— அழகு குணசீலன் —
டி.பி.எஸ். ஜெயராஜ்.!
இலங்கையில் மட்டும் அன்றி, பிராந்திய, சர்வதேச ஊடகப்பரப்பிலும் நன்கு அறியப்பட்ட ஊடக ஆளுமை.
அவர் இன்று எம்மத்தியில் இல்லை.
கொழும்பு ஒரு பத்திரிகையின் ஆசிரியரின் பதவிநீக்கம் சரியா, தவறா என்றும், அதற்கான பதிலீடு சரியா, தவறா என்றும் விவாதித்துக்கொண்டிருக்கும்போது ….,
ஒரு மூத்த பத்திரிகையாளர் தான் எழுதிய தன் ஊடகக் கதையை “பத்திரிகைத்துறையில் என்கதை” என்ற நூலில் தனது அனுபவங்களை பேசுகின்ற போது….
டி.பி.எஸ். எங்கள் மத்தியில் இனி இல்லை என்ற அந்த துயரச்செய்தி இலங்கை ஊடகப்பரப்பை ஆழாத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
டி.பி.எஸ். எழுதிய இறுதிப்பத்தி தனபாலசிங்கத்தின் “பத்திரிகைத்துறையில் என் கதை” பற்றியது என்று தெரியவருகிறது. இது மே.17 இல் பிரசுரமாகி இருக்கிறது.
சிலவேளைகளில் அவரின் மேலும் எழுத்துக்கள் ஏதாவது ஒரு மேசையில் / கணனியில் அச்சுக்காக காத்திருக்க வாய்ப்புண்டு. ஓயாது உழைத்த அவரின் சுறுசுறுப்பு இந்த நம்பிக்கைக்கு காரணம்.
தமிழ், ஆங்கில மொழிகளில் சரளமாகவும், தனித்துவமான மொழிவளத்தோடும் எழுதக்கூடிய பத்திரிகையாளர்கள் எம் மத்தியில் குறைவு. அந்த வளம் டி.பி.எஸ். ஜெயராஜ்ஜிடம் குவிந்து கிடந்தது.
டி.பி.எஸ். செய்திகளை, தகவல்களை கட்டுரையாக்கும் விதம் அவருக்கே உரிய தனித்துவம். தகவல்களை துல்லியமாக, விபரமாக சேகரித்து , அக்குவேறு, ஆணிவேறாக அலசி ஆராய்ந்து வாசகர்களை பிரமிப்பு ஊட்டும் பாணி அவருக்குரியது. அவரது ஒவ்வொரு பத்தியிலும் இந்த அடையாளம் தெரியும்.
அவர் தரும் தகவல்கள் துல்லியமாக சரிபார்க்கப்பட்டவை. ஊகங்கள் குறைவு. எதிர்வு கூறல்கள் நம்பகத்தன்மை கொண்டவை.
வீரகேசரியின் பத்திரிகையாளராக 1977 பாராளுமன்ற தேர்தல் காலத்தில் கொழும்பு அலுவலகத்தில் இருந்து மட்டக்களப்புக்கான விசேட செய்தியாளராக வருகிறார் டி.பி.எஸ்.
அன்றைய மட்டக்களப்பு தேர்தல் களத்தில் ஒரே கட்சிக்குள் உதய சூரியன், வீடு சின்னங்களுக்கான போட்டியில், அன்றைய மட்டக்களப்பு மூத்த ஊடகவியலாளர் வி.சி.கதிர்காமத்தம்பியின் “நடுநிலை” குறித்து வீரகேசரி காரியாலயத்தில் செய்யப்பட்ட ஒரு தரப்பு முறைப்பாட்டை அடுத்து நடுநிலை ஊடகவியலாளராக டி.பி.எஸ். மட்டக்களப்பு வந்தார்.
அப்போது இலங்கையின் தமிழ்ச் செய்திப்பத்திரிகை பரப்பை மூன்று கொழும்பு பத்திரிகைகள் ஆக்கிரமித்து இருந்த காலம். வீரகேசரி, தினபதி, தினகரன். இவை மூன்றும் மூன்று கோணங்கள், முக்கோணங்கள்.
மட்டக்களப்பின் விசேட செய்தியாளராக வந்த டி.பி.எஸ். அன்றைய தினபதி/சிந்தாமணி பத்திரிகைகளின் மட்டக்களப்பு செய்தியாளராக இருந்த ஜோசப்பரராசசிங்கத்தின் (சுகுணம் ஜோசப்) வீட்டில் தங்கியிருந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார்.
டி.பி.எஸ். இன் நடுநிலை நிலைநாட்டப்பட்டது.
டி.பி.எஸ். எந்த அழுத்தங்களுக்கும் விலைபோகாத, துணிச்சலான பத்திரிகையாளர். இதை அவர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் எப்போதும் உறுதியாக கடைப்பிடித்து இருக்கிறார். இந்த குணாம்சம் பல பத்திரிகைகளில் அவருக்கு பத்தி எழுத்தாளராக மிளிர வாய்ப்பளித்தது.
இந்திய புரண்ட்லைன், வீரகேசரி, டெய்லி மிரர், ஹிந்து தி ஐலண்ட் பத்திரிகைகளில் டி.பி.எஸ். மிகவும் சிக்கலான அரசியல் விவகாரங்களை கையில் எடுத்து எழுதினார்.
இதனால் 1987 இல் இந்திய இராணுவத்தின் இலங்கை பிரவேசம் தொடர்பான ஒரு பத்தியால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் கைது செய்யப்பட்டார்.
விடுதலையான பின்னர் கனடாவுக்கு புலம் பெயர்ந்தார். என்றாலும் அவரது துணிச்சல் எள்ளளவும் குறையவில்லை.
கனடாவில் “செந்தாமரை” என்ற பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். அதில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புலம்பெயர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஜனநாயக,மனித உரிமை, கருத்துச் சுதந்திர, மாற்றுக்கருத்து மறுப்புக்களை மிகக்கடுமையாக விமர்சனம் செய்து எழுதினார்.
புலிகள் தங்கள் பாணியில் கொலை அச்சுறுத்தல் வரை டி.பி.எஸ்.க்கு விடுத்தார்கள். செந்தாமரைக்கு தடைவிதித்தார்கள். வன்முறையை கைக்கொண்டார்கள். இவை அனைத்தையும் கனடாவின் ஜனநாயக சட்ட உரிமைகளையும், தனது ஆளுமையையும் கொண்டு டி.பி.எஸ். எதிர்கொண்டார்.
புகலிடத்தில் புலிகளின் அச்சுறுத்தல் அலையில் அள்ளுப்படாமல், எதிர்த்து நின்ற ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் மிகமிகக் குறைவு.
கூட்டிக் கழித்தால் டி.பி.எஸ். போன்றவர்களின் விமர்சனங்கள், எதிர்வு கூறல்கள் தான் இறுதியில் பலித்தன.
இவை அதிகாரத்திற்கும், அடக்குமுறைக்கும், அக்கிரமங்களுக்கும் ஒத்து ஓடாமல் செயற்படவேண்டிய ஆர்வத்தை, துணிச்சலை ஐரோப்பிய புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்கும், அமைப்புக்களுக்கும் வழங்கின..
அண்மைக்காலமாக இலங்கை அரசியலின் வங்குரோத்து தனம் என்னவென்றால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை சந்திக்கிழுப்பது. தமிழரசுக்கட்சியின் செயலாளர் சுமந்திரன் டி.பி.எஸ். இன் மைத்துனர் என்பதற்காக அவர் மீதும் சேறுபூசப்படுகிறது. இவை எல்லாவற்றையும் தனது ஊடக ஆளுமையினால் டி.பி.எஸ். கடந்து, தன் கடமையை செய்து முடித்திருக்கிறார்.
இலங்கையிலும், புலம்பெயர்ந்த தேசத்திலும் நிலவிய மிகவும் இக்கட்டான -போர்க்கால அரசியல் சூழலில் தனது பணியை – ஒரு ஊடகவியலாளனாக எதை செய்யவேண்டுமோ அதை செய்திருக்கிறார்.
சிங்கள, பௌத்த பேரினவாதத்திற்கு எதிராகவும், தமிழ்க் குறுந்தேசிய வாதத்திற்கு எதிராகவும் இறுதிவரை பேனாவை கையில் எடுத்து போராடிய ஊடகப்போராளி டி.பி.எஸ்.
டி.பி.எஸ்.இன் இழப்பு இலங்கை ஊடகத்துறைக்கு பேரிழப்பு. இதை ஈடு செய்ய முடியாதது என்று வழமையான வார்த்தைகளை கொட்டித்தீர்க்கவில்லை.
டி.பி.எஸ். இலங்கை ஊடகத்துறையில் விட்டுச்சென்றுள்ள இடைவெளி இப்போதைக்கு -குறிப்பிட்ட காலத்திற்கு நிரப்பப்படாத இடைவெளியாகவே இருக்கப்போகிறது.
டி.பி.எஸ். வாழ்ந்த காலத்தில் இடைவெளி இல்லாமல் இருந்தபோதும் இலங்கை ஊடகங்கள் அவரைப்பேசின.
அவர் இல்லாததால் ஏற்பட்டுள்ள இடைவெளியிலும் ஊடகங்கள் அவரை நினைத்து பேச வேண்டியிருக்கும்.
இதயம் நிறைந்த அஞ்சலிகள்…!
மதங்கள் பேசுகின்ற மறு பிறப்பு உண்மையானால் ஜெயராஜ் நீ மீண்டும் பிறப்பாய்.
இது ஆற்றாமையின் வெறும் மானிட நம்பிக்கை மட்டுமே!
