வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பிறகு கடந்துபோன அரை நூற்றாண்டு  

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பிறகு கடந்துபோன அரை நூற்றாண்டு  

— வீரகத்தி தனபாலசிங்கம் —

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் இலக்கு ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி (சமஷ்டி) முறையின் அடிப்படையில் தீர்வைக் காண்பது என்பதில் இருந்து ‘தமிழீழம்’ என்ற சுதந்திரமான தனியரசுக்கான கோரிக்கையாக நகர்ந்ததை குறித்து நிற்கும் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த வியாழக்கிழமை சரியாக அரை நூற்றாண்டு நிறைவடைந்தது. 

தமிழர் அரசியலின் திசை மார்க்கத்தை மாத்திரமல்ல, இலங்கையின் அரசியல் போக்கையும் மாற்றியமைத்த அந்த தீர்மானம் 1976 மே, 26  வட்டுக்கோட்டையில்  தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 

தனிநாட்டுக் கோரிக்கையின்  கொள்கைப் பிரகடனமாக அமைந்த  தீர்மானத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களின் அங்கீகாரத்தைக் கோருவதற்கு 1977 ஜூலை பொதுத் தேர்தலை தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி பயன்படுத்தியது. இரு மாகாணங்களிலும் 18 தொகுதிகளில் அதன் வேட்பாளர்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றியை வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையாக கூட்டணி எடுத்துக் கொண்டது.

பாராளுமன்ற அரசியல் பாதை மூலமாக தனிநாட்டை அடைய முடியாது என்பது  கூட்டணியின் படித்த அரசியல் தலைவர்களுக்கு தெரியாததல்ல. அவர்கள்  எந்தவொரு அரசியல் போராட்டத் திட்டமும் தந்திரோபாயமும் இல்லாமல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து மக்களை  குறிப்பாக, தமிழ் இளைஞர்களை  உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய   தவறுக்காக நாளடைவில்  பெரிய விலையைச் செலுத்த வேண்டியேற்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் தலைமைத்துவம் ஆயுதமேந்திய தமிழ்ப் போராளிக் குழுக்களின்  கைகளுக்குச் சென்ற பின்னர் மூண்ட சுமார் மூன்று தசாப்தகால  உள்நாட்டுப் போரில்   இலங்கை ஆயுதப் படைகளுக்கு எதிராக அவர்களால் தொடர்ச்சியாக கணிசமான காலத்துக்கு வியக்கத்தக்க வெற்றிகளை  பெறக்கூடியதாக இருந்த போதிலும், தனிநாட்டுக்கான போராட்டத்தின் பிரதான தளப்பிரதேசமாக விளங்கிய வன்னி 2009 மே மாதம்  இலங்கைப் படைகளிடம் வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து மாற்றம் கண்ட  அரசியல் – இராணுவ  நிலக்காட்சி  வட்டுக்கோட்டை தீர்மானத்தை கிரகணம் செய்தது. 

என்றாலும், ஒற்றையாட்சி அரசொன்றை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்பதற்கான  ‘சான்றாகவும்’ வடக்கு, கிழக்கு தமிழர்களின்  சுயநிர்ணய உரிமையை  நியாயப்படுத்துவதற்கான  ஆவணமாகவும் அரசியல் விவாதங்களில் அந்த தீர்மானத்தை தமிழ் தேசியவாத அரசியல் சக்திகள்  முன்வைத்து வந்திருக்கின்றன.

 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு அன்றைய ஜெயவர்தன அரசாங்கம்  அரசியலமைப்புக்கு கொண்டுவந்த ஆறாவது திருத்தம் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை சட்டவிரோதமானதாக்கிய போதிலும், வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழ் அரசியல்வாதிகள்  மேற்கோள் காட்டிப் பேசிவந்திருக்கிறார்கள். அது தொடர்பில் நடைமுறையில் எதையும் தங்களால் செய்ய முடியாது என்பதும் அவர்களுக்கு தெரியும்.

அந்த  தீர்மானத்தின் 40 வருட நிறைவின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அன்றைய தலைவர் காலஞ்சென்ற இராஜவரோதயம் சம்பந்தன், “1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையையும் மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண சபைகளை அமைப்பதற்காக அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தத்தையும் தொடர்ந்து வட்டுக்கோட்டை தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் குறித்துப் பேசுவதை நாம் நிறுத்திவிட்டோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் விலகி விட்டோம். பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகள் ‘ஐக்கியப்பட்டதும் பிளவுபடாததுமான  இலங்கை கட்டமைப்பு ஒன்றுக்குள் செயற்படுவதற்கு இணங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு பெருமளவான அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் தேவைப்படுகிறது”  என்று கூறினார்.( தி இந்து, 2016 மே 14)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்க காலத்தில் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையொன்று முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே சம்பந்தன் இதைச் சொன்னார். அந்த செயன்முறை தமிழர் பிரச்சினைக்கு முடிவைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையை அவர் கொண்டிருந்த நேரம் அது. முன்னைய தமிழ்த் தலைவர்களைப் போன்றே சம்பந்தனும் தனது மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடனேயே இறந்துபோனார்.

தற்போது முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழ்நிலையில், அதாவது  இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியம் குறித்து சிந்திக்கத் தயாரில்லாத ஒரு அரசாங்கத்தின் கீழ், அதனால் உறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை முன்னெடுக்கப்படாத நிலையில், வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றி தமிழ் அரசியல் சக்திகள் மத்தியில் இருந்து கருத்துக்கள் வெளிவருகின்றன. 

தற்போது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்நோக்கும் பெருவாரியான பிரச்சினைகளுக்கு மத்தியில் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை ஒன்று முன்னெடுக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறித்து வலுவான சந்தேகம் கிளம்பியிருக்கின்ற போதிலும், புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டியவை என்று தாங்கள் கருதுகின்ற யோசனைகளை தயாரிப்பதில் தமிழர் தரப்பில் ஏட்டிக்குப் போட்டியாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் பயனறுதியுடைய அரசியல் தீர்வு ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்பதால் ஒற்றையாட்சி நீடிக்கும் வரை வட்டுக்கோட்டை தீர்மானம் மாத்திரமே தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு நியாயமான தெரிவாக இருக்க முடியும் என்ற கருத்தை சில தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கிறார்கள்.

போரின் முடிவுக்கு பிறகு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அவசியம் இல்லை என்ற எண்ணத்தில் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் இருக்கும்  நிலையில், அரைகுறையான அதிகாரங்களுடனான மாகாணசபைகளும் பல வருடங்களாக இயங்காமல் இருக்கும் நிலையில் தங்களுக்கு விட்டுவைக்கப்பட்டிருக்கும்  தெரிவு என்ன என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால், மீண்டும் அவர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வரலாற்று மற்றும் அரசியல் பெறுமதி இருக்கிறது என்று சிந்திக்க முற்படுவதை தடுப்பது முற்று முழுதாக அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் அணுகுமுறையிலுமே தங்கியிருக்கிறது. 

அதேவேளை, தற்போதைய அரசியல் நிலைவரத்துக்கு மத்தியில் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்காக குரல்கொடுப்பது எந்தளவுக்கு விவேகமானது என்பது அரை நூற்றாண்டு கால அரசியல் நிகழ்வுப் போக்குகளை ஒருவர் எவ்வாறு மதிப்பிடுகின்றார் என்பதிலேயே தங்கியிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *