— அழகு குணசீலன் —
உலக உதைபந்தாட்டம் ஒரு மதம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு தேசப்பற்றை -தேசபக்தியை வளர்த்து தேசங்களை ஆட்கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள் உளவியலாளர்கள். மதங்கள் எவ்வாறு ஆபிரிக்க, தென்னமெரிக்க, ஆசிய வறிய மக்களின் நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனவோ, அதேபோன்று உதைபந்தாட்டம் பெரும்பாலும் ஆபிரிக்க, தென்னமெரிக்க குடியேற்ற வாசிகளால் உயிர்ப்பூட்டப்படுகிறது.
மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 2026 உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளும், அந்த அணிகளில் விளையாடும் வீரர்களும் இதை நிரூபித்து வருகின்றனர். அந்த வீரர்களுள் அவுஸ்திரேலிய வீரர் வேலுப்பிள்ளையும் ஒருவர்.
யார் இந்த நிஷான் வேலுப்பிள்ளை…?
சமூக ஊடகங்களில் அவரின் பன்மைத்துவ பண்பாட்டு கலாச்சார வேர் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட பதிவுகளை காணமுடிகிறது. நிஷானின் தந்தை வேலுப்பிள்ளை இலங்கை தமிழர் வம்சாவளியாகக்கொண்டவர் அதேவேளை மலேசிய குடியுரிமையையும் கொண்டவர் என்று கூறப்படுகிறது. நிஷானின் தாயார் கில்லியன் (Gillien) ஆங்கிலோ – இந்திய பெற்றோருக்கு பிறந்த தமிழ்நாடு சென்னை தமிழ் வம்சாவளியை கொண்டவர்.
இவர்களுக்கு 2001 மே மாதம், 7ம்திகதி, அவுஸ்ரேலியாவில் பிறந்தவர் நிஷான் வேலுப்பிள்ளை என்ற அவுஸ்திரேலிய தேசிய உதைபந்தாட்ட வீரர். தற்போது நடைபெற்று வரும் உலகக்கிண்ண போட்டிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பேசப்படும் வீரர்களுள் நிஷானும் ஒருவர். இலங்கை தமிழ் வேரை கொண்ட, குடியேற்ற வாசிகளான பெற்றோருக்கு பிறந்த 25 வயதான நிஷான் ஒரு பிரபல தேசிய அணியில் விளையாடுவது அவர் குறித்த ஊடக பிரசன்னத்திற்கு காரணம். மொத்தத்தில் நிஷானின் வேர் இலங்கை, இந்தியா -தமிழ்நாடு, மலேசியா, அவுஸ்திரேலியா என்ற பன்மைத்துவத்தை பிரதிபலிக்கிறது.
உலகக்கிண்ண உதைபந்தாட்ட தகுதித்தேர்வு ஆட்டம் சீனாவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையே இடம்பெற்ற போது 3: 1 என்ற கோல்களால் அவுஸ்திரேலிய அணி சீனாவை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் 83 வது நிமிடத்தில் களமிறக்கப்பட்ட நிஷான் ஆடுகளத்தில் இறங்கி 7 நிமிடங்களில் அதாவது போட்டி முடிவுறும் நிலையில் சீனாவுக்கு எதிராக ஒரு கோல் போட்டார். அதுவே அவுஸ்திரேலியா தகுதிதித்தேர்வில் வெற்றி பெற வழிவகுத்தது.
இந்த நிலை அவுஸ்ரேலியாவுக்கு மட்டும் உரியதல்ல. மேற்குலக அமெரிக்க, ஐரோப்பிய உதைபந்தாட்டம் குடியேறிகளின் பிள்ளைகளாலேயே சுவாசித்துக் கொண்டிருக்கிறது. ஆபிரிக்க, தென்னமெரிக்க, முன்னாள் யூகோஸ்லாவியா, ஆசிய குடியேற்றவாசிகளின் வாரிசுகள் இந்த வரலாற்றை எழுதுகிறார்கள். இது வேறு ஆட்டங்களை விடவும் உதைபந்தாட்டத்தில் பதிக்கப்பட்டுள்ள ஒரு விசேட முத்திரையாகிறது.
அவுஸ்திரேலிய அணி மட்டும் அல்ல, பொதுவாக வட அமெரிக்க, மத்திய ஐரோப்பிய அணிகள் குடியேற்றவாசிகளின் – அகதிகளின் வாரிசுகளால் நிரப்பப்பட்டிருக்கின்றன. இது உதைபந்தாட்ட அணிகளை தேசிய வாதம் கடந்தும், குடியேறிகளுக்கு எதிரான வலதுசாரி அரசியல் நிலைப்பாட்டையும் , இனவாதத்தையும் பின் தள்ளியும் கலாச்சார ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு வகையில் பேர்ளின் சுவர் தகர்க்கப்பட்ட பின்னரும் மெக்சிக்கோ -அமெரிக்க எல்லையில் தடுப்பு சுவர் கட்டும் டொனால்ட் ரம்ப்பின் திட்டத்தின் தேசிய வாத, குடியேறிகளுக்கு எதிரான வலதுசாரி குடியரசுக் கட்சியின் அரசியல் பலவீனத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது. பொருளாதாரத்தில் மட்டும் இல்லாமல், விளையாட்டிலும் குடியேறிகளையும், அவர்களின் வாரிசுகளையும் விலக்கி வைக்க முடியாது என்பதை வெளிக்காட்டுகிறது. இதில் உள்ள இன்னொரு முக்கியத்துவம் என்னவெனில் சட்டரீதியாக “கட்டாய ஒதுக்கீடு”செய்யப்பட்ட விகிதாசார அரசியல் சார்ந்தது அல்ல இது. மாறாக ஒரு சமூக பன்முகத்தன்மையில் திறமைக்கும், தகுதிக்கும் கொடுக்கப்படுகின்ற திறந்த வாய்ப்பும் மதிப்பும்.
26 வீரர்களைக் கொண்ட அவுஸ்திரேலிய தேசிய உதைபந்தாட்ட அணியில் 18 பேர் அதாவது சுமார் 70 வீதமானவர்கள் குடியேற்ற பின்னணியைக் கொண்டவர்கள். இவர்கள் குறைந்தது 15 வேறுபட்ட கலாச்சார, இன பூர்வீகத்தை கொண்டவர்களாகவும் உள்ளனர். அவுஸ்திரேலிய மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் வெளிநாட்டவர்கள். உதைபந்தாட்ட அணியில் மூன்றிலொரு பகுதியினர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். வெளிநாட்டவர்களுக்கு எதிரான வலதுசாரி அரசியல் கட்சிகளுக்கும், தலைமைகளுக்கும், அவற்றிற்கு பின்னால் அடையாளப்படுத்தப்படும் இனவாதத்திற்கும் எதிராக தேசியத்திற்குள் ஒரு சர்வதேசியத்தை இந்த உதைபந்தாட்ட அணிகள் கொண்டிருப்பது உலகின் எதிர்கால சித்திரத்தின் செல் திசையை நிர்ணயிக்கும் பலத்தை கொடுக்கிறது.
ஐரோப்பாவின் 13 முன்னணி உதைபந்தாட்ட அணிகளில் 16 தலைசிறந்த வீரர்கள் குடியேற்ற பரம்பரையை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இது மொத்த ஆட்டக்காரர்களில் 22 வீதம். அமெரிக்க அணியின் 26 பேரில் 12 பேர் இவ்வாறானவர்கள். இவர்களில் 7 பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். பிரான்ஸ் தேசிய அணியில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் குயேறிகளின் வாரிசுகள். ஜேர்மனியில் இது 26:14 ஆக 54 வீதம்.
சுவிற்சர்லாந்தின் தேசிய அணியிலும் 50 வீதத்திற்கும் அதிகமான வீரர்கள் குடியேற்ற பின்னணியைக்கொண்டவர்கள்.நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகளில் இது 70 வீதமாக இருக்கிறது. கனடாவிலும் நிலைமை இதில் இருந்து மாறுபட்டதல்ல. 26:7 என்ற விகிதத்தில் கனடா தேசிய அணியில் 27 வீதத்தினர் குடியேறிகளின் பின்னணியைக்கொண்டவர்கள்.
உதைபந்தாட்ட அணிகளில் துலங்கும் பன்முகத்தன்மையானது புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மனப்பான்மையையும், பல்லின பண்பாட்டின் மீதான இன,மத வாத அரசியல் தாக்குதல்களுக்கும் ஒரு முக்கியமான பலமான எதிர்வாதத்தை அளிக்கிறது.
இந்த நிலையில் வெறுமனே ஒரு வேலுப்பிள்ளையை கொண்டு பறையடிப்பதை தவிர்த்து இலட்சக்கணக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறையினரை, வாழும் தேசங்களின் ஈழத்தமிழர் தொகைக்கு அணிகளுக்குள் வீரர்களை உள் ஈர்ப்பு செய்ய முடியாமல் இருப்பதற்கான பெரும் தடை என்னவாக இருக்க முடியும்.? இதற்கான பொறுப்புக்கூறல் புலம்பெயர்ந்த தேசங்களின் தமிழ்த்தேசிய அரசியலை சாரும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப்புலிகளின் காலத்தில் வரையப்பட்ட வீதி வரைபடத்திலேயே தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றனர். கல்வி, கலை பண்பாடு, கலாச்சாரம், விளையாட்டு அனைத்திலும் இந்த சுற்று வளைவு தொடர்ச்சி உடைக்கப்பட்டு கலையும், விளையாட்டும் அந்த வட்டத்தில் சுழற்சியில் இருந்து மீட்கப்பட வேண்டும்.
இன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் தமிழீழ விளையாட்டு கழகம், தமிழீழ வெற்றி கிண்ணப் போட்டிகள், ஈழப்போராட்ட அரசியல் ஞாபகார்த்த போட்டிகளுக்குள்ளேயே சுழல்கின்றனர். இது வாழும் தேசங்களின் பன்மைத்துவ விளையாட்டு வாழ்வியலில் இருந்து விலகி – தாமாக ஒதுங்கியிருக்கின்ற தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மாதிரியாக அமைந்துள்ளது. இது ஈழ தேசியத்திற்கும் , வாழும் நாட்டு தேசியத்திற்கும் இடையே ஒரு குறுந்தேசியத்தை நிலைநிறுத்துகிறது. இந்த பாணியிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் சர்வதேச விடுதலைப்போராட்டங்களில் இருந்து விலகி தமிழ்த்தேசிய அரசியல் தனித்து ஓடி, ஓட்டம் முடிவடைந்து இருக்கிறது. ஆனால் அதுவல்ல முடிவடைய வேண்டிய இடம்.
இந்த வட்டத்திற்கு வெளியே விளையாட்டு, நாடகம், நடனம், சினிமா, இலக்கியங்கள் … போன்ற கலை இலக்கியங்கள் வரவேண்டும். அவை பன்மைத்துவ சமூகங்களின் மாற்று கலை வடிவங்களையும் உள்வாங்கி , தாமும் உள்ளாகி ஈழதேசிய வட்டத்தில் சுழலாமல் பன்மைத்துவ சர்வதேச வட்டத்தில் சுழல வேண்டும். இதனால் இழந்து விடுவதற்கு எம்மிடம் எதுவும் இல்லை. பெறுவதற்கே அதிகம் இருக்கிறது.
இன்னும் எத்தனை காலத்திற்கு ஈழ ஆட்டமும், ஆடலும், பாடலும்….? டாக்டர், என்ஜினியர், லோயர்…. என்ற போலி சமூக அந்தஸ்து கல்வியில் தனித்து சுழல்வதற்கு அப்பால் சர்வதேச சுழற்சிக்கு இளம் தலைமுறையினர் தயாராக வேண்டும். விளையாட்டும், கலையும், இலக்கியங்களும் அதிகார வர்க்கத்தின் அரசியல் ஆயதமாக பயன்படுத்தப்படுகின்ற இந்த உலகில் எதிர்நீச்சல் போடுவது தனித்து அல்ல கூட்டாக அமையவேண்டும்.
இதற்கு…..
நிஷான் வேலுப்பிள்ளை இன்றைய புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு ஒரு முதல் அடையாளம் மட்டுமே!
