இலங்கையர்கள் இந்திய கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தை எவ்வாறு பார்க்கிறார்கள்?

இலங்கையர்கள் இந்திய கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தை எவ்வாறு பார்க்கிறார்கள்?

— நியந்தினி கதிர்காமர் —

அண்மையில் ஒரு நாள் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக திரண்ட ஒரு குழுவினர், இந்தியாவில் போராட்டம் நடத்திய  மாணவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை வலியுறுத்தும் வாசகங்களும், டாக்டர் அம்பேத்கரின் புகழ்பெற்ற “கற்பி, கிளர்ந்தெழு, ஒன்றுசேர்” என்ற அழைப்பும் அங்கிருந்த பதாகைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

 மத்திய கல்வி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வீதிகளில் இறங்கி கொண்டாடிய இந்திய இளைஞர்கள், கூட்டு முயற்சி, ஆக்கப்பூர்வமானதும்  வன்முறையற்றதுமான ஒருங்கிணைப்பு ஆகியவை இப்போதும் சில வெற்றிகளுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பரவிய நிலையில், விமர்சகர்கள் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் நடந்த வெகுஜன இயக்கங்களுடன் இவற்றை ஒப்பிடத் தொடங்கினர்.

இந்திய மாணவர்களின் போராட்டத்தின் தன்மையும் நோக்கமும் 2022 ஆம் ஆண்டில்  இலங்கையில் நடந்த ‘அறகலய’ (போராட்டம்) இயக்கத்திலிருந்து வேறுபட்டிருந்தபோதிலும், அது இலங்கையர்களிடையே ஒரு விசேட  தாக்கத்தை ஏற்படுத்தியது. கரப்பான் பூச்சிகளின் உருவகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட அரசியல் நையாண்டிகள், உணர்வுகள் மற்றும் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (NEET) வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களின் இதயத்தை பிழியும் சாட்சியங்கள் எல்லை கடந்து எளிதாகப் புரிந்து கொள்ளப்பட்டன.

இலங்கையின் கல்வி நெருக்கடி

இந்திய மாணவர்கள், நமது பிராந்தியம் முழுவதிலும் உள்ள கல்வி முறைகளைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இலங்கையின் பொதுக் கல்வி முறையிலும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வு மற்றும் க.பொ.த. உயர்தரத் தேர்வு போன்ற கடுமையான போட்டித் தேர்வுகள் உள்ளன. இவை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிக மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களில் சுமார் கால் பகுதியினருக்கு மட்டுமே இலங்கையின் அரச  பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்கிறது.

இலங்கைக்குப் பிறகு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியா தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்கிய போதிலும், இந்தியாவின் கல்வி முறையின் தனியார்மயமாக்கலும் வணிகமயமாக்கலும் மிக வேகமாகவும் தலைசுற்ற வைக்கும் வகையிலும் விரிவடைந்து, ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்தின.

இலங்கை, இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை அரசாங்கத்தின் மூலம் தொடர்ந்து வழங்கியதன் மூலம் பயனடைந்ததுடன், பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர் மனித வளர்ச்சி சுட்டெண்களைப் பெற்றது. இருப்பினும், போதிய நிதி ஒதுக்காததன் மூலம் அந்த ஆரம்பகால நன்மைகள் இப்போது மெதுவாக சீரழிந்து வருகின்றன.

தெற்காசியாவில் கல்வித் துறைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) நிதி ஒதுக்கீட்டில் இலங்கை மிகக் குறைந்த இடத்தில் உள்ளது – 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 2 சதவீதம்  மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைப் போலவே, அரச பல்கலைக்கழகங்களில்  இடத்தைப் பிடிப்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது.

அதிகரித்துவரும்  தேவைக்கேற்ப உயர் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொது நிதி ஒதுக்கீடு கட்டுப்படுத்தப்பட்டுள்ள அதே வேளையில், அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகளைச் சார்ந்திருக்கும் நிலை நமது நாடுகளில் அதிகரித்துள்ளது. பட்டப்படிப்பு திட்டங்களில் மிகக் குறைந்த இடங்களுக்கு அதிகமான மாணவர்கள் போட்டியிட நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் அதிக இலாபம் ஈட்டும் தனியார் பயிற்சி மையங்களின் வலைப்பின்னல்களும் விரிவடைந்துள்ளன.

மருத்துவக் கல்வியின் எதிர்காலத்துடன் இலங்கை  போராடி வரும் இந்தச் சூழலில், இந்தியாவில் மருத்துவத் திட்டங்களுக்கான நீட் நுழைவுத் தேர்வுகள் குறித்த விவாதங்கள்  காலப்பொருத்தமான ஒரு எச்சரிக்கையாகும். இலங்கையின் இலவசப் பொதுச் சுகாதார அமைப்பு தற்போது அனைத்து அரசுப் பல்கலைக்கழக மருத்துவப் பட்டதாரிகளையும் உள்வாங்கி, உத்தரவாதமளிக்கப்பட்ட வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது. இத்தகையதொரு அமைப்பைப் பாதுகாப்பதும் வலுப்படுத்துவதும் கொள்கை முன்னுரிமையாக இருக்கும் என்பதே பரவலான எதிர்பார்ப்பாக இருக்ககும்.  ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், அதற்கு நேர்மாறானதே உண்மையாய் உள்ளது.

இலங்கையின் இலவசக் கல்வி முறை தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான முயற்சிகள், பல்கலைக்கழக மாணவர் சங்கங்களால் “பட்டக் கடைகளை” மூடுவதற்காக நடத்தப்பட்ட தைரியமான மற்றும் தொடர்ச்சியான போராட்டங்களால் முறியடிக்கப்பட்டன. தற்போதைய தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தின் கல்விக் கண்ணோட்டமானது, கட்டணம் வசூலிக்கும் அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பதில் சாதகமாக உள்ளது, இது நாட்டின் இலவசக் கல்வியின் எதிர்காலம் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

தேர்வு சார்ந்த கல்வியை மாற்றுவது என்பது கல்வி கொள்கை வட்டாரங்களில் தீவிரமாக  விவாதிக்கப்படும் ஒரு தலைப்பாகும். இருப்பினும், இந்த சிக்கலுக்கு நடைமுறைச்  சாத்தியமான மாற்று வழிகள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. ‘தேர்வு என்ற தடையை’ தாண்டுவது மட்டுமே ஏழை மாணவர்களுக்கும்  பின்தங்கிய மாணவர்களுக்கும் அரிதான வாய்ப்புகளைப் பெறுவதற்கான ஒரே வழியாக உள்ளது. கடுமையான விதிகள் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்களை தீர்வுகளாக அறிமுகப்படுத்துவது வெறும் கண் துடைப்பு மட்டுமே. அவை அடிப்படையான பிரச்சனையை உற்று நோக்குவதில்லை – அதுவே இளைஞர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்குக் குறைந்த செலவிலான வாய்ப்புகளும் சமமான அணுகலும் இல்லாத நிலையாகும்.

உயர்கல்வி வாய்ப்புகளை மேலும் கட்டுப்படுத்தும் உலகளாவிய கல்விக் கொள்கை சிந்தனையின் போக்கானது, நமது பிராந்தியத்தில் உள்ள தேசிய கல்விக் கொள்கைகளில் பெரும் செல்வாக்கைச் செலுத்துகிறது. உயர்கல்வியை விரும்பும் அனைவருக்கும் அதை விரிவாக்க வேண்டிய அவசியமில்லை என்ற ஒரு பார்வை நிலவுகிறது.

தகுதியுள்ள பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தட்டச்சைச் சரிசெய்வதற்குப் பதிலாக, உயர்கல்விக்குள் நுழைவதற்கான தடைகளை உருவாக்கி, மாணவர்கள் கல்வி மற்றும் தொழில்முறை பட்டங்களைப் பெறுவதிலிருந்து அவர்களைச் சோர்வடையச் செய்வதே கொள்கை ரீதியான அழுத்தமாக உள்ளது. இப்போது நிதியானது மாற்றாக தொழிற்கல்வியை ஊக்குவிப்பதற்குத் திருப்பி விடப்படுகிறது. இந்தப் போக்கு இலங்கையின் புதிய சர்ச்சைக்குரிய பொதுக் கல்விக் கொள்கையிலும் தெளிவாகத் தெரிகிறது, அங்கு 14 வயதுடைய சிறுவர்களை அவர்களின் மனப்பான்மை மற்றும் உளவியல் அளவீடுகள் (Psychometrics) மூலம் அடையாளம் கண்டு, கல்வியியல் அல்லது தொழிற்கல்விப் பாதைகளில் வகைப்படுத்த முன்மொழிகிறது.

பல்கலைக்கழகத்தின் பங்கு பார்க்கப்படும் விதத்திலேயே ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில், காலனித்துவ ஆட்சியில் இருந்து இறையாண்மை கொண்ட நாடுகளாக மாறிய மாற்றத்தின் போது, கொள்கை வகுப்பாளர்களுக்குக் கல்வியின் முக்கிய பணியாக ஜனநாயகம் கருதப்பட்டது. நம் காலத்தின் கல்விக் கொள்கை வகுப்பாளர்கள் எந்த மாதிரியான சமூகத்தை உருவாக்குகிறோம் என்று கற்பனை செய்கிறார்கள்? ஒரு ஜனநாயக சமூகத்தையா அல்லது ஒரு சர்வாதிகார சமூகத்தையா? ஜனநாயக மற்றும் சமத்துவ சமூகங்களை உருவாக்கத் தேவையான நிறுவனங்களாக பல்கலைக்கழகங்கள் இப்போது பார்க்கப்படுவதில்லை. இல்லையென்றால், சிதைந்துபோன கல்விக் அமைப்பைச் சீரமைக்கக் கோரும் மாணவர்களை ஒரு அரசு ‘தேசத்துரோகிகள்’ என்று ஏன் முத்திரை குத்த வேண்டும்?

இலங்கை போன்ற நாடுகளில் கல்விக் கொள்கை வடிவமைப்புகளில் நவதாராளவாத பொருளியலாளர்களினால்  (Neoliberal economists) தீவிரமாக பரப்பப்பட்ட ‘மனித மூலதனம்’ (Human Capital) என்ற கருத்து, கல்வியின் விடுதலை அளிக்கும் சாத்தியக்கூறுகளையும் சிந்தனைகளையும் இடமாற்றம் செய்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களுக்குள் கருத்துக்களைச் சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்வதும் அரசியல் ஈடுபாடும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

நமது பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது பொலிஸார் நடத்தும் தாக்குதல்களும் கைதுகளும் இப்போது இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டன. ஆனால், அரசு அதிகாரமும் கார்ப்பரேட் அதிகாரமும் ஒன்றிணைந்து எந்தவொரு எதிர்ப்பையும் அடக்க வன்முறையைப் பயன்படுத்தும் போது, புதிய தாராளமய சீர்திருத்தங்கள் மூலம் கல்வி நிறுவனங்களில் வளர்க்கப்பட்ட ‘அரசியல் நடுநிலைமை’ எனும் போர்வையின் உண்மைத்தன்மை அம்பலமாகிறது.

 பழகிப்போன பாணி

கல்விக் கூடங்களுக்குள்ளும் பொது வெளியிலும் ஜனநாயக இடத்தை மீண்டும் வென்றெடுப்பது நமது பிராந்தியத்தில் ஒரு அவசரப் பணியாகும். 2022 ஆம் ஆண்டில்  இலங்கையின் ‘அறகலய’ (மக்கள் போராட்டம்) நிகழ்வுக்குப் பிறகும், பின்னர் பங்களாதேஷின் ஜூலை எழுச்சி மற்றும் நேபாளத்தின் இளைஞர் போராட்டங்களின் போதும் என்ன நடந்தது என்பதைக் கண்ட சாட்சிகளாக, ‘ கரப்பான் பூச்சி  ஜனதா கட்சி’ மற்றும் இளைஞர் இயக்கத்தால் முன்வைக்கப்பட்ட எதிர்பாராத சவாலுக்கு இந்திய அரசு எவ்வாறு   பதிலளிக்கிறது என்பதை நாம் கவலையுடன் கவனித்து வருகிறோம்.

இலங்கையைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள், மதகுருமார்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களால் கையொப்பமிடப்பட்ட ஒரு ஒருமைப்பாட்டு  அறிக்கை வெளியிடப்பட்டது. போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் மாணவர்களைப் பாராட்டிக்  கையொப்பமிட்டவர்கள், இது இந்தியாவில் அர்த்தமுள்ள கல்வி சீர்திருத்தங்களை அடைவதற்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர், மேலும் “இலங்கை அரசாங்கத்தால் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட நீண்டகால சட்ட நடவடிக்கைகளின் நமது அனுபவம் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் கூறினர்.

மோடி அரசாங்கம் மாணவர்களின் உடனடி கோரிக்கைகளுக்குப் பணிந்த பிறகு, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்ட பின்னரும் தொடர்ந்து துன்புறுத்தல்கள் நடப்பதாக வரும் செய்திகள் பழகிப்போன ஒரு பாணியை

 வெளிக்காட்டுகின்றன. அறகலயவில் ஈடுபட்ட செயல்பாட்டாளர்களை வேட்டையாட இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளை மேற்கொண்டது. நான்கு ஆண்டுகள் கழிந்தும், ஆரம்பத்தில் செய்யப்பட்ட சுமார் நான்காயிரம் கைதுகளில் பல வழக்குகள் இன்னும் முடிவடையாமல் நிலுவையில் உள்ளன.

அறகலய என்பது சமீப காலத்தில் இலங்கையில் நடந்த மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டமாகும். நாட்டின் அனைத்து மூலைகளிலும் உணரப்பட்ட உடனடி பொருளாதார துன்பத்திலிருந்தே இது உருவானது. இலங்கை தனது வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டுக்கடனைத் திரும்பச் செலுத்தும் பொறுப்பில் தவறியபோது (Default), அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்தது. 

இலங்கையின் நெருக்கடியானது நான்கு தசாப்தகால புதிய தாராளமய சீர்திருத்தங்களின் விளைவாகும், இது கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு உழைப்பாளர்களை இடப்பெயர்வு செய்தது, கிராமப்புற பொருளாதாரத்தில் நெருக்கடியை உருவாக்கியது, வேலைவாய்ப்பை வழங்க தொழிற்சாலைகளை விரிவாக்கத் தவறியது. அதற்குப் பதிலாக, போருக்குப் பிந்தைய நிதியாக்கம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் மூலம் நிதியளிக்கப்பட்ட பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களின் விரிவாக்கம் ஆகியவை பொருளாதார இன்னல்களை மேலும் தீவிரப்படுத்தின.

போராட்டக் களங்களில்  பங்கேற்றவர்கள், வர்க்க மற்றும் சித்தாந்த ரீதியான வேறுபாடுகளைக் கடந்து, இலங்கைச் சமூகத்தின் அனைத்துத் தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்தவர்களாவர். அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவை வலியுறுத்தும் உடனடி கோரிக்கைக்கு அப்பால், “முறைமை மாற்றம்” (System change) வேண்டும் என்ற பலத்த குரலும் அங்கு எழுந்தது.

ராஜபக்ச குடும்பம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு, ஆட்சியைத் தன்வசப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க, அச்சறுத்தல்கள் மூலம் மக்கள் இயக்கத்தை விரைவாக ஒடுக்கினார். அத்துடன் பழைய அதே முறைமையின் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்தினார். சர்வதேச நாணய நிதியத்தின்  17வது ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் மிகக் குறைந்தளவே நிவாரணமளித்த கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றின் ஆதரவோடு, உழைக்கும் மக்கள் மீது மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்பட்டன. பொருளாதார மாற்றச் சட்டம் (Economic Transformation Act) உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, எதிர்கால அரசாங்கங்களை அதே நவதாராளவாத சீர்திருத்தங்களின் எல்லைக்குள்ளேயே சட்டக் கட்டமைப்பின் மூலம் முடக்கி வைத்தன.

பழைய அரசியல் தலைமைகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, நாட்டை ஆட்சி செய்ய புதிய முகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் வாக்காளர்கள் உறுதியாக இருந்ததால், 2024 ஆம் ஆண்டில் இலங்கை மக்கள் அடுத்த தேர்தல் சுழற்சியை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொண்டனர். அநுர குமார திசாநாயக்க தலைமையிலான  தேசிய மக்கள் சக்தி பிரமாண்டமான  பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.

வெளிநாட்டு ஊடகங்கள் அவசரப்பட்டு தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தை மார்க்சிஸ்ட், இடதுசாரி மற்றும் மத்திய-இடதுசாரி என முத்திரையிட்டன. ஆனால், தேசிய மக்கள் சக்தி எந்தவொரு சித்தாந்த முத்திரைகளாலும் கறைபடாமல் இருக்கவே விரும்பியது. எதிர்வரும்  நவம்பரில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள இந்த நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களை உற்று நோக்கும்போது, அது தெளிவான நவதாராளவாத சித்தாந்தச் சார்பைக் கொண்டிருப்பது வெளிப்படுகிறது.

முந்தைய விக்கிரமசிங்க நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் சுலபமாக இயங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் பலதரப்பு நன்கொடையாளர்களின் கட்டளைகளுக்கு ஏற்ப அரசாங்கத்தால் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு தேசிய வரவு செலவுத் திட்டங்களிலும் இது தெளிவாகத் தெரிந்தது.

மக்களின் ஆதரவை இழந்துபோன அரசியல்வாதியான விக்கிரமசிங்கவால் எதைச் செய்ய முடியவில்லையோ, அதை இலங்கைச் சமூகத்தின் பெரும்பான்மையான பகுதியினரிடையே தனக்கிருந்த மக்கள் செல்வாக்கைக் கொண்டும், தனக்கு பெரிய அரசியல் சவால்கள் எதுவும் வராது என்ற நம்பிக்கையுடனும் தேசிய மக்கள் சக்தியால்  செய்ய முடிந்தது – அதாவது, தொடர்ச்சியான கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான அதிருப்தியைத் தணிக்கக்கூடியதாக இருந்தது. வெளிப்படையாகச் சொல்வதானால், பாராளுமன்ற எதிர்க்கட்சியானது பலவீனமானதும் திறமையற்றதுமான  ஒரு எதிர்க்கட்சியாகவே உள்ளது. ‘அறகலய’ (போராட்டம்) கோரிய முறைமை மாற்றம் என்பது இன்னமும் முடியாத ஒரு பணியாகவே உள்ளது.

அறகலயவுக்குப் பிந்தைய நான்கு ஆண்டுகள் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளன; அரசாங்கங்களை மாற்றுவது மட்டுமே முறைமை மாற்றத்தைக் கொண்டு வராது. தாராளமயமாக்கலுக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு வெளிநாட்டுச் செலாவணியைக் கொண்டுவருவதற்குத் தொடர்ந்து மூன்று முக்கிய துறைகளையே நம்பியுள்ளது – அவை தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி, மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பண அனுப்பல்கள்.

பயனுள்ள வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய புதிய துறைகளை உருவாக்க தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தவறிவிட்டன. இதனால், உயர்கல்வி டிப்ளோமா மற்றும் பட்டங்களைப் பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகள், சுகாதார, கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளில் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகளை உள்வாங்கும் அரசத் துறைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.

அரசத் துறையில் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்குக் கிடைக்கும் ஏனைய வாய்ப்புகள், எந்தவொரு உத்தரவாதமான வருமானமும், தொழில்முறை முன்னேற்றமும் அல்லது சமூகப் பாதுகாப்பும் இல்லாத விற்பனைத் துறை, டிஜிட்டல், பிளாட்ஃபார்ம் மற்றும் ‘கிக்’ (gig) பொருளாதாரம் போன்ற மிகவும் பாதுகாப்பற்ற வேலைகளாகவே இருக்கின்றன.

இலங்கையிலும் இளம் கரப்பான்கள் ஒரு குறிப்பிடத்தக்க மக்கள் தொகையாகவே உள்ளனர். அபிஜித் திப்கே பிராந்தியத்திலுள்ள இளைஞர்களிடம் “அனைத்து கரப்பான்களும் ஒன்றிணைந்தால் என்ன நடக்கும்?” என்ற அதே கேள்வியைக் கேட்டால், அவரும் ஓர் உற்சாகமான பதிலைப் பெறக்கூடும். கரப்பான்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். ஓரங்கட்டப்பட்ட மற்றும் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு குழுவினர் தங்களின் கூட்டுக்குரலைக் கண்டடைவதில் ஒரு புதிய வீரியம் இருக்கிறது. மாணவர்களின் போராட்டத்திலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியிலும் மிகவும் சிலிர்ப்பான விடயமாக இருப்பது அதுவேதான்.

(முற்றும்)

(நியந்தினி கதிர்காமர் ஒரு இலங்கை ஆராய்ச்சியாளரும், மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை முனைவர் பட்ட மாணவியுமாவார்.)

( நன்றி : த வயர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *