— கருணாகரன் —
இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான பேச்சுகளைக் குறித்து, அந்தப் பேச்சுவார்த்தைகளில் அரசு சார்பாகப் பங்கேற்றவரான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ‘The Sri Lanka Peace Process: An Inside View’ (இலங்கை சமாதான செயல்முறை: ஒரு உள் பார்வை) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார்.
அந்த நூலில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பலம், பலவீனங்கள், இறுதியில் அவை தோல்வியடைவதற்கான காரணிகளையெல்லாம் பதிவு செய்திருந்தார். கூடவே போரின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் ஓரளவுக்குக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக பெண்களின் பாதிப்புகளைப்பற்றி.
இதைத் தவிர, இன்னொரு விடயமும் இந்த நூலில் உண்டு. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கென சந்திரிகாகுமாரதுங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்வுப்பொதியைப் பற்றியும் இது கூறுகிறது. கலாநிதி நீலன் திருச்செல்வமும் பேராசிரியர் பீரிஸூம் இணைந்து உருவாக்கிய அரசியல் தீர்வு யோசனைகள் அவை.
ஆகவே இந்த நூல் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அதற்கான உரையாடல்களையும் செய்ய விரும்புவோருக்கு எப்போதும் அவசியமானது. மட்டுமல்ல, கடந்த வாய்ப்புகள், அதனைப்பயன்படுத்திக் கொள்வதில் இருதரப்பிலும் ஏற்பட்ட தயக்கங்கள், சறுக்கல்கள், தவறுகள், படிப்பினைகள் எனப் பலதையும் படித்துக் கொள்ள முடியும்.
ஆனால், இவையல்ல இப்போதுநாம் கவனப்படுத்த விரும்புவது. அண்மைய நாட்களாக இந்த நூலில் பேசப்படாத சில விடயங்களைப் பீரிஸ் பேசி வருகிறார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவுரையாற்றும்போது புலிகளுடைய அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துக்கும் தனக்கும் இடையில் நடந்த உரையாடலைப் பற்றியும் அதிலிருந்து தான் மதிப்பிட்டுக்கொண்ட விடயங்களைப்பற்றியும் பீரிஸ் பேசியிருந்தார். குறிப்பாக பாலசிங்கத்தின் கவலைகளைப் பற்றி.
அதாவது ‘யதார்த்த நிலையைப்பற்றி விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரன் புரிந்துகொள்ளத் தவறினார். தன்னால் முடிந்த அளவுக்கு அதைப் பற்றி விளக்கியபோதும் பிரபாகரனால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது அதை அவர் விரும்பவில்லை’ என்ற பொருள்பட பாலசிங்கம் தன்னுடைய கவலைகளைப் பகிர்ந்து கொண்டார் என்கிறார் பீரிஸ். இதில் மறைமுகமாகப் புலிகளை (பிரபாகரனை) குற்றம் சாட்டும் தொனி உள்ளது.
அதில் உண்மை இருக்கலாம். ஏனென்றால், பிரபாகரனின் தீர்மானம் தமிழீழம்தான். அதற்கிடையிலான எந்தத்தீர்வைப் பற்றியும் எத்தகைய ஏற்பாடுகளைப் பற்றியும் அவர் சிந்திக்கத் தயாராக இருக்கவில்லை. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை மட்டுமல்ல, இதை அவரே பல சந்தர்ப்பங்களிலும் சொல்லியும் வந்திருக்கிறார்.
இடையில் வந்த – வருகின்ற பேச்சுவார்த்தைகளை அவர் தன்னுடைய தமிழீழ இலக்கு நோக்கிய பயணத்துக்கான வாய்ப்பாகவும் நியாயப்பாடாகவும் கொண்டிருந்தார். ‘நாம் பேச்சுவார்த்தைக்கும் சமாதானத்துக்கும் மறுதலிப்பாளர்களில்லை. ஆனால், சமாதானத்தை எட்டுவதற்கும் தீர்வை முன்வைப்பதற்கும் தென்னிலங்கைச் சிங்கள அதிகார வர்க்கம் தயாரில்லை. அதனால் தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளது’ என நிரூபித்துக் கொள்வதற்காக. அதன் மூலமாக தன்னுடைய தமிழீழ நிலைப்பாட்டுக்கான நியாயத்தை வெளியுலகம் புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்பதற்காக.
பாலசிங்கத்தின் அனுபவத்தைப்போன்ற நிலை அல்லது அதே சூழல் பீரிஸ் பிரதிநிதித்துவம் செய்த அரசாங்கத் தரப்பிலும் இருந்ததுதானே. அதாவது, பீரிஸ் உணர்ந்த யதார்த்தத்தையும் அவர் அறிந்த அரசியல் உண்மைகளையும் நியாயத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய – புரிய வைக்கக் கூடிய சூழல் சிங்களத் தரப்பிலும் அரசாங்கத்திலும் இருந்ததா? அங்கே பீரிஸ் என்ற அறிவாளியின், நியாயவாதியின் சிந்தனைகளுக்கும் கருத்துகளுக்கும் இருந்த வரவேற்பு என்ன? வழங்கப்பட்ட மதிப்பு என்ன? அதைக்குறித்த பீரிஸின் கவலைகள் – நிலைப்பாடு எத்தகையது?
அவற்றையெல்லாம் ஏன் பீரிஸ் பேசவில்லை? அல்லது பேச விரும்புவதில்லை? ஆகவேதான் சொல்கிறோம், அவர் சொல்கின்ற பாதி உண்மைகள் அளவுக்கு பீரிஸ் பேசாமல் விட்ட அல்லது பேச விரும்பாத அல்லது பேசத்தயங்குகின்ற இன்னொரு பக்கம் அவரிடம் உண்டு என. அதை அவர் பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் பீரிஸின் உரைகளுக்கும் உண்மைகளுக்கும் மதிப்பு உண்டாகும். அதுதான் அறிவாளித்தனத்துக்கான நேர்மையாகும். அதைச் சொல்லவில்லை என்றால், ஏற்கனவே சொன்னதைப்போல பீரிஸின் வார்த்தைகளுக்கான மதிப்பை வரலாறு அளிக்காது.
பாதி உண்மைகள் எப்போதும் கேள்விகளையும் சந்தேகங்களையுமே உருவாக்கும். கேள்விகளும் சந்தேகங்களும் அந்தப் பாதி உண்மைகளையே சந்தேகிக்கவைக்கும். மட்டுமல்ல, பாதி உண்மைகளைப் பேசுவோரையும் புறந்தள்ளி விடும். என்பதால், மீதி உண்மைகளைப் பீரிஸ் பேசுவது அவசியமாகும்.
ஒரு அறிவுஜீவி என்ற வகையில் பேராசிரியர் பீரிஸூக்கு இந்தப்பொறுப்புண்டு. அதை அவர் புறக்கணிக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் (பிரபாகரனின்) பிடிவாதத்தை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு, சிங்கள அரசு மற்றும் சிங்கள சமூகத்தின் இனவாத / ஆதிக்க உளநிலை குறித்து பேசத் தவறுவது சமாதானப் பேச்சுகளில் இருந்த இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துவதோடு, தமக்கு வாய்ப்பான உண்மைகளோடு பயணிப்பதற்கான ஆதிக்க முயற்சியாகும். இந்த ஆதிக்க முயற்சியின் விளைவாக இலங்கைச் சமூகங்கள் அடைந்த துயரமும் இலங்கை என்ற நாடு சந்தித்திருக்கும் பின்னடைவுகளும் சாதாரணமானதல்ல. இலங்கையின் சமாதானச் செயல்முறையின் தோல்விகளை ஆராயும்போது, ஒரு தரப்பின் குறைகளை மட்டும் கூறிவிட்டு மறுதரப்பின் குறைகளை மறைப்பது மேலும் இடைவெளிகளையும் பிரச்சினைகளையுமே அதிகரிக்கும்.
ஆகவே கடந்த காலச் செயற்பாடுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் இலங்கைச் சமூகங்களுக்கு அவசியமானது. தமிழ்ச் சமூகத்துக்கு மட்டும் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ற அடிப்படையில் வகுப்பெடுக்க முடியாது. அது பீரிஸூக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் உரியதுதான். அதை அந்தச் சமூகமும் அறிந்தால்தான் பொருத்தமான – சரியான புதிய பயணத்தைத் தொடர முடியும்.
சரி, பீரிஸ் பேச வேண்டிய அல்லது அவர் மறைக்கின்ற – தயங்குகின்ற அந்த மீதி உண்மைகள் என்னவாக இருக்கும்?
அது அவர் சார்ந்திருந்த அரசாங்கத்தோடும் அவர் சார்ந்த சிங்களச் சமூகத்தோடும் சம்மந்தப்பட்டதாகும். இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்ட வேண்டும் என்றால், இனவாத நோக்குக்கு அப்பாலான – ஜனநாயகச் செழுமையும் சமத்துவ அடிப்படையும் கொண்ட ஒரு அரசியலமைப்பும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய உளமாற்றமும் சிங்களத் தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் இருக்க வேண்டும். ஆனால் இந்த உண்மையை நோக்கி, இந்த யதார்த்தத்தை நோக்கிச் சிங்களச் சமூகத்தையும் அரசாங்கத்தையும் அவரால் திருப்ப முடியவில்லை என்ற உண்மையும் கவலையும் அவரிடம் இருந்திருக்கும். ஒரு புலமையாளர் என்ற வகையில் நிச்சயமாக அவரிடம் இந்தக் கவலை இருந்திருக்கும்.
இதைத் துணிந்து பீரிஸ் சொல்வாராக இருந்தால், அவருக்கு வரலாற்றில் பெரும் மதிப்புக் கிடைக்கும். அப்படிச் சொல்லும்போது பேச்சுவார்த்தையின்போது அரசாங்கத்தரப்பில் உயர்நிலையில் இருந்தவர்களும் படைத்தளபதிகளும் எத்தகைய உளநிலையோடு இருந்தனர்? எதிர்க்கட்சிகள், பௌத்தபீடங்கள், சிங்கள அறிவுஜீவிகள் ஏனைய தரப்பினர் எவ்வாறான உளநிலையோடு இருந்தனர்? என்ற உண்மையின் இன்னொரு பக்கம் திறக்கப்படும்.
பேச்சுகள் முறிவடையும் தறுவாயிலும் யுத்தம் முடிந்தபிறகும் கூட சிங்களச்சமூகத்தின் பொது உள நிலை எப்படி இருந்தது; இருக்கிறது? அது தன்னுடைய சரி, பிழைகளை மதிப்பீடு செய்கிறதா? அவ்வாறு மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்பதையாவது அது புரிந்து கொள்ளுள்ளதா? இல்லையெனில், அதனுடைய ஆதிக்க உளநிலையின் அடிப்படை என்ன? அதையெல்லாம் பீரிஸ் எவ்வாறு பார்க்கிறார்?
சிங்கள அரசியற் கட்சிகளும் சிங்களத் தலைவர்களும் சிங்களமக்களுக்கு சொல்லும் – உணர்த்தும் – உண்மைகள், யதார்த்த நிலைகள் என்னவாக உள்ளது? தமிழ் பேசும் மக்களையும் அவர்களுடைய விவகாரங்களையும் பீரிஸ் என்ற அறிவுஜீவி, அரசியல் தலைவர் எப்படிப் பார்க்கிறார்? எனப் பகிரங்கப்படுத்த வேண்டும். கூடவே தானொரு அறிவுஜீவி என்ற அடிப்படையிலும் நேர்மையான ஒரு குடிமகனாகவும் இலங்கையின் மீட்சிக்கு எவ்வாறான அரசியல் செயல்முறை பொருத்தமானது? அதை உருவாக்குவதற்கு தன்னுடைய பங்களிப்பு என்ன? என்பதையும் முன்வைத்து உரையாடுவது அவசியமானது.
இல்லையெனில் அன்ரன் பாலசிங்கத்தைப்போல உட்குமுறல்களுடன்தான் பீரிஸின் காலமும் முடிந்து விடக் கூடும். அந்தக் கதைகளை (பீரிஸின் கவலைகளை) பீரிஸைப்போல அவருடைய நண்களில் யாரேனும் ஒருநாள் சொல்லக் கூடும். இரண்டு தரப்பைச் சேர்ந்த புத்திஜீவிகளும் நியாயமாகவும் யதார்த்தமாகவும் சிந்தித்திருக்கிறார்கள் என்று அறியும்போது, இலங்கை அரசியலானது அறிவுசார் புரிதலுக்கும் அணுகுமுறைக்கும் யதார்த்தத்துக்கும் வெளியே பயணித்துக் கொண்டிருக்கிறது. அதனுடைய விளைவே அந்தப் பயணத்தில் கண்ணீரின் சுவடுகளும் இரத்தத் தடங்களும்.
இவற்றைப் பற்றி அறிவதற்காக தென்னிலங்கையில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவர் பீரிஸூடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, சிரித்தாராம் பீரிஸ். அந்தச் சிரிப்புத்தான் அவருடையபதிலா?
