பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும் தந்தை செல்வா நினைவுப் பேருரையும் 

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும் தந்தை செல்வா நினைவுப் பேருரையும் 

 — வீரகத்தி தனபாலசிங்கம் — 

முதுபெரும் தமிழ் அரசியல்  தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 49 வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியும் தந்தை செல்வா அறக்கட்டளையும் இணைந்து யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கத்தில் கடந்த வாரம் (ஏப்ரில் 26) ஒரு நினைவுப் பேருரை நிகழ்வை  ஏற்பாடு செய்திருந்தன. 

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலப் பகுதியில் பல்வேறு அரசாங்கங்களில் அரசியலமைப்பு விவகார அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர்  போன்ற முக்கிய பதவிகளை வகித்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ‘கூட்டாட்சி (சமஷ்டி) முறையும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான பாதைகளும்’ என்ற தொனிப்பொருளில் அந்த நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். 

  பேராசிரியரை  அழைத்தமை  குறித்து தமிழர்கள் மத்தியில் சில வட்டாரங்களில் இருந்து குறிப்பாக சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு  விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.  நினைவு நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்திய தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி கூட்டாட்சி முறையின் அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதே இன்று சகல தமிழ் அரசியல் கட்சிகளினதும் ஏகோபித்த  நிலைப்பாடாக இருக்கும் நிலையில்  நினைவுப் பேருரையை நிழத்துவதற்கு அவரை தந்தை செல்வா அறக்கட்டளை அழைத்திருப்பது முக்கியமான ஒரு தருணம் என்று குறிப்பிட்டார்.

ஒரு தேசிய இனத்தவர்களான இலங்கை தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சியைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்ற கருத்தியலை அந்த மக்கள் மத்தியில் முதன் முதலில் விதைத்தவர் தந்தை செல்வா என்று கூறிய சுமந்திரன், நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்கு பேராசிரியர் பீரிஸை விடவும் சிறந்த ஒருவர் இருக்கமுடியாது என்பதை  நியாயப்படுத்துவதற்கு அவரின் இரு முக்கியமான பங்களிப்புக்களை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளின்போது பேராசிரியர் பீரிஸ் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்புச் சட்ட நிபுணருமான கலாநிதி நீலன் திருச்செல்வத்துடன் சேர்ந்து தயாரித்த முக்கியமான ஆவணம் பெருமளவுக்கு கூட்டாட்சி முறையின் அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது என்று கூறிய சுமந்திரன், இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் பேராசிரியர் தலைமையிலான இலங்கை அரசாங்கத் தூதுக்குழு நடத்திய தொடர்ச்சியான பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் செய்யப்பட்ட பிரகடனத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் கூட்டாட்சி முறையில் அரசியல் தீர்வைக் காண்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்கு இரு தரப்புகளும் இணங்கிக் கொண்டதையும் சுட்டிக்காட்டினார். 

உள்நாட்டுப் போர்க் காலத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வு ஒன்றைக் காணும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் சகலவற்றுக்குள்ளும்  பேராசிரியர் பீரிஸும் நீலனும் இணைந்து தயாரித்த ஆவணமே ஓப்பீட்டளவில் மிகவும் சிறந்ததாக விளங்கியது என்பதில் சந்தேகமில்லை. 

அந்த நேரத்தில் அந்த முன்மொழிவுகள் தமிழ் மக்கள் மத்தியில் உகந்த முறையில் எடுத்துச் சொல்லப்படுவதற்கு வாய்ப்பு இருந்திருக்குமானால், அவர்களின் பரந்தளவிலான ஆதரவை நிச்சயமாக அது  பெற்றிருக்கும். நீலனைப் போன்ற ஒருவரை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலமாக படுகொலை செய்வதற்கு விடுதலை புலிகள்  தீர்மானித்ததில் இருந்து அந்த ஆவணம் தங்களது நிகழ்ச்சித் திட்டத்துக்கு எந்தளவுக்கு  பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. 

அரசாங்கம் கொண்டுவருகின்ற அரசியல் தீர்வு யோசனைகளை எதிர்க்கட்சி எதிர்க்கின்றதும் அரசாங்கங்கள் அரசியல் துணிவாற்றலை வெளிப்படுத்தாமல் அடிபணிந்து போவதுமான  தென்னிலங்கையின் பாரம்பரியமான அரசியல் கலாச்சாரத்துக்கு சந்திரிகா அரசாங்கத்தின் ஆவணமும் பலியானது. அந்த ஆவணம் குறித்தும் விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின்போது செய்யப்பட்ட ஒஸ்லோ பிரகடனம் குறித்தும் பேராசிரியர் பீரிஸ் தனதுரையில் சுருக்கமாக விளக்கிக் கூறியிருந்தார். இன்றைய இளைய தலைமுறையினர் அவற்றைப் பற்றி அறிய வேண்டியது அவசியம் என்பதால் பொருத்தமான பகுதிகள் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன..

“கூட்டாட்சி (Federalism) என்பது ஒரு தத்துவம் என்ற வகையில்   பிளவுகளை ஏற்படுத்துவதை விடவும் பரந்த ஒரு  பரிமாணத்தையே குறித்து நிற்கிறது.  1995 — 1997  காலப் பகுதியில் சந்திரிகா பண்டாரநாயக்க  குமாரதுங்க அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட மூன்று அரசியலமைப்பு முன்மொழிவுகளில் இது தெளிவாக வெளிப்பட்டது. முறையான ஒரு  அரசியலமைப்புத் திட்டத்தில், மத்திய அரசாங்கத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு எல்லையை நிர்ணயிப்பதில் இந்த முன்மொழிவுகள் அந்தப் பரிமாணத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஊசலாடின.

“அரசியலமைப்பு விவகாரங்கள், இன விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்த என்னுடன் இணைந்து 1995, 1996, 1997 ஆண்டுகளின்  முன்மொழிவுகளை உருவாக்கிய எனது மதிப்பிற்குரிய நண்பர்  கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களின் மரபுக்கு இந்த இடத்தில் நான் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன உட்பட  பலரின் ஆதரவும் இதற்கு இருந்தது. 

“நீலனும் நானும் இலங்கை பல்கலைக்கழகத்தில் சக மாணவர்களாக இருந்தோம்; நான் ஒக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகத்தில் ரோட்ஸ் புலமைப்பரிசில் (Rhodes Scholarship) பெற்றபோது, அவர் ஹார்வர்ட்  பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.  நாங்கள் இருவரும் 1994 ஆகஸ்ட் மாதம் ஒன்றாகவே இலங்கை பாராளுமன்றத்திற்குள் நுழைந்தோம் என்பது இன்னொரு தற்செயலான நிகழ்வாகும். 

“தமிழ் மக்களின் நலன்களையும்  அபிலாசைகளையும்  பிரதிநிதித்துவப்படுத்தும் ஏகபோக உரிமை தமக்கே உண்டு என்ற விடுதலைப் புலிகளின்  உரிமை கோரலுக்கு நீலன்  தடையாக இருந்ததால், அவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவர் உயிரோடு இருந்திருந்தால் எதிர்காலம் ஒருவேளை வேறு விதமாக அமைந்திருக்கக்கூடும்.

“1995  அரசியலமைப்பு முன்மொழிவுகள் கூட்டாட்சியின் வலுவான அம்சங்களைக் கொண்டிருந்தன, உண்மையில் அதற்கும் மேலாகச் சென்றன என்றும் கூறலாம். முன்மொழிவுகளின் சாரமாக அமைந்த பிராந்திய சபைகளுக்கு (Regional Councils), ஒதுக்கப்பட்ட விடயங்களில் நிறைவேற்று, சட்டவாக்க மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.  முக்கியமான சகல துறைகளிலும் இந்த அதிகாரங்கள் மத்திய அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாக்கப்படவிருந்தன.

 “நிதி தொடர்பாக, பிராந்திய சபைகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம், சர்வதேச கடன் பெறுதல், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல், சர்வதேச மானியங்களையும் அபிவிருத்தி உதவிகளையும்  பெறுவதற்கான  அதிகாரம் ஆகியவை வழங்கப்படவிருந்தன. சட்டம், ஒழுங்கு மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் போன்ற முக்கியமான துறையில், முதலமைச்சரால் நியமிக்கப்படும் பிராந்திய பொலிஸ் ஆணையாளரின் தலைமையிலான பிராந்திய பொலிஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 “நிலம் என்பது தெளிவாகப் பகிரப்பட வேண்டிய ஒரு விடயமாக அடையாளப் படுத்தப்பட்டிருந்தது. மத்திய அரசாங்கத்தின் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு சில இடங்களைத் தவிர, ஒரு பிராந்தியத்திற்குள் உள்ள அரச நிலங்கள் அனைத்தும் அந்தப் பிராந்திய சபையிடமே ஒப்படைக்கப்படவிருந்தன. இலங்கையின் முழுமையான அரசியல் பரிணாம வளர்ச்சியில், கூட்டாட்சி கட்டமைப்பை நோக்கிய மிகவும்  வலுவான நகர்வை இந்த ஆவணம் பிரதிபலித்தது.

“1995 முன்மொழிவுகள் 1996 ஆம் ஆண்டில் விரிவான ஒரு  வரைவின்  மூலமாக  மாற்றியமைக்கப்பட்டமை ஒரு பின்னடைவான நடவடிக்கையாக அமைந்தது.  ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டமையே அதன் அடிப்படைப் பலவீனமாகும்.  மத்திய அரசுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான அதிகார சமநிலையை அது அடிப்படை ரீதியாக மாற்றியமைத்ததுடன்  பிராந்தியங்களின் அதிகாரங்கள்  ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு  பலியாகும் நிலைக்கு வழிவகுப்பதாக அமைந்தது. 

  “அரசியலமைப்பு ஏற்பாடுகளினால் பாதுகாக்கப்பட்ட பிராந்தியங்களின் முழுமையான அதிகாரங்கள் மத்திய அரசின் நிறைவேற்று நடவடிக்கையினால் இரத்துச் செய்யப்படும்போது, அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் வாய்ப்பு கூட பிராந்தியங்களுக்கு வழங்கப்படவில்லை. இது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமையவில்லை.

 “இதை திருத்தியமைக்கும்  ஒரு நடவடிக்கையாக 1997 ஆம் ஆண்டில் இன்னொரு  முன்மொழிவுத் தொகுப்பு  வெளியிடப்பட்டது. அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசியலமைப்பின் அத்தியாயத்தின் உள்ளடக்கத்தினதும்  மத்திய அரசுக்கும் பிராந்தியங்களுக்கும்  அதிகாரப் பகிர்வைக் கையாளும் இரு அட்டவணைகளினதும் உள்ளடக்கங்களில்   திருத்தங்களைக்  கொண்டு வருவதைத் தடுக்கும் ‘வீட்டோ’  அதிகாரத்தைப் பிராந்தியங்களுக்கு வழங்கும் ஏற்பாடு அதில் உள்ளடக்கப்பட்டது.

“இது பாராளுமன்றத்தின் அதிகாரங்களை பாரியளவில் குறைப்பதாக அமைந்ததுடன், ஒரு தீவிர நிலையிலிருந்து மற்றொரு தீவிர நிலைக்குச் செல்வதாக அமைந்தது. தன்னிச்சையான நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு மத்தியிலிருந்து பிராந்தியங்களுக்கு நகர்த்தப்பட்டது. இந்த முன்மொழிவுகள் அவற்றுக்கு உள்ளேயே  அழிவுக்கான விதைகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்டதில் ஆச்சரியமில்லை.

  “2000  ஆகஸ்ட் 3 ஆம் திகதி அரசியலமைப்பு விவகார அமைச்சர் என்ற முறையில் நான் ஜனாதிபதி குமாரதுங்க சார்பில் சமர்ப்பித்த ‘அரசியலமைப்புச் சட்டமூலம்’ (Constitution Bill) அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான  விரிவானதும் முழுமையானதுமான முயற்சியாக அமைந்தது. அதில் ‘கூட்டாட்சி’ என்ற சொல் நேரடியாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், அதன் சாராம்சம் உள்வாங்கப்பட்டிருந்தது. “இலங்கைக் குடியரசு மத்திய மற்றும் பிராந்திய நிறுவனங்களைக் கொண்டது” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்களின் சட்டவாக்க அதிகாரம்  பாராளுமன்றத்தினாலும்  பிராந்திய சபைகளினாலும்  பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நிறைவேற்று அதிகாரம்  ஜனாதிபதியால் மட்டுமல்லாது முதலமைச்சர்கள் மற்றும் பிராந்திய அமைச்சரவைகளின் ஆலோசனையின் பேரில் செயற்படும் ஆளுநர்களாலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

“பிராந்திய ஆளுநர்கள்” பிரதமருடனான கலந்தாலோசனை மற்றும் பிராந்திய முதலமைச்சரின் உடன்பாட்டுடன்” ஜனாதிபதியால் நியமிக்கப்படவிருந்தனர். அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட  விடயங்களில் பிராந்தியங்களுக்கான சட்டவாக்க அதிகாரம் தெளிவாக குறிப்பிடப்பட்டது. 

“நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களில் எந்தவித ஒளிவுமறைவுமற்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. நிலம் தொடர்பாக, “ஒவ்வொரு பிராந்தியமும் அதற்குள் உள்ள சகல  அரச நிலங்களையும் சுவீகரித்து  பிராந்தியப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த நோக்கங்களுக்காக பிராந்திய நிர்வாகத்தின் வசம் வைத்திருக்க முடியும்  என்றும்  பொலிஸ் அதிகாரம் குறித்து, “ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு பிராந்திய பொலிஸ் சேவை இருக்கும், அதன் ஆணையாளர் பிராந்திய அமைச்சரவையின் உடன்பாட்டுடன் பிராந்திய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படுவார்” என்றும்  ஏற்பாடு செய்யப்பட்டது.

அதேபோன்று, நிதி விடயத்தில் பிராந்தியத் திரட்டு நிதியத்தின் (Consolidated Fund of the region) ஊடாக வழங்கப்பட்ட அதிகாரத்தின் அளவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இந்த முன்மொழிவுகளை ஒரு அரசியல் தீர்வாக நடைமுறைப்படுத்துவதற்கான அதன் கடுமையான எதிர்ப்பை விடுதலை புலிகள் இயக்கம்  கலாநிதி நீலன் திருச்செல்வத்தை  கொடூரப் படுகொலை செய்ததன் மூலம்  வெளிப்படுத்தியது. இது  நீலன்  ஒரு முக்கிய உறுப்பினராக இருந்த பாராளுமன்றத்தின் பிரதான  கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு  பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. 

“பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி 1999 டிசம்பர் ஜனாதிபதித் தேர்தலில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, ஒத்துழைக்க விரும்பாத மனப்பான்மையைக் கொண்டிருந்ததால்  இந்த பிரச்சினைகள் மேலும் சிக்கலாகின.  இது தேசத்தின் துரதிர்ஷ்டமாகும்; ஒரு தேசிய முயற்சியை விடவும்  ‘எதிர்க்கட்சி அரசியல் கலாசாரம்’ மேலோங்கியிருந்ததால், பாராளுமன்ற விவாதத்தின் போதே அரசாங்கம் அந்தச் சட்டமூலத்தைத் திரும்பப் பெறவேண்டிய  நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.”

ஒஸ்லோ பிரகடனம்

“சமாதானப்  பேச்சுவார்த்தைகளின் ஒரு தீர்க்கமான கட்டத்தில்,  விடுதலைப் புலிகள் இயக்கம்  வெளியக சுயநிர்ணய  உரிமையை (External self-determination) வேண்டுமென்றே கைவிட்டனர் என்ற கருத்தியல்  முழுமையான ஒரு  மாயையாகும். நோர்வே தலைநகரில்  மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது உருவான “ஓஸ்லோ பிரகடனம்” (Oslo Declaration) என்பதைச் சுற்றியே இந்தத் கட்டுக்கதை நிலவியது.

இந்த அமர்வின் முடிவில், நோர்வே அனுசரணையாளர்களினால்  வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில்,  “ஒருங்கிணைந்த இலங்கைக்குள் கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில், உள்ளக் சுயநிர்ணய  உரிமைத் (Internal self-determination) தத்துவத்தின் கீழ் ஒரு தீர்வைக் கண்டறிய இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டனர் ” என்று குறிப்பிடப்பட்டது.

இருப்பினும், “உள்ளக  சுயநிர்ணய் உரிமை” என்பது குறித்து விடுதலை  புலிகளின் புரிதல் பின்வருமாறு   தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது ;  “எமது தாயகத்தில் எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், கணிசமான பிராந்திய சுயாட்சி மற்றும் சுயராச்சியத்தை (Self -. government )  வழங்கக்கூடிய ஒரு அரசியல் கட்டமைப்பைச் சாதகமாகப் பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்”.

ஆனால், இந்த நிலைப்பாட்டுடன்  ஒரு எச்சரிக்கையும் எப்போதும் இணைந்தே இருந்தது. மிக அழுத்தமாக ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டது.  “உள்ளக சுயநிர்ணய  உரிமையின் இந்த அம்சம் தடுக்கப்பட்டு மறுக்கப்படுமானால், மற்றும் பிராந்திய சுயநிர்ணயக் கோரிக்கை (Self – rule )  நிராகரிக்கப்படுமானால், பிரிந்து சென்று ஒரு சுதந்திர அரசை உருவாக்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை”.

எனவே, விடுதலைப் புலிகள் வெளியக  சுயநிர்ணய  உரிமை (தனிநாடு) என்ற தெரிவைத் திறந்தே வைத்திருந்தனர். 1970-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ‘நாடுகளுக்கிடையிலான நட்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்த சர்வதேச சட்டக் கோட்பாடுகள்’ பற்றிய பிரகடனம்,  1998 ஆம் ஆண்டு கியூபெக் பிரிவினை வழக்கில் (Quebec Secession case) கனடா உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றிலிருந்தே தங்களது நிலைப்பாட்டிற்கான ஆதாரத்தை  பெறுவதாக அவர்கள் வாதிட்டனர்.

விடுதலைப் புலிகளின் இந்த உறுதியான நிலைப்பாடு, அவர்கள் முன்மொழிந்த ‘இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை’யிலும்  அதற்கான விரிவான அதிகார வரம்புகள் குறித்த திட்டத்திலும்  துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டது: “மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் மேம்பாடு, தற்போதுள்ள சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துதல், வரிகள் மற்றும் வரிவிதிப்புகள் உட்பட வருவாய் திரட்டுதல், சட்டம் ஒழுங்கு மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்கள் உட்பட வடக்கு-கிழக்கின் நிர்வாகத்திற்கான முழுமையான அதிகாரத்தை இடைக்கால தன்னாட்சி அதிகார சபை கொண்டிருக்கும்”. 

மேலும், “இலங்கை அரசாங்கத்தினால் வடக்கு-கிழக்கிற்கு எனப் பயன்படுத்தப்படும் பிராந்திய நிர்வாகம் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் செயல்பாடுகளும் இதில் உள்ளடங்கும்” என்றும் தெளிவாகக் கூறப்பட்டது.

இது, பெயரளவில் இல்லாவிட்டாலும், நடைமுறையில் ஒரு தனி நாட்டுக்கான வரைபடமாகவே இருந்தது.  செல்வநாயகம் அவர்கள் தனது அரசியல் முதிர்ச்சியின் அடிப்படையில்  எமது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் சாத்தியமானது எனக் கருதிய தீர்வுக்கு அப்பாற்பட்டதாக இது அமைந்திருந்தது.

மாகாணசபை குறித்து ஒரு வார்த்தை இல்லை 

தனதுரையில் 1931 டொனமூர் அரசியலமைப்பு, 1848 சோல்பரி அரசியலமைப்பு, 1957 பண்டா — செல்வா ஒப்பந்தம், 1965 டட்லி — செல்வா ஒப்பந்தம், 1972 முலாவது குடியரசு அரசியலமைப்பு, 1976 வட்டுக்கோட்டை தீர்மானம், 1981 மாவட்ட சபைகள் சட்டம், 1983 கறுப்பு ஜூலை ,1991 மங்கள முனசிங்க தெரிவுக்குழு,  நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகள் (2002 –2006), 2004 சுனாமி நிவாரணக் கட்டமைப்பு என்று வரிசையாக சகல முயற்சிகளையும் பட்டியலிட்ட பேராசிரியர் பீரிஸ், 1987 இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை, அரசியலமைப்புக்கான  13 வது திருத்தம் மற்றும் மாகாணசபைகள் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. 

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளுமே தோல்வி கண்ட நிலையில், இந்தியாவின் நேரடித் தலையீட்டையடுத்து கொண்டுவரப்பட்ட மாகாணசபைகள்  முறைதான் (கடந்த பத்து வருடங்களாக தேர்தல்கள் நடத்தப்படாவிட்டாலும் கூட) கடந்த 38 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த சபைகளை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தம் இன்னமும் அரசியலமைப்பில் இருக்கிறது. 

மாகாண சபைத்  தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்று தென்னிலங்கையில்  எதிரணி கட்சிகளுடன் சேர்ந்து குரல் கொடுத்து வரும்.  பேராசிரியர் அது குறித்து யாழ்ப்பாணத்தில் எதையும் குறிப்பிடாமல் விட்டது திட்டமிட்ட ஒரு செயல் என்ற சந்தேம் எழுகிறது.

நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்கு முதல் நாள் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனின் இல்லத்தில் தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பீரிஸ் மாகாணசபை தேர்தல்கள் குறித்து ஆராய்ந்தார். 

அத்துடன், மாகாணசபை தேர்தல்களை தாமதமின்றி நடத்த வேண்டும் என்று தென்னிலங்கையில் இடையறாது குரல் கொடுத்துவரும் முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜெயசூரியவுடன் சேர்ந்து அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுப்பதற்கான மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற யோசனையையும் பேராசிரியர் அந்த சந்திப்பில்  வலயுறுத்தியதாகவும் நம்பகமாகத் தெரிய வருகிறது.

13 வது  திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பெரும்பாலான தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத காரணத்தினால்தான் அந்த விடயங்கள் குறித்து பேசுவதை திட்டமிட்டு அவர் தவிர்த்திருக்கிறார் போலும். மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தென்னிலங்கையில் எதிரணி கட்சிகள் கோருவது 2025 உள்ளூராட்சி தேர்தல்களில் சந்தித்ததை விடவும் மோசமான வாக்கு வீழ்ச்சிக்கு  தேசிய மக்கள் சக்தி முகங்கொடுக்க வேண்டிவரும் என்ற எதிர்பார்ப்பிலேயே அன்றி மாகாணங்களின் நிருவாகங்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயக அக்கறையில் அல்ல. 

பேராசிரியர் நிகழ்த்தப் போகும் தந்தை செல்வா நினைவுப் பேருரை அந்த மண்டபத்திற்குள் மாத்திரமல்ல, வெளியிலும் நீண்ட காலத்துக்கு எதிரொலிக்கும் என்று சுமந்திரன் வரவேற்புரையில் கூறினார். பீரிஸின் உரை வெளியில் எதிரொலிக்கிறதோ இல்லையோ மாகாண சபைகள்  தொடர்பிலான அவரின் மௌனம் மாத்திரம் தெளிவாகக் கேட்கிறது.