இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர் காலம். (பகுதி. 2)

இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர் காலம். (பகுதி. 2)

(பரந்த உரையாடலுக்கான முன்னோட்டம்.)

  — வி.சிவலிங்கம் —

இன்றைய இலங்கை அரசியலை எவ்வாறு புரிந்து கொள்வது?

ஏற்கெனவே உலக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பகுதி 1 இல் ஓரளவு அடையாளப்படுத்திய நிலையில் இந்த மாற்றங்களின் பின்னணியில் இலங்கை எதிர் நோக்கும் பிரச்சனைகளை ஆராய்வது அவசியமாகிறது. இச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பிரச்சனைகளை ஒரு வரலாற்று அடிப்படையில் நோக்கி எழுதப்பட்ட பேராசிரியர். ரவீந்திரன் நடேசன் அவர்களினதும், தமிழ் அரசியலின் இன்றைய நிலமைகளை அதன் வரலாற்று அடிப்படைகளின் நோக்கில் மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் வழங்கிய கருத்துக்களும் இங்கு எமது கவனத்திற்குரியவை. 

எனது முதலாவது பகுதியில் குறிப்பிட்டது போல 80 களில் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்ட திறந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கான கோட்பாடுகளை நாம் கவனத்தில் கொண்டே இக் கருத்துக்களை அவதானிப்பது பொருத்தமானது. குறிப்பாக, இலங்கை அரசின் குணாம்சங்கள் 1977ம் ஆண்டின் பின்னர் அது தாராளவாத ஜனநாயக கோட்பாடுகளிலிருந்து (Liberal democratic principles) விலகி நவ தாராளவாத ஜனநாயகக் கோட்பாடுகளை (Neoliberal democratic principles) நோக்கித் திருப்பியதன் விளைவாக உலக அளவிலும் குறிப்பாக இலங்கையிலும் ஏற்பட்டுள்ள விளைவுகளை உங்களால் உய்த்துணர்ந்திருக்க முடியும். 

அரசியல் நிர்வாக அடிப்படை மாற்றம் 1977ம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலின் பின்னர் இலங்கையின் அரசியல் வரைபடம் படிப்படியாக மாற்றமடைந்து அரசுக் கட்டுமானம் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட மையக் கட்டமைப்பாகவும், நாட்டின் பொருளாதாரம் என்பது ஒரு இறக்குமதிப் பொருட்களின் சந்தையாகவும் மாறியது. சந்தைகளின் செயற்பாட்டில் அரசின் தலையீடு குறைந்த நிலையில் அதன் செயற்பாடு படிப்படியாக ஒரு குழுவினரின் ஏகபோக ஆட்சியாக மாறிச் சென்றது. அதாவது ஒரு குடும்பத்தின் அல்லது சில குழுக்களின் நலன்களைப் பேணும் கட்டமைப்பாகவும், இந்தக் குழுக்களின் நலன்களைப் பேணும் அமைப்பாக ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் செயற்பட்டன. குறிப்பாக, சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் என்பது எவ்வாறு பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர்கள் நாட்டைப் பிரித்தாளும் தந்திரங்களைப் பயன்படுத்தி ஆண்டார்களோ, அதே தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியே தமது ஆதிக்கத்தை நிறுவினார்கள். உதாரணமாக, பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர்கள் தமது மொழி ஆதிக்கத்தையும், மத ஆதிக்கத்தையும் பயன்படுத்தி நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிய ஆட்சிமுறை, கலாச்சார பரிவர்த்தனை, நிலத்தின் மீதான ஆதிக்கத்தைப் பலவீனப்படுத்தி தமது ஆதிக்கத்தை நிறுவினார்களோ அதே அணுகுமுறை இன்றும் நாட்டில் நிலவுவதை நாம் காணலாம். எனவே நாட்டில் நிலவும் ஆட்சிமுறையானது ஜனநாயக ஆட்சி அல்ல, மாற்றாக இன்னொரு குடியேற்ற ஆட்சியே என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். நாட்டில் வாழும் சமூகங்கள் வெவ்வேறு அடிப்படைகளில் பிரித்து ஆளப்படுகிறார்கள்.    

இந்த மாற்றங்கள் படிப்படியாக நாட்டின் நவதாராளவாத ஜனநாயக அரசியல் கட்டுமானங்கள்; சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் கருவியாக மாற்றமடைந்தன. இலங்கை அரசு என்பது அதன் ஜனநாயக அம்சங்களைப் படிப்படியாக இழந்து ஒரு பேரினவாத சக்திகளுக்குச் சேவகம் புரியும் ஒரு கருவியாக மாற்றம் பெற்றது.

இந்த மாற்றங்கள் யாவும் சிங்கள பௌத்த ஆதிக்கத்திற்கு சிறுபான்மை இனங்களால் ஏற்படும் ஆபத்தாகவும், சிறுபான்மை இனங்கள் இலங்கையின் இறைமைக்கு எதிராக செயற்படும் மேற்குலக சக்திகளுடன் இணைந்து செயற்;படும் நாசகார சக்திகளாகவும் இவை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக தொடர்ச்சியாக கூறி சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்து ஏமாற்றிய அரசியலே இதுவரை இடம்பெறுகிறது. 

‘அறகலய’

2022ம் ஆண்டு இலங்கை நிதி அடிப்படையில் வங்குறோத்து நிலையை அறிவித்த நிலையிலும், மக்கள் எரி பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு காத்திருந்த நிலைமைகளும் ஒரு பெரும் மக்கள் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது. இம் மாதிரியான கொடுமைக்கு யார் காரணம்? என மக்கள்  தமக்குள் வினவத் தொடங்கினார்கள். இதன் விளைவாகவே 2024ம் ஆண்டு சாமான்ய மக்கள் புதிய மூன்றாவது சக்தியை யாரும் எதிர்பாராதவாறு தேர்ந்தெடுத்தார்கள். 

இத் தேர்தல் முடிவுகளை நாம் சரியாக புரிந்து கொள்வது அவசியம். அதாவது நாடு பொருளாதார அடிப்படையில் மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்தது. ஆட்சி அதிகாரத்தில் இரண்டு கட்சிகள் போட்டி அரசியலில் இருப்பதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி மக்களைக் கூறுபடுத்தி அதிகாரத்தை ஒரு சாரார் தொடர்ந்து தம் வசம் வைத்திருந்தனர். 2015ம் ஆண்டு ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாத நிலையில் இரண்டும் இணைந்து நல்லாட்சி என்ற பெயரில் அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்த மகிந்த தரப்பினர் ஐ தே கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது எனக் கூறி அக் கட்சியின் ஒரு பகுதியினர் அரசாங்கத்திலும், இன்னொரு பிரிவினர் எதிர்க்கட்சியிலும் அமர்ந்து அரசியலைக் கேவலப்படுத்தினர். 

ஆனால் காலப் போக்கில் ஐ தே கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது எனக் கூறி சிறீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை ஆரம்பித்த மகிந்த தரப்பினர் 2022ம் ஆண்டு கோதபய  தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் துரத்தியபோது எந்தக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது எனக் கூறி சிறீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தினார்களோடு அதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை ஜனாதிபதியாக நியமித்தார்கள்.

இந்த வரலாறு ஏன் இங்கு பகிர்வது அவசியமெனில் இக் கட்சிகள் நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி தமது அதிகார இருப்பைப் பேணினார்களே தவிர மக்களின் நலன்களில் அவர்கள் கவலை கொண்டிருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இலங்கையைப் பிளவுபடுத்தி ஆண்ட இரண்டு பிரதான கட்சிகளும் நாட்டை பாரிய கடன் சுமைக்குள் தள்ளியதன் விளைவாகவே மக்கள் 2024ம் ஆண்டுத் தேர்தலில் இவர்களை நிராகரித்த நிலையில் மூன்றாவது சக்தியாக இருந்த தேசிய மக்கள் சக்தியிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒப்படைத்தார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசின் தோற்றம்

2024ம் ஆண்டு தேர்தல் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது நாட்டின் அரசியல் பொறிமுறை மக்களுக்கும், அரசுக்குமிடையே தொடர்பற்றதாக இருந்தது. அரச கட்டுமானம் ஊழல் நிறைந்ததாகவும், குடும்ப ஆட்சி அல்லது குழு ஆட்சியின் உறைவிடமாகவும் இருந்தது. தேசிய நல்லிணக்கம் மிகவும் சீர்குலைந்து பிளவுற்றிருந்தது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் சுதந்திரம் பெற்ற பல நாடுகள்  முன்னேறிய நிலையில் ஒரு காலத்தில் யப்பானின் பொருளாதாரத்தோடு ஒப்பிடும் அளவிற்கு வளர்ந்த இலங்கைப் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குச் சென்றது.

இதன் காரணமாக புதிய ஆட்சிப் பொறிமுறையைத் தோற்றுவிக்குமாறு கோரியே மக்கள் ஆட்சியை ஒப்படைத்துள்ளார்கள். அது மட்டுமல்ல, ஏற்கெனவே மிகவும் உழுத்துப்போன நிலையிலுள்ள ஆட்சிப் பொறிமுறை மூலமாகவே அதிகாரத்தைக் கையளித்துள்ளனர். அதாவது புதிய ஆட்சிப் பொறிமுறையைக் கோரி பழைய யந்திரத்தையே ஒப்படைத்துள்ளனர். இது ஒரு புரட்சிகர ஆட்சியைத் தருமாறு கையளிக்கப்பட்ட அதிகாரம் அல்ல. ஏற்கெனவே உள்ள நவ தாராளவாத அரசியல், பொருளாதார நிர்வாகக் கட்டுமானங்களில் சீர் திருத்தங்களை ஏற்படுத்துமாறு கோரியுள்ளனர். இங்கு எழும் பிரதான கேள்வி எதுவெனில், ஏற்கெனவே மிகவும் உழுத்துப்போன நிலையிலுள்ள அரசுப் பொறிமுறையைப் பயன்படுத்தி புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பது சாத்தியமாகுமா? என்பதாகும்.  

எனவே நாம் இலங்கையின் அரசியல் பொருளாதாரம் குறித்து அணுக வேண்டுமாயின் மக்களின் அபிலாஷைகளோடு இணைந்த கொள்கைகளின் வகிபாகம் அவசியமாகிறது. அவை குறித்த விவாதங்களையே இக் கட்டுரை முன் வைக்கிறது. குறிப்பாக, மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கையின் பிரச்சனைகளை எவ்வாறு அணுகுவது? என்பதே கேள்வியாகும்.

உதாரணமாக, இப் பிரச்சனையை அதாவது தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு அணுகுவது? என்பதிலிருந்து தொடங்கலாம். அதாவது தேசிய அரசுக் கட்டுமான மாற்றங்களுக்கான கோட்பாட்டு மாற்றங்களின் பின்னணியிலேயே இவை அணுகப்பட வேண்டும். இன்று அதிகாரத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி அரசு தேசிய அளவிலான ஜனநாயக அடிப்படை மாற்றங்களை நோக்கிச் செல்கிறது. இந்த மாற்றங்களுக்கான பிரதான தடைகளாக அரச நிர்வாகக் கட்டுமானங்களில் காணப்படும் அரசியல் தலையீடுகள், ஊழல் நிலமைகள், இன, மத ஆதிக்கத்தின் தலையீடுகள் மிக நீண்ட காலமாகவே சகல நிர்வாக அலகுகளிலும் உடுருவியிருப்பதால் அவை மிகவும் இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. அரச அதிகாரிகள் அவை ஜனநாயக பண்புகளுக்கு எதிரான போக்கைக் கொண்டிருப்பதாக கருத முடிவதில்லை. 

இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு என வர்ணிக்கப்பட்ட போதிலும் அதன் செயல்முறைகள் ஜனநாயகத்தின் கூறுகளை கொண்டிருக்கவில்லை என்பதனையும், சோசலிசம் என்பது சம நீதி, சம வாய்ப்பு, மனித உரிமைக்கான பாதுகாப்புகளை அப் பதம் குறிப்பதை பொருட்படுத்தியதில்லை. 

எனவே இலங்கையின் ஜனநாயக கட்டுமானம் ஒரு இனத்தின் கருவியாக மாற்றமடைந்து சென்ற நிலையில் அதனை மீண்டும் தாராளவாத ஜனநாயக விழுமியங்களை குறைந்த பட்சம் எடுத்துச் செல்வது முக்கியமானது. ஏனெனில் இதற்கான விலையை நாட்டின் சிறுபான்மையினரே குறிப்பாக தமிழ் மக்களே செலுத்துகின்றனர். இதன் காரணமாகவே எனது பார்வையை தமிழ் அரசியலின் இன்றைய போக்கிலிருந்தே ஆரம்பிக்கிறேன்.

தமிழ் அரசியலின் இலக்குகள் என்ன?

முதலில் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் என்பது சுய நிர்ணய உரிமை, சுயாட்சி, சமஷ்டி, தனி நாடு என பல கோரிக்கைகளோடு பயணித்து வருகிறது. பல போராட்டங்களை நடத்தியும் வந்துள்ளது. ஆனால் இலக்குளை சிறு அளவிலாவது எட்ட முடியவில்லை. பதிலாக பல இழப்புகளைச் சந்தித்து வருகிறது. மக்கள் அங்கு வாழ முடியாது என்ற மனநிலையை நோக்கித் தள்ளப்படுகின்றனர். இந் நிலையில் யாரும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் குறித்துப் பேச தயாராக இல்லை. இதற்குப் பிரதான காரணம் என்ன? முன்வைக்கப்பட்ட இலக்குகள் என்பது அடைய முடியாத கற்பனை சார்ந்த இலக்குகளா? அல்லது இந்த இலக்குகளை அடைவதற்காக தேர்ந்தெடுத்த அணுகுமுறைகள் பொருத்தமாக அமையவில்லையா? 

இவ்வாறான கேள்விகள் முன்னரும் எழுப்பப்பட்டன. அவ்வாறான நிலையில் இப்போ அதற்கான அவசியம் என்ன?

இன்று இலங்கையில் பொருத்தமான அரசியல் புறச் சூழல் தோற்றம் பெற்றுள்ளது. தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதில் தடையாக காணப்படும் அம்சங்கள் குறித்து இன்றைய அரசு சரியாக அடையாளம் கண்டுள்ளது. குறிப்பாக அரசுக் கட்டுமானத்தில் காணப்படும் ஜனநாயக விரோத அம்சங்களை நீக்குதல், தேசிய நல்லிணக்கத்திற்குத் தடையாகவுள்ள இனவாதக் கூறுகளை அகற்றுதல் என்ற பிரதான நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுள்ளது. இலங்கையின் தேசிய புனர் நிர்மாணம் குறித்தும், அதில் தேசிய இனங்கள் அனைத்தினதும் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையிலான பொறிமுறை மாற்றத்தை நோக்கி இந்த அரசு செல்வதால் அதனை மேலும் உந்தித் தள்ளுவதும், பலப்படுத்துவதும் எமது ஜனநாயகக் கடமை என்பதிலிருந்தே நாம் ஆரம்பிக்க வேண்டும். 

கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி மட்டுமே பேசியது. அது தமிழ் மக்கள் என்ற பெயரில் வாழும் மனிதர்களின் வாழ்வு நிலமைகள் குறித்து எந்தக் கொள்கைகளையும் கொண்டிருக்கவில்லை. அதாவது மனித அபிவிருத்தி பற்றிய எக் கவனமும் இல்லாமலிருந்தது. இதற்குப் பிரதான காரணம் என்ன? அந்த மக்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் மேல் மட்ட மக்களின் நலன்களைப் பிரதிபலித்தார்கள். வறுமையில் உழலும் மக்களின் வாழ்வு, கல்வி, சுகாதாரம் மற்றும் இன்னோரன்ன தேவைகள் போன்றன அவர்களின் பிரச்சனையாக இருக்கவில்லை. 

இன்று வரை சுய நிர்ணய உரிமை, சுயாட்சி, தன்னாட்சி, கூட்டாட்சி என அரசியலில் சொற் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும் அவற்றின் விரிவான அம்சங்கள், செயற்பாடுகள், நடைமுறைச் சிக்கல்கள் எதுவும் பகிரப்படுவதில்லை. பதிலாக இவற்றை நியாயப்படுத்துவதற்கான செயல்முறைகள் சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் நாட்டின் பிரிவினையை நோக்கிய நியாயங்களாக புரிந்து கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. இங்கு கோரிக்கைகள் அல்ல பிரச்சனை. அவற்றை அடைவதற்காக முன் வைக்கும் செயல்முறைகளே தீர்வை நோக்கிய பாதைகளை அடைத்து நிற்கின்றன. இதில் முக்கியமானது அதிகாரத்திலுள்ள அரசியல் கட்சிகளின் போக்குப் பற்றிய தெளிவான புரிதல் அன்றி கோரிக்கைகளை முன் வைப்பது ஆட்சியாளரைக் கடின நிலைக்குத் தள்ளுவதாக உள்ளது. ஜனநாயகம் என்பது கோரிக்கை என்பதில் மட்டும் தங்கியிருப்பதில்லை. எதிரியின் அல்லது ஆட்சியாளரின் இருப்பிற்கு அது எவ்வளவு உதவுகிறது? என்பதிலிருந்தே மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். உதாரணமாக, சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த வேளையில் அவருக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. ஆனால் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் தமிழ் அரசியல் அதிகபட்ச தீர்வை அழுத்துவதில் கொண்டிருந்த அக்கறை சந்திரிகா எதிர் நோக்கிய நெருக்கடிகளை தளர்த்துவதற்கான அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை. இதுவே அப் பேச்சுவார்த்தைகள் தொடர முடியாமல் போயின. அதே போலவே மைத்திரி தலைமையிலான அரசு கிட்டத்தட்ட ஒரு அரசியல் யாப்பை சகல தரப்பின் ஆதரவுடன் வரைந்த போதிலும், அந்த ஆட்சியில் இணைந்திருந்த கட்சிகள் மத்தியில் குறிப்பாக ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றிற்கிடையே காணப்பட்ட முறுகல் நிலையைக் கவனத்தில் கொள்ளவில்லை. அத்துடன் இந்த இரு கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் மைத்திரியை நிறுத்தி வெற்றி பெற்ற பின்னர் அந்த அரசின் அடுத்த கட்ட செயற்பாட்டைக் கவனிக்கத் தவறினர். இதன் விளைவே மீண்டும் மைத்திரி மகிந்தவுடன் இணையும் நிலை எற்பட்டது. 

இந்த வரலாற்று அனுபவங்கள் தேசிய அரசியலில் தமிழ் அரசியல் தனது வகிபாகத்தினை நழுவவிட்ட தருணங்களை நாம் மீள ஆராய வேண்டிய நிலையை உணர்த்துகின்றன. இங்கு கட்சிகளிடையே மாற்றங்கள் என்பதை விட மக்களிடையே மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கை அரசியலில் குறிப்பாக சுதந்திரத்தின் பின்னரான காலப் பகுதியில் அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் காத்திரமான செல்வாக்கைச் செலுத்தின. நாட்டின் பல பகுதிகள் சில அரசியல்  கட்சிகளின் செல்வாக்கு மண்டலங்களாக காணப்பட்டன. இதனால் தேர்தலுக்கு முன்னதாகவே எக் கட்சி ஆட்சிக்கு வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் நிலை காணப்பட்டது.

அவ்வாறான நிலை இன்று இல்லை. அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்குமிடையே காணப்பட்ட நெருக்கம் இன்று மிகவும் குலைந்துள்ளது. மக்கள் கட்சிகளோடு இருந்த நெருக்க நிலை தளர்ந்ததால் அவர்கள் மிதக்கும் (Floating voters) வாக்காளர்களாக மாறியுள்ளனர். எக் கட்சி வேட்பாளர் தனது தொகுதியில் வெற்றி பெறுவார் என்பதை கடந்த காலம் போல கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்சிகளின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட பல பகுதிகள் இப்போது வேறு கட்சிகளின் ஆதரவுத் தளங்களாக மாற்றம் பெற்றுள்ளன. 

இன்று அரசியல் கட்சிகளினதும், அரசியல் போக்குகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் புதிய அரசியல் வழிமுறையை நோக்கித் தள்ளியுள்ளன. இதன் விளைவாகவே 2024ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் எதிர்பாராத முடிவுகளைத் தந்துள்ளன. இவை சிங்களப் பகுதிகளில் மட்டுமல்ல, தமிழ் பகுதிகளிலும் அவ்வாறுதான். மிக நீண்ட காலமாக தமது ஆதரவுத் தளமென மிக வீராப்போடு செயற்பட்ட பல அரசியல் தலைவர்கள் மிக மோசமாகத் தோற்றகடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான தோல்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு மக்களுடன் தொடர்பற்ற  நிலையிலிருந்துள்ளனர்.  

எனவே கடந்த கால அம்சங்கள் என்பது புதிய மாற்றங்களை நோக்கிச் செல்கையில் எமது கவனத்தில் கொள்ள வேண்டிய வரலாற்றுப் புள்ளிகள் இவை ஆகும்.

(தொடரும் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *