அரசாங்கத்தின் ‘தூய்மை’ முத்திரையை சேதப்படுத்தும் முயற்சிகளில்  எதிரணி மும்முரம்

அரசாங்கத்தின் ‘தூய்மை’ முத்திரையை சேதப்படுத்தும் முயற்சிகளில்  எதிரணி மும்முரம்

— வீரகத்தி தனபாலசிங்கம் —

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை, அதன் பதவிக்காலத்தில் ஒன்றரை வருடங்களுக்குள்ளாக பதவி விலகுமாறு எதிரணி அரசியல் கட்சிகள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

 கூட்டு எதிரணி என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற —  மிகவும் பலவீனப்பட்டிருக்கும் இந்த கட்சிகளிடம் (தோல்வி நிச்சயம் என்று தெரிந்திருந்தும் அவ்வப்போது அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் ஆவேசமாகப் பேசிவிட்டுப் போவதைத் தவிர)  அரசாங்கத்துக்கு எதிராக உருப்படியான அரசியல் தந்திரோபாயம் எதுவும் இல்லை. ஆனால், கொழும்பில் அடிக்கடி நடத்துகின்ற செய்தியாளர்கள் மகாநாடுகளை மாத்திரம் கூட்டாக நடத்துகின்றன. 

2025 மே உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியில் பெற்ற வாக்குகள் 2024 பாராளுமன்ற தேர்தலில் அது பெற்ற வாக்குகளை விடவும் சுமார் 18 இலட்சம் குறைவாக இருந்ததனால், அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் ஆளும் கட்சி பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்ற  நம்பிக்கையில் இந்த எதிரணி கட்சிகள் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வந்தன. 

மாகாணசபை தேர்தல்கள் எட்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருப்பதால் மாகாணங்களின் நிருவாகங்கள் மக்கள்   பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படாமல் அவர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறது என்ற கவலையில் அந்த தேர்தல் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூறமுடியாது. அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது என்று காண்பிக்க வேண்டும் என்பதே இந்த கட்சிகளின் நோக்கம். 

பதவிக்கு வந்த ஒரு வருடத்துக்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக தேசிய தேர்தல்களின்போது வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  தற்போது மாகாண சபைகளுக்கு எந்த முறையின் கீழ்  தேர்தல்களை நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அண்மையில் நியமித்தது. மூன்று தடவைகள் கூடிய தெரிவுக்குழுவின் அடுத்த கூட்டம் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. 

 மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்ற  நிலையில், அதற்கு நெருக்குதலைக்  கொடுக்கக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் நடத்துவதற்கான திராணி எதிரணி கட்சிகளுக்கு  இல்லை. 

மறுபுறத்தில், மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு மக்கள் போராட்ட இயக்கத்தை முன்னெடுக்கப் போவதாக  இடைக்கிடை அறிவிக்கும் சில தமிழ் கட்சிகள் சில நாட்களில் அதை மறந்து விடுகின்றன. உண்மையில், இது விடயத்தில் வடக்கு, கிழக்கில் இருந்தோ அல்லது தென்னிலங்கையில் இருந்தோ அரசாங்கத்துக்கு எந்தவிதமான நெருக்குதலும் கிடையாது. 

தற்போது தென்னிலங்கை எதிரணி கட்சிகள் பதவி துறந்து இடைக்காலப் பொதுத்தேர்தலுக்கு வழிவிடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சர்வஜன சக்தி மற்றும் சில கட்சிகள் கடந்த வியாழக்கிழமை கூட்டிய செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.  

 “தரங்குறைந்த நிலக்கரி இறக்குமதி, இணைய ஊடுருவல் மூலமாக திறைசேரியின் பணம் மோசடி என்று பல்வேறு ஊழல்கள் கடந்த சில வாரங்களில் இடம்பெற்றிருப்பதை காண்கிறோம். அரசாங்கம் அதன் இயலாமையை தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. தரங்குறைந்த நிலக்கரி கொள்வனவு போன்ற முறைகேடுகளை ஒரு அமைச்சர் தனியாக திட்டமிட்டுச் செய்ய முடியாது. அமைச்சரவையின் முழுமையான ஆதரவு இல்லாமல் அவரால் அதைச் செய்திருக்க முடியாது. அதனால், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று நாம் கோருகிறோம்” என்று தெரிவித்தார்.

இதனிடையே,  கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புத்தாண்டில் மீண்டும் ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்கான முக்கியமான திட்டம் ஒன்று தங்களிடம் இருப்பதாகவும் விரைவில் ஏற்படப்போகும் அரசியல் மாற்றத்துக்கு தங்களது கட்சி முழுமையாகத் தயாராக இருக்கிறது என்றும் கூறினார். 

தங்களிடம் இருக்கும் திட்டம் குறித்து ராஜபக்ச விரிவாகக் கூறவில்லை.  ராஜபக்ச குடும்பத்துக்கு நீண்ட நாட்களாக அதிகாரத்தில் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நாட்டு மக்களுக்கு மீண்டும் எதற்காக அந்த குடும்பத்தின் ஆட்சி தேவை? இலங்கை அரசியலில் முன்னரும் பல தசாப்தங்களாக குறிப்பிட்ட சில மேல்வர்க்க குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அவர்களை மக்கள்்தேர்தல்களில் தான் தோற்கடித்து அதிகாரத்தில் இருந்து இறக்கினார்கள். ஆனால், இலங்கையில் மாத்திரமல்ல, தெற்காசியாவிலேயே. முதன்முதலாக  மக்கள் கிளர்ச்சியின் மூலமாக தூக்கியெறியப்பட்ட ஆட்சி தங்களது குடும்பத்தின் தலைமையில் இருந்தது என்பதை ராஜபக்சாக்கள் மறக்கக் கூடாது. 

தேசிய மக்கள் சக்தியை பாராளுமன்றத்தில் தோற்கடிக்க முடியாது. அதனால், முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை பேரம்பேசி விலைக்கு வாங்கி இன்றைய அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியம். அதனால், பாராளுமன்றத்தில் கொடுக்கும் “தொல்லைகளினால்” அரசாங்கத்தை எதுவும் செய்துவிட முடியாது. 

தேசிய தேர்தல்களின்போது நடைமுறைச் சாத்தியத்தைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காமல் தேசிய மக்கள் சக்தி பெருவாரியான வாக்குறுதிகளை அள்ளிவீசியது. அவற்றை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருந்தபோது அதற்கு  ‘கெடுதியில் நன்மை’ போன்று கடந்த கடந்த வருட பிற்பகுதியில் ‘டித்வா’ சூறாவளியும் இந்த வருடம் மார்ச் மாதம் முதல் மத்திய கிழக்குப் போரும் அமைந்து விட்டன. அந்த போரின் விளைவாக முழு உலககுமே பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கின்ற சூழ்நிலை வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் இருப்பதற்கு அரசாங்கத்துக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 

புதிய அரசியல் கலாசாரமும் முறைமை மாற்றமும் காற்றோடு போய்விட்டன. ஏதாவது மாற்றம்  ஏற்பட்டிருக்கிறது  என்றால், அது ஏற்கெனவே நடைமுறையில் இருந்த முறைமைக்கு அரசாங்கம் தன்னை இசைவாக்கிக் கொண்டிருப்பதை மாத்திரமே  கூறமுடியும். 

பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தின் தவறான ஆட்சி முறைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் விளைவாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றம் அதிகாரத்துக்கு கொண்டு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் முறைகேடுகளுக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் எதிராக கடுமையான விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியிருக்கிறது. 

ஆனால், அதேவேளை, முன்னைய ஆட்சியாளர்களுக்கு சேவை செய்த அதே ஊழல்தனமான  அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தியே அரசாங்கம் நிருவாகத்தை நடத்த  வேண்டியிருப்பதால் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகிறது. அண்மைக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற முறைகேடுகளை இந்த பின்புலத்திலேயே நோக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “தூய்மை” முத்திரையை சேதப்படுத்துவதற்கு எதிரணி கட்சிகள் அவற்றினால் இயன்றவரை முயற்சிகளை மேற்கொள்கின்றன. அதற்கு முகங்கொடுப்பதில் அரசாங்கம் தடுமாற வேண்டிய அளவுக்கு சில ஊழல் குற்றச்சாட்டுக்கள் அமைகின்றன என்பது உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *