— கருணாகரன் —
‘சமஸ்டி முறையும் அரசியலமைப்பு சீர்த்திருத்தப் பாதையும்’ என்ற தலைப்பில் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் S.J.V செல்வநாயகம் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக 26.04.2026 அன்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். 1994 இல் சந்திரிகா குமாரதுங்க காலத்தில் அரசுக்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பீரிஸ், நீண்டகாலத்துக்குப் பிறகு தமிழ்த்தரப்பின் இன்னொரு அழைப்பில் பங்கேற்றார்.
பீரிஸை அழைத்தது செல்வநாயகம் நினைவு அறங்காவல் குழு. ஆயர் கலாநிதி ஜெபநேசன் நிகழ்வுக்குத் தலைமையேற்றார். தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அறிமுக உரையாற்றினார். ஆனால், அதற்கு முன்பே “செல்வநாயகத்தின் பேரிலான நினைவுப் பேருரையை நிகழ்த்தக்கூடிய தகுதி பீரிஸூக்கு இல்லை..” என்ற அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்திருந்தன. தமிழ்த்தேசிய ஆதரவு நிலைப் புத்திஜீவிகள், ‘இது தவறான தெரிவு‘ என்று பகிரங்கமாகவே பதிவிட்டிருந்தனர். சட்டவாளர் குமரவடிவேல் குருபரன் தன்னுடைய முகநூலில், “மகிந்த மற்றும் கோத்தாவின் வெளிநாட்டு அமைச்சர், சந்திரிக்காவின் நீதி அமைச்சர் ‘தந்தை செல்வா நினைவுப் பேருரை’ ஆற்றுகிறார்” என்று பீரிஸின் தெரிவைக் கடுமையாகக் கேலிப்படுத்தி விமர்சனம் செய்திருந்தார். ஆனாலும் சமகாலச் சூழலில் மேற்படி தலைப்பில் உரையாற்றுவதற்குப் பீரிஸ் பொருத்தமானவர் என்று சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
சுமந்திரனுடைய கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியது. காரணம், இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகளில் ஈடுபட்டவர் பீரிஸ். ஆகவே அதில் பெற்ற அறிவும் அனுபவங்களும் பீரிஸூக்கு உண்டு. மட்டுமல்ல, அப்பொழுது கலாநிதி நீலன் திருச்செல்வத்தோடு இணைந்து அதிகாரப் பரவாக்கத்துக்கான தீர்வுத் திட்டத்தையும் அதற்கான அரசியலமைப்புத் திருத்துக்கான யோசனைகளையும் தயாரித்தவர் பீரிஸ். பின்னர், 2002 இல் மீண்டும் தொடங்கிய பேச்சுவார்த்தைகளிலும் பீரிஸ்தான் முக்கியமான பங்கை வகித்திருந்தார். அதாவது, புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களில் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவராகவும், வெளிவிவகார அமைச்சராக இந்தியாவுடனான முக்கிய கலந்துரையாடல்களிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைத்தவராகவும் செயல்பட்டுள்ளார். தொகுத்துச் சொன்னால், சமாதானப் பேச்சுவார்த்தைகள், சர்வதேச இராஜதந்திரம் மற்றும் உள்நாட்டு அரசியல் ஆகிய முக்கோண அரங்கில் தீவிரமாகச் செயல்பட்டவர் பீரிஸ். இந்த அனுபவத்தின் அடிப்படையில், ‘The Sri Lanka Peace Process: An Inside View’ (இலங்கை சமாதான செயல்முறை: ஒரு உள் பார்வை) என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பலம், பலவீனங்கள், இறுதியில் அவை தோல்வியடைவதற்கான காரணிகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். அந்த நூல் ஒற்றைக் கோணத்தைக் கொண்டதோ, மேலும் பல பகுதிகளைப் பேசாமல் விட்டதோ என்பது விமர்சனத்துக்குரியதாக இருக்கலாம். ஆனால், அந்த நூலைப் புறந்தள்ள முடியாது.
ஆகவே பீரிஸின் தெரிவு சந்தேகத்திற்கிடமின்றிப் பொருத்தமானது. கூடவே இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். பீரிஸின் குரலுக்கு இன்றும் சர்வதேசக் கவனமும் உள்நாட்டுக் கவனிப்பும் உண்டு. அப்படியென்றால், இதையெல்லாம் புரியாமலா பீரிஸின் தெரிவைத் தீவிரத் தமிழ்த்தேசியவாதிகள் எதிர்த்தனர் என்ற கேள்வி எழலாம். எதையும் புனிதப்படுத்திப் பார்த்தும் எதிர்நிலையாளர்களை முற்றாகவே புறந்தள்ளி, விரோதித்தும் பழக்கப்பட்ட உளம் தீவிரத் தமிழ்த்தேசியவாதி -களுடையது. அதனால் அந்த அளவு கோலைக் கொண்டே அவர்கள் எதையும் எவரையும் மதிப்பிடுகின்றனர். முக்கியமாகப் புனிதம் குறித்த அதீத கற்பிதத்துக்குள் அவர்கள் சிறைப்பட்டுள்ளனர். அதிலிருந்து மீளும் வரையில் இந்த மாதிரியான சிக்கலுக்குரிய பார்வையும் ஐயநிலைப்பாடும் இருக்கும். எதிர்த்தரப்பை எப்படிச் சாத்தியான முறைகளில் அணுகலாம்? எதிர்த்தரப்புக்குத் தந்திரோபாய ரீதியான நெருக்கடிகளை எப்படிக் கொடுக்கலாம் என்று சிந்திப்பதேயில்லை. மாற்றுத் தரப்பைத் தீண்டாமை நோக்கில் பார்க்கும் மனப்பாங்கே இவர்களிடம் வலுப்பெற்றுள்ளது. இது முன்னோக்கிய அரசியலுக்குப் பொருத்தற்றது. இத்தகைய குணத்துடன் இருக்கும்போது விடுதலையைப் பெறவே முடியாது.
சரி, அவர்களின் நிலைநின்று பார்த்தால்கூட செல்வநாயகம் நினைவுப் பேருரை ஆற்றுவதற்கான பீரிஸின் பங்கேற்பு எந்த வகையில் தவறானது?
பீரிஸின் தெரிவு குறித்த விவாதமொன்றின்போது குமாரவடிவேல் குருபரன் கேட்டிருந்தார், “Yasir Arafat இன் நினைவுப் பேருரை ஆற்ற Netenyahu வை அழைக்கலாமா?” என்று.
இதற்கு ” பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் Yasir Arafat இன் நினைவுப் பேருரை ஆற்ற இஸ்ரேலியப் பிரதமர் Netanyahu சம்மதித்து (உடன்பட்டு) வந்தால் அது முதல் வெற்றியாகும். அந்தப் பொறியில் Netanyahu வை வீழ்த்துவது அடுத்த வெற்றியாகும். Netanyahu சொல்லும் விடயங்கள் அவரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். அது அடுத்த வெற்றியாகும். வரலாறு Netanyahu வை மேலும் மதிப்பிடுவதற்கான இன்னொரு சந்தர்ப்பம் என்பது அதற்கடுத்த வெற்றியாகும். Yasir Arafat இன் நினைவுப் பேருரை ஆற்ற Netanyahu மறுத்தால் அதுவும் வெற்றியாகும்” என்று அவருக்குப் பதில் அளிக்கப்பட்டது.
இந்த விவாத்தில் அல்லை சிறி என்பவர் இதை மறுத்து, பீரிஸைக் குற்றப்படுத்தினார் – “ஒவ்வொரு அரசாங்கத்திலும் பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு, தமிழர் தீர்வு சம்பந்தமான விடயத்தில் அப்போது சார்ந்திருக்கும் தலைமைகளுக்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றும் ஒரு சந்தர்ப்பவாதிதான் பீரிஸ்” என்று.
“பீரிஸின் சந்தர்ப்பவாத அரசியல் ஒன்றும் புதியதல்ல. அவருடைய இனவாத நிலைப்பாடும் அல்லது இனவாதத்தை நிராகரிப்பதற்கான அவருடைய துணிவற்ற தன்மையையும் அறியாமல் உள்ளோம் எனக் கருத வேண்டாம். நம்முடைய சூழலில் உள்ள போராட்ட அமைப்புகள், அரசியல் கட்சிகள், தலைவர்கள் எனப் பலரிடமும் குறைகளும் தவறுகளும் உண்டு. சமூகத்துக்கும் பிற தரப்புகளுக்கும் அஞ்சித் தீர்மானம் எடுக்கும் தலைமைகளும் கட்சிகளுமே இன்றுள்ளன. தம்முடைய கொள்கை, இலட்சியம், சமூகத்தேவை போன்றவற்றின் அடிப்படையில் துணிகரமாகத் தீர்மானங்களை எடுத்துச் செயற்படுத்தும் கட்சியோ தலைமையோ இன்று உண்டா? அதற்காக அனைவரையும் ஒன்றாகச் சமப்படுத்தவில்லை. இதைச் சொல்லி பீரிஸின் குறைபாடுகளையும் தவறுகளையும் நியாயப்படுத்தவில்லை.
இங்கே கவனத்திற்குரியது, பீரிஸ் யாழ்ப்பாணத்தில், இன்றைய சூழலில் ஒரு பொதுத்தளத்தில் என்ன சொல்கிறார் என்பதுவேயாகும். ஏனென்றால் இது தேர்தலுக்கான அரசியல் மேடை அல்ல. ஆகவே இப்பொழுது நெருக்கடிக்குள்ளாகியிருப்பது பீரிஸ்தான். உண்மையைச் சொன்னால், நியாயத்தை ஏற்றால், தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் பார்வையும் சரியாக வைத்தால் பீரிஸ் வரலாற்றில் தப்பி விடுவார். தவறி, தன்னை இனவாதத்திற்குப் பலியிட்டால் வரலாறு பீரிஸைத் தண்டிக்கும்“ என்று அதற்குப் பதிலளிக்கப்பட்டது.
எதிர்த்தரப்பைப் புரிந்து கொள்வதும் அதைக் கையாள்வதும் ஒரு கலையாகும். உலகில் எதிர்த்தரப்பு இல்லாத அரசியல் வெளி என்பது உண்டா? அது சாத்தியமா? எப்போதும் எங்கும் நமக்கு வாய்ப்பான – உவப்பான தரப்புகளும் சூழலும்தான் இருக்குமா? நிச்சயமாக இல்லை. அரசியலே எதிர்த்தரப்புகளோடுதான் அரசியலைச் செய்ய வேண்டும்; உரையாடல்களை நிகழ்த்த வேண்டும். எதிர்த்தரப்புகளோடு மோதும் உடன்பாடு காணும் அறிவார்ந்த விளையாட்டுத்தான். எப்படிக் காய்களை நகர்த்துகிறோம்? எப்படி எதிர்த்தரப்புகளைக் கையாள்கிறோம்? என்பதே நம்முடைய அரசியற் திறனையும் முதிர்ச்சியையும் காட்டும். அதில்தான் நம்முடைய ஜனநாயக மாண்பும் புரிதலும் வெளிப்படும்.
ஈழத் தமிழர்களுடைய அரசியல் அரங்கில் தீண்டாமை என்ற ஒரு பிரிகோடு பெருஞ்சுவராக நிறுத்தப்பட்டுள்ளது. இது அறியாமை, புரியாமை, தெளியாமை, மடமை போன்றவற்றின் வெளிப்பாடாகும். இந்தக் குறைபாட்டையும் தவறையும் வைத்துக் கொண்டு அரசியல் அரங்கில் ஒரு மில்லி மீற்றர்கூட முன்னகர முடியாது. இந்தக் குறைபாட்டை வைத்துக் கொண்டு எத்தனை பெரிய தியாகங்கள், திரள்முயற்சிகள், வீரசாகஸங்கள், அர்ப்பணிப்புகளையெல்லாம் செய்தாலும் பயன் கிடையாது. இது நமது சமகால அனுபவமும் கூட. இந்தக் குறைபாட்டைத் தமிழ் அரசியற் தரப்புகள் மட்டுமல்ல, இலக்கியவாதிகள், புத்திஜீவிகள், சமூக அமைப்புகள் ஏன் தமிழ்ச் சமூக வெளியே நீக்கவில்லை. பதிலாக அதற்குள் கட்டுண்டு கிடக்கிறது.
எத்தனைதான் கடுமையான அனுபவங்கள் கிடைத்தாலும் அதைப் பரிசீலனை செய்து பட்டறிவாக மாற்றிக் கொள்ளும் தகுதி தமிழ்ச் சமூகத்திடம் இல்லாதிருக்கிறது. என்பதால்தான் அது மேலும் மேலும் பின்னடைவுக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. இதனாலேயே பீரிஸ் போன்றோரைக் கூட ஒரு பொது அரங்கில் உரையாற்றுவதற்கு ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இவ்வளவுக்கும் பீரிஸ் நேரடியான – வெளிப்படையான – தீவிரமான இனவாதியோ இன ஒடுக்குமுறையாளரோ இல்லை. அரசியற் கட்சியின் தலைவருமில்லை. அரசியல் பரப்பில் வலிமை உள்ள ஊடாட்டக்காரர். அவர் போன்றோரைக் கையாள்வதும் அவர்கள் தமிழ்ப் பொது அரங்கில் உரையாடுவதற்கு இடமளிப்பதும் அவசியமானது. அதைப்போல சிங்கள, முஸ்லிம் பொது அரங்குகளில் தமிழ்க் குரல்கள் ஒலிக்க வேண்டும். கதவுகளைத் திறக்க வேண்டுமே தவிர, கதவுகளை மூடிக் கூடாது. கதவுகள் மூடப்பட்டால் நமக்குப் பாதையும் இல்லை. பயணமும் இல்லை.
