— வி. சிவலிங்கம் —
ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு என்ற பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய வெளி விவகார அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள பகிரங்க கடிதம் (06-08-2026) தமிழ் அரசியலை மிகவும் குழப்பத்தில் தள்ளுவதாகவும், ஏற்படக்கூடிய குறைந்தபட்ச ஒற்றுமை முயற்சிகளையும் சிதைப்பதாகவும் உள்ளது.
இக் கடிதத்தின் உள்ளடக்கம் தமிழ் மக்களின் குறைந்தபட்ச அபிலாஷைகளையும் நிறைவேற்ற முடியாதவாறு குறிப்பாக, 2024ம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறான தவறான கருத்துக்கள் ஜனநாயகம் என்ற பெயரில் வெளியிடுவது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு மிகவும் ஆபத்தானது. தமிழ் அரசியல் தற்போது தேசிய அளவிலான மாற்றங்களோடு இணைந்து செல்லத் தயாராகி வருகிறது. கடந்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வாக்களித்த விபரங்களைப் பார்க்கும்போது மிகக் கணிசமான மாற்றங்களை நோக்கி தமிழ் அரசியல் நகர்ந்து வருகிறது. இப் போக்கினை நன்குணர்ந்த தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக் கட்சி போன்றன கடந்த காலங்கள் போல முரண்பட்ட அரசியல் வழிமுறைகளை விடுத்து குறிப்பாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதிலும் தேசிய இனப் பிரச்சனைகளில் தனித்தே செயற்படும் போக்கு அதிகரித்து வருகிறது.
நாட்டின் அரசியல் போக்கு குறிப்பாக நாட்டில் வாழும் எண்ணிக்கை அடிப்படையிலான சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமக்கான பாதுகாப்புக் குறித்து புதிய அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. தேசிய அளவிலான பிரச்சனைகளில் சிங்களக் கட்சிகளோடு இணைந்து செயற்பட்ட போதிலும் தேசிய இனப் பிரச்சனைகளில் தனித்துவமாக செயற்படும் நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவது, தேசிய இனங்கள் மத்தியில் நல்லெண்ணத்தை வளர்ப்பது, இனவாத, வகுப்புவாத அரசியலுக்கு எதிராக செயற்படுவது என்ற கருத்து தற்போதைய அரசின் போக்காகக் காணப்படுவதால் அவ்வாறான சூழலை மேலும் வளர்க்கும் பொருட்டு அரசுடன் சௌஜன்ய உறவுடன் செயற்பட இக் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இப் பின்னணியில் தமிழ் அரசியலுக்குள் செயற்படும் பிற்போக்கு சக்திகள் தற்போது விரிவடைந்து வரும் ஜனநாயக நிலமைகளைப் பயன்படுத்தி தமிழ் அரசியலைப் பிளவுபடுத்த எத்தனித்து வருகின்றன. அவற்றின் அங்கமாகவே பின்வரும் செய்தி அமைகிறது.
தற்போது இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளருக்கு தவறான தகவல்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாஷைகளுக்கு எதிரான தகவல்கள் தமிழ் தேசியப் பேரவை என்ற பெயரில் பரிமாறப்பட்டுள்ளன.
1. இலங்கை அரசு இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் என்ற அடிப்படையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றினை வரையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கடிதத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இக் கடிதத்தின் ஆரம்பமே தவறான தகவலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றினை வரையப் போவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளதே தவிர இதுவரை புதிய யாப்புத் தொடர்பான எந்த ஆரம்ப முயற்சிகளும் உத்தியோகபூர்வ அடிப்படையில் எடுக்கப்படவில்லை.
அத்துடன் புதிய அரசியல் யாப்பு வரைபு தொடர்பாக மக்களுடனான கலந்துரையாடல் எதுவும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான தமது கொள்கைகள் எதனையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை வெளியிடவில்லை.
இவை உள்நாட்டிலும், இந்திய அரசிற்கும் நன்கு தெரிந்த செய்திகளாகும். இவ்வாறான நிலையில் இத் தவறான தகவலை பகிரங்க கடிதமூலம் பரிமாறுவதற்கான உள் நோக்கங்கள் என்ன?
2. இவ்வாறாக அரசு எடுக்கும் முயற்சிகள் ஈழத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு பிரச்சனைக்குரியதாகும்.
இங்கு இக் கடிதத்தில் குறிப்பிடப்படும் ஈழத் தமிழ் மக்கள் (Eelam Tamil people) என்போர் யார்? அவர்களின் அபிலாஷைகள் என்ன? அவர்களின் அபிலாஷைகளை எவ்வாறு எங்கே வெளிப்படுத்தியுள்ளார்கள்? ஈழத் தமிழ் மக்கள், இலங்கைத் தமிழ் மக்கள் என்ற சொற்பதங்கள் ஒரே கருத்தைக் குறிக்கின்றனவா? அல்லது வெவ்வேறு கருத்தைக் குறிக்கின்றனவா? இந்த அபிலாஷைகளை வெளிப்படுத்தும் தமிழ் தேசியப் பேரவை எவ்வாறான விதத்தில் அதனை எடுத்துச் செல்லும் அல்லது அதனை வெளிப்படுத்தும் உரிமையைப் பெற்றுள்ளது?
கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் என்ற பெயரில் அரசுடன் பேச்சுவார்த்தைகள், கடிதப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே போலவே வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனான பேச்சுவார்த்தைகளிலும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் உறவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிலமை அவ்வாறிருக்கையில், ‘ஈழத் தமிழ் மக்கள்’ என்ற பெயரில் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்வது தமிழ் மக்களின் நலன்களில் குழப்பங்களை மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக இதனைக் கருத முடியும். உதாரணமாக, இவ் வகையான கருத்துக்களையே தமிழ் நாட்டு முதல்வருக்கும், இதர கட்சிகளுக்கும் தெரிவித்துள்ளதாக கூறுவது தமிழ் பேசும் மக்களின் அடிப்படை நலன்களுக்கு விரோதமானது.
ஏற்கெனவே பெரும்பான்மைத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்கையில் அவர்களுடன் கலந்துரையாடி தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கு விரோதமற்ற வகையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் கருத்துக்களைப் பரிமாறுவது பொதுவான ராஜதந்திர அணுகுமுறையாகும். ஆனால் இவ்வாறான நடைமுறை தமிழ் அரசியலில் பாரிய பிளவுகள் இருப்பதை மிகவும் வெளிப்படையாகவே அடையாளம் காட்டுவதாக உள்ளது. இவை தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கு மிகவும் விரோதமானது.
3. அக் கடிதத்தில் 1987ம் ஆண்டு தோற்றம் பெற்ற இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எனவும், அதனடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்பன ஒரு தனி அலகு என்பதையும், அவை சுயாட்சியை அனுபவிக்க வேண்டிய பிரதேசங்கள் என்பதை கொள்கை அளவில் ஏற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை- இந்திய ஒப்பந்தம் குறித்து அந்த நாட்டின் வெளியுறவுச் செயலருக்கு தவறான தகவல்களை வழங்குவது தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமானது. தமது அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களின் அரசியலை மிக மோசமான விளைவுகளுக்குள் தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.
குறிப்பாக, ஒப்பந்தம் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் என்பது கொள்கை அளவில் (In principle) சுயாட்சியை அனுபவிக்க வேண்டிய பிரதேசங்கள் எனக் குறிப்பிட்டிருப்பது தவறான வழிநடத்தலாகும்.
ராஜிவ் காந்திக்கும் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸ ஆகியோருக்கிடையே 20-06-1989 இல் மேற்கொள்ளப்பட்ட கடிதப் போக்குவரத்தில் ராஜிவ் காந்தி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘…. எங்கள் இரு அரசாங்கங்களும் பண்பாட்டு அடிப்படையிலும், சட்ட ரீதியாகவும் தமிழ் மக்களுக்கு வழங்கிய சுயாதீனம் தொடர்பான வாக்குறுதிகளை, இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின் அடிப்படையிலும், எனக்கும், ஜனாதிபதி ஜே ஆர். ஜெயவர்த்தனவுடன் 7-11-1987 இல் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளிலும் வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றுவது முக்கியமானதாகும்.’
மேற்குறித்த கடிதத்தின் பிரகாரம் பார்க்கையில் 13வது திருத்தம் வழங்கிய சுயாட்சி நிலைப்பாட்டினையே பிரதமர் ராஜிவ் குறிப்பிடுகிறார். ஆனால் தமிழ் தேசிய பேரவையினர் வெளியிட்டுள்ள அக் கடிதம் இந்தியா மறைமுகமாக பிரிவினையை ஆதரித்துள்ளதாகவே குறிப்பிடப்படுகிறது. ஒரு முக்கியமான ராஜதந்திரி ஒருவருக்கு அந்த நாட்டின் நிலைப்பாட்டினைத் திரித்துக் கூறுவது தமிழ் அரசியலைக் கேவலப்படுத்தும் முயற்சியாகும்.
இலங்கை- இந்திய ஒப்பந்தம் என்பது தமிழ் மக்களின் போராட்டம் காரணமாக எழுந்த ஒன்று என்ற போதிலும், அந்த ஒப்பந்தம் இலங்கையில் காணப்பட்டுள்ள ஜனநாயகப் பற்றாக்குறையை ஒரளவு நிவிர்த்தி செய்யும் வகையிலும், மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்களைப் பரவலாக்கும் வகையிலும், நாடு முழுவதற்கும் மாகாண நிர்வாகங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கப்படும் புதிய முறை இந்த ஒப்பந்த மூலம் தோற்றம் பெற்றிருக்கிறது.
இந்த ஒப்பந்தம் பூரணமற்ற ஒன்றாக இருக்கலாம். ஏனெனில் அப்போதைய சூழலில் ஜே ஆர் அரசாங்கம் வடக்கிலும், தெற்கிலும் பாரிய கிளர்ச்சிகளை எதிர் நோக்கிய நிலையில் அந்த எதிர்ப்புகளில் ஒரு பகுதியைத் தணிக்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். அடுத்து இந்தியா நாட்டுப் பிரிவினையை ஆதரிப்பதில்லை என்ற முக்கிய நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே தேசிய அளவிலான ஜனநாயக மாற்றங்களை நோக்கிய அணுகுமுறைகளை மேற்கொண்டது.
அன்றைய அரசியற் சூழலில் ஜே ஆர் அரசு சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் ஆதரவோடுதான் பதவிக்கு வந்தது. அது தனது திறந்த பொருளாதார வேலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இதே சக்திகளின் துணையை நம்பியே செயற்பட்டது. எனவே ஒற்றை ஆட்சிக் கட்டுமானத்திற்குள் அதிகார பரவலாக்கத்தினை அமுல்படுத்துவது என்பது மிகவும் சிக்கலான நிலமையாகும். இருப்பினும் இந்திய அழுத்தங்கள் இறுக்கமான ஒற்றையாட்சிக் கட்டுமானத்தில் சில நெகிழ்வுப் போக்கினை ஏற்படுத்தும் வகையில் 13வது திருத்தம் அமைந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் விபரித்தனர். 13வது திருத்தம் என்பது மாகாணசபைகள் சட்டவாக்கம் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை வழங்கியிருப்பது ஒற்றை ஆட்சிக் கட்டுமானத்திற்குள்ளும் சமஷ்டிக் கட்டுமானங்களை உருவாக்கலாம் என்பதற்கு இது ஒரு அடையாளமாக அமைந்தது. அது மட்டுமல்ல, மத்திக்கும், பிராந்தியங்களுக்குமிடையே ஓரளவு சமநிலையைப் பேணும் நோக்கில் 13வது திருத்தம் அமைந்தது.
13வது திருத்தத்தின் விளைவுகள் காரணமாகவே, பிற்காலத்தில் சந்திரிகா அவர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கை ஆட்சிக் கட்டுமானம் என்பது பிராந்தியங்களின் கூட்டு அரசு என விவாதங்கள் மாற்றமடைவதற்குக் காரணமாக அமைந்தது. எனவே 13 வது திருத்தம் என்பது பிரச்சனைகளை புதிய விதத்தில் அணுகுவதற்கான ஆரம்பமாக அமைந்தது. இதன் காரணமாகவே மத்தியில் குவிக்கப்பட்ட ஆட்சி முறைக்குப் பதிலாக அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி முறையை நோக்கித் தற்போதைய விவாதங்கள் நகர்கின்றன.
4. மாகாணசபைகளின் வடிவமைப்பு என்பது மிகவும் திட்டமிட்டே ஒற்றை ஆட்சிக்கு ஏற்றவாறானதாகவும், இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் நல் நோக்கங்களுக்கு முரணானதாகவும் வரையப்பட்டுள்ளதாகவும், இது ஈழத் தமிழர்களின் சுயாட்சி அபிலாஷைகளுக்கு முரணானதாக உள்ளதாகவும் அக் கடிதம் கூறுகிறது.
தமிழ் தேசிய பேரவை எனத் தற்போது தோற்றம் பெற்றிருக்கும் குழுவினர் புதிதாக எதையும் இந்திய வெளிநாட்டுச் செயலருக்குத் தெரிவிக்கவில்லை. 13வது திருத்தம் அமுலுக்கு வந்த வேளையில் இத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் அமிர்தலிங்கம் பேசுகையில் இப் போதாமை குறித்து மிக நீண்ட உரை ஆற்றியிருந்தார். இருப்பினும், காலப் போக்கில் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தின் அடிப்படையில் மேலும் விஸ்தரிக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 13வது திருத்தத்தினை ஏற்பதாக உரையாற்றினார்.
அவர் 13வது திருத்தத்தினை ஏற்றுப் பேசும் வேளையிலும் நாடு ஒற்றை ஆட்சிக் கட்டுமானத்தையே கொண்டிருந்தது. அவ்வாறான நிலையிலும் அவர் அதை ஏற்றமைக்கான பிரதான காரணம் இலங்கைக்குள் அதனைப் பேசித் தீர்க்கலாம் என்ற அசையாத நம்பிக்கையே காரணமாகும். அது மட்டுமல்ல, இதே நிலைப்பாட்டை இன்று வரை தொடரும் தமிழரசுக் கட்சி அதிகாரத்திலுள்ள கட்சிகளுடன் தொடர்ந்தும் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்துப் பேசி வருகிறது. நாட்டில் ஒற்றை ஆட்சி நிலவும் வரை தீர்வு சாத்தியமில்லை எனக் கூறுவதைத் தவிர வேறு எதுவுமே சாதிக்க முடியாத இப் பிரிவினர் தமிழ் அரசியலை முன்னே செல்லாத வகையில் குழப்பம் விளைவிப்பதாகவே கொள்ள முடியும்.
5. இன்னொரு பிழையான வழிநடத்தலை அவதானிக்கலாம். இலங்கை அரசு ‘ஏக்ய ராஜ்ய’ என்ற பெயரில் புதிய அரசியல் யாப்பு ஒன்றினை முன்மொழிய இருப்பதை இந்திய அரசு தடுக்க வேண்டுமெனவும், இவ்வாறான ஒற்றை ஆட்சியை நோக்கிய வழிமுறையைத் தடுத்து புதிய அரசியல் யாப்பு ‘தமிழ் தேசம்’ ஒன்றினைத் அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசியல் யாப்பினை வற்புறுத்த வேண்டுமெனவும், அந்த யாப்பு தமிழ் மக்களுக்கான தனித்தன்மை மிக்க இறைமை அதிகாரம் உண்டு என்பதை அங்கீகரிப்பதாகவும், அந்த அதிகாரத்தின் மூலம் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமக்கான சுயாட்சியையும், சுய அரசையும் தமது வரலாற்றுத் தாயகங்களில் அமைக்க உரித்துடையவர்கள் என்பதை உறுதி செய்யும்படி கோரியுள்ளனர்.
மேற்குறித்த கருத்து தமிழ் அரசியலை மேலும் ஒரு முள்ளி வாய்க்காலை நோக்கித் தள்ளுவதாக அமைகிறது.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல தமிழ் தேசிய பேரவை என்பது தமிழ் மக்களின் எப் பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது? அம் மக்களின் அபிலாஷைகளுக்கான ஆணையை எவ்வாறு பெற்றுக் கொண்டது? ஏற்கெனவே பெரும்பாலான மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்கையில் இவ்வாறான அவ்வப்போது தோன்றி மறையும் அமைப்புகள் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ற பெயரில் பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு விரோதமாக செயற்படுவதும், வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்குத் தவறான தகவல்களைப் பரிமாறுவதும் தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும்.
உதாரணமாக, இலங்கை அரசு ‘ஏக்ய ராஜ்ய’ என்ற பெயரில் புதிய அரசியல் யாப்பு ஒன்றினைக் கொண்டு வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு முயற்சி இதுவரையில் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை. இப் பிரச்சனை தொடர்பாக கடந்த காலங்களில் வெவ்வேறு பெயர்களில் இயங்கிய தனி நபர்கள் தமிழரசுக் கட்சிக்கு அழுத்தம் கொடுத்தனர். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும்போது பொருத்தமான முடிவுகளை எடுக்கலாம் என அக் கட்சி முடிவு செய்திருந்தது.
‘ஏக்ய ராஜ்ய’ என்பது சிங்கள மொழிச் சொல்லாகும். இதற்கான தமிழாக்கம் ‘ஒருமித்த நாடு’ என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒருமித்த நாடு’ என்ற தமிழ் சொல் வெவ்வேறு பிரதேசங்களை உள்ளடக்கிய நாடு என்பதை அச் சொல் பிரதிபலிக்கிறது. இங்கு சிங்களச் சொல்லை அடிக்கடி பயன்படுத்தி ஒற்றை ஆட்சி என்பதாக விபரிப்பது அப் பிரேரணையின் உள்ளடக்கத்தை மக்களுக்கு மறைப்பதாகும்.
2015ம் ஆண்டில் மைத்திரி- ரணில் கூட்டு நல்லாட்சிக் காலத்தில் தமிழரசுக் கட்சியும் இணைந்தே அரசியல் யாப்பு வரைபுகளை மேற்கொண்டார்கள். அவ் வேளையில் சட்ட அடிப்படையின் பிரகாரம் ‘ஏக்ய ராஜ்ய அல்லது ஒருமித்த நாடு’ என்ற சொற் பிரயோகத்தின் வியாக்கியானமும் அந்த யோசனைகளில் விபரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரதான காரணம், சட்ட அடிப்படையில் தரப்பட்ட வியாக்கியானங்களுக்கு அப்பால் நீதிமன்றங்கள் மேலதிக விளக்கத்தை அளிப்பதைத் தடுக்கும் நோக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள் நன்கு தெரிந்திருந்தும், தமிழ் மக்களை மட்டுமல்ல, வெளிநாடுகளின் ராஜதந்திரிகளுக்கும் தமிழ் மக்கள் என்ற பெயரில் போலி வியாக்கியானங்களை வழங்குவது தமிழ் மக்களின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்துவதாகும்.
தமிழ் அரசியலில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுகையில் அவற்றின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் வெவ்வேறு பெயர்களில் சில தனிநபர்கள் மக்களை மட்டுமல்ல, வெளிநாட்டு ராஜதந்திரிகளையும் குழப்பிச் செல்வது குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஏனெனில் தமிழ் மக்கள் என்ற பெயரில் அவ்வப்போது புற்றீசல்கள் போல தோற்றம் பெறும் குழுக்கள் அல்லது தனிநபர்கள் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கிச் செல்கிறார்கள். இதனால் மக்களே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
இன்று நாட்டில் மிகவும் சாதகமான, பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கும் வகையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றிருக்கிறது. இந்த அரசாங்கம் முற்போக்கு இடதுசாரிக் கொள்கைகளில் மிக நீண்ட காலமாக நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வருவதால் கடந்தகால வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளுக்கான பேரம் பேசும் வாய்ப்பு இல்லாமலுள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் செயற்படும் வலதுசாரி சக்திகள் நாட்டில் ஏற்பட்டு வரும் சாதகமான மாற்றங்கள் தமக்கான எதிர்காலத்தைத் தடுத்துவிடும் என்ற அச்சத்தினால் உள்நாட்டில் செயற்படும் வலதுசாரி சக்திகளை வெவ்வேறு நிகழ்ச்சி நிரலில் ஊக்குவித்து வருகின்றன. உதாரணமாக, சுவிற்சலாந்து நாட்டில் செயற்படும் சில அரசு சாரா அமைப்புகள் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகக் கூறி சில ஏற்பாடுகளை பிரசித்தமாக அறிவித்தன.
இந்த சக்திகளின் உள் நோக்கங்களைப் புரிந்து கொண்ட சில பிரிவினர் இதில் பங்குபற்றுவதைத் தவிர்த்தனர். இதனால் அம் முயற்சிகள் கைவிடப்பட்டன. அதே போலவே தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் இயங்கும் குழுக்களிலுள்ள சில தனி நபர்கள் ஐரோப்பா, தமிழகம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று கலந்துரையாடியுள்ளனர். இதன் பின்னர் தமிழ் அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் கட்சிகள், தனிநபர்கள் என்போர் மீது மிகவும் திட்டமிட்ட வகையில் சேறடிக்கும் விதத்தில் தனிநபர் விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இவை யாவும் தமிழரசுக் கட்சியைப் பலவீனமாக்கும் உள் நோக்கம் கொண்டவை. இவ்வாறான பிரச்சாரங்கள் யாருக்கு உதவுகின்றன? தமிழரசுக் கட்சிக்கும், தற்போதைய அரசாங்கத்திற்குமிடையே மிகக் காத்திரமான உறவுகள் வளர்ந்து வருகின்றன. தமிழரசுக் கட்சியின் கடந்த கால வரலாறு, ஊழலற்ற உட்கட்சி நிலமைகள், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து விட்டுக் கொடுக்காத நிலமைகள் என்பன அரச உயர் மட்டங்களால் புரியப்பட்டுள்ளது.
அதே போலவே தமிழரசுக் கட்சிக்குள்ளும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் புரியப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசு தரப்புடனான பேச்சுவார்த்தைகள் அங்குள்ள தனிநபர்களின் செல்வாக்கின் பின்னணியிலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது அரசியல் கொள்கைகள், கோட்பாடுகள், அவற்றிலுள்ள விசுவாசம் போன்றன பாரிய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. அரசாங்க தரப்பிலும், தமிழர் தரப்பிலுமுள்ள அரசியல் சக்திகள் பொதுவான பிரச்சனைகளின் போக்குகள் குறித்து நன்கு புரிந்துள்ள நிலையிலேயே பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர். உதாரணமாக, கடந்தகால அரசுகளுடன் அல்லது அரசியல்வாதிகளுடன் மேற்கொண்ட அணுகுமுறைகள் போலல்லாது அரசின் உள்நோக்கங்கள், நெருக்கடிகள் போன்றவற்றை நன்கு உணர்ந்தே தமது உறவை அரசுடன் மேற்கொள்கிறார்கள். இதன் காரணமாக, தமிழ் அரசியல் தலைவர்களுக்கும், அரசாங்கத்திற்குமிடையேயான உறவு எப்போது சுமுகமாகவே செல்வதை நாம் காணலாம். இவ்வாறான அணுகுமுறையே எதிர்கால அணுகுமுறையாக அமைதல் அவசியம்.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல், முரண்பட்ட வழிமுறைகள் தற்போது தமிழ் அரசியலில் மறைந்து வருகின்றன. புதிய அணுகுமுறைகள், உறவுகளுக்கான பாதைகள் திறந்து வருகின்றன. இந்த மாற்றங்கள் தேசிய அளவிலான சமாதானத்தை நோக்கிச் செல்வதை இனவாத, சந்தர்ப்பவாத சக்திகள் தமது எதிர்காலத்திற்கான அச்சுறுத்தலாக நோக்குகின்றன. இதன் காரணமாகவே தமிழ் அரசியலில் காணப்படும் சந்தர்ப்பவாத, பிற்போக்கு சக்திகளை ஊக்கப்படுத்தும் வகையில் நாட்டில் புதிய அரசியல் யாப்பு தொடர்பான விவாதங்கள் ஆரம்பமாவதற்கு முன்பதாகவே ‘ஏக்ய ராஜ்ய’ என்ற பெயரில் அரசியல் யாப்பு வரையப்பட்டு வருவதாக புரளியைக் கிளப்பி, தமிழரசுக் கட்சி இதுபற்றி மௌனமாக இருப்பதன் மூலம் ஒற்றை ஆட்சிக் கட்டமைப்பைத் தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்வதாக பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.
அருகிலுள்ள பாரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வெளிநாட்டுச் செயலருக்கு தவறான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதால் ஆபத்து எதுவும் விளையப் போவதில்லை. ஏனெனில் அந்த நாட்டிற்கு சகலமும் தெரியும். ஆனால் இவ்வாறான திரிபுபடுத்திய பிரச்சாரங்கள் தமிழ் மக்களின் தீர்வை நோக்கிய அணுகுமுறைகளுக்குப் பாரிய இடையூறாக அவை அமையும்.
