— வீரகத்தி தனபாலசிங்கம் —
அமெரிக்காவும் ஈரானும் கடந்த வாரம் கைச்சாத்திட்ட சமாதான உடன்படிக்கை உலகில் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியங்களில் ஒன்றான மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பாக நோக்கப்படுகிறது. பல தசாப்தங்களாக நீடித்த தடை விதிப்புகள், நிழல் யுத்தங்கள், இரகசிய நடவடிக்கைகள் மற்றும் அவ்வப்போது இடம் பெற்ற இராணுவ மோதல்களுக்கு பிறகு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமரசத்துக்கான தற்காலிக ஏற்பாடு ஒன்று கூட முக்கியத்துவம் வாய்ந்த ‘இராஜதந்திர சாதனையாகவே காண்பிக்கப்படுகிறது.
பெப்ரவரி இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்த போரின் விளைவான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கிய உலக நாடுகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியானும் “இஸ்லாமாபாத் புரிந்துணர்வு உடன்படிக்கை” என்ற தலைப்பிலான 14 அம்ச ஆவணத்தில் கைச்சாத்திட்டதை தொடர்ந்து ஆறுதலடைந்தன.
ஜி 7 நாடுகளின் உச்சிமகாநாட்டைத் தொடர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பாரிஸில் வேர்செய்ல்ஸ் மாளிகையில் கடந்த புதன்கிழமை அளித்த இரவு விருந்துபசாரத்தின்போது ட்ரம்ப் நேரடியாகவே ஆவணத்தில் கைச்சாத்திட்ட அதேவேளை, ஈரானிய ஜனாதிபதி தெஹ்ரானில் இருந்த வண்ணம் டிஜிட்டல் முறையில் கைச்சாத்திட்டார்.
ஆனால், இந்த உடன்படிக்கையை நிரந்தரமானதாக மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் சமரசம் செய்துகொள்வதில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இருக்கும் அக்கறையை மாத்திரம் பொறுத்ததவையல்ல. மாறாக, ஈரானை ஒரு நிரந்தர எதிரியாக அமெரிக்கா இனிமேலும் கருதாமல் விடக்கூடிய பிராந்திய ஒழுங்கொன்றை ஏற்றுக்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராக இருக்கிறதா இல்லையா என்பதையும் அது பொறுத்திருக்கிறது.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் சீராவதை இஸ்ரேலை விடவும் வேறு எந்த நாடும் கடுமையாக எதிர்க்கவில்லை. இஸ்ரேலிய அரசாங்கங்கள் தங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரானை நோக்கி வந்திருக்கின்றன. அதனால், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான உறவுகளை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கக் கூடிய சகல முயற்சிகளையும் இஸ்ரேலிய தலைவர்கள் எதிர்த்துவந்தார்கள். வரலாற்றுப் பதிவுகள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இஸ்ரேலிய தலைவர்கள் தங்களது நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி இந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தினாலும், அவர்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு என்பது பரந்தளவிலான அரசியல் மற்றும் மூலோபாய நோக்கங்களைக் கொண்டிருப்பதாக சர்வதேச அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து அதன் 60 நாள் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக இரு நாடுகளினதும் தூதுக் குழுக்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிமை சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்படுவதற்கு காரணமான லெபனான் மோதல்களை இந்த பின்புலத்திலேயே நோக்க வேண்டும்.
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைவரம் முக்கியமாக மூன்று அடிப்படைகளில் நகருகிறது. டொனாலட் ட்ரம்பும் ஈரானிய ஜனாதிபதியும் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை, சுவிஸ் சந்திப்பின் திடீர் இரத்து, உடன்படிக்கை எதிர்நோக்கும் உடனடிச் சவால்கள் ஆகியவையே அவையாகும்.
உடன்படிக்கையின்
முக்கிய அம்சங்கள்
போர் மூண்டதையடுத்து. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளாவிய எரிசக்திச் சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் கடந்துசெல்லும் இந்த நீரிணையைத் திறந்துவிட ஈரான் இணங்கியிருக்கிறது;
ஈரான் மீதான தனது கடற்படை முற்றுகையை விலக்கிக்கொள்வதற்கு அமெரிக்கா இணங்கியிருக்கிறது. பரந்தளவிலான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவதற்கான சாத்தியங்கள் எதிர்கால அணுசக்தி பேச்சுவார்த்தைகளுடன் பிணைக்கப்பட்டிருக்கின்ற போதிலும், ஈரான் அதன் மசகு எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கும் அது தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்கா உடனடி விலக்குகளை வழங்குகிறது;
ஈரான் அதன் சொந்த மண்ணில் வைத்திருக்கும் 440 கிலோகிராம் யூரேனிய இருப்பின் செறிவை சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் குறைப்பதற்கு இணங்கியிருக்கிறது;
ஹோர்முஸ் நீரிணை வழியான நீண்டகால வர்த்தகம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான நிரந்தர உடன்படிக்கையை எட்டுவதற்கு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை 60 நாள் கால அவகாசத்தை வழங்குகிறது.
லெபனான் உட்பட சகல முனைகளிலும் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்று உடன்படிக்கை வலியுறுத்துகின்ற போதிலும், லெபனானில் இஸ்ரேலுக்கும் ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத்துக்கும் இடையில் மோதல்கள் மூண்டதையடுத்து அமெரிக்க — ஈரானிய உயர்மட்டத் தூதுக் குழுக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது.
சுவிட்சர்லாந்துக்கு புறப்படுவதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி விமானத் தளத்தில் தயாராக இருந்த வேளையிலேயே அவரது பயணம் திடீரென்று நிறுத்தப்பட்டது. லெபனான் மோதல்களைக் காரணம் காட்டி ஈரானியத் தூதுக்குழு அதன் சுவிஸ் பயணத்தை நிறுத்திக்கொண்டது.
அமெரிக்காவுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜூன் 18 ஆம் திகதி மின்னணு முறையில் கைச்சாத்திடப்பட்டு விட்டதால், அமெரிக்கத் தூதுக்குழுவை சந்திப்பதில் அவசரம் எதுவுமில்லை என்றும் தங்களால் காத்திருக்க முடியும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சு அறிவித்தது.
லெபனானில் இஸ்ரேல் அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா நெருக்குதலைப் பிரயோகிக்க வேண்டும் என்று தெஹ்ரான் வலியுறுத்தியது.
ஹிஸ்புல்லா இயக்கத்துடன் போர் நிறுத்தத்துக்கு இணங்குமாறு இஸ்ரேலை கேட்டுக் கொண்டதாக ட்ரம்ப் வெள்ளிக்கிமை கூறினார். இஸ்ரேல் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதற்கு இணங்கினாலும் கூட அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உடன்படிக்கை இஸரேல் பணயம் வைக்கக்கூடிய அளவுக்கு நொய்தான ஒன்றாக இருக்கிறது என்றே தோன்றுகிறது.
அதேவேளை, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் ஒரு தரப்பாக இருக்கவில்லை என்பதால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டதுடன் அதன் விதிகள் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் உதவியிலும் ஆதரலிலுமே இஸ்ரேல் தங்கியிருக்கின்ற போதிலும், அமெரிக்காவின் நலன்களுக்காக நெதான்யாகுவை ஒத்தழைக்க வைக்க முடியாத ஒரு விசித்திரமான நிலையில் ட்ரம்ப் இருக்கிறார்.
அமெரிக்காவின் மட்டுப்பாடுகள்
மத்திய கிழக்கின் இன்றைய நிலைவரம் உலக ஒழுங்கை வரையறை செய்வதில் அமெரிக்காவுக்கு இருக்கும் மட்டுப்பாடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதும் அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களை அழிப்பதும் லெபனானில் ஹிஸ்புல்லா, காசாவில் ஹமாஸ், யேமனில் ஹௌதிகள் போன்ற அரசு சாரா இராணுவ அமைப்புக்களுக்கு ஈரானின் ஆதரவை முடிவுக்கு கொண்டு வருவதுமே தங்கள் இலக்குகள் என்று கூறிக்கொண்டுதான் பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போரைத் தொடங்கின.
ஆனால், நூறு நாட்கள் கடந்த நிலையில், ஜூன் 15 ஆம் திகதி அமெரிக்கா ஈரானுடனான போரை நிறுத்துவதற்கும் ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் வளைகுடாவில் முற்றுகைகளை விலக்கிக் கொள்வதற்கும் ( இவையெல்லாம் போருக்கு முன்னர் இல்லாத இடையூறுகள்) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறது.
அதேவேளை, இஸ்ரேலின் எதிர்ப்பையும் மீறி ஈரானுடன் புரிந்துணர்வுக்குச் செல்வதற்கு ட்ரம்புக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மூலோபாய நிலக்காட்சி எந்தளவுக்கு வியத்தகு முறையில் மாறியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.
மிலேச்சத்தனமான குண்டுவீச்சுக்கள் மூலமாக ஈரானின் உட்கட்டமைப்புக்களுக்கு பாரியளவில் சேதத்தை ஏற்படுத்தியதுடன் முக்கியமான அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் பலரையும் ஆயிரக்கணக்கில் மக்களையும் கொன்றொழித்த போதிலும், அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் ஈரானை அடிபணிய வைக்க்முடியவில்லை.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலையும் ஈடுபடுத்தினால் தன்னால் இந்த போரில் இருந்து வெளியேற முடியாது என்பதை உணர்ந்த ட்றம்ப், ஈரானை நிபந்தனையற்ற முறையில் சரணடைய வைப்பதைத் தவிர வேறு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர வேண்டியேற்பட்டது. தனது நகர்வுகளுக்கு (எதிரியான ஈரானிடமிருந்து அல்ல) தனது நண்பனான இஸ்ரேலிய பிரதமரிடமிருந்து வரக்கூடிய இடையூறுகளை எவ்வாறு சமாளிப்பது என்பதே ட்ரம்புக்கு இப்போது பிரச்சினையாக இருக்கிறது.
இறுதி உடன்படிக்கையை நோக்கிய பேச்சுவார்த்தைகளுக்கான 60 நாட்கள் கால அவகாசத்தின்போது குறிப்பாக, அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் வெடிப்பதை தடுப்பதே ட்ரம்புக்கு இருக்கக்கூடிய முக்கியமான சவாலாகும்.
ஈரானிய அணுசக்தி பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வைக் கண்டுவிட முடியும் என்ற இஸ்ரேலின் கதையை நம்பியதுதான் அமெரிக்க ஜனாதிபதி செய்த மிகப்பெரிய மூலோபாயத் தவறு. ஈரானை அவர் குறைத்து மதிப்பிட்டுவிட்டார். புரிந்துணர்வு உடன்படிக்கையும் போர் நிறுத்தமும் வரவேற்கத்தக்கவையே. ஆனால், ஒரு தற்காலிக இடைநிறுத்தம் எந்த விதத்திலும் எந்தத் தரப்புக்கும் வெற்றியாகி விடாது.
தன்னிச்சையாகத் தொடங்கி தோல்வியடைந்த போரை, ஒரு இராஜதந்திர வெற்றியாகக் காட்டி உண்மையை மறைக்க ட்ரம்ப் முயற்சிக்கிறார். அவர் அறிவித்த இலக்குகளை அடையத்தவறிய, ஈரானில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, லெபனானைச் சீர்குலைத்த, எரிசக்திச் சந்தைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி உலகநாடுகள் பலவற்றில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய ஒரு சட்டவிரோதமான — தன்னிச்சையான போருக்குப் பிறகு ட்ரம்பினால் ஒரு தற்காலிக இடைநிறுத்தத்தையே விலைக்கு வாங்கக் கூடியதாக இருந்திருக்கிறது.
அமெரிக்காவின் இராணுவ வல்லமையைக் காட்டுவதற்காகத் தொடக்கப்பட்ட ஒரு நடவடிக்கை அதன் மட்டுப்பாடுகளை ( பலவீனங்களை ) நிரூபித்த ஒன்றாகவே அமைந்துவிட்டது.
இறுதியாக, கடந்த புதன்கிழமை சென்னை ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகை எழுதிய ஆசிரிய தலையங்கத்தில் தெரிவித்திருக்கும் சுவாரஸ்யமான கருத்தொன்றை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் ;
“ஹென்றி கீசிங்கர் கூறியதைப் போன்று கெரில்லாப் போராளி தோற்காமல் இருந்தால் அவன் வெற்றி பெற்றதாகவே அர்த்தம். மிகவும் பலம் பொருந்திய வல்லரசான அமெரிக்கா அதன் இலக்குகளை அடையத் தவறியதன் மூலம் போரில் தோற்றது; ஆனால், தோற்காமல் இருந்ததன் மூலமே ஈரான் வெற்றி பெற்றிருக்கிறது.”
