இலங்கையில் புத்தகத் தடுப்பும் உடைப்பு முயற்சிகளும்

இலங்கையில் புத்தகத் தடுப்பும் உடைப்பு முயற்சிகளும்

— கருணாகரன் —

இந்த இந்தப் புத்தகங்களை நாங்கள் தடுக்க வேண்டும். ஏனென்றால் அது எங்களுடைய  ‘செயல்முறை’. இந்தச் செயல்முறை முக்கியம். மக்கள் அதைப் பார்க்க வேண்டும்: அரசு கட்டுப்பாட்டில்தான் எல்லாம் உள்ளது என்று.”

அப்படியானால்இது வெறும் பாசாங்கு?”

இல்லை. இது ஒரு அடையாளம். ஒரு குறியீடு. நாங்கள் நடைமுறை உலகில் இன்னும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும்….”

நான் அதிகாரியிடம் சொல்கிறேன், “நான் இதை PDF ஆக மாற்றுவேன். அப்பொழுது எழுதுவேன், ‘இன்று சுங்கத்தில் தடுக்கப்பட்ட புத்தகம் இது. இப்போது இது உலகம் முழுவதும் வருகிறது. இனி இது உங்களுடையது‘ என்று. ஆனால் நான் இந்தப் பிரதிகளையும் விடமாட்டேன். ஏனென்றால்… இந்த எதிர்ப்பு முக்கியம். இது ஒரு குறியீடு. மக்கள் இந்தத் தடையைப் பார்க்க வேண்டும். அதற்கான எதிர்ப்பையும் அவர்கள் காண வேண்டும். இது சாட்சியமாக இருக்க வேண்டும். இது நீங்கள் செய்யும் கட்டுப்பாட்டு நாடகத்தின் சாட்சியாக. அதைப்போலஇந்தத் தடையை நாம் உடைப்பதையும் மக்கள் பார்க்க வேண்டும்”

– நான்காவது கொலை – சிறுகதையில் இருந்து

இலங்கை அரசு, சுங்கத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கு ஊடாக சில தமிழ்ப் புத்தகங்களைத் தடுத்து வைத்துள்ளது. நாட்டின் ஒருங்கிணைப்புக்கும் அமைதிக்கும் இந்தப் புத்தகங்கள் சவாலாக உள்ளன என்று இதற்குக் காரணம் சொல்லப்படுகிறது. இதில் ஷோபாசக்தி, தீபச்செல்வன், ரயாகரன், மோகன் டில்ருக்ஸன், ம. மதிவண்ணன் ஆகியோருடைய புத்தகங்கள் அடங்குகின்றன. இதற்கு முன்பு, மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் கவிஞர் சேரன், ஓவியர்கள் சனாதனன், வாசுகி மற்றும் கீதா சுகுமாரன், ஷாமினி பெரேரா ஆகியோர் இணைந்து தொகுத்த1000 பக்க மும்மொழி நூலான ‘A to Z of the Conflit‘ தடுக்கப்பட்டது. 

ரயாகரனின் ‘அரசியல் அநாதைகள்‘ என்ற நூல் 2023 இல் தடுக்கப்பட்டது. ஷோபாசக்தியின் நூல்கள் 2025 இல் தடுக்கப்பட்டன. இவை விடுவிக்கப்படவே இல்லை. தமிழினியின் கூர்வாளின் நிழலில் என்ற நூல் தடுக்கப்பட்டது. விடுவிக்கப்படவில்லை. இவ்வளவுக்கும் இந்த நூல் இலங்கையில் ஏற்கனவே தமிழிலும் சிங்களத்திலும் பதிக்கப்பட்டது. இப்படித்  மேலும் சில நூல்கள் உண்டு. அவற்றையெல்லாம் நாம் பட்டியற்படுத்துவது அவசியம். 

இந்தப் புத்தகங்களின் உள்ளடக்கங்களைப் படிக்கும்போது அரசு சொல்லும் காரணம் பொருத்தமானதில்லை; நியாயம் இல்லை என்று புரியும். அப்படிச் சொன்னாலும் அது ஷோபாசக்தி, டில்ருக்ஸன் ஆகியோருடைய புத்தகங்களுக்கு ஓரளவு பொருந்தக் கூடும். ஏனென்றால், ஷோபாசக்தியின் புத்தகம், 1990 இல் தீவுப்பகுதியில் நடத்தப்பட்ட படுகொலைகளைப் பற்றிய சான்றாதாரங்களையும் பதிவுகளையும் கொண்ட புத்தகம். அது ஓரளவுக்கு அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியது. 

டில்ருக்ஸனுடைய நாவல், தமிழ் வளரிளம் பருவ இளைஞனின் அபிலாஷைகளுக்கும் முயற்சிகளுக்கும் இனவாத அடிப்படையில் இலங்கை அரசு தடையாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது என விமர்சிப்பது; மறைமுகமாகக் குற்றஞ்சாட்டுவது. தீபச்செல்வனுடைய நூல்கள் இலங்கை அரசையும் அதனுடைய இனவாத நடவடிக்கைகளையும் விமர்சிப்பதாக இருந்தாலும் அதைக் குற்றப் புள்ளியில் நிறுத்தவில்லை. ரயாகரனுடைய புத்தகம், விடுதலைப்புலிகளையும் தமிழ்த்தேசிய அரசியலையும் விமர்சனம் செய்வது.                    ம. மதிவண்ணனுடையது இவையெல்லாவற்றுக்கும் அப்பால், தமிழ்நாட்டின் சாதிய அடிப்படையிலான சமூக அமைப்பைக் கேள்விக்குட்படுத்தும் கவிதைகளைக் கொண்டது. இலங்கை அரசுடன் எந்தச் சம்மந்தமும் இல்லாதது.

தன்னுடைய புத்தகங்கள் தடுக்கப்பட்டவுடன் ஷோபாசக்தி ஒரு போராளி போன்று மாற்று நடவடிக்கையிற் செயற்பட்டார். தடுக்கப்பட்ட தன்னுடைய ‘1990லைடன்தீவு – மண்டைதீவுப் படுகொலைகளும் புதைகுழிகளும்‘ என்ற புத்தகத்தை “இலங்கையில் எவருக்கெல்லாம் அந்தப் புத்தகம் தேவையோ அவர்களுக்கு PDF வடிவத்தில் அனுப்பி வைக்கப்படும்“ என்று அறிவித்து, அதைச் செயற்படுத்தினார். இன்னும் PDF வழங்கப்படுகிறது. 

அரசுக்கு எதிரான உடனடியான, நேரடியான எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும். இங்கே கவனிக்கப்பட  வேண்டியது, இன்று சாத்தியப்படக் கூடிய டிஜிட்டல் பதிப்பு மூலம், விதிக்கப்பட்ட தடையை மீறுதல் அல்லது உடைத்தல் எனத் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி, வாசக உரிமையை நிலைப்படுத்தினார் ஷோபாசக்தி. எழுத்தாளருக்கு ஏற்படுத்தப்பட்ட தடையைச் சாத்தியமான வழியில் கடந்தார். இதன் மூலம் தடையைப் பயனற்றதாக்கி, கேலிப்படுத்தி, அதிகாரத்தை சவால் செய்யும் விதமாக வீரியமான ஒரு செயற்பாட்டை நிறுவினார். 

இதனால் இலங்கை அரசின் முகத்தில் கரியைப் பூசியது மட்டுமல்ல, ‘உங்களுடைய தடையை உடைப்பேன், உங்களால் எம்மைத் தடுக்கவே முடியாது‘ என்பதைப் பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தவும் முடிந்தது. 

ஒடுக்கும் அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையை நெருக்கடிச் சூழலில் எப்படி மேற்கொள்ள முடியும் என்பதற்கான அறிவும் முன்னுதாரணமும் ஷோபாசக்தியினுடைய இந்த நடவடிக்கையின் மூலமாகத் தெரிகிறது. இதொரு ஊடகவியல் வெற்றியாகவும் இருக்கிறது. 

ஏனென்றால் இலங்கை அரசு பாரபட்சமான முறையில் சட்டம், நீதி வரம்புகளை மீறிய கீழ்மைகளைக் கொண்டு செயற்படும் தன்மையுடையது. ஒடுக்குமுறைச் சிந்தனையிலும் மமதையிலும் அறியாமையிலும் திளைத்துப் போய்க் கிடப்பது. சில சந்தர்ப்பங்களில் நீதியுணர்ச்சி அற்றது. அதனால்தான் அர்த்தமற்ற இந்த மாதிரியான விடயங்களில் அது சிக்கலுக்குரியமாதிரி நடந்து கொள்கிறது. அதனிடம் கோரிக்கைகளை விடுப்பதோ, அதனை  விமர்சிப்பதோ கால விரயம், சக்தி விரயம் என்பதையெல்லாம் ஷோபாசக்தி புரிந்திருக்கிறார். 

என்பதால்தான் எந்தத் தாமதமும் இல்லாமல் உடனடியாகவே அவரால் PDF  வடிவத்தை வாசர்களுக்கு வழங்கும் முடிவுக்கு வர முடிந்தது. இங்கே புத்தக விற்பனையைப் பற்றி ஷோபாசக்தி சிந்திக்கவில்லை. அது  எப்படியாவது வாசிக்கப்பட வேண்டும். அதில் பேசப்படும் விடயங்கள் பலரிடத்திலும் சென்று சேரவேண்டும் என்றே சிந்தித்தார். அந்தப் புத்தகத்தை அவர் எழுதிய நோக்கமே அதிலுள்ள உண்மைகளும் நியாயமும் உலகம் அறிய வேண்டும். அதற்கான நீதியை வழங்குவதற்கு உலகைத் தூண்ட வேண்டும். குற்றமிழைத்தவர்களை பகிரங்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆகவே அந்த நோக்கத்தில் அவர் பயணித்தார். 

ஷோபாசக்தியின் அந்த நூலும் அதற்கேற்ற ஒன்றுதான். இலங்கை அரசினால் 1990 இல் தீவுப்பகுதியில் நடத்தப்பட்ட படுகொலைப்பற்றிய சான்றாதாரங்களும் பதிவுகளும் வாக்குமூலங்களும் உள்ளடங்கிய புத்தகம். ஆகவே அதனுடைய தீவிரத்தை அவர் மேலும் விசைப்படுத்தினார். 

அதற்காக வேறு விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஷோபாசக்தி  கைவிடவில்லை. புத்தகங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பொதுவெளியில் வெளிப்படுத்தினார். தன்னுடைய எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்தார்.

அவ்வாறுதான் தன்னுடைய எல்லைக்குள் ரயாகரனும் முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது அதிகாரத்தில் இருந்த ரணில் விக்கரமசிங்க தொடக்கம் இப்போதுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க வரை கடிதங்களை எழுதியிருக்கிறார். ஆட்சித்தரப்பினரோடு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

மூன்று ஆண்டுகளாகி விட்டன. புத்தகங்கள் விடுவிக்கப்படவில்லை.

தடுக்கப்படும் புத்தகங்களுக்குப் பதிலாக எப்போதும் PDF வடிவத்தை எல்லாப் புத்தகங்களுக்கும் பகிர வேண்டும் என்று சொல்ல முடியாது. அது சாத்தியமும் இல்லை. இணைய அணுகல் இல்லாதவர்கள், மூத்த குடிமக்கள், சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் PDF வடிவத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவு அல்லது இல்லை., மின் சாதனங்களின் கட்டுப்பாடு இன்னொரு சவால். மேலும் புதிய புத்தகங்கள் தடுக்கப்பட்டால் மீண்டும் இதையே செய்வதா? (PDF ஐ வெளியிடுவதா?) என்ற கேள்வியும் உள்ளது. ஆகவே இது நிலையான தீர்வையோ, முறையான எதிர்ப்பு அமைப்பையோ உருவாக்காது.

இதேவேளை இந்தத் தடையைக் குறித்தும் அது அரசாங்கத்தின் பயனற்ற – கேலிக்குரிய செயல் எனவும் 2026 டிசெம்பரில் கருணாகரனால்  ‘நான்காவது கொலை‘ என்ற சிறுகதை எழுதப்பட்டது. புத்தகங்கள் தடுக்கப்பட்டபோது, சுங்க அதிகாரிக்கும் கருணாகரனுக்கும் இடையில் நேரடியாக நடந்த விவாதங்களை (மோதல்களை)அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. அந்தக் கதை ‘வல்லினம்‘ – இணைய இதழிலும் ‘தாகி‘ சிறுகதைத் தொகுப்பிலும் உள்ளது. 

தீபச்செல்வனுடைய புத்தகங்கள் தடுக்கப்பட்டபோது அவர் இன்னொரு வடிவத்தில் தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அவருடைய முயற்சிகள் முக்கியமாக புத்தகங்களை எப்படியாவது அரசாங்கத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்து விட வேண்டும் என்ற நோக்குடனேயே இருக்கிறது. இதற்காக ஆட்சித்தரப்பினர்களோடு தொடர்பு கொள்வது, பேசுவது. கோரிக்கை விடுவது என ஒரு வகையிலும் அதற்கு வெளியே இந்தத் தடுப்பைப் பகிரங்கப்படுத்தி, அதன் மூலமாக அரசுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுப்பது என இன்னொரு வகையிலும் இதனைச் செய்து வருகிறார். 

அரசாங்கத்துக்கு தீபச்செல்வனால் எழுதப்பட்ட கடிதமும் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் அரச பிரதிநிதிகளுடனான அவருடைய சந்திப்புகளும் ஆட்சித்தரப்பிலிருந்து புத்தகத்தைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு உதாரணங்கள். 

இதேவேளை சிங்கள, ஆங்கில ஊடகங்களும் சிங்களக் கலை இலக்கியப் படைப்பாளிகளும் காட்டூனிஸ்ட்டுகளும் இந்தத் தடையை முக்கியப்படுத்தி, அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதை அடுத்து, அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கும் இன்னொரு உபாயக் கதவு திறந்துள்ளது. இது நல்லது. ஆனால், இந்தளவுக்கு தமிழ்ப்பரப்பில் இந்தத் தடை விவகாரம், ஊடகத்திலும் இலக்கியப்பரப்பிலும் கவனம்பெறவில்லை என்பது துயரமே. தமிழ் அரசியற்பரப்பில் இந்த விடயம் கண்டு கொள்ளப்படவே இல்லை.

அரசுடன் பேசுவது, அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என இருவழிகளில் தீபச்செல்வன் எடுக்கும் முயற்சி, ஒரு வழி தோற்றால் இன்னொரு வழி இருக்கும் என்பதை உணர்த்துகிறது. இரண்டு வழிகளிலும் புத்தகங்களை மீட்டெடுப்பதே தீபச்செல்வனுடைய முதன்மை நோக்கமாக உள்ளது. 

சிங்கள எழுத்தாளர்களும் ஊடகங்களும் புத்தகத் தடுப்பை விமர்சிக்கத் தொடங்கியதைப் பயன்படுத்திக் கொள்வது இங்கே மிகவும் பொருத்தமான உத்தியாகும். சிங்கள எழுத்தாளர்கள், காட்டூனிஸ்டுகளில் சிலர் ‘தமிழ்த் தரப்பு மீது மேற்கொள்ளப்படும் பிரச்சினை’ இது என்று ஆழமாகப்  பார்க்கிறார்கள். இதனால் இது ‘மனித உரிமை, சிந்தனைச் சுதந்திரம், வெளிப்பாட்டு உரிமை, ‘கலைச் சுதந்திரப் பிரச்சினை என நியாயமான முறையில் அவர்களால் விரிக்கப்படுகிறது. குறிப்பாக சிங்களச் சூழலில் உள்ள முக்கியமான காட்டூனிஸ்டுகளான அவந்த அர்டிகல (Awantha Artigala), கிஹான் டி சிக்கேரா (Gihan de Chickera), ஷனிகா சோமதிலக்க (Shanika Somatilake), நாமல் அமரசிங்க (Namal Amarasinghe), வசந்த சிரிவர்தன (Wasantha Siriwardena) மற்றும் பிரதீப்(Pradeep) ஆகியோர் கவனத்திற்குரிய காட்டூன்களை இந்த நாட்களில் வரைந்தளித்துள்ளனர். திலீனா வீரசிங்க, டி.எம்.எஸ். ஆரியரத்தின, ஜி.ஜி. சரத் ஆனந்த, ரங்கன செனிவிரத்ன, லகிரு பெனான்டோ, ககன வர்ணகுலசூரிய, அயூப் போன்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஊடகர்களும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் இந்தப் பிரச்சினையில் கவனம் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஒன்றைக் கவனிக்கத் தவறுகின்றனர். 

தமிழ்ப் புத்தகங்களைச் சந்தேகிப்பதும் அச்சத்தின் காரணமாக அவற்றை எழுந்தமானமாக தடுப்பதும் நீண்டகாலமாகவே நடக்கிறது. இதனால் பலருடைய புத்தகங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றியெல்லாம்  இவர்கள் பேசுவதில்லை. அறிந்தோ அறியாமலோ தீபச்செல்வனுடைய புத்தகங்கள் மட்டும்தான் தடுக்கப்பட்டுள்ளன என்றொரு தோற்றம் காண்பிக்கப்படுகிறது. இது ஆபத்தானது. ஏனென்றால், தீபச்செல்வனுடைய எழுத்துகள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவை, பிரிவினையைத் தூண்டுகின்றவை என்றொரு தோற்றப்பாட்டை உருவாக்கி, புத்தகத் தடையை நியாயப்படுத்துவதற்கு அரசுக்கு வாய்ப்புண்டு. இப்போதே ஒரு அணியை இதற்காக அரசும் பிற சிங்களத் தரப்பினரும் களத்தில் இறக்கிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் அரசின் தடை நியாயமானது என்ற பொது அபிப்பிராயமொன்றை உருவாக்கினால் அதனுடைய விளைவுகள் மோசமாகி விடும். சிங்களத் தரப்பினருடன் இது குறித்துப் பேசும்போது, இதை அவர்கள் மேலும் விரிவாகச் சொல்கிறார்கள். இந்தப் புத்தகத் தடையைப் பற்றித் தாம் தொடக்கத்தில் பேசிய நிலைக்கும் தற்போதுள்ள சூழலுக்கும் இடையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடக்கத்தில் எழுத்தாளரின் உரிமை, எழுத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம்,  வெளிப்பாட்டு உரிமை பற்றியெல்லாம் பேசியவர்களில் பலர், அரசாங்கம் சில புத்தகங்களைத் தடுத்து வைத்திருப்பதில் நியாயம் உண்டுதானே என்று சொல்கிறார்களாம். ஏனென்றால் சுங்கப்பகுதியால் தடுக்கப்பட்டிருந்த தீபச்செல்வனுடைய நான்கு விதமான புத்தகங்களில் இரண்டு தலைப்புகளை அரசாங்கம் விடுவித்துள்ளது. ஏனைய இரண்டு புத்தகங்கள் சற்றுப் பிரச்சினையாகத்தான் உள்ளன. அதைப் பரிசீலிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆகவே அரசாங்கம் ஏதோ பொறுப்பான காரணங்களின் அடிப்படையில்தான் புத்தகங்களைத் தடுத்திருக்கிறது என்பது இவர்களுடைய அபிப்பிராயம் – வாதம். 

இதை முறியடிக்க வேண்டுமென்றால், பலருடைய பல புத்தகங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தி, இதொரு பொதுப் பிரச்சினை என்று உணர்த்த வேண்டும். இதேவேளை புத்தகத் தடையைப் பற்றிப் பேசுகின்றவர்களில் சிலர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு இந்தப் பிரச்சினையையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும்  சொல்லப்படுகிறது. 

குறிப்பாக டனுஷ்க பஸ்நாயக்கா போன்றவர்கள் அரசாங்கத்தை கடுந்தொனியில் விமர்சிப்பவர்கள். 

ஆனால், நூல்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தும், இலக்கிய ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்து அதன் உறுப்பினர் பதவியிலிருந்து சிங்களப் பெண் எழுத்தாளரான மாலதி கல்பனா அம்ப்ரோஸ் விலகியுள்ளார். இதைத் தவிர்த்து, NPP அரசாங்கம் நியமித்துள்ள கலாச்சார அமைச்சின் கீழுள்ள இலக்கிய, பண்பாட்டு, கலைக் குழுக்களோ அவற்றின் உறுப்பினர்களோ புத்தகத்தடையைக் குறித்து எதுவுமே பேசவில்லை. அவர்கள் மிகப் பிழையான முறையில் அமைதி பேணுகின்றனர்.

“இந்த நூல்களைத் தடுத்து வைத்துள்ளமையானது தீபச்செல்வன் என்ற ஒரு தோழருக்கு மட்டுமானதல்ல; எதிர்காலத்தில் உங்களுக்கும் எனக்கும், குறிப்பாகத் தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கும் வரவிருக்கும் ஒரு பாரிய ஒடுக்குமுறையின் முன்னறிவிப்பையே நாம் இதில் காண்கிறோம் என்பதை வலியுறுத்துகிறோம்” என்று ஒரு ஊடகச் சந்திப்பில் சிங்களக் குரல்கள் ஒலித்துள்ளன. 

ஆக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு கவனமும் எழுச்சியும் தமிழ்ப் புத்தகங்கள் மீதான தடுப்புக்கு சிங்களத்தரப்பிலிருந்து எழுந்துள்ளது. இதை மடைமாற்ற விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பொறுப்பாகச் சிந்திப்போரின் பணி. 

இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் மூலம்  புத்தகங்களை மீட்டெடுப்பது மட்டுமல்ல, அரசின் தணிக்கை – தடை –  மனப்பான்மைக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு இயக்கத்தையும் உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆக தீபச்செல்வனுடைய தொடக்கம் வரவேற்கப்பட வேண்டியது. 

ஆனால், அவர் இந்தப் போராட்டத்தை பரந்த அளவிலானதாக முன்னெடுப்பதற்கும், பொதுப் பிரச்சினைக்குரியது என்று விளக்குவதற்கும் உண்மையை வெளிப்படுத்துவதற்கும் பின்னிற்கிறார். இது தொடர்பாக அவர் வழங்குகின்ற நேர்காணல்களிலும் பொது வெளியில் நடத்தப்படுகின்ற உரையாடல்களிலும் எழுதுகின்ற பதிவுகளிலும் தன்னுடைய புத்தகங்கள், தன்னுடைய பிரச்சினை என்ற அளவில்தான் எதையும் பார்க்கின்றார்; பேசுகிறாரே தவிர, இதற்கு முன்பும் பலருடைய புத்தகங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள், பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்  என்ற வரலாற்று உண்மைகளையெல்லாம் அவர் சொல்வதில்லை. தமிழ்ப் புத்தகங்களுக்கு அரச தடை என்ற கூட்டுப் போராட்டங்களில் பங்கேற்காமல், அவற்றைத் தவிர்த்துவிட்டு, அந்தப் போராட்டங்களைத் தன்வயப்படுத்தும் முறையில் தன்னடையாளப் போராட்டமாக மாற்றுவதே அவருடைய தேர்வாக உள்ளது. கிளிநொச்சியில் 26.04.2026 இல் நடந்த புத்தகத் தடைக்கெதிரான போராட்டம் அப்படி மாற்றப்பட்ட ஒன்றாகும். அதில் தீபச்செல்வனுடைய புத்தகங்களே தடுக்கப்பட்டன என்று காட்டப்பட்டது. இதைச் செய்தவர்கள் தீபச்செல்வனுடைய கலை, இலக்கிய, அரசியற் பங்காளிகள். இது பகிரங்கமாக நடந்த தவறு. புத்தக அபகரிப்பையும் விட போராட்ட அபகரிப்பு மோசமானது என்று இதைப் பலரும் விமர்சித்தனர். இதில் தனக்கு உடன்பாடில்லை. இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை. இது கண்டிக்க வேண்டியது என்று அவர் இதுவரையில் சொல்லவில்லை 

ஒரு நேர்மையான படைப்பாளி வரலாற்றுக்கும் உண்மைக்கும் பொறுப்பாளியாகவே இருக்க முடியும். அப்படித்தான் இருக்க வேண்டும். சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அடிமைப்பட்டு விடக்கூடாது. ஆனால், தீபச்செல்வன் தன்னை மையப்படுத்தியே, தன்னை முதன்மைப்படுத்தியே எப்போதும் பேசுகிறார். எப்பொழுதும் தன்னுடைய எழுத்துகளில் மிகைத் தோற்றத்தைக் காட்டி வருவதைப்போலவே இப்போதும் நடக்கிறது. இதன்மூலம் அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கைக் கதையையே மிகுபுனைவாகக் கட்டமைக்கிறார். ‘இலங்கையில் தமிழராக வாழ்வதே சவால்‘, ‘துப்பாக்கிகளின் கண்காணிப்புகளின் மத்தியிலும் சப்பாத்துகளின் அச்சுறுத்தல்களின் கீழும்தான் தான் வாழ வேண்டியிருக்கிறது.‘ ‘முட்கம்பிச் சுருள்களின் நெருக்கடிகளிலிருந்தே தன்னுடைய எழுத்துகள் பிறக்கின்றன‘  என்று தன்னையும் தானிருக்கும் சூழலையும் அதீதமாகக் கட்டமைக்கிறார். இந்த மாதிரியான கதைகளுக்கு தமிழ்நாட்டிலும் தென்னிலங்கையிலும் சில ஊடகங்கள் முதன்மை இடங்களை அளிக்கின்றன. 

ஆனால், தீபச்செல்வனுடைய சூழலில் வாழ்கின்றவர்களுக்கும் ஏனைய தமிழ் கலை, இலக்கியவாதிகளுக்கும் இங்கே (இலங்கையில்) உள்ள சூழல் பற்றித் தெரியும். அதனுடைய நிலவரத்தை எல்லோரும் அறிந்து வைத்துள்ளனர். தீபச்செல்வனையும் விடக் கடுமையான முறையில்  அரசாங்கத்தையும் போர்க்கால நிலவரத்தையும் எழுதிய நிலாந்தன், சித்தாந்தன், தானா விஸ்ணு, சாந்தன், ஜிஃரிஹசன், அறபாத், யோ. கர்ணன் எனப் பலர் இலங்கையில் உள்ளனர். அவர்கள் யாரும் இப்படிப் புலம்பவில்லை. 

இலங்கையில் தமிழ்மொழிக்கும் தமிழ் மொழிபேசும் சமூகத்தினருக்கும்  உள்ள நெருக்கடிகளும் சவால்களும் அதிகம்தான். ஆனால், அது தீபச்செல்வன் சொல்வதைப்போன்றதல்ல. இதனால் அவர் உண்மையை விட்டு வெகு தொலைவில் நிற்க வேண்டியுள்ளது. என்பதால்தான் ஏற்கனவே தடுக்கப்பட்ட தமிழ்ப் புத்தகங்களின் எழுத்தாளர்களோடும் ஏனைய தமிழ் எழுத்தாளர்கள், தடைக்கெதிராகப் போராடும் அமைப்புகளோடும் இணைந்து செயற்படுவதற்குப் பின்னிற்க வேண்டியிருக்கிறது. ஒன்று ஏனைய எழுத்தாளர்களின் எழுத்துகளின் உள்ளடக்கத்தோடு அவருக்குள்ள உடன்பாடின்மை காரணமாக இருக்கலாம். இரண்டாவது, அவர்களுடைய யதார்த்தத்தையும் உண்மையையும் எதிர்கொள்ள முடியாதிருக்கலாம். அல்லது இந்த எதிர்ப்புப் போராட்டங்களை விட அரசிடம் பேசிப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் நம்பக்கூடும். ஆனால், ஏனைய எழுத்தாளர்களும் தடைக்கெதிரான செயற்பாட்டாளர்களும் ஜனநாயக அடிப்படையில் தங்களுடைய எதிர்ப்புக் குரலைக் கூட்டாக ஒருங்கிணைக்கின்றனர். அதுதான் பலமானது என்றும் நம்புகின்றனர். தீபச்செல்வனோ இது தனக்கு மட்டுமான பிரச்சினை, தனக்கான நெருக்கடி என்ற விதமாகவே எதையும் அடையாளப்படுத்த முயற்சிக்கிறார். இதனால், தற்போது நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தின் வளர்ச்சியும் வீரியமும் எப்படி அமையும்? இது எவ்வளவு சாத்தியமானது என்ற கேள்வி எழுகிறது. 

ஏனென்றால், சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிங்கள – ஆங்கில ஊடகங்களின் ஆதரவு தற்போது கிடைத்தாலும், அது போதுமானதா? தொடர்ச்சியாக இருக்குமா? 

தீபச்செல்வனுடைய எழுத்துகளில் உள்ள தமிழ்த்தேசிய – விடுதலைப்புலிகள் சார்பான அரசியல் உள்ளடக்கமும் கலைத்திறனும் சிங்களத்தரப்பில் விமர்சனத்துக்குள்ளானால் இந்த எதிர்ப்புப் போராட்டம் கேள்விக்குள்ளாகலாம். குறிப்பாக தீபச்செல்வனுடைய எழுத்துகள் அனைத்துத் தரப்பினது ஜனநாயக மறுப்பு, மனித உரிமை மீறல், ஏனைய சமூகங்களுடனான ஊடாட்டம் போன்றவற்றைப் பேசுவது குறைவு. மாறாக தேர்வு செய்யப்பட்ட உண்மைகள் (Selected facts) என்ற அடிப்படையிலானவை. வாசிப்போருக்கு இது புரியும். இது பரந்தளவிலான தொடர் ஆதரவைப் பெறுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். தவிர, இப்பொழுது தீபச்செல்வனுக்கு ஆதரவாகத் திரண்டிருக்கின்ற சிங்கள எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஊடகங்களும் கொண்டிருக்கும் தீவிர நிலை தொடர்ச்சியான போராட்டத்தில் இருக்குமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

ஏனெனில் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்று சொல்வதற்கும் நடந்தவை குற்றம், நடப்பவை அநீதி என்று ஒப்புக் கொள்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், இந்த ஊடகங்களும் எழுத்தாளர்களும் இலங்கையின் இன ஒடுக்குமுறையைக் குறித்து எப்படியான உள நிலையோடும் செயற்பாட்டு வரலாற்றோடும் உள்ளனர் என்ற கேள்விகள் உண்டு. கடந்த காலத்தில் இவற்றில் மிகச் சில எழுத்தாளர்களையும் ஒன்றிரண்டு ஊடகங்களையும் தவிர, ஏனைய எந்தத் தரப்பும் தமிழ்க் கலை, இலக்கியம் குறித்தோ அவற்றின் போக்கு, நிலை பற்றியோ கவனம் செலுத்தியதில்லை. இன்று தீபச்செல்வனுடைய புத்தகத் தடை விடயத்திற்கு முதன்மை அளிக்கும் ஆங்கில, சிங்கள ஊடகங்கள் இதற்கு முந்திய ஆட்சிக் காலத்தில் நடந்த புத்தகத் தடுப்புகளைப் பற்றி ஒரு சொல் எழுதியதோ, பேசியதோ இல்லை. கனத்த மௌனம் அல்லது பாராமுகமே இருந்தது. அப்படி முன்னுரிமை அளித்தாலும் அது போராட்டத்தை விமர்சிக்கும் அல்லது தாம் தெரிவு செய்யும் பிரதிகளுக்கானதாகவே இருந்தது. அது கூட அபூர்வமாகவே நடந்தது. மட்டுமல்ல, இன ஐக்கியத்தையும் ஒடுக்குமுறையின் பாதிப்புகளையும் போரின் கொடூரத்தையும் சிறப்பான முறையில் வெளிப்படுத்திய பிற கலை, இலக்கிய வெளிப்பாடுகளைப் பற்றிக் கூட உரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசியதில்லை. இதை இங்கே குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. இந்த உண்மையை, இந்த யதார்த்தத்தை மறந்து நாம் புதிய நம்பிக்கைகளில் முதலீடு செய்ய முடியாது. ஆகவே இந்த ஆதரவுத் தரப்பினரின் அரசியல் நிலைப்பாடுகள் எப்படியானது என்பது கேள்விக்குரியது.

இதைக் கடந்து, ஒரு தொகுதியினர் இனவாதக் கண்ணோட்டத்துக்கு எதிரானவர்களாக, எப்போதும் நீதியுணர்வோடு இருப்பவர்கள் என்பதையும் கவனத்திற் கொள்கிறோம். அது சிறிய அணி. எப்படியோ இவையெல்லாம் தீபச்செல்வனுக்கு ஆதரவாகவும் அரசின் புத்தகத் தடுப்புக்கு எதிராகவும் பலரையும் ஒன்று திரட்டியுள்ளது. சிங்கள ஊடகங்களையும் கலைஞர்களையும் உடன் இணைத்துக் கொண்டு வருவது ஒரு முக்கியமான உத்தி – ஏனெனில் இலங்கையில் உண்மையான மாற்றம் நிகழ வேண்டுமானால், அது  எப்படியோ சிங்கள சமூகத்தின் ஒரு பகுதியினரின் ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை. அதை விரிந்த தளத்தில் இலங்கையிலுள்ள அனைத்துச் சமூகத்தினரின் பங்கேற்பாக மாற்றி, வளர்த்தெடுக்க வேண்டும். 

ஒரு சிறந்த எதிர்ப்பு இயக்கத்தில் பல வகையான உத்திகளும் இடம்பெற வேண்டும் என்பதை மறுக்கவில்லை. ஆனால், இதனை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றால்,  இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் ‘ அரசின் தணிக்கை’ பற்றியும், ‘தமிழ் மக்களின் அறிவுச் சுதந்திரத்தை மறுப்பது’ பற்றியும் வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். அதற்கு தமிழ் எழுத்தாளர்கள், பதிப்பகத்தினர், சிவில் சமூகம் மற்றும் சிங்கள எழுத்தாளர்கள், கருத்துரிமையாளர்கள் ஒன்றிணைந்து அமைப்பாகத் தொழிற்படுவது அவசியம். பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பிரச்சினைகளையும் தவிர்க்காமல் பேசி பொதுப் பிரச்சினை ஆக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒரு கூட்டுக்குரலை நாம் உருவாக்க முடியும். அந்தக் கூட்டுக்குரலுக்கே வலிமை அதிகம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *