— அ. வரதராஜா பெருமாள்
முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர் —
சில வாரங்களுக்கு முன்னர் தமிழர்கள் மத்தியிலுள்ள பிரபலமான கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் சங்க பிரமுகர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியற் தீரவு காண்பதற்கான விடயங்களில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் ஆர்வமுடன் செயற்படப் போகிறார்கள் என்றதொரு செய்தி வெளிவந்ததும் தமிழர்களிடையேயுள்ள அரசியற் செயற்பாட்டார்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சந்திப்பில் உண்மையாக என்ன நடந்தது, இந்தச் சந்திப்பு எதை நோக்கி முன்னேறப் போகிறது என்பன பற்றிய கற்பிதங்கள் பகிரங்கத்தில் வெவ்வேறானதாக இருக்கின்ற போதிலும் தமிழர்களுக்கான அரசியற் தீர்வு விடயத்தில் அக்கறை கொண்டோரிடையே ஓரு வகையாக நம்பிக்கை கலந்த எதிர்பார்க்கையையும் அது ஏற்படுத்தியது.
தமிழர்களின் மத்தியிலுள்ள அரசியற் கட்சிகளிடையே ‘ஒற்றுமை’ ஏற்பட வேண்டும் என்பது அடிக்கடி இங்கு ஒரு பேசு பொருளாக இருந்து வருகின்றது. இந்த ‘ஒற்றுமை’ என்ற சொல் இங்கு பொத்தாம் பொதுவாக பாவிக்கப்படுகிறதே தவிர இந்த சொல்லுக்கு திட்டவட்டமாக என்ன அரத்தம் – யார் யாருக்கிடையில் ஒற்றுமை, எந்த அரசியல் சமூக கோட்பாட்டின் அடிப்படையில் ஒற்றுமை, எந்த இலக்கினை அடைவதற்கான ஒற்றுமை, எந்த கட்டமைப்பு முறையிலான ஒற்றுமை என்பன பற்றி எவரிடமும் தெளிவான கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்கள் சமூகரீதியாக சிதைந்து சிதறிக் கிடக்கும் நிலை மற்றும் இப்போது தமிழர்கள் அரசியல்ரீதியாக மிகவும் கீழான – பலயீனமான நிலையில் இருக்கின்றமை என்பனவற்றின் விளைவாக இவ்வாறானதொரு பொது அக்கறை தமிழர் சமூகத்தில் பரவலாக வெளிப்படுகிறதெனலாம். எனினும் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினரும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சந்தித்தது தமிழர் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக அல்ல என்பது தெளிவாகும்.
மேட்டு மனோநிலை கொண்டோர்
கூட்டாக ஆரம்பித்துள்ள ஒரு பயணம்
1981ம் ஆண்டு வரை இலங்கைத் தமிழர்களின் தேர்தல் அரசியற் களத்தில் சட்டத்தரணிகளே செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர். தமிழர்களிடையே அப்போதிருந்த கட்சிகளின் தலைமைப் பிரமுகர்கள் பெரும்பாலும் சட்டத்தரணிகளாகவே இருந்தனர். நாடாளுமன்றத்திலோ அல்லது உள்ளுராட்சி சபைகளிலோ உறுப்பினர்களாக இருந்த சட்டத்தரணிகள் மற்றும் அதற்கான தேர்தல்களில் போட்டியிடும் சட்டத்தரணிகள் மட்டுமல்லாது அப்போது அரசியல்ரீதியாக அக்கறை கொண்ட சட்டத்தரணிகள் பெரும்பாலும் தாங்கள் ஆதரிக்கின்ற கட்சிகளோடு தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்டிக் கொள்பவர்களாக இருந்தனர் – அக்கட்சிகளுக்காக பகிரங்கமாகவும் செயற்பட்டனர்.
இப்போது தமிழர்களிடையேயுள்ள சில தேர்தல் அரசியற் கட்சிகளின் தலைமை இடத்தில் சில சட்டத்தரணிகள் இருப்பினும், இக்கட்சிகளின் உறுப்புரிமைக்கு வெளியேயிருந்து கொண்டு, ஆனால் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சட்டத்தரணிகள் பெரும்பாலும் தாம் ஆதரிக்கும் கட்சிகளோடு தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்டுவதில்லை. அரசியற் கட்சிகளோடு தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்டாமல், ஆனால் அவற்றின் அரசியல் நிலைப்பாட்டை மறைமுகமாக நியாயப்படுத்துகிற, பட்டும் படாமலும் ஆதரித்து பிரச்சாரம் செய்கிற சட்டத்தரணிகள் சிலரை ஆங்காங்கே இங்கே காண முடிகிறது. தமது அரசியற் சிந்தனைகளோடு ஒத்துப் போகிற கட்சிகளோடு கூட சட்டத்தரணிகள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள தயாராக இல்லாமை என்பது இலங்கைத் தமிழர்களின் அரசியலில் ஒரு விசேட அம்சமே.
புதிதாக ஏற்பட்டுள்ள உற்சாகம்
ஆக்கபூர்வமானதாக அமையட்டும்
இதுகால வரையான தமிழர் அரசியலில், அதாவது ஆயுதக் போராட்ட காலத்திலும் சரி அதற்கு முந்திய காலத்திலும் சரி, அதற்குப் பிந்திய கடந்த 16 ஆண்டுகளிலும் சரி, தமிழர்களின் அரசியற் தீர்வு தொடர்பாக தமிழர்கள் மத்தியிலுள்ள சட்டத்தரணிகள் தாங்களாக – ஒரு சட்டத்தரணிகள் குழுவாக எந்த வகையிலும் செயற்படுவதற்கு அக்கறை காட்டியதில்லை. இப்போது தமிழ் சட்டத்தரணிகள், தமது தனிப்பட்ட அரசியற் கட்சிகளுடனான தொடர்புகளுக்கு அப்பால் சட்டத்தரணிகள் குழுவாக, இவ்வளவு காலம் தாழ்த்தியேனும், தமிழர்களுக்கான அரசியற் தீர்வு தொடர்பாக தமது பங்களிப்பை செலுத்த முன்வந்திருக்கின்றமை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.
தமிழர்கள் மத்தியிலுள்ள அரசியற் கட்சிகளோடு தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினர்
● எவ்வாறு ஒரு ஸ்தாபன கட்டமைப்பு பூர்வமாக ஒருங்கிணைந்து செயற்படப் போகிறார்கள் என்பது இன்னமும் தெளிவாக இல்லை.
● அவ்வாறு ஒரு ஸ்தாபன கட்டமைப்பு பூர்வமாக செயற்படுவது சாத்தியமா?
● அதற்கான கள நிலவரம் உண்டா?
● இங்குள்ள தமிழ் அரசியற் கட்சிகளின் அணிகள் ஒவ்வொன்றும், யதார்த்த பூர்வமாக நிலவுகின்ற உண்மைகளை உணர்ந்து, தமிழர்களுக்கான அரசியற் தீர்வு தொடர்பில் ஒரு பக்க அறிக்கையைக் கூட ஒற்றுமையாக வரைந்து ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு பகைமை கொண்டவர்களாக இருக்கையில், தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினர் எவ்வாறு தமிழர்களுக்கான அரசியற் தீர்வு தொடர்பாக இந்த தமிழ்க்கட்சிகளுடன் ஒருங்கிணைந்ததோர் செயற்பாட்டு அரங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்?
என்கின்ற தொடர் கேள்விகள் எழுகின்றன.
இங்குள்ள தமிழ் கட்சிகள் பலவிதம்
இதில் சட்டத்தரணிகள் சங்கம் எவ்விதம்?
தமிழ் அரசியற் கட்சிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறுபட்ட விதமாகவும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட விதமாகவும் தமிழர்களுக்கான அரசியற் தீர்வு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பது தமிழர்களின் அரசியலை தொடர்ந்து பலயீனமானதாக ஆக்குகின்றதென பொதுவாக ஒரு கருத்து நிலவுகின்றது. ஆனபடியாலேயே, தமிழ் அரசியற் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாகவோ அல்லது தனித்தனியாகவோ, ஒரே வகைப்பட்ட அரசியற் தீரவை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தி, அதற்கு தங்களது சட்ட அறிவை மற்றும் அனுபவங்களை பயன்படுத்தி உதவுவதற்கு, மூத்த தமிழ் சட்டத் தரணிகள் பலர் முயற்சிப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த தமிழ் சட்டத்தரணிகளுக்கும் தமிழ் அரசியற் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்பின் மையக்கரு தமிழர்களுக்கான அரசியற் தீர்வு பற்றிய விடயத்தை ஒரு முகப்படுத்தல் என்பதே
அப்படியாயின், தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினர், தமிழ் அரசியற் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகளை அரவணைத்தபடி, அதேவேளை தாங்களாக தமிழர்களுக்கான ஓர் அரசியற் தீர்வு வரைவுத் திட்டத்தை தயாரித்து முன்வைப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பினால், அப்படியல்ல, தமிழ் அரசியற் கட்சிகள் தமிழர்களுக்கான அரசியற் தீர்வு தொடர்பாக கொள்கைரீதியான ஓர் அரசியல் வரைபை முன்வைக்க வேண்டும் என்றும் அதற்கான சட்டரீதியாக முழுமைப்படுத்தப்பட்ட வரைபை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டத்தினை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொள்ளும் எனவும் மூத்த தமிழ் சட்ட வல்லுனர்கள் வலியுறுத்தியிருப்பதாக அறியப்படுகிறது.
யாழ் படையப்பாக்களினது மட்டுமல்ல
பேரன்களின் வழியும் தனி வழி தான்
இந்த விடயத்தில் திரு கஜேந்திரகுமார் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் (த.தே.ம) முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் மற்றும் அந்த முன்னணியின் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கும் சட்டத்தரணிகளும் உடனடியாக, தமது முன்னணியின் அரசியல் வரைபை மேற்கொள்ளும் வேலைத் திட்டத்தில் இறங்கிவிட்டதாக தெரிகின்றது. எந்த வகுப்புக்குப் போனாலும் அவர்களுக்கு ஒரே பாடப் புத்தகம்தான் – இலங்கையின் அரசியல் யாப்பானது (1) தமிழர்கள் ஒரு தேசம் (2) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒருங்கே இணைந்ததே தமிழர்களின் தேசம் (3) தமிழர் தேசத்தின் மீது தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு எனும் மூன்றையும் அங்கீகரித்து அதற்கு பொருந்தியதாக, மீளப் பெற முடியாத வகையில் அதிகாரப் பிரினைகளைக் (irretrievable Division of Powers) கொண்ட சமஸ்டி அரச கட்டமைப்பே அரசியற் தீர்வு. இதுவே த.தே.ம. முன்னணியினரின் ஒரே வாய்ப்பாடு.
முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் மணிவண்ணன் ஆகியோரின் தலைமையில் அமைந்த ‘தமிழ் மக்கள் கூட்டணி’யினர் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கோருகின்ற போதிலும், தமிழர்களுக்கான அரசியற் தீர்வு விடயத்தில், ஏறத்தாழ த.தே.ம. முன்னணியினரின் அரசியல் நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் தமிழ் மக்கள் கூட்டணியினரும் 13வது திருத்தம் மூலமாக அமைந்துள்ள அதிகாரப் பகிர்வு பற்றி – அதற்கான திருத்தங்கள் பற்றியோ அல்லது அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியோ – எந்த வகையிலும் பேசத் தயாராக இல்லை. அத்துடன் இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்புக்குள் எந்த வகையிலும் தமிழர்களுக்கான ஓர் அரசியற் தீர்வு அமைய முடியாது – அப்படி ஒரு தீர்வை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளனர். இந்த இருவரும் தேர்தல்களுக்காக ஈருடல் கொண்டிருந்தாலும் அடிப்படையில் ஓருயிர் கொண்ட அரசியல் இணையர்களே.
இதேவேளை, தமிழரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளும் பொதுவாக வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்த் தேசம் மற்றும் தமிழர்களின் சுயநிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையிலான சமஸ்டியே முழுமையான – நிரந்தரமான அரசியற் தீர்வாக அமைய முடியும் என்ற முகவுரையை தவற விடுவதில்லை. அதனோடு கூடவே, அரசியல் யாப்பில் 13வது திருத்தமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளடக்கப்பட்ட மாகாண ஆட்சி முறையை, முழுமையான அதிகாரங்களைக் கொண்டதாக நடைமுறைப்படுத்துவது முதலில் அவசியம் என வலியுறுத்தி வருகிறார்கள்.
எத்தனை முறை குளிப்பாட்டினாலும்
எருமைகளுக்கு சேறுதான் சுகம்
தமிழரசுக் கட்சியின் ஒற்றையாட்சி மற்றும் ஒருமித்த ஆட்சி முறை என்கிற விவாதமும், 13வது திருத்தம் உட்பட இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என இந்திய அரசிடம் முன் வைக்கும் கோரிக்கையும் ஒரு புறமிருக்க, இங்கு இவர்கள் நடைமுறையில் கடைப்பிடிக்கிற அரசியற் செயற்பாடுகளின் அடிப்படையான பண்புகள் ஒரு சமூக அரசியல் இயக்கத்திற்குரிய வகையில் காத்திரமானவைகளாக இல்லை. மாறாக மாமூலான தேர்தல் அரசியற் கட்சிகளின் விளம்பரத்தனத்தையே கொண்டிருக்கின்றன.
தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமக்கே உரிய விதத்தில், இலங்கையின் அரசியல் யாப்பில் 13வது திருத்தம் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோருகிற பிரச்சாரங்களை அவ்வப்போது மேற்கொள்கிறார்கள், ஆனால்,
● இவர்கள் மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தினால் போட்டி போடத் தயாராக இருக்கிறார்களே தவிர, கடந்த எட்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வைப்பதற்கான வலுவானதொரு தொடர் இயக்கத்தை கூட்டாக – அதே எண்ணம் கொண்ட அனைத்து சக்திகளையும் அணி திரட்டியபடி – முன்னெடுப்பவர்களாக இல்லை.
மேலும்,
● 13வது திருத்தம் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக வழங்குவது தொடர்பாக தேவையான அரசியற் கோரிக்கைகளையும் அதற்கான ஒரு முழுமையான – தெளிவான அரசியல் வரைபையும் எழுத்து மூலம் தயாரித்து வெளியிடும் வேலைத்திட்டத்தில் – அதற்கு இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவு திரட்டும் வேலைத் திட்டத்தில் இதுவரை இவர்கள் உளப்பூர்வமான ஈடுபாடு கொண்டிருப்பதாக தெரியவில்லை.
இவர்களினுடைய அரசியலின் இன்னொரு மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால், திரு. கஜேந்திரகுமாரின் அரசியல் வளையத்துக்கு உள்ளே சுழல்வதில்தான் – அதாவது தாங்களும் சமஸ்டிக்காரர்கள்தான் என்று நிரூபிப்பதிலேதான் பெரும்பாலும் இவர்களது அரசியல் காலம் ஓடிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்களுக்கான அரசியற் தீர்வுக்கான ஒரு பொது அரசியல் வரைபு என்கிற விடயம் வருகையில், சமஸ்டி அடிப்படையிலான ஓர் அரச கட்டமைப்புக்கான கொள்கைகளைக் கொண்டதாகத்தான் இவர்களது அரசியல் நிலைப்பாடு அமைகிறதென்றால், இவர்கள் திரு கஜேந்திரகுமாரின் தலைமையில் அமைந்த த.தே.ம. முன்னணியுடன் இணைந்தே, அந்த வரைபை சுலபமாக ஒரே வரைபாக மேற்கொண்டு விடலாமே? அதற்கு தமிழ் சட்ட வல்லுனர்களின் அறிவும் அனுபவங்களும் தேவையே இல்லை.
சமஸ்டி அடிப்படையிலான எந்தவொரு அரசியற் தீர்வு வரைபும் அவர்களது கட்சி அலுவலகத்தைத் தாண்டி ஓரடி கூட முன்னோக்கிச் செல்லாது என்ற பொது அறிவு இந்த தமிழ்க் கட்சிகளுக்கெல்லாம் நிச்சயமாக இருக்கும். சமஸ்டி தீர்வுத் திட்டமானது இந்த கட்சிகளுக்கு அவர்களது தேர்தற் காலங்களில், தாங்கள்தான் தமிழ் மக்களுக்கான தீர்வை முன் வைப்பதில் அதி உச்சமான மாவீரர்கள் என பிரச்சாரம் பண்ணுவதற்கு மட்டுமே பயன்படும். இலங்கையில் சமஸ்டிக் கோரிக்கையோடு கடந்த 75 ஆண்டுகளாக பயணித்த தமிழர்கள் தொடர்ந்தும் இன்னுமொரு 75 ஆண்டு காலம் அப்படியே பயணிக்கலாம். இலங்கையில் நிலவும் அரசியலும், தமிழர்களின் இப்போதைய பரிதாப அரசியல் நிலையும் சமஸ்டிக்கான எந்த சாத்தியத்தையும் காட்டவில்லை என்பதை படித்த தமிழர் நன்கு அறிவர்.
நந்திக் கடல் வரை தமிழீழக் கனவு
கனடா வரையே சமஸ்டிக் கனவு
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாங்களும் சமஸ்டிக்காரர்கள்தான் என்று கூறிக்கொள்கிற போதிலும், திரு கஜேந்திரகுமாரும் அவரது அணியினரும் 13வது திருத்த ஏற்பாடுகளையும் அதன் அடிப்படையிலான மாகாண ஆட்சி முறையையும் முற்றாக நிராகரிப்பது தவறானது என்றும் திரு கஜேந்திர குமார் அணியினரின் சமஸ்டிக் கோரிக்கையானது அவர்களது இயலாமைகளையும் கற்பனா வாதங்களையும் அடிப்படையாகக் கொண்டது என்பதனையும் மிக உறுதியாகவே கூறி வருகிறார்கள். இதேவேளை, தமிழரசுக் கட்சியினர் சமஸ்டிக் கோரிக்கையை அடிக்கடி உமிழ்ந்தபடியேதான், அரசியல் யாப்பின் 13வது திருத்த ஏற்பாடுகள் முறையாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள்.
எனவே, அரசியல் யாப்பின் 13வது திருத்தம் பற்றி விழுங்கி விழுங்கி பேசுவதை விடுத்து, அதன் ஏற்பாடுகளிலும் 1987ம் ஆண்டின் மாகாண சபைகள் சட்டத்திலும் உள்ள குறைகளை, குறைபாடுகளை, குழறுபடிகளை நீக்கி அதில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தெளிவாக பகிருகின்ற வகையாக ஓர் அரசியல் வரைபை மேற்கொள்வது பற்றி, தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் முடிந்தளவு ஏனைய அரசியற் கட்சிகளின் தலைவர்களையும் இணைத்து கூட்டாக சிந்திப்தே இன்றைய காலகட்டத்துக்கு அவசியமாகும் – பொருத்தமானதாகும்.
அதைவிடுத்து, வடக்கையும் கிழக்கையையும் இணைத்த இந்திய – இலங்கை ஒப்பந்தமே வேண்டும் என்றும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தீர்வுத் திட்டமே சிறந்தது என்றும், மைத்திரி – ரணில் ஆட்சிக்கால ஒருமித்த ஆட்சிக் கருத்தையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும் இனியும் ஏட்டுச் சுரைக்காய் கதைகள் பேசிக் கொண்டிருந்தால் இலங்கைவாழ் தமிழர்களின் அரசியல் பொருளாதாரம் தொடர்ந்தும் பாதாளத்திலேயே கிடக்கும்.
இருப்பதை இழந்து விடாமல் இருக்க
உருப்படியாக கடமை ஆற்றுங்கள்
தமிழர்கள் மத்தியில், பல்கலைக்கழகங்களில் சட்டத்துறையில் பேராசிரியர்களாக, சிரேஸ்ட விரிவுரையாளர்களாக இருந்த – இப்போதும் இருக்கின்ற சமூக ஆர்வலர்கள் பலர் உள்ளனர். சட்டத் தொழிற் துறையில் நீண்டகால அனுபவங்கள் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் பலர் இப்போதும் சமூக அக்கறையோடு இருக்கிறார்கள். இந்த வகையில் தமிழர்களுக்கான அரசியல் ரீதியான முன்னேற்றம் தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் பங்களிப்பு மிக முக்கியமானது – அவசியமானது.
தமிழ் சட்ட வல்லுனர்களே!
உங்களது மனச்சாட்சிக்கு உண்மையானவர்களாக நீங்கள் உங்களது பங்களிப்பை மேற்கொள்ளும்போதே அது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். உங்கள் சமூக பங்களிப்பு மிக முக்கியமானது – அவசியமானது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
அதற்கு முதலில் நீங்கள் பதில் காண வேண்டிய சில அடிப்படையான கேள்விகள் உள்ளன.
முதலாவதாக, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியினர் எதிர்க் கட்சியாக இருந்த கால கட்டத்தில் கூறியபடி எவ்வகையிலாயினும் ஒரு புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருவதற்கு உளப்பூர்வமாக முயற்சிப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
அப்படித்தான் அவர்கள் தங்களது சில காரணங்களுக்காக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்திலேயே ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டு வர முற்பட்டாலும் அதில் தமிழர்களுக்கான அரசியற் தீர்வு விடயம் தொடர்பில், 13வது திருத்த ஏற்பாடுகளுக்கும் மேலாக முன்னேற்றகரமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?
இதைப் பற்றி நீங்கள் தெரிந்திருந்தும், ‘தமிழர்களின் நியாயமான அரசியற் தீர்வுத் திட்டத்தை – தமிழர்களின் ஒருமித்த அரசியற் தீர்வுக் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை’ எனக் கூறியபடி, தமிழர்கள் 2009ம் ஆண்டுக்கு முந்திய பழைய அரசியலை ஒரு புதிய வடிவில் எடுத்து மீண்டும் வீறு கொண்டு செயற்பட வழி வகுக்கலாம் என்கிறீர்களா? அது சரியா பிழையா என்பது ஒரு புறமிருக்க, அப்படியானதொரு அரசியற் பயணத்தை தமிழர்கள் மேற்கொள்ள எங்காவது எப்படியாவது ஒரு பாதை – வழிமுறை இருக்கிறதென நீங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் நம்புகிறீர்களா?
இரண்டாவதாக, 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்று என்ற கோரிக்கைக்கு அப்பால், எந்த அளவிலும் எந்த வகையிலும் தம்முடன் நட்பாக உள்ள தமிழ் அரசியற் கட்சிகளுடன் கூட இணைந்து செயற்படுவதற்கு முஸ்லிம் மக்களினுடைய கட்சிகளின் தலைவர்களும், மலையக தமிழ் மக்களினுடைய கட்சிகளின் தலைவர்களும் தயாராக இல்லை என்பதனை ஏற்கனவே இலங்கைத் தமிழர்களினுடைய அரசியற் கட்சிகளின் தலைவர்களுக்கு திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்கள். சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளின் மத்தியிலும் இதே நிலைமைதான் உள்ளது. இந்த மூன்று பகுதியினரும் 13வது திருத்த ஏற்பாடுகளோடு ஒட்டிய அரசியல் வேலைத் திட்டத்துக்கு மட்டுமே தயாராக உள்ளனர் என்பது பொதுவாக அறியப்பட்ட விடயமே..
இப்படியான ஒரு நிலைமையில் சட்டத் தரணிகள் சங்கத்தினரரகிய நீங்கள் தமிழர்களின் அரசியலை ஒரு முன்னேற்றப்பாதையில் கொண்டு போய் நிறுத்துவதற்கு உரிய இலக்குகளுடன் பங்களிப்பதா அல்லது தமிழர்களின் அரசியல் தேர்தல் எல்லைகளுக்கு உள்ளே ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது’ போல அமைவதற்கு அர்ப்பணிப்பதா?
மூன்றாவதாக, சமஸ்டி அரசியற் கட்டமைப்புக்கான ஒரு சட்ட வரைபால் எவ்வித பயனுமில்லை, அது ஓரடியும் முன்னேறாது. த.தே.ம. முன்னணியினருக்கு தொடர்ந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் உறுதியாக கிடைப்பதற்கு உதவலாம். அதற்கு மேல் அது தமிழருக்கு பயன்படாது. தமிழர்களின் சமஸ்டிக் கோரிக்கையை காது கொடுத்து கேட்பதற்கோ, கண் கொண்டு வாசிக்கவோ, அதற்கான குரல் கேட்டு இரக்கம் கொள்வதற்கோ இன்று யாரும் தமிழர் சமூகத்துக்கு வெளியே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. தமிழர் சமூகத்துக்கு வெளியேயுள்ள எவரும் எந்த நிறுவனமும் தமிழர்களின் சமஸ்டிக் கோரிக்கை கொண்ட அறிக்கையை மரியாதை நிமித்தமாக கை நீட்டி பெற்றுக்கொண்டாலும் கூட, அதனை அடுத்த நிமிடமே குப்பைத் தொட்டியிலே போட்டு விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள் என்பதை இன்னமும் நீங்கள் உணரவில்லையா?
அறிவார்ந்தோர்களின் ஆற்றல்கள்
முன்னேற்றங்களை சாதிப்பதற்கே!
தமிழர்களில் ஒரு பகுதியினர் தூக்கிப் பிடிக்கும் சமஸ்டி கோசத்தை ஆதரிக்க இங்கே முஸ்லிம்கள் இல்லை, மலையகத் தமிழர்கள் இல்லை, எந்த சிங்களவரும் இல்லை, இந்தியா இல்லை, சீனா இல்லை, அமெரிக்கா இல்லை, ஐரோப்பா இல்லை, ஜெனீவாவும் இல்லை, அதற்கு இன்று உலகில் எவருமே நண்பர்கள் இல்லை. சமஸ்டி என்பது இப்போது ஒரு தேர்தல் அரசியற் சுத்துமாத்து என்பது இலங்கை வாழ் தமிழர்களில் பெரும்பாலானவரகளுக்கு புரிகிறது. இப்படியான ஒரு நிலைமையில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தவர்களாகிய நீங்களும் ‘கடைசித் தமிழனும் கனடா போய்ச் சேரும் வரை’ சமஸ்டி எனும் சுலோகத்தை தூக்கி நிறுத்துவதில் காலத்தைக் கடத்துவீர்களாயின் அது உங்களது துறைசார் அறிவையும் அனுபவங்களையும் கேலிக்குரியவைகளாக ஆக்கிவிடும்.
இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறை சீரானதாகவும் வலுவானதாகவும், குறைந்த பட்சமாவது மத்திய ஆட்சியின் அநாவசியமான தலையீடுகள் இன்றி சுயாதீனமுடையதாக, காரிய ஆற்றல்கள் மிக்கதாக அமைவதற்கு சட்ட வல்லுனர்கள் பங்களிப்பு மிக அவசியமாகும். இப்போதிருக்கும் 39 ஆண்டுகளாக முழுமையாக நிறைவேற்றப்படாத 13வது திருத்த ஏற்பாடுகள் பற்றி இப்போது பேசி என்ன பிரயோசனம் என்று நீங்களும் பேசாதீர்கள். இந்த வாதம், இல்லாத ஒன்றை மட்டுமல்ல, கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை பண்ணிக் கொண்டு, அரைகுறையாகத் தானும் இருக்கின்ற ஒன்றை இல்லாமற் செய்கின்ற முயற்சியாகும். அரைகுறையாக இருப்பதை முறைப்படுத்துவதுவும் முழுமைப்படுத்துவதுவும் சட்ட வல்லுனர்களின் கடமையே. அது எப்படி என்பதற்கு உங்கள் அறிவும் அனுபவங்களும் வழிகாட்டட்டும்.
அரசியல் யாப்பின் 13வது திருத்த ஏற்பாடுகளிலும் அதனை அரசு நடைமுறைப்படுத்தும் விதங்களிலும் உள்ள குறைகளையும் (insufficiency) குறைபாடுகளையும் (defects), குழறுபடிகளையும் (confusions) நீங்கள் தாராளமாகவே அறிவீர்கள் இவை தொடர்பாக உங்களுக்கு புதிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அதாவது, இது மட்டும் தான் கடந்த 100 ஆண்டுகால தமிழர் அரசியலில் தமிழர்கள் தமது அரசியல் பொருளாதார அபிலாசைகளை நோக்கி முன்னேறுவதற்கு கிடைத்துள்ள ஒரேயோரு ஏணி. இதை தட்டி உதைத்து ஒன்றுக்கும் உதவாமல் ஆக்கி விட்டால் தமிழர்கள் நிரந்தரமாக இலங்கையில் அரசியற் பாதாளத்தில் கிடக்க வேண்டியதுதான். ‘தமிழர்கள் விரும்புகின்ற அரசியற் தீரவை இலங்கை அரசாங்கம் ஏற்று இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் சிங்களவர்களின் அரசியல் பொருளாதாரம் முன்னேற்ற மடையாது’ என தமிழர்களில் எவராயினும் சுயதிருப்தி கொண்டால், அது தவறானதாகும். இலங்கையில் தற்போது ஆளுமை பெற்றிருக்கும் சிங்கள பௌத்த அரசியலானது தமிழர்களை பாதாளத்தில் முள்ளுவேலி போட்டு மூடி விட்டு அதன் அரசியல் பொருளாதாரத்தை முன்னேற்றியபடி போய்க் கொண்டேயிருக்கிறது.
கடந்த காலங்களில் இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் அரசியல் யாப்பின் 13வது திருத்த ஏற்பாடுகளிலும் பட்டியல் பட்டியலாக குறைகள் கண்டு பிடித்து 13வது திருத்தம் தமிழர்களுக்கு பயனற்றது – தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் தியாகங்களுக்கும் பொருத்தமற்றது – அது ஒர் அரசியற் தீர்வாக அமைய முடியாது என்றெல்லாம் கருத்துக்களை படித்த தமிழர்களின் மனதில் பதித்ததில் தமிழ் அரசியற் கட்சிகள் மட்டுமல்ல, பல மூத்த தமிழ் சட்டத் தரணிகளும் பங்களித்திருக்கிறார்கள். அது எல்லாம் கடந்த காலம் – கடந்து போனவையாக போகட்டும். இப்போது பிரதான தமிழ்க் கட்சிகளும் தமிழர் சமூகப் பிரமுகர்களும் 13வது திருத்த ஏற்பாடுகள் முழுமையாக திருப்திகரமானவையாக இல்லாவிட்டாலும் தமிழர்களுக்கு பல வகைகளிலும் பயன்படக் கூடியவை எனவும் ஆகவே 13வது திருத்த ஏற்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்;பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்
இருக்கும் இருப்பை இழக்காமல் இருக்க
கிடைத்ததை கெட்டியாக பற்றுவதே அறிவு
எனவே,
1) மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பது (1) அரசியல் யாப்புக்கு விரோதமானது, (2) ஜனநாயக கோட்பாடுகளுக்கு விரோதமானது, (3) மக்களின் அடிப்படை உரிமையை நிராகரிப்பது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். எனவே மாகாணங்களுக்கான தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தை, வலியுறுத்தும் வகையாக சட்டங்கள் சார் இயக்கத்தை வலுவாக முன்னெடுக்க வேண்டும்.
2) 13வது திருத்த ஏற்பாடுகளில் சிலவற்றை பற்றி மட்டுமே இலங்கையின் உச்ச நீதிமன்றம் பொருள்கோடல்களை வழங்கியுள்ளது. அவற்றில் தவறான பொருள் கோடலுக்கு உள்ளானதாக கருதப்படுபவற்றை எதிர்காலத்தில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சட்டரீதியில் மீளாய்வு (Review) க்கோ அல்லது சீராக்கல் (Curative) செயன்முறைக்கோ உள்ளாக்குவது அவசியமே. அது ஒரு புறமிருக்க, இங்கு அதிகாரப் பகிர்வுகள் தொடர்பான நடைமுறைகள் என்னவாக இருக்கிதென்றால், பெரும்பாலான விடயங்களில், ஜனாதிபதியும், ஆளுநர்களும், மத்திய அமைச்சர்களும், மத்திய அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட உயரதிகாரிகளுமே அதிகாரப்பகிர்வு தொடர்பான அரசியல் யாப்பு உறுப்புரைகளுக்கு பொருள் கோடல்களைத் தன்னிச்சையாக தீர்மானித்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் மாகாண ஆட்சி முறையை அர்த்தமற்றதாக ஆக்கியிருக்கிறார்கள் – ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரப் பகிர்வுகள் தொடர்பாக அரசியல் யாப்பிலுள்ள மிக முக்கியமான உறுப்புரைகள் எதிர்வரும் காலங்களில் உச்சநீதிமன்றத்தின் முன் வந்தே தீரும் – முன் வைக்கப்பட வேண்டியது தவிர்க்கப்பட முடியாததாகும்.
எனவே, அரசியல் யாப்பு தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த சட்ட வல்லுனர்கள் இப்போதே அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசியல் யாப்பு உறுப்புரைகள் மீதான சரியான பொருள் கோடல்களை பொருத்தமான அடிப்படைகளில், குறிப்பாக இந்தியாவில் உள்ள நடைமுறைகளையும் மற்றும் இந்திய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளையும் கருத்திற்கொண்டு, முறையாக, சட்டவியல் புலமையாளர்களாக வெளிக்கொணர வேண்டும். 13வது திருத்தம் முறையாகவும் முழுமையாகவும் உண்மையாக நடைமுறையாவதற்கு, அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு சரியான பொருள் கோடல்கள் மிக அவசியமானவைகள் என்பது சட்டத்தரணிகளுக்கு தெரியாததல்ல. .
3) 13வது திருத்த ஏற்பாடுகளில் உள்ள குறைகளை (insufficiency), குறைபாடுகளை (deficiency), குழறுபடிகளை (confusions) நீக்குவதற்கு எந்தெந்த சட்டங்களிலுள்ள, எந்தெந்த ஏற்பாடுகள் எவ்வாறான திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய விரிவான ஆய்வறிக்கையை சட்ட வல்லுனர்கள் வெளிக்கொணர வேண்டும்.
4) 13வது திருத்த ஏற்பாடுகள் முறையாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு எந்தெந்த அரச நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் எந்தெந்த அரச நிறுவனங்கள் என்னென்ன விதமாக மாகாண ஆட்சிகளுக்கு பகிரப்பட வேண்டும் என்பதோடு எந்தெந்த மத்திய அமைச்சுகள், எந்தெந்த மத்திய அரச நிறுவனங்கள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என சட்ட வல்லுனர்கள் முழுமையானதோர் பட்டியலையும் அவற்றிற்கான தெளிவான விளக்கங்களையும் வெளிப்படுத்த வேண்டும்,
5) கடந்த காலத்தில் மாகாண ஆட்சியின் அதிகாரங்களை குறைப்பதாகவும் கரைப்பதாகவும் பாராளுமன்றம் ஆக்கிய சட்டங்கள், மத்திய அரச வர்த்தமானி அறிவிப்புகள் மற்றும் மத்திய அரசினுடைய அமைச்சுகளின் சுற்றறிக்கைகள் போன்றவை தொடர்பாக மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய சரியான மாற்று நடவடிக்கைகள் எவை மற்றும் எவ்வாறு என்பதை தெளிவுபடுத்தும் அறிக்கைகளை – கோரிக்கைகளை வெளிக்கொணர வேண்டும்.
மேலும்,
6) மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெறுமென்ற கேள்வி ஒரு புறமிருக்க, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சிகள் ஏற்படுகின்றபோது, அவற்றிற்கு உள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் பிரயோகித்து அவை காரிய ஆற்றல் மிக்கனவாக செயற்பட வேண்டும். முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையில் அமைந்த வடக்கு மாகாண ஆட்சியே இப்போதும் தமிழர்கள் மத்தியில் மாகாண ஆட்சி தொடர்பாக நிலவும் விரக்திக்கும் வெறுப்புக்கும் நம்பிக்கையீனத்துக்கும் முதன்மைக் காரணம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. இன்னொரு முறை அப்படியொரு அவலம் நிகழ்ந்து விடக் கூடாதென்பது மிக முக்கியமானதாகும்.
எனவே, வடக்கிலும் கிழக்கிலும் மக்களாட்சி கொண்டு அமையும் மாகாண ஆட்சிகள் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு காத்திரமான பங்களிப்பை வழங்குவதற்கு அவசியமான சட்ட வரைபுகள் மற்றும் சட்ட உதவிகள் தொடர்பான ஓரு செயற்திட்டத்தினை சட்ட வல்லுனர்கள் தமது சமூகக் கடமையாகக் கொண்டு இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும்.
தமது வழக்காடும் தொழில் மீது மட்டும் அக்கறை கொண்ட ‘கண்ணியமான மேட்டுக்குடி கனவான்களாக’ உள்ள சட்டத்தரணிகள் இந்த வேண்டுகோள்களை கணக்கில் எடுக்க மாட்டார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் பல லட்சம் பேரை இழந்து போராடி இன்று சிதைந்து சிதறி சின்னாபின்னமாகிக் கிடக்கும் தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்கால முன்னேற்றங்கள் மீது அக்கறையான ஆர்வமும் அர்ப்பணிப்பான உணர்வும் கொண்ட தமிழ் சட்ட வளவாளர்கள் இந்த தாழ்மையான வேண்டுகோள்களை சமூக நீதிக்கானவையாக ஏற்று செயற்பட வேண்டும்.
