வீரகேசரியில் நிகழ்ந்த ‘கவிதைச் சமர்’- பகிர்வுகள் (பகிர்வு – 14)

வீரகேசரியில் நிகழ்ந்த ‘கவிதைச் சமர்’- பகிர்வுகள் (பகிர்வு – 14)

(அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்)

— செங்கதிரோன் —

கடந்த பகிர்வில் (பகிர்வு – 13) தமிழில் ‘புதுக்கவிதை’ வடிவம் குறித்த எனது பதிவைப் படித்துவிட்டு தற்போது சுவிஸ்சர்லாண்டில் வதியும் நண்பர் அழகுகுணசீலன் அவர்கள், அவர் முன்பு வீரசேகரிப் பத்திரிகையில் வாராவாரம் எழுதிவந்த ‘இலக்கியச் சாளரம்’ பத்தியை நினைவுபடுத்தி ‘பதில்’ முகநூல் பதிவொன்றையிட்டிருந்தார். அது பற்றிய விபரத்தினை இங்கே பகிர்ந்துகொள்வது பொருத்தம்.

1984 ஆம் ஆண்டென்று நினைக்கின்றேன். வீரசேகரி வாரமலரில் அழகு குணசீலன் அவர்கள் ஜயசாந்தன் எனும் பெயரில் ‘இலக்கியச் சாளரம்’ எனும் பத்தியை எழுதிவந்தார். இதற்கு முன்பு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பர் வெ. முருகபூபதி அவர்கள் ‘ரஸஞானி’ எனும் பெயரில் ‘இலக்கியப் பலகணி’ எனும் பத்தியை எழுதிவந்தார். அவருக்குப் பின்னர் அதன் தொடர்ச்சியாகவே அழகுகுணசீலன் (ஜயசாந்தன்) இப் பத்தியை (இலக்கியச் சாளரம்) எழுதி வந்தார்.

1983 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கைதாகி மட்டக்களப்பு – உகனை – அம்பாறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் மூன்று மாதகாலம் தடுப்புக் காவலில் இருந்த பின்னர் விளக்கமறியல் கைதியாக மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன். அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மட்டக்களப்புச் சிறையுடைப்பில் தப்பிச் செல்லாமல் விடப்பட்டிருந்த வண. பிதா, சிங்கராயர் மற்றும் நிர்மலா நித்தியானந்தன் ஆகியோருடன் சமகாலத்தில் நானும் மட்டக்களப்புச் சிறைவாசம் அனுபவித்த காலம் அது. சிறையிலிருக்கும்போது சிறைக்குள்ளிருந்து ‘வேண்டாம் புதுக்கவிதைப் போக்கு’ எனும் தலைப்பில் கவிதையொன்று எழுதியிருந்தேன்.

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாகவிருந்த நான் 1984 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எனது சார்பில் தாக்கல் செய்யப்பெற்ற பிணைமனுவொன்றினூடாக பிணையில் சிறைச்சாலையிலிருந்து வெளிவந்தேன்.

என்னைக் காணவென்று மட்டக்களப்பு முகத்துவாரத்திலமைந்த எனது வீட்டிற்கு வந்த அழகுகுணசீலன் இக்கவிதையின் பிரதியைக் கண்ணுற்று அதனை எடுத்துச் சென்று ‘இலக்கியச்சாளரம்’ பத்தியில் ‘கவிதைச் சமர்’ எனும் தலைப்பிட்டு இக்கவிதையைப் பிரசுரித்து இக்கவிதை குறித்த வாதப்பிரதிவாதங்களைக் கவிதை வடிவத்திலேயே தரும்படியும் வாசகர்களைக் கேட்டிருந்தார். புதுக்கவிதை பற்றிய எனது பார்வையை வெட்டியும் ஒட்டியும் கவிதைகள் மாறிமாறி ‘இலக்கியச்சாளரம்’ பத்தியில் வாராவாரம் பிரசுரமாகின. முதல் எதிர்வினை கவிஞர் மைக்கல்கொலினிடமிருந்து வந்ததாகவும் அழகு குணசீலன் தனது ‘பதில்’ முகநூல் பதிவில் குறிப்பிட்டுமுள்ளார். இக் ‘கவிதைச்சமர்’ வீரகேசரியில் சில மாதங்கள் நீடித்துப் பின் ஒரு கட்டத்தில் சமரை ஆரம்பித்து வைத்த அழகுகுணசீலனாலேயே முடித்தும் வைக்கப்பெற்றது.

இக் கவிதைச் சமருக்குக் காரணமாக அமைந்த அக்கவிதை இதோ.

வேண்டாம்! புதுக்கவிதைப் போக்கு!

• பொதிகை மலைத் தமிழ்மரபு

பூத்தகவிச் சோலையினுள்

எதுகை சீர் தளை மோனை

இலக்கணங்கள் இல்லாத

புதுக்கவிதை விடப் பூண்டு

புகுந்து விளையாடுவதா?

புதுக்கவிதைப் புலவீர்காள்!

போய்விடுங்கள்! போய்விடுங்கள்!!

• வாக்கியத்தை முறித்துப்பின்

வரிசையிலே வைத்தெழுதி

ஆக்கியதால் வந்த சொல்

அடுக்குகவி ஆகிடுமா?

சோக்கில்லை இந்தவெறும்

சோடிப்பால் புதுக்கவிதைப்

போக்குவந்து கவிதை புகழ்

போகிறதே! போகிறதே!

• பூக்கடையாம் தமிழ்க்கவிமேல்

புழுதியினை இறைத்து அரை

வேக்காட்டுக் கவிஞரெலாம்

விளையாட வந்ததனால்

சாக்கடையாம் புதுக்கவிதைச்

சகதிக்குள் அகப்பட்டு

நோக்காடடைந்து தமிழ்

நோகிறதே! நோகிறதே!!

• பூப்படையாப் பெண்களெலாம்

பிள்ளைபெற வந்ததுபோல்

யாப்பறியாச் சில பேர்கள்

யாமும் பெரு கவிஞரெனக்

கூப்பாடு போட்டெழுதிக்

குவிக்கின்றார் குலவுகவிச்

சாப்பாடு இன்றித் தமிழ்

சாகிறதே! சாகிறதே!!