‘நுணலும் தன் வாயால் கெடும்’: ஆட்டம்காணும் அமெரிக்காவின் “உலக பொலிஸ்காரன்” அந்தஸ்து.

‘நுணலும் தன் வாயால் கெடும்’: ஆட்டம்காணும் அமெரிக்காவின் “உலக பொலிஸ்காரன்” அந்தஸ்து.

— சின்னத்தம்பி குருபரன் —

‘யாகவராயினும் நாகாக்க காவக்கால் சோகாப்பர், சொல்இழுக்குப்பட்டு’ என்பது திருக்குறள். 

நாட்டுக்கு பொருத்தமான நல்லொழுக்கம் மிக்க நற்பிரசை ஒருவரை நாட்டுக்குத் தலைவராகத் தெரிவு செய்வது நாட்டு மக்களின் கடமையும் பொறுப்புமாகும். அதுவே மக்களுக்குள்ள சனநாயக இறைமையாகும். நாட்டின் தலைவரைத் தெரிவு செய்வதில் மக்கள் விடும் தவறுகள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், ஏன் அகில உலகுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன. இலங்கையில் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்காவில் ரொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலில் பெஞ்சமின் நெத்தன்னியாகு ஆகிய மூன்று  பேரையும் நாட்டின் தலைவராகத் தெரிவு செய்து மாபெரும் தவறிழைத்தனர் மக்கள். கோத்தாபய நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி, நாட்டை அதல பாதாளத்தில் தள்ளினார் என்பது இலங்கையர் கணிசமானோரின் குற்றச்சாட்டு, அதுவே “அற்கலய” போராட்டத்துக்கு வழி செய்தது. அதேபோல் ட்ரம்பும், நெத்தன்னியாகுவும் தனிப்பட்ட தேவைக்காக நடத்தும் ஈரான் மீதான யுத்தத்தினால் மத்திய கிழக்கு நாடுகள் சீரழிவதுபோல் உலக நாட்டு மக்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கின்றனர் என்பது சர்வதேச ஆய்வாளர் பலரின் கருத்து. 

அமெரிக்க மக்கள் 2024 டிசம்பரில் இரண்டாவது தடவையாக ரொனால்ட் ட்ரம்பை சனாதிபதியாகத் தெரிவுசெய்த போது ‘இலாபத்தை மாத்திரம் குறிக்கோளாகக்கொண்ட வியாபாரியை, அடாவடித் தனங்கள் நிறைந்த, குற்றவாளியான அரசியல் கோமாளியை அமெரிக்க மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். அமெரிக்க வரலாற்றில் இது மாற்றமுடியாத கறையை ஏற்படுத்துவதோடு, இந்தத் தவறுக்காக அமெரிக்க மக்கள் பாரிய விலை கொடுக்கக் வேண்டியதாக இருக்கும். அதேபோல் உலக நாடுகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவார்.’ 

இது பற்றி 2024 டிசம்பரில் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆரூடம் கூறியிருந்தேன். அதுவே தற்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. அதே போன்றவர்தான் பெஞ்சமின் நெத்தன்னியாகு. 

காசாவில் நடந்த இனப்படுகொலைகளுக்காகச் சர்வதேச நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி இவர். இருவருவருமே மனநலம் பாதிக்கப்பட்ட உளநோயாளி (Psycho) போன்றவர்கள். 75 வயதுக்கு மேற்பட்டவர்கள். இருவரும் செய்யும் அடாவடித்தனங்களை ஏன்? எதற்கு எனக் கேள்வி கேட்காமல் வக்காலத்து வாங்குவதற்கெனத் தத்தமது நாட்டிலும் வேறுசில நாடுகளிலும் பல தலையாட்டிப் பொம்மைகள் இருக்கின்றனர். பலர் எதிர்த்துக் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவில் ஆட்சியில் இருந்த சனாதிபதிகள் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்காவின் அதியுச்ச பாதுகாப்புமையமான பென்டகனில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்களைத் தட்டிக் கழித்தே வந்தனர். அவர்களுக்குத் தெரியும், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் ‘விளைவு விபரீதமாக’ இருக்குமென்று. அடம்பிடித்த அடாவடித் தனங்கள் நிறைந்த ட்ரம்ப் உலக ஒழுங்கை மறந்து, சர்வதேச சட்டங்களை விட்டொதுக்கி, தனது நாட்டின் அதியுச்ச வல்லரசு மேலாதிக்கத்தைப் (Super Power) பாதுகாப்பதை விடுத்து, வல்லரசு நாடுகள், ஐக்கியநாடுகள் சபை, நேட்டோ நாடுகள் அமைப்பு, ஏனைய பிராந்திய நாடுகளின் அமைப்புத் தலைவர்கள், பிறநாடுகளின் தலைவர்கள், அமெரிக்கக் காங்கிரஸ் மற்றும் செனற்சபை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, பெஞ்சமின் நெத்தன்னியாகு கூறுவதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு ஈரான் மீது தாக்குதல் நடத்தி, நெருக்கடிக்குள் தள்ளி இருக்கின்றார். 

அணுவாயுத உற்பத்தி, யுரெனியம் செறிவாக்கல் தொடர்பாக ஜெனிவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது அடாவடித் தனமாக ஈரான்மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சினால் மத்தியகிழக்குப் பற்றி எரிந்து யுத்த களமாக மாறியிருக்கிறது. ஹோமூஸ் நீரிணைக் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டதனால் எரிபொருள், எரிவாயு, மருந்துப்பொருட்கள், உணவுப் பொருட்களின் விநியோகம் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டு, சகலபொருட்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. உலக பங்குச்சந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கிலுள்ள பல நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழி, தரை வழித்தாக்குதலால் (தென் லெபனான்) மிகப் பாரிய எணணெய்ச்சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் அகழ்வு மையங்கள், எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வைத்திய சாலைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், போக்குவரத்தக் கட்டமைப்புக்கள், விமான நிலையங்கள், வர்த்தக நிலையங்கள், பொதுக்கட்டிடங்கள், குடிமனைகள் வகை தொகையின்றித் தாக்கி அழிக்கப்பட்டிருக்கின்றன. பல ஆயிரக் கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டதோடு, பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றனர். பல இலட்சக்கணக்கானோர் அகதிகளாகி இருக்கின்றனர். மத்தியகிழக்கிலுள்ள பல நாடுகளின் சில பிரதேசங்களில் இரவு பகலாக ஒலித்துக் கொண்டிரந்த சைரென் எச்சரிக்கை ஒலிகள் மக்களைப் பீதியடைய வைத்தன.  

உலக நாடுகளில் பொருட்களின் விலையேற்றத்தால் பணவீக்கம் அதிகரித்து, மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கிறது. எரிபொருள், எரிவாயுவின் விலை சகல நாடுகளிலும் 30 முதல் 60 வீதம்வரை அதிகரித்திருக்கிறது. வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் உலகில் 40 வீதத்துக்கு அதிகமானோர் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும் இடையேயான யுத்தமாக மத்தியகிழக்கு யுத்தம் அமைந்திருக்கிறது. 

திட்டமிடப்படாத அடாவடித்தனமான யுத்தத்தினால் உலக ஒழுங்கு மாற்றமடைந்து ரஸ்யாவும் சீனாவும் முதல் இரு இடங்களையும் பிடிப்பதற்காக இரு நாடுகளும் திட்டமிட்டுச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா படிப்படியாக நேட்டோ நாடுகள், அமெரிக்கா சார்பான மத்திய கிழக்கு நாடுகள், தாய்வான், யப்பான், தென்கொரியா போன்ற நாடுகளை இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இந்த நாடுகளின் பாதுகாப்புத் தொடர்பான ஐயங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

சனாதிபதி ட்ரம்ப் 21.01.2025 இல் பதவி ஏற்றது முதல் இன்றுவரை அதீத மனவெழுச்சிக்கு உட்பட்ட மனநோயாளியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். பல சந்தர்ப்பங்களில் வாக்குத் தவறியவராகவே காணப்பட்டிருக்கின்றார். காலையில் என்ன கூறுகின்றார், மாலையில் Twiter, Truth சமூக வலைத் தளத்தில் என்ன பதிவிடுகிறார், நாளைக்கு ஊடகவியலாளர் சந்திப்பில் எதைக் கூறப் பொகின்றார் என்பது தொடர்பாக ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்களாகவே காணப்படுகின்றன. சிலவேளை மூர்க்கமாகவும், கோமாளித்தனமாகவும் கருத்துக் கூறுவார். அழிப்பேன், தாக்குவேன், கைப்பற்றுவேன், வரி விதிப்பென், பூண்டோடு அழித்துத் தரைமட்டமாக்குவேன் என்பதுதான் அவருடைய மொழிகள். கோபம், ஆவேசம், பொய், புரட்டு, அகம்பாவம், மிருகத்தனம், உயர்வுச் சிக்கல், தடுமாற்றம், உணர்ச்சிவசப்படல் ஆகியன அவரிடம் காணப்படும் சுபாவங்கள். அதனால் அவரை நம்பி எதிலும் இறங்கமுடியாத நிலையில் உலகின் பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் உள்ளனர். அதனால்தான் சகல தலைவர்களும் அவரிடம் யுத்த நிறுத்தம் பற்றிச் சமரசம் புசுவதற்கோ யுத்தத்தை நிறுத்துமாறு கூறுவதற்கோ தயங்குகின்றனர். இதில் தலையிட்டு மூக்குடைபட எவரும் தயாராக இல்லை என்பது உறுதியாகிக் கொண்டிருக்கிறது.

திட்டமிடல், புத்தி சாதுரியம், நாகரிகம் இல்லாதவர்போல் பல சந்தர்ப்பங்களில் அநாகரிகமாகவும் ஆவேசமாகவும் கோமாளி போலவும் கருத்துக்களை மாற்றிமாற்றிக் கூறிக் கொண்டிருப்பது அமெரிக்கா என்ற ஏகவல்லரசுக்கு நல்லதல்ல. தொடர்பில்லாத முன்னுக்குப் பின்முரணான கருத்துக்கள், அநாகரிகமான பேச்சுக்கள், தூசண வார்த்தைகள் எனப் பலப்பல. தற்போதுவரை மிகப்பெரிய  வல்லரசாக இருந்து கொண்டிருக்கும் நாட்டின் தலைவர் நாவடக்கத்துடன் பேசுதல் வேண்டும். மிகப்பெரிய சனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் ஈரானுக்கு நரகத்தைக் காட்டுவேன், நாட்டைப் பூண்டோடு அழிபோம் என்பதும், கற்காலகால யுகத்தைக் காட்டுவேன் என்பதும், ஒரு நாகரிகத்தை அழிப்பேன் என்பதும், மின்நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிவாயு நிலையங்கள், பாலங்கள், புகையிரத நிலையங்கள், புகையிரதப் பாதைகளைத் தாக்குதல்நடத்தித் தரைமட்டமாக்குவேன் என்பதெல்லாம் நாகரிகமற்ற, காட்டுமிராண்டித் தனமான வார்த்தைகள். 

பாக்கிஸ்தானில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வி கண்டதும் “ஹோர்மூஸ் நீரிணைக்கூடாகச் சென்றுவரும் கப்பல்கள், ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் கப்பல்கள் யாவும் அமெரிக்கக் கடற்படையினரால் தடுக்கப்பட்டுக் கைப்பற்றப்படும்” என ட்றம்ப் ஆவேசத்துடன் எச்சரித்து போர்க் கப்பல்களுடன் பத்தாயிரத்துக்கு மெற்பட்ட கடற்படையினரை நிறுத்தி வர்த்தகக் கப்பல்களைத் தடுப்பதும் கைப்பற்றுவதும் 1982 கடல் பாதுகாப்புச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் சபை உடன்படிக்கையையும் (UNCLOS), ஒரு நாட்டின் கடல் எல்லை (Territorial Sea), பிரத்தியேகப் பொருளாதார வலயம் (EEZ) ஆகியவற்றில் வரையறையை மீறுவது ஒரு சுதந்திர நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் விடும்செயலாகும். அது மாத்திரமின்றி ஹோர்மூஸ் நீரிணை ஊடாக ஈரானுக்குச் சென்றுவரும் சீன வர்தகக் கப்பல்கள் தமது படையினால் கைப்பற்றப்படும் என ட்றம்ப் கூறியிருப்பது புத்திசாலித்தனமற்ற எச்சரிக்கையாகும். அத்துடன் நின்றுவிடாது ரஸ்சியாவுடன் எரிபொருள்,எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபடும் கப்பல்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என ட்ரம்பை மேற்கோள்காட்டி அமெரிக்க நிதி அமைச்சர் கூறி (16.04.2026) இருப்பதும் ‘ஆத்திரக் காரனுக்குப் புத்திமட்டு’ என்பதை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.

ஹோரமூஸ் நீரிணை என்பது ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் ஆகிய மூன்று நாடுகளின் கடல்பாதுகாப்பு மற்றும் ஆள்புல எல்லைகளைக் கடந்துசெல்லும் நீர்ப்பரப்பாகும். இதன் இதயம் போன்ற மிகநீண்ட நீர்ப்பரப்பு ஈரானுக்குரியதாகும். ‘சும்மா கிடந்தசங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்பது போல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரனைத் தாக்கப் போய் ஹோர்மூஸ் விவகாரம் பெரிய அணுகுண்டாக வெடித்திருக்கிறது. அதைத் தூக்கிப் பிடித்து அட்டகாசம்காட்டி அதன் முக்கியத்துவத்தை ஈரானுக்குப் பறைசாற்றியவர் சொல் விளம்பி ரொனால்ட் ட்ரம்ப். சர்வதேச விவகாரங்களைக் கண்காணிப்பதற்கும், சர்வதேச கடல் போக்குவரத்துப் பாதைகளைக் கண்காணிப்பதற்கும், எச்சரிப்பதற்கும் அறிக்கைவிடுப்பதற்கும், கப்பல்களைத் தடுப்பதற்கும், கைப்பற்றுவதற்குமான அதிகாரத்தை அமெரிக்காவுக்கு யார் வழங்கியது. இது சர்வதேச ஒழுங்குக்கு ஆபத்தானது இல்லையா?. ட்ரம்பின் இத்தகைய அட்டகாசத்தைத் தடுப்பதற்கு முயற்சிக்காமல் ஏனைய வல்லரசு நாடுகள் பார்த்துக் கொண்டிருப்பது நாடுகளினதும், சர்வதேசத்தினதும் பாதுகாப்புக்கு உசிதமில்லையே. ட்ரம்பை எதிர்ப்பதற்கும், அறிக்கை விடுவதற்கும், கடிவாளம் இடுவதற்கும் இது தக்க தருணம். எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து ட்ரம்பையும், நெத்தன்னியாகுவையும் தனிமைப் படுத்தவேண்டும். இருவரின் சுயநலனுக்காக நடைபெறும் யுத்தம் உலகநாடுகள் முழுவதையும் இன்னலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. பைத்தியக்காரன் போல் ட்ரம்ப் ஈரானை எச்சரித்துத் தனது Truth சமூக வலைத்தளத்தில் தினம்தினம் முன்னுக்குப் பின்னாக கருத்துக்களையும் பொய்களையும் அச்சுறுத்தியும் விட்ட அறிக்கைகள் ஈரானை உசுப்பேற்றி இருக்கிறது. இதனைப்பார்க்கும்போது ‘பைத்தியக்காரன் கோட்பாடுதான்’ ஞாபகத்துக்கு வருகிறது.  

அமெரிக்க முன்னாள் சனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் (Richard Nixon) கடைப்பிடித்த  “பைத்தியக்காரன் கோட்பாடு” (Madman Theory) என்பது ஒரு சுவாரசியமான, அதே சமயம் மிகவும் ஆபத்தான ஒரு வெளியுறவுத் தந்திரோபாயக் கொள்கையாகும். இக்கோட்பாட்டின் பிரதான நோக்கம் எதிரி நாடுகளின் தலைவர்களையும் பாதுகாப்புப் படையினரையும் அச்சத்துக்கு உள்ளாக்குவதாகும். தான் எப்போது என்ன செய்வேன் என்று கணிக்க முடியாத ஒரு நபர் என்றும், ஆத்திரமடைந்தால் அணு ஆயுதங்களை ஏவக்கூடத் தயங்காத ஒரு “பைத்தியக்காரன்” போலவும் தன்னைச் சித்தரிப்பதன் மூலம், எதிரிகளைப் பணிய வைப்பதே நிக்ஸனின் திட்டமாக இருந்தது. ‘வியட்நாம் போரும் நிக்ஸனின் திட்டமும்’ பற்றித் தனது அதிகாரபூர்வ உதவியாளர் எச்.ஆர். ஹால்டெமேனிடம் (H. R. Haldeman)பேசியது வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்வாகும். நிக்ஸன் அவரிடம் “கம்யூனிஸ்டுகள் என்னைப் பற்றி இவ்வாறு நினைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்: ‘கடவுளே, நிக்ஸன் கோபமடைந்தால் என்ன செய்வார் என்று தெரியவில்லை, அவர் அணு ஆயுதப் பொத்தானை அழுத்தவும் தயங்கமாட்டார்!’ என்று அவர்கள் பயப்பட வேண்டும்.”வியட்நாம் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவும், வட வியட்நாம் மற்றும் சோவியத் யூனியனைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்கவும் அவர் இந்த உத்தியைப் பயன்படுத்தினார்.

நிக்ஸனும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிஞ்சரும் (Henry Kissinger) இணைந்து பல நாடகங்களை அரங்கேற்றினர். அக்டோபர் 1969-இல், நிக்ஸன் அமெரிக்க ராணுவத்திற்கு ரகசியமாக “உலகளாவிய அணு ஆயுத எச்சரிக்கை (1969) நிலையைப்” (Nuclear Alert) பிறப்பித்தார். அணு ஆயுதங்கள் ஏற்றப்பட்ட விமானங்கள் சோவியத் எல்லைக்கு அருகே பறக்க விடப்பட்டன. அது சோவியத் யூனியனைப் பயமுறுத்தி, வியட்நாம் போரில் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்பட வைப்பதற்கான தந்திரமாகக் கொள்ளப்பட்டது. நிக்ஸன் ஒரு பிடிவாதக்காரர், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்ற பிம்பத்தை கிஸ்ஸிஞ்சர் மற்ற நாட்டுத் தூதர்களிடம் நுட்பமாகப் பரப்பினார். இந்தக் கோட்பாடு எதிர்பார்த்த முழு வெற்றியைத் தரவில்லை என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். கம்யூனிச நாடுகள் மத்தியில் அமெரிக்காவைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்ற நிலையை உருவாக்கியது. அணு ஆயுதப் போர் ஏற்படும் என்ற பீதியை ஏற்படுத்தியது.

தற்கால அரசியலில் இந்த “Madman Theory”-யை டொனால்ட் ட்ரம்ப் அவ்வப்போது பயன்படுத்துவதை நினைவு படுத்துவதாகதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். “எதிரியைப் பயமுறுத்திப் பணிய வைக்க, ஒருவன் தன்னைத் தானே ஒரு பைத்தியக்காரனைப் போலக் காட்டிக் கொள்ளும் ராணுவத் தந்திரத்தை” ரொனால்ட் ட்ரம்பும் பின்பற்றித் தனது Truth சமூகவலைத்தளத்தில் உண்மைக்குப் புறம்பானதும், காரசாரமானதும் ஈரானை அச்சுத்துவதுமான பதிவுகளைவிட்டுக்கொண்டு உலக நாடுகளை நெருக்கடிக்குஉள்ளாக்கி வருகின்றார். 

உலக அரங்கில் ட்ரம்பின் இத்தகைய போக்குப் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதோடு, அமெரிக்கா ஈரானுக்கு இடையேயான சமாதானப் பேச்சுவார்தையையும் கேள்விக் குறியாக்கி இருக்கிறது. அமெரிக்காவும் ஈரானும் சமாதானப் பேச்சுவார்தையில் ஈடுபடுவதை விரும்பாதவர்போல் பெஞ்சமின் நெத்தன்னியாகு சதி முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதற்கிணங்க ட்ரம்ப் மறதியும் மந்தபுத்தியுமுள்ள மனநோயாளி போல் தனது சமூகவலைத்தளத்திலும் ஊடக சந்திப்புக்களிலும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பது வெள்ளைமாளிகைக்குள்ளும் அமெரிக்க மக்கள் மத்தியிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. உலகமக்களை அச்சத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஈரான் போரில் தோல்வி அடையாமல் இருக்கையில் அச்சமூட்டிப் பயமுறுத்திப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதென்பது புத்திசாதுரியமல்ல. இது இம்முயற்சியில் ஈடுபடும் நாடுகளுக்கும் கருமமாகிவிடும்’. ஈரானுக்குப் பக்கபலமாக இரசியா, சீனா, வடகொரியா போன்ற அணுவாயுத நாடுகள் இருக்கையில் ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு ஈரான் பணிந்து செல்லும் என்பதும் இயலாத காரியம். 

ஈரான் 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழம்பெரும் நாகரிகத்தைக் கொண்ட நாடு. அது போக என்றோ ஒருநாள் அமெரிக்காவும் இஸ்ரேலும் தமது நாட்டைத்தாக்கலாம் என 30 வருடங்களுக்கு மேலாகத் திட்டமிட்டுத் தமது நாட்டின் பாதுகாப்பு, படைப்பலம், ஆயுத உற்பத்தி, யுரேனியம் செறிவாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தித்தனது பலத்தை அதிகரித்துக் கொண்டதோடு தலைமைத்துவம், நிர்வாக முகாமைத்துவம் என்பவற்றில் நிலைக்குத்துத் தலைமைத்துவ முறைமையைப் பின்பற்றாது, கிடைவெட்டுத் தலைமைத்துவத்தை நடைமுறைப்படுத்தி வந்தமையால் ஈரானின் அதியுச்ச ஆன்மீகத் தலைவர் குண்டுவீச்சில் கொல்லப்பட்டபோதும், படைத் தளபதிகள், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் குண்டுவிச்சில் தாக்கிக் கொல்லப்பட்ட போதும் அவர்கள் பின்வாங்காது அடுத்த நிலையில் உள்ளவரைத் தலைவராக்கித் தந்திரோபாயத்துடன் சளைக்காது செயற்பட்டு வருகின்றனர். 

ஈரான் தமது நாட்டின் கல்வியை உலகத் தரத்துக்குச் சமாந்தரமாக இட்டுச் சென்றைமையால் அந்நாட்டின் தலைவர் உட்பட அழசியல்வாதிகள், படைத்துறை அதிகாரிகள், அரச பொதுச்சேவை அதிகாரிகளில் 65 வீதத்துக்கு மேற்பட்டோர் தமது துறைகளில் கலாநிதிப்பட்டம் பெற்றவர்களாகவெ காணப்படுகின்றனர். இவைகள்தான் ஈரானுக்குப் போரில் பல இழப்புக்கள் ஏற்பட்ட போதிலும் பின்வாங்காது எதிர்த்து நின்று போர் செய்வதற்குக் காரணமாக அமைந்தது. போருடன் தொடர்புபட்டவகையில் பேச்சு வார்த்தை தொடர்பிலும் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கள் யாவும் இராசதந்திரத்துடன் கூறப்பட்டவையாகவே அமைந்திருந்தன. இத்தகைய போக்கினை ட்ரம்பிடமோ அமெரிக்க அரசியல்வாதிகள், படைத்துறைத் தலைவர்களிடமோ காணப்படவில்லை. அதனால்தான் சமாதானப்பேச்சுவார்த்தை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 

ஆவேசத்துடனும் கோபத்துடனும் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கள் உலகின் அதியுச்ச தலைவர் அந்தஸ்தினையும் இதுவரை அமெரிக்காவுக்கு இருந்த Supreme Power இனையும் ஏக வல்லரசு என்ற அந்தஸ்தினையும், உலக பொலிஸ்காரன் என்ற சட்டம்பித்தனத்தினையும் கேள்விக் குறியாக்கி விட்டிருக்கிறது. ட்ரம்பின் பிடிவாதத்தால் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 30 யுத்த வானூர்திகள், நான்கு யுத்தக் கப்பல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட படையினரின் உயிரிழப்பு, நிதி, பொருட்சேதம், பொருட்களின் விலை அதிகரிப்பு. பணவீக்கம், பங்குச்சந்தைப் பாதிப்பு, உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியன அமைரிக்க மக்களிடத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்த இருக்கின்றன. நாவடக்கமின்றி வாயால் கெட்ட ட்ரம்பின் தலைமைத்துவம் ஆட்டங்கான ஆரம்பித்திருக்கிறது. பலரும் அவரின் தலைமைத்துவத்தை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். அவருடன் பேசுவதற்குப் பல நாட்டின் தலைவர்கள் அஞ்சுகின்றனர். அதனால் ட்ரம்புக்கு கடிவாளம் இடப்போகும் மூக்கணாங் கயிறு அமெரிக்க மக்களிடமே இருக்கிறது. அவர்கள் விழித்தெழுந்து வீதியில் இறங்க வேண்டும். அவருக்காக வக்காலத்து வாங்கிய உலக நாடுகள் பலவற்றின் தலைவர்களும் அமெரிக்க அரசியல்வாதிகள் பலரும், உச்ச அதிகாரிகள், தொழிலதிபர்கள் பலரும்‘செத்த மாட்டில் இருந்து உண்ணி களர்வது’ போல விலகிச் சென்று கொண்டிருக்கின்றனர். தமக்கு உதவிக்குவருவார்கள் என நம்பியிருந்த நாடுகளும் கை கழுவி விலகிவிட்டன. இரு தரப்பினரும் விட்டுக் கொடுத்துப் பேச்சுவார்த்தையின் மூலம் சமாதானத்தை எட்டத் தவறின் ட்ரம்பும் நெத்தன்னியாகுவும் தனிமைப்படுத்தப் படுவது உறுதியாகிவிடும். அதே வேளையில் தற்பொழுதிருக்கும் சர்வதேச ஒழுங்கு மாறுவதனையும் தடுக்க முடியாமல்போகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *