நூலாசிரியரை வலோற்காரமாக அழைத்தனர். அவரது பதவி நிலையில் அதைச்செய்ய முடியாது என அவர் மறுத்தார். அப்போது புலிகள் ஆத்திரமடைந்த நிலையில் நிலைமையை விளக்க அரசாங்க அதிபர், நூலாசிரியர் குரூஸ் தரத்திலான ஒருவரை புலிகளை சமாதானப்படுத்த அனுப்பினார். போனவர் புலிகள்  நூலாசிரியர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தி, அதுதானே அவர் மன்னாரில் உங்களின் கூட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று  காட்டியும், கூட்டியும் கொடுத்திருக்கிறார். இந்த வழியில் தான் போர்க்காலத்தில் அரசாங்க அதிகாரிகள் கலங்கிய குட்டையில் தங்களின் கூடைக்கு மீன் பிடித்தார்கள்.


யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பஞ்சலிங்கம் 1989, மே மாதம்,1ம்திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் மக்வோல், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோனிமுத்து, அம்பாறை அரசாங்க அதிபர் புஞ்சிஹேவா, முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஞானச்சந்திரன், யாழ்.உதவி அரசாங்க அதிபர் இராமலிங்கம் ஆகியோரும் போர்க்காலத்தில் கொல்லப்பட்டனர். மட்டக்களப்பு அரசாங்க அதிபர்கள் ஏ.பத்மநாதன், இ.மௌனகுருசாமி ஆகியோர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உயிர்தப்பினர். முட்டாள்களின் கையில் உள்ள துப்பாக்கிகள் புத்திஜீவிகள், கல்வியாளர்களை குறிவைப்பது யாரின் தாகம்? யாருக்கு இலாபம்?


புளட் அமைப்பினரின் மாலைதீவு மீதான படையெடுப்பு.


புளட் இயக்கதளபதி மாணிக்கதாசன் என்னை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆபத்துக்களுக்கு மத்தியிலும் குஞ்சிக்குளத்திற்கு சென்றேன். புளட் அமைப்பினர் இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்படாது குஞ்சிக்குளம் காட்டும்பகுதியில் மறைந்து வாழ்ந்தனர். அந்த பகுதியில் செய்யப்படவேண்டிய சில அபிவிருத்தி பணிகள் பற்றி பேசினார். பேச்சு சுமுகமாக இருந்தது.


குஞ்சிக்குளத்தில் இருந்து மன்னாரின் தெற்குகரையோரமாக முள்ளிக்குளம் செல்லலாம். இங்கிருந்து 1200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாலைதீவு தலைநகர் மாலேக்கு படகு மூலம் சென்றே அந்த படையெடுப்பை புளட் அமைப்பினர் செய்திருந்தார்கள்.


 கரடியனாற்றில் கங்காரு நீதிபதி.


மன்னாரை விட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புனரமைப்பு, அபிவிருத்தி பணிகளுக்கு பொறுப்பாக இருந்தகாலம் அது. அப்போது கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து விட்டார். புலிகள் மீண்டும் கரடியனாற்றை பிடித்து இருந்தனர். மட்டக்களப்பு கரடியனாறு முகாமுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு வந்தது. அங்கு சென்ற போது மன்னாரைச்சேர்ந்த  பானு அங்கு பொறுப்பாளராக இருந்தார். 


விசாரணை முடிந்து நான் வெளியே வந்தபோது ஒருவர் என்னோடு பேசவேண்டும் என்று சொல்லி வந்தார். “விடுதலைப்புலிகளின் இரகசியத்தை நாங்கள் யாருக்கும் சொல்லக்கூடாது,  என்றாலும் உங்களுக்கு சொல்லவேண்டும். புலனாய்வுத்துறை உங்கள் மீது குற்றம் சுமத்தி கங்காரு நீதிமன்றத்தினால் மரணதண்டனை வழங்குவதை உறுதிப்படுத்த கோரிக்கை வந்தது. கங்காரு நீதிமன்ற ஐந்து நீதியாளர்களில் நானும் ஒருவராக இருந்தேன். நானும் எதிர்த்து வாக்களித்ததினால் நீங்கள் தப்பினீர்கள்” என்றார். நான் ஆண்டவனுக்கு தோத்திரம் சொல்லி அவருக்கு நன்றி தெரிவித்தேன்.


புலிகளின் விநோத கோரிக்கை.


திருகோணமலையில் இருக்கும் போது புலனாய்வுத்துறை தலைவர் பொட்டம்மானின் செய்திக்காக எனக்கு அழைப்பு வந்தது. அங்கு போனபோது,  கொழும்பிலும், திருகோணமலையிலும் உளவுப்பிரிவு உறுப்பினர்கள் தங்கி நிற்பதற்கு இடம்தேவை. உங்கள் வீடுகளில் அவர்கள் வந்து தங்குவார்கள். இதற்கான சம்மதத்தை நீங்கள் உடன் தெரிவிக்கவேண்டும். பொட்டம்மானுக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என்று அவசரப்படுத்தினார்கள். நான் எனது குடும்பநிலை மற்றும் கஷ்டங்களை சொல்லி மறுத்துவிட்டேன்.  அதைவிட இந்த இடத்தில் நான் செத்துப் போகிறேன் என்று சொன்னேன். என்னை அனுப்பி விட்டார்கள்.


“அது ஒரு இருண்ட காலம். இதனூடாக இறைவன் நமது அகக்கண்களை திறக்க வைத்து, எதிர்காலத்தில் மனித நேயத்தோடும், நீதியோடும், சகோதர மனப்பான்மையோடும், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, நல்ல பிரஜைகளாக, அமைதியோடு வாழ நம்மை அழைக்கின்றார். எனவே வரலாற்று நிகழ்வுகள் ஒரு புனிதமான வாழ்வுக்கு நம்மை அழைத்து நிற்கின்றன.” 


நூலாசிரியரின் முன்னுரையின் இந்த வாக்கியங்கள் தான்  இந்த யுத்தத்தில் இருந்து நாம், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்த வரிகள் யுத்தம் குறித்த நூலாசிரியரின் ஒட்டு மொத்த  விமர்சனமாக அமைகின்றன. யுத்தத்திற்கு முன்னர் இதற்கு மாறான நிலை இருந்ததை அவரது முன்னுரை வெளிப்படுத்துகிறது. அந்த நிலையை மீண்டும் கோரிநிற்கிறது. அதுதானே கற்றல். இழந்ததை மீட்டல். பகுத்தறிவு அரசியலின் பக்குவம்.


இந்த சுய விமர்சனத்தை செய்ய, யுத்தத்தின் கோரத்தை ஒழிவு மறைவின்றி, நடுநிலையாகவும், உண்மையாகவும் பேச இன்னும் எத்தனை குரூஸ்கள் தயார்? 


குறிப்பு: முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.குரூஸ் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தில்  பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் ஆட்கொணர்வு மனு மூலம் விடுதலை செய்யப்பட்டார். நூலாசிரியர் குரூஸ் அவர்கள் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் எனக்கு ஆசிரியராகவும், விடுதியில் மேற்பார்வையாளராகவும் இருந்தவர். எங்கள் உறவு அரை நூற்றாண்டு கடந்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *