(தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாகச் செயற்பட்டவர் வேந்தன் என்று அழைக்கப்படும் சிவநாதன் நவீந்திரா. தற்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவராகவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார்.
ஆயுதப்போராட்ட அரசியல், ஜனநாயக வழி அரசியல் என இரண்டு தளங்களிலும் அனுபவத்தைக் கொண்ட வேந்தன், இந்த நேர்காணலிலும் அவற்றையும் அவற்றின் குணவியல் வேறுபாடுகளையும் பேசுகிறார். சமகால அரசியல், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, தமிழ்த்தேசிய அரசியல் நிலவரம் எனப் பலவற்றையும் பேசும் வேந்தன், 2009 க்குப் பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக ஜனநாயக வழி அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டு, தனித்துவ அடையாளமாகியுள்ளார்.
தமிழரின் நிகழ்கால – எதிர்கால அரசியல் குறித்தும் இந்த நேர்காணலில் பேசுகிறார்.
இலங்கையில் தற்போது ஆட்சியிலிருக்கும் NPP (JVP) உட்பட தமிழ் அரசியல் கட்சிகளிலும் பலவும் ஆயுதப்போராட்ட அரசியல் பின்னணியைக் கொண்டவை என்பதால், வேந்தனுடைய குரல் (ஜனநாயகப் போராளிகள் கட்சி) முக்கியமானதாகிறது.)
— கருணாகரன் —
1. வடக்குக் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளுக்கும் தமிழ்பேசும் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினைக்கும் சாத்தியமான – வெற்றிகரமான – தீர்வு என்ன?
இலங்கைத்தீவிலே தமிழர்கள் எழுபது வருடங்களுக்கு மேலாக தமது அரசியல் உரிமையை பெற்றுக்கொள்வதற்கு அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராடியிருக்கின்றார்கள். விடுதலைப் புலிகளுடைய ஆயுதப்போராட்டம் வளர்ச்சியடைந்தபோது விடுதலையை எட்டலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. இதற்குத் தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்தது. ஆனால், போராட்டம் தோற்கடிக்கப்பட்டு, நாம் விடுதலை அடையாமல் 2009 ஆண்டு முற்றிலும் புதியதொரு சூழ்நிலை உருவானது. இன்று தமிழர்கள் அநாதரவான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றர்கள். உரிமைக்கும் தீர்வில்லை. பாதிப்புகளுக்கும் தீர்வில்லை.
இலங்கைத் தீவிலே ஒரு நிரந்தர சமதானமும் நல்லிணக்கமும் உருவாகவேண்டும் என்றால் சமஸ்டி முறையிலான ஆட்சியே தேவை. அதற்கு ஒரு புதிய அரசியல் அமைப்பும் அரசியற் சூழலும் கொண்டு வரப்படவேண்டும். அது வரும்வரையில் தற்போது அரசியல் அமைப்பிலே இருக்கின்ற மாகாண சபை ஆட்சி முறைமையை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும். குறைந்த பட்சம் எமது மக்களுடைய தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளைத் தீர்த்து, எட்டவேண்டிய இலக்குகளை எட்டுவதற்கு அதைச் சரியான முறையிலே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதற்கு இங்குள்ள தமிழ் தேசிய கட்சிகள் ஒற்றுமையாகப் பயணித்து, தங்களது அரசியல் பிரதிநிதித்துவத்தினை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். அரசியல் தீர்வுக்கும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.
2. அதை எப்படி எட்டுவது அல்லது எப்படிச் சாத்தியப்படுத்துவது?
முப்பது வருட ஆயுதப்போராட்டத்திலே நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரம்பேர் விதவைகளாக (பெண்தலைமைத்துவத்தில்) உள்ளனர். 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் புலம் பெயர்ந்து சென்றுள்ளார்கள். இதற்கு மேலும் நாம் பாதிப்படையவோ சிதையவோ முடியாது.
இவ்வாறான நிலையில் – இன்றைய உலக அரசியல் சூழலில் – நாங்கள் ஐனநாயக வழியில் நின்று போராடித்தான் எமது உரிமைகளைப் பெறமுடியும். எமக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கான நீதியைப் பெறுவதற்குச் சர்வதேச ரீதியான ஆதரவைத் தூண்டலாம். மனித உரிமை மீறல்களை ஆதரமாக வைத்து அரசியல் தீர்வுக்கான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம். இதற்கு தமிழர்களது அரசியல் இருப்பு பலமானதாக இருக்கவேண்டும்.இன்று தமிழர்களது அரசியல் பலமானதாக இருக்க வேண்டும். தமிழ் அரசியலைப் பலப்படுத்த வேண்டும் என்றால், நாம் பல கோணங்களில், மிக நுட்பமாகச் சிந்தித்துக் காய்களை நகர்த்த வேண்டும். பல கட்சிகளாக பிரிந்து சிதறுண்டு இருப்பது பலவீனத்தையே உண்டாக்கும். அந்த நிலையே தற்போது காணப்படுகின்றது. பல கட்சிகள் இருந்தாலும் எண்ணத்திலும் செயற்பாட்டிலும் நாம் ஒருங்கிணைந்து கொள்ள முடியும். அது பலத்தை உண்டாக்கும்.
இன்று தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதித்துவம் குறைவடைந்து செல்கின்றது. சிங்கள தேசிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் வடக்குக் கிழக்கில் வளர்ச்சி பெற்று வருகின்றது. இந்த நெருக்கடிச் சூழலிலே தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட்டு தங்களது பிரதிநிதித்துவத்தினை வலுப்படுத்திக் கொள்வது மிக அவசியமானது. ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமாகதான் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். இல்லாவிட்டால் தமிழ் மக்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
3. இதைப் புரிந்து கொண்டு செயற்படக்கூடிய அளவுக்குத் தமிழ்க் கட்சிகளிடத்தில் கருத்தொருமைப்பாடும் ஒருங்கிணைந்து வேலை செய்யும் பண்பும் அதற்கான உளநிலையும் அறிவும் உண்டா?
தமிழ் கட்சிகளைப் பொறுத்த வரையிலே அவர்கள் தங்களது கட்சி அரசியலையும் வாக்கு அரசியலையுமே செய்து வருகின்றார்கள். இது மறுக்க முடியாத உண்மை. விடுதலையை நோக்கிய, தமிழ்ச் சமூகத்தின் பாதுபாப்பையும் இருப்பையும் குறித்த கவலைகளோ சிந்தனையோ குறைவாகவே உள்ளது. இதனாலேயே இங்கு தமிழ் கட்சிகளிடத்தில் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது.
தமிழர்களது நலனில் மெய்யாகவே அக்கறை உள்ளவர்காக இருந்தால் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையாக செயற்படலாம். நம்முடைய மக்களின் நிலையை மனதிற் கொண்டால் இந்த விட்டுக் கொடுப்புகளைச் செய்வது இலகு. அதைப்போல கடந்த கால அனுபவங்கள் எமக்கான அரசியல் பாடங்களாக உள்ளன. ஒற்றுமை இல்லையென்றால், எமக்கு ஆபத்தே. ஆனால் இந்த மனப்பாங்குடன் செயல்படும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடைய மனநிலை இல்லை. தமிழர்களது அரசியல் இருப்பையும் இல்லாமல் ஆக்கும் செயற்பாடுகளிலே தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல் தலைவர்களது செயற்பாடு இருக்கின்றது. இந்த மனநிலை மாற்றமடைந்து தமிழ்மக்களுடைய நலனுக்காக விட்டுக் -கொடுப்புக்களுடன் ஒற்றுமையாக செயற்படுவதே எமது அரசியல் இருப்பைப் பாதுகாக்கும். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறேன்.
4. அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்துச் செயற்படுத்தக் கூடிய ஆளுமையான தலைமைத்துவம் (ஆளுமை) தமிழ்ச் சூழலில் ஏன் இல்லை?
2009 ஆண்டுக்குப் பின்னர் ஒருவரை ஒற்றைத்தலைமையாக ஏற்கும் மனநிலையில் மக்கள் இல்லை. காரணம் மக்களுக்காக அர்ப்பணித்து வேலைசெய்யக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. மக்களுடைய வாக்குக்களைப் பெற்று மக்கள் பிரதிநிதி ஆகிவிட்டு, தங்களது நலனிலும் கட்சி நலனுக்காகவும் செயற்படும் தலைவர்கள் உள்ளவரை மக்கள் யாரைத் தலைவராக ஏற்றுக்கொள்வது?
ஆகவே மக்கள் நலன்சார்ந்து செயற்பட்டவர்களும் செயற்படக் கூடியவர்களும் அரசியலுக்கு உள்ளே வரவேண்டும். குறிப்பாக முன்பு போராளிகளாகச் செயற்பட்டவர்கள் அரசியலுக்குள்ளே வரவேண்டும். போராளிகளைப் பொறுத்த வரையிலே மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்து வேலைசெய்தவர்கள். அவர்கள் மக்களுக்காக உழைத்தவர்கள். அவர்களது அரசியல் வருகை பெரும் மாற்றத்தை உருவாக்கும். அவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். அதற்கான தேவையைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.
5. அப்படியென்றால் இதைச் சாத்தியப்படுத்தக் கூடிய சமூக மட்டத்திலான அழுத்தக்குழுக்கள் (Community level pressure groups), அறிவார்ந்த அரசியல் செயற்பாட்டு ஆளுமைகள் (Intelligent political activists), புத்திபூர்வமாகவும் பொறுப்போடும் செயற்படும் மாணவர் அமைப்புகள், நீதியுணர்ச்சியுள்ள ஊடகங்கள் (Honest medias) போன்றவற்றின் பணியும் பங்களிப்பும் எப்படியாக இருக்க வேண்டும்?
கடந்த காலத்தைப் பற்றிய சரியான பார்வையோடும், தற்போதைய சூழலின் தன்மையைப் பற்றிய புரிதலோடும் முன்வந்து இவர்கள் அனைவரும் செயற்பட வேண்டும்.
6. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் நிலைப்பாடும் செயற்பாடுகளும் என்ன?
ஜனநாயகப் போராளிகள் கட்சியைப் பொறுத்தவரையிலே தமிழர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி அதிகாரம் தான் எமது இலக்காகும். ஆனால் அதை அடையும் வரையிலே தற்போது அரசியல் அமைப்புக்குள்ளே இருக்கின்ற மாகாணசபைக்கான அதிகாரங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் தமிழர்களுக்கு இப்போது இருக்கின்ற குறைந்த பட்ச அதிகாரத்துடன் கூடிய அதிகாரப்பகிர்வு இது ஒன்றுதான். எமது இலக்கை அடையும் வரை இதனை நாம் பயன்படுத்தி மக்களுக்கான பணிகளை முன்னெடுப்போம்.
7. தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்வதில் தமிழ்க் கட்சிகள் நெருக்கடியையும் தடுமாற்றத்தையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே. உங்களுடைய பார்வையில் இதை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?
நாம் எமது மக்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டால் எந்தச் சக்தியாலும் எமது மக்களை வெல்ல முடியாது. எம்மைத் தோற்கடிக்கவும் முடியாது.
8. வடக்குக் கிழக்குக்கான அதிகாரப்பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்றவற்றில் முஸ்லிம்களின் பங்கேற்பும் உடன்பாடும் இல்லாமல் சாத்தியப்பாடுகளும் வெற்றியும் கிட்டுமா?
அதிகாரப்பகிர்வு ஒன்று வரும்போது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுடைய பங்களிப்பு முக்கியமானது. வடக்கு கிழக்கு பகுதியிலே அவர்கள் கணிசமான அளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது வகிபாகம் முக்கியமானது. விடுதலைப்புலிகளுடை-ய காலத்தில் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தைகளின் போதும் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஒரு ஊடக செவ்வியின் போது மிகவும் தெளிவாக ஒருவிடயத்தை கூறியிருந்தார். தமிழ் பேசும் முஸ்லீம் சகோதர்களையும் சேர்த்துக்கொண்டுதான் எமது பேச்சுவார்த்தைகளை முன்னேடுக்கின்றோம் என்று.
ஆகவே அவர்களது பங்களிப்பும் வடக்கு கிழக்கு அதிகார பகிர்வுக்கு முக்கியமானது. அது இல்லாமல் அதிகாரப்பகிர்வு சாத்தியப்படாது என்பது எமது நிலைப்பாடாகும்.
9. அப்படியென்றால் முஸ்லிம்களுடனான உடன்பாட்டுக்கான முயற்சிகளை எப்படி, யார் மேற்கொள்வது?
இன்று தமிழ்மக்கள் எந்த தமிழ் தேசிய கட்சிகளுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கி இருக்கின்றார்களோ அவர்கள் முஸ்லீம் தரப்பு தலைவர்களுடன் அதிகாரப்பகிர்வு சம்மந்தமாகப் பேசவேண்டும்.
10. மாகாணசபைத் தேர்தலையே நடத்தாமல் NPP அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. இந்த நிலையில் அது எப்படி இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அரசியலமைப்புத் திருத்தத்தையும் மேற்கொள்ளும்?
இந்த NPP அரசாங்கம் ‘மாகாண சபை தேர்தலை நடத்துவோம். புதிய அரசியல் அமைப்பு கொண்டுவந்து தமிழர்களுக்கு தீர்வு வழங்குவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என்று பல வாக்குறுதிகளை வழங்கியே தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடமாகியும் எதனையுமே செய்யவில்லை. இவர்களும் முன்னைய அரசாங்கங்கள் போலத்தான் செயற்படுகிறார்கள். தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலே ஒவ்வொரு அரசாங்கங்களாலும் ஏமாற்றப்பட்டு வந்ததுதான் வரலாறு. இவர்களும் அதற்கு விதிவிலகானவர்கள் இல்லை என்பதையே தற்போதைய (NPP) அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.
11. விடுதலைப் புலிகள் இயக்கத்திற் செயற்பட்டவர்களை அதிகமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியில் நீங்கள் செயற்படும்போது கிடைக்கின்ற அனுபவங்கள்?
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அரசியல் என்பது வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது விடுதலைக்கான செயற்பாட்டு அரசியலை அடிப்படையாகக் கொண்டது. முக்கியமாக ஆயுதப்போராட்டமாக. ஆனால் தற்போது நாம் செய்கின்ற ஜனநாயக வழி தேர்தல் அரசியல் என்பது வாக்குக்களை அடிப்படையாக கொண்டது. அரசியல் என்பது மக்கள் சேவை. அது போராளியாக இருந்த எங்களுக்குப் புதிதல்ல. அது எமக்கு நன்றாகப் பழக்கப்பட்டது.
ஆனால் வாக்கு வங்கியின் ஊடாகத் தேர்தலைச் சந்தித்து மக்கள் பிரதிநிதித்துவம் பெறுவது என்பது எமக்கு பல சவால்களை தருகிறது. மக்கள் செயற்பாட்டு அரசியலின் தன்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை -யோ என்ற கேள்வி எமக்கு உண்டு. இதில் பல அனுபவங்களை 2009 க்குப் பிறகு பெற்று வருகிறோம். இன்று பத்துவருடங்கள் கழிந்து உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலமாக பல சபைகளில் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கியிருக்கின்றோம். தொடர்ந்தும் மாகாணசபை, நாடாளுமன்றம் போன்றவற்றில் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குவோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். அதனூடாக தமிழ் மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி சிறந்த சேவையை செய்வோம் என்ற விருப்புடன் பயணிக்கின்றோம்.
12. பெரும்பாலான விடுதலைப் புலிகள் இயக்கப்போராளிகளின் இன்றைய வாழ்நிலை என்ன? அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் எப்படியானவை? அவர்களுடைய அரசியல் ஈடுபாடு எப்படியாக உள்ளது?
தாயகத்திலே பெரும்பாலான போராளிகள் அவர்களது குடும்பத்திலே பொருளாதாரச் சுமையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக் -கின்றார்கள். உடல் உறுப்புளை இழந்த மாற்றுத்திறனாளிகளாக பல போராளிகள் மிகச் சிரமமான வாழ்க்கையில் உள்ளனர். பல பெண் போராளிகள் பல பிரச்சனைகளுடன் சமூகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்க-ள். இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக நிரந்தரமான தொழில்வாய்ப்பு இல்லை. தொழில் செய்ய முடியாத நிலையில் அங்கவீன -மானவர்களாக இருப்பவர்கள்… தொழில்செய்யகூடிய நிலை இருந்தும் நிதி வசதி இல்லாமல் இருப்பவர்கள். பலர் திருமணம் செய்யாமல், திருமண வயதைக் கடந்து நிலையில் இருப்பவர்கள். குறிப்பாகப் பெண் போராளிகளின் தேவைகள்….. இவ்வாறு பல பிரச்சனைகளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் பல போராளிகள் குடும்பங்களுக்கு தொழில் முயற்ச்சிகளைச் செய்து கொடுத்திருக்கின்றன. ஆனால், இது இன்னும் போதாமலேதான் உள்ளது. ஒரு சரியான கட்டமைப்பு இருந்திருக்கமாக இருந்தால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளை முடிந்த அளவுக்கு எல்லோருக்குமானதாக மாற்றியிருக்க முடியும். சிலர் தங்களுடைய கடினமான முயற்சியால் தொழில் செய்து போண்டிருக்கின்றார் -கள். இவ்வாறு பல சவால்களுக்கு மத்தியிலும் போராளிகளாகச் செயற்பட்டவர்கள் இன்று மக்களுக்கான அரசியல் அங்கீகாரத்துக்காகச் சிந்திக்க வேண்டியுள்ளது. இதேவேளை பல போராளிகள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
13. ஒரு காலத்தில் மிகப் பெரிய ஆற்றலோடும் ஆளுமையோடும் சமூக அங்கீகாரத்தோடும் இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகள் இன்று அத்தகைய பெறுமானங்களை இழந்திருப்பது ஏன்?
ஆயுதப் போராட்டகாலத்தில் தமிழர்களுக்கான விடுதலையை அடைந்துவிடலாம் என்ற பெரும் நம்பிக்கையோடு பயணித்த போராளிகள், அந்த இயக்கம் அடியோடு அழிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் மனநிலையில் ஒரு அதிர்ச்சிகரமான நிலை ஏற்பட்டது. இனி எதுவுமே சரிவராது என்கின்ற மனநிலை பலரிடத்திலும் காணப்படுகின்றது. ஐனநாயக வழி தேர்தல் அரசியலில் போராளிகள் பயணித்தது கிடையாது. அதில் பழக்கமும் இல்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் எங்களுக்கான அரசியல் அங்கீகாரத்துக்கான ஒரே வழி ஐனநாயக வழி அரசியல் தான். அதன் ஊடாகவே எங்களுக்கான அங்கீகாரத்தையும் மக்களுக்கான சரியான நேர்மையான சேவையையும் செய்ய முடியும் . இதற்காக ஐனநாயக வழி அரசியலில் போராளிகள் நம்பிக்கையுடன் செயற்பட்டு அதில் வெற்றி பெற்று, தங்களுடைய இழந்துபோன பெறுமானங்களை பெற முடியும். மக்களுக்கான நன்மைகைளையும் தொடர முடியும்.
14. அரசாங்கம் போராளிகளை மதிப்பிறக்கம் செய்யும் முயற்சியிலேயே தொடர்ந்தும் ஈடுபடுகிறது. அரசியல் ரீதியாக அவர்கள் வலுப்பெறக்கூடாது. அப்படி வலுப்பெற்றால் அது தமிழ்த் தரப்பைப் பலமானதாக ஆக்கி விடும் என்று அஞ்சுகிறது. ஆகவே போராளிகளை அது அரசியல் அரங்கிலிருந்து தூர விலக்கவே விரும்பும். தமிழ் அரசியற் தரப்புகளும் போராளிகளுக்கு உரிய இடத்தையும் மதிப்பையும் அளிக்கவில்லையே? இதற்கான காரணம் என்ன?
காலம் பதில் சொல்லும். அந்தப் பதிலை நாம் காலத்துக்கு அளிக்க வேண்டும்.
15. விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் தலைவர் பிரபாகரனின் பெயரையும் மாவீரர்களின் தியாகத்தையும் போராளிகள் ஆற்றிய வீர சாதனைகளின் பெறுபேறுகளையும் தங்களுடைய அரசியல் மூலதனமாகக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய (விடுதலைப் புலிகள் ஆதரவு) கட்சிகள் போராளிகளுக்கான இடத்தை வழங்காதிருக்கும் சூட்சுமம் என்ன?
இன்று மாவீரர்கள், போராளிகளது தியாகங்கள் அரசியல்வாதிகளுக்கும் அதை வைத்து பணம் சம்பாதிக்கும் சிலருக்கும் ஒரு பெரிய முதலீடாக மாறியுள்ளது. இதைக் கண்னூடாக பார்கின்றபோது பெரும் மனவேதனை ஏற்படுகின்றது. அரசியல்வாதிகள் மாவீரர்களது தியாகங்களை வைத்து அரசியல் செய்து வாக்கு சேகரித்து அதில் வெற்றிபெற்று வருகிறார்கள். ஒரு சிலர் மாவீரர்களது நினைவு நாட்களைச் செய்து பணம் சம்பாதிக்கின்றார்கள். இதை எல்லாம் பார்க்கின்றபோது இதற்காவா நாங்கள் போராடி இத்தனை தியாகங்களை செய்தோம்? என்கின்ற மனக்கவலை ஏற்படுகின்றது.
ஒவ்வொரு போராளிகளும் மாவீரர்களும் தங்களைத் தியாகம் செய்தது இந்த மக்களுடைய விடுதலைக்காகவே. இன்று அந்த நிலை மாறி போராளிகளை சமூகத்திலே வேண்டாதவர்களாக பரப்புரை செய்து அவர்களது அரசியல் அங்கீகாரத்தைத் தடுத்து, தங்கள் அரசியலில் எங்கள் தியாகங்களை பயன்படுத்தி வெல்கிறார்கள். இதை எங்களது மக்களும் போராளிகளும் விளங்கிகொள்ள வேண்டும். போராளிகளுக்கான அரசியல் களம் சரியான முறையில் திறக்கப்பட்டால் இவர்களால் தங்களுக்கான குறுகிய அரசியலைச் செய்யமுடியாது. மக்கள் ஏற்று, அங்கீகரித்துக் -கொள்வார்கள் என்கின்ற ஒரே காரணத்துக்காகவே போராளிகளுக்கு கட்சிகள் சந்தர்ப்பம் கொடுக்க மறுக்கின்றன. இதனை நாங்கள் புரிந்துகொண்டு எங்களுக்கான அரசியல் அதிகாரத்தை பெற உழைக்க வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடாகும்.
16. போராட்டத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டுத் தங்களுடைய உடல் உறுப்புகளையே இழந்திருக்கும் பல ஆயிரக்கணக்கான போராளிகள் இந்த நிலத்தில் (தாயகத்தில்) மிகக் கஸ்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான உதவிகளும் ஆதரவும் முறையாக இன்னும் இல்லாதிருப்பது ஏன்?
தாயகத்திலே இருக்கின்ற விழுப்புண் அடைந்து அங்கவீனமான போராளிகளுக்கு அரசாங்கத்தால் எந்த பெரிய அளவிலான உதவித்திட்டங்களும் இல்லை. கூடுதலாக புலம்பெயர்ந்த அமைப்புக்கள் ஆகவும் தனிநபர்கள் மூலமாகவும் தொழில் வாய்ப்புக்கான உதவித் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது எல்லா போராளிகளுக்கும் கிடைத்துள்ளதா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. இங்கு ஒரு சரியான கட்டைப்பு இல்லை. புலம்பெயர் தேசத்திலும் சரியான ஒரு கட்டமைப்பு இல்லை. நாங்கள் தளத்திலும் புலம்பெயர் தேசத்திலும் பல பிரிவுகளாக பிரிந்துபோய் செயல்படுகின்றோம். இதை நாங்கள் புரிந்து கொண்டு முதலிலே ஒன்றுபடவேண்டும். இல்லாவிட்டால் எங்களுக்கான எந்த செயற்திட்டங்களிலும் நாங்கள் வெற்றி காணமுடியாது.
எங்களுக்கான ஒரு அரசியல் அங்கீகாரம் கிடைக்குமாக இருந்தால் சரியான தகவல்களை திரட்டி இந்தப் போராளிகளுக்கான சரியான வாழ்வாதாரத் திட்டங்களைச் செய்ய முடியும். அதற்கான அங்கீகாரத்துடன் செயற்படமுடியும். போராளிகளுக்கான அரசியல் அங்கீகாரமே எல்லாத்துக்குமான தீர்வாக இருக்கும் என்பது எமது நிலைப்பாடாகும்.
17. போராளின் பேரால் புலம்பெயர் நாடுகளில் திரட்டப்படும் நிதி தொடர்பாகவும் விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகளின் கைகளில் உள்ள நிதி பற்றியும் கடுமையான விமர்சனங்கள் உள்ளனவே. இது தொடர்பான உண்மை நிலை என்ன? ஜனநாயகப் போராளிகள் இது தொடர்பாக எத்தகைய நடவடிக்கையை அல்லது நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது?
விடுதலைப்போராட்டத்துக்காகவே குறித்த நிதி திரட்டப்பட்டது. அது போராட்டத்துக்கும் போராட்டத்தில் அர்ப்பணித்தவர்களுக்குமே பயனாக வேண்டும். இல்லையென்றால், அது துரோகமாகும். அநீதியாகும். போராளிகளின் மாவீரரின் அர்ப்பணிப்பினால் உருவான மதிப்பினால்தான் அந்த நிதியை மக்கள் அளித்தனர். அதனை விடுதலைக்கானதாக பயன்படுத்துவது சம்மந்தப்பட்டோரின் முன்னுள்ள பொறுப்பாகும். இதை மக்களும் வலியுறுத்த வேண்டும்.
