தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) -பகுதி 1

தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) -பகுதி 1

— கருணாகரன் —

(01)

போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் அரசியலில் “தலைமைத்துவ வெற்றிடம்” (Leadership Vacuum) ஏற்பட்டுள்ளதா? இந்தக் கேள்வி பலருடைய உள்ளுணர்விலும் உண்டு. தமிழ் மக்களின் மத்தியில் இன்று பல அரசியற் கட்சிகள் உள்ளன. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதே ஒரு புதிய கட்சி உருவாகிக் கொண்டிருக்கலாம். அந்தளவுக்கு நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி என்ற மாதிரிக் கட்சிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. கட்சிக்குள்ளே ஒரு சிறிய பிரச்சினை, ஒருவர் எதேச்சையாகத் தும்மி விட்டாலே போதும் அதை ஒரு காரணமாகவோ சாட்டாகவோ வைத்துக் கொண்டு சிலர் உடனடியாகவே ஒரு கட்சியைத் தொடங்கி விடுவார்கள். அதற்குத் தோதாக முன்னொட்டாக ‘தமிழ்த்தேசிய’ என்ற ஒரு சொல்லைச் சேர்த்து விட்டால்போதும். அதுவும் ஒரு கட்சி. இப்படி உருவாக்கப்படும் பல கட்சிகளுக்கும் பல தலைவர்கள் உள்ளனர். ஆனால், தமிழ்ச் சமூகம் தன்னுடைய தலைமை இதுதான் என்று அடையாளப்படுத்தக் கூடிய நிலையில் அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு இன்று ஒரு தலைமைத்துவம் உண்டா? என்பது கேள்வியே. 

இதற்கான காரணம் என்ன? இதை எப்படி நிவர்த்தி செய்யலாம்? இதை யார் செய்வது? இதற்கான பொறுப்பு யாரிடம் உண்டு?

தலைமைத்துவம் இல்லை என்பதற்கான காரணம் – 

2009 க்குப் பிந்தைய அரசியல் சூழலைப் புரிந்து கொண்டு யதார்த்தமான முறையில் அரசியலை முன்னெடுக்கும் தலைமை தமிழ்த்தரப்பில் உருவாகவில்லை. சிங்களத்தரப்பிலும்தான். குறைந்தபட்சம் தனி ஈழத்துக்கான போராட்டமும் போரும் என்ன காரணத்தினால் ஏற்பில்லாமல் போனது என்ற விளக்கத்தை எவரும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சிலர் விடுதலைப் புலிகளின் அணுகுமுறை, அவர்களுடைய அரசியற் செயற்பாடுகளில் தவறு என்று சொன்னாலும் அது எப்படியானது என்பதை வரையறை செய்ததில்லை. மட்டுமல்ல, அதற்குப் பதிலாக மாற்று அரசியல் வடிவம் என்ன? அதனுடைய செயல்முறை என்ன என்பதையும் சொல்லவில்லை. ஆக ஒரு மந்த நிலையே தமிழ் அரசியல் சூழலில் நிலவுகிறது. அதனுடைய பலவீனத்தையே நாம் கண்டு கொண்டிருக்கிறோம். மக்கள் இதனைத் தெளிவாகக் கண்டு கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் NPP யின் மீது நம்பிக்கை  கொள்ளும் நிலை ஏற்பட்டது. 

இதேவேளை 2009 க்குப் பிறகு அப்படி ஒரு தலைமைத்துவம் உருவாகக் கூடிய நிலையை தமிழ்ச் சமூகம் நிராகரித்தும் மறுத்தும் வந்திருக்கிறது. 2009 க்குப் பிறகு மிக உணர்ச்சிகரமான நிலையில் தமிழ்ச் சமூகம் இருந்தது. ஒன்று, கடந்த காலப் படிப்பினைகளின் அடிப்படையில் ஒரு புதிய அரசியலை – யதார்த்த அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில். மற்றது, இதற்கு மாறான வகையில், நடந்த தோல்வி அல்லது ஏற்படுத்தப்பட்ட இழப்புகள், பாதிப்புகளின் கொந்தளிப்பினால், மிகுந்த உணர்ச்சி வசப்பட்டிருந்தது. அது எந்த வகையிலும் இலங்கை அரசுக்கு மன்னிப்பே இல்லை. இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் ஏற்ற வகையில் தீர்வு கிட்டவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இந்த இரண்டு நிலைப்பாட்டுக்கும் புலம்பெயர் சூழலிலும் ஆதரவுச் சக்திகள் இருந்தன. ஆனால் தமிழ் ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட தமிழ்ப் புத்திஜீவிகளும் இதில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்று தெரியாத தடுமாற்றத்தோடிருந்தனர்.

2009 க்குப் பிறகான சூழலை நேர்மையோடும் நீண்ட தூரக் கண்ணோட்டத்தோடும் சிங்களத் தரப்பும் அணுகவில்லை. கையாளவும் இல்லை. குறிப்பாக 2009 க்குப் பிறகு ஆட்சியிலிருந்த ராஜபக்ஸவினர், மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க போன்றோர் இலங்கை அரசியலில் மூத்தவர்கள் என்ற வகையிலும் நீண்டகால அனுபவங்களைக் கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும் சரியாக நடந்து கொள்ளாமல் விட்டது பாரதூரமான தவறாகும். இதனால் தமிழ் அரசியல் மீண்டும் தீவிர நிலையை நோக்கி உந்தப்பட்டது. அரசு மீதும் சிங்களச் சமூகத்தின் மீதும் நம்பிக்கையை இழந்தது. குறிப்பாக பரிகார நீதி, நல்லிணக்கம், பகை மறப்பு போன்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலே தமிழ் அரசியலின் போக்கை மென்னிலைப்படுத்தியிருக்க முடியும். அவர்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகத்தைப் பலவீனமான தரப்பு என்ற வகையிலேயே அணுகினர். கூடவே, தலைமைத்துமில்லாத ஒரு சமூகமாக தமிழர்களை மாற்றுவதில் முனைப்புக் காட்டினர். இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசாமல், தமிழ்ச் சமூகத்தின் நாளாந்த வாழ்க்கை நெருக்கடிகளுக்குள்ளாலும் தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற பேரினாலும் அதனைக் கரைத்து விட முயன்றனர்.  

ஆயிரம் குறைபாடுகளுக்கு மத்தியிலும் 2009 க்குப் பின்னரான அரசியல் யதார்தத்தைப் புரிந்து கொண்டு செயற்பட்டவர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரான மறைந்த இராசமாணிக்கம் சம்பந்தன் ஒருவரே. அவர் தமிழ் அரசியற் பரப்பில் இருந்தகாலத்தில் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் இந்தக் கட்டுரையாளரும் ஒருவர்தான். சம்பந்தனிடம் ஜனநாயகப் போதாமையும் விரிவான சிந்தனையற்ற நிலையும் இருந்ததுண்டு. குறிப்பாகத் தன்னுடைய நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்தி, அதில் தான் உறுதியாக நிற்கிறேன், அப்படி நிற்க வேண்டிய சூழல் உள்ளது என்ற காரணங்களை அவர் வலிமையாக முன்வைக்கவில்லை. தன்னுடைய நிலைப்பாட்டை அல்லது அரசியல் தெரிவை பலப்படுத்துவதற்கு தமிழ்த்தரப்பில் ஆதரவுச் சக்திகளைத் திரட்டிக் கொள்ள வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை. இதனால் அவருடைய நிலைப்பாட்டையும் அவருடைய அரசியல் தெரிவையும் அவருடன் கூட நின்றவர்களே சந்தேகிக்கும் நிலை ஏற்பட்டது. 

ஆனால், தமிழ்ச் சமூகத்தின் அரசியல் உரிமைகள், பாதிப்புகள் பற்றிய விடயங்களில் சம்பந்தன் விட்டுக் கொடுப்பற்ற வகையில் பாராளுமன்றத்திலும் வெளியே சிங்களச் சமூகத்தின் முன்னிலையிலும் பேசியிருக்கிறார். அவ்வாறே சர்வதேச சமூகப் பிரதிநிதிகளுடனான உரையாடல்களிலும் தமிழ் மக்களுடைய நியாயத்தையும் நிலைப்பாட்டையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.  இதற்கான தீர்வாக அவர் சர்வதேச சமூகத்தின் பங்களிப்போடு அல்லது ஆதரவோடு இலங்கை அரசிடமே தீர்வை எதிர்பார்த்தார். எந்த நிலையிலும் இலங்கை அரசுடனும் சிங்களச் சமூகத்துடனுமே இணக்கப்பாட்டுக்கும் தீர்வுக்கும் செல்ல வேண்டும் என்பதைச் சம்பந்தன் புரிந்திருந்தார். இதனால்தான் அவர் “விடுதலைப் புலிகள் வேறு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு. அவர்கள் தனிநாட்டைக் கோரினார்கள். நாம் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான தீர்வைக் கோருகிறோம்“ என்று சொன்னார். குறிப்பாக ‘இலங்கை அரசையும் சிங்களச் சமூகத்தையும் அவர் எதிர்நிலையில் நிறுத்துவது ஆபத்தானது; மேலும் தமிழ் பேசும் மக்களுக்கு சேதங்களையும் நெருக்கடியையும் உண்டாக்கும்’ என்பதைச் சரியாகவே புரிந்து கொண்டிருந்தார். இதனை, இத்தகைய ஒரு நல்வாய்ப்பைச் சிங்களச் சமூகம் புரிந்து கொண்டு செயற்படத் தவறியது. இது இலங்கைக்குப் பேரிழப்பாகும்.

ஆகவே சம்பந்தன்தான் 2009 க்குப் பிந்திய யதார்த்தத்தையும் இலங்கைத்தீவின் அரசியல் நிலவரத்தையும் ஓரளவுக்குப்புரிந்து கொண்டு செயற்பட்டவர். இலங்கையின் இனப்பிரச்சினையில், தமிழ்பேசும் மக்களுக்கான தீர்வில் இன்றைய இந்தியாவின் அரசியல் ஈடுபாட்டு எல்லை என்ன என்ற புரிதல் சம்பந்தனுக்கிருந்தது. அவ்வாறே சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டு, அதிகார எல்லைகளைக் குறித்தும் சம்பந்தனுக்கு விளக்கம் இருந்தது. 

சம்பந்தனுடைய அணுமுறை புத்திபூர்வமானது. யதார்த்தத்தை உணர்ந்தது. அதைச்சேதமாக்கியது, அவருடைய தனிப்பட்ட குறைபாடுகளும் பலவீனங்களும் என்றால், அதே அளவுக்கு அவருடைய அணுமுறையையும் நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழ்த் தரப்பின் எதிரணியினர் ஆகும். குறிப்பாக தீவிரத் தமிழ்த்தேசியவாதிகள். அவர்கள் யதார்த்தத்தையும் உண்மையையும் ஏற்க மறுத்து, உணர விரும்பாமல் சம்பந்தனைத் துரோகியாக்கினர். அறிவார்ந்து சிந்திப்போரையும் யதார்த்தவாதிகளையும் துரோகிகளாகச் சித்திரித்து மகிழ்வது தீவிரத் தமிழ்த்தேசியவாதத்தினரிடம் உள்ள பொதுப்பண்பாகும். சுய இன்ப அரசியல்வாதிகளுக்கு இதற்கு மேல் சிந்திக்க முடியாதல்லவா! அவர்கள் சம்பந்தனை தமிழ் மக்களின் எதிரியாக்க முற்பட்டனர். சம்பந்தன் இறந்தபோது காத்திருந்து அவரை எப்படிப் பழிவாங்கினர் என்பது, அவருடைய மரணத்தின்போது அவர்கள் நடந்து கொண்ட முறைமை சிறப்பாக வெளிப்படுத்தியது. அவரைத் தனிமைப்படுத்தி, எள்ளி நகையாடினர். இப்படிச் செய்ததன் மூலம் சம்பந்தனுடைய அரசியல் நிலைப்பாட்டை, அவருடைய வழிமுறையில் முன்னெடுப்போருக்கு எச்சரிக்கையை ஊட்டினர். அப்படியானவர்கள் சம்பந்தனுக்கு நேர்ந்ததைப்போல மரணத்தின்போது கூட மரியாதை குறைக்கப்படும் என்ற கீழ்மையை வெளிப்படுத்தினர். இந்தச் செயல் வரலாற்றில், அவர்களுடைய முகத்தில் எச்சிலையே துப்பும். 

இதையெல்லாம் கடந்து சம்பந்தன்தான் சிங்களச் சமூகத்திடமும் சர்வதேச அரங்கிலும் மதிக்கக்கூடிய தலைவராக இருந்தார்; இன்னும் இருக்கிறார். அதற்குக் காரணம், சம்பந்தனுடைய நிலைப்பாடும் அதில் அவர் கொண்டிருந்த உறுதியுமே. ஆனால், துரதிருஸ்டவசமாக சம்பந்தனை, அவருடைய அரசியலை, அணுகுமுறையை அவருடன் கூடஇருந்தவர்களே பலப்படுத்தவில்லை. ஓரளவுக்குச்சுமந்திரன் சம்பந்தனுக்கு ஆதரவாக இருந்தார். இதனால் சுமந்திரனும் துரோகி ஆக்கப்பட்டார். புத்திசாலிகளையும் யதார்த்தவாதிகளையும் முட்டாள்களாக்க முடியாது. வேண்டுமானால் துரோகியாகச் சித்திரிக்கலாம். அதுதான் நடந்தது; நடந்து கொண்டிருக்கிறது. அடுத்ததாக, சித்தார்த்தன் சம்பந்தனுடன் நெருக்கம் காட்டினார். இந்த இருவரையும் தவிர வேறெவரும் சம்பந்தனுக்கு ஆதரவாக இருக்கவில்லை. அவர் எதிர்பார்த்த முன்னாள் வடமாகாணசபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், சம்பந்தனை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார். யதார்த்தவாதியும் அறிவாளியும் துரோகியாக்கப்படுவதே தமிழ்ச்சமூகத்தின் பெருங்குணமானால் இப்படித்தானே விதியிருக்கும். என்பதால் 2024 க்குப் பிறகுதமிழ்ச்சமூகம் தனக்கான தலைமைத்துவத்தை இழந்து இருளுக்குள் நிற்கிறது. 

இதனால் இன்றைய தமிழ் அரசியற் சூழலானது, 2009 க்கு முன்பிருந்த விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தைப் போலன்றி, ஒற்றை மையத் தலைமைத்துவத்தில் இருந்து கூட்டுத் தலைமைத்துவத்தை நோக்கியதாக மாற வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. அதற்கான தேடலில் இப்பொழுதுதமிழ்ச் சமூகம் உள்ளது. ஆனால், அப்படிக் கூட்டுத் தலைமைத்துவப் பண்புடன் இயங்கக் கூடிய உளநிலையும் பயிற்சியும் ஜனநாயகப் புரிதலும் தயாரும் இன்றைய தமிழ்த்தலைவர்களிடம் இல்லை. இதை அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயற்பாடுகளும் நிரூபிக்கின்றன. இனரீதியாகவும் வடக்குக் கிழக்கு என்ற பிராந்திய அடிப்படையிலும் தமிழ் மக்களுக்கு அல்லது தமிழ்பேசும் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளையும் ஏற்படுகின்ற நெருக்கடிகளையும் புரிந்து கொண்டு, அவற்றுக்குத் தீர்வைக் காண்பதற்கான வேலைத்திட்டங்களை எவரும் உருவாக்கவில்லை. அப்படியான சிந்தனையே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 1977 க்கு முன்பிருந்த தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவை முன்னெடுத்த அரசியலையே இன்றைய தமிழ் (தேசிய) அரசியல் தரப்பினரும் முன்னெடுக்கின்றனர். அவர்கள் பயன்படுத்திய உளுத்துப் பழுதடைந்துபோன வார்த்தைகளையே இன்றையவர்களும் பயன்படுத்துகின்றனர். ஒரு புதிய சொல்லைக் கூட இவர்களால் சொல்ல முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய துயரம்? தமிழ்ப் பத்திரிகைகளைப் படிக்கும்போது அன்றைய (1970 க்கு முந்திய) ஈழநாடு, சுதந்திரன் பத்திரிகைகளைப் படிப்பதைப்போலிருக்கிறது. 

ஆனால், காலமும் நிலைமைகளும் அரசியல் சூழலும் உலகமும் வேறு எங்கோ சென்று விட்டது. 

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *