பூவா? தலையா ?:     பந்தயம் மொட்டை அடிப்பதற்கும் மேலாக..!             (மூன்றாவது கண்: XVIII)

பூவா? தலையா ?:  பந்தயம் மொட்டை அடிப்பதற்கும் மேலாக..! (மூன்றாவது கண்: XVIII)

 — அழகு குணசீலன் —

பந்தயம் கட்டுதல் நமக்கும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் அது இன்று சர்வதேச மட்டத்திலான நிதிச்சந்தை முதலீடாக மாறியிருப்பதுதான் புதுச்செய்தி.  வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடோரோவை அமெரிக்க அரச பயங்கரவாதம், அத்துமீறி கடத்தியது நாம் அறிந்ததுதான். 2026 ஜனவரி இறுதியில் இடம்பெற்ற இந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு பின்னால் ஒரு பந்தயமும் இருந்தது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அது மட்டும் அல்லாமல் இது விடயமாக எதிர்வு கூறல்களைச் செய்த “அந்த மூன்று நபர்களும்”  சாதாரண பிரஷைகளா? அல்லது அமெரிக்க ட்றம்ப் நிர்வாகத்தின் மேல்மட்டத்துடன் தொடர்புள்ள புள்ளிகளால் பயன்படுத்தப்பட்டார்களா? என்ற கேள்வியும் இன்று உலகில் உரத்து ஒலிக்கிறது.

இந்திய, இலங்கை தேர்தல்களில், இந்திய -பாகிஸ்தான்- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றி -தோல்வி குறித்து, காலநிலை மற்றும் சோதிட எதிர்வு கூறல்கள் மூலம் பந்தயம் கட்டுவதை நாம் அறிந்திருக்கிறோம், பந்தயம் கட்டியும் இருக்கிறோம். பந்தயத்தில் தோற்று மீசையையும் வழித்து, மொட்டையும் அடித்தவர்கள் நம் மத்தியில் இன்னும் இருப்பார்கள். ஆனால் அந்த எதிர்வு கூறல்களை ஒழுங்கமைக்கப்பட்ட, நிறுவனமயப்படுத்தப்பட்ட  முதலீட்டு நிறுவனங்களின் பந்தயத்தில் முதலீடு செய்வது  ஒரு புதிய முதலீட்டு முயற்சி. பங்குச்சந்தையில் முதலீடு செய்வது போன்றது. ஒரு வகையில் அதைவிடவும்  இலாபகரமானது. முதலாளித்துவம் பேசுகின்ற உலகமயமாக்கம், தாளார பொருளாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்ப சந்தைப் பொருளாதாரம்  ஊகங்களால் கட்டி எழுதப்படும் ஒன்று. 

அமெரிக்கா ,வெனிசுவேலா ஜனாதிபதி மடோரோவை கடத்துகின்ற இரகசிய இராணுவ நடவடிக்கையில் பங்குகொண்ட அமெரிக்க படைவீரர் ஒருவர் , அந்த தகவலை  “எதிர்வு கூறல்” அடிப்படையில்  பந்தயம் கட்டி 40,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக பணத்தை பந்தய வெற்றி நிதியாக பெற்றிருக்கிறார் என்பது வெளிவந்துள்ளது. 

 உள்ளக வர்த்தகம்” (INSIDER HANDEL) என்று சர்வதேச ஊடகங்களால் பேசப்படும் இந்த சமகால விவகாரம் தொடர்பாக அந்த இராணுவ வீரர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார். இராணுவ வீரர் ஒருவருக்கான இரகசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டை மீறி, அந்த இரகசிய தகவலை எதிர்வு கூறலாக முதலீடு செய்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பல பத்து ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டும் என்று கூறப்படுகிறது.

தகவல்களின் படி முன்கூட்டியே ஊகிக்கும் கருத்துத்தளம் ஒன்றில், தனது இரகசிய தகவலை “மடோரோ ஜனவரி இறுதியில் பதவியில் இருக்கமாட்டார்” என்று பந்தயம் கட்டி, நாலு இலட்சத்திற்கும் சற்று அதிகமான அமெரிக்க டொலர்களை வென்றுள்ளார். அந்த பந்தயத்திற்காக அவர் 33,000 அமெரிக்க டொலர்களை கட்டியதாக தெரியவருகிறது. 38 வயதான இவர்  இவ்வாண்டு ஜனவரி ஆரம்பத்தில் இடம்பெற்ற மடோரோவை கடத்தும். அமெரிக்க அரச பயங்கரவாத இராணுவ நடவடிக்கையில் பங்கு பற்றியவர் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் மூன்று முன்னணி எதிர்வு கூறல் பந்தய போட்டி தளங்களாக “ POLYMARKET, KALSHI, PREDICTET”  என்ற மூன்று நிறுவனங்கள் இந்த வியாபாரத்தில்  முன்னணியில் உள்ளன. குறிப்பிட்ட இராணுவ வீரர் பொலிமார்க்கட்டில் பந்தயம் கட்டியிருந்தார். இன்னும் இருவர் இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு மற்றைய இரண்டு நிறுவனங்களில் பந்தயம் கட்டியுள்ளனர். இந்த மூவரின் அடையாளங்களோ, தேசியங்களோ இதுவரை  வெளிப்படுத்தப் படவில்லை. மூவரும் மொத்தமாக, மூன்று நிறுவனங்களில் இருந்தும் 6,30,000 அமெரிக்க டொலர்களை வென்றார்கள் என்று தெரியவருகிறது. இராணுவ வீரர் தனது வெற்றிப்பணத்தை மற்றொரு கணக்கிற்கு மாற்றிய பின்னர் பொலிமார்க்கட்டில் இருந்த தனது கணக்கை மூடும்படியும்,தனது அடையாளங்களை மறைக்கும் படியும் அந்த நிறுவனத்திற்கு கூறியதாக விசாரணை தகவல்கள் கூறுகின்றன.

சந்தேகத்திற்கு இடமான இந்த எதிர்வு கூறல் பந்தயக்கணக்குகள் மடோரோ கடத்தப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே திறக்கப்பட்டுள்ளன. இந்த வியாபாரத்தின் மூலம் இவற்றை நடாத்தும் தளங்கள் அதிக வருவாயை பெற்று வருகின்றன. பொலிமார்கட் 2020 இல் 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வளர்ச்சியை தாண்டியதாக கூறப்படுகிறது.  குறிப்பிட்ட ஒரு விடயம் குறித்த எதிர்வு கூறல், அல்லது முன்கூட்டிய கணிப்பு சாதாரண கருத்துக்கணிப்பல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

 இது கணிதவியலில் “நிகழ்தகவு” என்று கூறப்படுகிறது. உதாரணமாக ஒரு நாணயக்குற்றியை சுண்டினால் எங்களுக்கு கிடைக்கக்கூடிய  நிகழ்தகவு( விடை)  2:1 அல்லது 100:50 வீதம். அதாவது பூ,தலை  இரண்டில் ஏதாவது ஒன்றே எமக்கு விழும் நிட்சயமான சாத்தியம் உள்ளது. மடோரோ கடத்தப்படுவதற்கு முன்னர் அதன் சாத்தியப்பாட்டிற்கான நிகழ்தகவு வெறும் 8 வீதமாகவே இருந்துள்ளது. இதன் மறுபக்கம் பந்தயத்தில் கூறப்பட்ட  92 வீதம் மடோரோ ஜனவரி இறுதியில் பதவியில் இருப்பார்/ பதவி இழக்க மாட்டார் என்பதாக இருந்துள்ளது. கடத்தலுக்கு பின்னர் நிகழ்தகவு 100 வீதமாக தலைகீழாக மாறிவிட்டது.  இங்கு பதவி இழக்கமாட்டார் என்ற எதிர்வுகூறலுக்கான நிகழ்தகவு பூச்சியம். 

இந்த விவகாரம் அமெரிக்காவில் எதிர்பார்க்காத அளவுக்கு பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த தகவல்  ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு ஊடாகவும், ட்ரம்பின் மகன் ஊடாகவும் கசிந்திருப்பதற்கான நிகழ்தகவும் அதிகமாகவே தெரிகிறது. ஜனாதிபதி ட்ரம்பின் மகன் குறிப்பிட்ட பொலிமார்க்கட் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் சபையில் ஒருவர் என்ற செய்தி இந்த கசிவுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக உள்ளது. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு முன்னரே எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். 

எது எப்படியோ பந்தயம் கட்டுதல் எதிர்காலத்தில் ஒரு சிறந்த, இலாபகரமான முதலீட்டு முயற்சி மாதிரியாக, மற்றைய நிதி முதலீட்டு மாதிரிகளை விடவும் முந்தப்போகிறது.

பந்தயம் கட்டுவோம் வாரீர்……! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *