தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 2

தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 2

— கருணாகரன் —

(02)

ஒருங்கிணக்கப்பட்ட அல்லது கட்டுக்கோப்பான தலைமைத்துவம் இல்லாத ஒரு சமூகம் திசையறியாது தவிக்கும் கப்பலைப் போன்றது. அல்லது காற்றில் மிதக்கும் இலையைப்போலாகி விடும். விடுதலைக்கான அவசியத்தோடும் வேட்கையோடும் உள்ள சமூகத்துக்கு இந்த நிலை நல்லதல்ல. முறையான, அறிவும் விவேகமும் கூர்மையும் நிதானமும் அர்ப்பணிப்பும் கூடிய அரசியல் தலைமைத்துவம் இல்லாவிடில், அந்தச் சமூகம் கடுமையான ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் சமூகத்திற்குள் குழுவாதமும், உட்கட்சிப் பூசல்களும் தோன்றி, மக்களின் ஒற்றுமை முழுமையாகச் சிதைந்துபோகும். உள்நாட்டில் ஏராளம் பிளவுகள் ஏற்படும். பல கட்சிகளாகத் தமிழ் அரசியல் சிதைவுண்டிருப்பது இதற்குச் சான்று. இதனால் அரசியலில் வெற்றிடம் ஏற்படும். அதாவது பல அரசியற் கட்சிகளும் தலைவர்களும் இருப்பர். அவர்களால் சமூகத்திற்கான பலமான அரசியலை உருவாக்கவோ  முன்னெடுக்கவோ முடியாமலிருக்கும்.   இதைக் கண்டுகொண்டிருக்கிறோம். இது குறித்த சமூகத்தின் அரசியல் மீதான சர்வதேசத்தின் பார்வையை மங்கலாக்கும் அல்லது புறக்கணிப்புச் செய்யும். அதையும் பார்க்கிறோம். எல்லாவற்றிற்கும் அப்பால் இது அடக்குமுறையை மேலும் அதிகரிக்கும்  (Vulnerability to Oppression). 

தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு, மாவலி அபிவிருத்தித்திட்டம் என பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக அரசாங்கத்தின் மூலம்  நிகழ்ந்தேறும் அரசினுடைய ஆக்கிரமிப்பு முயற்சிகள் இதற்கு ஆதாரம். இதையும் கூட இப்பொழுது நாம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தெளிவும் உறுதிப்பாடும் நிதானமும் பொருத்தப்பாடுகளைக் குறித்த சிந்தனையும் கொண்ட தலைமைத்துவத்தினால்தான் உள்நாட்டு அரசியல் பிரதிநிதித்துவம், புலம்பெயர் தமிழர்களின் இராஜதந்திர நகர்வுகள், சர்வதேச நீதிமன்றங்களை நாடுதல் எனப் பல தளங்களில் சிறப்பாக வேலைசெய்ய முடியும். தற்போது துண்டுதுண்டாக இவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றபோக்கு அல்லது தன்மை உண்டு. உள்நாட்டில் அரசியற்கட்சிகளாகவும் சிவில் அமைப்புகளாகவும் ஓரளவுக்கு இது நடக்கிறது. ஆனால், அது சிதைவுண்ட நிலையிலானது. புலம்பெயர் சமூகத்தில் சாத்தியப்படக்கூடிய அளவில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் போன்ற விடயங்களை முன்வைத்து ராஜதந்திர முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், அங்கும் ஒருங்கிணைவுக்கு அப்பாலான பல அணிகள், போட்டிக்குழுக்கள், எதிர்நிலைப்பாடுடையவர்கள் என பல தரப்புகள் உள்ளன. இதனால்  இவையெல்லாம் தமிழ்ச் சமூகத்தினால் எதிர்பார்க்கப்படுகின்ற – தமிழ்ச் சமூகத்துக்குத் தேவைப்படுகின்ற-  பெறுமானங்களைத் தர முடியாதவைகளாக உள்ளன. இதற்குக் காரணம், இவை முரண்பட்டவையாகவும் சிதறுண்ட நிலையிலும் இருப்பதேயாகும். இவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமே அரசியல் வடிமொன்றையும் அரசியல் தலைமைத்துவம் ஒன்றையும் சீரான – கணிப்பிடக்கூடிய – அரசியல் முன்னெடுப்பினையும் உருவாக்கமுடியும். ஆகவே இவற்றுக்கிடையில் ஒருங்கிணைப்பு மிகமிக அவசியமாக உள்ளது. இதை பலரும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதைச் சாத்தியப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமைத்துவம் ஒன்று தேவை. இல்லையெனில் சிதறுண்ட – பலவீனமான  நிலையிலேயே – தமிழ்ச்சமூகத்தின் அரசியற்கட்டமைப்பும் செயற்பாடுகளும் இருக்கும். 

தகுதியான தலைவர்கள் இல்லாத இடமானது அரசியல் வெற்றிடத்தை (Political Vacuum) உருவாக்கி விடும். அதேவேளை சுயநலமிக்க சக்திகளும்  எதிர்த் தரப்பினரும் அந்த வெற்றிடத்தை ஆக்கிரமித்து, சமூகத்தின் விடுதலைக் குரலையும் உணர்வையும் நசுக்கிவிடுவர். சரியான தலைமைத்துவம் இல்லாதவிடத்து, மூலோபாய வீழ்ச்சி (Strategic Failure) ஏற்பட்டு, முறையான திட்டமிடல் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் இல்லாமலாகி, மக்களின் போராட்டங்களும் தியாகங்களும் வீணாகிவிடும்.  மக்களுடைய உரிமைப் பயணம் திசைமாறிப் போகும். இவ்வாறான சூழலில் உலக அரங்கில் குறித்த சமூகத்தின் தேவைகளையும், நியாயங்களையும் எடுத்துரைப்பதற்கும் உரையாடுவதற்கும் தகுதியான  பிரதிநிதிகள் இல்லாத நிலை உருவாகும். இதனால் சர்வதேச ஆதரவும்  அங்கீகாரமும் கிடைக்காமல் போகும் ஆபத்து ஏற்படும். ஆகவே  ஒருமித்த குரல் இல்லாத பலவீனமான சமூகத்தை, எதிர்தரப்பினர் மிக எளிதாக அடக்கி ஆளவும், சுரண்டவும் வழிவகுத்து விடும்.தலைமைத்துவம் இல்லாத சமூகம் தன் சுயவிபரத்தை (Identity) இழந்து, அடிமைத்தனத்திலிருந்து மீள முடியாத நிலைக்குத் தள்ளப்படும்.

தலைமைத்துவத்தின் அவசியம்

விடுதலையை வேண்டி நிற்கும் சமூகத்திற்கு அரசியற் தலைமைத்துவம் என்பது மூச்சுக்காற்றைப் போன்றது. அது அந்தச் சமூகத்தின் லட்சியங்களையும் ஆற்றல்களையும் ஒருமுகப்படுத்தி, இலக்குகளை வரையறுத்து, உரிமைக்கான போராட்டத்தை வழிநடத்திச் செல்ல உதவும். ஒடுக்கப்படும் மக்களின் குரலை சர்வதேச அரங்கில் ஒலிக்கச் செய்வதற்கு வாய்ப்பளிக்கும். ஒட்டுமொத்த மக்களையும் ஒன்று திரட்டிச் செல்லும் ஆற்றலை சரியான தலைமைத்துவத்தினாலேயே வழங்க முடியும். சிதறியிருக்கும் மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் ஓரிடத்தில் குவித்து, தெளிவான அரசியல் இலக்குகளை (Political Goals) வடிவமைத்துத் தருகிறது. முக்கியமாக சோர்வடையும் தருணங்களில் சமூகத்திற்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்து, ஒட்டுமொத்த மக்களையும் ஒரே இலக்கின் கீழ் (Mass Mobilization) அணிதிரட்டுகிறது. ஆகவே விடுதலை வேண்டிநிற்கும் சமூகத்தின் இலக்கைத் தீர்மானிக்கவும், அதற்கானவகையில் மக்களை ஒருங்கிணைக்கவும் அரசியல் தலைமைத்துவம்  அவசியமானது. 

மேலும் மூலோபாய திட்டமிடலில் (Strategic Planning)  முக்கியமான பங்களிப்பைச் செய்யக்கூடியதாக உள்ளது. உணர்ச்சி வசப்படாமல், ராஜதந்திர வழிகள், சர்வதேச ஆதரவு திரட்டுதல், மற்றும் சாத்தியமான நகர்வுகள் மூலம் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குகிறது. அதாவது சர்வதேச இராஜதந்திரம் (Global Diplomacy) க் குறித்துச் சிந்திக்கவும் அதைச் சரியான முறையில் திட்டமிட்டுக் கையாளவும் கூடியதாக இருக்கிறது. இதன்மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு வெளியுலக ஆதரவையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகிறது. கூடவே சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராடும் அதேவேளை, அடிப்படை ஜனநாயக விழுமியங்களைப் பேணி, சமூகத்தின் கட்டமைப்பு சிதையாமல் பாதுகாக்கிறது. 

ஆக, தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணமாக அல்லாமல், சமூகத்தின் மொத்தத் தியாகங்களையும் உழைப்பையும்  வெற்றியாக மாற்றும் பொறுப்புணர்வாக இருக்க வேண்டும். மேலும் தற்கால உலகளாவிய சமூகம் மற்றும் அரசறிவியல் கோட்பாடுகள் குறித்த தெளிவு, சிறந்த தலைமைத்துவத்திற்கு அடித்தளமாக அமைகிறது.

பலமான தலைமைத்துவம் இல்லாதபோது, எதிர்த்தரப்புக்கு ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ (Divide and Rule) யைச் செய்வது மிகவும் எளிதாகிவிடுகிறது. ஈழத்தமிழர் அரசியற் சூழலில் அரசியல் கட்சிகள் உடைக்கப்படுவதும் உடைவதும் மிகச் சாதாரணமாகி விட்டது. இது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோடு, நம்பிக்கையீனத்தையும் தருகிறது. தேர்தல் காலங்களில் சுயேச்சைக் குழுக்களும் குட்டிப் பிரிவுகளும் பெருகுவதும் தற்செயலானவை அல்ல. இதற்குப் பின்னணியாக தமிழ் அரசியல் தரப்பினரின் அறிவீனத்திற் தொடங்கி, ஒடுக்கும் அரசியற் தரப்புகளின் சூழ்ச்சி வரையில் உண்டு. இது தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அரசியல் நிலைப்பாட்டையும் உறுதிப்பாட்டையும் சிதைக்கிறது. கூடவே தமிழ் மக்களுடைய ஜனநாயக அரசியற் பலத்துக்கான அடையாளமாக இருக்கும் வாக்கு வங்கியையும் சிதறடித்து விடுகிறது. அரசியல் ரீதியாக இதைச் சிதைப்பு உத்தி (Fragmentary Strategy) என்பர். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அரசியற் பேரம் பேசும் சக்தியை (Bargaining Power) அரசாங்கம் குறைத்து விடுகிறது. இது ஒடுக்குமுறைக்கு வாய்ப்பான இன்னொரு வலுவான உத்தியாகும். இதற்குத் தமிழ் அரசியற் கட்சிகளும் தமிழ் மக்களும் பலியாகிக் கொண்டிருக்கும் துயர நிலை நீடிக்கிறது. 

அக முரண்பாடுகளும் (Internal Conflicts) சுய அழிவும் 

ஒரு சமூகத்தின் அரசியற் சக்திகளுக்கிடையே அகமுரண்பாடுகள் வலுக்கும்போது எதிர்த்தரப்புக்கு (ஒடுக்குமுறைச் சக்திக்கு) வாய்ப்பாகி விடுகிறது. இது ஒரு வகையில் எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதாகும். 1970 களில் ஆயுதமேந்திய விடுதலை இயக்கங்கள் உருவாகியபோது இலங்கை அரசும் சிங்கள இனவாதிகளும் அச்சமடைந்ததுண்டு. பல இயக்கங்கள் என்பதால், பலமுனை எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும் என்ற அச்சம் அது. ஆனால், அந்த அச்சம் விரைவிலேயே – அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் (1986 இல் ரெலோ மீது புலிகள் தாக்குதலைத் தொடுத்தபோது) முடிவுக்கு வந்தது. சகோதரப் படுகொலையாகத் தொடங்கிய இயக்க மோதல்கள் எதிர்த் தரப்புக்குத் தாராளமாக வாய்ப்பை அளித்தன. ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்தை எதிர்க்கும் நோக்கோடு  உருவாகிய இயக்கங்கள், அதே அரசாங்கத்துக்குச் சேவகம் செய்யும் நிலை உருவாகியது. இதை விட மோசமான – கேவலமான அரசியல் வேறு இருக்குமா? இங்கே உள்ள வேடிக்கை என்னவென்றால், அரசாங்கத்துடன் சேர்ந்த இயக்கங்களும் அரசாங்கத்தை நோக்கித் தள்ளிய விடுதலைப் புலிகளும் இறுதியிலும் இறுதியாக அரசாங்கத்துக்கே சேவகம் செய்துள்ளன. இறுதி விளைவு அதையே காட்டியது; நிரூபித்தது. அதையே இன்று தமிழ்ச் சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. விடுதலை இயக்கங்களின் கதையும் நிலையும் இது என்றால், ஜனநாயக வழியில் பயணிக்கும் தமிழ் அரசியற் கட்சிகளின் கதையும் நிலையும் கூட இப்படித்தான் உள்ளது.

ஆகவே தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய சுயநலன்களுக்காகவும், நாடாளுமன்ற ஆசனங்களுக்காகவும் மோதிக்கொள்ளும்போது, பேரினவாதச் சக்திகள் மகிழ்ச்சியடைகின்றன. கடந்த பொதுத்தேர்தலில் NPP வடக்குக் கிழக்கில் வெற்றியீட்டியதை NPP மட்டுமல்ல, அனைத்துச் சிங்களத் தரப்பும் வரவேற்றுக் கொண்டாடியது. எதை அவர்கள் எதிர்பார்த்தார்களோ, அது சுலபமாக நிறைவேறியிருக்கிறது என்றால், கொண்டாடாமல் இருப்பார்களா? இந்த நிலை தொடருமானால்,  தமிழர்களின் தாயகக் கோட்பாடு, சுயநிர்ணய உரிமை மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி கோரல் போன்ற அடிப்படைக் கோரிக்கைகள் எல்லாம் மிக எளிதாகவே நீர்த்துப்போய்விடும். 

தமிழ்ச் சமூகம் இன்று எதிர்கொள்ளும் இந்தச் சிதைவில் இருந்து மீண்டு, சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டத்தை அல்லது பொருத்தமான அரசியல் தீர்வை முன்னோக்கி நகர்த்த ஒரு கூட்டுத் தலைமை அல்லது வழிகாட்டும் தலைமை அவசியமானது. 

இதற்கான காரணங்கள் –

அ) சிதறடிக்கப்படும் மக்கள் சக்தியை ஒருங்கிணைக்க (Consolidation of Power)ஆளுமை மிக்க தலைமையும் தெளிவான நிலைப்பாடும் வேண்டும். தனித்தனியாகப் பிரிந்து கிடக்கும் போது தமிழ் மக்கள் வெறும் ‘வாக்காளர்களாக’ மட்டுமே சுருக்கப்படுகிறார்கள். அரசியல் சக்தியாக இல்லை. ஆகவே அப்படியான வாக்காளர்கள் திசைமாற்றப்படுவது இலகுவாகும்.

ஒரு வலுவான தலைமையினால் மட்டுமே, கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், தேசம் மற்றும் உரிமை என்ற புள்ளியில் மக்களை “அரசியல் சக்தியாக” (Political Force) திரட்ட முடியும். கூட்டுப் பொறுப்பையும் அதற்கான ஒழுக்கத்தையும் (Political Discipline) உருவாக்க தற்போதைய சூழலில் கட்சிகளுக்கோ, தலைவர்களுக்கோ இயலுமை கிடையாது. அவர்களிடம் அதற்கான அரசியல் ஒழுக்கமும் கட்டுப்பாடும் முன்மாதிரித் தன்மையும் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் கட்சி மாறலாம், கொள்கையை விட்டுக்கொடுக்கலாம். இன்னொரு கட்சியைத் திடீரென ஓரிரவுக்குள் உருவாக்கிப் பிரிந்து செல்ல்லாம் என்ற நிலை உள்ளது. தூரநோக்குள்ள தலைமைத்துவக் கட்டமைப்பு இருக்கும் போது மட்டுமே, மக்கள் பிரதிநிதிகள் கொள்கை பிறழாமல், நடைமுறையில் தெளிவும் உறுதிப்பாடும் கொண்டுசெயல்படுவதை உறுதிப்படுத்தமுடியும்.

ஆ) சர்வதேசப் பரப்பில் நம்பகத்தன்மையையும் மதிப்பையும் நிலைப்படுத்துவதற்கு(International Credibility)ஒழுங்கான – வினைத்திறன் மிக்க, அறிவுபூர்வமான தலைமைத்துவம் வேண்டும். சர்வதேச சமூகம் அல்லது உலக நாடுகள் ஒரு தேசிய இனத்தின் சிக்கலை அணுகும்போது, அந்த இனத்தின் சார்பில் பேசுவதற்கு நம்பகமான, உறுதியானபிரதிநிதித்துவத்தை அல்லது கூட்டுத் தலைமையையே எதிர்பார்க்கின்றன. தமிழ்த் தரப்பு நூறு துண்டுகளாக உடைந்து கிடக்கும் போது, சர்வதேச நாடுகள் தங்களுக்குச் சாதகமான பொம்மைத் தலைமைகளை உருவாக்கி, தமிழர்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளை மழுங்கடிக்கச் செய்துவிடும்.

இந்த இடத்தில் நாம் சர்வதேசஆதரவு அல்லது சர்வதேசஅணுகுமுறை பற்றிச்சுருக்கமாகவேனும் பேசவேண்டியது அவசியமாகும். 

வல்லரசு நாடுகள் (இந்தியா,அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்றவை) ஒரு சமூகத்தின் விடுதலையை விட, தங்களின் சொந்தப் பிராந்திய,பொருளாதார நலன்களுக்குச் சாதகமாகச் செயல்படும் தலைவர்களையே ஆதரிக்கின்றன. அல்லது உருவாக்க முயல்கின்றன. விடுதலை அமைப்புகளுக்குப் பணமும் ஆயுதமும் வழங்கி,தங்களின் எதிரி நாடுகளைப் பலவீனப்படுத்த வல்லரசுகள் இத்தலைமைத்துவங்களைப் பயன்படுத்துகின்றன. இதனால் உண்மையான விடுதலை இலக்கு சிதைந்து போகிறது. இதற்கு உலகெங்கும் பல உதாரணங்கள் உண்டு. இந்தியா ஈழ விடுதலை இயக்கங்களைக் கையாண்டது கூட அப்படியான ஒன்றே. 

ஆகவே, சர்வதேச நாடுகளின் பூகோள அரசியல் தந்திரோபாயங்களையும்   (Geopolitical strategies) அழுத்தங்களையும் விடுதலைச் சமூகத்தின் தலைமைத்துவம் திறம்பட எதிர்கொள்ள வேண்டும். இதற்குப் பலமுனை இராஜதந்திரம் (Multi-Vector Diplomacy) அவசியமானது. அதற்கான பயிற்சியும்  அவசியம். முக்கியமாக எப்போதும் நாம் ஒரே நாட்டைச் சாராதிருக்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும்.இந்திய – சீன ஆதிக்கப்போட்டியை சிங்களத் தரப்பு எப்படிச் சுலபமாகத் தந்திரோபாயமாகக் கையாண்டு வருகிறது என்பதை நாம் கவனிக்கலாம். அண்மையில் ஈரான் – அமெரிக்க யுத்தம் நடைபெற்றபோது, அந்த நெருக்கடிச் சூழலில் இலங்கை மிகச் சாதுரியமாக ஈரான் கப்பல் விடயத்தைக் கையாண்டது இன்னொரு உதாரணம்.  ஆகவே ஒரு குறிப்பிட்ட வல்லரசை மட்டும் நம்பியிருக்காமல், உலகளாவிய ரீதியில் பல நாடுகளுடன் (அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகள் என) சமமான உறவைப் பேண வேண்டும். ஆனால், தமிழர்கள் இந்தப் புரிதலற்று சீனா, ரஸ்யா போன்ற நாடுகளை விரோதச் சக்தியாகவே பகிரங்கமாக நோக்குகின்றனர். உலகளாவிய அரசியல், பொருளாதார அசைவியக்கத்தில் இன்று சீனாவின் வகிபாகத்தைப் புரியக் கூடியவர்கள் சீனாவைப் புறந்தள்ளும் – எதிர்நிலையில் வைக்கும் முட்டாள்தனமான வேலையைச் செய்ய மாட்டார்கள். இவ்வளவுக்கும் சீனப் பிரதிநிதிகள் இப்பொழுது வடக்குக் கிழக்குக்கு வந்து தமிழ் மக்களின் சார்பான தரப்புகளுடன் பேச விழைகிறார்கள். எனினும் பிராந்திய சக்திகளின் அழுத்தம் கூடுதலாக இருக்கக் கூடும். குறிப்பாக இந்தியாவினுடைய அழுத்தத்தை. அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கும் அறிவுசார்ந்து சிந்திப்பது அவசியம். அரசியல் என்பது  சொந்த விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டதோ, உணர்ச்சிகரமானதோ அல்ல. அது அறிவுபூர்வமானது. விஞ்ஞான ரீதியானது.

எனவே ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் நலன் என்ற அடிப்படைச் சிந்தனையிலிருந்து மேற்கொள்ளப்படுவது அவசியமானதாக உள்ளது. என்பதால் சர்வதேச சமூகத்தோடு ஒடுக்கப்பட்ட பிற சமூகங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலகளாவிய சிவில் சமூகங்களுடன் (Civil Society) வலுவான தொடர்பாடலையும் உருவாக்க வேண்டும். அப்போது நமக்கான பலம் மேலும் அதிகரிக்கும். 

இதேவேளை சமூகத்திற்குள் இருக்கும் பலவீனமான அல்லது மாற்றுச் சிந்தனைக் குழுக்களுக்குச் சர்வதேச நாடுகள் தந்திரமாக ஆதரவளித்து, முதன்மைத் தலைமைத்துவத்தைப் பலவீனப்படுத்தக் கூடிய நிலை உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். கூடவே சர்வதேச அமைப்புகளும் பிற நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில், அடிமட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு மாறான சமரசங்களை ஏற்குமாறு தலைவர்களுக்கு அரசியல் அழுத்தங்களை வழங்குகின்றன.  இது  உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் நடப்பது. சர்வதேச நாடுகளின் – அமைப்புகளின்இந்தத் தலையீடுகளைக் கையாள்வதற்கு, ஒரு சமூகத்தின் தலைமைத்துவம் இராஜதந்திர முதிர்ச்சியுடனும் சுயாதீனமான பொருளாதார / அரசியல் பலத்துடனும் இயங்குவது அவசியமாகும். 

(தொடரும்) 

(விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *