பிள்ளையானின் நூலகத்தை திறந்து வைக்கிறார் ஜனாதிபதி!(மூன்றாவது கண்: XXI)

பிள்ளையானின் நூலகத்தை திறந்து வைக்கிறார் ஜனாதிபதி!(மூன்றாவது கண்: XXI)

 — அழகு குணசீலன் —

இந்த தலைப்பு சிலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும். ஏற்படுத்தவேண்டும் அதற்காகவே இந்த தலைப்பு. மட்டக்களப்பின் அநாகரிக அரசியலை ஜனாதிபதியும் அறிந்து இருப்பது நல்லது. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தான் பதவியேற்ற பின்னர்  முதலாவது முறையாக மட்டக்களப்புக்கு வருகிறார். அவரின் வருகையின் போது உருப்படியாக இடம்பெற இருக்கிற ஒரே விடயம் மட்டக்களப்பு பொது நூலக திறப்புவிழா. 

மே, 20ம் திகதி, 2026 இல் நூல்நிலையத் திறப்பு விழாவுக்கு  திகதியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது சொந்த மக்களின் அறிவு வளர்ச்சிக்கு தமிழ்த்தேசிய அரசியல் போட்டுவந்த  அநாகரிக கட்சி அரசியல் தடைக்கற்கள் அனைத்தையும் ஜனாதிபதி அள்ளி அப்புறப்படுத்தி இருக்கிறார்.  என்றாலும்  இன்னும் சில தில்லுமுல்லுகளை  தமிழரசுக்கட்சி மேயர் செய்கிறார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இது மட்டக்களப்பு மக்கள் மத்தியிலும் கல்விச் சமூகத்தின் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக மாறிருக்கிறது. ஜனாதிபதியின் வருகைக்கு  மக்கள் மத்தியில் இருக்கும் அர்த்தமுள்ள ஆதரவு கேள்விக்குறியாகியுள்ளது.

பிள்ளையானின் நூலகம்.

“பிள்ளையானின் நூலகம்” என்ற பெயர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானாலோ, அவரது கட்சியினராலோ சூட்டப்ப்பட்ட ஒன்றல்ல. தமிழ்த்தேசிய அரசியல் ஒரு  நூலகத்தின் தரத்தை, தங்கள் தரத்திற்கு குறைத்து மதிப்பிட்டு, சிரிப்புக்கிடமாக்கி, ஏளனப்படுத்த பயன்படுத்திய சொல்லாடல். 

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கும் நினைப்பிற்கும் மாறாக அந்த பெயர் மட்டக்களப்பு மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இப்போது அதை மட்டக்களப்பு மக்களின் மனதில் இருந்து அழித்து விடமுடியாத நிலையில், அவர்கள் சூட்டிய பட்டப்பெயரைக் கொண்ட பிள்ளையானின் நூலகத்தில்  தாங்களும் பங்காளிகளாக மாறுவதற்கு என்ன வழி என்பதை தேடவைத்துள்ளது. அதற்காக மட்டக்களப்பு மாநகரசபை நிர்வாகத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்த முனைந்து வருகின்றனர். இதனால் மட்டக்களப்பு அரசியலில் ஜே.வி.பி/ என்.பி.பி. கட்சியினருக்கும், தமிழரசுக்கட்சியினருக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துவருவதை  நேற்றைய எனது மட்டக்களப்பு  தொலைபேசி உலாத்தலில்  சுவாசிக்க முடிந்தது.

பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்த நூலகத்திற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், அவர் நல்லாட்சியிலும், இன்றைய என்.பி.பி. ஆட்சியிலும் நீண்டகாலமாக சந்தேக நபராக சிறைவாசம் அனுபவித்ததாலும், அனுபவிப்பதாலும் திட்டமிட்ட படி அனைத்தும் இடம்பெறவில்லை. இரண்டாவது முறை பிள்ளையான் கைது செய்யப்பட்ட பின்னர்  உள்ளூராட்சி தேர்தல்கள் முடிந்த கையோடு மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு சிறையில் இருந்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதன்படி நூல் நிலைய வேலையை தொடர்ந்து திறப்பு விழா செய்து, மக்கள் பாவனைக்கு விடப்பட வேண்டும் என்பது பிள்ளையானின் விருப்பமாக இருந்தது.

பிள்ளையான் நல்லாட்சியில் சிறையில் அடைக்கப்பட்டபோது நூல் நிலைய நிர்மாண வேலைகளில் தேக்கம் ஏற்பட்டது. அப்போது அன்றைய மட்டக்களப்பு எம்.பி. ஞானமுத்து சிறிநேசன் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசியிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு வகையில் தனது தொகுதியில் முடிவடையாதுள்ள கட்டிட நிர்மாணம் தொடர்பாக பேசவேண்டியது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அவரது கடமை. அதற்கான ஏற்பாடுகளை செய்வதும் அவரது பொறுப்பு. சிறிநேசனைத்தவிர மற்றைய மட்டக்களப்பு எம்.பி.க்கள் எவரும் இந்த நூலகம் தொடர்பாக  சாதகமாக ஒரு கல்லையும் நகர்த்தவில்லை. மற்றையவர்கள்கள் போட்டதெல்லாம் தடைக்கற்கள்தான். ஒரு முன்னாள் கல்வியதிகாரியாக சிறிநேசனின் மனட்சாட்சி அவரை உறுத்தியிருப்பது தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஒரு விதிவிலக்கு 

நடிகர் வடிவேலும் மட்டக்களப்பு மேயரும்.

 மட்டக்களப்பு பொது நூலக கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது எந்த திட்டத்திற்கும் போன்று அதன் ஆரம்பகர்த்தாவின் பெயருடன், காலம்  குறிப்பிட்ட  ஒரு நடுகல் இடப்பட்டது. இது இலங்கை அரசியலில் வழக்கத்திற்கு மாறானதோ, சட்டவிரோதமானதோ அல்ல. உலக வழக்கிற்கு முரணானதும் அல்ல. பிள்ளையானின் பெயர், மற்றும் விபரங்கள் பதிக்கப்பட்ட அந்த நடுகல் தற்போது காணாமல் போயுள்ளது.  மட்டக்களப்பு தமிழில் சொல்வதானால் ஒரு திரைப்படத்தில் வடிவேல் “கிணற்றை காணமறுத்த” கதையாக மட்டக்களப்பு மாநகரசபை  முதல்வர் கதை சொல்வதாக அறியமுடிந்தது.

சரஸ்வதியும் மாதாவும் 

 மட்டக்களப்பு பொதுநூலக கட்டிட நிர்மாண திட்ட வரைபில் மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த மத அடையாளங்களுக்கும் இடமிருக்கவில்லை. அது ஒரு கொள்கையாகவும் கொள்ளப்பட்டது. தற்போது மட்டக்களப்பு மாநகர சபையினால் ஒருதலைப்பட்சமாக மாநகர வரியிறுப்பாளர்களை மட்டும் அன்றி ஒட்டுமொத்த மட்டக்களப்பின் பன்மைத்துவ சமூகக்கட்டமைப்பு சமத்துவத்தையும், மதசார்பற்ற தன்மையையும் நிலை குலைத்து சரஸ்வதி சிலைகள்  இரண்டு திட்டமிடலுக்கு முரணாக அதுவும் பிரதான நுழைவாயிலும், பின்பக்க வாசல் கூரையில் அமைக்கப்பட்டுள்ளன.

இது நூலகம் ஒன்றை இன, மத அடையாளப்படுத்தும் ஒரு அடையாள வறுமை அரசியலின் வெளிப்பாடன்றி வேறென்ன? பெரும்பான்மை, பௌத்த சமூகத்தினர் போகிற இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை நிறுவுகிறார்கள் என்று  போராட்டம் செய்யும் தமிழ்த்தேசிய மீட்பர்கள் இங்கு செய்யும் சிலை அரசியலுக்கு என்ன பெயர்? இவர்களுக்கு புத்தர் சிலைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு  இன்னும் யோக்கியதை உண்டா?

இத்தனைக்கும் மட்டக்களப்பு மாநகரசபை வரியிறுப்பாளர்களில் முஸ்லிம் வர்த்தகர்களின் பங்கு குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. மட்டக்களப்பு மாநகர வாசிகளில் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் கிறிஸ்த்தவர்கள் இருக்கிறார்கள். மேலும் மட்டக்களப்பு சமூக பன்மைத்துவத்தில் கிறிஸ்தவ பறங்கியர் சமூகத்தின் வரலாற்று முக்கியத்துவம் மட்டக்களப்பின் பெருமைக்குரியது.

இந்த  திட்டமிட்ட  சரஸ்வதி சிலை விவகாரத்தை அறிந்த மட்டக்களப்பு கிறிஸ்தவ சமூகத்தினர்  சார்பில் பாதிரியார்களைக்கொண்ட குழு ஒன்று, மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதனை சந்தித்து  இது விடயமாக ஆட்சேபனை தெரிவித்து இருக்கிறார்கள்.  அதற்கு மாநகர முதல்வரின் பதில் இப்படி இருந்திருக்கிறது . 

 “அதற்கென்ன நூல் நிலையத்தின் பின்பக்கம்  வாவிப்பக்கம் மாதா சிலை ஒன்றை வைத்தால் போய்ச்சு”.

 சரஸ்வதி சிலை வேண்டாம் அது  மட்டக்களப்பின் சமூக பன்மைத்துவத்தை கேள்விக்குட்படுத்துகிறது என்று ஆட்சேபித்தவர்களுக்கு இரண்டாவது சிலை மூலம்  “எலும்பு அரசியல்” சமரசம் செய்திருக்கிறார் மாநகர முதல்வர். தனது  மாநகர ஆள்புலத்தில் இன்னும் இரு சமூகங்கள் இருக்கிறார்கள் என்பதை அவர் மறந்து விட்டார் போலும். இவர்களுக்கு முதல்வர் சிவம்.பாக்கியநாதனின் பதில்  என்ன என்பது இனிவரும் நாட்களில் தெரிந்துவிடும். முன் கதவால் சரஸ்வதிக்கு வழிவிட்டு, பின் கதவால் “மாதாவை” நுழைத்து மட்டக்களப்பு கிறிஸ்தவ சமூகத்தை  சமமற்ற சமூகமாக முத்திரை குத்தியுள்ளார் மேயர். இதை மட்டக்களப்பு கிறிஸ்தவ சமூகம் மௌனமாக ஏற்றுக்கொள்ளப்போகிறதா..?

 சமூக நடுநிலையாளர் கருத்தும் கோரிக்கையும் 

மட்டக்களப்பில் ஏற்கனவே மசூதி ஒன்றின் முன்னால் உள்ள மரம் ஒன்றை வெட்டுதல், கிறிஸ்தவ மகளிர் பாடசாலை ஒன்றில் சரஸ்வதி சிலை ,…. போன்ற விவகாரங்கள் சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநகரசபையின் இந்த செயற்பாடு இந்த சமூக மோதலை மேலும் வளர்த்துவிடுவதாக அமைகிறது. இன,மத பொது நிலைப்பாட்டை கொண்ட கல்விசார் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடுகளையும், இதற்கு பின்னால் மறைந்துள்ள அரசியலுக்கும் ஜனாதிபதி தலைமையிலான என்.பி.பி. அரசாங்கம் இடமளிக்ககூடாது. மட்டக்களப்பு என்.பி.பி.யினர் இந்த விவகாரத்தை ஜனாதிபதியின். கவனத்திற்கு கொண்டு வந்து மட்டக்களப்பு மாநகரசபையின் இந்த முகமூடியை அம்பலப்படுத்தி, முடிவை மீளப்பெறச்செய்யவேண்டும் என்பது அரசாங்கம் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களின் கருத்தாக உள்ளது என்பதை கேட்கக்கூடியதாக இருந்தது.

எங்களுக்கும் சிலை வைக்க இடம் தாருங்கள் என்று கேட்பதை விடவும் இந்த சிலை அரசியலுக்கு எதிராக மட்டக்களப்பு சமூகம் குரல் கொடுப்பதும்,  அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதுமே  முற்போக்கு சிந்தனையாளர்களின் பணியாக இருக்கமுடியும். மட்டக்களப்பு மாநகரசபையின் திரைமறைவு நகர்வு  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தின் அடிப்படை கொள்கைக்கும், இனம்,மதங்களை கடந்த அரசியல் செயற்பாடுகளுக்கும் ,  நூல் நிலையத்தை திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதிக்கும், அவரது அரசியலுக்கும் அபகீர்தியை ஏற்படுத்துவதாகும் என்பதை என்.பி.பி.யின் கிழக்குமாகாண ஆளுநர், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அபிவிருத்தி குழுத்தலைவர்கள், கிழக்குமாகாண எம்.பி.க்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து  ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பெயர் களங்கப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.  சிறப்பாக மட்டக்களப்பு என்.பி.பி. க்கும், அபிவிருத்தி குழுத்தலைவராக உள்ள அமைச்சருக்கும் இது விடயத்தில் விசேட பொறுப்புண்டு.  பிந்திய தகவல்களின் படி  விடயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எட்டியிருப்பதாக  மட்டக்களப்பு என்.பி.பி. வட்டாரங்களில் கசிகிறது.

கிளீன் சிறிலங்காவும், கட்சி அரசியலும், இருட்டடிப்பும்.

நூல்நிலைய ஆரம்ப நிர்மாண வரைபடத்தில் உள்ள நூல் நிலைய சுற்றுச்சூழலை சில உள்நோக்கங்களுடன் ( நடுகல்லை அகற்றுதல் உட்பட ) மாற்றி அமைத்து இருப்பதானது நூல் நிலைய சுற்று வட்டம், பிரதான நூழைவாயில் பகுதி பொலிவிழந்து இருப்பதை காட்டுகிறது. வாசகர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ள படங்களில் இந்த துர்ப்பாக்கிய நிலையை அவதானிக்க முடியும். அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கிளீன் சிறிலங்காவுக்கு மாநகர நிர்வாகம் சவால் விடுகிறதா?

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் பதவியேற்ற போது வெளியிட்ட அறிவிப்புக்களில் ஒன்று பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்பதும், கல்நடுவதற்கும், பெயர்ப்பட்டியலை நடுவதற்கும் இடமில்லை என்பதுமாகும். இந்த வார்த்தைகளை நிரூபிப்பதற்கு ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பம் இது.

 கிடைக்கின்ற தகவல்களின் படி திறப்பு விழா நடுகல் ஒன்றை கடந்த பத்தாண்டுகளாக இந்த நூல் நிலைய நிர்மாணத்தில் எந்த பங்களிப்பையும் வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ அதிதிகளாகவும், மற்றும் பிரதம அதிதியாக ஜனாதிபதியும், மாநகர முதல்வர் நிகழ்வு தலைவராகவும் கொண்ட நடுகல் ஒன்று தயாரிக்கப்பட்டு இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிள்ளையானின் பெயர் கொண்ட அடிக்கல் நாட்டிய நிகழ்வு நடுகல் திட்டமிட்டு அரசியல் நாகரிகம் அற்று  அகற்றப்பட்டு, நூல் நிலைய வரலாறு இருட்டடிப்புச்செய்யப்படும் அதே வேளையில்  நூல் நிலையத்திற்கு பிள்ளையானின் நூலகம் என்று ஏளனமாகப் பெயர் சூட்டியதைத்தவிர எதையும் செய்யாத தமிழ்த்தேசிய எம்.பி.க்களின் பெயர் பட்டியல் அந்த திறப்புவிழா நடுகல்லை நிறைத்து இருக்கிறது.

இந்த நடவடிக்கை அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும், என்.பி.பி.யினதும் கொள்கைக்கும் முரணானது என்பதால், இந்த திறப்பு விழா நடுகல் விவகாரம் ஜனாதிபதியினது காதுகளுக்கு எட்டாத வகையில் மட்டக்களப்பு தமிழ்த்தேசிய அரசியல் வாதிகள் இதற்கு பின்னால் ஒழிந்து உள்ளனர். ஆனாலும் இந்த விவகாரம் மட்டக்களப்பு என்.பி.பி. ஊடாக ஜனாதிபதி அலுவலகம் வரை சென்று விட்டதாகவும்  திறப்புவிழா நடுகல் தேவையற்றது என்றும், சிலைகள் எதுவும் தேவையில்லை என்றும் ஜனாதிபதி மட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும்  உறுதிப்படுத்தப்படாத செய்திகள் ஊடாக தெரியவருகிறது. அடிக்கல் நாட்டு விழா கல்லை திட்டமிட்டு அகற்றி விட்டு திரைமறைவில் ஜனாதிபதியையும் ஏமாற்றி திறப்பு விழா கல்லொன்றை இந்த நூல்நிலையத்திற்கு எந்த பங்களிப்பையும் செய்யாத தமிழரசுக்கட்சி எம்.பி.க்கள் மாநகரசபை முதல்வரை பகடைக்காயாக்கி செய்ய முயற்சிப்பது அயோக்கிய அரசியல் அன்றி வேறென்ன?  அரசாங்கத்தின் கொள்கைப்படி பார்த்தால் எல்லாக்கற்களும் அகற்றப்பட வேண்டும். அதுதான் நீதி. இது விடயத்தில் என்.பி.பி. தனது கொள்கையை நிலைநிறுத்த வேண்டும்.

அரசாங்கத்தினதும், அதன் தலைமையினதும் இன, மதங்களைக் கடந்த அரசியலுக்கு எதிரான காலாவதியான தமிழ்த்தேசிய அரசியலின் இந்த வங்குரோத்து அரசியலின் பின்னணியை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மட்டக்களப்பு என் .பி.பி.பாராளுமன்ற உறுப்பினர் தம்பி பிராபாவுக்கு இருக்கிறது. அவரைச் சூழவுள்ள என்.பி.பி.கட்சியினருக்கு இருக்கிறது. சில உள்ளூராட்சி சபைகளில் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்யும் ரி.எம்.வி.பி. கட்சியினருக்கும் இருக்கிறது. 

இந்த நூல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டபோது அதை சீர்குலைக்க தமிழ்த்தேசிய அரசியல் மேற்கொண்ட குள்ளத்தனமான அரசியலையே இன்று அரசாங்கத்தலைமை பாரபட்சம் இல்லாமல் அதை திறந்து வைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலும்  தமிழரசுக்கட்சி செய்கிறது என்பது மட்டக்களப்பு மக்களின் சாபக்கேடு. இந்த அரசியல் சூழ்ச்சிப் பட்டியலுடன் தான் ஜனாதிபதியின் வருகையை பயன்படுத்தி, கட்டிட நிர்மாணப்பணிகள் பூர்த்தி அடையாத நூல் நிலையத்தை அவசர அவசரமாக திறந்து வைத்து அரசியல் செய்ய மட்டக்களப்பு மாநகரசபை துடிக்கிறதா?  

புதிய கலாச்சாரம் மற்றும் புதிய ஜனநாயகம் 

என்.பி.பி. அரசாங்கம் முறைமை மாற்றம் ஒன்றை முன்மொழிந்து ஆட்சிக்கு வந்தது. அதில் அரசியல் புதிய கலாச்சாரமும், புதிய ஜனநாயகமும் தவிர்க்க முடியாதவை. இதை வெளிப்படுத்துவதற்கும், கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும் அப்பால் அதை செயலில் காட்டுவதற்குமான  வாய்ப்பு பிள்ளையான் அடிக்கல் நாட்டிய நூல் நிலையத்தை திறந்து வைக்கும் அரசாங்கத்தரப்புக்கு இருக்கிறது. 

மட்டக்களப்பின் விளையாட்டுக்கழகங்கள் பிள்ளையான் தமது கழகத்திற்கு/கிராமத்திற்கு செய்த சேவைக்காக அவர் சிறையில் இருந்த நிலையிலும் சமூகமளிக்க முடியாத நிலையிலும் பிரதம அதிதியாக பிள்ளையானை பெயரிட்டு  கௌரவித்தார்கள். முன்மாதிரியாக ஒரு அரசியல் புதிய கலாச்சாரத்தை, ஜனநாயகத்தை படைத்தார்கள். மட்டக்களப்பு கிராமிய இளைஞர்களின் முன்மாதிரியை கட்சி அரசியல் வேலிகளை கடந்து மாநகரசபையும், அரசாங்கமும் செய்வார்களா? என்பது நியாயமற்ற குரலல்ல. 

ஒரு நூல் நிலையம் ஆரம்பிக்கப்படவில்லை என்றால் உண்மையாகவே ஜனாதிபதி உருப்படியாக ஆரம்பித்து/திறந்து வைப்பதற்கும், மாநகரசபை  ஜனாதிபதியின் வருகையையொட்டி ஒரு பணியைச்செய்வதற்கும் எதுவும் இல்லாமல் இருந்திருக்கும். ஆகக்குறைந்த பட்சம் மட்டக்களப்பின் இளைஞர்களின் முன்மாதிரியை பின்பற்றி அந்த திறப்புவிழா அழைப்பிதழில் பிள்ளையானின் பெயரை நினைவுபடுத்தி கௌரவிப்பதில் கட்சி அரசியல் கடந்து எந்த தவறும் இருக்கமுடியாது. ஜனாதிபதி நூல்நிலைய திறப்புவிழாவில் பிள்ளையானை அவர் பேசுகின்ற புதிய அரசியல் கலாச்சாரம் குறித்து சாதகமாக உச்சரிப்பாரா ? என்பது அவருக்கே வெளிச்சம்.

தந்தை செல்வாவின் நினைவுப் பேருரைக்கு கட்சி அரசியல் கடந்து பீரிஸ் உரையாற்றமுடியும் என்றால் அதுவும் தமிழ்த்தேசிய அரசியல் சமஸ்டிக்கு எதிராக பேசமுடியும் என்றால் இதை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாநகர முதல்வர் இந்த சந்தர்ப்பத்தில் பிள்ளையானை ஏன்? நினைவுஊர முடியாது. 

அதுவே அரசியலில் புதிய கலாச்சாரம், ஜனநாயகம், ஒருவகையில் பகுதியளவான முறைமை மாற்றம்.

மட்டக்களப்பின் பலம் சமூக பன்மைத்துவம்.

ஒரு சமுதாயத்தின் பலம் என்பது அதன் பன்மைத்துவம். வேறுபட்ட மனிதர்களுக்கு இடேயான வாழ்வியலை ஊக்கப்படுத்தல், அதற்காக செயற்படுதல் அரசாங்கத்தினதும், அதன் நிறுவனங்களினதும் கடமை. வேறுபட்ட அணுகுமுறைகள், சிந்தனைகளை கொண்ட ஒருங்கிணைந்த, புரிந்துணர்வுடன் கூடிய சமூகங்களுக்கு இடையிலான உறவு ஒரு நாட்டின்- ஒரு பிரதேசத்தின் மனிதவளம்.

 நூல் நிலையம் ஒரு சமூக முதலீடு. அது மக்களை அறிவுமயப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. அதற்கான முதலீடு சமூக அபிவிருத்தி முதலீடு. இந்த முதலீடு மட்டக்களப்பு நூல்நிலையத்திற்காக நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நூல்கள், நூல் நிலையம் ஒன்றின் செயற்பாடு குறித்து திரு.செல்வராசா அவர்களினால் எழுதப்பட்டு ஏற்கனவே மட்டக்களப்பில் வெளியிடப்பட்டுள்ள நூல், மேலும் தொடர்ச்சியாக “அரங்கம்” மின்னிதழில் நூலகம் தொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் தட்டிக்கழிக்க முடியாதவை. இந்த நவீன நூலகத்தின் தோற்றத்தோடு பின்னிப்பிணைந்தவை.

இந்த முயற்சிகள் அனைத்தும் ஒரு பலமான மட்டக்களப்பு பன்மைத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் அடித்தளத்தை கொண்டவை. மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு பிள்ளையானால் நாட்டப்பட்ட அடிக்கல் இந்த பன்மைத்துவ சமூக அத்திவாரத்திற்கு நாட்டப்பட்ட கல். இது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பயணத்தை பலமாக்கும் கற்களில் ஒன்றாகுமேயன்றி, தமிழ்த்தேசிய அரசியல் போடுகின்ற  என்.பி.பி.யின் அரசியல் பயணத்திற்கான தடைக்கல் அல்ல. அந்த கல் இப்போதே அகற்றப்பட வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *