— அழகு குணசீலன் —
2019 ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆமை வேகத்திலேயே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இத் தாக்குதல்களில் குண்டுகளை சுமந்த பயங்கரவாதி ஷஹாரான் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அனைவரும் தாக்குதலில் மரணித்தது இதற்கு ஒரு முக்கிய காரணம். இன்னோரு வகையில் சொல்வதானால் தற்கொலை தாக்குதல்களின் முக்கிய தடயங்களை குண்டுதாரிகள் தங்களைத்தாங்களே வெடிக்கவைத்ததன் மூலம் அழித்து விட்டதனால் முதன்மையான குண்டுதாரிகளை தேடமுடியாத நிலையில் சூத்திரதாரிகளை சுற்றி விசாரணைகள் மந்தகதியில் நகர்கிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி/ என்.பி.பி அரசாங்கம் ஏற்கெனவே இடம்பெற்ற தேசிய, சர்வதேசிய விசாரணை அறிக்கைகளை நிராகரித்து, விடயத்தை கையில் எடுத்து விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கிறது. இந்த முடுக்குதலில் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியும், கொழும்பு ஆயர் மல்கம் ரஞ்சித்துக்கு ஜனாதிபதி வழங்கிய திகதி குறித்த காலக்கெடுவும் இருக்கிறது. காலக்கெடு காலாவதியாகி கனகாலம். இந்த காலக்கெடுவுக்குள் சில கைதுகள் இடம்பெற்றதை தவிர எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.
ஈஸ்டர் தாக்குதல்கள் நடாத்தப்பட்ட முதலாவது நாளில் இருந்து பேசப்படுகின்ற ஆதாரமற்ற புனைவுகளும், சந்தேகங்களுமே தொடர்கின்றன. ஊடகங்கள், மற்றும் சமூக ஊடகங்களும் நாள்தோறும் பழைய கள்ளையே புதிய போத்தலில் அடைத்துக்கொண்டிருக்கின்றன. வேண்டுமானால் ஒரு வித்தியாசம்: “அதிரடி” என்ற வார்தையை செய்திகளில் ஊடகங்கள் பயன்படுத்தி அந்த புளித்துப்போன கள்ளை புதிதாக காட்டும் வேலையை செய்கின்றன. புதிய கள்ளை விடவும் புளித்த கள்ளில் வெறி அதிகம்.
புலனாய்வுத்துறையினர் கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்தனர். அவர் கைது செய்யப்பட்டது வேறு ஒரு கடத்தல் விவகாரம் என்று அரசாங்கம் பின்னர் ஒத்துக்கொண்டது. பிள்ளையானின் கைதுக்கு பின்னரும் நீடித்த புலனாய்வுத்துறையின் மந்தகதி அவரிடம் இருந்து புலனாய்வுத்துறை எதையும் கறக்கமுடியவில்லை என்பதையே வெளிப்படுத்தியது.
புலனாய்வு அதிகாரிகள் பிரான்ஸ்க்கு வந்து அசாத் மௌலானாவிடம் இருந்து அள்ளிக்கட்டிக்கொண்டுபோன ஆதாரங்கள் எவை என்பது வெளியாகவில்லை. அசாத் மௌலானா தனது அரசியல் தஞ்சகோரிக்கைக்கு சார்பாக ஏற்கெனவே ஜெனிவாவிலும், சனல் 4 க்கும் வெளியிட்ட கருத்துக்களின் சட்ட அங்கீகாரம் கேள்விக்குரியது. அசாத் மௌலானாவை நீதிமன்றில் குறுக்கு விசாரணை செய்யாதவரை அவரின் கருத்துக்களின் பெறுமதியை நீதித்தராசில் போட்டு நிறுக்க எதுவும் இல்லை.
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை தேடும் படலத்தில் ஒரு சக்திவாய்ந்த புலனாய்வுத்துறையினால் தனது காலடியில் இருந்த சுரேஷ் சாலேயை கைது செய்ய ஏழு ஆண்டுகள் எடுத்தது. இந்த அரசாங்கம் பதவியேற்ற பின்னரும் அதற்கு சுமார் ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் ஆதாரங்கள்/ சாட்சியங்கள் இன்னும் தேடல் நிலையிலேயே இருப்பதை இது வெளிப்படுத்துகிறது. பிள்ளையான் கைது செய்யப்பட்டபோது கொளுத்திய வெடிகளையே ஊடகங்கள் -சமூக ஊடகங்கள் கொழுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த கைதுகள் எதுவும் நடக்கக்கூடாது என்பதல்ல , ஆனால் அந்த கைதுகள் எந்தளவுக்கு துல்லியமான ஆதாரங்களின் அடிப்படையில் இடம்பெறுகின்றன என்பதும், குறுக்கு மறுக்காகவும், தாறுமாறாகவும் இடம்பெறுகின்ற இந்த கைதுகளை சட்டம் தன் கடமையைச்செய்வதாக நியாயப்படுத்த முடியுமா…? என்பதும், போதுமான ஆதாரங்கள் இன்றி கைது செய்து அழுத்தங்களை கொடுத்து, அச்சுறுத்தல்களை செய்து, சித்திரவதை செய்து கைதை நியாயப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சிப்பதை சட்டம் தன் கடமையை செய்வதாக அர்த்தப்படுத்த முடியுமா ….? என்பதே இதன் பின்னணியில் உள்ள அரசியல் மயமாக்கம் சார்ந்த கேள்வியாகும்.
சந்தேக நபர்கள், குற்றவாளிகள் அரசாங்கத்தின் அல்லது அதன் நீதி, நிர்வாக கட்டமைப்பின் அடிமைகள் அல்ல. அவர்களும் மனிதர்கள். மனித நேயத்துடன் நடாத்தப்பட வேண்டியவர்கள். சந்தேகநபர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றத் தீர்ப்பினால் உறுதிசெய்யப்பட்டாலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படமுடியாதவை. உலகில் சட்டத்தின் ஜனநாயக ஆட்சியை அளவிடும் குறிகாட்டிகளுள் இதுவும் ஒன்று. இலங்கையில் கைதிகள், குற்றவாளிகள் மீது அரச அதிகாரிகளின் அத்து மீறல்கள், கடமை துஷ்பிரயோகங்கள் குறித்து அண்மைக்காலங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இலங்கை ஊடகங்கள் இவற்றை வழமையான சம்பவங்களாக மௌனித்து கடந்து செல்லவே முயற்சிக்கின்றன. இதே மௌனத்தையே இந்த ஊடகங்கள் யுத்த காலத்திலும் செய்து சுரேஷ் சாலேக்கு வெடிக்கொளுத்தினர்.
இந்த சமகாலத்தில் சித்திரவதைகளில் இருந்து பாதுகாப்பதற்கான ஐ.நா.வின் உபகுழு கொழும்பு வந்திருப்பது காலப்பொருத்தமானது. ஐ.நா.மனித உரிமைகள் சாசனத்தின் படி கைதி ஒருவருக்காக உரிமைகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
(*). சந்தேகநபர் ஒருவரை நீதிமன்றம் ஒன்று அவரை குற்றவாளியாக தீர்ப்பளிக்கும் வரையும் அவர் சந்தேகநபராகவே கருதப்படுவார் அவர் குற்றவாளி அல்ல.
சட்டத்தின் ஜனநாயக ஆட்சி இடம்பெறுகின்ற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட சந்தேக நபர் தொடர்பான ஊடகச்செய்திகளின் இறுதியில் ஒரு வாசகம் இடம்பெறத் தவறுவதில்லை. “அவரது குற்றம் உறுதிப்படுத்தப்படும் வரை அவர் குற்றமற்றவர் என்றே கருதப்படுகிறார்” என்பதே அந்த வாசகம். இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் ஊடக செய்திகளில் இந்த வாசகத்தை மருந்துக்கும் காணமுடியாது. கைது செய்யப்படுவதற்கு முன்னரே அவை தீர்ப்பளித்து விடுகின்றன.
(*)சந்தேக நபர்களை குற்றவாளிகள் போன்று கையாள முடியாது. கண்டமாதிரியும் கைது செய்து தடுத்து வைக்க முடியாது. குறிப்பிட்ட சந்தேக நபரை கைது செய்து தடுத்து வைப்பதன் நோக்கம் அவர் தப்பிச்செல்வதை தடுப்பதும், தடயங்களை அழிப்பதை, மறைப்பதை தடுப்பதாக மட்டுமே இருக்க முடியும்
ஐ.நா.சாசனத்தின்படி விசாரணைகளுக்காக தடுத்து வைத்தல் என்பது மாற்றுவழிகளற்ற நிலையில் ஒரு இறுதி தேர்வு .
(*) சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற கட்டாயப்படுத்தல்களில் இருந்து கைதி ஒருவர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது ஐ.நா.சாசனம்.
சமகாலத்தில் உரத்து பேசப்படுகின்ற சுரேஷ் சாலே விவகாரத்தில் அவரை சில முக்கிய முன்னாள் அரசியல் தலைமைகளின் பெயரை குறிப்பிட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவு கட்டாயப்படுத்தியாக கூறப்படுகிறது.
சுரேஷ் சாலேக்கு அவரது தடுப்பு அறையில் தளத்தில் விரிக்கப்பட்ட செய்திப் பத்திரிகையில் உணவு பரிமாறப்பட்டதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த புலனாய்வுத்துறை மற்றைய தடுப்புகாவல் கைதிகளைப்போன்றே எந்த சலுகையும் காட்டப்படாது சாலே நடாத்தப்படுகிறார் என்று கூறியுள்ளது. பேப்பரில் சோறுபோட்ட கதையை அது மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை. சிலவேளை புலனாய்வுத்துறை கூறுகின்றதுபோல் எல்லாக்கதைகளையும் நிலத்தில் சோறு பரிமாறி சமமாக நடத்துகிறார்களோ தெரியவில்லை.
(*). சந்தேக நபர் ஒருவருக்கு சட்டத்தரணி ஊடாக தன்னை பாதுகாக்கும் உரிமையுள்ளது. மேலும் சந்தேகநபருக்கு விளங்கக்கூடிய மொழியில் அவருக்கான தகவல்கள் – கைதுக்கான காரணம், சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பன வழங்கப்படவேண்டும்.
பிள்ளையான் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது இந்த உரிமையை வாதாடியே பெறவேண்டி இருந்தது.
(*) தடுப்பில் இருக்கும் போது குடும்ப உறவினர்கள், சட்டத்தரணிகளோடு சந்தேகநபரின் தொடர்புக்கு வழி செய்யப்படவேண்டும். மேலும் ஐ.நா.சாசனம் நெல்சன் மண்டேலா விதிமுறைகள் என்று கூறுகின்ற வைத்திய பராமரிப்பு, பொருத்தமானதும், போதுமானதுமான உணவு, மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு சுரேஷ் சாலே விவகாரத்தை எடுத்துக்கொண்டால் பல விடயங்களில் சந்தேக நபர் ஒருவருக்கான ஐ.நா.சாசன அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. சுரேஷ் சாலேயின் தடுப்புக்காவல் அறை குறித்த குறைபாடுகளை நேரில் பார்வையிட்ட அதிகாரியின் அறிக்கையும் இதை வெளிப்படுத்தியுள்ளது.
வைத்திய சாலையில் தாதி ஒருவர் சாலே மருந்தருந்த மறுத்ததால் அவரோடு கடுமையாக நடந்து கொண்டதாகவும், மருந்தை கட்டாயப்படுத்தி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. வைத்திய சாலைகளும், பணியாளர்களும் நோயாளி ஒருவருக்கான உரிமைகளை தாங்கள் கையில் எடுக்க முடியாது.
டாக்டர்கள் நோயாளியை பரிசோதனை செய்து நோயின் தன்மை, ஏற்படக்கூடிய ஆபத்து, அதற்கான காரணங்களை நோயாளிக்கு விளக்குவதுடன் அதற்கான சிகிச்சையையும் சிபாரிசுசெய்ய முடியும். அந்த சிகிச்சைகளை ஏற்றுக்கொள்வதா?இல்லையா? என்பது நோயாளியின் முற்று முழுதான சுய உரிமையே அன்றி வைத்தியசாலை நிர்வாகத்திற்குரியதல்ல. நோயாளி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், மருந்துகளை நிராகரிக்கிறார் என்றால் அது நோயாளியின் சுய உரிமை சார்ந்தது. இங்கு வைத்தியத்துறையின் உயிர்க்காப்பு பொறுப்பு உணரப்பட்டாலும் நோயாளியின் விருப்பு க்கு மாறாக கட்டாயப்படுத்தி உணவூட்டவோ, மருந்தூட்டவோ முடியாது. நோயாளியின் அல்லது நோயாளியால் சுயமாக தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையில் சட்டப்படி இந்த முடிவு எடுத்தல் அவரது பாதுகாவலர்களான குடும்ப உறவினர்களை சார்ந்தது.
வைத்தியர்களும்,தாதிகளும் செய்ய வேண்டியது என்ன வென்றால் சிபார்சு செய்யப்பட்ட சிகிச்சைகள்,மருத்துகளை நோயாளியின் ஏட்டில் பதிவு செய்வது மற்றும் மருந்து மறுப்பு செய்தால் நோயாளியின் ஒத்துழையாமையை பதிவு செய்து ஒப்பிட்டு உறுதிப்படுத்துவது மட்டுமே. இது தேவையான சந்தர்ப்பம் ஒன்றில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக அமைவதுடன், வைத்தியத்துறை தனது கடமையைச்செய்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும் உதவும்.
இந்த அடிப்படையில் குற்றவியல் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு நபரும்,அவரது பாதுகாப்புக்கும் தேவையான அனைத்து நிபந்தனைகளும் உறுதிசெய்யப்பட்ட ஒரு பொது விசாரணையில் சட்டத்தின் படி குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்றே கருதப்படவேண்டும். இதையே மேற்குலக ஊடகங்கள் இது போன்ற குற்றவியல் செய்திகளில் இறுதியாக உறுதிப்படுத்துகின்றன.
சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும், பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், ஒரு சுதந்திரமான பாரபட்சம் அற்ற, நேர்மையும் மற்றும் திறமையையும் கொண்ட நீதித்துறை இன்றியமையாதது.
ஈஸ்டர் தாக்குதல் ஒரு சதித்திட்டம் என்று முதன்முதலாக குறிப்பிட்ட முன்னாள் சட்டமா அதிபர் டப்புல லிவேரா, நாட்டை விட்டோடிய அசாத் மௌலானா ஆகியோர் நேரடி விசாரணைக்கும், குறுக்கு விசாரணைக்கும் உட்படுத்தப்பட வேண்டும். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று சில வாரங்களில் டப்புல லிவேரா 2019 மே 10ம் திகதி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார். 2021 மே 25 இல் ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் தினத்திற்கு முதல்நாள் ஈஸ்டர் தாக்குதல் ஒரு சதித்திட்டம் என்று அறிவித்தார். விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி தப்பித்துக் கொண்டார். இந்த பாணியிலேயே கோத்தபாயவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்.
இந்த ஓட்டைகள் அடைக்கப்படாமல் ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதி என்பது வெறும் அரசியல் அதிகாரத்திற்கான அரசியல் மயப்படுத்தப்பட்ட கண்துடைப்பு.
