சுரேஷ் சாலே விவகாரத்தை சுற்றி ஒரு அரசியல் 

சுரேஷ் சாலே விவகாரத்தை சுற்றி ஒரு அரசியல் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு தொடர்ச்சியாக கடந்த  பெப்ரவரி பிற்பகுதியில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் (ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்)  சுரேஷ் சாலேக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அவரது குடும்பத்தவர்கள் மற்றும் பௌத்த பிக்குமார் சகிதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கடந்த வாரம் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் நடத்திய  சத்தியாக்கிரகப் போராட்டம் ‘தற்காலிகமாக’ கைவிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

சாலே தடுப்புக்காவலில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டதனால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட அந்த போராட்டத்தில் கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியவாத அரசியல்வாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில மற்றும்  மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஆகியோர்  முன்னரங்கத்தில் நின்றனர்.

ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட சாலேக்கு ஆதரவாக கிளம்பியிருக்கும் அரசியல் கட்சிகள் அவரது  தடுப்புக்காவலை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றே நோக்குகின்றன.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இலங்கையை உலுக்கிய மிகப்பெரிய பயங்கரவாதச் சம்பவமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்பட்டு பொறுப்புக் கூற வைக்கப்பட வேண்டும் என்பதில் அந்த கட்சிகளுக்கு அக்கறை இல்லை. 

போரில் விடுதலை புலிகளைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய முன்னணி இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரை தடுத்து வைத்து அவமதிப்பது நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பின் மனவுறுதியைக் குலைக்கும் என்று இந்த தேசியவாத அரசியல்வாதிகள் வாதிடுகிறார்கள். 

போரில் வெற்றிபெற்ற பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவர்கள் குற்றங்களைச் செய்தாலும் கூட விசாரணைக்கு உள்ளாக்கப்படவோ  தண்டிக்கப்படவோ கூடாது என்ற தொனியைக் கொண்டதாக  இந்த வாதம்  இருக்கிறது. பாதுகாப்பு படைகளை “பாதுகாக்கப்பட்ட” ஒரு நிறுவனமாக இவர்கள் பார்க்கிறார்கள். 

அதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகளை பாதுகாக்கும் உள்நோக்கத்துடனேயே இவர்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என்ற  சந்தேகம்  தற்போதைய அரசியல் விவாதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.  

சாலே கைது செய்யப்பட்ட பின்னரான மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலமாக அமைதியாக இருந்தவர்கள் அண்மையில் நீதிமன்றம் பிறப்பித்த ஒரு  உத்தரவுக்கு பிறகு போராட்டத்தில் இறங்கியது அந்த சந்தேகத்தை  வலுப்படுத்துகிறது.

விசாரணையின் தடயங்கள் பலம் பொருந்திய நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் குறிப்பிட்ட ஒரு அரசியல் பிரிவினரையும் நோக்கித் திரும்பும் வேளைகளிலெல்லாம் கவனத்தை திசை திருப்பும் தந்திரோபாயங்கள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த வாரத்தைய போராட்டங்களும்  அதே கோணத்திலேயே  பொதுவெளியில் பார்க்கப்படுகின்றன..

மிகவும் திட்டமிட்ட முறையில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னால் இருந்த சூத்திரதாரிகளை கடந்த ஏழு வருடங்களாக அடையாளம் கண்டு தண்டனை வழங்குவதில் உள்ள தோல்வி ஏற்படுத்திய  பெரிய வெற்றிடம்  பல்வேறு  சந்தேகங்கள் மற்றும்  சதிக்கோட்பாடுகள் பற்றிய  வாதங்களினால்  நிரம்பியிருக்கிறது.

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும் கலாசாரத்தை ஒழிக்கப் போவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிக் கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்  தாக்குதல்கள் உட்பட பல்வேறு உயர்மட்ட வழக்குகள் குறித்து ஒளிவுமறைவு இல்லாததும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை துரிதமாக நடத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது. அது தொடர்பில் கடுமையான நெருக்குதலும் அதற்கு இருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விவகாரம் பெருமளவுக்கு அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பது விசாரணைகளில் பல்வேறு குளறுபடிகளுக்கும் திசைதிருப்பல்களுக்கும் காரணமாக அமைகிறது. எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் மெய்யான பொறுப்புக்கூறலை  உறுதிசெய்வதற்கு மாறாக, அரசியல் ஆதாயங்களுக்காக திசைதிருப்பல்களை நோக்கமாகக் கொண்டவையாக இருப்பதாக அரசாங்கத் தலைவர்கள்  குற்றஞ்சாட்டுகிறார்கள்.

சாலே தனது தனிப்பட்ட கணினி மற்றும் கைப்பேசிக்கான கடவுச் சொற்களை வழங்க மறுத்துவிட்டார் என்றும் இவ்வாறாக அவர்  ஒத்துழையாமல் இருப்பது விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஒரு முயற்சி என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கூறினார். 

தான் தீவிரமாக கண்காணிக்கப்படுவதை நன்கு அறிந்திருந்த முன்னாள் புலனாய்வுத் தலைவர் ஒருவர் தனக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு தகவலையும் தனது கைப்பேசியில் அல்லது தனிப்பட்ட கணினியில் சேமித்து வைத்திருப்பார் என்று எதிர்பார்க்க முடியுமா? 

முறையான ஆதாரங்களின் அடிப்படையில் செயற்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட அரசியல் தளங்களை அல்லது சர்வதேச நெருக்குதல்களை திருப்திப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச புலனாய்வுப் பிரிவினரை இலக்கு வைப்பதாக எதிரணி அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

எது எவ்வாறிருந்தாலும், அரசியல்வாதிகள் ஒரு சூத்திரதாரியைப் பாதுகாப்பதற்காகவே அரசியல் நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள் என்று மக்கள் பரவலாக நமபுகிறார்கள். இதுகாலவரையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளும் இதற்கு காரணம். 

அடுத்தடுத்து வந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள், குழு அறிக்கைகள் மற்றும் பொலிஸ் விசாரணைகள் பெரும்பாலும் ஒன்றிற்கொன்று முரணாக அமைந்ததாலும், முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டதாலும் உண்மைகள் அரசியல் உயர்மட்டத்தினரால் தீவிரமாக மறைக்கப்பட்டு வந்திருக்கின்றன என்ற பரவலான அபிப்பிராயம் இருக்கிறது.

பொதுவெளியில் நிலவும் கடுமையான சந்தேகத்தை அகற்றும் வகையில் தற்போதைய விசாரணைகள் முன்னேறுவதை உறுதிசெய்ய வேண்டிய முழுமையான பொறுப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இருக்கிறது. 

ஆனால், தேசியவாத அரசியல் உணர்வுகளினால் எளிதில் மசிந்து விடக்கூடிய அரசியல் வரலாற்றைக் கொண்டது ஜனதா விமுக்தி பெரமுன  (ஜே.வி.பி.). அதன்  தலைமையில் அமைந்திருக்கும்  இன்றைய அரசாங்கம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டு பிடிப்பதற்கான  விசாரணைகளை துரிதப்படுத்துவதை தடுப்பதற்கு தேசியவாத உணர்வலைகளைக் கிளப்புவதையே ஒரு  உத்தியாக சாலேக்கு ஆதரவான அரசியல் சக்திகள் பயன்படுத்த முனைகின்றன. 

ஆனால், தென்னிலங்கையில் மக்களை அணிதிரட்ட முடியாமல் அவை படுமோசமாகப் பலவீனமடைந்திருக்கின்றன. தங்களது அரசியல் மீட்சிக்கு மீண்டும் பெரும்பான்மை  இனவாத அணிதிரட்டலையே நம்பியிருக்கும் இந்த அரசியல் சக்திகள் வசதியாக உடனடியாகக் கிடைத்த  சாலே விவகாரத்தையும் கையிலெடுத்து முயன்று பார்க்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *