ஈழத்து தமிழ்  இதழியல்  மரபில்  தனபாலசிங்கம் 

ஈழத்து தமிழ்  இதழியல்  மரபில்  தனபாலசிங்கம் 

தெட்சணாமூர்த்தி மதுசூதனன்

ஈழத்து தமிழ் இதழியல் மரபில் பல்வேறு இதழாசிரியர்கள் தொழிற்பட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில் இணக்கமும் வித்தியாசங்களும் தனித்துவமும் உண்டு. ஆனால், இவர்கள் தத்தமது அறிவுத் திறன்கள், ஆளுமைப் பண்புகள் மூலம் இதழியல் வளர்ச்சிக்கும் வரலாற்றுக்கும் பன்மைப் பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளனர். இந்த இதழியல் மரபுத் தொடர்ச்சியில் வருபவர் தான் வீரகத்தி தனபாலசிங்கம்.

இவர் வீரகேசரி, தினக்குரல் நாளிதழ்கள் மூலம் தனது இதழியல் பணியை ஆரம்பித்தார். பின்னர் தினக்குரலின் முதன்மை ஆசிரியராகவும் பணி புரிந்து ஓய்வுபெற்றார். மேலும் இரு மொழிப்புலமை இவருடைய. ஆளுமைக் கூறாக வெளிப்பட்டிருந்தது. இதனால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு பல்வேறு கோணங்களிலான அரசியல் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து இதழியலுக்கு வளம் சேர்த்து வந்திருக்கிறார்.

 இவர் தமிழ் இதழியல் மரபில் புதுமை வேட்கையும் புத்தாக்கத் தேடலும் அறிவை இற்றைப்படுத்தலும் இணைந்த பண்புகளுடன் இயங்குபவர்.  

இதனால் வீரகேசரி நிறுவனம் ஆரம்பித்த ‘சமகாலம்’ எனும் சமூக அரசியல்  பருவ இதழைப் பொறுப்பெடுத்து வெற்றிகரமாக நடத்தி வந்தார்.  இந்த ‘சமகாலம்’ இதழ் போன்று  ஈழத்து தமிழ்  இதழியல் வரலாற்றில் இதற்கு முன்னரும் பின்னரும் இதழியல்  மரபு தோற்றம் பெறவில்லை. இந்த இதழ்  மூலம்  தனபாலசிங்கம் இதழியல் கல்வி மரபுக்கு புதுவளம் சேர்த்தவராகின்றார்.

இன்று இதழியல் சமகால சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டின் ஒன்றிணைந்த பகுதியாகவும்  மாற்றம் கண்டுவருகிறது. தற்காலத்தில்  செய்தியோடு இணையாத மனிதர்கள்  காலாவதியாகிவிடுகின்றனர்.   தனபாலசிங்கம் சர்வதேச அரசியல்  நிலைவரங்கள், பிராந்திய அரசியல் ஓட்டங்கள் மற்றும் இலங்கை மட்டத்திலான பன்மை அரசியல் சூழல் யாவற்றையும் கருத்து நிலைத் தளத்தில் நின்று ஆராயும் பக்குவமும் முதிர்ச்சியும் வெளிப்படும் வகையில் நிதானமாக இயங்கும் அறிவாளுமை கொண்டவர். 

குறிப்பாக, தமிழ்பேசும் மக்களில் தமிழ்த் தரப்பின் அரசியல் விடுதலை அரசியல் முனைப்பின் விசாரணையாகவும் விமர்சனமாகவும் மேலெழுச்சிபெறும் வகையில் ஆற்றுப்படுத்தும் அரசியல் அறத்தை அவர் வளர்த்துவந்துள்ளார். இந்த போக்கு இனனறைய  காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.

 சமூகநீதி, சமூக ஜனநாயகம், சமூக சமத்துவம் உள்ளிட்ட மானிட  விழுமியங்களது  சிந்தனைகளின் விடுதலைப் பண்பாட்டு விரிதளத்தையும்  ஆழப்படுத்தி வளர்ப்பதில் முழுமையாகப் பங்கெடுத்து வருகிறார்.  

இலங்கையில் உருவான பொதுவுடைமை இயக்கப் பண்பாட்டின் வழிவந்த தோழர் நாகலிங்கம் சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியில் தமது  இளவயது மாணவப் பருவத்திலிருந்தே ஆர்வமும் நாட்டமும் கொண்டு அந்த கட்சி அரசியலுடன் தனபாலசிங்கம் இணைந்து பங்கெடுத்து வந்தவர். மார்க்சியக் கருத்துநிலை வழிநின்று அவர் தமக்கான கல்வியையும் சமூகப் பார்வையையும் மேலும்  வளர்த்துக் கொண்டார். தொடர்ந்து தன்னை அவர் என்றும் கற்கும் மாணவராக உணர்கிறார். இதுவே தனபாலசிங்கத்தின் தளமாகவும் விளங்குகிறது. 

இலங்கையில் நிலவும் முதன்மைப் பிரச்சினை தேசிய இனப்பிரச்சினை தான்  என்பதில் அவர்  அக்கறையும் தெளிவும் கொண்டவர். தேசிய இனப்பிரச்சினையை அறிவார்ந்த தளத்தில் அணுகுவதற்கான கோட்பாட்டாக்க மரபுகளின் நீட்சியிலும் பற்றுறுதி கொண்டவர். 

எதனையும் மக்கள் நலன்சார்ந்து குறிப்பாக, ஒடுக்கப்பட்ட நலன்சார்ந்து சமூகநீதி வேண்டிப் போராடும் மக்கள் பக்கமாக நின்று கருத்துரைக்கும் சார்பு நிலையை அவர் பற்றிப் பிடித்துக் கொண்டார். இதனை தமக்கான சமூக வரலாற்று அரசியல் பங்களிப்பாகவும் உணர்ந்து செயலாற்றுகிறார். இந்த நிலைமையை விளங்கிக் கொள்ளக்கூடிய பக்குவம் இல்லாத இளம் தலைமுறையினரில் சிலர் இவருடன் முரண்படும் சூழலும் காணப்படுகிறது. இங்கே பரபரப்புக் காட்டும் இதழியல் மரபுக்கு முரணாக இயங்கும் மாற்று இதழியல் பண்பாட்டு களமும் இருக்கிறது. இதனையும் ஒத்துக்கொள்ளவே வேண்டும். 

தனபாலசிங்கம் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் பலர்  கட்சி சார்ந்த கொள்கை பரப்பும் இதழ்களில் இணைந்து பணியாற்றவில்லை என்ற  புரிதல் முக்கியமானது. அவர்கள்  பொதுவெளியில் 

வெகுசன இதழ்கள் மூலம் தமக்குள்ள மட்டுப்பாடுகள், சுதந்திரம், துணிச்சல், நிதானம். முதலானவற்றுக்கும் ஆட்பட்டு தமக்கான இயங்குவெளியை உருவாக்கிக் கொள்கின்றனர்.

இனப்பிரச்சினை தீவிரமடைந்து ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டமாக மாறத் தொடங்கிய காலப் பகுதியில் இருந்து அரசினால் கொண்டு வரப்பட்ட கொடூரமான சட்டங்கள் காரணமாக  இதழியலாளர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும்  கொடுமைகளுக்கும் ஆளானார்கள். இத்தகைய இடரார்ந்த சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்த வண்ணமே ஒரு தலைமுறை இதழியலாளர்கள் செய்ற்பட்டுவந்தனர்.

போர் நெருக்கடி, அரசியல் சிக்கற்பாடுகள், மாற்றுக் கருத்தாளர்கள் மீதான அடக்குமுறை கொண்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில்  இயங்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவானது. அந்த பின்புலத்தில்   இயங்குவதற்கான பாதைகளை இந்த இதழியலாளர்கள்  தத்தமது  இருப்பு,  அடையாளம் மற்றும் அனுபவ அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் வகுத்துக் கொண்டார்கள். இவர்களில் தனபாலசிங்கம் தனது தொழில் அனுபவம் வந்தடைந்த பாதை, தம்மைச். செதுக்கியவர்கள், தான் கடைப்பிடித்த  இதழியல் அறம், ஒடுக்குமுறைக்கு எதிரான கலகத்தன்மை, சமூக அநீதிக்கு எதிரான குரல் முதலானவற்றின் தன்மைகளை வளர்த்துக் கொண்டார். இதன் மூலம் தனித்தன்மைமிகு இதழியலாளராகவும் அவர் அடையாளம் காணப்படுகிறார்.

தனபாலசிங்கம் சுயபரிசீலனைக்கும் சுயதேடலுக்கும் உரிய களங்களை அடையாளங்கண்டு தன்னிலைசார் உரையாடலுடன் கூடிய ‘பத்திரிகைத்துறையில் என்கதை ‘எனும்  ஆக்கத்தைப் படைத்துள்ளார். இது ஒரு சுயபுராணம் என்று ஒற்றைத்தன்மையாக  மறுதலித்து விடுவது சுலபம். ஆனால், அவர் இயங்கிய சமூகவெளி — இதழியல் பரப்பு  முக்கியமானது. அவரைப் போன்ற தலைமுறையினர் பெறக்கூடியதாக இருந்த  அனுபவம்,  தொழிற்தேர்ச்சி, ஆக்கப் பண்பாடு, விமர்சன நோக்கு, புத்தாக்க மரபு யாவும் இன்றைய காலத்துக்கான பாடமும் கல்வியுமாகிறது. 

தமிழ் இதழியல் மரபில் தனபாலசிங்கம் உள்ளிட்ட ஆளுமைகளின் தன்வரலாற்றுக்கு  தனியான  முக்கியத்துவமும் சிறப்பும் உண்டு. இது தமிழ் இதழியல் மரபின் தொடர்ச்சிக்கும் நீட்சிக்கு உரிய சமூக ஆவணமாகிறது. இந்த நூல் வெளியீடு  தமிழில்  இதழியலைக்  கற்கும்  மாணவர்களுக்கு இதழியல்சார்  அறப் பண்புகளை, செய்திக்குப் பின்னாலுள்ள கருத்துநிலை  அர்த்தப்படுத்தல்களை, அரசியல் கட்டுரையாக்கத்தை உய்த்துணர்வதற்கான அறிவையும் புலமையையும் கடத்துவதாக அமைகிறது.

அமெரிக்க நீதிபதி றிச்சர்ட் போஸ்னர் ‘மிகைப்படுத்தல் மற்றும் அச்சத்தைத் தூண்டிவிடுதலின் வழியேதான் ஊடகங்கள் செழித்து வளர்கின்றன’ என்று முன்னர் குறிப்பிட்டார். இந்த கூற்று  மிகைப்படுத்தப்பட்டதாக   இருக்கலாம்.  ஆனால், பெருமளவுக்கு உண்மை. தமிழ்ச் சூழலில் ஊடகச் செயற்பாடு பரபரப்பிலும்  மிகைப்படுத்தலிலும் ஒருவித அச்சத்தைத் தூண்டுவதிலும்தான் இயங்கிவருகிறது என்பதை அனுபவ வாயிலாக உணர்கிறோம்.  இந்த உண்மையை உணர மறுக்கும் இதழியலாளர்கள் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

‘பிளிட்ஸ்’  இதழின்  ஆசிரியர் ஹரன்சியாவின் அறைக்கு வெளியே ‘இங்கே பணிபுரிய உங்களுக்கு வெறிபிடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அப்படி இருப்பது உதவிகரமாக இருக்கும்’ என்ற வாசகம் தொங்கவிடப்பட்டிருக்கும். சமகாலத்தில் ஊடகத்துறையில் பணிபுரிவோருக்கு வெறிபிடித்திருப்பதே அத்தியாவசியமான தகுதியாக இருக்கும் போல் தெரிகிறது. இன்று இதழ்கள் செய்திகளை வழங்கும் விதத்தையும் மூத்த பொறுப்பில் இருந்து கொண்டு விவாதங்களை நடத்துகின்ற பாங்கையும் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஒரு இதழியலாளருக்கு பிடித்திருக்கும் வெறி உண்மையின் மீதானது என்றால் அது நல்லதே.

ஆனால், ஒரு ஊடகம் அதன் கருத்துநிலைச் சார்பிற்கும் உண்மைக்கும் இடையே முரண்பாடு எழுகின்றபோது உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். ‘ ‘விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உண்மைகள் புனிதமானவை’ என்ற ‘த கார்டியன்’ நாளிதழின். ஆசிரியர் சீ.பி. ஸ்கொட்டின் கருத்தைப் பின்பற்றும் ஊடகங்கள் எத்தனை? இந்த இடத்தில் மேற்குறிப்பிட்ட கருத்தியல் பின்புலத்திலும் சமகால இதழியலை புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல்தான் தனபாலசிங்கம் போன்ற இதழியல் ஆளுமைகளைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புக்களைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *