-பேராசிரியர் சு.சிவரெத்தினம்-
தமிழர்கள் மத்தியில் மிகப் பிரபல்யமான மாக்ஸ்சிச ஆய்வறிஞர்களான பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோருடைய வழிகாட்டலில் மாக்ஸ்சிசத் தத்துவத்தை தனது ஆய்வுக் கட்டமைப்பு நெறிமுறையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்ட ஓர் ஆய்வே மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் எனும் ஆய்வு நூலாகும்.
நாற்பது வருடங்களுக்கு முற்பட்ட இவ்வாய்வினை இன்று பேச எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே இந்த ஆய்வின் வெற்றியேயாகும். பேராசிரியர் சிவத்தம்பி கூறுவார் ‘ஒரு கலாநிதிப்பட்ட ஆய்வு ஆய்வாளர்களிடத்தில் 10 வருடத்திற்குப் பேசு பொருளாக இருக்குமெனில் அந்த ஆய்வு அதனளவில் முழுமையானதொன்று’ என்பார். இந்த ஆய்வு 40 வருடத்துக்கு மேலாக பேசப்படுகின்றது உசாவப்படுகின்றது என்பதும் இனிமேலும் அது பேசப்படும் உசாவப்படும் என்பதில் இருந்தும் இந்த ஆய்வு நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.
அத்தோடு இந்த நூல் மாணவர்களிடத்திலும் ஆய்வாளர்களிடத்திலும் அறிவோர் இடத்திலும் ஏற்படுத்தும் அதிர்வலைகளைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாது தங்களைத் தாங்களே காலனித்துவ நீக்க அறிஞர்களாக கூறிக் கொண்டு காலனித்தவ முறைமையில் உருவான பல்கலைக்கழகத்தில் சொகுசான வாழ்க்கையும் அதிகூடிய சம்பளமும் (காலனித்துவ சம்பளம்) பெற்றுக் கொண்டு வாழும் இரட்டை வேடதாரிகளின் எதிர்மறை விமர்சனத்துக்கும் இந்த நூல்தான் உதாரணமாக இருக்கின்றது என்பதும் யாவரும் அறிந்த உண்மையாகும். இவற்றை விட இவ்வாய்வு நூலின் முக்கியத்துவத்திளைக் காட்டுவதற்கான ஆதாரம் வேறெதுவும் இல்லை.
இவ்வாறு இது முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் என்ன என நோக்குகின்ற போது பின்வரும் விடயங்களைக் குறிப்பிட முடியும்.
1. ஆய்வாளர் ஆய்வுக்காகக் கூறும் காரணங்கள்
2. அந்தக் காரணங்களுக்கான விடைகளை வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையில் தெளிவுபடுத்தும் முறை
3. மட்டக்களப்பின் சடங்குகளையும் வாழ்வியல் முறைகளையும் விளங்கிக் கொள்ள முடிகின்றமை
4. மட்டக்களப்பின் சமூக பொருளாதார அமைப்பினை விளங்கிக் கொள்ள முடிகின்றமை
5. விளிம்புநிலை மக்களையும் அவர்களின் ஆற்றுகை வடிவங்களையும் அறிய முடிகின்றமை
6. வடமோடி, தென்மோடிக் கூத்துக்களை நாடகநிலை நோக்குடன் வெளிப்படுத்துகின்றமை. குறிப்பாக தாளக்கட்டுக்கள், ஆட்டமுறைகள் என்பன மிக நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிருத்தல்
ஆய்வாளர் ஆய்வுக்காகக் கூறும் காரணங்கள்
பின்வருவனவற்றை ஆய்விற்கான காரணங்களாக ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.
1. இதுவரை இத்தலைப்பின் கீழ் மட்டக்களப்பில் வழங்கி வரும் மரபுவழி நாடகங்கள் அனைத்தும் ஒரு பூரண ஆய்வுக்கு உட்படுத்தப்படாமையும்,
2. மட்டக்களப்பின் மரபுவழி நாடகங்கள் பற்றி எழுதியும் பேசியும் வந்த இத்துறையில் ஈடுபாடு கொண்ட அறிஞரும் ஆர்வலரும் மட்டக்களப்பில் வளர்ச்சியுற்ற நாடக வடிவங்களான தென்மோடி வடமோடி நாடகங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அளவுக்கு அங்கு வழக்கிலுள்ள பறை மேளக் கூத்து, வசந்தன் கூத்து, மகிடிக் கூத்து ஆகியவற்றையும், நாடகம் சார் சமயச் சடங்குகளையும் பற்றிக் குறிப்பிடாமல் விட்டமையும்,
3. மட்டக்களப்பில் வழக்கிலுள்ள சமயச் சடங்குகளில் சிறப்பான நாடகத் தன்மைகள் காணப்படுவதுடன் வளர்ச்சியுற்ற மரபுவழி நாடகங்களான தென்மோடி வடமோடிக் கூத்தின் சில மூலக் கூறுகளைக் காணக்கூடியதாக இருப்பதும்,
4. காலத்திற்குக் காலம் மட்டக்களப்பில் குடியேறிய மக்களைப்பற்றியும் அவ்வண்ணம் குடியேறியோர் ஏற்கனவே மட்டக்களப்பில் இருந்த மக்களுடன் பண்பாட்டுத் தொடர்புகள் பற்றியும் இந்நாடக வடிவங்களும், நாடகக் கருக்களும் நிறையத் தகவல்களைத் தருகின்றமையும்,
5. கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் மாத்திரம் குறிப்பிடப்படும் பண்டைய தமிழ் நாடகங்களின் அளிக்கைத் (Performing) தன்மையை மட்டக்களப்பு நாடகங்களிற் காணக்கூடியதாக இருப்பதும்,
6. ஈழத்துத் தமிழ் மக்களின் நாடகங்களின் தோற்றம் வளர்ச்சியை அறிய மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் மிகுந்த துணையாக இருப்பதும், இவ்வாய்வை மேற்கொள்வதற்கான பிரதான காரணங்களாகும்.
என்பார்.
மேற்படி காரணங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்நூலானது பின்வரும் ஆய்வுக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இயல் – 01: நாடகம் பற்றிய (தென்னாசிய தென் கிழக்காசிய) அறிமுகமும் மட். மரபுவழி நாடகங்கள் பற்றி இதுவரை வந்த ஆய்வு முயற்சிகளும்.
இயல் – 02: மட்டக்களப்பு சமூக அமைப்பும் அங்கு நடைபெறும் நாடக அமிசங்கள் நிறைந்த சமயச் சடங்குகளும்.
இயல் – 03: நாடகம் சார்ந்த சமயச் சடங்குகட்கும் வளர்ச்சி பெற்ற தெ.மோ. , வட மோ.நாடகங்களுக்கும் இடைப்பட்ட நாடகங்கள்.
இயல் – 04: மட்.இல் வழக்கிலுள்ள வளர்ச்சி பெற்ற தென்மோடி, வடமோடி நாடகங்கள்.
இயல் – 05: மட.தென்மோடி, வடமோடி நாடக ஆசிரியர்கள் நாடகத்திற் கையாண்ட உத்திகளும் படைத்த பாத்திரங்களும்.
இயல் – 06: தாளக்கட்டுக்கள், ஆட்டக் கோலங்கள் அடிப்படைத் தாளங்கள்.
இயல் – 07: பாடல் வகை, ஆடை அணிகலன்கள், ஆடரங்கம்
இயல் – 08 மட.மரபுவழி நாடகங்களின் வளர்ச்சிப் படிநிலைகளும் அவற்றின் குறைபாடு, நிலைபேற்றிற்கான காரணங்களும்.
முடிவுரை
இந்தக் கட்டமைப்பானது வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையினூடு விபரிக்கப்படுகின்றது.
வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறை
மாக்ஸ்சிசம் பேசும் முக்கிய இரு பிரிவுகள் இயங்கியல் பொருள்முதல் வாதமும் வரலாற்றுப் பொருள்முதல் வாதமும் ஆகும். இயங்கியல் பொருள்முதல்வாதம் விஞ்ஞானக் கோட்பாடாக அமைய அதன் செயல்பாட்டு தத்துவமாக வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அமைகிறது. அந்தவகையில் இவை ஒவ்வொன்றும் நெருக்கமான தொடர்பு கொண்டவைகளாகும். இருந்தபோதிலும் இயக்கவியல் பொருள்முதல் வாதத்தைவிட வரலாற்றுப் பொருள்முதல்வாதம் சமூகத்துடன் நேரடியாகத் தொடர்பு பட்டு சமூகம் பற்றிய இயக்கவியலைப் பேசுகின்றது. சமூகத்தின் இயக்கவியல் என்பது சமூக வாழ்வு புறவயமான எதார்த்தத்துடன் உறவு கொண்டு எவ்வாறு தன்னை அந்த புறவயமான எதார்த்தத்துடன் உடன் பட்டும் முரண்பட்டும் வளர்ச்சியடைகிறது என்பதாகும்.
பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் இந்நூல் மட்டக்களப்பின் புறவயமான சூழலுக்குள் மட்டக்களப்புச் சமூகத்தின் இயக்கவியல் முறைமையினை மரபுவழி நாடகங்களின் வழியே பேசியிருக்கின்றது என்பதுதான் இந்நூலில் உள்ள தனித்துவமாகும். அதாவது மட்டக்களப்பின் உற்பத்தி உறவுகளினூடு மட்டக்களப்பின் மரபுவழி நாடகங்கள் வளர்ந்த முறையினை எடுத்துரைக்கின்றது. உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் நாடகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்கின்றார்.
விஞ்ஞானத்தின் வரலாறு பற்றிக் கூறுகின்ற தோமஸ்கூன், விஞ்ஞானம் இரு வழிமுறைகளில் வளர்ச்சியடைகிறது என்பார். ஒன்று கிடைநிலை வளர்ச்சி, மற்றது குத்துவெட்டு வளர்ச்சி கிடைநிலை வளர்ச்சி என்பது இதுவரை அறியப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளை பரவலாக்கம் செய்வதாகும். குத்து வெட்டு வளர்ச்சி என்பது இதுவரை அறியப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகள் புதிய பிரச்சினைகளை விளக்குவதற்கு போதாமையினால் அவற்றை விடுத்து புதியதொரு கட்டளைப்படிமத்தை உருவாக்கிக் கொள்வதாகும்.
மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களைப் பொறுத்தளவில் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் பயன்படுத்திய ஆய்வு அணுகுமுறை ஆய்வுலகில் நன்கு அறியப்பட்ட மாக்ஸ்சிச வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறைதான் அந்தவகையில் இந்த ஆய்வானது கிடைநிலை வளர்ச்சியினை ஏற்படுத்துகின்றது. ஆனால் இவ் ஆய்வுமுறையினை அவர் முதல் முதலாக ஈழத்து மரபுவழி நாடகங்களில் பிரயோகித்திருக்கிறார். அந்தவகையில் இவ்வாய்வானது ஒரு குத்துவெட்டு வளர்ச்சியாகும்.
மட்டக்களப்பின் சடங்குகளையும் வாழ்வியல் முறைகளையும் விளங்கிக் கொள்ள முடிகின்றமை
சடங்குகளில் இருந்தே கலை தோற்றம் பெற்றது என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த நிரூபணத்தை ஆய்வாளர் மட்டக்களப்பில் காணப்படும் ஒவ்வோர் சடங்குகளிலும் மிகப் பொருத்தப்பாடான முறையில் பிரயோகித்து அவற்றிலிருந்து நாடகம் எவ்வாறு தர்க்கரீதியான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தியிருக்கின்றார். உதாரணமாக குமார தெய்வச் சடங்கில் காணப்படும் புராதன வாழ்வியலின் கூறுகள் மிக விஸ்தாரமாக விபரிக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வதனமார், வைரவர், காளி, மாரி பேச்சி எனும் தெய்வங்களுக்கான சடங்குகளும் அவற்றின் ஆட்டமுறைகளையும் விபரிப்பதோடு பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில் சடங்கில் மற்றுமொரு வளர்ச்சி நிலையினைச் சுட்டிக்காட்டுகின்றார்.
தெய்வம், சடங்கு, வழிபாடு. என்ற மத அனுஸ்டானங்களுக்குள் வரலாற்றுப் பொருள்முதல்வாத முறையில் அணுகி நாடக மூலங்களை வெளிப்படுத்தயிருக்கும் முறையானது முக்கியமானதாகும். இதுதான் இந்நூலின் விஞ்ஞானபூர்வத் தன்மையும் ஆகின்றது.
மட்டக்களப்பின் சமூக பொருளாதார அமைப்பினை விளங்கிக் கொள்ளமுடிகின்றமை
மட்டக்களப்பு ஒரு நிலமானிய சமூகம் என்றும் அது ஏனைய பிரதேச நிலமானிய முறைமைகளில் இருந்து வேறுபட்ட தனித்துவமான ஒன்று என்பதையும் விளக்குகின்றது. இந்த நிலமானிய அமைப்பிற் கூடாக உருவான சமூக அமைப்பானது ஒவ்வோர் கால கட்டங்களிலும் எவ்வாறான சாதிப்பிரிவுகளையும் தொழில்களையும் கொண்டிருந்தன என்பதையும் தற்போது என்ன என்ன சாதிகள் வழக்கிலுள்ளது என்பதையும் விபரிக்கின்றது. இந்த வகையில் இந்நூல் ஒரு சமூகவியல் பண்புகளைக் கொண்டதாக அமைகின்றது.
மட்டக்களப்பைப் பற்றிப் பேசுகின்ற மட்டக்களப்புத் தமிழகம், மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு பூர்வசரித்திரம், மட்டக்களப்பு மாவட்ட கையேடு போன்ற நூல்களோடு மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் எனும் நூலும் தவிர்க்கமுடியாத வகையில் இடம்பிடித்தே தீரும் என்பதில் எமக்கு எதுவித சந்தேகங்களும் இல்லை. மேற்குறிப்பிட்ட நூல்கள் எல்லாம் அரசர்களின் அல்லது அதிகார வர்க்கங்களின் வரலாற்றைப் பேசியதாக இருக்க, மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் உழைக்கும் மக்களின் வரலாற்றை அவர்களின் சமூக அமைப்பை, அவர்களின் வாழ்வியலைப் பேசியிருக்கின்றது.
விளிம்புநிலை மக்களையும் அவர்களின் ஆற்றுகை வடிவங்களையும் அறிய முடிகின்றமை
தற்போது மிக பிரபல்யமாகப் பேசப்படும் விளிம்புநிலை மக்கள் தொடர்பான ஆய்வினை 1980களில் இந்நூலாசிரியர் மேற்கொண்டிருக்கின்றார் என்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். குறிப்பாக பறைமேளக் கூத்து, மகிடிக் கூத்து, போன்றவை இந்தவகையில் முக்கியம் பெறுகின்றன. இக்கூத்துக்களைப் பற்றிப் பேசிய முதல் ஆய்வாக இந்நூல் இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
வடமோடி, தென்மோடிக் கூத்துக்களை நாடகநிலை நோக்குடன் வெளிப்படுத்துகின்றமை. குறிப்பாக தாளக்கட்டுக்கள், ஆட்டமுறைகள் என்பன மிக நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிருத்தல்
மட்டக்களப்பில் வளர்ச்சியுற்ற கூத்துக்களான வடமோடி, தென்மோடிக் கூத்துக்கள் முழுக்க முழுக்க நாடக நோக்குநிலையில் நின்று ஆய்வு செய்யப்பட்ட ஆய்வாகும். நாடகத்தின் ஆரம்பம், சிக்கல், வளர்ச்சி, உச்சம், முடிவு என்பற்றை கூத்துக்களை உதாரணம் காட்டி விளக்கப்படுகின்றது. இதுபோன்றே வடமோடிக்குரிய தாளக்கட்டுக்களாக 42 தாளக்கட்டுக்களையும் அவற்றுக்கான 48 ஆட்ட முறைகளையும் தருவதோடு தென்மோடிக்கான 3 தாளக்கட்டுக்களும் 8 நடைகளும் அவற்றுக்கான 80 வகையான ஆட்டக் கோலங்களும் தரப்பட்டுள்ளன.
இந்தவகையில் இந்நூல் ஒரு நாடக நூலாக இருக்கின்றது.
ஓட்டுமொத்தமாகப் பார்க்கின்றபோது வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையில் மரபுவழி நாடகங்களை எவ்வாறு நோக்கலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகவும் மட்டக்களப்பின் சமூகப் பொருளாதார அமைப்பினை விளங்கிக் கொள்வதற்கான ஒரு நூலாகவும் கூத்துக்களை நாடக நோக்குநிலையில் எவ்வாறு நோக்கலாம் என்பதற்கும் ஒரு முன்னுதாரணமாகவும் விளங்குவது இந்நூலின் பன்முகப்பாட்டின் சிறப்பம்சமாகும்.
இந்நூல் ஈழத்து நாடக ஆய்வில் ஏற்படுத்திய அதிர்வலைகள்.
1. ஈழத்துச் சடங்குகளை நாடக நிலை நோக்குடன் அணுகிய பல ஆய்வுகள் கலைமாணிப்பட்ட ஆய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
2. மகிடி பற்றிய ஆய்வுகளும் தேடல்களும் பரந்தளவில் விரிவடைந்துள்ளன.
3. பறைமேளக் கூத்துத் தொடர்பான ஆய்வுகள் விரிவடைந்துள்ளன.
4. வதனமார் தொடர்பான ஆய்வுகள் விரிவடைந்துள்ளன.
5. மட்டக்களப்பின் சமூக பொருளாதார அமைப்புப் பற்றிய ஆய்வுகள் விரிவடைந்துள்ளன.
இந்நூலில் காணப்படும் ஆய்வு இடைவெளி.
மாக்ஸ்சிசம் கூறும் அடிக்கட்டுமானம், மேற்கட்டுடமானம் எனும் இரு பகுதிகளில் இந்நூலானது பெருமளவுக்கு அடிக்கட்டுமானம் பற்றியே கூடுதல் கவனம் செலுத்துவதோடு அடிக்கட்டுமானத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள்தான் மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கின்றது என்பதை வலியுறுத்துவதாக அமைகின்றது.
அந்தோனியோ கிராம்சி பொருளாதாரக் காரணங்களுக்கப்பால் பண்பாட்டுக் காரணங்களையும் மாக்ஸ்சிசம் கணக்கில் எடுத்துக் கொள்ள வெண்டும் என்பதை வற்புறுத்தியுள்ளார். அந்த வகையில் பண்பாட்டு ஒடுக்குமுறைகள் அந்த ஒடுக்குமுறைகளின் பிரதிபலிப்புக்கள் என்றவகையில் மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் பார்க்கத்தவறியுள்ளன. குறிப்பாக மகிடிக் கூத்து, பறைமேளக் கூத்து என்பன இந்தவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இது போன்றே சடங்குகளிலும் பண்பாட்டு ஒடுக்குமுறையினையும் அதற்கான பிரதிபலிப்புக்களையும் காணமுடியும். இவற்றை பொருளாதாரக் காரணங்களால் விளக்கமளிக்க முடியாது. பண்பாடு, சமூக உளவியல் காரணங்கள் இவ்விடயங்களில் பயனளிக்கத்தக்வையாகும்.
எனவே இன்றை நவீன சிந்தனை முறைகளை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பின் மரபுவழி நாடகங்கள் ஆய்வு செய்யப்படுமாயின் அது இந்நூல் வெளிப்படுத்தாத பல உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம்.
ஆயினும் ஆய்வாளர் தனது ஆய்வுத் தத்துவநெறிக் கட்டமைப்புக்குட்பட்டு மிகப் பரவலான கள ஆய்வுகளை மேற்கொண்டு புறவயத் தன்மையுடன் மட்டக்களப்புச் சமூகத்தையும் அதன் வாழ்வியலையும் மரபுவழி நாடகங்களின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் மட்டக்களப்புச் சமூகம் தொடர்பான தேடலுக்கும் மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் தொடர்பான அறிதலுக்கும் இந்நூலானது ஒரு மூலநூலாக அமைகின்றது என்பதும் முக்கியமானதாக அமைகின்றது.
குறிப்பு: ‘ஈழத்துத் தமிழ் அரங்கியல்’ எனும் தலைப்பில் கொழும்பு தமிழ்ச் சங்கம் 2026 ஏப்ரல் 17,18,19ம் திகதிகளில் நடாத்திய ஆய்வரங்கில் 18.04.2026 அன்று ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
