மட்/நூலக வரலாறு மறைக்கப்படும்  உண்மைகள்  

மட்/நூலக வரலாறு மறைக்கப்படும்  உண்மைகள்  

— எம்.ஆர். ஸ்ராலின் ஞானம் — 

2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற பிள்ளையான் மட்டக்களப்பு மாநகர பொது நூலகத்தின் வளர்ச்சிக்காக புதிய கட்டடத் தொகுதியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார். அதன்படிக்கு மாநகரத்தின் மையமான புளியந்தீவினுள் அமைந்துள்ள பிரபலமான கல்லூரிகளுக்கும் வெபர் விளையாட்டு மைதானத்துக்கும் அருகே மீன்பாடும் மட்டுநகர் வாவிக்கரையோரம் உள்ள இடமொன்று தெரிவாகின்றது. அவ்வேளை வெபர் அரங்கைச்சுற்றியிருந்த இடங்கள்  இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் அதனை நேரிடையாக ஜனாதிபதி மஹிந்தவிடம் பேசி விடுவிக்கின்றார் முதலமைச்சர். கட்டடப் பணிகளுக்காக சுமார் 195 மில்லியன் ரூபாய்கள் தேவையென திட்டமிடப்படுகின்றது. அந்தத்தொகைகள் மூன்று கட்டங்களாக 80 மில்லியன் ரூபாய்களை கிழக்கு மாகாண சபையூடாக ஒதுக்கி வேலைகளை தொடங்குகின்றார் பிள்ளையான். 

2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி அவ்வேளையில் மாநகர மாதாவாக இருந்த இராஜன் சத்திய மூர்த்தி அவர்களின் புதல்வியான சிவகீர்த்தா பிரபாகரன் அவர்களின் தலைமையில் முதலமைச்சர் பிள்ளையான் அவர்களால் அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது. 

ஆனாலும் தொடங்கி வைத்த நூலகத்தை முடிப்பதற்குள் 2012 ஆண்டு கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுகின்றது. அதன் காரணமாக கட்டட நிர்மாண வேலைகள் தடைப்படுகின்றன. 

‘நல்லாட்சி’ காலத்தில் காடுமண்டிக்கிடந்த கட்டடம் 

***************************************************

2015 ல் ஆட்சிக்கு வந்த மைத்திரியின் ‘நல்லாட்சி’ அரசு பிள்ளையானை சிறைப்படுத்தியதன் காரணமாக 2015-2020 வரையான காலப்பகுதியில் பிள்ளையான்  சிறையிலிருந்தார். 

அவ்வேளைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்நூலகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அது முறைப்படி அனுமதி பெறப் படாத    கட்டடம் என்றும் போதிய நிதியின்றி ஏன் தொடங்கினார் என்றும் பொய்களைப் பரப்பி  அது ‘பிள்ளையானின் நூலகம்’ என்றும் ஏளனம் செய்தனர். நல்லாட்சிக்கு ஆதரவளித்துக் கொண்டு எழுதப்படாத இரண்டாவது பிரதமராக சுமந்திரனே படையணிகள் சூழ வலம்வந்தார். எதிர்க்கட்சி தலைவரெனும் அந்தஸ்தை பெற்ற சம்பந்தன் கொழும்பிலுள்ள அரச வாசஸ்தலத்தில் குத்துக்கல்லாக இருந்து விட்டுப் போனார். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மட்/மாவட்ட அபிவிருத்திக்கு குழு தலைவராக இருந்து ஒதுக்கப்பட்ட நிதிகளை கூட பயன்படுத்தாத திராணியின்றி அவ்வொதுக்கீடுகளை  திரும்பியனுப்பிக் கொண்டிருந்தார்.

குறித்த மட்டக்களப்பு நூலகக் கட்டடம் பற்றிய பேச்சுக்கள் எழும்போதெல்லாம்  ‘உரிமையே எமக்கு முக்கியம்’என்றும் ‘அபிவிருத்திப் பணிகள்’ அவசியமற்றவை என்றும் கொக்கரித்துத் திரிந்தனர் இந்த கூட்டமைப்பினர். அதன்காரணமாக மைத்திரியுடன் கூட்டமைப்பினர் கொஞ்சி விளையாடிய அஞ்சு வருஷங்களும் அந்த நூலகக் கட்டடம் கேட்பாரற்று கைவிடப்பட்டு காடுமண்டிக் கிடந்தது. நகரத்தின் மத்தியில் எருக்கிலம் பற்றைகள் எழுந்து நின்று அது ஒரு பேய் வீடு போல காட்சியளித்தது.  

இவ்வேளையில் மட்டக்களப்பில் அரங்கம் நிறுவனம் நடத்திய கருத்தரங்கு ஒன்றுக்கு    நோர்வேயிலிருந்து வந்த ஒளிப்படக் கலைஞரும் கவிஞருமான தமயேந்தியவர்கள் குறித்த கட்டடத்தை கண்ணுற்று  அது பற்றி விசாரித்து சில ஒளிப்படங்களை எடுத்து “இந்நிலை ஏன்” என்று கேள்வியெழுப்பியிருந்தார். அவரது கேள்வியைத் தொடர்ந்து அவ்வேளை ‘அரங்கம்’ என்னும் பத்திரிகையை மட்டக்களப்பில் நடத்திக் கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர் சீவகன் லண்டன் வாழ் நூலகவியலாளர் செல்வராஜா அவர்களைக்  கொண்டு இந்நூலகத்தினை சர்வதேச தரம் வாய்ந்ததாக எப்படியாக வடிவமைப்பு செய்ய வேண்டும் என்பது பற்றிய பல கட்டுரைகளை தொடராக அரங்கத்தில் வெளியிட்டார். அவ்வேளையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிறிநேசன் இந்நூலகத்துக்கான நிதி கோரும் கடிதமொன்றை ஆளுநருக்கு அனுப்பியிருந்தார். 

மீண்டும் தொடங்கிய மிடுக்கு 

***************************

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போது சிறையிலிருந்த இருந்த பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி  மீண்டும் பேரெழிச்சி கண்டது. அந்த சூழ்நிலையை கச்சிதமாக பயன்படுத்திய பிள்ளையான் அவர்கள் செயலாளர் பிரசாந்தன் மற்றும் பிரதித்தலைவர்களான ஜெயம்,யோகவேள் ஆகியோர் ஊடாக வெற்றி பெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழாவை அவ்வேளை கிழக்கு, மாகாண ஆளுநராக இருந்த ரோஹித போகல்லாகம அவர்களை வரவழைத்து செய்வதற்கு திட்டமிட்டார். விழாவுக்காக மட்டக்களப்புக்கு வந்த ஆளுநர் பிள்ளையான்  எதிர்பார்த்தது போலவே மரியாதையினிமித்தம் மட்டக்களப்புச் சிறைக்குச் சென்று பிள்ளையானை பார்த்தார். அவ்வேளையில் குறித்த நூலகக் கட்டடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய நிதியினை ஒதுக்குமாறு வேண்டுகோள் வைத்து அவற்றைக் கண்டடைவதற்கான வழிகளையிட்டு கலந்துரையாடினார் பிள்ளையான். அவ்வேளையில் தேவையான நூலக நிதிக்குரிய புதிய மதிப்பீடாக 345 மில்லியன் ரூபாய்கள் என கணக்கிடப்பட்டது. பிள்ளையான்  சிறையிலிருந்து கொண்டு எடுத்த இத்தகைய  இராஜதந்திர நகர்வுகளும் செயலாளர் பிரசாந்தனின் பெருமுயற்சியும் ஆளுநர் நிதியிலிருந்து 100 மில்லியன் ரூபாய்களையும் மத்திய அரசாங்க உள்ளுராட்சி அமைச்சு ஊடாக  100 மில்லியன் ரூபாய்களும் பெற்றுக்கொள்ள வழிவகுத்தன. அவர்கள்  கூடவே இந்நூலகமானது மாநகர சபையின் சொத்தாக உருவாகி வருவதனால் மிகுதி 145 மில்லியன்களையும் மாநகரசபையிடமிருந்து பெற்றுத்தர ஆளுநர் ஊடாக  முயற்சி மேற்கொண்டார். ஆனாலும் அப்போதிருந்த மேயர் சரவணபவானும் கமிஷனர் தவராஜாவும் அதற்கு உடன்பட மறுத்தனர்.  இறுதியில் ஆளுநரின் கட்டளையை  மீற  முடியாமல் கமிஷனர் மேயரின் மறுப்புக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் 100 மில்லியன்கள் தருவதற்கு ஒப்புக்கொள்ள நேர்ந்தது. 

அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு பிள்ளையானுக்கு  மக்கள் அளித்த பேராதரவால் அவர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.அவ்வேளையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஒரே உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரம சிங்க அவர்கள் ஜனாதிபதியாக பாராளுமன்றத்தால் தெரிவாகும் வாய்ப்பு வந்தது. அவ்வேளையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்  ஒரே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பிள்ளையான் மூன்று வேண்டுகோளினை முன்வைத்து அவருக்கு ஆதரவாக வாக்களித்தார். அதில் ஒன்று மட்/நூலகத்தினை பூர்த்தி செய்வதற்குரிய நிதியினை ஒதுக்கவேண்டுமென்பதாகும்.(ஏனையவை கல்முனை வடக்கு/மயிலத்தமடு சிக்கல்கள்) . 

அதன்படி  ரணில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன்  மட்/நூலகத்தினை பூர்த்தி செய்யத்தேவையான நிதியில் 72 மில்லியன் ரூபாய்களை உடனடியாகவே விடுவித்தார். அந்நிதியூடாக நூலகத்துக்கு தேவையான தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அது மட்டுமன்றி லண்டனில் வாழும் சர்வதேச தரம் வாய்ந்த மூத்த நூலகவியலாளர் மதிப்புக்குரிய செல்வராஜா அவர்களை அழைத்து வந்து அத்தளபாடங்களுக்குரிய வடிவமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.  தொடர்ந்து ஜனாதிபதி ரணில் அவர்கள் கிராமிய வீதிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகவும் மட்/மாவட்ட அபிவிருத்திக்கு குழு தலைவராகவும் பிள்ளையானை நியமித்தார். இப்பதவி நிலைகளை பயன்படுத்தி பிள்ளையான் மீண்டும் கட்டட வேலைகள் மிடுக்குடன் தொடங்கினார். தனது அமைச்சினுடாக நூலகத்தின் சுற்று புற வீதிகள் அமைப்பதற்கும் வடிகால் வசதிகள் மேற்கொள்ளவுமாக 62 மில்லியன்  ரூபாய்களை ஒதுக்கினார். நூலகத்தின் கீழ்தளம் ஓரளவு பூர்த்தியாகும் நிலைக்கு வந்தது. முதற்கட்டமாக அவர் பதவியிலிருக்கும் போதே அவரது கையால் கீழ்தளத்தை திறந்து பாவனைக்கு விடுமாறு பல ஆர்வலர்கள் பிள்ளையானுக்கு ஆலோசனை கூறினார்கள். ஆனால் அதற்கு அவர் இணங்கவில்லை. யார் திறப்பது என்பது தனக்கு முக்கியமில்லை என்றும்  அனைத்து வேலைகளும் முடிவுறுகின்ற அன்றே அது திறக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினார். 

நூல்கள் சேகரிப்பு 

************

இவ்வேளையில் அரங்கம்  அக்கட்டுரைகள் ‘மட்டக்களப்பில்  பொலிவு பெறும் பொதுசன நூலகம்’என்னும் பெயரில் நூலுருப் பெற்றபோது தோழர் மணிசேகரன் தலைமையிலான சந்திரோதயம் கலை இலக்கியப்  பெருமன்றத்தினர் அந்நூலை மட்டக்களப்பில்  வெளியிட்டனர். அந்நிகழ்வில் கலந்துகொண்ட செல்வராஜா அவர்களுக்கு மதிப்பளித்து கெளரவித்து இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையான் அவர்கள் அவ்விழாவினை  சிறப்பித்து மகிழ்ந்தார். அவ்விழாவில் உரையாற்றிய மூத்த பேராசிரியர் மெளனகுரு அவர்கள்  தனது வாழ்நாள் சேகரங்களான அனைத்து நூல்களை யும் இந்நூலகத்துக்கு நன்கொடையளிக்க முன்வந்து அதனை மேடையிலேயே அறிவித்தார். அன்றிலிருந்து நூல் சேகரிப்புகள் தொடர்பில்  பிள்ளையான் ஆர்வம் காட்டினார். நூலக குழு ஒன்றை நியமித்து அதற்கு பொறுப்பாளராக எழுத்தாளர் பவளகாந்தன் அவர்களை நியமித்தார். அக்குழு ஊடாக  ‘புத்தக திருவிழா’ ஒன்றை நடாத்தி உள்ளூரில் உள்ள நூல் கொடையாளர்களிடமிருந்து நூல்கள் சேகரிக்கப்பட்டன. 

அத்தோடு நூலக விருத்தி பற்றிய செல்வராஜா அவர்களின் பலவித ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டதோடு அவரின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து நூல் கொடைகளைப் பெற்றுக்கொள்ளும் வழிவகைகளையிட்டு கலந்துரையாடினார். அதனிமித்தம்  செல்வராஜா அவர்கள் லண்டனில் இருந்து செயற்படும் ‘அப்ரோட்’ என்னும் தன்னார்வ அமைப்பு ஊடாக நூல்களை பெற்றுக்கொடுக்க முன்வந்தார். அவரது உளச்சுத்தியான பெருமுயற்சி காரணமாக சுமார் எண்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஆங்கில நூல்கள் பல்வேறு கட்டங்களாக லண்டனிலிருந்து வந்திறங்கின. எண்பதாயிரம் நூல்களென்பது அசாதாரணமானது. இவற்றை துறைமுகத்திலிருந்து விடுவிப்பதற்கு மட்டக்களப்புக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குமான அனைத்து செலவுகளையும் பிள்ளையான் தனிப்பட்ட முறையிலேயே பொறுப்பெடுத்தார். யாழ்ப்பாணம் நெல்லியடி நூலகமொன்றில் உள்ள பல் நூல்களின் மேலதிக பிரதிகள் விற்பனைக்கு உள்ளதாக அறிந்து அந்த நூல் தொகுதிகளை தனது சொந்த பணத்தினைச் செலவுசெய்து  யாழ்ப்பாணத்துக்கு நூலகக் குழுவினரை அனுப்பி அவற்றை கொள்வனவு செய்து கொண்டு வந்தார் பிள்ளையான்.

இவ்வாறாக கட்டடத்தைக் கட்டியதோடன்றி சுமார் ஒரு லட்ஷம் நூல்களை அவர் சேகரித்து முடித்தார். தளபாடங்கள் அனைத்தையும் கொண்டு குவித்தார். தனது சொந்த மாளிகையொன்றை கட்டுவது போன்று நாளும் பொழுதும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு அதனை மென்மேலும் அழகுறச் செய்து செதுக்கி மகிழ்ந்தார். 

அகற்றப்பட்ட அத்திவாரக்கல்

***************************

பிருத்தானியர் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தில் ஆளுநராக இருந்த 1890ஆம் ஆண்டு கன்னிமரா பிரபு ஒரு நூலகத்துக்கு அத்திவாரமிட்டு ஆரம்பித்து வைத்தார்.நூலகம் முடியும் வேளையில் 1896ஆம் ஆண்டு அவர் அரச பதவியில் இருக்கவில்லை. ஆனாலும் அவரது சேவையை மதித்து அந்நூலகத்துக்கு கன்னிமரா நூலகம் என்னும் பெயரிடப்பட்டு இன்றுவரை அழைக்கப்படுகின்றது. மட்டக்களப்பு தமிழகத்தின் வடக்கு தெற்கு எல்லைகளை இணைக்கும் கல்லடியில் அமைந்துள்ள பாலத்தை 1924ஆம் ஆண்டு கட்டிய பிருத்தானியர்கள் அவ்வேளை தேசாதிபதியாக இருந்த மனிங் பிரபுவின் மனைவியின் நினைவாக அப்பாலத்துக்கு லேடி மானிங் பாலம் எனப் பெயரிட்டனர். மட்டக்களப்பு முத்தவெளியை சுத்தம்செய்து அதனை பெரும் விளையாட்டு மைதானமாக மாற்றி இளைஞர்களுக்கு வழிகாட்டியாய் வாழ்ந்து மட்டக்களப்பிலே மடிந்து போன அமெரிக்க பாதிரியார் வெபர் நினைவாக அதனை நாம் வெபர் ஸ்டேடியம் என்று அழைக்கவில்லையா? யாழ்ப்பாண மைதானத்துக்கு அதற்கு வழிசமைத்த அல்பிரட் துரையப்பாவின் பெயரை அம்மைதானத்துக்கு சூட்டவில்லையா? இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஏன் பிள்ளையானின் பெயரை அந்நூலகத்துக்கு சுட்டிடமுடியாது. அத்தகையதோரு இங்கிதத்தையும் பெருந்தன்மையையும் தமிழரசுக் கட்சியினருக்கு உங்கள் தந்தை செல்வா என்பவர் கற்பிக்கவில்லையா?

தற்போது வேலைகள் ஏறக்குறைய முடிவடையும் தறுவாயில் பிள்ளையான் மீண்டும் சிறையிலிடப்பட்டுள்ளார். அவர் வெளியே வந்துவிட முன்னர் தமிழரசுக் கட்சியின் கீழ் இயங்கும் மட்/மாநகரசபை அதனைப் பொறுப்பெடுத்து முடிந்தும் முடியாததுமாக திறப்பு விழா செய்கின்றது. அது நல்ல விடயம் ஆனால்! ஆனால்! குறைந்தது அழைப்பிதழ்களிலாவது ஒரு கெளரவ விருந்தினராக இந்நூலகத்தில் நிறுவனர் பிள்ளையானின் பெயரை ஏன் அச்சிட முடியவில்லை? அந்த குறைந்த பட்ஷ நேர்மை கூட உங்களுக்கில்லையா?

பிள்ளையான் சிறையியிலிருக்கும் போதும் அண்மைக்காலங்களில் மட்டக்களப்பில் இடம்பெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு கெளரவ விருந்தினராக பிள்ளையானை அழைத்து நன்றி செலுத்தும் அந்த இளைஞர்களுக்கு இருக்கும் புத்தி கூட மட்/மேயர் சிவம் பாக்கியநாதன் அவர்களுக்கு இல்லாமல் போய் விட்டதா?

அனைத்துக்கும் மேலாக மிகக் கேவலமான வேலையொன்று அங்கே நடந்தேறியுள்ளது.நாளை திறப்பு விழா காணும் மட்/பொது நூலக புதிய கட்டட தொகுதிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த கெளரவ. சந்திரகாந்தன் (பிள்ளையான்) 23/12/2010ஆண்டு அவர்கள் நாட்டிய அத்திவார நினைவுக்கல் பிடிங்கியெறியப்பட்டுள்ள கேவலம் நிகழ்ந்துள்ளது

‘சாக்கனாய் வெறும் சவமாய் இன்று போக்கணம் கெட்டுப்போன’ தமிழரசுக் கட்சியினரும் மாநகர மேயரும் வரலாற்றை மறைத்து, தமக்கு வாய்ப்பாகத் திரித்து பிள்ளையானின் நூலகத்துக்கு உரிமைகொண்டாடும் இந்தக் கூத்துகளைப்பார்க்கும் பொழுது ‘வந்தாரை வாழவைத்து மண்ணில் பிறந்தாரைச் சாகடிக்கும் சிங்காரமான மட்டக்களப்புச் சீமையான் வேறென்ன சிரைப்பான்.’ என்னும் வீ.ஆனந்தனின் புகழ்பெற்ற வரிகள் ஞாபகம் வந்து தொலைக்கின்றன.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் பிள்ளையானின் பெயர்ப் பலகைகளை நீங்கள் தூக்கி வீசலாம், அத்திவாரக்கல்லை அகற்றி மகிழலாம், இந்நூலகத்தில் உண்மை வரலாற்றை திரித்து, தமிழரசுக் கட்சிக்கு வாய்ப்பாக பல்வேறு பொய் பரப்புரைகளை மேற்கொள்ளலாம். ஆனால் மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வீதியால் செல்லுகின்ற ஒரு சாமானியனை தடுத்து நிறுத்தி இது என்ன என்று கேளுங்கள். அவன் நிச்சயம் சொல்லுவான் இது ‘பிள்ளையானின் நூலகம்’ என்று. ஆம் வரலாற்றின் உண்மையான பக்கங்களை மக்களின் மனதிலிருந்து யாராலும் நீக்கி விட முடியாது. இந்த நூலகத்தின் ஒவ்வொரு கல்லிலும் உங்கள் காதுகளை வைத்து கேளுங்கள் அவை ஒவ்வொன்றும் பிள்ளையான், பிள்ளையான் என்றே ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த ஒலிகள் காலமெல்லாம் மட்டக்களப்புத் தமிழகத்தின் காற்றிலும் மண்ணிலும் கடலிலும் நீக்கமற நிறைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *